Sep 13, 2009

பயணம்:

நமது வாழ்நாள் முழுக்க நம்மோடு இருக்கப்போவது பயணம்தான், கால்களோடு மட்டும் சம்பந்தபடாமல் அது மனதோடும் சம்பந்தப்பட்டதால் நடக்கமுடியாதவர்கள் கூட தினமும் வெகுதூரம் எண்ணங்களால் பயணிக்கத்தான் செய்கிறார்கள், எண்ணங்களை சுமந்து கொண்டு சேர்க்கும் பல வாகனங்களாகவும் பயணம் இருந்திருக்கிறது, எழுத்துக்களை சுமந்து செல்லும் தபால்காரர்கள், அன்று மன்னர்களுக்காக ஓலைகளை சுமந்து சென்ற தூதுவர்கள் இப்படி பயணம் பல நிலைகளை கடந்து சென்று கொண்டே இருக்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனித வாழ்க்கை வெறும் பயணமாக மட்டுமே இருந்திருக்கிறது, எங்கே வாழ்வது என்று தெரியாமல் மனிதன் தனது உடைமைகளை சுமந்து கொண்டு தனது குடும்பம் என்று ஒரு அருதியிடாத அமைப்புடன் பயணித்து பல இடங்களை அடைந்திருக்கிறான், இன்று நமது நாகரீகமாக உள்ள ஆரிய திராவிட நாகரீகங்களும் பல தூரங்களை பயணமாக கடந்தே இன்று நிலைக்கொண்டிருக்கின்றன,
இதுபோக பல சமாதனப்பயணிகள், படிப்பிற்கான பயணிகள், உழைப்புக்காக பயணிகள், உணவுக்குகாக பயணிகள், காலத்திற்காக பயணிகள் என்று பயணங்கள் பல

வகைப்படுகின்றன, எல்லா செயல்களின் இறுதியிலும் ஒரு பயணம் ஒளிந்திருக்கிறது, அதை முடிக்க ஒரு பயணம் தேவைப்படும் என்பதுபோல. இன்றைய உலகின் அறிவியல் கண்டுபிடிப்பான போன்கள் வந்த பிறகு பயணங்களின் தேவை குறைந்தது போல் ஒரு தோற்றம் இருந்தாலும் பயணங்கள் குறைந்ததாக தெரியவில்லை, பேருந்துகளும்,
புகைவண்டிகளும், விமானங்களும், இன்னும் எத்தனையோ வாகனங்களின் எண்ணிக்கை தினமும் ஒரு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

பயணம் உயிர்களின் ஆரம்பகாலத்திலேயே தனது உணர்வில் தொடங்கிவிட்டதால் அது ஒவ்வொரு விலங்கிலும் பயணத்தின் எழுத்துக்கள் எழுதப்பட்டுவிட்டன, அவைகளை சுமந்த ஜீன்கள் பயணத்தை மீண்டும் மீண்டும் அவர்களுக்குள்ளே துரிதப்படுத்திக்கொண்டே இருக்கின்றன, ஒரு எந்த பயணமும் இல்லாத வாழ்க்கையை எந்த உயிரியாவது கற்பனை செய்து பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை, அப்படி பயணம் இல்லாமல் போனால் மனிதன் இயங்காதவனாக உலகில் உணரப்படக்கூடும்,

இன்றைய பயணங்கள் மனிதனில் தினசரி தேவைகளை நோக்கி காலையிலேயே தொடங்கி விடுகிறது, அந்த பயணங்கள் தினசரி ஒரே திசையில் இருந்தாலும் பயணம் என்பதில் இருந்து அது மாற்றம் பெறமுடியாது, வாகனங்களின் வசதிகளால் பயண நேரங்கள் குறைவாக தோன்றினாலும் பயணம் என்பது அங்கே நடைபெறத்தான் செய்கிறது.
ஒரு படைப்பாளியின் பயணம் பதிவுகளாகிறது, அல்லது பதிவுகளை உருவாக்க ஒரு படைப்பாளி பயணிக்கிறான், அவனின் பார்வை பயணத்திற்காக பிரத்தியோகமாக தயாராகிறது, உலகின் சராசரி சுற்றுலா தளங்களை நோக்கி மட்டும் அவன் பார்வை செல்லுவதில்லை, உலகின் எல்லா நிலை வாழ்க்கை முறையையும் அது பின் தொடர்கிறது அதற்குள் நிறைந்து கிடக்கு சுகம், அவலம் என்று அதன் உள் அமைப்பு கெடாமல் அதை பதிவு செய்யவேண்டிய கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது,

உலக இலக்கிய அமைப்பில் இந்த பயணக்கட்டுரைகள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன, எந்த பயணக்கட்டுரை குப்பையாக எழுதப்பட்டிருந்தாலும் அது சில வாசகர்களையாவது கட்டாயம் கொண்டிருக்கும், நாவல்களும் சிறுகதைகளும் தராத ஒரு புதிய விஷயத்தை இந்த பயணக்கட்டுரைகள் உடனடியாக கொண்டு வந்து சேர்க்கும் உலகின் மிகப்பழமையான பயணக்கட்டுரைகளே இன்றைக்கு பல பழய நாகரீகங்களைப்பற்றிய தகவல்களை நமக்கு தருகின்றன, யுவான் சுவாங் போன்ற சீனப்பயணிகளின் கட்டுரைகள் நமக்கு நமது நாட்டின் பழய சரித்திரங்களை திரும்ப தந்திருக்கின்றன, இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் பல அரிய பொக்கிஷங்களை இந்த பயணக்கட்டுரைகள் தருகின்றன,

பயணங்களால் உலகின் பல இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டன, வாஸ்கோடகாமா, கொலம்ப்பஸ் போன்றவர்கள் கண்டுபிடித்த இந்தியாவும் அமெரிக்காவும் போன்ற பல கடல் பிரயாணிகள் உலகின் பல நிலபகுதிகளை கண்டுபிடித்தார்கள்,பயணங்கள் நல்லவற்றை மட்டும் விதைக்கவில்லை கூடவே பல அழிவுகளையும் கூட அவைகள் கொடுத்திருக்கின்றன,

அலெக்ஸாண்டர்களும், செங்கிஸ்கான்களும்,போல எத்தனை மன்னர்கள் தனது சுய சந்தோஷங்களுக்காகவும் நாடுபிடிக்கும் கொள்கைகளாலும், உலகின் பலதூரங்களை தனது படைகளோடு கடந்து, வெற்றிகளை குவிப்பதற்காக கொன்று போட்ட உயிர்களையும் கூட இந்த பயணங்களின் கணக்குகள் அப்படியே பாதுகாக்கின்றன.

இந்த பயணங்களின் வழியே மன்னர்களோடு அவர்கள் சார்ந்திருந்த நாகரீகம் பண்பாடு, மதம், கடவுள் என்று எல்லாம் பயணிக்கிறது, இந்தியாவிற்கு வந்த யுவாங் சுவாங் தனது பயணக்கட்டுரையில் அவர் வந்த காலத்தில் இந்தியா ஆப்கான் உள்ளிட்ட ஒரே தேசமாக இருந்து வந்தது அப்போது வேத மற்றும் பவுத்த சமயங்கள் இந்தியாவில் பின்பற்றப்பட்டதாக எழுதுகிறார். ஆனால் அவர் இந்தியாவை ஒரே நாடு என்று பார்ப்பது எப்படி என்று புரியவில்லை, பல சிறிய மன்னர்களால் ஆளப்பட்ட தேசம் மதத்தால் மட்டும் ஒன்றாக அவருக்கு தோன்றி இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது,

இன்றைய ஐரோப்பாவைப் பார்த்தால் மதத்தால் அது கிட்டதட்ட ஒரே தேசம்தான் எங்கும் கிருஸ்துவம் காணப்படுவதால், ஆனால் அது குட்டி குட்டி தேசங்களின் கூட்டமைப்பு, அவரவர்களுக்கு தனித்தனி சட்டதிட்டங்கள் தலைவர்கள் உள்ளதுபோல் அப்போது இந்தியாவும் பெரும்பகுதி இந்து மற்றும் பவுத்த மத தேசமாக அந்த சீனப்பிரயாணிக்கு தோன்றி இருக்கலாம்.

அரபு தேசத்தில் இருந்து கி.பி. 711 தொடங்கிய முகமது பின் காசிம் என்கிற மன்னரின் போர் பயணம்தான் இந்திய துணைக்கண்டத்தின் மீது முதல் இஸ்லாமிய மத பரவலுக்கு காரணமான முதல் பயணமாக அமைந்ததாக கருதப்படுகிறது. அதன் பிறகு முழு இந்திய ஆக்கிரமிப்புகளை இந்த படைகள் தொடங்குமுன் சிந்து மகாணப்பகுதியில் இருந்து இவைகள் அதன் தலைமை பீடத்தால் திரும்ப அழைக்கப்பட்டதால் பெரிய கைப்பற்றுதலை இந்த பயணம் உருவாக்கவில்லை, அப்போதைய அரபு தேசங்களின் தலைநகரமாக பாக்தாத் இருந்திருக்ககூடும்.

அதன் பிறகு கி.பி 1001ல் இருந்து புதிய போர் பயணங்களை முகமது கஜினியும் முகமது கோரியும் தொடங்கினார்கள் அது விட்டு விட்டு கி.பி 1206 பல நிலைகளில் இந்த பயணங்கள் தொடர்ந்தன, அதன் தன்மை போலவே இந்த பயணங்களில் விளைந்தவை வெறும் இரத்த ஆறுகள்தான்,

இதே பயணங்கள்தான் அற்புதமான அமைதியையும் நிலைநிறுத்த உதவின, மகாத்மாவின் நவகாளி யாத்திரை, தொடங்கி அவருடைய எல்லா பயணங்களும் மனித ஜீவிதத்தின் அற்புதமான தருணங்களை இந்த உலகுக்கு எடுத்து காட்டின, வாழ்க்கை முறையில் மிக உன்னதமான எளிமையோடு நடந்த உலகின் அற்புத பயணங்கள் மகாத்மாவுக்கு மட்டும் சொந்தம் என்றால் அது மிகையில்லை, அந்த மனிதன் நடந்த இடங்களில் எல்லாம் அமைதியும் அற்புதங்களும் உருவாகிக்கொண்டே இருந்தன.

பயணம் மனிதனின் விடமுடியாத ஒரு பழக்கமாகிவிட்டது, தனது தேவைகளுக்காக அந்த பயணம் அவசிமானதாக அவனால் நம்பப்படுகிறது, தவிர்க்கிற சில பயணங்களால் பெரிய பல முடிவுகள் இழந்து போவதையும் பார்க்க முடிகிறது, எழுத்துக்கள் எல்லா வற்றிலும் பயணமே பிரதானமாக இருக்கிறதும் காணலாம், உலகின் மிகச்சிறந்த நாவல்கள் பயணத்தோடு பாத்திரங்களை இழுத்துக்கொண்டு பல தளங்களுக்கு மாறி மாறி செல்வதை காணலாம்,
பல உலகின் மிகப்பெரிய பயணக் குறிப்புகள் மிகவும் அற்புதமானவை, ஒரு துப்பறியும் நாவலுக்குண்டான அனைத்து சிறப்புக்களையும் திருப்பங்களையும் கொண்டவை,

பயணம் மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அனுபவம், அதன் வழியே செல்லும்போது கண்களையும் காதுகளையும் நன்கு திறந்தே வையுங்கள், பல அற்புதங்களை அவைகள் கொடுக்கும் நீங்கள் வெறும் பார்வையாளனாக இருக்கும் வரை.

தவநெறிச்செல்வன்

Sep 10, 2009

கைகழுவுதல்:

கை கழுவுதல் நமது கிராமங்களில் மிக முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வந்தது, அதன் காரணம் கடும் உழைப்பை வயல்களில் முடித்துவிட்டு வீடு வந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்ததால் அப்படி ஒரு பழக்கம் வந்திருக்கலாம், கையை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியத்தி வலியுறுத்தி இப்படி ஒரு பழககம்.
இதுவே பின்னர் சொல்வழக்காகவும் சிலரை கைகழுவுவது என்று மாறிப்போனது,

நம் வீடுகளில் ஐயர்கள் திவசம் என்று சொல்லப்படும் பிதுர்களுக்கான கடன் ஆற்றும் போது இடை இடையே தண்ணீரை சிறிது விட்டு சும்மா ஒரு சம்பிரதாய கழுவல் செய்வதைப்பார்க்கலாம், ஐயருடைய பஞ்சபாத்திரம் என்கிற பாத்திரத்தில் கொஞ்சம் தர்ப்பை புல்லைப்போட்டு அதனைக்கொண்டு இப்படி செய்வது வழக்கம், மற்றும் கோவில்களில் ஹோமங்கள் சில சடங்குகளிலும் இந்த கைகழுவுவது போன்ற ஒரு பாவனையை காணலாம்,
பிற்பாடு இதே கைகழுவுதல் என்கிற பதம் பல மாற்றங்களை அடைந்துவிட்டது,

முன்பெல்லாம் சாப்பிடும்போது தும்மினால் போய் கையை கழுவி வா என்று சொல்வார்கள், தும்முவதற்கும் கைகழுவுவதற்குமான சம்பந்தம் என்னவாக இருக்கும், தும்மும் போது கையைக்கொண்டு துடைத்துவிட நேரும் என்பதால் இப்படி கூறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இயேசு கிருஸ்து சிலுவையை சுமந்து அதில் அறையப்படுவதற்காக கொண்டு செல்லும் போது, அங்கே மேலும் மூன்று திருடர்கள் சிலுவையில் அறையப்படுவதற்காக காத்திருக்கிறார்கள், அப்போது பிலாது மன்னன், இந்த நான்கு பேரில் ஒருவரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது, இந்த யாரை விடுதலை செய்யலாம் யேசுவை செய்யலாம் என்பது போல் கூடி இருந்த மக்களிடம் கேட்கிறான், அதற்கு அப்போது மிகுந்த வெறியில் இருந்த மக்கள் கூட்டம், பராபஸ் என்கிற கொடுமையான திருடனை விடுதலை செய்ய சொல்லிவிட்டு யேசுவை சிலுவையில் அறைவதை உறுதி செய்கிறது, அப்போது பிலாது தனது கையை கழுவி இந்த நீதிமானின் ரத்ததில் எனக்கு பங்கில்லை என்று கூறிவிட்டு சென்று விடுகிறான், இங்கேயும் அந்த கைழுவுதல் ஒரு குறீயீடாக வருகிறது.

அதன் பின் பிலாது மன்னன் கைகழுவியது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த பாவத்தில் இருந்து தப்பினானா என்று தெரியவில்லை, ஆனால் கை கழுவுவது என்பது ஒரு மனதிருப்தி சம்பந்தப்பட்ட நிகழ்வாக பல இடங்களில் வருவதைதான் பார்க்க முடிகிறது.
சாப்பாட்டுக்கு முன் கைகழுவுவதில் பல முறை உண்டு வெகு நேரம் தண்ணீர் விட்டு கைகழுவுதல், அல்லது சோப்பு போட்டு கைகழுவுதல், அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகளின் உதவியுடம் கைகழுவுதல், சும்மா ஒருகையை தண்ணீர் குழாயில் காட்டி கைகழுவுதல், இரண்டுகைகளையும் தேய்த்து கைகழுவுதல், முழுகையும் நனையாமல் விரலை மட்டும் காட்டி பேருக்கு கழுவுதல் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், இந்த எல்லா கழுவுதலின் பின்னால் உள்ளது ஒரு நம்பிக்கை சுத்தமாகிவிட்டது அதனால் சாப்பிடும்போது கெடுதலான விஷயங்கள் எதுவும் வாய்க்குள் செல்லாது.

அதே போல் பாவங்களை கைகழுவும் பாவனையும் கூட அப்படித்தான், பிலாது மன்னன் நம்பியதைப்போல பாபங்கள் தம்மை அடையாது என்று ஒரு நம்பிக்கை, உறவுகளை கைகழுவும் சில சம்பவங்களும் இதில் இருக்கின்றன, எத்தனை உறவுகளை நமது தேவைகள் முடிந்த உடன் கைகழுவும் மனநிலை வருகிறது, எப்படி தாயையோ தங்கையையோ சகோதரனையோ அல்லது ஏதாவது ஒரு உறவையோ தனது தேவைகள் முடிந்த உடன் சுமையாக கருதும் போது கைகழுவ ஒரு முயற்சி செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு நியாயமான காரணம் எல்லாருக்கும் இருக்கும், காரணங்கள் கிடைப்பது மிகவும் எளிது, தேடும் போது உடனே வந்து நிற்பது காரணங்கள்தான். அந்த காரணங்களின் தன்மை பற்றி வேண்டுமானால் மாற்று கருத்து இருக்கலாம், ஆனால் காரணங்கள் எப்போதும் மரிப்பதே இல்லை.

கைகழுவுதல் தனது செயலுக்காக பல காரணங்களையும் அதனில் ஒரு திருப்தியையும் கொண்டு விடுவதால் அந்த சடங்கு எல்லா காலத்தும் அழியாமல் இருக்கின்றன, இன்றைய உணவு பழக்கம் கூட கைகளில் சாப்பிடுவதை விட தேக்கரண்டிகளில் சாப்பிடும் நிலைக்கு மாறிவிட்டாலும் உணவு மேஜைக்கு போகும் முன் கையை அணிச்சை செயலாக கழுவும் பலரைப்பார்திருக்கிறேன்,

எல்லா செயலிலும் கை முதன்மையான ஒரு உறுப்பாக இருப்பதால், அதை சுத்தமாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதுதானே, ஆனாலும் இந்த கைசுத்தம் என்கிற பதம் வேறு பொருளை தருவது இன்னும் சுவாரஸ்யமானது. அதைப்பற்றி அப்புறம் பார்க்கலாம்.

தவநெறிச்செல்வன்

Sep 2, 2009

சொக்கனும் சோமேஸ்வரனும்

சொக்கன் வழக்கம் போல காதர்பாயின் டீ கடையில் அமர்ந்திருந்தான், அங்கு வந்த சோமேஸ்வரன் அவனுடைய பால்ய நண்பன், இருவரும் அடிக்கடி சந்திக்கும் இடத்தில் உரையாடுவது வழக்கம்.

சொக்கன்: என்னப்பா ரொம்ப நாளா ஆளையே காணும்,

சோமேஸ்வரன்: அதுவா கொஞ்சம் வேலை. கூடவே மனதுக்கும் அத்தனை சுகமில்லை என்ன செய்ய.

சொக்கன்:என்ன அப்படி கவலை?

சோமேஸ்வரன்: என்னமோ இலங்கையில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை, அத்தனை கொடுமையாக உள்ளது,

சொக்கன்: ஓ அதுதானா கவலை, அதென்னப்பா இந்த உலகம் இப்படி கண்ணை மூடி கிடக்கிறது, எங்கோ மேற்கு நாடுகளில் ஒரு சிறிய தாக்குதல் நடந்தால் உடனே உலகம் அப்படி தவிக்கிறது ஆனால் இங்கு அநியாயமாக இப்படி கொல்கிறார்கள் கேட்க நாதியில்லை. அந்த வீடியோ காட்சிகளை பார்த்தபின் இரண்டுநாளாய் சாப்பிடக்கூட முடியவில்லை.

சோமேஸ்வரன்: அதுதான் எனக்கு புரியவில்லை, எப்படி உலகம் ஒரு மோசமான திசையில் போகிறதுபார், உலகை ஆள நினைக்கும் பெரிய நாடுகள் இப்படி ரத்த ஆறுகளை தடுக்க விரும்பாமல் இருபதின் நோக்கம் என்ன என்று புரியவில்லை.

சொக்கன்: எல்லாம் அதிகார போதைதான் என்று தோன்றுகிறது, ஆரம்பத்தில் பொதுநலனில் தொடங்கும் ஒரு முயற்சி மெல்ல மெல்ல கடும் சுயநலத்தில் கொண்டு போய் விடுகிறது. அதில் கிடக்கும் அழிவுகளையும் இழப்புகளையும் பற்றி மனம் கவலைப்படும் நிலையை கடந்து விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

சோமேஸ்வரன்: எத்தனை உயிர்கள் இந்த பாழாய்போன போர்களில் மடிகிறார்கள், ஆனாலும் போர்கள் ஓயவே இல்லை பார்,

சொக்கன்: ஆமாம் பா.சிங்காரம் கூட தனது கடலுக்கு அப்பால் புயலிலே ஒரு தோணி நாவல்களை இரண்டாம் உலக்ப்போர் பின்னனியில் அந்த அழிவுகளைப்பற்றி எழுதுகிறார் அதன் இழப்புகளை காணும்போது இந்த போர் ஏன் படைக்கப்பட்டது என்று மிகுந்த வேதனையாக இருக்கிறது,

Aug 10, 2009

ஸ்கட் ஏவுகனையும் நானும்

2003, மார்ச் 20 ம்தேதி, வியாழக்கிழமை, அதிகாலை, வழக்கம் போல் குவைத்தின் எனது நண்பரும் உறவினரும் எனது வளர்ச்சிக்கு கர்த்தாவுமான பாண்டியனின் குடியிருப்பில் இருந்து காலைப்பணிக்காக புறப்படும் போது தொலைக்காட்சியின் அனைத்து இயக்கங்களும் செய்திகளாக மாற்றப்பட்டிருந்தன, அமெரிக்க இங்கிலாந்து விமானங்கள் இராக்கின் நகரங்களின் மீது குண்டு வீச்சை தொடங்கி விட்டிருந்தன, கிட்டத்தட்ட ஆறுமாதமாக வருமோ வராதோ என்று பயந்து கொண்டிருந்த போர் தொடங்கிவிட்டிருந்தது, வயிற்றுக்குள் ஒரு சிறிய பந்து சுழல்வது புரிந்தது,

எனது மேளாலருக்கு உடனே தொலைபேசியில் அழைத்து, சார் war தொடங்கிவிட்டது போல் தெரிகிறது என்ன செய்ய என்று கேட்கிறேன், ஆமாம் நானும் பார்த்தேன், அதிகாலையிலேயே ஆரம்பித்து விட்டார்கள், இன்றைக்கு site க்கு போவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்று சொன்னார், உடனடியாக கிளம்பி, கீழே வந்தேன், எனது வேன் காத்திருந்தது, அதில் இருந்த உடன் பணிசெய்யும் பொறியாளர்கள் எல்லோரின் முகத்திலும் ஒரு கவலையின் ரேகைகள் இருந்தது, ஆனாலும் ஏதொ ஒரு நம்பிக்கை, வேன் புறப்பட்டது, ஒவ்வொருவரும் பழய இராக்கின் குவைத் ஊடுருவலைப்பற்றியும் அப்போது நடந்த சம்பவங்களைப்பற்றியும் கவலையோடும் பயத்தோடும்பேசிக்கொண்டே இருந்தார்கள்,

இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் எனது மின்நிலையத்திற்கு செல்ல பாலைவனம் வழி பயணம். முதல் முதலாக ஒரு வெளிநாட்டு வேலைக்கு வந்து ஒரு ஆறு மாதம்தான் ஆகிற ஒரு நிலை, வந்ததில் இருந்தே அமெரிக்காவின் போர் ஆயத்த நடவடிக்கைகளை கண்டு கொண்டேதான் தினசரி அலுவலக பயணம், டாங்குகளும் சிறிய ஹெலிகாப்டர்களும் இன்னும் என்ன என்னவோ வாழ்க்கையில் பார்த்தே இராத ராணுவத் தடவாளங்களூம் ஆயிரக்கணக்கில் சாரி சாரியாக குவைத் துறைமுகங்களில் வந்து இறங்கி ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தன, அவைகளை பார்க்கும்போது ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தது, காரணம் போர் வராது மிரட்டி சதாமை அடிபணிய வைக்கத்தான் இது போன்ற முயற்சிகள் என்று எண்ணம் எல்லோருக்கும் இருந்தது, காரணம் போரின் அழிவுகளைப் பற்றிய பழய அனுபவம் காரணமாக குவைத்தும் அதையே விரும்பும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், பின்னர் இங்கிலாந்து நீங்கலாக பிரான்ஸ் உட்பட எல்லா ஐரோப்பிய தேசங்களும் போருக்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்ததால் ஐநாவில் போர் தொடங்க வேண்டியதற்கான அமெரிக்க தீர்மானம் தோற்கும் என்பது போன்ற ஒரு சூழல் இருந்தது,

ஈராக் தன்னிடம் உள்ள பேரழிவு ஆயுதங்கள் பற்றிய ஆய்வுக்கு முழு ஓத்துழைப்பு கொடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எல்லா ஆயுதங்களையும் ஓப்படைக்க வேண்டும் என்று ஐநா தீர்மானம் சொன்னது, ஆனால் அந்த காலக்கெடு கிட்டதட்ட முடிந்த நிலையிலும் அப்போதைய அமெரிக்க ஆய்வாளர்கள் ஈராக் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதை பல ஊடகங்கள் மூலம் நிறுவிக்கொண்டிருந்தார்கள், கடுமையான கருத்துப்பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்ததன, குவைத்தில் இருந்த சாதாரண மக்களாகிய நாங்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம், ஈராக்கில் நிறைய ஆபத்தான வாயுக்களைக்கொண்ட ஆயுதங்கள் இருப்பதாக எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம்,

கெடு முடிந்தபின் போர் தொடக்க நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருந்தன, அதன் வீரியம் குவைத்தில் மெல்ல பரவத்தொடங்கியது, முக்கியமாக நாங்கள் தங்கியிருந்த பகுதி குவைத்தின் முக்கியமான தொழிற்ச்சாலைகள், எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள பகுதி, குவைத்தின் முக்கிய பொருளாதார கேந்திரம் என்று சொல்லலாம், ஆகையால் குவைத் மீதான தாக்குதலில் இந்த பகுதி முக்கியமாக ஈராக் ராணுவத்தால் தாக்கப்படும் என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது, ஆனால் இந்த பகுதியில் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது ராணுவ கேந்திரமோ எதுவுமே இல்லை, ஆனால் ஈராக்குக்கு சென்றுள்ள அமெரிக்க துருப்புக்களுக்காண பெட்ரோல் சப்ளைக்காக எனது அலுவலகத்துக்கு அருகில் ஒரு சிறிய முகாம் போன்ற அமைப்பு உண்டாக்கப்பட்டு அதில் இருந்து லாரி லாரியாக எண்ணை போய்க்கொண்டிருக்கும்,

அந்த பகுதியக் கடக்கும்போது அமெரிக்க ராணுவத்தினர் அங்கு மணல் மூட்டைகளின் மீது துப்பாக்கியோடு மிக அக்கறையாக காவல் காத்துக்கொண்டிருப்பார்கள், ஆரம்பத்தில் அவர்களை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும் எப்படி இவ்வளவு நேரம் ஒரே நிலையில் தொடர்ந்து இவர்களால் நிற்கவோ அல்லது படுத்த நிலையிலோ இருக்க முடிகிறது இந்த கடும் வெயிலில் என்று.

போருக்கான முஸ்தீபுகள் தொடங்கி இருந்த நிலையில் தினமும் மாலையில், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும், குவைத் சிவில் அதிகாரிகள் சிறப்பு பயிற்சி கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள், குவைத்தில் பல தேசத்து மக்கள் பணிபுரிந்தாலும் அதிகம் இந்தியர்களும் பங்களாதேஷ் மக்களும்தான், அவரவர் நாட்டு தூதரகங்கள் அந்த அந்த பள்ளிகளில் இப்படி மாலை நேரக்கூட்டங்களை ஏற்பாடு செய்து இருந்தார், அதில் பலர் நம்பிக்கைதரும்படி பேசினார்கள், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டும் விஷவாயு குண்டுகளை வெடித்தால் என்ன செய்ய வேண்டும் போன்ற பாதுகாப்பு சமாச்சாரங்களுக்கு இடையில், அந்த குண்டுகளால் என்ன பாதிப்புகள் வரும் என்று சொல்லி மேலும் பயத்தை கிளப்பிக்கொண்டிருந்தார்கள், அந்த கூட்டத்திற்கு வரும் அனைவரின் முகத்திலும் ஒரு பயம் அல்லது ஏதோ ஒரு கேள்விக்குறி இருக்கத்தான் செய்தது,

பால்,மின் உற்பத்தி,மருத்துவ மனைகள், தண்ணீர் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியமான பணிகளில் உள்ளவர்கள் விடுமுறை எடுக்க முடியாது என்றிருந்ததால், என்னைப்போன்றவர்களின் நிலைமை சற்று சங்கடம்தான், நான் பணிபுரிந்த மின் நிலையம் சுமார் 2400MW மின் உற்பத்தியும், 16 கடல் நீரில் இருந்து தண்ணீர் உற்பத்தி செய்யும் ஆலைகளைக்கொண்டது, என்பதால் விடுமுறை என்பது வாய்ப்பில்லாமல் போய்விட்டது,

தினமும் தொலைக்காட்சிகளில் போர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய பல செய்திகள் வந்தது கொண்டே இருக்கும், நாங்களும் அவைகளை செயலாக்கி கொண்டிருந்தோம், எல்லோரும் பயந்தது விஷவாயு ஆயுதங்களுக்கு என்பதால் அதற்கான பாதுகாப்பு முயற்சிகள்தான் செய்யப்பட்டன, வீட்டில் ஒரு அறையை தேர்வு செய்து அதன் ஜன்னல்கள் மற்றும் கதவு, குளிர் சாதன பகுதிகள் எல்லாம் முழுக்க வெளிக்காற்று வராத வண்ணம் சீல் வைக்க வேண்டும், பின்னர் மரக்கறித்துண்டுகளை வாங்கி வந்து தண்ணீர் தெளித்து ஒரு மூலையில் பரப்பி வைக்கவேண்டும் காரணம் காற்றில் உள்ள விஷத்தை இந்த கறித்துண்டுகள் இழுத்துக்கொள்ளும் என்று சொன்னார்கள், பின்னர் தேவையான உணவு மற்றும் தண்ணீர், பாட்டரி லைட், தொலைக்காட்சி இல்லை ஒரு ரேடியோ, போன்ற செய்திதரும் விஷயங்கள் உள்ளே வைத்திருக்க வேண்டும்,

இப்படி ஒரு அறையை நாங்களும் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம், பெரும்பாலனவர்கள் அதற்காக மிகவும் முயன்று செய்திருந்ததையும் காணமுடிந்தது, காரணம் அவர்கள் மனைவி குழைந்தைகளோடு இருந்தார்கள், அதற்கான சாதனங்களில் வியாபாரம் சக்கை போடு போட்டது, அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களின் பலதயாரிப்புகள் ஜெகஜோதியாய் காசுகளை குவித்துக்கொண்டிருந்தன, இதில் முக்கியமான விற்பனை விஷவாயு முகமூடிகள்தான், அவைகளின் விலையோ இந்தியர்களுக்கு வாங்க முடியாத உயரத்தில் இருந்தது, அதிலும் பல நிறுவனங்கள் வாயுக்களின் கெடுதல்களைச்சொல்லி தனது கவசங்களின் முக்கியத்துவத்தை அங்கங்கே விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள், சில உள்ளூர் குவைத்திகள் சிறிய ஜெனரேட்டர்களையெல்லாம் வாங்கி கொண்டிருந்தார்கள், பாவம் அவர்களுக்குதானே தெரியும் ஈராக் ஆக்ரமிப்பின்போது பட்ட அவஸ்த்தை.

உண்மையில் குவைத்தியர்களுக்குதான் எங்களை விட அதிகம் பயம் இருந்தது, ஈராக் குவைத்தை ஆக்ரமித்த யுத்த நடவடிக்கைகளில் தத்தம் பெண்களையும், உடைமைகளையும் ஈராக் ராணுவத்திடம் இருந்து காப்பாற்ற அவர்கள் பட்ட பாடு அத்தனை சோகம் நிறைந்தது. ஆகையால் அவர்களிடம் ஒரு கற்பனைகெட்டாத பயம் இருந்தது, உண்மையில் அவர்கள் இந்த போரை விரும்பவில்லை, காரணம் ஒருவேளை ஈராக் ஜெயித்துவிட்டால்? என்ற பயம் இருந்தது, காரணம் சதாம் பற்றி அப்படி ஒரு பிம்பம் எல்லோருக்கும் இருந்தது உண்மை.
எனது மின் நிலையத்திலும் வாராவாரம் போர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பயிற்சிதரப்பட்டன, எந்த தாக்குதல் நடந்தால் எங்கே சென்று தங்கவேண்டும், கர்சீஃப் போன்ற துணியை தண்ணீரில் நனைத்து மூக்கில் கட்டிக்கொண்டால் விஷவாயுவில் இருந்து தற்காலிகமாக தப்பிக்கலாம் என்பதுபோன்ற பயிற்சிகள் தரப்பட்டன,

காற்றின் சுத்தத்தை கண்காணிக்கும் நிறுவனங்கள் நிறைய அதற்கான ஊர்திகளை பல இடங்களில் நிறுவி இருப்பதாக பேசிக்கொண்டார்கள், உண்மையில் எல்லோரும் பயந்தது விஷவாயு ஆயுதங்களை சுமந்த ஸ்கட் ஏவுகணைகளுக்குதான், ஸ்கட் பற்றிய வதந்திகள் நிறைய பரவி இருந்தன, ஏராளமான ஸ்கட் ஏவுகனைகளை சதாம் இன்னும் உயர் தொழிற்நுட்பத்தில் தயாரித்து வைத்துள்ளதாக பேசிக்கொண்டார்கள், முந்தய யுத்தத்தில் இந்த ஸ்கட் அமெரிக்க ராணுவத்தை பலமாக பாதித்திருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்,கெமிக்கல் அலி என்று அழைக்கப்பட்ட சதாமின் மிக நெருக்கமான தளபதிதான் ஈராகின் தென்பிராந்திய கமாண்டாரக் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன,அவர் பிரத்யோகமாக இந்த விஷ வாயு தாக்குதலில் நிபுனர் என்பதால் கெமிக்கல் அலி என்ற பெயர், போர் என்றாலே வதந்திகளுக்கு கொண்டாட்டம் அல்லவா? அது அற்புதமாக தன் கடமையைச்செய்தது. தென்பிராந்தியத்தில்தான் குவைத்தும் அமெரிக்க ராணுவமும் நிலைகொண்டிருந்தன,

எனது நண்பர்கள் தினமும் தத்தமது கார்களில் பெட்ரோலை முழுதும் நிரப்பியே வைத்திருப்பார்கள், கூடுதலாகவும் கேன்களில் வாங்கியும் வைத்திருந்தோம் ஒரு வேளை போர் தொடங்கி விட்டால் காரிலேயே வெகுதூரம் பயணிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது சவுதிக்கோ அல்லது ஜோர்டானுக்கோ போய் இந்தியா போக வேண்டிவரலாம் என்று சொல்லப்பட்டது. நண்பர்கள் பலரும் தினமும் கூடி நிலவரம் பற்றியும் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றியும் விவாதிப்பது வழக்கம் அதில் பலவாறான புதிய ஊகங்களும் யுத்திகளும் பற்றி பேசிக்கொள்வோம், அமெரிக்க ராணுவத்தின் பலம், ஸ்கட் எதிர்ப்பு ஏவுகனையான பேட்ரியாட் ஏவுகனைத் தளங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் பற்றியும் ஆகையால் நமக்கு எவ்வளவு பாதுகாப்பு போன்ற விஷயங்களைப்பற்றியும் நிறைய உரையாடல்கள் இருக்கும் சில புதிய ஆலோசனைகள் இப்படி பல திசைகளில் விவாதங்கள் சந்திப்புகள் இருக்கும்,

ஈராக்கின் தாக்குதல் தொடங்கினால் உடனடியாக அரசு அபாய எச்சரிக்கை சைரன்களை அலறவிடும், உடனே அவரவர் தத்தமது வெளிக்காற்று வராமல் சீல் செய்யப்பட்ட அறைகளில் சென்று இருக்க வேண்டும், அந்த சைரன் ஒலி மாறி வேறு ஆபத்தில்லை என்பதற்காண சைரன் ஒலி வரும் போது எல்லோரும் சாதாரண நிலைக்கு வரலாம் என்பது எல்லோருக்கும் கூறப்பட்டது, சைரன் ஒலி வந்ததும் விஷவாயு தன்மையை ஆராய்ந்து ஆபத்தில்லை என்று தெரிந்ததும் பாதுபாப்பு சைரன் ஒலிக்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே ராஜதந்திர நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன, ஐநாவின் தூதுவர்கள் சதாமை சந்தித்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்தார்கள், பிரான்ஸ் ஜெர்மன் அதிபர்கள் மற்றும் சிரியா போன்ற ஈராக அதரவு தேசங்கள் அமெரிக்க எதிர் நிலைகளை எடுத்து அதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்ஸ்லில் விவாதங்கள் நடத்தப்பட்டன, போர் தொடங்குவதற்கான தீர்மானத்தை அமெரிக்கா எப்போது தாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது, பிரான்ஸ் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதை தோற்கடிக்ககூடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது எங்களுக்கு, அதற்கு நாங்கள் நினைத்த காரணம் பிரான்ஸூக்கு ஈராக்கில் நிறைய கட்டுமானப்பணிகள் இருந்ததாக கருதினோம்,

அமெரிக்காவுக்கும் மசோதா தோற்கும் என்ற எண்ணம் வலுத்திருக்குமோ என்னவோ தெரியவில்லை அவர்கள் போர் தொடங்க வேண்டிய இரண்டாவது தீர்மானம் தேவை இல்லை, முந்தய கெடு விதித்த தீர்மானத்தின் அடிப்படையில் போரைத்தொடங்கலாம் என்று அறிவித்து, அதற்கு சாதகமான பிரிட்டன் உள்ளிட்ட அணிகளை சேர்க்க தொடங்கி இருந்தனர், அமெரிக்க வெளியுறவுச்செயலாலர் காலின் பவல் மற்றும் ராணுவச்செயலாலர் ராம்ஸ்பீல்ட், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் போன்றவர்கள் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் இடம் பிடித்திருந்தனர், டோனி பிளேர் கிட்டதட்ட அமெரிக்க அதிபர் புஷ்ஷின் கொள்கைப்பரப்பு செயளாலர் போல செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அரபிக்கடலின் ஈராக் துறைமுகப்பகுதியான பாஸ்ராவின் வழி உள்ளே நுழைய பிரிட்டனின் வான் படைகளும், விமானந்தாங்கி கப்பல்களும் குவைத் மற்றும் கத்தார் கடல் பகுதிகளில் முகாமிட்டிருந்தன, அமரிக்காவின் ராணுவத்தளம் குவைத் ஈராக் எல்லையோரத்திலும் கத்தாரிலும் அமைக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

போரின் முஸ்தீபுகள் கடுமையாகத்தொடங்கியதில் இருந்து பல பாதுகாப்பு சோதனைகளும் கெடுபிடிகளும் எல்லா மட்டத்திலும் அதிகமானது, எங்களது மின் நிலையத்தின் வாசலில் புதிய கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டன, எல்லா பொருளாதார கேந்திரங்களும் இப்படி கூடுதல் பாதுகாப்போடு கண்காணிக்கப்பட்டது.

எங்களது வேன் எனது மின் நிலையத்தின் முதல் பாதுகாப்பு சோதனை நிலயத்தை அடைந்தது, நாங்கள் எல்லோரும் இறக்கிவிடப்பட்டோம், ஒவ்வொருவரின் சாப்பாட்டு பாத்திரம் தொடங்கி முழு உடலின் பாதுகாப்பு பரிசோதனைகள் நடந்தன அதன்பின் மெல்ல பயணித்து அவரவர் அலுவலகங்களுக்கு சென்றோம், யாருக்கும் வேலை செய்யும் மனநிலை இல்லை கூடி கூடி பேசினோம், வியாழக்கிழமை என்பதால் 12 மணிக்கெல்லாம் பணி முடியும் என்பதால் அதிகம் பேச்சிலும் பயத்திலும் கழிந்தது, தொலைபேசி மூலம் நண்பர்களை அழைத்து ஏதாவது செய்திகள் உண்டா என்று கேட்டுக்கொண்டிருந்தோம்,

அங்கே பணிபுரியும் குவைத்திகளுக்கு மட்டும் மின் நிலைய நிர்வாகம் விஷவாயு முகமூடிகளை கொடுத்திருந்தார்கள், அவைகளை இதுவரை பெறாத குவைத்திகள் சிலர் அதனைத்தேடி அலைந்து கொண்டிருந்தார்கள், அவர்களின் முகம் மிகவும்வெளிறிப்போய் இருந்தது, நான் என்னைப்போல் இருந்த பலரை நினைத்து மனதை தேற்றிக்கொண்டிருந்தேன்,

மதியம் 12 மணிக்கு நாங்கள் மின் நிலையத்தை விட்டு புறப்பட்டோம், எங்கள் மின்நிலயம் இருப்பது குவைத்தின் தென் கடைசியில் என்பதால் ஈராக் எல்லையைவிட்டு வெகுதொலைவு, ஆனால் எங்கள் குடியிருப்புகள் இருந்த பகுதி குவைத்தின் மையப்பகுதிக்கு சற்று அருகில், கிட்டதட்ட ஒரு மணிநேரப்பயணம், மணிக்கு 120 கிமீ வேகத்தில் தினசரி பயணம், பாதி தூரம் பயணித்திருப்போம் அப்போது மணி மதியம் 12:45 எங்கள் வேனில் இருந்த FM ரேடியோவில் முதல் சைரன் ஓலி கேட்கத்தொடங்கியது,

அவ்வளவுதான் வேனில் இருந்தவர்களுக்கெல்லாம் ஒரே பதற்றம், நடு பாலைவனத்தில் பிரயாணம், ஓதுங்ககூட இடம் கிடையாது சைரன் வருகிறதென்றால் ஸ்கட் வருகிறது என்று பொருள் ஸ்கட் ஏவுகனையின் தாக்குதல் தூரத்தில்தான் குவைத் முழுதேசமும் இருந்ததால், எங்கு வேண்டுமானாலும் வரலாம் என்று எல்லோருக்கும் தெரியும், உடனடியாக வேனின் கண்ணாடிகள் நல்லவண்ணம் மூடி இருக்கிறதா என்று சோதித்தோம், வேனின் குளிர்சாதனம் நிறுத்தப்பட்டது நிதானமான வேகத்தில் செல்லுமாறு எகிஃதிய ஓட்டுனருக்கு கூறினோம், இதற்கிடையே அவரவர் கைத்தொலைபேசியில் நண்பர்களை அழைத்து என்ன நடந்தது என்று கேட்க முயன்றார்கள் ஒரு போனும் வேலை செய்யவில்லை,

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழக தென்மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு நண்பருக்கு கையெல்லாம் நடுங்க தொடங்கி யிருந்தது, (அவர் அன்று இரவே கடைசி விமானம் பிடித்து இந்தியாவுக்கு சென்றுவிட்டர் என்று பின்னர் தெரிந்தது) சைரன் ஒலி தொடர்ந்து கொண்டிருந்தது, ஒரு செல்போனும் தொடர்பு கொள்ளமுடியாமல் இருந்தது, மெல்ல அடுத்த 15 நிமிட பயணத்தில் எங்கள் தலைமை அலுவலகம் உள்ள இடத்தை அடைந்தோம், அங்கே அலுவலக வாயிலில் எல்லோரும் கூடி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள், நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டு இங்கு ஏதாவது சத்தம் கேட்டதா என்று கேட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்துகொண்டிருந்தோம், எல்லோருக்குள்ளும் ஒரு பீதி, சில நிமிடங்களில் சைரன் ஒலி மாறி நிலைமை சீரடைந்ததை அறிவித்தது,

அப்போதுதான் எங்களுக்கு கொஞ்சம் உயிர் வந்தது, ஆனாலும் சைரன் வந்ததற்கான காரணம் மறுநாள்தான் தெரிந்தது ஒரு ஸ்கட் தூரத்தில் பாலைவனத்தில் விழுந்து வெடித்த விஷயம், நாங்கள் அதன்பின் மெல்ல வீடு வந்து சேர்ந்தோம், அதற்குள் பல தொழிற்பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இடையே பயம் அதிகமாகி எல்லோரும் எங்கள் தொழிலாளர்களின் Desert camp என்று அழைக்கப்படுகிற பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தொழிலாளர்கள் தங்குமிடத்திற்கு வரத்தொடங்கி இருந்தார்கள்,

நாங்கள் குடியிருப்பு பகுதிகளில் தங்கியதால், மாலை எங்களையும் அங்கு வரச்சொல்லி இருந்தார்கள், இதற்கிடையே சைரன்கள் வருவதும் மீண்டும் ஒருமுறை நடந்தது, நல்லவேளையாக வீட்டில் இருந்ததால் சீல் செய்யப்பட்ட ரூமில் இருக்க முடிந்தது, தொலைக்காட்சிகளின் பரந்த முயற்சியால் போரின் குண்டு வீசும் காட்சிகள் அப்பப்போது காண்பிக்கப்பட்டன, இரவில்தான் அதிக தாக்குதல்கள் நடந்தன ஆகையால் பாக்தாத் உள்ளிட்ட நகரங்களின் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருளில் இருந்தது தெரிந்தது, அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த பிரமாண்டமான விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து போர் விமானங்கள் சீறிப்பாய்வதை காட்டிக்கொண்டிருந்தார்கள்,

பிரிட்டன் பாஸ்ரா வழியாக ஈராக்கின் தென்புறத்தையும், அமெரிக்க அணிகள் பாக்தாத் உள்ளிட்ட மையப்பகுதியை நோக்கி குவைதில் இருந்து முன்னேறுவது என்று திட்டம் போல், ஆனால் ஆரம்பதில் வெறும் விமான தாக்குதல் மூலம் ஈராக்கின் பலத்தை குறைத்து விட்டு பின்னர் தரைப்படைகளை உள் அனுப்புவது என்று தீர்மானித்திருந்தார்கள், நாங்களும் மற்ற எல்லோரும் நினைத்தது, ஈராக்கின் தரைப்படைகளை எதிர்ப்பது அவ்வளவு எளிதில்லை என்றுதான்,

மெல்ல அன்று மாலை கிட்டதட்ட மூவாயிரத்துக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் எங்கள் நிர்வாகத்தின் Desert campல் கூடினோம், எல்லோர் கையிலும் சிறிய பெட்டிகள் அல்லது பைகளில் சான்றிதழ்கள் மற்றும் அத்தியாவசியமான பொருட்களை வைத்துக்கொண்டு தப்பித்து போகும் மனநிலையில் இருந்தார்கள், எங்களது தலைமை நிர்வாக இயக்குனருக்காக காத்திருந்தோம்,

அவர் ஒரு குவைத் பிரஜை, அவர் வந்து சேர்ததும் தொழிலாளர்களின் கூச்சல் குழப்பம் அதிகமாகியது, உண்மையில் எங்கள் தலைமை நிர்வாக இயக்குனர் நல்ல மனிதர்தான், ஓரே நேரத்தில் எல்லோரும் தத்தமது நாட்டுக்கு செல்லவேண்டும் என்றால் என்ன செய்வார், அதுவும் அன்று வியாழக்கிழமை, மறுநாள் வெள்ளிக்கிழமை, இரண்டுநாளும் விடுமுறை நாட்கள் வேறு, அவர் இரண்டு நாட்கள் பொருத்திருங்கள் பின்னர் பார்க்கலாம், என்று சொன்னார், ஆனால் தொழிலாளர்களின் மனநிலைமை, இரண்டு நாளில் விமானங்கள் நிறுத்தப்பட்டல் என்ன செய்வது என்கிற பயம் இருந்தது, அதற்குள்ளாகவே பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட செய்திகள் எங்களை எட்டி இருந்தது அதனால் அந்த பயம் அதிகமாகிக்கொண்டிருந்தது, மேலும் பலருக்கு மாதக்கடைசி என்பதால் சம்பளம் விமான பயணச்சீட்டு போன்ற பிரச்சினைகளை கூறி சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்,

எங்கு பார்த்தாலும் ஒரே பதற்றம் எங்களது கேம்ப் அடுத்து பல கம்பெனிகளின் தங்குமிடங்களும் இருந்தன அவற்றிலும் இதே நிலைதான், போலிஸ் வேறு வந்து குவிக்கப்பட்டிருந்தது, ஒரு வழியாக பல மிரட்டல், சமாதானம் போன்ற காட்சிகள் முடிந்து கடைசியாக அனைவரும் பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளுங்கள், இரண்டு நாள் கழித்து தேவைப்படுவோர்க்கு டிக்கட் கொடுத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது, உடனடியாக பாஸ்போர்ட் கொடுக்கும் வேலைகள் தொடங்கின, என்றாலும் எல்லோருக்குள்ளும் அந்த பதற்றம் இருந்து கொண்டே இருந்தது,

நாங்கள் எங்களது பாஸ்போர்ட்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு வரும்போது மணி கிட்டதட்ட இரவு 10 மணியாகி இருந்தது, பசி வயிற்றை கிள்ளத்தொடங்கி இருந்தது, காலையில் இருந்து சரியாக சாப்பிடாதது வேறு, நேரே கேம்ப் கேண்டினில் சென்று சாப்பிட அமர்ந்தோம், சாம்பாரும் சாதமும் இருந்தது, அதன் பின் வெளியே வந்து கைகழுவிக்கொண்டிருந்தபோது

ஒரு பயங்கரவெடிச்சத்தம் கேட்டது, சிறிய பூமி அதிர்வும் கூடவே உணரப்பட்டதாக நினைக்கிறேன், அந்த நிமிடம் அது வந்த திசை எங்கிருந்து என்றெல்லாம் ஒன்றும் புரியவில்லை கைகழுவிய வேகத்தோடு பலர் ஓடத்தொடங்கினார்கள், எங்கு ஓடுவது என்று யாருக்கும் தெரியவில்லை, எங்கள் கேம்ப் அருகில் ஒரு மிகப்பெரிய ரசாயன ஆலை இருந்தது, அதன் மீது குண்டு விழுந்தால் அதில் இருந்து வரும் விஷவாயு மிக மோசமான விளைவுகளைக்கொடுக்கும் என்பது தெரிந்தால் அந்த ஆலைத்தாக்கப்பட்டதா என அறியவும் பக்கத்தில் சத்தம் கேட்டதால் சற்று தூரம் போனால் தப்பிக்கலாம் என்ற மன நிலையில் ஓடிக்கொண்டிருந்தோம்,முகத்தில் தண்ணீரில் நனைக்கப்பட்ட கர்சீஃப் மட்டும் வைத்துக்கொண்டு,

கேம்ப் கட்டடங்களின் வழியே தட்டு தடுமாறி ஓடி அதன் வாசலுக்கு வந்த போது மொத்த தொழிலாளர்களும் பெரும் பதற்றத்தோடு எங்கு போவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் எல்லாதிசையிலும் ஒரே அமைதியும் பயமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த குண்டு விழுந்த அடையாளமும் தெரியவில்லை, ஆனால் போலிஸ் வாகனங்கள் கடல் புறத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தன,

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்று விடலாம் என்று தோன்றவே கிளம்பினோம், வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் என்று தோன்றியதால், மறுநாள்தான் தெரிந்தது, முதல்நாள் இரவு அந்த ரசாயன ஆலையை தாக்கவந்ததும் அமெரிக்க தொழில்நுட்பத்தால் திசை திருப்பி கடலில் விடப்பட்டதும், அது விழுந்த சப்தம்தான் இப்படிகேட்டதும் என்று விளக்கினார்கள், அதன்பிறகு கிட்டத்தட்ட 16க்கும் மேற்பட்ட ஸ்கட் ஏவுகனைகள் வந்தன, பல தடுத்து அடிக்கப்பட்டன வானத்திலேயே, சில திசைதிருப்பி கடலில் விடப்பட்டன, கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க படைகள் வெற்றிகளை குவிக்கத்தொடங்கி கொண்டிருந்தது, சாரி சாரியாக ஈராக்கிய படைவீரர்கள் சரண் அடைந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது, போரின் பெரிய பாதிப்புகள் இல்லாது குவைத் காப்பாற்றப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு சாதாரண சம்பவத்துக்கே, இப்படி பாதிக்கப்பட்டோம் நாங்கள், வருடக்கணக்கில் போரில் வாழும் ஈழ மற்றும் ஈராக் மக்களின் சோகம் எவ்வளவு கொடுமையானது என்று இப்போது நினைத்தால் உடல் பதறுகிறது.

தவநெறிச்செல்வன்

Jul 30, 2009

இப்படித்தான் நாட்கள் அழிகின்றன,

அதிகாலை துயில் எழுவது எல்லா வளைகுடா நாட்டிலும் ஒரு தவிர்க்க முடியாத விஷயம், அதனால் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை கழிக்கும் நேரத்தில் ஒரு விதமான தனிமை மிகவும் கொடுரமாக உணர்வதால் அதில் இருந்து விடுபட அந்த நேரத்தில் புத்தகமோ அல்லது இசையோ கேட்பது வழக்கமாகி விட்டது, இப்போது இணையம் வந்து விட்டபின் மடிகணினியின் உதவியும் சேர பல விஷயங்களை சுகமாக செய்ய முடிகிறது, காலையில் எழுந்து அதிகாலை.காம் இணையத்தில் இருக்கும் பொன்னியின் செல்வன் ஒலி வடிவத்தை ஓலிக்க செய்து குளியல் அறைக்குள் சென்றேன்,

இன்று பழயாறை என்ற பகுதியை வாசித்தார், பொன்னியின் செல்வன் நான் முதலில் படித்த நீண்ட ஒரு வரலாற்று நாவல் அதுதான் எனக்கு படித்தலின் சுகத்தை கற்று தந்தது என்று சொன்னால் அது மிகையில்லை, அதன் பின் எனது படிப்பின் தூரம் அதிகமாகிவிட்டாலும் அந்த பொன்னியின் செல்வனின் மீது உள்ள காதலும் பரவசமும் அப்படியேதான் உள்ளது, நமது முற்காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஒரு பலம்பொருந்திய மன்னனின் வரலாறு என்பதை விடவும் அது ஒரு சினிமா போல நம்முன்னே விரிவதை எத்தனை எழுத்தினாலும் போதாது என்றுதான் சொல்வேன். அதில் கலந்து கிடக்கும் காதலும் வீரமும் நிர்வாக செயல்பாடுகளும் அரசுகளின் அதிகார தூரங்களும் அதில் இணைந்து கிடக்கும் சிற்றரசர்களின் தன்மைகளும் அவர்களுக்குள் பரவிக்கிடக்கும் ஒரு இனம் புரியாத ஒற்றுமையும் இப்படி இதெல்லாம் புரிந்து கொள்ள உதவிய ஒரு பொக்கிஷம்.

கம்பர் தனது ராமனை எப்படி ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்திகொண்டுபோனேரொ அப்படி ஒரு முயற்சியாகக்கூட இருக்கலாம், இயல்பில் ராஜராஜன் இத்தனை தன்மை கொண்டவனாக இல்லாமல் கூட இருந்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் இல்லாத ஒரு அற்புதமான கதாநாயகனாக வந்திய தேவனையும் அருண்மொழியையும் கல்கி ஆக்கிவிட்டார் என்றுதான் சொல்வேன்.

அந்த அத்தியாத்தை கேட்டபடியே காலைப்புறப்பாடு முடிந்து எனக்கான வாகனத்தில் ஏறினேன், இன்னும் 1 மணிநேர பயணம் இருக்கிறது அதனால் எனது Mp3 player மிகுந்த உதவியாக இருக்கும், அதெப்படியோ ஒரு அமைதியில்லாத இறைச்சல் நிறந்த மனிதனாக போய்விட்டோனோ என்று கூட சில நேரங்களில் நினைக்கதோன்றியது,
சில நாட்களாகவே ஜோதா அக்பர் பட ஹிந்தி பாடல்கள் என்னுள்ளே ஒரு அதிர்வை ஏற்படுத்திகொண்டிருக்கிறது, இந்த ஏ.ஆர். ரஹ்மான் அப்படி ஒரு ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது,

வந்தார்கள் வென்றார்கள் படித்ததில் இருந்து இந்த மொகலாய மன்னர்களிடம் ஒரு காதலே வந்து விட்டது என்று நினைக்கிறேன் ஆக்ரா கோட்டைக்குள் சென்று பார்த்த போது ஒவ்வொரு அடியிலும் எனக்கு ஒரு பரவசம் இருந்தது, அது தாஜ்மகலில் கூட இல்லை, எத்தனை முடிவுகளை எடுத்த தர்பார் மண்டபம் , ஷாஜகான் சிறைப்பட்டிருந்த அறைகள் இப்படி அது ஒரு பரவசமான ஒரு இடம், செங்கோட்டையை விடவும் எனக்கு பிடித்த இடம் ஹிமாயூன் சமாதியுள்ள அந்த பிரமாண்ட கல்லறை கட்டடமும் ஆக்ரா கோட்டையும்தான்,

அதன் வரலாறுகளுக்குள் பலமுறை பயணப்பட்ட ஒரு அற்புதமான அனுபவம், அதனால்தானோ என்னவோ ஜோதா அக்பர் படமும் பலமுறைபார்த்தேன், அதன் வரலாறுகள் மிகவும் நுணுக்கமாக படிக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
அதனால் அந்த பாடல்கள் என்னுள்ளே ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்தின, எனக்கு இந்தி மொழி தெரியாது என்றாலும் அது என்னை அப்படியே ஒரு பரவசத்துக்குள் அழைத்துப்போவதை உணரமுடிகிறது,

ஒரு மணிநேர பயணத்துக்கு பின் அலுவலகம் சென்று பாதுகாப்பு சோதனைகள் முடிந்து எனது இருக்கைக்கு சென்று அமர்ந்து அன்றைய காலை வேலைகள் தெவையான விஷயங்களை செய்து கொடுத்து விட்டு எனது தளத்தில் சில மாற்றங்களை செய்ய முயல்கிறேன், அதன், எப்போதோ கும்பகோணத்தில் படித்த போட்டோ ஷாப் மென்பொருளில் சில முயற்சிகளுக்கு பிறகு சில மாற்றங்களை செய்தேன், அதை இந்த தளத்தில் நீங்கள் காணலாம், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் நான் புதிதாக ஒரு முயற்சியை செய்த மகிழ்ச்சியில் எனது வழக்கமான தளங்களுக்கு செல்கிறேன், சாரு மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் மிக முக்கியமானவர்கள், அதில் சென்று படிக்க படிக்க ஒரு விதமான உணர்வுகள் வரும், அதெல்லாம் எப்படி எழுதுவது நான் என்ன எழுத்தாளரா வெறும் உளறுகின்ற ஒரு பிளாகர் மட்டுமே.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய தாஸ்தாயெவ்ஸ்கியை பற்றிய கட்டுரை படிக்க படிக்க ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, அவரைப்பற்றி தெரியும் அவ்வளவுதான், ஆங்கில நாவல்கள் படிக்கும் அளவுக்கெல்லாம் ஒரு ஆங்கில அறிவு இல்லை, அதைப்பார்த்து பயந்து போன ஒருதன்மைதான் உண்டு, ஆகையால் எதுவாய் இருந்தாலும் தமிழில் தேடிபடிக்கிறேன், சாருவின் கருணையில் பல தமிழ் மொழி பெயர்ப்புகளையும், உலக இலக்கியத்தின் அறிவையும் கொஞ்சம் பெற முடிகிறது, என்றாலும் இதெல்லாம் தீரக்கூடிய விஷயம் இல்லை, இதற்கிடையே, குடும்ப பிரச்சினைகள் லவ்கீக செண்டிமெண்டுகள் என்று பிரச்சினைகள் வேறுதிசைகளுக்கு நம்மை இழுத்துச்செல்வதும் உண்டுதான்,

இப்படி ஒன்றும் இல்லாத விஷயத்தில் எல்லாம் முறைத்துக்கொள்ளும் மனிதர்களைப்பார்க்கும்போது பலமுறை நினைத்தது உண்டு இவர்களுக்கெல்லாம் இலக்கியம் என்கிறதும் அதில் சுகித்து கிடக்கும் வாய்ப்பும் கிடைத்தால், இப்படி ஒரு உலகம் பறந்து விரிந்து கிடக்கும் போது அதைவிட்டு விட்டு இப்படி இயந்திரமாய் கழிக்கிறோமே என்று வெட்கப்படுவார்களோ என்று.

அத்தனை சுகம் இந்த படிப்பதில் அதிலும் நல்ல இலக்கியங்களை படிப்பதில் இருக்கிறது, இதில் எங்குமே நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. பா.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி என்கிற நாவலை இப்போது படித்து கொண்டிருக்கிறேன் அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் அது ஒரு கட்டுரையில் சொல்கிற விஷயமில்லை, அவர் சொன்ன ஒரு விஷயத்தை எஸ்.ரா மேற்கோள் காட்டியுள்ளார்

மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை, மனதை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை

இது எவ்வளவு பெரிய வாசகம், இதன் பொருள் துயரங்களில் வீழ்ந்து மீண்டு வந்தவருக்கெல்லாம் புரியாமல் இருக்காது, எல்லா துயரங்களையும் கடக்கத்தாம் முயல்கிறோம், எனது தந்தையார் இறந்த போது ஒரு தாங்கமுடியாத துயரம் எனக்குள் எழுந்தது, ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள நான் முயலவே இல்லை, அல்லது அதற்குள் பிரவேசிக்கவே முயலவில்லை, இப்போது தனிமையில் இருக்கும்போதெல்லாம் அவரின் நினைவுகள் மெல்ல கண்ணீருக்குள் வந்து விடுகின்றன, அவரின் கைகடிகாரம் கட்டிய கையைப்பிடித்துக்கொண்டு நடந்த காலங்கள் வந்து வந்து போகின்றன, ஆனால் அதெல்லாம் தாங்கி கொள்ள முடிவதுதான் ஒரு ஆறுதல்,

இப்படி எல்லோருக்கும் காலம் ஒரு துயரத்தின் வலிமையை உணர்த்தி அதை தாங்க கூடிய தனது வலிமையையும் உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு தொடர்கதை போல இருந்த உறவுகள் திடீரென முற்றும் போடும்போது ஏற்படும் ஒரு பாதுகாப்பின்மை கூட ஒரு துயரமாக எழுந்து மெல்ல மெல்ல கரைந்து ஒரு நுரைபோல அப்படியே வடுதெரியாமல் மறைந்து போய்விடுகின்றன அதன்பின் அந்த உறவுகள் நிரந்திரமாக தனது முக்கியத்துவத்தை இழந்து ஒரு சராசரியாய் தங்கிவிடுகிறது.

தவநெறிச்செல்வன்

Jul 26, 2009

கேரள அரசியல் நடப்பு ஒரு சிறிய பார்வை.

அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து புறப்பட காரில் ஏறினேன் என்னோடு எனது மேளாலரும் மற்றுமொரு பொறியாளரும் மூன்று பேருமான பயணம், காலையில் தினசரியில் அச்சுதானந்தன் அவர்கள் கம்னியூஸ்ட் கட்சியின் போலிட்பீரோவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விலக்கி இருந்தார்கள், என்னுடைய கார் ஓட்டுனர் ஒரு தீவிர கம்னீயூஸ்ட் என்பதால் அவரிடம் இது விவாதிக்ககூடிய விஷயமாக இருந்தது, கூடவே அவர் கேரளத்தை சேர்ந்தவர், எனக்கு கேரளத்தை சேர்ந்த பலரின் நட்பு உண்டு, அதனால் மலையாள மொழி கொஞ்சம் தெரியும் அதனால் அதிகம் அவர்களோடு உரையாடுவதால் அந்த மொழி அறிவு மேம்படும் என்பதால் நான் அதிகம் இது போன்ற விவாதங்களை துவக்குவது பழக்கம்,

எனது அந்த நண்பர் கண்ணூர் சொந்த ஊராக கொண்டவர்,பெயர் பிரதீபன், இதில் கண்ணூர் என்றதும் அது செங்கொடியின் சொந்த ஊர் போன்ற ஒரு அமைப்பைக்கொண்டது. ஆனால் அதில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் UDF பலமுறை வென்றிருக்கிறது என்பது வேறு விஷயம், இதில் அச்சுதானந்தன் அவர்களின் வெளியேற்றம் ஒரு விதமான பதற்றத்தை எல்லா மீடியாக்களிலும் உண்டாக்கி இருந்தது, காரணம் கேரளத்தில் அச்சுதானந்தனுக்கு என்று ஒரு தனி மக்கள் செல்வாக்கு உண்டு காரணம் அவரின் எளிமை நேர்மை, ஆனால் பழய கேரள சி.பி.எம் மின் எல்லா முதல்வர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போதைய நடைமுறையில் கேரள மாநில கட்சியின் தலைவராக இருக்கும் திரு. பினராயி விஜயன் மற்றும் திரு. அச்சுதானந்தன் இடையே இருந்த ஒரு கோஷ்டி சண்டைதான் இந்த தேர்தல் கட்சிக்கு பெரும் தோல்வியைக்கொடுத்ததாக ஒரு மனநிலை உருவானதால் அதன் பாதிப்பு இப்படி ஒரு நடவடிக்கையாக அமைந்து விட்டது.

கண்ணூரில் கம்னியூஸம் என்பது ஒரு மதம் மாதிரியான விஷயம் அங்கே உள்ள செங்கொடி தொண்டர்கள் அதை அப்படித்தான் ஒரு ஆழ்ந்த பற்றோடு பின்பற்றுகிறார்கள், கண்ணூரைச்சேர்ந்த தலைவர்கள்தான் அந்த கட்சியில் அதிகம் ,தற்போதைய தலைவர் பிணராயி விஜயன், ஈ.கே நாயனார் போன்றவர்கள் கண்ணூரைச்சேர்ந்தவர்கள்தான்.மேலும் கண்ணூரில் அடிக்கடி நடைபெறும் அரசியல் கொலைகள் பத்திரிக்கை செய்திகளாக தமிழர்கள் படித்திருக்ககூடும், அதெல்லாம் இந்த கட்சியின் மீதான ஆழமான பிடிப்பின் வலுவான காரணங்கள்.

ஆனால் அச்சுதானந்தன் கண்ணூரை செர்ந்தவரில்லை என்பது ஒரு விஷயம், ஆனால் கட்சியில் தனித்தலைவர்களை தவிர கட்சியே முதன்மையானது என்கிற கொள்கை மிகவும் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளதால் இதில் எந்த தனிப்பட்ட தலைவருக்கும் ஒரு முக்கியத்துவமும் கிடையாததால் கட்சியைவிட்டு வெளியே போனால் அவர்களின் மதிப்பி செல்லாகாசாகிவிடும்.

இந்த பின்புலத்தில்தான் நான் கட்சியின் இந்த நடவடிக்கை பற்றிய விவாதத்தில் இறங்கினேன், அச்சுதானந்தன் மீது எல்லோருக்கும் ஒரு பரிவு உண்டு, பினராயின் ஆதரவாளர்கள் தவிர, காரணம் அவரின் எளிமையும் மிக நீண்டகாலம் கட்சியில் இருந்தும் முதல்வராக முடியாமல் இப்போதுதான் அந்த பதவிக்கு வந்துள்ளார் என்பதும் காரணம்,
நம் தமிழகத்தில் கம்னியூஸ்ட் கட்சியின் தீவிர செயல்பாடுகள் 80 களிலேயே குறைந்து விட்டதால் அதன் ஆழமான கொள்கைகளும் எளிமையும் நம் தமிழகமக்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, அதனால் நம் மக்களுக்கு திமுக அதிமுகவின் ஆடம்பர தனிநபர் துதி அரசியல்தான் பழக்கம், அதனால் தலைவரைவிட கட்சியே முதன்மையானது என்கிற ஒரு சொல் அமைப்பே அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்,

கேரளத்தின் எல்லா நிலையிலும் அரசியல் மிகவும் ஊடுருவிய ஒரு விஷயம், பல பிரச்சினைகள் அரசியல் பிரமுகர் கொண்டே தீர்க்கப்படுகின்றன அதுவும் கண்ணூர் போன்ற இடங்களில் ஒரு பிள்ளைக்கு பெண்பார்த்து முடிவெடுக்கு முன் அந்த குடும்பத்தை பற்றி விசாரிக்க வேண்டுமானால் அந்த பகுதியில் உள்ள கிளை கமிட்டி ஆட்களிடம் தொடர்பு கொண்டு இதுபோல் ஒரு வரன் வந்துள்ளது அவர்களை பற்றிய குடும்ப நிலவரம் வேண்டும் சகாவே என்று சொன்னால் போதும் முழு உண்மையான விவரத்துடன் செய்யலாம் செய்ய வேண்டாம் என்கிற வரையிலான ஒரு உத்திரவாதம் வரை தீர்க்கமாக வரும், அது 100 சதம் உண்மையாகவும் இருக்கும், அதோடு எல்லா குடும்ப உறுப்பினர்களின் நல்ல பெயரையும் கம்னியூஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் பெற்றிருப்பார்.அவரின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாக இருக்கும்.

இந்த அரசியல் அமைப்பு எல்லா குடும்பத்திலும் ஒரு சாதாரண விஷயமாக இணைக்கப்பட்டிருக்கும், அது ஒரு கிராம பஞ்சாயத்து அமைப்பைபோல. ஆகையால் இந்த மாற்றங்கள் கேரளத்தில் எல்லோரிடமும் ஒரு கேள்விகுறியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் முதல்வர் அச்சுதானந்தன் தனது செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சொல்லிவிட்டு அதை மேற்கொண்டு விவாதிக்க அவர் விரும்பவில்லை, அதுதான் கம்னியூஸ்ட், அதன் கட்டளைகளுக்கு மறுப்பேச்சில்லை,

மாநிலச்செயலாளர் பினராயி விஜயன் முன்னாள் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது மின் துறை மந்திரியாக இருந்த காலத்தில் பல மின் திட்டங்களின் புதிய ஓப்பந்தம் காரணமாக மிகவும் பெரிய சர்ச்சைகள் உண்டாகின அதில் “SNC லாவலின் “ என்கிற ஒரு கேஸ் மிகவும் சிக்கலாகி அதில் ஊழல் புரிந்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக கேரள கவர்னர் அந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி விசாரிக்க உத்திரவு இட்ட பின்பு இந்த அரசியல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யத்தை எட்டி பிடித்துள்ளது.

இதில் இரண்டு விதமான அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன, அதில் கம்னியூஸ்ட் கட்சியின் கருத்தும் காங்கிரஸ் கட்சியின் கருத்தும் வேறு வேறு திசையில் இருக்கும், ஆனால் இந்த போலிட்பீரோ உறுப்பினர் பதவியில் இருந்து அச்சுதானந்தன் நீக்கப்பட்டது, இந்த வழக்கில் கவர்னர் தலையிட்டதற்கும் தொடர்பு இருப்பதுபோல் ஒரு தோற்றம் வழக்கம்போல தவறாகவோ அல்லது சரியாகவோ மக்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

Jul 14, 2009

கானல்நீர்

இருபது வருடம் ஒரு வளைகுடா நாட்டில் தன் குடும்பம் குட்டிகள் விட்டு பணிபுரிந்த ஒரு மனிதர் தான் இனி இந்தியாவில் சென்று தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று எண்ணி முடிவெடுக்கிறார், அவருடைய பிள்ளைகள் 10, 15 வயதினராய் படிப்பில் இருக்கிற ஒரு சூழல். அவருக்கு இப்படி முடிவெடுக்கும் முன்னர் ஒருவேளை நாம் இப்படியே பணி செய்து இங்கேயே இறந்து போக நேரிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்கிற ஒரு பயத்தில்தான் இனி நாட்டுக்கு சென்று விடலாம் சம்பாதித்தது போதும் என்கிற முடிவுக்கு வருகிறார், அதற்கு முன் தன் மனைவியிடம் தெரிவிக்க ஆசைப்பட்டு அதனை இப்படி தொடங்குகிறார்.

கணவர்: ஹலோ நல்லாயிருக்கியா?

மனைவி:: ம் சொல்லுங்க,

கணவர்: எனக்கு மனசே சரியில்லை, நான் இப்படியே இங்க இருந்து வேலை செஞ்சு செஞ்சு செத்திருவேன் போல இருக்கு.

மனைவி: ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.

கணவர்: இல்லை, எனக்கு ஒரு ஆசை ஒருவேளை எனக்கு அப்படி ஏதும் ஆயிட்டா நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்களின் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும்

மனைவி:: எனக்கென்னமோ இத்தனை வயசுள்ள பிள்ளைகள் சம்மதிப்பார்களா என்று கவலையாக இருக்கிறது.

கணவர்:!!!!!!!?????????

இப்படி ஒரு கதை எனது கேரள நண்பர் பிரதீபன் கூறினார், அதனைக்கேட்டு நாங்கள் இருவரும் வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தோம், அந்த சிரிப்பில் உள்ளார்ந்த சோகம் மிக அதிகம், வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டி வருபவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தனது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து விலக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பது மிகவும் சத்தியமான உண்மை.

வெளிநாட்டில் வேலையில் இருக்கும் எங்களைப்போன்றவர்கள் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு செல்லும்போது மனதுக்குள் இருக்கிற ஆனந்தம் எண்ணில் அடங்காத ஒரு விஷயம் ஆனால் அங்கே போய் சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களின் அணுகுமுறை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.

இதில் நான் புரிந்து கொண்டது இப்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும், அப்பா அம்மா, மனைவி தன் குழந்தைகள் மற்றும் சகோதர்களின் குழந்தைகள் மட்டுமே, மற்றவர்கள் யாருக்கும் அத்தனை பெரிய எதிர்பார்ப்பில்லை,

இதன் காரணம் மிக நியாயமானதுதான், நம்மால் அவர்களுக்கு உள்ளூரில் ஆககூடிய காரியம் ஒன்றுமே இல்லை, நம்மை சாராமல் அல்லது எதிர்பாராமல் அவர்களால் வாழ முடியும், அப்படிப்பட்ட சூழலில் நாம் அத்தனை முக்கியமானவர்களாக இருக்கப்போவதில்லை, ஒரு வீட்டு வேலைக்காரியால் ஆகக்கூடிய காரியம் கூட இயல்பில் ஒரு வெளிநாட்டு உறவினனால் செய்ய முடியாது, பின்னர் எப்படி அந்த உணர்வு வரும், ஆகவே அது இயல்புதான், கூடவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு உள்நாட்டில் எல்லா உதவிகளும் செய்ய வேண்டிய சுமையும் அவர்களுக்கு வந்து சேரும் இதெல்லாம்தான் அந்த உணர்வு இல்லாமல் போவதற்கான காரணம்,

அம்மா, அப்பா போன்றவர்கள் இருக்கும் காலம்வரை அவர்கள் ஒரு பாலமாக சகோதரர்களுக்கு இருப்பார்கள், அவர்களின் மீதுள்ள அன்பு அல்லது அவர்களின் நடு நிலைமை ஒரு பிள்ளையிடம் சிரமம் இருந்தால் மற்ற பிள்ளையிடம் பேசி அவனுக்கு உதவசொல்ல அவர்களால் முடியும், அதன் மூலம் ஒரு பிணைப்பை அவர்கள் உருவாக்குவார்கள், ஒரு குடும்பத்தில் அப்பா அம்மாவின் மறைவுக்கு பிறகு யாராவது ஒரு பிள்ளைக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த மகன் அல்லது மகளின் நிலை மிக பரிதாபமானது. அப்போதுதான் பெற்றொர்களின் அருமை புரியும். சமீபத்தில் வந்த “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் அந்த காட்சி மிக அழகாக எடுத்து காட்டப்பட்டிருக்கும்.

இப்படியான ஒரு சூழலில் இந்த குடும்ப மதிப்புகள் எல்லாம் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி தீவுகளாக மாற்றப்போகின்றன அதன் கொடூரத்தை நமது இணக்கம் இல்லாத சூழலின் மூலம் அதிகப்படுத்த தொடங்கி வருகிறோம். சொந்த சகோதரன் வெளிநாடு விட்டு வரும்போது வீட்டிற்கு அழைத்து ஒருவேளை சோறு போடக்கூட இன்றைய உறவுகள் முடியாமல் இருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன வென்று எத்தனை யோசித்தாலும் மிஞ்சுவது வெறும் கண்ணீர்தான்.

எத்தனை வயது ஆனாலும் எத்தனை பணக்காரன் ஆனாலும் இந்த வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்களின் எண்ணங்கள் சொந்தபந்தங்களை நினைத்துதான் இன்னும் தினசரி வாழ்வுக்கான உற்சாகத்தை இங்கே கொடுக்கிறது, அது மட்டும் இல்லாமல் போனால் மனிதன் வெறும் மரமாகத்தான் இங்கே இருப்பான்.

தவநெறிச்செல்வன்

Jul 3, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-3

நேரமோ ஆகிக்கொண்டிருந்தது, கு.சே அப்படியும் இப்படியும் அலைந்து கொண்டிருந்தான், அவன் முகத்தில் ஒரு பீதி குடியேறி இருந்தது, மெல்ல அந்த நிலையில் அவன் ஒரு பைத்தியக்காரனைப்போல் ஆகிவிடக்கூடிய நிலைதான் இருந்தது, அவனின் பதற்றம் கண்டு அங்கு பணிபுரிந்த பணியாட்களில் ஒருவர் தமிழர், இவனைக்கண்டு, என்ன சார் பிரச்சினை என்று கேட்டார், கு.சே அவரிடம் அழுதுவிடுவான் போல இருந்தது, எனது பெட்டி வரவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை என்று சொல்லும்போதே அவன் நா தழுதழுத்தது, அவர் பயப்படாதீங்க எங்கையும் போய்விடாது அந்த கவுண்டரில் சென்று சொல்லுங்கள் என ஒரு இடத்தை காண்பித்தான், குணசேகரன் அந்த இடத்தில் சென்று டை கட்டி கொண்டு இருந்த ஒரு ஆளிடம் தனக்கு முடிந்த ஆங்கிலத்தில் தனது பெட்டி வரவில்லை என்பதை கூறினான், அந்த மனிதன் இவனுடைய டிக்கட்டை கேட்டான், குலசேகரன் தன்னிடம் இருந்த டிக்கட்டின் மறுபாதியை அவரிடம் நீட்டினான்.

அதன் பின்பக்கத்தில் ஒரு சிறிய சீட்டு ஓட்டி இருந்தது, அதை அப்போதுதான் கு.சே கவனித்தான்,தனது லக்கேஜ் பற்றிய ரசீது அதுதான் போலும் என்று அப்போதுதான் அவனுக்கு புரிந்தது. உடனடியாக அந்த சீட்டில் இருந்த நம்பரை தனது கணினியில் தட்டிப்பார்த்து உங்கள் பெட்டி வந்து விட்டது அங்குதான் இருக்கும் என்று கூறி ஒரு பணியாளரையும் துணைக்கு அனுப்பிவைத்தார், மீண்டும் இருவரும் கன்வேயர் பெல்ட் இருக்கும் இடத்தில் கீழே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை பார்த்தார்கள்,

அந்த உடன் வந்த பணியால் அங்கு வெள்ளை நிற பிளாஸ்டிக் பை ஓன்று மூட்டை போல் கட்டி இருந்ததை பிரித்து கு.சே வை பார்க்க சொன்னார், அது நல்ல அழுத்தமான பையாக இருந்தது அதனை பிரித்த போது அவன் பெட்டி திறந்து அதில் உள்ள இவன் உள்ளாடை உள்ளிட்ட சாதனங்கள் அதனுள் விரவிக்கிடந்தன கு.சே வுக்கு சற்று தர்மசங்கடமாக உணர்ந்தான், அந்த உதவியாளரை ஏன் இப்படி ஆனது என்று கேட்டான், அதற்கு அவர் உங்கள் பெட்டி பூட்டு சில நேரம் சரியில்லாத போது திறந்து கொள்ளும் அதை இப்படி கட்டி அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான் என்று கூறிவிட்டு அந்த பணியாளர் அவர் பணி முடிந்த அர்த்தத்தில் அங்கிருந்து சென்று விட்டார்,

கு.சே அவைகளை மீண்டும் பெட்டிக்குள் வைக்கும் போது தனது சான்ற்தழ்கள் அதில் இருக்கின்றனவா என்று சரிபார்த்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டான், அதன் பின் அவைகளை ஒழுங்கு படுத்தி எடுத்து தனது வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்,

இந்த அலமலப்பில் கிட்டதட்ட ஒரு மணிநேரம் கால தாமதமாகிவிட்டது, வெளியே வந்தால் வெளியில் கடுமையான கூட்டம் விதவிதமான முகங்களில் எல்லோரும் யாரையோ தனக்கு வேண்டியவர்களை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள், அதில் பலவாறான மனிதர்கள் சிலர் தத்தமது கைகளில் சிலரின் பெயர் அல்லது கம்பெனி பெயர்களை எழுதி வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்,

அதில் தனது பெயரோ அல்லது கம்பெனி பெயரோ இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே கு.சே தனது தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தான், அவன் பார்த்த வரைக்கும் எங்குமே அப்படி ஏதும் காணப்படவில்லை, என்ன ஆயிற்று யார் வந்து தன்னை அழைத்துப்போவார்கள், அவர்கள் நம்மை சரியாக அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்றெல்லவா சொன்னார்கள், யாரும் இல்லை என்றால் என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை மெல்ல அங்கே வண்டியை வைத்துக்கொண்டு நின்று கொண்டான், ஒன்றுமே தெரியாமல் சென்று கொண்டே இருந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை, அப்படியாரும் அழைக்க வராமல் போனால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளச்சொல்லி ஒரு தொலைபேசி எண் கொடுத்திருந்தார்கள், அதை தேடி தன் கைத்தொலைப்பேசியை ஆன் செய்தான்,

தவநெறிச்செல்வன்

Jun 26, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-2

கு.சே (இனி நாம் குலசேகரனை கு.சே என்றே அழைப்போம்.) அப்படி விழித்துக்கொண்டு நிற்பதை பார்த்து அதே வரிசையில் நின்றிருந்த ஒரு தமிழ்நாட்டுக்காரர் அவனை அருகே அழைத்தார், அப்போது கு.சே அவரிடம் ஒரு உலக மகா பணிவுடன் சென்று தனது பாஸ்போர்ட்டை நீட்டினான் அவர் அதை வாங்கி பார்த்துவிட்டு உங்கள் விசா எங்கே என்று கேட்க அவன் தன்வசம் இருந்த ஒரு விசாவின் ஜெராக்ஸ் காப்பியை காண்பிக்க அதற்கு அவர், “இது காப்பி ஒரிஜினல் அந்த கவுண்டரில் சென்று வாங்கி வாருங்கள் அப்போதுதான் விடுவார்கள்” என்று சொன்னார்,

அப்போதுதான் குலசேகரனுக்கு உயிரே வந்தது, ஆகா இதை யாருமே சொல்லவில்லையே, அந்த டிராவல்ஸ் காரன் கையில் கிடைத்தால் நையப்புடைக்கலாமே என்று எண்ணிக்கொண்டு அந்த கவுண்டர் நோக்கி போனான், அங்கே ஒரு அரபு நாட்டுக்காரன் உட்கார்ந்திருந்தான் அங்கும் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களின் பின்னே நின்று கொண்டான், ஒவ்வொருவரும் தனது காப்பியை அவனிடம் கொடுக்க அவன் அதன் ஒரிஜினல் விசாவை கொடுத்தான், அப்பாடி இவ்வளவுதானா என்று தனது விசா காப்பியை காண்பித்து தனது ஒரிஜினல் விசாவை வாங்கி கொண்டு மீண்டும் அந்த பாஸ்போர்ட் வரிசைக்கு போனான்,

மெல்ல இவன் முறை வந்த போது பாஸ்போர்ட்டையும் விசாவையும் அவனிடம் கொடுத்தான் அந்த ஆள் இவன் பாஸ்ப்போர்ட்டை பார்த்து கொபுசா மிகொலைசே கர என்று இவனை அழைத்தான், அய்யோ குப்புசாமி குலசேகரன் என்ற பெயரை அவன் அப்படி அழைப்பது தெரியாமல் யாரையோ அழைக்கிறான் என்று அல்லது ஏதோ புரியாத பாஷையில் திட்டுகிறான் என்பது போல் அவனிடம் வழிந்து கொண்டு நிற்க அவன் ஏதோ பேசிக்கொண்டே இவன் பாஸ்போர்ட் மற்றும் விசாவில் இரண்டு சீல் அடித்து இவன் கையில் கொடுத்தான், வாங்கி கொண்டு எல்லோரையும் போலவே அவனும் அங்கிருந்து நடந்து அடுத்த நிலைக்கு வந்தான்,

அங்கே இவன் கூட வந்த பயணிகள் கன்வேயர் பெல்ட் அருகே ஒரு தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள், கன்வேயர் பெல்டில் அவரவர் லக்கேஜ்கள் சுற்றிக்கொண்டிருந்தன, கு.சே அங்கே இருந்த தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனும் அவர்களோடு நின்றான், அவன் பெட்டிகள் அதில் வருகிறதா என கவனிக்க தொடங்கினான், ஒவ்வொருவராக அவரவர் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள், வெகுநேரமாகியும் இவன் பெட்டி வரவே இல்லை,ஒரே ஒரு பழய safari பெட்டி மட்டுமே துணிகளுடன் எடுத்து வந்திருந்தான்,

அது இன்னும் வராததால் மிகுந்த கவலை வரத்தொடங்கியது அதில்தான் இவன் சான்றிதழ்கள், எல்லாம் வைத்திருந்தான், அவனோடு வந்தவர்கள் எல்லாம் அவரவர் பொருட்களை எடுத்துக்கொண்டு பொய்விட்டிருந்தார்கள், அங்கே பணிபுரியும் பணியாட்கள் யாராலும் எடுக்கப்படாத பொருட்களை எடுத்து தனியே வைத்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் நமது கு.சே வின் சஃபாரி மட்டும் அங்கே புலப்படவே இல்லை, இதென்னடா வம்பாய் போய்விட்டது நான் எங்கே போய் தேடுவேன் என்று, அவனின் எதிர்காலமே அந்த சான்றிதழ்கள்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த கன்வேயர் பெல்ட்டின் எல்லாபுறமும் சுற்றி சுற்றி வந்தான், வேறு யாராவது தங்களது என்று தனது பெட்டியை எடுத்துபோயிருப்பார்களோ என்கிற பயம் வேறு அவனுக்கு மற்றவர்கள் தள்ளு வண்டியை கவனிக்கு முன் பெரும் பகுதி ஆட்கள் வெளியே போயிருந்தார்கள், என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அடிவயிற்றில் குபீர் என்ற பயம் மெல்ல பரவத்தொடங்கியது

தவநெறிச்செல்வன்

Jun 25, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-1

குலசேகரன் குவைத் விமான தளத்தில் இறங்கும் போது, அது அவனுக்கு முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் ஒரு பதற்றமான உணர்வையே கொண்டிருந்தான், அதுவும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் எல்லோரையும் போலவே அவனுக்கும் பணம்தான் காரணமாய் இருந்தது.

விமான நிலையத்தை விமானம் எட்டியவுடன், பயணிகள் எல்லோரும் தத்தம் கைபேசியை ஆன் செய்வார்கள் போல, அதில் இருந்து ஒரே பீப் சத்தங்கள் வருகின்றன, சிலர் “நான் இப்பதான் இறங்கினேன், இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவேன்”, என்று அவரவர்களை அழைக்க வந்திருப்பவர்களுடன் உரையாடத்தொடங்கினார்கள்,

குலசேகரனுக்கோ இதெல்லாம் செய்ய முடியாது அவனிடம் உள்ள ஏர்டெல் குவைத்தில் எங்கே பேச உதவப்போகிறது? அவனை அழைக்க யாராவது வந்திருப்பார்களா அல்லது, பத்திரிக்கைகளில் சொல்வதுபோல் ஏர்போர்ட்டில் காத்திருந்து அவஸ்த்தை படநேருமோ என்றெல்லாம் ஒரு குழப்பமான மனநிலையிலேயே அவன் இறங்கினான்,

ஆரம்பத்தில் விமான பயணம் அவனை அப்படி ஒரு பயத்தில் ஆழ்த்தி இருந்தது வேறு விஷயம், அதனைப்பற்றி அடுத்த அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

ஒரு வழியாக இறங்கி எல்லா பயணிகள் செல்லும் திசையில் அவனும் அவர்களோடு சென்று கொண்டிருந்தான் இரண்டு புறமும் அலங்கரிக்கப்பட்ட கடைகள் விதவிதமான உலகத்தை அவனுக்க காட்டிக்கொண்டிருந்தன, அங்கங்கே அரபியிலும், ஆங்கிலத்திலும் விவரங்கள் எழுதப்பட்டிருந்தன, பெரும்பாலும் அரபியில்தான், இந்த அரபி எழுத்தை கண்டாலே குலசேகரனுக்கு ஒரு பயம் உள்ளுக்குள் எழுந்திருந்தது, அது எந்த வகையுடனும் சம்பந்தபடாத ஒரு அமைப்பில் இருந்ததாக அவனுக்கு தோன்றி இருக்கலாம், அல்லது இந்த காஷ்மீர் தீவிரவாதிகளின் அறிவிப்புகளை கண்டு அப்படி ஒரு உணர்வு தோன்றி இருக்கலாம்,

(ஆனால் அது உருது, இது அரபி, பலருக்கு அரபியும் உருது ஒன்று என்று தோன்றலாம் அரபியும் உருதும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத உச்சரிப்புகளையும் சொற்களையும் கொண்டவை)

பின்னர் பயணிகள் எல்லோரும் தத்தம் கை லக்கேஜுடன் ஒரு நீண்ட வரிசையில் நின்று கொண்டார்கள் அவர்களுடன் சென்று குலசேகரனும் நின்று கொண்டான், எல்லோர் கையிலும் பாஸ்போர்ட் இருந்தது, சரி இங்கு பாஸ்போர்ட் காண்பிக்க வேண்டும் என்று நினைத்து அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டான். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மெல்ல இவன் முறை வந்த போது வேகமாக போய் அந்த கவுண்டரில் இருந்த அரபி உடை அணிந்த அந்த ஆளிடம் தனது பாஸ்போர்ட்டை கொடுத்தான், அவன் அதை வாங்கி பார்த்து விட்டு திருப்பி இவனிடமே கொடுத்து ஏதோ ஒரு திசையை காண்பித்தான், அப்போதுதான் குலசேகரனுக்கு உரைத்தது ஏதோ அசம்பாவிதம் என்று, என்ன செய்வதென்று புரியாமல் அங்கேயே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு விழித்து கொண்டிருந்தான், ஒரு திருவிழாவில் காணாமல் போன குழந்தைதான் அப்போது கு.சே வுக்கு நியாபகம் வந்தது.

(இனி நாம் குலசேகரனை கு.சே என்றே அழைப்போம்.)

தவநெறிச்செல்வன்

Jun 20, 2009

சாருவும் நானும்-2

சாரு தனது தளத்தில் எனது கடிதத்தை வெளியிட்டு பதிலும் கொடுத்துள்ளார், இத்தனை பெரிய எழுத்தாளர் எனக்கு பதில் எழுதி என்னையும் மதிக்கிறார் என்பது மிகவும் பெருமையாக உணர்கிறேன், சாருவுக்கு நான் எழுதிய பதில் கடிதம் கீழே கொடுத்துள்ளேன்


அன்புள்ள சாரு,
எனது கடிதத்திற்கு தாங்கள் எழுதிய பதிலில் உள்ள சில சந்தேகங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள மீண்டும் விரும்புகிறேன், தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக கவலைப்படுகிறேன்.

1.இஸ்லாம் அசைவ உணவு பழக்கத்தை அனுமதிக்கிறது என்று அதை நீங்கள் மட்டுமல்ல பெரும்பாலான முஸ்லீம்கள் என்னை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதே வாதத்தை வைக்கும் எல்லோரும் இஸ்லாம் மது அருந்துவதையும், ஆடம்பர செலவுகளையும் தடைசெய்கிறது என்பதை ஏன் செயல்படுத்த மறுக்கிறார்கள் என்பது என் சந்தேகம், ஆகையால் இதில் இவர்களின் விருப்பம்தான் முடிவு. இதில் ஏன் இஸ்லாமை இழுக்க வேண்டும்.

2.இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்ட அரபு தேசங்களில் வேறு உணவு வாய்ப்பு குறைவு என்பதால் மனிதனைத்தவிர மற்ற உயிர்களை சாப்பிடுவதை அது அனுமதிக்கவேண்டிய நிலை இருந்திருக்கலாம், கூடவே இஸ்லாம் பன்றி கறியை உண்பதை தடை செய்திருப்பதையும் கவனிக்கவேண்டும், ஆகவே வள்ளலார் மீனவர்களை சைவமாக்கியது போலத்தான் இந்த நிகழ்வு.

3.வேறு உணவு இல்லாத சூழலில் நானும் கூட ஒரு அசைவ நிலையை அடையக்கூடும் ஆனால், வேறு உணவுகள் இருக்கின்றபோது இது தேவையா? உயிர் பலி தேவையா?

4.மனித இனம் ஏன் யானையைப்போல் சைவ பட்சினியாக படைக்கப்படவில்லை என்ற கேள்வியோடு, நான் இன்னும் ஒரு கேள்வியையும் இணைத்துக்கொள்கிறேன், ஏன் மிருகங்களுக்கு மதம் இல்லாமல் இருக்கிறது? சாரு எல்லா மத நூல்களும் கூறுகின்றன, மனித பிறப்பு அனுபவிக்க வேண்டி நல்லது கெட்டது இரண்டும் படைக்கப்பட்டிருக்கிறது அதில் மனிதன் நல்ல விஷ்யங்களை தேர்ந்தெடுத்தால் சுவர்க்க நிலையையும் கெட்டதை தேர்ந்தெடுத்தால் நரகத்தண்டனையும் அடைவான் என்று கூறுகின்றன, அதாவது மனிதன் சுய சிந்தனையுள்ள ஜீவனாக படைக்கப்பட்டிருக்கிறான் என்று, அதனால்தான் யானையைப்போல் சைவ பட்சினியாக படைக்கப்படாமல் சுயமாக சிந்திக்க கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

(சாரு மதம் பற்றி நான் எழுதியிருப்பதால் மதப் பற்றாளன் என்கிற அளவில் என்னை நினைக்கவேண்டாம், என்னைப்பொருத்தவரை எல்லா மதங்களில் இருந்தும் நல்லதை (வசதியானதை அல்ல) எடுத்துக்கொள்ள விரும்புகிறவன், மேலும் மதம் மனிதனை கடவுளிடம் கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை இல்லாதவன் நான், என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன், மதத்தை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதி இருப்பதால் நான் இவ்வாறு எழுதினேன்)

பரமஹம்சர் ரமணர் போன்றவர்கள் ஞானிகள், ஓஷோ ஜே.கே போன்றவர்கள் Healers என்று குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மைதான், ஒருவேளை Healer கள்தான் அடுத்த நிலைகளில் ஞானிகளாக மாறுகிறார்கள் என்று நினைக்கிறேன், அது சரியாக இருக்குமா?

அன்புடன்
தவநெறிச்செல்வன்

Jun 17, 2009

சாருவும் நானும்

சாருவின் தளத்தில் வெளிவந்துள்ள எனது தற்போதைய கடிதமும் சாருவின் பதிலும் இந்த தொடர்பில் உள்ளது.


http://www.charuonline.com/June2009/devadhai.html

May 28, 2009

சாருவும்-ஜெயமோகனும்-மகாத்மாவும்



மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஓளி ஓலி காந்தி திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதன் உரையாடலை கேளுங்கள், ஒத்துழயாமை இயக்கத்தின் போது செளரி செளரா என்ற இடத்தில் ஏற்ப்பட்ட வன்முறையின் காரணமாக அந்த இயக்கத்தை நிறுத்த காந்தி முடிவெடுக்கும் போது நடைபெறும் உரையாடல்.

இதைதான் சாருவும் ஜேவும் தங்கள் கட்டுரைகளில் சொல்லீருக்கிறார்கள், ஒரு வேளை காந்தி தனது உண்ணாவிரதம் மூலம் அன்று அந்த வன்முறை போராட்டத்தை நிறுத்தாமல் போனால் இந்திய தேசியகாங்கிரஸும் ஒரு தீவிரவாத கூட்டமாக நினைத்து சுட்டுத்தள்ளி இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

அதன் பின் சாரு ஜெயமோகனின் இந்த கட்டுரையை படித்து பாருங்கள்.

http://charuonline.com/May2009/Vanmurai.html
http://jeyamohan.in/?p=2764

தவநெறிச்செல்வன்

May 27, 2009

மே-2009 தேர்தல் முடிவுகள் ஒரு புரட்சி

2009 தேர்தலும் எனது அனுமானமும்

என்ற கட்டுரை மூலம் எனது கணிப்புகளை எழுதியிருந்தேன், அதில் குறிப்பிட்டிருந்தபடி கிட்டதட்ட எல்லா கட்சிகளும் அதே அளவில் வெற்றி பெற்றிருப்பதை காண்கிறேன், தமிழகத்தில் மட்டும் எனது கணிப்புகள் மிகவும் மாறுதலான பதிலை பெற்றுவிட்டன அதற்காண காரணங்கள் இன்னும் குழப்பமாகத்தான் உள்ளது, பா.ஜ.காவுக்கு நான் குறிப்பிட்டிருந்த 116 சீட்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 254 அதில் 258 ஆகவும் மற்ற எல்லா கட்சிகளிலும் சொற்ப வேறுபாட்டோடு கூடியதாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்து இருக்கிறது. ஒருவகையில் தமிழகத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் எனது கணிப்புகள் சரியாகவே இருந்திருக்கிறது வாசகர்கள் எனது பழய
http://dhavaneri.blogspot.com/2009/03/blog-post_4892.html இந்த பதிவை கண்டால் விபரம் அறியலாம். நிறைய விஷயங்கள், எழுத வேண்டியுள்ளது, பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து விட்ட மாதமாக இந்த மே-2009 அமைந்து விட்டது

1. இந்திய பொது தேர்தல் முடிவுகள் ஒரு புரட்சியாக வந்தது.
2. பாட்டாளி மக்கள் கட்சி ஒரு பலமான கூட்டணியில் இருந்தும் தோற்றுப்போனது
3. இலங்கை போர் அழிவுகள்
4. பிரபாகரன் உள்ளிட்டோர் மரணம்
5. புதிய ஆட்சியில் கருணாநிதியின் அமைச்சர்கள்
6. பாகிஸ்தானில் தாலிபன்களுடன் அந்த நாட்டு ராணுவமும், அவர்களை
வளர்த்துவிட்ட உளவுப்பிரிவும் மோதவேண்டிய சூழல்
7. கம்னியூஸ்ட் கட்சிகள் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் பெற்ற தோல்வி
8. காங்கிரஸ் உ.பி யில் பெற்ற பிரமாண்ட வெற்றி,
9. பிரதமர் கனவு கண்டுகொண்டிருந்த பலரின் எண்ணங்களில் விழுந்த மண்.
10. சிரஞ்சீவியின் தோல்வி.

இன்னும் எத்தனையோ விஷயங்களை நாம் இந்த மாதத்தில் கண்டு இருக்கிறோம் அவைகளைப் பற்றி நிறைய எனது எண்ணங்களை இதில் தொடர்ந்து எழுதுவேன்.
அகில இந்திய அளவில் மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் தலமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது அதன் விளைவு மீண்டும் காங்கிரஸின் மன்மோகன் சிங் பிரதமராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்பது நிதர்சனம்,

இதில் காங்கிரஸை எதிர்த்தவர்கள் எல்லாம் மிக மோசமாக அடிப்பட்டிருக்கிறார்கள், காங்கிரஸீடன் கடைசிவரை ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து விட்டு அதன் பின் தேர்தலின் போது எதிர்த்தவர்கள் எல்லாம் அப்படி ஒரு அடிவாங்கியிருக்கிறார்கள். அவர்கள் ராமதாஸ், லாலூ பஸ்வான், போன்றவர்கள் முக்கியமானவர்கள், அதில் முலாயம்சிங் யாதவும் கூட சேர்கிறார். மாயாவதி ஒரு பிரமாண்டமான வெற்றியை பெற்று அதன் மூலம் ஒரு பிரதமர் வேட்பாளர் என்கிற ஒரு நிலையை அடைவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இது மிகவும் தெளிவான முடிவாக அமைந்து விட்டது,

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒரு வழக்கு சொல் எல்லா தேர்தலிலும் சொல்வார்கள், “அதாவது மக்களவைத்தேர்தல் என்றால் மக்கள் மிகவும் தெளிவாக காங்கிரஸூக்குதான் வாக்களிப்பார்கள் அது மற்ற உள்ளூர் விஷயங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்ப்படுத்தாது என்பதுதான்” அது அப்போதைய இந்திரா காலத்திய ஒரு வழக்கமான சொல், அதுதான் இப்போது நடந்திருக்கிறது, எனக்கென்னவோ காங்கிரஸ் தனியாக நின்றிருந்தால் வடக்கில் இப்போது பெற்றிருக்கும் வெற்றிகள் அப்படியே கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது,

எந்த குழப்பமும் இல்லாமல் ஒரு தெளிவான முடிவை தந்திருக்கிறார்கள், அதன் ஆழமான காரணம் ஒரு நிலையான ஆட்சி, மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மன்மோகன் சிங் மீதான மக்களின் நம்பிக்கை, இதில் உத்திரபிரதேசத்தை பொருத்தவரை ராகுல் காந்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, கிட்டதட்ட காங்கிரஸ் இல்லை என்கிற நிலையில் ஆகியிருந்த உ.பி இன்று காங்கிரஸ் அங்குள்ள மற்ற முன்னனி கட்சிகளுக்கு இணையாக 22 இடங்களில் வென்று சம பலத்தில் நிற்கிறது, முலாயம் கூட்டு சேர்ந்திருந்தால் மாயாவதி ஒன்றும் இல்லாமல் போயிருப்பார் என்கிறார்கள் சிலர், ஆனால் காங்கிரஸ் தனியாக நின்றதால்தான் அதன் வெற்றி ஒரு நம்பிக்கையான காரணமாக ஆகிவிட்டது என்பதுதான் முக்கியமான விஷயம்.

ஒரு வகையில் இந்த தேர்தல் ஒரு நல்ல முடிவை தந்துள்ளது, நல்லவேளையாக ஒரு குழப்பமில்லாத அரசு அமைய இந்த முடிவுகள் காரணமாக அமைந்து விட்டது,

இலங்கைப்பிரச்சினை,

இந்த தேர்தல் இலங்கைப்பிரச்சினை எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சிரமத்தை ஏற்ப்படுத்தாமல் போனது ஒரு பெரிய திருப்பம்தான், ஆனால் அது அந்த தமிழ் மக்களுக்கு மிகவும் பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டிருக்கலாம். பிரபாகரனின் இறந்து விட்டதாக இன்னும் குழப்பத்தில் இருந்தாலும் தொடர்ந்து வருகின்ற செய்திகள் அதை நம்பக்கூடியதாக இருக்கிறது, இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது,

இனியாவது இந்தியா தனது முயற்சியை அதிகப்படுத்தி அதன் மூலம் இலங்கைத்தமிழர்களுக்கு ஒரு நல்ல சம நிலை வாழ்க்கை ஏற்ப்பட உதவவேண்டும், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ராஜீவால் ஏற்படுத்தப்பட்டதையாவது செயலாக்கம் செய்ய இந்தியா உதவவேண்டும், அதன்மூலம் இன்னும் ஒரு போராளி இயக்கம் ஏற்படாமல் அவர்கள் அமைதியாக வாழ வேண்டிய சூழலை உருவாக்க முனைய வேண்டும்,

இத்தனை பிரச்சினைக்கு பிறகும் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கும் கருணாநிதியும் இந்த நிலையில் ஒரு தொடர் முயற்சியை மேற்க்கொண்டு இலங்கைத்தமிழர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவு செய்து தரவேண்டும்.

தவநெறிச்செல்வன்

May 3, 2009

எல்லோருக்கும் ஒரு அறிவுரை

(எழுத்தாளர் பா.ரா தனது தளத்தில் எழுதியுள்ள ஒரு அறிவுரை இங்கே கொடுத்துள்ளேன் இதனை பின்பற்றினால் பல பிரச்சினைகளை சமாளிக்கலாம் குறைந்தபட்சம் மே 13 வரைக்குமாவது)

எல்லோரும் ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் குடியுங்கள். நார்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்கள். கூல் டிரிங்ஸ் வேண்டாம். உப்பு, காரம், கரம் மசாலா கசுமாலங்களைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.

கருணாநிதியின் அறிக்கைகளைப் படிக்காதீர்கள்.

Apr 23, 2009

அவரவர் அவர் வேலையை பார்க்கிறார்கள் இலங்கையாம் இலங்கை.

என்னையா உலகம் இது, மனது பதறுகிறது, அப்பாவி மக்கள் தலையில்லாத குழந்தைகளின் சடலங்கள், சோற்றுக்காக மக்கள் போராடும் அவலம், பதறிக்கொண்டு வருகிறது, முன்பெல்லாம் ஆப்பிரிக்க தேசத்தில் நடந்து கொண்டிருந்தது போல் இன்று நமது பக்கத்து தேசத்தில் உலகின் ஒரு அற்புதமான ஒரு மனித இனம் அழிகிறது அல்லது அழிக்கப்படுகிறது,

 

இதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே இல்லை, கருணாநிதி உள்ளிட்ட அரசியல் வாதிகள் வழக்கம் போல எந்த இழப்பும் இல்லாமல் என்ன என்ன நாடகம் நடத்தி ஓட்டு வாங்கலாம் என்று யோசிக்கிறார்கள், அதை நிறைவேற்றவும் செய்கிறார்கள்

 

தமிழகத்தின் எல்லா பத்திரிக்கைகளும் இதையெல்லாம் பயன்படுத்தி தத்தமது சர்குலேஷனை உயர்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள், காங்கிரஸ் இந்த பிரச்சினை தனது அடுத்த ஆட்சி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக்கூடாதே என்று பதறுகிறது அல்லது அப்படி நடிக்க முயல்கிறது,

 

தமிழக தொலைக்காட்சி சானல்கள் வழக்கம் போல் தனது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களையும் சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளையும் வழமைபோல் தந்து கொண்டிருக்கிறது,

 

எல்லா பிரச்சினையிலும் கருத்து கூறும் அல்லது கவலை அல்லது அக்கறை தெரிவிக்கும் சினிமாதுறை வழக்கம் போல நடைபெறுகிறது அதன் பெரிய நடிகர்கள் தத்தமது தினசரி கடமைகளை செய்வனே நிறைவேற்றி தனது அடுத்த படங்களைப்பற்றிய கவலையில் இருக்கிறார்கள்,

 

IPL ன் இன்றைய போட்டிகளை கண்டு அதன் வெற்றிகளை விவாதித்து ஒரு இளைஞர் கூட்டம் சாவகாசமாய் பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறது,

 

இன்னும் எத்தனையோ உபயோகம் இல்லாத செயல்களின் தமிழன் வழக்கம் போலவே வீண் செய்து கொண்டிருக்கிறான், இதெல்லாம் இலங்கை அரசுக்கு தெரியாமல் இல்லை, இது வெறும் வாய்ப்பேச்சு கூட்டம் அதனால்தான் அவர்கள் தங்களின் எந்த செயல்பாட்டையும் மாற்றாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள்,

 

தலைவர்களே இப்படி சுயநலமாகவும் செயல்பட முடியாத சிங்கங்களாகவும் ஆகிவிட்ட நிலையில் நாம் என்னதான் செய்யப்போகிறோம் என்று தெரியாமல் செய்திகளைப்படித்து பதறுகிற ஒரு சராசரி நிலையில் சாதாரணமக்களாகிய நாம் இருக்க வேண்டிய நிலை மிகவும் மனது வலிக்கிறது, ஒரு சுய நலமில்லாத ஒரு தலைவன் தமிழினத்தில் தோன்றவே மாட்டானா?

 

அப்படி ஒருதலைவன் வந்து மிகப்பெரிய வன்முறையில்லாத ஒரு போராட்டத்தின் மூலம் இன்னொரு மகாத்மாவாய் இந்த மனித குல சீரழிவையெல்லாம் தடுத்து நிறுத்த மாட்டானா என்று உள்ளம் ஏங்குகிறது.

Apr 19, 2009

2004 ல் மதுரை தொகுதி நிலவரம்

படத்தில் கிளிக்கினால் பெரிதாக பார்க்கலாம்

சுமார் 1,37,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தான் போன முறை மோகன் வெற்றி பெற்றுள்ளார், ஆனால் அப்போதைய கூட்டணி பலம் பார்க்கும் போது இந்த வெற்றியின் அளவு புரியும்,

 

திமுக அதிமுக போக சிபிஎம் ன் ஓட்டுக்கள் அதிகம் உள்ள தொகுதி, கூடவே காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவு ஓட்டுக்கள் உள்ள தொகுதி.

 

இதில் இப்போது திமுக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் அதிமுகவுடன் உள்ளன, அந்த 1,37,000 ஓட்டுக்கள் இந்த கூட்டணி மாற்றத்தால் அதிமுகவுக்கு சாதகமாக விழ நேர்ந்தால் அது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும், அதே நேரம் மு.க அழகிரி தனது தேர்தல் அனுபவத்தால் அந்த ஓட்டுக்களை தனக்கு சாதகமான நிலையில் திருப்பகூடியவராக இருப்பதால் இந்த தேர்தல் புதிய பதிலைத்தரலாம், அதே நேரத்தில் தேமுதிகவின் ஓட்டுக்கள் கணிசமான எண்ணிக்கையில் கடந்த இரண்டு இடைத்தேர்தலிலும் நிருபிக்கப்பட்டுள்ளன, அதன் பாதிப்பும் இந்த முறை பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்,

 

மொத்தத்தில் இந்த மதுரையை மீட்கப்போவது கடைசி நேர தேர்தல் ராஜதந்திரம்தான்

பல மாதிரியான விளைவுகளை நோக்கி இந்த தேர்தல்

இந்த தேர்தல் எத்தனை விதமான முடிவுகளைத்தரப்போகிறது என்று தெரியவில்லை அதனோடு ஒரு சரியான முடிவுக்கு வர முடியாமல் கிட்டதட்ட எல்லா கணிப்பாளர்களும் திணறுவது அவரவர் முடிவுகளை காணும்போது தெரிகிறது, இருந்தாலும் கேரளத்தின் சூழ்நிலையை அங்கே உள்ள நண்பர்கள் மூலம் காணும்போது அது காங்கிரஸூக்கு சாதகமான சூழல் இருப்பதாக கூறுகிறார்கள்.

 

என்ன இருந்தாலும் தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் எனக்கூட்டணி காட்சிகள் மாறப்போவதால் எந்த கட்சியும் தற்போது மிக கடுமையான விமர்சனங்களை வைக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது, அதிமுக கூட தேர்தலுக்கு பின் காங்கிரஸூடன் கூட்டணி வாய்ப்புகளை நிராகரிக்காது என்றே நம்புகிறேன், அப்படி தேர்தலுக்கு பின் நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை தமிழகத்தில் விலக்கவேண்டி வரலாம்,

 

இப்படி பல மாதிரியான விளைவுகளை நோக்கி இந்த தேர்தல் செல்கிறது, ஆந்திரத்தில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் மிகப்பெரிய தோல்வியை தழுவக்கூடும் என்று கூறுகிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஒருவேளை அப்படி நடந்தால் அது புதிய கட்சி தொடங்க ஆசைப்படும் மற்ற நடிகர்களுக்கு பாடமாக அமையலாம்,

 

தேமுதிகவின் இந்த தேர்தல் ஒரு முன்னேற்ற பாதையாக இருக்கும் என்று நம்புகிறேன்,

அவர்கள் வெற்றி பெறுவதை விட சதவீதத்தை கூட்டும் முயற்சியில்தான் இருக்கிறார்கள், காங்கிரஸூடனான கூட்டணி ஏற்படாதது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன்,

 

சரத்குமார், கார்த்திக் போன்றவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகுறிகளை இந்த தேர்தல் உண்டாக்கும்.

 

திமுகவின் உள்கட்சி விவகாரங்கள் இந்த தேர்தலுக்கு பின் புதிய பரிமாணம் பெறலாம் அதன் தோல்வி விகிதம் மற்றும் அழகிரியின் மதுரை வெற்றி வாய்ப்புகள் போன்றவைகள் இதற்கான காரமாக அமையும், மதுரை அந்த வகையில் மிக முக்கிய பங்காற்றப்போகிறது.

 

குஜராத்திலும் இந்த தேர்தல் ஒரு புதிய திசையில் செல்கிறது, அதன் நவீன் பட்நாயக் தனது கூட்டணியை மாற்றி விட்டதில் ஒரு அக்னி பரிட்சையை எதிர்கொள்கிறார், அவர் மீண்டும் பெறும் வெற்றியின் அளவு பல கணக்குகளை மாற்றப்போகிறது,

 

இதில் முக்கியமான விஷயம் மாயாவதியின் வெற்றிதான், எனக்கென்னவோ இந்த முறை மாயாவதி மிக அதிகப்படியான தொகுதிகளை பிடிப்பார் என்றே படுகிறது அதனால் ஏற்படும் மாற்றம் நிச்சயம் ஒரு பெரிய குழப்பத்தை மத்திய ஆட்சி அமைப்பில் உண்டாக்கும், இந்த தேர்தல் மாயாவதின் தேர்தலாக அமைந்துவிட நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே நினைக்கிறேன், லாலுவும், சிபுசோரனும் இன்னும் ஒரு குழப்பமான தேர்தல் முடிவுக்கு வித்திட்டிருக்கிறார்கள், அவர்களின் கூட்டணி தொடர்பான முடிவுகள் சரியான பலனைத்தரும் என்று தோன்றவில்லை.

 

மகராஷ்டிரா நிலமையும் ஒரு குழப்பத்தில்தான், சரத்பவாரின் நிலையில் உள்ள குழப்பங்கள் பிரதமர் ஆசை போன்றவை என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை, சிவசேனாவின் முடிவுகள் சரத்பவாருக்கு சாதகமாக இருக்க கூடும் தேர்தலுக்கு பின் ஆனால் அங்கு சீட்டுக்கள் சிதறிப்போகும் வாய்ப்புகள் இருக்கின்றன,

 

ராஜஸ்தான் குஜராத் இரண்டும் ஒரு வகையில் பிஜெபிக்கு சாதகமாக போகலாம்.

 

இப்படி குழப்பங்கள் மிக அதிகமான தேர்தல் இதுவாகத்தான் இருக்கும், எக்கச்சக்கமான கட்சிகள் என்பதால் யாரும் யாரையும் விடமுடியாத நிலை எங்கும் காணப்படுகிறது, உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு அரசியல் நிலைமை இங்கு, இடதுசாரிகள் மிக மோசமான நிலைக்கு இந்ததேர்தலில் கொண்டு செல்லப்படலாம்.

 

உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டு கிடக்கிற நிலையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று என்பது நிச்சயம், இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் மிக மோசமான பொருளாதார பிரச்சினையால் திணறிக்கொண்டிருக்கிறார்கள், அதில் இருந்து மீள அவர்களுக்கு இந்தியா சீனா போன்ற நாடுகளுடனான வர்த்தகம் மிக முக்கியம், அதற்கு இந்தியாவில் அமையப்போகும் அரசின் செயல்பாடு இடதுசாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் போகாமல் இருக்க வேண்டியது அவசியம்.

 

ஒகே.

 

தேர்தல் கிட்ட நெருங்கி கிட்டே இருக்கு, அவங்க அவங்க வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கலாம் ஆனா பகுத்தறிவு பண்பாளர்கள் எல்லாம் அஷ்டமி நவமின்னு பார்க்க வேண்டி இருக்கிறதால கொஞ்சம் லேட்டாதான் வருவாங்க, அது பிரச்சினை ஆகாம இருக்கனும் இல்ல, நவமி ராமருக்கு உகந்த நாள் அப்படிங்கறதால யாராவது பி.ஜே.பி காரங்க தாக்கல் பண்ணாலும் பண்ணலாம்.

 

அது போகட்டும் இந்த தேர்தல் கமிஷன் வேற கடுமையான சட்டம் எல்லாம் போட்டு படுத்தறாங்கப்பா? நாலுபேர்தான் மனு கொடுக்கிறவங்க கூட போகனுமாம், 3 கார் மட்டும்தான் அனுமதியாம், ஊர்வலம் எல்லாம் போகக்கூடாதுன்னு கண்டிப்பா நம்ம தேர்தல் கமிஷன் சொல்லிட்டதுனாலா நம்ம வேட்பாளர்களுக்கு செலவு குறையும் என்று சந்தோஷம் எல்லாம் படாதீங்க,

 

அப்புறம் இந்த பிரச்சாரம் பற்றி பல விஷயங்கள் நாம் கவனிக்கணும் பல மாதிரி கண்டிஷ்ன்கள் இருப்பதால் அதெல்லாம் பெரிய சங்கடமாக இருக்கிறது, அதோடு தினந்தோறும் வேட்பாளர்கள் மாற்றப்படும் வாய்ப்புகள் இருப்பதால் பல வேட்பாளர்கள் ஏப்ரல் 27 க்கு பிறகு தொடங்கலாம் என்று இருக்ககூடும், பின்ன எல்லாம் சுவரும் எழுதி எல்லாம் முடிந்த பிறகு நீ இல்ல தம்பி வேற ஆள மாற்றிட்டோம்னு சொன்னா என்ன ஆவும், எனக்கென்னமோ இவ்வளவு நாள் யோசிச்சு ஒரு வேட்பாளர் அறிவிச்ச பின்ன எப்படி ஒரிரு நாளில் அவர் பொருத்தமில்லாதவர் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ.

 

அது போகட்டும் நாம் என்ன செய்ய வேண்டும் , அவசியம் ஓட்டு போடவேண்டும் கேரளாவில் 72 சதவீதம் ஓட்டு பதிவாகியிருக்கிறது, அது படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதாலா? இல்லை படித்தவர்கள் பெரும்பாலும் ஓட்டு போடுவதில்லை, அங்கே உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனது ஆட்சியாளனை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு மிக முக்கியமானதாக இருப்பதாக உணர்கிறான், பேப்பர் படிக்காத அரசியல் பேசாத மலையாளிகள் எனக்கு தெரிந்தவரை மிக மிக குறைவு. நம் மாநிலத்தில் அரசியல் பேசுவது ஏதோ வேலைவெட்டி இல்லாதவன் பணி போல ஆகிவிட்டது.

 

நமது மாநிலத்தில் ஓட்டு போடுவதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது, போன உள்ளாட்சி தேர்தலில் “ஏன்மா நீங்க ஓட்டு போடவந்தீர்கள் இங்கே பிரச்சினை இருக்குன்னு தெரியும்ல” என்று போலிசாரே கேட்டதெல்லாம் பத்திரிக்கையில் வந்தது அதனால் ஓட்டு போடுவதற்கு முன் உங்களுக்கு பிடிகாதவர்கள் யாராவது இருந்தால் அனுப்பி பார்த்து விட்டு பின்னர் சென்று பார்க்கலாம் என்று எனது நண்பன் அறிவுரை கூறினான்,அதை உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியுமா என்று புரியவில்லை.

 

ஆனால் ஓட்டு போடுவது மிக முக்கியமான கடமை என்று நாம் புரிந்து கொண்டு எல்லோரும் வருவார்கள் என்று தெரிந்தால் வன்முறைகள் குறையும் என்று நான் நம்புகிறேன்,

 

தவநெறிச்செல்வன்

Apr 12, 2009

தொடங்கி விட்டது முதல் கூத்து.

இன்றைய செய்தி :

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார் புதியவர் பெயர். கே.கே.பாலசுப்ரமணியம்

திருவள்ளூர் புதிய வேட்பாளர் பெயர்: இன்பராஜ்.


காரணம் : அரசியல், சமூக மற்றும் பொருளாதாரம்

கொசுறு:

தேமுதிக மதுரை வேட்பாளர்,
திமுக ராமநாதபுரம் வேட்பாளர்.
மாற்றப்படலாம்.

காங்கிரஸ்:
இன்னமும் ஒரு முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.

தமிழகத்தில் நான்காவது கூட்டணி வந்தாச்சுங்கோ?
சரத்குமார் தலைவராக இருக்ககூடும்

தினமலர் செய்தி.


செல்வன்

Apr 6, 2009

தேர்தல்-09 போகிறபோக்கு:மாயாவதியா ஜெயலலிதாவா

இப்போது திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில் புதிய வியூகங்கள் தோன்றுகின்றன, நான் முன்பு கூறியது போல தேர்தல் கடைசிநாள் வரையில் இப்படிபட்ட குழப்பங்களை இந்த தேர்தல் கொடுத்து கொண்டே இருக்கும்.

அகில இந்திய அளவில் தேர்தலின் பலம் போட்டி நிலைகள் இப்படித்தான் உள்ளன
காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதும் மாநிலங்கள் இவையே.

1.ராஜஸ்தான்,--25
2.குஜராத் --26
3.மத்திய பிரதேசம் --29
4.டெல்லி --7
5.சட்டிஸ்கர் --11
6.உத்ரகண்ட் --5
7.கோவா.--2
இந்த ஏழு மாநிலங்களில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கை=105.

இதில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் பாஜக இரண்டுமே ஒரு சமநிலையில்தான் உள்ளதாக தோன்றுகிறது ஆனால் தற்போதைய சட்டசபைத்தேர்தல்கள் முடிவுகள் வைத்துபார்த்தால் அது பிஜேபிக்கு சாதகமாக உள்ளது.

இந்த மாநிலங்களைத்தவிர மற்றதில் இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் மூன்றாவது ஒரு அணி அல்லது கட்சியும் உண்டு அதன் விபரம்.

1.கர்நாடகா-28
2.ஒரிஸ்ஸா -21
3.ஆந்திரா - 42
4.மஹராஷ்டிரா -48
5.அஸ்ஸாம் -14
6.பஞ்சாப் - 13
7.கேரளா - 20

இதில் உள்ள மாநிலங்களின் மொத்தம் 186

இதில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக நான் கருதுகிறேன், ஆனால் கர்நாடகாவும் ஒரிஸ்ஸாவும் எத்தகைய முடிவைதரும் என்பது குழப்பமாகவே இருக்கிறது. என்றாலும் இது காங்கிரசுக்கு சாதகமாகவரும் பட்சத்தில் காங்கிரஸின் ஆட்சிகனவு சாத்தியப்படும்.

பிராந்திய கட்சிகளின் கூட்டனிக்குள் உள்ள மாநிலங்கள் பின் வருகின்றன
1.தமிழ்நாடு-39
2,பீகார்- 40
3.மேற்கு வங்கம் -42
4.உத்தர்பிரதேசம் -80
5.ஜார்கண்ட்-14
6.ஹரியானா-10
இந்த மேற்கண்ட மாநிலங்களின் தொகுதிகள் மொத்தம் -224

இந்த மாநிலங்கள் மிகவும் அதிக பிரதிநிதிகளை கொண்டிருந்தாலும் இவற்றில் எதுவும் காங்கிரஸூக்கோ பிஜேபிக்கோ தனி செல்வாக்கு உள்ள மாநிலமாக இல்லாமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான விஷ்யம். இந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் வெற்றியைப்பொருத்தே பிஜேபி அல்லது காங்கிரஸின் ஆட்சிக்கனவு பலிக்கும். இதில் தேர்தலுக்கு பின் பிஜேபியைவிட காங்கிரஸீக்கே இவர்களுடன் கூட்டணி வைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

மற்ற மாநிலங்கள் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கும் அளவுக்கு சீட்களின் எண்ணிக்கை இல்லை என்பதால் அவைகள் ஏதாவது ஒரு அணியில் பங்குபெறக்கூடும்

மொத்தததில் வரும் தேர்தல் முடிவுகள், மாயாவதியை பிரதமராக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம், ஜெயலிதாவும் தனது வெற்றியின் அளவைப்பொருத்து அந்த போட்டியில் பங்கு வகிக்க முயலலாம், ஆனால் இந்த இருவரும் இரண்டு வேறு வேறு துருவங்கள், ஆனால் இருவரின் அணுகுமுறைகளும் பல ஒற்றுமைகளை பெற்றுள்ளன.

காங்கிரஸ் தற்போதைய இடங்களைகாட்டிலும் குறைவான அளவைப்பெற்றால் நிச்ச்யம் நமது பிரதமர் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்தான். அது இன்னுமொரு புதிய ஜனநாயக வடிவமாக மாறும்.

தவநெறிச்செல்வன்

Mar 28, 2009

அகில இந்திய தேர்தல் முடிவுகள் ஒருவேளை இப்படி இருக்கலாம்(எனது அனுமானம்)

படத்தில் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்


தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் எனது கணிப்பு.

ஓரளவுக்கு கூட்டணி குழப்பங்கள் தீர்ந்துவிட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஒருவாறு கற்பனை செய்ய முடிகிறது. இது பழய எனது தேர்தல் அனுமானங்களில் இருந்துதான் சொல்கிறேன்,

என்ன இருந்தாலும் இந்த தேர்தல் பெரிய அலைகள் ஏதும் இல்லாத நிலையில் வெறும் கூட்டணி பலம் மட்டுமே நிர்ணயிக்க கூடிய விஷயமாக இருப்பதால் இந்த கணிப்பு சாத்தியப்படுகிறது, தொகுதி வாரியான ஓட்டுக்களை பற்றிய போன தேர்தல் விபரங்களை சேகரித்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அவைகளைப்பற்றிய நீண்ட தொடர் பதிவை எழுத நினைத்துள்ளேன், எனது பணிகளுக்கிடையில் எழுதுதல் சிரமமாக இருப்பதால் ஒருவேளை தேர்தலுக்கு முன் இயலுமா என்று தெரியவில்லை.

இருந்தாலும் புதுவை சேர்த்த 40 தொகுதிகளில் இந்த 2009 மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு கீழ்கண்டவாறுதான் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

அதிமுக அணி 30 இடங்கள்
திமுக அணி 10 இடங்கள்.

இதில் தேமுதிகவின் நிலையில் கடைசிநேரத்தில் திமுகவுக்கு சாதகமான மாற்றம் ஏற்பட்டால் 3ல் இருந்து 5 இடங்கள் திமுக அணிக்கு கூடுதலாக கிடைக்கலாம்.

போன தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அணியில் ஏற்ப்பட்ட மாற்றம் காரணமாக இந்த முடிவுகளில் இத்தனை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன், ஓரிரண்டு இடங்கள் வேட்பாளரின் தனிப்பட்ட நல்ல பெயரை பொருத்து கூடுதலாகவோ குறைவாகவோ போகலாம்.

காங்கிரஸைப் பொருத்தவரை தமிழகம் அத்தனை கூடுதல் சீட்களை பெற்று ஆட்சி அமைப்பதில் பெரிய பங்காற்ற முடியாமல் போவது ஒரு பின்னடைவுதான், ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் இந்த கூட்டணிகள் மாறி அடிக்கப்போகும் கூத்துக்கள் மிக மோசமானதாக இருக்கும், அது இந்திய ஜனநாயக அமைப்பையே கேலிக்கூத்தாக மாற்றும் அளவுக்கு இருக்கும் என்கிற பயம் எனக்கு உள்ளது.

எது எப்படியோ தேர்தல் திருவிழாவை ஜாக்கிரதையாக கொண்டாடுவோம்.

தவநெறிச்செல்வன்

Mar 26, 2009

தேர்தலும் மன உளைச்சலும்.

இதென்ன அப்படி ஒரு மன உளைச்சல் என்று உங்களுக்கு தோன்றலாம், நம்ம நாட்டில் தேர்தல் வந்தாலே வீட்டில் ஒரு விஷேசம் போல பலருக்கு தோன்றலாம், அதற்கு காரணம் தேர்தல் திருவிழா போல கொடி தோரணம் ஒலி பெருக்கி ஊர்வலம் என்று சுகமான விஷ்யங்கள் நிறைய கலந்த கலவை என்பது தான்.

எனக்கு இந்த அரசியல் மிக பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு போல, முன்பெல்லாம் அரசியல் இத்தனை பணம் புழக்கம் அல்லது கொள்கை இல்லாத ஒரு விவஸ்த்தை கெட்ட விழாவாக இல்லாது இருந்திருக்கும், ஆனால் இன்று உள்ள தலைவர்கள் அடிக்கும் கூத்துக்கள் பல மாதிரியான நகைச்சுவையை மக்களிடம் உண்டாக்குவதும் பல மாதிரியான வருமானத்தை மக்களிடம் உண்டாக்குவதும் மக்களை மிகவும் தேவையான ஒரு சுவாரஸ்யத்துக்க்குள் கொண்டு போகிறது.

அது போகட்டும் இந்த மாதிரியான மன உளைச்சல் இப்போது எல்லா அரசியல் வாதிகளுக்கும் உண்டாகி இருக்கும் அவரவர் கவலை விதம் விதமாக இருக்கிறது.
தலைவர்களுக்கு கூட்டணிக்கு கட்சிகளை இழுப்பதில் படு பயங்கர மன உளைச்சல் உருவாகி இருக்கும், ஒரு வழியாக மருத்துவர் தனது முடிவை அறிவித்து விட்டதில் அதிமுக வுடனான பேரங்கள் முடிவாகி நல்ல ஸ்கோர் கிடைத்திருக்கும் எனத்தோன்றுகிறது, இது முடிவாகும் வரை திமுகவில் அத்தனை சுகமான சூழல் நிலவி இருக்காது என்பது நிச்சயம், இன்றைய நிலையில் திமுக கூட்டணி மிகவும் பலவீனமான ஒரு நிலையில் இருப்பது உண்மை,

திமுக கூட்டணியில் போதுமான கட்சிகள் இல்லை, காங்கிரஸ் மட்டுமே இப்போதைக்கு பலமான ஒரு கட்சியாக இருக்கிறது, மற்ற விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மிகவும் சொற்ப வாக்கு வங்கிகள் கொண்ட அமைப்பாக இருக்கிறார்கள், ஆனால் காங்கிரஸுக்கும் தேமுதிக வுக்கும் ஏற்பட்டுள்ள தனி உடன்பாட்டால் காங்கிரஸ் தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள் என்று சில செய்திகள் வருகின்றன அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அத்தனை பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது, ஆனால் திருமாவளவனின் முந்தைய காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் இப்போதைக்கு அவர்களின் இணைச்செயல்பாட்டுக்கு மிகவும் இடைஞ்சலாக அமையலாம், அதனால் பரஸ்பரம் அவர்களின் தொகுதிகளில் குழிபறிக்கும் வேலைகள் நடக்கும், இதெல்லாம் மிகவும் பலமான கூட்டணியான அதிமுகவுக்கு சாதகமான அம்சங்கள். கூடவே திமுக தலைவரின் அறிக்கைகள், மற்றும் மின் தட்டுபாடு, இலங்கை பிரச்சினை போன்ற வற்றில் காங்கிரஸையும் திமுகவையும் வசைப்பாடும் வசதியான இடத்தில் மருத்துவரும் வைகோவும் இருப்பதும் அதன் காரணம் கொண்டு அவர்கள் மிக எளிதாக முத்துகுமாரின் மரணம் போன்றவற்றை உபயோகப்படுத்தி இந்த தேர்தல் பிரச்சாரத்தை மிக அனல் கக்க கூடியதாக மாற்ற முடியும்.

ஆனால் மருத்துவரின் காங்கிரஸ் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறி, ஆனாலும் திமுக எதிர்ப்பு மிக கடுமையானதாக இருக்கும் என்பது நிச்சயம். கலைஞரின் உடல் நிலை இந்த தேர்தலில் அவரை சரிவர பிரயாணம் செய்ய முடியாமல் தடைசெய்யும், அவருக்கு அடுத்துள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் முக்கியமாக ஆர்க்காட்டார் பிரச்சாரத்துக்கு போகாமல் இருப்பது நல்லது. மற்ற அடுத்த தலைவர்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை, ஸ்டாலின் அழகிரி, கனிமொழி ஆகியோர் இந்த தேர்தலில் மிகுந்த முக்கிய பங்கு வகிக்க கூடும்.

சன் டிவியும் கலைஞர் டிவியும் மிகுந்த உதவியான விஷ்யமாக இருக்கும், மேலும் பல விஷயங்களை அலசி ஆராய்ந்து பேசக்கூடிய தலைவராக கலைஞர் மட்டுமே இருப்பது ஒரு திமுகவுக்கு ஒரு பலவீனம்தான். காங்கிரஸின் தேர்தல் அணுகுமுறை எப்போதும்போல் ஒரு மாதிரி வேகம் குறைவானதுதான், ஆனால் சோனியா மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா என்று அவர்களின் பிரபலங்கள் இருப்பதால் அவர்கள் பாடு கொஞ்சம் தேவலாம்,

இப்போதைய மாநில அரசு செயல்பாடுகளின் பின்னடைவுகளை பூசிமெழுக கலைஞராலே முடியவில்லை எனும்போது மற்றவர்கள் எப்படி அதை எதிர்கொள்ளபோகிறார்கள் என்பது ஒரு மிகப்பெரிய விஷ்யம்.

அதிமுக கூட்டணியின் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது, மீடியா பவர் தவிர மற்ற எல்லா சக்திகளும் அங்கே அதிகம், திமுக அரசை குறைகூற எக்கசக்கமான காரணங்களை கலைஞர் உருவாக்கி கொடுத்திருக்கிறார், மேலும் தனது தினசரி அறிக்கைகள் மூலம் இன்னும் புதிய வாய்ப்புகளை அவர்க அதிமுக அணிக்கு உருவாக்குவார் என்பது என் நிச்சயமான எண்ணம்.

வைகோ,ராமதாசு,ஜெயலலிதா,தா.பாண்டியன், வரதராஜன், போன்ற முதல் கட்ட தலைவர்கள் இருப்பதால் அதன் பிரச்சார வியூகம் மிகவும் வலுவாய் இருக்கும்,
அதிமுக தொண்டர்களை பொருத்தவரை அவர்களை உற்சாகப்படுத்த ஜெயலலிதா மட்டுமே போதுமானது, அவர் பிரச்சார பயணத்துக்கு தயாராக இருக்கிறார் என்பது அதன் முக்கிய பலம், திமுகவை குறைகூற அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய சாதகாமான நிறைய காரணங்களை கொண்ட மற்ற தலைவர்கள் அதிகம் இருப்பது ஒரு முக்கியகாரணம், வைகோவும் ராமதாசுவும் அதனை மிக நேர்த்தியோடு செய்வார்கள் என்பது எனது நம்பிக்கை,

மீடியா விஷயத்தில் அதிமுக அணி மிக பலம் குறைந்த அணியாக இருப்பது ஒரு பலவீனம்தான், அதை சன் டிவியும் கலைஞர் டிவியும் மக்களை எந்த அளவுக்கு எரிச்சல் பட வைக்கப்போகிறார்கள் என்பதை பொருத்து இந்த பலவீனம் பலமாக மாறும் சாத்தியதை உள்ளதாக நான் கருதுகிறேன்,

இனி வேட்பாளர்கள் அறிவிப்புகள் வந்ததும் பல புதிய விஷயங்கள் வரலாம், வேட்பாளர்களை பொருத்து சில மாற்றங்கள் வெற்றி வாய்ப்புகளில் ஏற்படுத்த கூடும்
அதன் பின் நாம் மீண்டும் சந்திப்போம்.

இந்த தேர்தல் ஒரு புதிய கணக்கை அரசியல்வாதிகளுக்கு மீண்டும் கற்றுகொடுக்கும் என்பது நிச்சயம்

தவநெறிச்செல்வன்

Feb 23, 2009

பெரியார் எழுதிய இக்கட்டுரை

பெரியார் எழுதிய இக்கட்டுரை ஒரு நண்பரின் பதிவில் இருந்து உங்களுக்காக, பொது தொண்டு பற்றி மிக அரிதான ஒரு விளக்கத்தை இங்கே அவர் கொடுத்துள்ளார், அவருடைய இந்த பார்வை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் இது இங்கே பதிவாக இடுகிறேன், நமது நண்பர்கள் இதன் மீதான ஒரு விவாதத்தை தொடங்கலாம் என்பதும் என் வேண்டுகோள்.

ஒரு சராசரி பார்வையில் பொது தொண்டு புனிதமாக காணப்படுகின்ற நிலையில் அதனை மறுக்கும் பெரியாரின் பார்வை ஒரு அதிர்ச்சியை எனது நண்பர்களுக்கு தரலாம் அதனால்தான் இதை நாம் விவாதத்திற்குள் கொண்டு செல்ல விரும்புகிறேன். Comment பகுதி அல்லது எனது e-mail ல் தொடரலாம்.

பொதுத் தொண்டு, அதாவது உண்மையான பொதுத் தொண்டு தன்னை, தன்னலத்தை அடியோடு மறந்து, தன்னைத் தவிர்த்த மற்ற மனித சமுதாய நலத்திற்கென்றே மனிதன் பொதுத் தொண்டு செய்வது என்பது இயற்கைக்கு மாறுபட்ட காரியமேயாகும்.
ஜீவன் என்பதே சுயநலம் என்ற தத்துவத்தைக் கொண்டதேயாகும்.எந்த ஜீவனும் எப்படியாவது தான் வாழவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாழ்கிறது‡ ஜீவிக்கிறது என்கின்ற தன்மையில் தான் வாழ்கிறது; அதற்கேற்றபடிதான் நடக்கிறது; இதற்கு மாறான ஜீவனைக் காண முடியாது.மனித ஜீவனும் இதே தத்துவத்திற்கு, நியதிக்கு ஆட்பட்ட ஜீவனேயாகும். மனிதனுக்குப் பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்பதற்கு ஒரு அவசியம் வேண்டுமே! அப்படி என்ன அவசியமிருக்கிறது?
பிறந்த மனிதன் வாழவேண்டும். முதலாவதாக உயிர் வாழவேண்டும். இது குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டு விடுகிறது. உயிர்வாழவேண்டுமென்றால் ஜீவிக்கவேண்டும். ஜீவிக்க வேண்டு மென்றால், உணவு கொள்eவேண்டும். இந்த விளக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாதுதான். ஆனால், அதற்கு ஆகவே பசி என்கிற உபாதை - நோய் (பசி நோய்) இயற்கையாகவே ஏற்பட்டு, அழுவது, அலைவது என்கிற தன்மை இருந்து வருகின்றது. அறிவு வந்த மனித ஜீவனும் எப்படியாவது உணவு கொள்ள வேண்டும் என்கின்ற ஆசைக்காக, அவசியத்துக்காகவே வாழ வேண்டியவனாகி விடுகிறான். பிறகு, உணவு பெற்று திருப்தியடைந்த பிறகு உறக்கத்திற்குப் பாடுபடுகிறான். பிறகு படிப்படியாக உடை, தங்குமிடம், அதற்குப்பிறகு காமஉணர்ச்சிக்குப் பரிகாரம். இவ்வய்ந்தோடு மனிதனின் இயற்கைத் தேவை முடிந்துவிடுகிறது.பிறகு சுற்றுச்சார்பு - ‘சார்ந்ததன் வண்ணம்’ (சவகாசம்) ஊர் நடப்பு முதலியவைகளால் படிப்படியாய் ஆசை, இயற்கையான ஆசை ஏற்படுகிறது. இது கைகூடுவதற்கு என்ன என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யத் துணிந்துவிடுகிறான். இதுவும் மனித இயற்கையாகிவிடுகிறது.
இந்த இயற்கை மனிதனுக்குப் பிள்ளை, குட்டி, உடைமைகளை உண்டாக்கி விடுகிறது. இவைகளைக் காப்பாற்றுவதும் இயற்கையே யாகிவிடுகிறது. இவற்றிற்கும் மேலாக மனிதனுக்குக் கவுரவம், பெருமை, புகழ் வேண்டியதாக ஆகிவிடுகிறது. பிறகு அதுவும் இயற்கை யாகிவிடுகிறது.இவ்வளவு இயற்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; செய்தாக வேண்டும் என்கின்ற தத்துவம் மனிதனுக்குச் சட்டமாய் விளங்குகின்றது. இவற்றிலிருந்து, இந்தச் சட்டத்திற்குப் புறம்பான சமுதாய மனிதன் உலகத்திலேயே கிடையாது என்பது எனது தாழ்மையான கருத்து, அப்படி யாராவது இருந்தால் அது இயற்கைக்கு விரோதமான தோற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஏன் சொல்ல வேண்டு மென்றால், அப்படி இயற்கைக்கு விரோதமாய் இருக்க என்ன அவசியம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், அந்தப்படி இருக்கச் சாதாரண நிலையில் யாரும் இருப்பதாய்க் காணப்படமாட்டார்கள்.மேற்கண்ட மனிதனின் இயற்கைத் தன்மைகளான தேவைகள் பூர்த்தியாக மனிதன் எது வேண்டுமானாலும் செய்து பூர்த்தி செய்துகொள்வது மனித இயற்கை என்று சொல்லப்பட்ட எது வேண்டுமானாலும் என்பதில் அடங்கிய பல காரியங்களில் பொதுத் தொண்டு என்பதும் ஒன்றாகும்.
அதாவது, கக்கூசு எடுப்பதும் பொதுத்தொண்டேயாகும். ஆனால், எதற்காக அந்தப் பொதுத்தொண்டு செய்யப்படுகிறது என்றால், மேற்கண்ட இயற்கைத் தேவைகள் பூர்த்தியாவதற்கேதான் என்பது போலவே மனிதன் பொதுத்தொண்டையும் ஒரு சாதனமாகக் கைக்கொள்ளுகிறான். இந்தப் பொதுத்தொண்டுகளில் தாசிப் பிழைப்பும் ஒரு பொதுத்தொண்டுக் காரியம்தான். வக்கீலும் ஒரு பொதுத் தொண்டுக்காரன்தான். வியாபாரியும் ஒரு பொதுத்தொண்டுக் காரன்தான். அதுபோலவே, அரசியல், சமுதாய இயல், தெய்வீக இயல், பத்திரிக்கை இயல், நடிப்பு இயல் முதலிய காரியங்களில் ஈடுபடுபவர்களும் பொதுத்தொண்டுக்காரர்கள்தாம். இவர்கள் எப்படிப்பட்ட பொதுத்தொண்டுக்காரர்கள் என்பவைகளில், இந்த இயற்கைக் காரியங்களை, தேவைகளைப் பூர்த்தி செய்ய எது வேண்டு மானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சட்டப்படி ஏற்பட்ட பொதுத் தொண்டர்களேயாவார்கள்.
இந்த, மேலே காட்டிய தாசி, வக்கீல், வியாபாரி, அரசியல், சமுதாய இயல், தெய்வீக இயல், பத்திரிகை இயல் முதலிய துறைகளில் ஜீவனம் வைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ஏற்பட்ட இயற்கையான குணம் என்ன வென்றால், இவர்கள் இத்தனை பேர்களுக்கும், இத்தனை பேர்களிடத்திலும் உண்மை, ஒழுக்கம், நாணயம், நேர்மை, நன்றி, மானம், ஈனம், தயவுதாட்சண்யம் முதலிய ‘நற்குணங்கள்’ என்று சொல்லப்படுகிற எந்தக் குணமுமே இருக்காது; இருக்க முடியாது; இருந்தால் அது இயற்கைக்கு விரோதமேயாகும்.
இது எப்படிப் பார்த்தால் விளங்கும் என்றால், இதில் ஈடுபட்டவர்கள் யார்? இவர்களுக்கு ஜீவனம் என்ன? இவர்கள் இதற்குமுன் எந்த நிலைமையில் இருந்தவர்கள்? என்ன பரம்பரை? வாழ்க்கையில் முதல்முதல் புகும்போது என்ன தொண்டில் இறங்கினார்கள்? பிறகு இதற்கு ஏன் வந்தார்கள். இவர்கள் பொதுத்தொண்டில் புகும்போது என்ன அந்தஸ்து? என்ன தகுதி? எவ்வeவு செல்வம்? அப்போதைய கொள்கை என்ன? எத்தனை மாற்றம் அடைந்தார்கள்? அதனால் என்ன அடைந்தார்கள்? ‘பொதுத் தொண்டின்’ உண்மையான லட்சியம் ஏதாவது உண்டா? அப்படியானால், அந்த லட்சியம் என்ன? அந்த லட்சியம் யாருக்காக? எந்த மக்களுக்காக? அதில் உண்மை நேர்மை உண்டா? இப்படிப்பட்ட தொண்டுகளால் இவர்கள் அடைந்த நட்டம் என்ன? இலாபம் என்ன? இவைகளில் எது பெரிது? இவர்களுக்குப் பெண்டுபிள்ளைகள் இருக்கின்றனவா? அவர்கள் படிப்பு, வாழ்வு ஆகியவைகளுக்கு இவர்களுக்கு உள்ள சொந்த வசதிவாய்ப்பு என்ன? இவர்களது இன்றைய வாழ்வுக்கு எந்த வழியில் தேடிய, அடைந்த பொருளைக் கொண்டு என்ன செய்யப்பட்டது? ‡ என்பது போன்ற பரிட்ச்சைகளை வைத்துப் பார்த்தால் எந்தப் பொதுத்தொண்ட னும் மிஞ்சவேமாட்டான். அனேகமாய் எல்லாப் பொதுத்தொண்டனும் கன்னக்கோல், கத்தரிக்கோல் பொதுத்தொண்டர்களை விடக் கீழ்ப்பட்ட தொண்டர்களேயாவார்கள்.
பொதுவாகச் சொல்லப்படவேண்டுமானால், நாட்டில் மனித சமுதாயத்தில் இன்று நிலவி வாழ்ந்து வளர்ந்து பெருகிவரும் எல்லாக் கூடா ஒழுக்கங்களுக்கும், பொய், பித்தலாட்டம், நாணயக் குறைவு, துரோகம், சதி, நன்றிக்கெட்டதனம் முதலான ஈனக் காரியங்களுக்கும் இந்தவகைப் பொதுத்தொண்டே காரணம் என்பேன்.
பொதுத்தொண்டின் இலட்சணம் இந்த மாதிரியாக அடைந்துவிட்டதாலேயே பொதுவாக மனித சமுதாய ஒழுக்கம், நேர்மை, நாணயம் முதலிய தன்மைகள் ஒழிந்து நேர்மாறான தன்மைகள் வளர்ந்துகொண்டே வருகிறது.
உதாரணமாக, கடவுள் தன்மை என்பது பொது அயோக்கியத் தன்மைகள் தஞ்சமடையப் பாதுகாப்பு ஸ்தலமாகிவிட்டது.தண்டனை (ஜெயில்) தன்மை - அயோக்கியர்கள், காலிகள் இளைப்பாறி உடலைத் தேற்றிக்கொண்டு திரும்பும் சுகவாச ஸ்தலமாகி, சுகாதார ஸ்தாபனமாக ஆகிவிட்டது.
கோர்ட்டு, நீதிஸ்தலத்தன்மை- மனிதனை எப்படி எப்படி நேர்மைக்கேடான காரியம் செய்யலாம்; செய்துவிட்டு எப்படித் தப்பித்துக்கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியாக ஆகிவிட்டது.
பத்திரிக்கைகள் தன்மை - காலிப்பயல்களையும், அயோக்கியர் களையும், மக்கள் துரோகிகளையும், மடையர்களையும் பெரிய மனிதர்கள், மகான்கள், தேச பக்தர்கள், மேதாவிகள் ஆக்கும் சலவைச் சாலைகளாக ஆகிவிட்டது.
ஜனநாயகம் என்பது காலிகள், அயோக்கியர்கள் எப்படியாவது பணம், பதவி சம்பாதிக்கும் ஒழுக்கமற்ற செல்வர்கள், பதவியாளர்கள் ஸ்தாபனமாக ஆகிவிட்டது.
பொதுத்தொண்டு போனபோக்கானது இன்று நாட்டுக்கு ஒரு சம்பிரதாயமான தலைவனில்லாமல் போய்விட்டது. முன்பு தலைவர், தலைவர்கள் என்றால் அது தானாகவே மக்கள் உள்ளத்தில் புகுந்து யாரையாவது தலைவர்கள் என்று கருதச் செய்யும். அந்தப் பதவியையும் யாரோ சிலர் - வெகு சிலர்தான் விரும்புவார்கள். அவர்களும் நாடொப்பிய தலைவர்களில் ஒருவராக இருப்பார். மக்களும் தலைவராகக் கருதுவார்கள்; மதிப்பார்கள். இப்போது ஒவ்வொருவனும் தனது வாழ்க்கைப் பிழைப்பை மாத்திரம் முன்னிட்டே கவுரவத்தைக்கூடக் கருதாமல் தலைவனாக முயற்சித்து, கூலி ஆட்களைப் பிடித்து தன்னைத் தலைவனாக ஆக்கச் சொல்லுகிறான்; செய்துகொள்ளுகிறான். அதற்கேற்ற கீழ் மக்களும் எவ்வளவு கீழானவனையும் சுயநல, பதவி, பணத்தாசைக்காரனையும் தலைவனாகக் கூப்பாடு போடுகிறார்கள்.
பத்திரிக்கைக்காரர்களும் இந்த இழித்தன்மைக்கு முழுமுயற்சியோடு ஒத்துழைக்கிறார்கள்ஆனதினாலேயே, நாட்டில் உண்மைத் தலைவர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமற்போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்கவேண்டும் என்பதல்லாமல் நாட்டுப் பொதுமக்கள் நலனுக்கு என்று ஒன்றுகூட ஏற்படவில்லை; இந் நாட்டில் ஏற்பட்டதில்லை. இன்றுள்ள பொது ஸ்தாபனங்கள் என்பவைகள் சூதாடுமிடமாகவே ‘மேஜைக் காசு’வாங்க ஏற்பாடு செய்யப்பட்ட சூதாடுமிடங்கள் போலவே இருந்துவர வேண்டியவைகளாக அமைக்கப்பட்டு விட்டன. இவை மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்கள் நலத்துக்கு முன்னேற்றத்திற்குமான வாழ்வுக்கு - அறிவு வாழ்வுக்கு ஏற்ற கொள்கைகளோ லட்சியங்களோ இந்நாட்டில் யாராலும் கையாளப்படுவதில்லை. எவரும் அந்தத்துறையை அணுக பயப்படக் கூடியவர்களாகவே, அதாவது அதனிடம் அக்கொள்கை களிடம் சென்றால், அணுகினால் நமது வாழ்வே போய்விடுமே, பிழைக்கவே முடியாதே என்று பொதுத் தொண்டு செய்பவர்கள் எல்லாம் பயப்பட வேண்டியவர்களாகிவிட்டார்கள்.
ஆகவே, இதுவரை பொதுத்தொண்டு என்பது மக்கள் சுயநல வாழ்வுக்காக இந் நாட்டில் இருந்துவரும் பல தொழில்கள், மார்க்கங்கள் என்பவைபோலவே பிழைப்பு மார்க்கம்தான் என்றும் இதற்கு எந்தப் பொதுத்தொண்டரும் விலக்கு இல்லை என்றும் ஏதோ ஒரு அளவுக்கு என் 83 ஆண்டு அனுபவத்தைக் கொண்டு விளக்கினேன். அதோடு கூடவே, இதற்கு மாறாக பொதுத்தொண்டு இருக்குமானால் அது இயற்கைக்கு மாறுபட்டது என்றும் கூறினேன். இந்தக் கருத்து நான் வெகுநாளாகச் சொல்லிக்கொண்டு வரப்பட்ட கருத்தே ஒழிய இன்று புதிதாகச் சொல்லப்படுவதல்ல. மற்றும், உண்மையான பொதுத்தொண்டு செய்ய மக்களில் ஆள் கிடைப்பதும் மிகக் கஷ்டம்; மிகமிகக் கஷ்டம் என்றே சொல்லுவேன்.
யாராவது இருப்பார்களேயானால், அப்படிப்பட்டவர் மனிதனின் இயற்கை அமைப்புக்கு மாறுபட்டவர்களாகத்தான் இருக்க முடியும். அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால்,
1. முதலாவது, பொதுத்தொண்டனுக்குச் சோற்றுக்கு, குடும்ப வாழ்க்கைக்கு வகைதேட வேண்டிய அவசியமில்லாத வசதி இருக்கவேண்டும். வசதி இல்லா விட்டாலும், பொதுத்தொண்டையே கொண்டு பிழைக்கவேண்டிய அவசிய மில்லாத ஒரு மார்க்கமாவது இருக்க வேண்டும்.
2, தனக்கு மாத்திரமல்லாமல் தன்னால் போஜ­ணை செய்யவேண்டிய, பாதுகாக்கவேண்டிய நபர்கள் பளுவுகள் இருக்கவே கூடாது.
3. தன்னால் பாதுகாக்க, பெருக்கவேண்டிய பெரிய தொழிலில் பெரிய சொந்த சொத்தும் இருக்கக்கூடாது. இருந்தால், எதிரிகளுக்குப் பயந்து இலட்சியத்தை விட்டுக்கொடுக்க நேரும்.
4. மனைவி, பிள்ளைகுட்டிகள் இருக்கக்கூடாது; இருக்கவே கூடாது.‘காணப்படும் பொருள்களில் உயிர் பிரியமாம். உயிரினும் மக்கள் பிரியமாம். இவற்றைப் பாதுகாக்க எதுவும் செய்யலாம்’ - ஆய்ந்த பழமொழி. ஏனெனில், அவற்றைப் பாதுகாக்க வேண்டுமே, வளர்க்கவேண்டுமே, படிக்க வைக்க வேண்டுமே, உத்தியோகம் தேடிக்கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணத்தினால் எப்படிப் பட்டவனும் பொதுத்தொண்டுக்கு அயோக்கியனாகியேவிடுவான்.
5. பொதுத்தொண்டன் அல்லாத, சுயநலத் தொண்டனான மனிதன் எவனும் பிள்ளைகுட்டிகள் இருந்தால் சுயநல வாழ்விலேயே, அவனுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் அயோக்கியனாகிவிடுகிறான். அப்படி இருக்கும்போது, வசதி இல்லாதவன் அவற்றின் (பிள்ளை குட்டிகள்) வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு அயோக்கியத்தனம் செய்ய முடியாமல் எவனாலும் இருக்கவே முடியாது.
6. பொதுத் தொண்டுப் பணியில் இருந்து தன் வயிற்றுக்கு - வாழ்வுக்கு மாத்திரம் வகை செய்து கொள்பவனையே கூட இரண்டாந்தரம், விலக்கு அளிக்கப்படவேண்டிய தொண்டன் என்றுதான் சொல்லுவேன்.
7. எந்தப் பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்கவேண்டும். அல்லது, அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாப் பொதுத்தொண்டர்களாக இருக்கவேண்டும்.
8. பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்குமேல் வாழக்கூடாது; வாழவே கூடாது. வாழ வேண்டிவந்தால், வாழ்ந்துகொள். ஆனால் நான் பொதுத்தொண்டன் தியாகி கஷ்டநஷ்டப்பட்டவன் என்று சொல்லாதே. சொல்லுவதற்கு வெட்கப்படு. உன் மனதிலும் நீ நினைத்துக்கொள்ளாதே.
9. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால் - நீ மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று விட்டதாகக் கருதிக்கொண்டிருப்பவன் என்றுதான் சொல்லவேண்டும்.
10. மற்றும், இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத்தொண்டன் ஆகாமல் சுயநலத்தொண்டனாக ஆகி, உனக்கென்றெ நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம், அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக்கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத்தொண்டு (வே­சம்) ஆனது உன்னைத் தியாகம் செய்யச் செய்ததா, அல்லது உன் தகுதிக்கு மேற்பட்ட செல்வத்தையும் வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக்கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார்.
இந்த முறையில் எண்ணிப் பார்த்தால், நாட்டில் எவனாவது பொதுத் தொண்டன், தன்னலத்தை வெறுத்தவன், தியாகி என்பதாக எங்காவது இருக்கின்றானா என்பது தெரியும். நான் வெகு பொதுத்தொண்டர்களோடு பழகியிருந்த பழக்கத்தையும், வெகு பேருக்குத் தலைவனாக இருந்து அவர்கள் நடத்தையையும் அவர்களால் அடைந்த பலனையும் அவர்களது போக்கையும், அவர்கள் எதிர்ப்பையும், அவர்கள் இன்று எதிர் பார்ப்பதையும் இலட்சியத்தையும் உணர்ந்தே இதைச் சொல்லுகிறேன்.
எனது பொதுத்தொண்டு வாழ்விலே நான் நெருங்கி உண்மையாகப் பழகிய தோழர்கள் இராஜாஜி, கண்ணப்பர், இராமநாதன், கே.ஏ.பி. விஸ்வநாதன், பொன்னம்பலம், அண்ணாதுரை, சவுந்தரபாண்டியன், பி. பாலசுப்பிரமணியம், எஸ்.குருசாமி முதலியவர்களுடைய பொதுத்தொண்டு தன்மையை அனுபவித் தும், உணர்ந்துமே எழுதுகிறேன். மற்றும், இவர்கள் எல்லாம் எனக்கு ஆதரவாக, நண்பர்களாக இருந்ததாலேயும், இவர்களுக்கு நான் ‘தலைவனாக’ அவர்க ளாலேயே கருதப்பட்டதினாலேயும் நானும் இவர்களைக் குறிப்பிடுகிறேன்.
இதிலிருந்து பொதுமக்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்றால், பொதுத் தொண்டு என்பதாக ஒன்று, ஒரு தொண்டு இல்லை? பொதுவாக இல்லவே இல்லை.எவன் அந்தப்பெயரால் தொண்டு செய்வதாகக் காணப்பட்டாலும் சுயநலத்துக்காகத் தெரிந்தெடுக்கும் தொண்டுகளில் (பொதுத் தொண்டு என்பது) அது ஒன்று என்றுதான் கொள்ளவேண்டும். சிலருக்குத் துவக்கத்தில் சுயநலம் கருதாமல் பொதுத் தொண்டுக்கு வர எண்ணமேற்பட்டிருக்கலாம். பெண்டு பிள்ளை ஏற்பட்டால் எவனும் சுயநலப் புலிதான்.என்னைப் பற்றி நீங்கள் நீயும் அப்படித்தானே என்று கேட்கலாம்.
ஆம்; நானும் அப்படித்தான். என் தொண்டும் உண்மையில் சுயநலத் தொண்டுதான். என்ன சுயநலம்? அவரவர் சொந்தப் பிள்ளைகுட்டி, மனைவி, வாழ்க்கை சுயநலம் அல்லாமல், எனக்கு ஒரு திருப்தியையும் இன்பத்தையும் கொடுக்கத்தக்கதும், கம்பீரத்தோடு நானே பெருமைப்படத்தக்கதுமான நலத்தை அளிக்கிறது. அவற்றை நானும் அனுபவிக்கிறேன். இதுதான் என் சுயநலம்.செல்வத்தைப் பற்றியும், மற்றவர்களையெல்லாம் விட எனக்குப் பேராசையுண்டு. மற்ற மேற்கண்ட தோழர்களைவிடச் செல்வத்தில் நான் பொதுத்தொண்டின் பேரால் அதிகமான பணம், சொத்து சம்பாதித்தவன் ஆவேன். எனது முயற்சியில், தொண்டின் சரிபகுதிப் பாகம் பணம் சேர்ப்பதிலே செலவழிக்கிறேன். சிறு வயது முதலே வாழ்க்கையின் இலட்சணம் பணம் என்றே பழக்கப்பட்டவன் நான்.
இப்படிப்பட்ட நான், பொதுத்தொண்டனாக ஆனபின்பு உண்மையான பொதுத் தொண்டுக்கு என்றே சற்றேறக்குறைய 15 இலட்ச ரூபாய் மதிப்பிடத்தக்க பொதுச்செல்வம் சேமித்து இருக்கிறேன். எல்லோருக்கும் தெரியும்படியாகவே சம்பாதித்தே சேர்த்திருக்கிறேன். இதில் என்னுடைய சொந்த சொத்து, அதாவது எனக்கு உரிமையான என் சொத்துக்களை விற்று பொதுநலனுக்கு உதவிய வகையில் பெரும்பாகம் கூடச் சேர்க்கப்பட்டதால் இந்த மதிப்பு ஏற்பட்டதென்றே சொல்லுவேன். (எனதல்லாத) மற்றதெல்லாம் பொதுமக்களிடம் இருந்து மாநாடு, கூட்டத்துக்கு - அழைப்புக்குச் செல்லுதல், கொள்கைப் புத்தகம் விற்றல், கழகத்திற்கு நன்கொடை என்னும் பேரால் பெற்ற, அளிக்கப்பட்ட - வசூல் செய்யப்பட்ட வகையிலும் அவற்றை நானும் பெருக்கியவகையிலும் சொத்துக்களுக்குப் பொதுமதிப்பு ஏறியவகையிலும் சேர்க்கப்பட்ட செல்வம், சொத்துக்களெல்லாம் இந்த சுமார் பதினைந்து இலட்ச ரூபாய் மதிக்கக்கூடிய சொத்தாகும். இந்தச் சொத்திலும் என் இஷ்டப்படி -வேறுயாரும் கேள்வி கேட்கமுடியாதபடி, யாருக்கும் கணக்குக்காட்டவேண்டிய அவசியமில்லாத சொத்தாக, ஒரு நல்லபாகம் பொதுத் தொண்டுக்கு இருக்கிறது எனலாம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு இவ்வளவு செல்வ வசதி இருந்தும் எனது வாழ்வானது மக்களின் சராசரி வாழ்வுதான். எனக்கு உணவுச் செலவு மாதம் ரூ.50 - க்குள் தான் ஆகும். எனது துணிமணி செலவு ஆண்டுக்கு ரூ.50 - க்குள் தான் ஆகும். அதிலும் பெரும்பகுதி ஓசியில் நடக்கும். இதற்குச் செலவு செய்யவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது. (எதனால்) பிள்ளை குட்டி கிடையாது. மனைவி உண்டு என்றாலும் அவர்கள் மாதம் ரூ.200 போல் சம்பளம் கொடுத்து வாங்கக்கூடிய வேலையை இயக்கத்திற்கு இந்த 5 ஆண்டுகளாகச் செய்துவந்ததோடு, அதற்கு முன்பாகப் பதினைந்து ஆண்டாக பல ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை மூலம் கழகத்துக்குப் பணவருவாயும் அவர்களால் ஏற்பட்டது என்று சொல்லுவேன். அந்த அம்மையாருக்கும் உணவுச் செலவு மாதம் 50 ரூ. உடை செலவு வரு­ம் 150 ரூபாய்க்கு உள்ளாகத்தான் செலவாகும்.
எனது பிரயாணம் சிம்ப்சன் கம்பெனியின் பங்காளித் தோழர் ஆரோக்கியசாமி அவர்கள் சொன்னதுபோல், ஒரு லாரிக்குச் சமமான - சாமான் ஏற்றத்தக்க மோட்டார் வண்டியில்தான்! பிரயாணம் முக்கால் பாகம் இரவில்.மாதத்தில் 20 நாள்போல சராசரி சுற்றுப்பிரயாணம். சதா கழகத்துக்குக் கட்டட வேலை. கழகச் செல்வத்தைப் பெருக்கும் கணக்கு வேலை. இது அதிசயமான வேலை. எந்தவிதக் கணக்கும் வைக்காமல் சதா கணக்குப் போட்டுப் பார்க்கும் வேலை! எல்லாம் பெரிதும் டைரி குறிப்புத்தான்.
சில பொறாமைக்காரர்கள், ஏமாற்றமடைந்து வெந்து புழுங்கிக்கொண்டிருப்பவர் கள் ஆகிய கூட்டத்தார் தவிர ‘எதிரிகள்’ என்று கருதப்பட்டவர்கள் முதல் எந்த மனிதரும் நம்மைக் கண்டவுடன் நான் வெட்கப்படத்தக்கபடி என்னைப் ‘புகழ்வதும்’ ‘போற்றுவதும்’ ‘அன்பு காட்டுவது’மான தன்மையை இடைவிடாமல் அனுபவிக்கிறேன்.
இவை எல்லாம் எனக்குச் சுயநலமில்லாமல் வேறு என்ன பொதுநலம் என்று சொல்ல முடியும்? எனக்கு ஏதாவது கவலை உண்டு என்றால் அது கழகச் சொத்துக்களையும், மற்றும் பொதுநலத்துக்காகவே அளிக்கப்பட்ட பொருள்கள், சொத்துக்கள் ஆகியவைகளைப் பாதுகாத்து, அதன் வருவாய்களைக் கழக லட்சியங்களுக்கும் அனாதியாய்ப் பராமரிப்பு இல்லாத மக்களுக்கும், அவர்கள் நல்வாழ்வுக்கும் வகைதரப் பயன்படும்படியாய்ச் செலவு செய்யச் செய்வது எப்படி என்கிற கவலைதான்.
மற்றொரு கவலை என்னவென்றால், இனியும் ஒரு பத்து ஆண்டுகளுக்காவது காமராசர் ஆட்சி நீடித்து நிலைத்து இருக்குமானால் சுயமரியாதை இயக்கவேலை பூர்த்தியாகாவிட்டாலும் திராவிடர் கழக இலட்சிய வேலை பெரும் அளவுக்குப் பூர்த்தியாகுமே என்கின்ற கவலைதான்.மேலால், ஒரு விசயத்தைக் குறிப்பிட்டுவிட்டு இதை முடிக்கிறேன்.
அதாவது,எனது ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் அடுத்த ஆண்டு முடிவுக்குள் நம் கழகம் செய்யவேண்டிய காரியம் என்ன என்று வேலைத் திட்டம் தெரிவிப்பது வழக்கம்.சென்றசில பிறந்தநாள் விழாக்களில் ‘அடுத்த ஆண்டு’ வேலைத் திட்டம் தெரிவித்தேன் என்றாலும் அந்த ஆண்டுகளின் வேலைத் திட்டங்களை காமராசர் ஆட்சி எதிர்ப்புக்களை முறியடிக்கின்ற வேலைகளுக்கே பெரும்பகுதி முயற்சியும் நேரமும் செலவழிக்கப்பட்டுச் சரியாக வேலைத் திட்டங்கள் கவனிக்கப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதற்குச் சமாதானம் என்னவென்றால், காமராசர் ஆட்சி எதிர்ப்புகளை முறியடித்து, மறுபடியும் அவர் ஆட்சி வரும்படி செய்வதும் வேலைத் திட்ட நிறைவேற்றுவேலை என்று கருதவேண்டியதாயிற்று. இதில் ஒரளவு வெற்றி பெற்றோம் என்றாலும் முழுவெற்றி பெறவில்லை.ஒர் அளவு வெற்றி என்னவென்றால், எலக்­னில் ஜெயித்த ஒருவன் ‘நான் ஒரு அளவுக்குத்தான் வெற்றிபெற்றேனேயயாழிய முழுவெற்றி பெறவில்லை. முழுவெற்றி பெற்றேன் என்று எப்போது சொல்லலாம் என்றால், எதிரியை டெபாசிட் கிடைக்காமல் செய்திருந்தால்தான் முழுவெற்றி. இது சாதாரணமாய்க் கிடைக்கக்கூடிய வெற்றிதான்’ என்று ஒருவன் சொல்லுவது போன்றே, நானும் முழுவெற்றி கிடைக்கவில்லை என்கின்றேன்.
அது போகட்டும்; வரப்போகிற ஆண்டுக்கு வேலைத் திட்டமாக:-
(1) பார்ப்பனப் பத்திரிகைகளின் ஆணவமும் ஆதிக்கமும் ஒழிக்கப்படவேண்டும்; குறைக்கப்படவாவது வேண்டும்.
(2) சினிமா மோகம், வளர்ச்சி ஒழிக்கப்படவேண்டும்.
(3) கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும்.
கழகத்திற்கு 25,000 மெம்பர்களுக்குக் குறையாமல் சேர்க்கப்படவேண்டும். கழகத்திற்குக் குறைந்தது 500 - க்குக் குறையாமல் கிளைக் கழகங்கள் இருக்கச் செய்யவேண்டும். கமிட்டிகள், மத்தியக் கமிட்டி, மாவட்டக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு மற்ற கமிட்டிகள் புதுப்பிக்கப்படவேண்டும். கழகப் புத்தகங்கள் ரூ.25,000-க்குக் குறையாமல் விற்கப்படவேண்டும். பிரச்சாரங்களுக்கு ஒழுங்குமுறை, கட்டுப்பாடு ஏற்படுத்தவேண்டும்.கமிட்டிக்கு மேலும் கட்டுத் திட்டங்கள் ஏற்படுத்தப் படவேண்டும். இவைகளை இந்த ஆண்டு வேலைத் திட்டங்களாகக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ஆதாரம் - நன்றி - (விடுதலை - 84 வதுபிறந்த நாள் விழாமலர் - 17.09.1962)