Jan 29, 2009

என்ன செய்யப்போகிறோம் இலங்கை தமிழருக்கு


இலங்கைப் பிரச்சினை, இன்று மிகவும் முக்கியமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது, எல்லா புறம் இருந்தும் ஆதரவு பெருகி கொண்டிருக்க பிரணாப் முகர்ஜி சென்று பேசிவிட்டு வந்திருக்கிறார். நிறைய மாறுப்பட்ட கருத்துக்கள் எங்கு பார்த்தாலும் நிலவுகின்றன. இதன் ஆரம்பம் கொண்டு பல விஷயங்களை குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன் “யுத்தம் சரணம்” என்ற தொடர் எழுதி கொண்டிருக்கிறார் அதனைப்படித்தால் அதன் ஆரம்ப நிலைகளை புரிந்து கொள்ளலாம்,

ஆனால் இன்றைய தேவை என்ன என்பது மிகவும் புதிரான விஷயமாக இருக்கிறது.
எதை நாம் நமது மத்திய அரசிடம் கோருகிறோம் என்பது தொடங்கி எதை நாம் செய்ய வேண்டும் இலங்கை தமிழர்களுக்காக என்பது வரை எல்லாமே புதிராக இருக்கிறது, அதற்கான காரணங்களை நாம் காணவேண்டும்.

1. ஒரு நாடு தனது நாட்டில் நடைபெறும் பிரிவினைவாதத்தை அடக்க ராணுவத்தை பயன்படுத்தி முன்னேறுகிறது, இதை நாம் எப்படி நிறுத்த சொல்ல முடியும், அதற்கு நாம் ஒன்றும் உலக போலிஸ் அமெரிக்கா இல்லை.
2. அப்படியே செய்ய வேண்டுமானாலும் அதை செய்வதால் பலனை யார் நேரடியாக அடையப்போகிறார்கள்.
3. இந்திய தலைவர் ஒருவரை கொடுரமான முறையில் கொன்று போட்டவர்களை ஆதரிக்க அந்த தலைவரை சார்ந்த கட்சியால் எப்படி முடியும்.
4. நமது இனம் என்பதால் தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், ஊர்வலம், உண்ணாவிரதம்,போராட்டங்கள் நடத்தி ஏதாவது செய்தால் அதன் பலனாக என்ன நடக்கும், ராஜபக்ச அதற்கெல்லாம் கலங்ககூடிய ஆள் இல்லை. தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று இலங்கை தளபதியை சொல்லவைத்தவர்தானே அவர்.
5. இந்தியா முன்பு செய்தது போல விடுதலை புலிகளுக்கு, பயிற்சி கொடுத்து அதனை வலுப்படுத்தி சண்டையை இன்னும் வலுவோடு நடத்த உதவ வேண்டுமா? அப்படி செய்தால் இலங்கை தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்களா?
6. அல்லது இன்றைய அரசியல்வாதிகள் கோருவது போல போர் நிறுத்தம் செய்யப்பட்டால் போதுமா?, போர் நிறுத்தம் செய்து விட்டு எனது நாட்டிற்குள் புலிகள் தனித்து இயங்கி கொள்ளட்டும் என்று இலங்கை அரசு விட்டு விட்டு சும்மா இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பா?
7. அதிக பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், குழந்தைகள் பெண்கள் என்று எண்ணற்ற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், உண்மைதான், மிகவும் கவலையும் வேதனையும் கலந்த செய்திதான், ஆனால் இதற்கு இலங்கை அரசு மட்டும்தான் காரணமா புலிகளின் பங்கு இந்த ரத்த வெள்ளத்தில் இல்லவே இல்லையா? அப்படி அவர்களும் பங்காளிகள் என்றால் யாருக்காக இந்த போராட்டங்கள் இங்கே நடக்கின்றன?
8. நமது நேரடியான கடமை என்ன என்ன தீர்வை வைத்துக்கொண்டு நாம் இந்த போராட்டங்களை நடத்துகிறோம், தமிழர்கள் நாம் அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.
9. நமது இனமக்களுக்காக என்ன தீர்வை நாம் வைத்திருக்கிறோம், இன்று தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை என்ன என்று பொங்கி எழும் நம்மக்களுக்கு புரியுமா?
10. அவர்கள் எல்லாம் அங்கிருந்து வந்த போது எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இன்று வரை கிட்டதட்ட 25 வருடங்களாய் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை நிலையை எந்த இந்திய அனுதாபிகளும் உயர்த்த பாடுபடவில்லை, அவர்கள் படும் வேதனைகள் கஷ்டங்கள் பல முறை பத்திரிக்கைகளில் வந்தாலும் அதற்கெல்லாம் எந்த முயற்சியும் இவர்கள் எடுக்கவில்லை.
11. போரை நிறுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது ஆனால் போரை நிறுத்தி ஒரு அமைதி ஓப்பந்தம் உண்டாக்கி அதன்மூலம் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரு வழியை அல்லது திட்டத்தை தனி ஈழம் அல்லாத ஒரு நியாயமான தீர்வை எந்த அரசியல்வாதியோ அல்லது அனுதாபிகளோ வைத்திருக்கிறார்களா?
12. அப்படியே இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளச்செய்ய பிரபாகரனை வற்புறுத்த இவர்களால் முடியுமா?
13. பங்களாதேஷ் பிரிக்க இந்தியாவால் முடிந்ததே இப்போது ஏன் முடியாது ஒரு ஈழத்தை அப்படி பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பது சிலருடைய கோரிக்கையாக இருக்கிறது அது சரியா? இன்றிய உலக சூழலில் அப்படி ஒரு ராணுவ நடவடிக்கை எடுத்து பிரித்து கொடுக்க முடியுமா?
14. பங்களாதேஷ் என்பது ஒரு தனி பிரதேசமாக இருந்தது, அதனால் அதை பிரித்துக்கொடுக்க முடிந்தது, இதே பங்களாதேஷ் பாகிஸ்தானை ஓட்டி இருந்து அங்கு தனிநாடு கேட்டு போராடினால் இந்தியா அதை செய்திருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம், ஏனெனில் ஒன்று சேர்ந்த ஒரு பகுதியை பிரித்து சுதந்திரம் வாங்கி கொடுப்பதென்பது அவ்வளவு எளிய விஷயமில்லை, அதனால் தான் இன்னும் காஷ்மீர், காலிஸ்தான் போராட்டங்கள் எல்லாம் வெற்றி பெற முடியாமலே இருக்கின்றன.
15. அப்படியே பிரித்துக்கொடுத்தாலும் அது நிரந்தர தலைவலியாக இரண்டு நாட்டுக்கும் அமைந்து விடும் என்பதுதான் உண்மை.
16. நாம் பங்களாதேஷுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த பின்னர் அதன் எல்லைகளில் பாகிஸ்தான் நாடு இல்லாததால் அதன் சுதந்திரம் மற்றும் எல்லைகள் ஏதும் பாதிக்கப்படாமல் இருந்து விட்டன, ஆனாலும் அதன் உள்ளே ஊடுருவிய பாகிஸ்தானின் ஆட்கள்தான் ராணுவம் மூலம் பின்னர் முஜ்பூர் ரகுமானை கொன்று பழிவாங்கினர் என்பதை மறக்க கூடாது.
17. புலிகள் உலகின் மிக சக்தி வாய்ந்த ஒரு போராளி குழு, தமிழர்கள் மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம். உலகின் திறமையான இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது தமிழினம் என்பது உண்மையானால் அதில் புலிகளின் பங்கு மிக முக்கியமானது.
18. இன்று தமிழ் என்ற வார்த்தை tamil என்று பல உலக நாடுகளில் உச்சரிக்கப்படுகிறதென்றால் அதில் புலிகளின் ஆற்றல் இல்லாமல் இல்லை.
19. ஆனால் இன்று புலிகள் ஒடுக்கப்படுகிறார்கள், அதற்கு சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் உதவுகின்றன, இந்தியாவும் கூட உதவுவதாக கூறப்படுகிறது, அதில் இந்தியா உதவாமல் இருந்தாலும் அங்கு ஒன்றும் நடக்கபோவதில்லை என்பது நேரடியாக தெரிகிறது.
20. ஆகையால் இதில் ஏதாவது நல்லது செய்ய நினைக்கும் தலைவர்கள் சாத்தியமான ஒரு தீர்வை திட்டத்தை உண்டாக்கி அதனை பிரபாகரன் சம்மதிக்க வைக்கவும், பின்னர் அதனை நடைமுறை படுத்த செய்யவும் கூடிய வழிகளை கொண்ட ஒரு திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்த முயல்வதே ஒரு சரியான தீர்வாக இருக்கும், வெறுமனே போராடிக்கொண்டே இருந்தால் நமது தமிழினம் அழிவததை காணக்கூடிய ஒரு மெளன சாட்சியாக மட்டுமே நாம் இருக்க முடியும்.
21. ஆனால் இன்று தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் அப்படி ஒரு தீர்வும் கொண்டு இருப்பதாக சொல்லமுடியவில்லை, எல்லா போராட்டங்களும் ஒரு அடையாள போராட்டங்களாகவே இருக்கின்றன.

இன்னும் இந்த போராட்டம் உலக அளவில் செல்லவே இல்லை, ஊடகங்கள் மிகவும் இரண்டாம் தரமாகவே இந்த போராட்டத்தை முன்னிறுத்துகின்றன.
ஆனானப்பட்டஅமெரிக்காவே தாலிபான்களிடம் மூச்சு வாங்கும்போது இலங்கை அரசு ராணுவத்தை கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, அமெரிக்கா நேரடி போரில் தாலிபான்களை வெற்றி கொண்டு ஆப்கனை பிடித்தது, ஆனால் கொரில்லா போர் தொடங்கிய பின் திணறிக்கொண்டிருக்கிறார்கள், இதே நிலைதான் இனி இலங்கையிலும் என்பது நிச்சயம், நேரடிப்போர் 95 சதவீதம் முடிந்து விட்டது என்றால் இனி 105 சதவீதம் கொரில்லா போர் மீதம் இருக்கிறது என்பதுதான் அதன் பொருள், கொரில்லா போர் கொரில்லாக்களுக்கு வெற்றியும் பொது மக்களுக்கு நிம்மதியின்மையும், அரசுகளுக்கு இழப்பையும் கொடுக்கும் ஒரு போர்முறை, அதைத்தான் நோக்கி இலங்கை சென்று கொண்டிருக்கிறது, இதுதான் தீர்வு என்று எண்ணி இலங்கை அரசும் ராணுவத்தை கொண்டு சாதிக்க நினைக்கிறது இது எல்லாமே ஒரு மோசமான நிலைமைக்கே கொண்டு செல்லப்போகிறதோ என்ற கவலைதான் தோன்றுகிறது.

தவநெறிச்செல்வம்.

Jan 19, 2009

எண்ணங்கள்

ஒரு புரியாத சூழலில் இதை எழுதுகிறேன், நடக்கும் சம்பவங்களை தொகுத்து அதன் செயல்பாடுகளை எழுதலாம் என்று நினைக்கிறேன், காசாவில் இன்று கணக்குப்படி 1000 த்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கி விட்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது இஸ்ரேலின் ருத்திர தாண்டவம், குழந்தைகள் பெண்கள் என்று எல்லாவிதமான உயிர்களும் எந்த வேறுபாடும் இல்லாமல் கொல்லப்படுகிறார்கள். அங்கே வாழ முடியாமல் சாதாரணமக்கள் கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்கிறார்கள்.

இதை எல்லாம் தடுக்க ஐ.நா சபை கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானம் தங்களை கட்டுபடுத்தாது என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது காசாவில் இருந்து ஹமாஸ் தனது பங்குக்கு ராக்கெட்டுகளை ஏவிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்ரேல் தரப்பில் இது வரை 13 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள், அதில் 3 பேர் பொது மக்கள், மீதம் ராணுவ வீரர்கள்.

இந்த மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது புரியவில்லை, ஆனால் உலக உயிர்களின் மதிப்பு இடத்துக்கு இடம் எப்படி மாறுபடுகிறது என்பது ஒரு கொடுமையான புதிர். மனித உயிர்களின் மதிப்பு கிட்டதட்ட பணத்தின் மதிப்பு போல ஆகிவிட்டது, இதில் எது சரி என்று தெரியவில்லை,

சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடியப்போகிறது, பல வலைப்பூக்கள், நிறைய செய்திகளை கொடுத்திருக்கிறார்கள், இந்த முறை எனது அபிமான எழுத்தாளர் சாரு நிவேதாவின் புத்தகங்கள் முன்பை விட அதிகம் விற்பனையாவதாக சொல்கிறார்கள், உண்மை தெரியவில்லை, மனித மனம் புத்தகங்களை நாடுதல் மிகவும் பாராட்ட வேண்டிய விஷ்யம், பல எழுத்தாளர்கள் புத்தக விற்பனை நிலையத்தில் இருந்து வாசகர்களை சந்தித்து இருக்கிறார்கள், எஸ்.ராமகிருஷ்ணன், தன் தளத்தில் புத்தக விழா பற்றி எழுதியுள்ளார், கிழக்கு பதிப்பகமும், உயிர்மை பதிப்பகமும் நிறைய புத்தகங்களை வெளியிட்டுள்ளன, அவையாவும் இன்றைய பிரபலமான எழுத்தாளர்களின் உருவாக்கம், இந்த வலைப்பூக்கள் வந்த பின் நிறைய பேருக்கு எழுத்தாளர்கள் அறிமுகமாக தொடங்கி இருக்கிறார்கள்.

புத்தகங்களை படிக்க படிக்க உங்களுக்குள் ஒரு மாறுதல் நிச்சயம் வரும், சிறு வயதில் வெறும் இதிகாசங்களைப் படித்து படித்து ஒருவகையான சமுதாய அமைப்பியலில் இருந்து வெளியிலேயே இலக்கியங்களை வைத்துவிட்டோம், அதுவும் அவைகளை புனிதம் சார்ந்து கற்பிக்கவும் தொடங்கி அது வாழ்வுக்கு சம்பந்தமில்லாத போற்றுதலுக்கு உரிய ஒரு இலக்கியமாக இருந்து விட்டது,

ஆனால் இன்றய இலக்கியங்கள் நிறைய இயல்பு வாழ்வில் பின்னனியில் எழுதப்பட்டதால் அவைகளை படிக்கும்போது நாமும் அவர்களாக வாழ முயலவேண்டிய கட்டாயத்துக்குள் அழைத்துச்செல்வதை உணரமுடிகிறது அதனால் அதன் தன்மைகள் நமக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும், சாருவின் எழுத்துக்கள் மிகவும் இயல்பாக நம் தினசரி வாழ்வியல் பிரச்சினைகளை நகைச்சுவை ததும்ப சொல்வதை பார்க்கலாம். அதுபோல் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளும் மிகவும் சுகமாக நம்முள் பிரவேசிப்பதை உணரமுடியும். இப்படி பல எழுத்தாளர்களின் வெளியீடுகள் இன்று கண்காட்சிகளில் குவிந்து கிடக்கின்றன,

பொங்கலும் திருமங்கலம் இடைத்தேர்தலும் முடிந்து விட்டன, பொங்கல் பழய மகிழ்ச்சியுடன் இருந்திருக்குமா தெரியவில்லை, எனக்கு கிடைத்த சிறு வயது மகிழ்ச்சி இன்று என் குழந்தை என்னால் கொடுக்க முடியவில்லை, இதை எல்லா பெற்றோரும் உணர்வார்களா தெரியவில்லை, எங்கள் வீட்டில் நான் சிறுவனாக இருந்த காலங்களில் பொங்கல், தீபாவளி என்பதெல்லாம் 30, 40 பேர் கொண்ட பெரிய விழாக்கள், எல்லா குழந்தைகளும் ஒன்றாக பொங்கல் பொங்கி, அதுவும் பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் சொல்ல எல்லா குழந்தைகளையும் முன்பே அழைப்பார்கள், நாங்கள் எல்லாம் அங்கே சென்று சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருப்போம் பானை பொங்கும் போது ஒரே கோரஸாய் பொங்கலோ பொங்கல் என்று கத்துவது என்று மிக சுகமாக இருக்கும்.

எனது முந்தைய பதிவில் கூறியுள்ளது போல காலை பொங்கல் பானை கோலம் போடுவதில் இருந்தே பொங்கல் சுகம் தொடங்கிவிடும், அப்படிப்பட்ட பொங்கல் இப்போது இல்லை, மறுநாள் மாட்டுப்பொங்கல்தான் குழந்தைகளுக்கு பிடித்த பொங்கலாய் இருக்கும் ஏனனில் அன்றுதான் தாளங்களும் மாடுவிரட்டுகளும் வண்டி சவாரிகளும் இருக்கும் அதைப்பற்றி இன்னுமோர் பதிவில் விவரமாக எழுத வேண்டும்,

மூன்றாம் நாள் காணும் பொங்கல், அதை கன்னிப்பொங்கல் என்றுதான் சொல்லுவோம், பிற்பாடு அது காணும் பொங்கல் என்று மாறி அழைக்கிறோம், எது சரி என்பது தெரியவில்லை, அதில் சிறுவர்கள் தனியாக வைக்கும் கூட்டாஞ்சோறு விழா இருக்கும் அது மிக உற்சாகமாய் இருக்கும், அதெற்கென ஒரு திடல் இருக்கும் அதெல்லாம் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை, இதன் எல்லா விவரங்களும் வேறோரு பதில் விரமாக எழுதுகிறேன்.

இந்த சந்தோஷத்தில் சிறு அளவு கூட எனது குழந்தைகளுக்கு இப்போது கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது, கேஸ் அடுப்பில் வைக்கும் பொங்கல்தான் இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு தெரியும் என்பது மிகவும் கவலையான விஷயம்.

நேற்று நான் பணிபுரியும் இடத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு மற்றொரு பணி இடத்திற்கு சென்றேன், அரபு நாடுகளில் பெரும்பாலும் கிராமங்களை காண்பது அபூர்வம் காரணம் நம்மை போன்ற வெளிநாட்டினர் எல்லாம் வாழ்வது நகரங்களை சார்ந்த பணிகளில்தான் என்பதால், ஆனால் செளதி அரபியா மிக பரந்த நாடாய் இருப்பதால் நிறைய கிராமங்கள் நிறைந்த நாடாகவும் இருக்கிறது.

புகழ் பெற்ற புனித நகரான மதினா விற்கு செல்லும் சாலை வழியாக சென்றோம், வழி நெடுக நல்ல மலைபாங்கான சாலை மலைகளுக்கு இடையேதான் சாலை செல்கிறது, மிக அழகாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் அதன் வழியே செல்லும் போது ஒரு பாலைவன நாட்டில் இருக்கிற உணர்வில்லை, ஆனால் மலைகள் எல்லாம் வறட்சியாகத்தான் இருந்தன, மலைகளை குடைந்துதான் சாலை வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள், இடையிடையே பள்ளதாக்குதல் போல சில பகுதிகள் அதில் வீடுகளும் மசூதிகளும் காணப்படுகின்றன, மழையோ வெள்ளமோ அதிகம் வராத பகுதிகள் என்பதால் மேடு பள்ளம் என்பதெல்லாம் இல்லாமல் பிடித்த இடங்களில் வீடுகட்டி அங்கே ஒரு கிராமம் உருவாகி இருக்கும் என்பது போல் தெரிகிறது. அரபு காலாச்சாரங்களில் ஆரம்ப காலம் என்பதால் நிறைய அற்புதமான கதைகளும் வரலாறுகளும் நிறைந்த பகுதிகளாக இருக்கலாம், அவைகளை சொல்லக்கூடிய புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தால் அதைப்பற்றி எழுதுகிறேன், இடை இடையே சில ஒற்றை வீடுகளும் காணப்படுகின்றன, பெரும்பாலான கிராம வீடுகள் நல்லமுறையில் இல்லை, வெளிப்புரத்தில் பூச்சுக்கள் இல்லாமல் சற்று சிதிலாமன நிலையிலேயே காணப்படுகின்றன, ஆனால் எல்லா வீடுகளிலும் ஒரு ஜன்னல் குளிர்சாதனம் (window AC) அரத பழசாக இயங்கிகொண்டிருக்கிறது, மின்சாரம் விநியோகம் பெரிய தடையில்லாமல் கிடைக்கிறது. என்பதால், மிக மோசமான நிலையில் உள்ள பின்புறம் திறந்த காரில் காய்கறிகளும் மற்றும் சில பொருட்களும் வைத்துக்கொண்டு ஊர் கூடும் கடைத்தெரு போன்ற இடத்தில் மிகவும் ஏழ்மையான அரபிகள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்,

நம்மூரில் கூறு கட்டி விற்கும் பாட்டிகளையும் தாத்தாக்களையும் பார்த்திருபீர்கள், அதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள், பெரும்பாலும் ஏழைகள் அவர்களின் உடைகள் பெரிதும் எளிமையாகவே இருக்கின்றன, ஆனால் எல்லா விதமான அமைப்புகளும் உள்ளன ஒரு தபால் நிலையம், ஒரு காவல் நிலையம், தீயனைப்பு நிலையம், கடைகள் சிறு சிறு உணவகங்கள், மசூதிகள், பள்ளிகள், பெட்ரோல் நிலையம் ஆனால் எல்லாமே மிக பழயவை ஒரு எளிமையை தனக்குள் புகுத்திக்கொண்டு நம்மோடு இயல்பாய் இருப்பது மாதிரி இருக்கின்றன.

அந்த கிராமத்தின் கடைதெருவில் சிறுது நேரம் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சுற்றிப்பார்த்தேன், அதன் எளிமையும் பழமையும் என்னை ஒருவாறு புதிய உலகுக்கு கொண்டு வந்ததுபோல் இருந்தது,

அரபு நாட்டினர் எல்லாம் பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல தினசரி நன்கு உழைத்து வாழும் எளிமையான மனிதர்களும் நிறைந்து இருப்பது அறிந்து கொள்ளமுடிந்தது.

தவநெறிச்செல்வம்

எனது நண்பர் ஜீவாவின் சுற்றுலா

அபுதாபி

எனது நண்பர் ஜீவாவின் சுற்றுலா அனுபவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனுபவம் அரபு நாட்டின் சூழலை விளக்குவதாகவும், அங்கே பணிபுரியும் நம்மவர்களின் வாழ்க்கை பதிவாகவும் இருக்கும், அவர் தனது புதிய பரிமாணமாக எழுத்துலகுக்கு வருகிறார், பிற்காலத்தில் நல்ல நகைச்சுவை எழுத்தாளராக வரக்கூடிய திறமை உள்ளவர் என்பது என் நம்பிக்கை.

இனி அவரின் கைவண்ணம் காணுங்கள்.

நாள் - திங்கள் கிழமை- 07/12/08
இடம் -அபுதாபி -அமீரகத்தின் -அலைன்-( Al Ain ) ஜபல் அல் ஹபிட் –( Jabal Al Hafeet ) மற்றும் துபாய் - ஜுமைரா கடற்கரை.
பங்கேற்பாளர்கள்
சரவணன் - சிற்றுலா தலைவர்
குமார், ஜீவா, மகாலிங்கம்,முனுசாமி, ஷண்முகம், ரமேஷ், ராஜாங்கம், சின்ன சரவணன், சுரேஷ், ரூபன், ஜெயகுமார், மற்றும் கண்ணன் நாங்கள் மொத்தம் பதிமூன்று பேர்கள்.

திங்கள் கிழமை காலை சரியாக எட்டு மணிக்கு வண்டி புறப்பட்டது, அந்த நேரத்தில் குமாரையும் , மற்றும் சில நண்பர்களை காணவில்லை, குமார் எங்கே என்று கேட்டபொழுது, கை நிறைய கூடை கேக், இனிப்பு கேக், மற்றும் பழச்சாறு குப்பி வாங்கிகொண்டு மாடர்ன் பேகரியில் இருந்து மிகவேகமாக ஓடி வந்து வண்டியில் ஏறினார்கள். வண்டி புறப்பட்டது , மெதுவாக நகர்ந்தது, வண்டியின் ஓட்டுனர் மிகவும் குள்ளமானவர், அவரின் குரல் மிகவும் கீச்சி, கீச்சி என்று இருக்கும் , அவர்தான் எங்கள் மகிழ்ச்சிக்கு காரணமானவர். அவர்மட்டும் இல்லை என்றால் சிரிப்புக்கு வழி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது வண்டி எலக்ட்ரா ரோட்டை வந்து அடைந்தது, அங்கே ராஜாங்கம் என்னும் நண்பருக்காக வண்டி காத்துகொண்டிருந்தது. காத்து கொண்டிருந்த எலக்ட்ரா சாலையில் பிலிப்பைன் நாட்டு பெண்ணும், ஒரு தமிழ் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள், அதை சுரேஷ் என்பவர் வண்டியில் இருந்தபடி மிகவும் ரசித்துகொண்டிருந்தார், (சுரேஷ் மட்டும் அல்ல எல்லோரும்தான்) ராஜாங்கத்திற்காக காத்து இருந்த நேரத்தில், பூத்து இருந்த நடமாடும் பூவை பார்த்து நேரம் போனது.
ராஜாங்கம் ருவைஸ் எனும் ஊரிலிருந்து வந்துகொண்டிருந்ததாக சொன்னார்கள். இதில் பெரிய கூத்து என்னவென்றல் ராஜாங்கத்திற்கு, எலக்ட்ரா ரோட்டில் உள்ள எலக்ட்ரா சினிமா மட்டும்தான் தெரியுமாம். அவருக்கு அபுதாபியில் வேறு எந்த இடமும் தெரியாது என்று நினைக்கிறேன் அதனால் மிகவும் தாமதமானது.. சற்று நேரத்தில் அவரும் வந்து சேர்ந்தார். வண்டி எலக்ட்ரா சாலையை விட்டு புறப்பட்டது. அங்கிருந்து வண்டி கார்னிச் சாலை வழியாக அலைன் நோக்கி போய்க்கொண்டிருந்தது,
வண்டி போய்க்கொண்டிருந்த சமயத்தில், எல்லோருக்கும் தமிழ் பாட்டு கேட்கவேண்டும் என்ற ஆவல். அதனால் குமார் கைபேசியில் உள்ள ஞாபக அட்டையை எடுத்து ஓட்டுனரிடம் கொடுத்தோம். அவர் அதை வாங்கி யு எஸ் பி ரீடரில் இட்டு பாட்டை பாட செய்தார். முதல் பாட்டு தலைவர் பாட்டு, பல்லே லக்கா பாட்டு, அதை கேட்டபடி வண்டி சென்றுகொண்டிருந்தது . ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து இருந்த சுற்றுலா தலைவர் சரவணன் பாட்டை கேட்டபடி, தலை அசத்து ஆட்டம் போட்டார். நானும் ஆட்டம் போட்டேன். வண்டி உம் அல் நாரை கடந்து சென்றவுடன். சில நண்பர்களுக்கு உறக்கம் வர தொடங்கிவிட்டது. பிறகு பநியாசை வண்டி நெருங்கியவுடன் எல்லோரும் உறங்கிவிட்டார்கள்.
வண்டி போய்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்த்த போது சாலையின் இருபுறமும் மணல் குவியல்கள், மண் குவியலின் மேல் காற்றின் கைவண்ண ஓவியம். அவற்றில் ஓன்று பெண்கள் அணியும் நெளி வளையல்கள் போன்ற ஓவியம். அள்ளி உண்ண முடியாத கோதுமை குவியல் இன்னும் எத்தனை அழகு வர்ணிக்க நேரம் போதவில்லை.
இப்பொழுது வண்டி அலைன் வந்து சேர்த்துவிட்டது, ஆனால் மலைமேல் போக வழி தெரியவில்லை, அந்த இடத்தின் பெயருன் ஓட்டுனருக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் ஓட்டுனர் ஒரு பாகிஸ்தான் வழி போக்கனிடம் ஜபல் அல் பாயிதா கிதரே.? என்று கேட்டார், ஆனால் அவனுக்கு வழி தெரியவில்லை. மாலும் நஹி என்று சொல்லிவிட்டான். அடுத்து ஒரு அரபி பையனிடம் ஜபல் அல் பாயிதா ஒயின்? , என்று கேட்டார், அதற்கு அவன் சூ பி பாயிதா ? மாபி மாலும் என்று சொல்லிவிட்டான். பிறகு ஒரு வழியாக மலை பக்கத்தில் வண்டியை நிறுத்தி எல்லோரும் சிறுநீர் கழிக்க சென்றுவிடோம், அந்த நேரத்தில் ஓட்டுனர் , ஒரு மலையாள ஆளிடம் மலைக்கு மோல எங்கனே போவனும்.? என்று கேட்டு, வழி தெரிந்து கொண்டார். சிறுநீர் கழித்து விட்டு எல்லோரும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். வண்டி புறப்பட்டு சென்று மலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அருகில் நின்றது. எல்லோரும் ஏரியின் அழகை ரசித்தோம், இந்த ஏரியின் நடுவில் ஒரு நீரை பாய்ச்சு அடிக்கும் ஊற்று உள்ளது. அதைவிட ஏரியின் உள்ளே, எத்தனை மீன்கள், அவை நாம் கொடுக்கும் உணவை உண்டு வாழ்கிறது. நாம் உணவை நீரில் போடும் போழ்து அதை மீன் லாவி பிடிக்கும் அழகே அழகு. மீன்கள் ஒன்றோடு ஓன்று போட்டி போட்டுகொண்டு நாம் போடும் உணவு பண்டங்களை மேலே தாவி பிடிக்கும் அழகே தனித்தன்மை வாய்ந்தது. அங்கே எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம். நாங்கள் புகைப்படம் எடுக்கும் சமயத்தில் ஸ்பீடு சண்முகம் வெகு தூரம் நடந்து சென்றுவிட்டார். அவர் எப்பொழுதும் வேகம்தான், . முனுசாமி என்னிடம் சொன்னார், சண்முகம் பைத்தியம் மாதிரி எங்க போறான்? கூப்பிடுங்கள் அவனை.என்றார் பிறகு நாங்கள் சண்முகத்தை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டோம். பிறகு நாங்கள் எல்லோரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஒன்றாக சேர்ந்து நின்று ஏரிக்கு அருகில் புகைப்படம் எடுத்துகொண்டோம், அதன் பிறகு நாங்கள் மலை மேல போக தயாரானோம், அப்பொழுது ஓட்டுனர் சொன்னார் மலை மேல போனால் நான் வேறு எங்கும் வரமாட்டேன் என்று தர்க்கம் செய்தார், அவரை நாங்கள் தாஜா செய்து பிறகு ஒற்றுகொண்டர், ( சந்தோசத்தை மட்டும் இலக்காகக்கொண்டு சிற்றுலா போன நாங்கள், ஓட்டுனரிடம் ஏற்ப்பட்ட சில வழுக்குகளை நான் சொல்ல விருப்பவில்லை) , வண்டி புறப்பட தயார் ஆனது, எல்லோரும் ஏறியாச்சா என்று ஒருமுறை சரி பார்த்துவிட்டு, வண்டி புறப்பட்டு மலையின் அடிவாரத்தில் ஒருவட்டம் அடித்தது, அப்பொழுது அங்கே தற்காலியமாக அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்களில் அரபி நாட்டவர்களும் , மற்றும் பிலிப்பைன் நாட்டு மக்களும். தங்கி தங்களின் சந்தோஷத்தில் பாடிக்கொண்டும்,ஆடிகொன்டும் இருந்தார்கள், அப்பொழுது அங்குஉள்ள ஒரு கூடாரம் காற்றில் ஆடிகொண்டிருந்தது, அதை பார்த்து விட்டு ஒரு நண்பர் சொன்னார், அங்கே பாருங்கள் கூடாரத்தின் உள்ள கூதுகலம் நடக்கிறது என்றார் அதற்க்கு வேறு ஒருவர் சொன்னார், நீ வேறப்பா அது காற்றில் ஆடுகிறது என்றார் அதை கேட்ட நாங்கள் எல்லோரும் சிரித்துவிடோம், பிறகு அங்கிருந்து வண்டி மலை மேல ஏற தொடங்கியது. கைத்தொலைபேசி ஒலித்தது, கைதொலைபேசியை எடுத்த உடனே சொன்னார், என்னும் கொஞ்சநேரத்தில் நாங்கள மேலே போய்விடுவோம் என்றார், அதற்க்கு நான் சொன்னேன் யோ என்னையா சொல்றே.? பயமுருத்தாதையா பயமாஇருக்கு, மலை மேலபோய்விடுவோம் என்று சொல்லு என்றவுடனே எல்லோரும் சிரித்துவிட்டோம். (நீங்கேள சொல்லுங்கள் இன்னும் சொஞ்சநேரத்தில் மேலே போய்விடுவோம் என்றால் யாருக்குத்தான் பயம் வராது.) அந்த சிரிப்பு ஒலி முடிந்தவுடேனே, நாங்கள் பார்த்த காட்சி மிகவும் அருமையாக இருந்தது அது வேறு வொன்றும் இல்லை. அந்த மலை மேல கட்டப்பட்டு இருந்த ஒரு கட்டிடம் மிகவும் அருமையாக இருந்தது, மலையின் விளிம்பில் கட்டப்பட்டு இருந்தது அது பயணிகள் தங்கும் வசதிக்காக அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம். கட்டிடம் மட்டும் அல்ல, மலைபுரத்தின் இருபுறமும் கிழே நோக்கினால் அருமையா காட்சிகளை நாம் காணமுடியும். வண்டி மலை உட்சியை வந்து அடைந்துவிட்டது. எலோரும் இறங்கினோம், இறங்கியவுடேனே நாங்கள் பார்த்த முதல் காட்சி பாட்டும்,ஆட்டமும்தான், ஸ்ரீலங்கா நாட்டு பெண்ணுடன் பாகிஸ்தானி பட்டான் சேர்ந்து ஆடிய ஆடம் மிகவும் அருமை, அங்கே வந்து இருந்தவர்களின் கூட்டம் அவர்களைத்தான் பார்த்து கொண்டிருந்தது. மலைமேல மிகவும் குளிராக இருந்தது. எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம்., அங்கே பாதுகாப்பு தடுப்பு வேலியை தாண்டி சென்று எல்லோரும் வேடிக்கை பார்த்தோம் மிகவும் பயங்கரமான பள்ளத்தாக்கு. அது மிகவும் ஆபத்தானது. அந்த மலையை பற்றி சொல்லவேண்டும் என்றால் அங்கே ஒன்றும் இல்லை ஒரே ஒரு ஓட்டல் மட்டும்தான் இருக்கிறது. வேறு வொன்றும் இல்லை. அதுவும் மிகவும் சிறிய ஓட்டல். அங்கே காலை பனிமூட்டம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் மிதமாக இருந்தது. எல்லோரும் அங்கு சுற்றி பார்த்தவுடன், பிறகு புறப்பட்டு கீழே இறங்கிவந்துவிட்டோம். எங்களின் அடுத்த சுற்றுலா தளம் துபாய் ஜுமைரா கடற்கரை, வண்டி பறந்து சென்றது துபாயை நோக்கி, வண்டி போகும் நேரத்தில் எல்லோரும் தூங்கிவிடோம், இடையில் ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்க எல்லோரும் இறங்கினோம். அது ஒரு பெட்ரோல் வழங்கும் இடம், அதில் உள்ள கழிபிடத்தில் , எல்லோரும் சிறுநீர் கழத்து விட்டு, ஒரு பத்து நிமிடம் ஓய்வு எடுத்துகொண்டோம். பிறகு எல்லோரும் வண்டியில் அமர்ந்துகொண்டோம். வண்டி மிகவும் வேகமாக துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த. மீண்டும் எல்லோருக்கும் பசி மயக்க உறக்கம் வந்துவிட்டது. எல்லோரும் விழித்து பார்த்தால் மணி மூன்று ஆகிவிட்டது , உண்ண உணவகம் , தேடி தேடி , மணி மூனரை ஆகிவிடாது இறுதியில் துபாய் ஜுமைரா கடற்கரை பக்கத்தில் உள்ள ஒரு கே பி சி உணவகத்தில், என்னை தவிர எல்லோறோம் சிக்கன் சாப்பிட்டார்கள். பிறகு நாங்கள் கடற்கரை சென்றோம், அங்கே உள்ளாடைகளோடு அலையும் உலக அழகிகளை கண்டோம். நான் அந்த நேரத்தில் முனுசாமியை அழைத்துக்கொண்டுபோய் ஒரு ஆப்பிள் ஒரு பழச்சாறு குப்பி வாங்கி என் பசியை ஆற்றிகொண்டேன். பிறகு அங்கிருந்து ஜுமைரா கடற்கரை ஓட்டலுக்கு வந்தோம், அங்கு வந்தால், மேலை நாட்டு மெழுகு சிலைகள் அங்கும் எங்கும் அலைந்து திரிந்தன, அந்த மெழுகு சிலையை பார்த்து சில பேர் உருகிவிட்டார்கள்..( தவறாக நினைக்கவேண்டாம்) மெழுகு சிலைகள் குளிர்ந்த நேரம் என்பதால் உருகவில்லை. அயல் நாட்டு அழகிகளும் அங்கும் எங்கும் அலைந்து திரிந்தன. ஒயில்டு-(Wild Wadi) வாடி எங்களை வாடி வாடி என்று அழைத்தாலும் நாங்கள் போடி போடி சொலிவிட்டு வந்து விட்டோம். அங்கும் புகைபடம் எடுத்துகொண்டோம்.

எல்லோரும் பிறகு வண்டியில் ஏறும் முன்பு , குமாரும் , சண்முகமும் துபையில் குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறையில் இருந்துகொண்டு சொல்லியிருக்கிறார்கள், நாம் இங்கு வந்தால் அவர்களும் வருவார்கள் பார் என்று அவர்கள் இருவரும் சொன்னதுபோல் , நாங்களும் வாங்க நாமும் அங்கு சென்று, உள்ளே பார்த்து வருவோம் என்றும் உள்ளே எல்லோரும் நுழைந்ததும், அப்பொழுது குமார் சொல்லி சிரித்தார், நாம வந்தா அவர்களும் வருவார்கள் பார் சொன்னது சரியாகதான் ஆகிவிட்டது என்று சொல்லி சிரித்தார்கள், அங்கிருந்து எமிரட்ஸ் மாளிகை சென்று பார்க்கவேண்டும் , என்று சொன்ன உடனேயே ஓட்டுனருக்கு கோபம் வந்துவிட்டது, பிறகு ஒருவழியாக அவரிடம் Nokia கைத்தொலைபேசி வாங்கவேண்டும் என்று பொய்சொல்லிவிட்டு அவரை நிற்பந்தபடுத்தி அழைத்து சென்றோம். பிறகு எல்லோரும் எமிரட்ஸ் மாளிகை வந்து அடைந்தோம். அங்கு சுற்றி பார்த்துவிட்டு , மீண்டும் வண்டிக்கு வரும் பொழுது ஓட்டுனர் கேட்டார் எங்கே மொபைல் என்று எல்லோர்க்கும் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு எட்டரை மணிக்கு அபுதாபிக்கு வந்து அடைந்தோம் , சங்கீதாவில் மினி தாலி சாபிட்டோம், அத்துடன் எங்களது சிற்றுலா , துடங்கிய இடத்திலே நிறைவு பெற்றது.

இந்த சுற்றுலா மூலம் தங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்த சுற்றுலா நம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவங்கள், அந்த அனுபவத்தை நினைவு படுத்துவது நான் எடுத்து கொண்ட புகைப்படம், தயவு செய்து புகைபடத்தை தொலைதுவிடாதிர்கள், தங்களுக்கு அறுபது வயது ஆகும் பொழுது இந்த புகைபடத்தை எடுத்து பாருங்கள். அந்த புகைப்படம் கதை சொல்லும், அந்த நிமிடம் நம் மனதை மகிழுட்டும். நன்றி நண்பர்களே, எல்லோரும் இன்பமுடன் இருக்க ,எனது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
ச.ஜீவா.

.

Jan 7, 2009

தேசபக்தி என்றால் என்ன. படித்து பாருங்கள்

சமீபத்தில் குமுதம் தீரா நதி இதழில் திரு அ. மார்க்ஸ் அவர்கள் எழுதிய மானுடத்தை நேசிப்பவர்கள் ஏன் தேசபக்தியை வெறுத்தார்கள் என்ற தொடரினைப் படிக்க நேர்ந்தது.

அதனை என் நண்பர்களும் அறியவேண்டி தருகிறேன்
கடந்துபோன ஒரு காலகட்டத்தின் கொடூரமான ஒரு பாரம்பரியமாகவே இன்று தேசபக்தி இருந்து வருகிறது. வெறும் எச்ச சொச்சமாக மட்டும் அது இருந்துவிடவில்லை. மாறாக தங்கள் அதிகாரத்தின் மூலமாக மட்டுமே அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் கோலோச்சிவிட இயலாது என்பதை உணர்ந்து வைத்திருப்பதால், அவை தமது இருப்பிற்கு தேசபக்தியையே நம்பியுள்ளன. எனவே தந்திரமாகவும், வன்முறையின் மூலமாகவும் மக்கள் மத்தியில் அவை தேசபக்தியைத் தூண்டிவிடுகின்றன. அது அணைந்துவிடாமல் காப்பாற்றுகின்றன. அதன்மூலம் தம் அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.எந்த அரசாங்கமும் அதன் மக்களை அமைதியில் வாழவிடாது. ஏனெனில் அதன் இருப்பின் நியாயப்பாட்டிற்கான தலையாய காரணமாக விளங்குவது தேசங்களிடையே சமாதானத்தை நிலைநாட்டுகிற பணியை அது செய்கிறது என்கிற ஒரு பிம்பத்தை அது கட்டமைத்து வைத்திருப்பதால்தான். தேசபக்தியைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தப் பகை உணர்வைக் கட்டமைப்பதே இந்த அரசாங்கங்கள்தான். மக்களைப் பாதுகாக்கும் தம் திறனை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தேசங்களிடையே பகை அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்தப் பகையை உருவாக்க தேசபக்தியின் துணையும் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. வித்தை காட்டும் ஒரு நாடோடி, குதிரையின் வாலுக்கடியில் கொஞ்சம் மிளகாய்ப் பொடியை வைத்து அதைச் சீண்டிப் பின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப் போராடிதான் கட்டுப்படுத்திவிட்டதாகக் காட்டுகிறானல்லவா அப்படித்தான் இதுவும்...அடுத்த நாடு உங்களை ஆக்ரமிக்கக் காத்திருக்கிறது. நீங்கள் ஆபத்திலிருக்கிறீர்கள் என அரசு மக்களை நம்ப வைக்கிறது. அல்லது உள்நாட்டிலுள்ள சில துரோகிகளினால் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்கிறது என அது சொல்லுகிறது. எனவே இந்த ஆபத்துக்களிலிருந்து நீங்கள் தப்பவேண்டுமானால் அரசுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமென, அது மக்களை நம்ப வைக்கிறது. மக்களின் எதிர்ப்புகளின்போதும், (கொடும்) சர்வாதிகாரத்தை அது நிலைநாட்டுகிறபோதும் இவ்வாறு அது தேசபக்தியை அதிகம் வற்புறுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அரசதிகாரம் செயல்படுகிற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு அரசும் அதன் இருப்பை விளக்கியாக வேண்டும். வன்முறையை நியாயப்படுத்தியாகவேண்டும். தான் இப்படி இல்லாவிட்டால் இன்னும் நிலைமை மோசமாகவிருக்கும் என்பதே அதன் தர்க்கம். மக்களுக்கு இந்த `ஆபத்து' குறித்து அது எச்சரித்தபின், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீதான கட்டுப்பாட்டை அது நிலைநிறுத்துகிறது. இந்நிலையில், அது இன்னொரு நாட்டைத் தாக்குகிற கட்டாயத்திற்குள்ளாகிறது. இவ்வாறு மற்ற நாட்டின் தாக்குதல் குறித்த அதன் எச்சரிக்கை எத்தனை `உண்மையானது' என்பது கண்முன் நிறுத்தப்பட்டு விடுகிறது...ஆட்சியாளர்கள் தங்களின் பேராசைகளையும், பெருந் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், ஆளப்படுபவர்கள் தமது மனித கண்ணியம், பகுத்தறிவு, மனச்சாட்சி எல்லாவற்றையும் இழந்து அதிகாரத்திற்கு அடிமையாவதற்கும் இன்னொரு எளிய, தெளிவான, குழப்பமற்ற பெயர்தான் தேசபக்தி...தேசபக்தி என்பது அடிமைத்தனம்...தேசபக்த உணர்வு என்பது இயற்கையானதல்ல, அது அறிவுக்குப் புறம்பானது, ஆபத்தான உணர்வு என நான் பலமுறை கூறியுள்ளேன். மனிதகுலம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் துயர்களுக்கெல்லாம் பெரும்பான்மையான காரணமாக அதுவே உள்ளது.இந்த உணர்வு துளிர்விடுவதற்கு நாம் அனுமதிக்கவே கூடாது. மாறாக மனித அறிவிற்குச் சாத்தியமான எல்லாக் காரணிகளையும் பயன்படுத்தி அது அழித்தொழிக்கப்பட வேண்டும். உலகளவில் நடைபெறும் ஆயுதக் குவிப்புகள், பேரழிவுக்குக் காரணமான போர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த தேசபக்தி உணர்வுதான். பிற்போக்குத்தனமான, காலத்திற்கொவ்வாத, ஆபத்தான இந்தத் தேசபக்தி குறித்த என் கருத்துக்கள் அனைத்தும் இதுவரையில், இன்று வரையில் (கள்ள) மௌனத்தின் மூலமாகவோ, உள்நோக்கத்துடன் திரித்துக் கூறியோதான் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அல்லது சம்பந்தமில்லாமல் `கெட்ட தேசபக்தி' (அதாவது தேசவெறி)தான் மோசம், நல்ல தேசபக்தி ரொம்பவும் உயர்ந்தது, அறம் சார்ந்த உணர்வு என்கிற ரீதியிலேயே பதிலளிக்கப்பட்டுள்ளன.இந்த உண்மையான, நல்ல தேசபக்தி என்றால் என்ன என்று இதுவரை நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அது வெறும் அலங்கார வார்த்தைகளாகவும், அர்த்தமற்ற உரைவீச்சுக்களாகவுமே இருந்துள்ளன. இறுதியில் தேசபக்திக்குச் சம்மந்தமில்லாத வேறு எதையாவது சொல்லி முடிப்பார்கள்.தனது சொந்த மக்களின்மீது மட்டுமேயான அன்பு; ஒருவர் தன் அமைதியான வாழ்வை, சொத்துக்களை, ஏன் உயிர் வாழ்க்கையையே, எதிரிகளிடமிருந்து தம் மக்களைக் காப்பாற்றுவதற்குத் தியாகம் செய்யும் பண்பு - இதுதான் தேசபக்தி என்கிற கருத்து ஒவ்வொரு நாளும் தனது நலனுக்காக மற்றவர்களைக் கொன்று குவித்து மானபங்கப்படுத்துவதை நீதியாகவும், (ஒரே) சாத்தியமாகவும் கருதிய ஒரு காலத்திற்குரியது.ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே மானுடத்தின் உயர் அறிவின் வித்தாகத் தோன்றியவர்கள், `மானுடர்க்கிடையேயான சகோதரத்துவம்' என்கிற உன்னதக் கருத்தாக்கத்தை உணரத் தொடங்கினர். இந்த உன்னதக் கருத்து மனிதப் பிரக்ஞையினூடாகப் பயணித்து வந்து நம்முடைய சகாப்தத்தில் பல்வேறு வடிவங்களில் கையகப்படத் தொடங்கியுள்ளது. தொடர்புச் சாதனங்களில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, தொழில், வணிகம், கலை, அறிவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்கள் ஆகியவற்றின் விளைவாக இன்று மனிதர்கள் மேலும் நெருக்கமாகப் பிணைந்துள்ளார்கள். அடுத்த நாட்டு மக்கள் மீதான ஆக்ரமிப்பு, படுகொலைகள், வன்முறைகள் எல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டன. எனவே எல்லா மக்களும் (மக்கள்தான், அரசாங்கங்கள் அல்ல) அமைதியாகவும், பரஸ்பர பயனளிப்பவர்களாகவும், வணிகம், தொழில், கலை, அறிவியல் எல்லா அம்சங்களிலும் உறவுகளைப் பேணுபவர்களாகவும், எக்காரணம் கொண்டும் இவ்வுறவுகளை அழிக்க விரும்பாதவர்களாகவும் ஆகியுள்ளனர். எனவே காலாவதியாகிவிட்ட தேசபக்தி இன்று தேவையற்றதாகி விட்டது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனிதர்களுக்கிடையேயான சகோதரத்துவம் என்கிற உயர் நிலையை நாம் எட்டிவிட்டதால் இந்த தேசபக்தி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இறுதியில் முற்றாக அழிந்துவிடும் என ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால், இதற்கு நேரெதிராகத்தான் இன்றைய நிகழ்வுகள் உள்ளன. காலத்திற்கொவ்வாத இந்தத் தீய உணர்வு தொடர்ந்து இருந்துகொண்டிருப்பது மட்டுமின்றி மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது.இந்த இடத்தில் ஒரு சிறிய இடைவெளி. இதுவரை நீங்கள் வாசித்தது எதுவும் என்னுடைய எழுத்தல்ல. மனிதகுலம் கண்ட மகத்தான படைப்பாளிகளில் ஆகச் சிறந்தவரான லியோ டால்ஸ்டாய் `தேசபக்தி'யைக் கண்டித்து எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சில கூற்றுக்களை மட்டுமே இங்கு நான் மொழியாக்கித் தந்துள்ளேன். இந்த முழுக்கட்டுரையையும் மொழியாக்குவது என் நீண்டநாள் ஆசைகளில் ஒன்று.டால்ஸ்டாய் ஒரு புனைவு எழுத்தாளர். ஆராய்ச்சியாளரோ, தத்துவ ஞானியோ அல்லர். ஆனால் எண்ணற்ற சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகட்கு ஊற்றுக் கண்ணாக அவரது இந்தச் சிந்தனைகள் அமைந்துள்ளன. குறிப்பாக சிலரை நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். புகழ்பெற்ற சமூகவியல் அறிஞரான மாக்ஸ் வெலர், வால்டர் பெஞ்சமின், ஜியார்ஜியோ அகம்பன், ழாக் தெரிதா... தேசியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்முறை,. ஒரு சமூக அமைப்பு குறித்துச் சிந்தித்த ழீன் லுக் நான்சி (The Inoperative community, 1983) மாரிஸ் பிளாங்காட் (The unavowable Community, 1983), பெனடிக்ட் ஆன்டர்சன் (The Imagined community, 1983) ஜியார்ஜியோ அகம்பன் (The comming community, 1993) முதலிய நவீன சிந்தனையாளர்கள் பலரும் டால்ஸ்டாயின் சிந்தனைகளால் தூண்டப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவற்றோடு தெரிதாவின் இறுதி நூற்களில் ஒன்றான Polity of friendshipஐயும் கூடச் சேர்த்துக்கொள்ளலாம். இன்னொருவரை விட்டுவிட்டேன். அவர்தான் ஹன்னா ஆரன்ட் (The origin of Totalitarianism).அது சரி இத்தகைய தத்துவச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒரு புனைவு எழுத்தாளனால் தூண்டப்பட்டது எங்ஙனம்? உலகத் தரத்திலான நாவல்கள் ஏன் தமிழில் வரவில்லை. இன்னும் பல காலத்திற்கு வருவதற்கான சாத்தியமும் தெரியவில்லை என்பதற்கான பதிலை நாம் இங்கிருந்துதான் தொடங்கிச் சிந்திக்கவேண்டும்.இதுகுறித்து மேலே பேசுவதற்கு முன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். தேசபக்திக்கு எதிராக இத்தகைய சிந்தனையை உதிர்த்துள்ளது டால்ஸ்டாய் மட்டுமல்ல. வேறு சில கூற்றுக்களையும் தொகுத்துக்கொள்வோம். வலைத்தளங்களில் இன்னும் உங்களுக்கு ஏராளமாகக் கிடைக்கக்கூடும்.தேசபக்தியைப் `பழங்குடித் தேசியவாதம்' (Tribal Nationalism)) எனக் கூறும் ஹன்னா ஆரன்ட்: ``இது (தேசபக்தி) தனது மக்களனைவரும் `எதிரிகளின் உலகம்' ஒன்றால் சூழப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. `எல்லோருக்கும் எதிராக ஒருவர்' - நம் மக்களுக்கும் பிற எல்லோருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உள்ளது என அது வற்புறுத்திச் சொல்கிறது. நாம் என்பது தனித்துவமானது, ஒப்புவமையில்லாதது, மற்ற எல்லோரிடமும் எந்த வகையிலும் இணைய முடியாதது எனக் கூறும் அது பொது மனிதம் சாத்தியமே இல்லை எனக் கோட்பாட்டு ரீதியாக மறுக்கிறது.''மார்க் ட்வெய்ன்: ``ஒரு தேசபக்தன் தனது சொந்த நாட்டில், சொந்தக் கொடியின் கீழ் `செட்டில்' ஆகிறான். மற்ற தேசங்களை அவன் இழிவு செய்கிறான். சீருடை அணிந்த கொலைகாரர்களை (படைகள் / பயங்கரவாதிகள்) அமைத்துக்கொள்கிறான். அடுத்த நாட்டின் துண்டு துக்கானிகளைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கும் ஏராளமாகச் செலவிடுகிறான். இடைப்பட்ட காலங்களில் தன் கைகளில் படிந்த ரத்தக் கறைகளைக் கழுவிக்கொண்டே `உலகளாவிய மனித சகோதரத்துவத்தை' வாயால் செயல்படுத்துகிறான்.''அல்டாஸ் ஹக்ஸ்லி: ``தேசபக்தியின் பெரிய ஈர்ப்பு என்னவெனில், அது நமது மோசமான ஆசைகளைத் திருப்தி செய்கிறது. நாம் ரொம்பவும் மேன்மையானவர்கள் என்ற எண்ணத்தினூடாக (மற்றவர்களை) ஏமாற்றவும் அவர்களுக்கு ஊறு செய்யவும் விழைகிறான்.''பெர்னாட் ஷா: அற்ப காரணங்களுக்காகக் கொல்லவும், கொல்லப்படவும் துணிவதே தேசபக்தி.''ஆங்கார் வைல்ட்: ``தேசபக்தி - கயவர்களின் உயர் பண்பு.''ஆல்பர்ட் ஈன்ஸ்டின்: ``தேசியம் - ஒரு இளம்பிள்ளைவாதம்.''எம்மா கோல்ட்மான்: ``தேசபக்தி - சுதந்திரத்தின் கேடு.''எர்னட்ஸ் பி பாக்ஸ்: ``தேசபக்தன் என்கிற சொல்லை ஒரு அவமானமாகக் கருதும் காலம் ஒன்று வரும்.''சாமுவேல் ஜான்சன்: ``தேசபக்தி - அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.'' (பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்த மேற்கோளைப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளதைக் காண்க).ஆம்புரோஸ் பியர்ஸ்: ``மன்னிக்கவும். தேசபக்தி அயோக்கியர்களின் முதல் புகலிடம்.எச்.எல். மென்கென்: ``இல்லை அது இன்னும் மோசமானது. அது முதல், இடை மற்றும் இறுதி எல்லா நிலைகளிலும் முட்டாள்தனமானது.''சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இப்படியான ஒரு பட்டியலை நான் இங்கே சுட்டிக் காட்டியதற்கான காரணம் நம்மூர் குண்டுசட்டிக் குதிரை ஓட்டிகள், உள்ளூர் புராணக் குப்பைகளால் மட்டுமே மண்டையை நிரப்பிக் கொண்டவர்கள், விசாலமான படிப்பனுபவமோ, வாழ்வனுபவமோ இல்லாத சுயவிரும்பிகளை ஒரு பரந்த தளத்தில் வைத்துக் காட்டுவதற்காகத்தான்.டால்ஸ்டாய் முதல் ஈன்ஸ்டின்வரை, ஹன்னா ஆரன்ட் முதல் தெரிதாவரை தேசபக்தியை வெறுத்ததற்குக் காரணம் வெறும் போர் வெறுப்பும் அமைதி நாட்டமும் மட்டுமல்ல. `மற்றமை'யுடனான உறவு குறித்த அறம் சார்ந்த நோக்கங்களின்பாற்பட்டது இந்த வெறுப்பு. அறம் என்பது ஒரு கடப்பாடு (obligation)மதங்களும்கூட அதை ஒரு கடப்பாடுதான் எனச் சொன்னாலும் அறத்தை இறைவனுக்கான கடப்பாடாக (obligation to God) அவை முன்வைக்கும். அதை அரசுக்கான கூப்பாடாக மதவழிப்பட்ட அரசியலும், அதற்குப் பிந்தி அதே வடிவத்தில் `ஜனநாயக அரசுகளை'க் கட்டமைத்த நவீனத்துவமும் முன்வைக்கும். ஆனால் தத்துவமோ அறத்தை `மற்றதற்'கான கடப்பாடாக (obligation to other)க் கருதுவதன் விளைவாக மற்றதனைத்தையும் அயலாக (alien),எதிரியாகக் கருதும் தேசபக்தியை ஏற்றுக்கொள்வதற்கு அதில் இடமேயில்லை.இந்தியச் சூழலில் மற்றதனைத்தையுமே எதிரியாகக் கருதும் மனநிலை உயர்சாதி மனங்களுக்கு இயல்பாகிப் போனதற்கு இன்னொரு உதாரணமாக மௌலியைக் குறிப்பிடலாம். கிராமப் பொதுச் சாவடியை `எத்தனை எதிரிகள் தங்கிப்போன இடமோ' என அவரது (கதை மாந்தரின்) மனம் கருகியதை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது.மனிதர்களைப் பொருத்தமட்டில், வாழ்வது என்பது மற்றவர்களோடு வாழ்வதுதான். `மனிதன் ஓர் அரசியல் மிருகம்' எனச் சொல்வதன் பொருள் அதுவே. மனித உயிர்களுக்கு மட்டும்தான் இரு வாழ்வுகள் உள்ளன. வெறும் உயிர் வாழ்வுக்கு அப்பாற்பட்ட அரசியல் வாழ்வுக்கும் உரியவன் அவன். இந்த அரசியல் வாழ்வு அவனுக்கு மறுக்கப்படும்போது அவன் வெற்று வாழ்க்கைக்கு (bare life) உரியவனாகிறான்.அரசியல் என்பது ஏதோ கட்சி நடத்துகிற விவகாரமோ, இல்லை கட்சியில் உறுப்பினராவதோ அல்ல. அது சக மனிதர்களுடன் தொடர்ந்து உரையாடுவது (negotiating). மற்றவர்களுடன் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது (engagement).மற்ற யாருடனும் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொள்ளத் தக்கவனாகவே மனிதன் அமைக்கப்பட்டுள்ளான். மனிதன் மட்டுமே பேசுபவனாக இருப்பதன் தாத்பர்யம் அதுவே. மற்றமையுடனான ஈடுபாடு என்பது அதைப் புரிந்துகொள்வதல்ல. தவறாகப் புரிந்துகொள்ளுதல்கூட ஒரு நல்ல அம்சமே. தவறாகப் புரிந்துகொள்ளுதலே உரையாடலுக்கு இட்டுச் செல்கிறது. அறிவு உற்பத்திக்குக் காரணமாகிறது. அதன்மூலம் மற்றமையுடனான தொலைவு குறைகிறது. இந்தத் தொலைவு குறையும்போது மற்றமையின் `அன்னியத்தன்மை' (strangeness) அழிகிறது.மற்றமையுடனான இந்தத் தொலைவை அழித்துக் கொள்ளுதலைவிட மானுட வாழ்வின் இறுதி லட்சியம் என்னவாக இருக்கமுடியும்? ஆனால் மற்றவர்களை `அன்னியர்களாக' மட்டுமே பார்ப்பது, அவர்களுடன் ஈடுபடுத்திக்கொள்ளச் சாத்தியமே இல்லை எனக் கருதுவதன் உச்சபட்ச நீட்சியே தேசபக்தி. மற்றமையுடனான உரையாடல், பேச்சு, உரிமை கோருதல், உரிமை அளித்தல், தொலைவைக் குறைத்தல், ஈடுபடுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் உச்சபட்ச வெளிப்பாடே அரசியல். இந்த வகையில்தான் தேசபக்தியும் அரசியலும் சந்தித்துக்கொள்ள இயலாத இரு துருவங்களாகின்றன.தேசபக்தி அரசியலை மறுக்கிறது.அரசியலுக்கு இடமில்லாமற் செய்துவிடுகிறது. 9/11-க்குப் பின் ஜார்ஜ் புஷ் உருவாக்கிய `தேசபக்தி சட்டம்) (PatrioticAct)அயலவர்களின் (immigraants) உரிமைகளைக் கட்டுப்படுத்துவது நினைவிருக்கலாம். மாநில அளவுகளிலும்கூட பிஸி 4437 முதலான பல்வேறு சட்டங்கள் இவ்வாறு இயற்றப்பட்டன. இங்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் காட்டித்தான் `தடா', `பொடா'க்களெல்லாம் உருவாயின. இவை `எல்லை'யில் எப்போதும் அமர்ந்து கொண்டிருக்கும் எதிரி ஒருவரை வலிமையாகக் கட்டமைப்பது மட்டுமின்றி உள்நாட்டு மக்களின் அரசியற் பெயற்பாடுகளையும் ஒழித்துக்கட்டுவதை நாம் பார்க்காதிருக்கக்கூடாது. தேசத்தின் மீது பக்தி செலுத்துவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. ஜெயமோகனின் தேசபக்திக் கட்டுரையை மறுபிரசுரம் செய்து மகிழ்ச்சியடையும் என்.ஆர்.அய். தமிழிலக்கியவாதிகள் இன்று அவர்கள் வாழ்கிற அமெரிக்காவை விட்டுவிட்டு, அங்கிருந்து துரத்தப்பட்டால் ஒழிய தேசபக்தி காரணமாக இந்தியா திரும்புவார்களா, அவர்தம் வாரிசுகள்தான் இங்கே வர ஒப்புக்கொள்வார்களா? அவ்வளவு ஏன் இன்று ஈழத்தில் போர் முடிந்து ஏதோ ஒரு வகையில் அமைதி திரும்பினால் இன்று அகதிகளாய் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எத்தனை பேர் நாடு திரும்புவர்?டால்ஸ்டாய் இன்றுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மனிதர்க்கிடையே ஏற்படுத்தியுள்ள நெருக்கத்தைச் சுட்டிக்காட்டி தேசபக்தி சாத்தியமற்றுப் போனதைக் குறிப்பிடுவதைப் பார்த்தோம். அக்கட்டுரை மே 10, 1900-த்தில் எழுதப்பட்டது. 108 ஆண்டுகள் ஓடிவிட்டன. எத்தனையோ மாற்றங்கள். குடிமை, அடையாளம் தொடர்பான கருத்தரங்கங்களெல்லாம் ஏராளமாக மாறிவிட்டன. அடையாளம் இல்லாத சமூகக் கட்டமைப்பின் சாத்தியமின்மை, குடிமகன், உள்நாட்டவர் (indigenem), உள்நுழைந்தோர் (immigrants) என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம், இவற்றுக்கிடையேயான தெளிவான வரைகோடுகள் எல்லாம் இனி சாத்தியமேயில்லை. ஆனாலும் தேசபக்தியின் பெயரால்தான் இன்று அயலார்கள் (j / aliens / immigrants) வெற்று வாழ்க்கைக்குரியவர்களாக்கப்படுகிறார்கள்.ஜியார்ஜியோ அகம்பன் இந்நிலையை `ஹோமோ சாசர்' (புனித மனிதன்) என்பார். பண்டைய ரோம ஆட்சியில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் `சிவீ‡வீக்ஷ்மீஸீ' என்கிற அங்கீகாரத்தை இழந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அந்த நகர நாகரிகத்தில் எந்த சிவில் உரிமைகளும் கிடையாது. இவர்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம். குற்றமாகக் கருதப்படாது. ஆனால் இவர்கள் புனித பலிகளுக்கு உரியவர்களல்ல. தேசபக்தியின் பெயரால்தான் அன்று முதல் இன்றுவரை மனிதர்கள் அரசியல் வாழ்விலிருந்து அகற்றப்பட்டு வெற்று வாழ்க்கைக்கு உரியவர்களாக்கப்பட்டார்கள். இன்று இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தேசபக்திக் கதையாடல் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அடையாளத்தை வெற்று வாழ்வுக்குரியவர்களாக மாற்றுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது.தெரிதா தனது இறுதிப் பேட்டி ஒன்றில் கூறினார்: ``அடிப்படையில் ஒரு தத்துவவியலாளர் `பாஸ்போர்ட்' வைத்திருக்கக்கூடாது. அல்லது வேறு எந்த அடையாள அட்டைகளையும் அவர்களிடம் கோரக்கூடாது. `விசா'வும்கூட அவர்களுக்குத் தேவையாக இருக்கக்கூடாது. அவருக்கு எந்தத் தேசிய இனத்தின் அடையாளமோ, ஏன் தேச மொழியுமோ கூடத் தேவையில்லை. ஒரு தத்துவவியலாளராவதற்கான விறுப்புறுதி என்பது உலகளாவிய சமூகத்திற்கான (Universal community) பங்களிப்பைச் செய்வதற்கான விறுப்புறுதியாகும். உலகளாவிய சமூகம் என்பது வெறும் கலப்பினச் சமூகமல்ல. அது உலகளாவியது. குடியுரிமை, அரசு, கலப்பினச் சமூகம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.''மானுடத்தை நேசிப்பவர்கள் வேறெப்படிச் சிந்திக்க முடியும்?

Jan 3, 2009

மார்கழியின் மலரும் நினைவுகள்

மார்கழி மாதம் தொடங்கி முடியப்போகிறது, எனது சிறு பிராயத்தில் மிகவும் மகிழ்சியான மாதம் என்று இதனை சொல்லலாம், கிராமங்களில் மார்கழி பிறந்த உடனே பல விதமான தயாரிப்புகள் தொடங்கும் கோலப்பொடி தயார் செய்தல் பல்வேறு விதமான புதிய கோலங்களை எனது வீட்டில் உள்ள இளம் பெண்கள் ஆர்வமுடன் சென்று பல தோழிகளுடன் உருவாக்கி ஒரு கோல புத்தகம் உருவாக்குவார்கள்,

அதிகாலை 4 மணிக்கெல்லாம் அந்த சுகமான குளிரில் எழுந்து வந்து கோலம் போட தொடங்குவார்கள், அந்த காலை நேரத்தில் அவர்களின் நடமாட்டம் மெல்ல மெல்ல எழவிரும்பாத சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட எழுப்பிவிடும், பின்னர் மெல்ல ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு வாசலுக்கு வந்தால் அப்போதுதான் நம் வீட்டு பெண்கள் வெள்ளை கோலமாவில் அடிப்படை கோலக்கோடுகள் வரையத்தொடங்கி இருப்பார்கள், நாங்கள் எல்லாம் அந்த கோலத்தை சுற்றி உட்கார்ந்து கொண்டு எப்போது கோடுவரையும் வேலை முடியும் என்று பார்த்துக்கொண்டிருப்போம், அதற்கிடையில் தெருவில் உள்ள மற்ற வீடுகளில் எல்லாம் எப்படி என்ன மாதிரி கோலங்கள் போடப்படுகிறது என்று ஒரு கிராம வலம் போல இந்த போர்வை போர்த்தியபடியே சென்று பார்த்து வருபவர்களும் உண்டு, அதிகாலை பனி சிலுசிலுவென முகத்தில் அடிக்கும், டேய் பனியில நிக்காதேடா என்று எல்லா வீட்டிலும் அப்பபோது ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

கோலம் வரைந்து முடிந்தவுடன், வண்ணம் கொடுக்கும் வேலைதான் எங்களுக்கெல்லாம், கோலத்தில் உள்ள பூ, காய் அல்லது விதவிதமான அமைப்புகளுக்கெல்லாம் பெண்கள் சொல்லும் வண்ணங்களை தூவுவோம், அதில் நிறைய பிரச்சினை வேறு, அந்த கோடுகளுக்குள் சரியாக தூவவேண்டும் இல்லாது போனால் வெளியில் சிதறி இருந்தால் அது முழு கோலத்தையே கெடுத்து விடும், சிறிது சிறிதாக தூவும் அழகே அழகுதான், இதில் மற்ற பக்கத்து வீட்டு பெண்கள் சிறுவர்கள் என்று எல்லோரும் மாறிமாறி மற்ற வீடுகளுக்கும் சென்று உதவுவார்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு போட்டி இருந்தாலும், அதிலும் ஒரு பெருந்தன்மை இருக்கும்,

நல்ல பெரிய கோலங்களாகத்தான் பெரும்பகுதி இருக்கும், அதன் பின் சிலர் வீட்டு கொல்லைக்கு சென்று அங்கிருந்து, பூசனி பூக்கள், சானியில் பிடித்த பிள்ளையார் என்று கொண்டு வந்து வைப்பார்கள், முதல் நாள் மாலையே பூசனி மொட்டுக்களை பறித்து வந்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பது வழக்கம், பின்னர் அதுகாலையில் நன்கு மலர்ந்து இருக்கும், பலவாறு உள்ள பூக்களும் வைக்கப்படும், பக்கத்து வீடுகளுக்கும் பூ கொடுப்பதும் உண்டு,

இப்படி எல்லாம் முடிய ஒரு ஐந்து ஐந்தரை மணி ஆனவுடன் சிறுவர்கள் அடுத்த பணி எல்லோரும் ஓடிபோய் மார்கழி பஜனை குழுக்களில் சேர்ந்து கொள்வதுதான், அப்போது ஊரில் இரண்டு பஜனை குழுக்கள் இருந்தன, முருகன் கோவிலில் இருந்து புறப்படும் குழு இதில் இளைஞர்கள் அதிகம் இருப்பார்கள், பெரும்பாலும் ஜாலியான கடவுள் பாடல்கள் பாடுவார்கள், அடுத்த குழு ராம மடத்தில் இருந்து தொடங்கும் அதில் எல்லாம் சற்று வயதானவர்கள், நல்ல சங்கீதம் முதல் சிறந்தபாடல்களும் அதற்கான துணைகருவிகளும் கொண்டு வருவார்கள், நான் இந்த இரண்டு குழுக்களிடமும் கலந்து கொண்டிருக்கிறேன், அதில் கலந்து கொண்டு வீதியில் பாடிக்கொண்டு வரும்போது மிக பெருமையாக இருக்கும், அதுவும் நம் வீடு உள்ள தெருவில் வரும்போது நம்வீட்டில் இருப்பவர்கள் வெளியில் வந்து பார்க்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி, மிருதங்கம், கஞ்சிரா சப்ளாக்கட்டை முதலிய இசைக்கருவிகள் உபயோகம் இருக்கும் அதெல்லாம் விட அந்த கோரஸ் சத்தம்தான் பஜனையின் அழகே,

சிலவீடுகளில் நிறுத்தி குடிக்க ஏதாவது தருவார்கள், பெரும்பாலும் பிராமண சிறுவர்கள் அதிகம் கலந்து கொள்வார்கள், என்னைப்போன்ற சிலர் பிராமணர் அல்லாதவர்களும் இருப்பார்கள், எனக்கெல்லாம் பெரும் பகுதி கோரஸ் பாட மட்டுமே வாய்ப்பு, எனது கவனம் முழுக்க மிருதங்கம் வாசிப்பவரின் மீதுதான் இருக்கும் அதன் மீது அப்படி ஒரு அலாதி பிரியம். ராம மடத்தில் இருந்து வரும் குழுவின் தலைவர் அந்த மடத்தின் நிர்வாகியும் கூட அவர் நல்ல குரல் வளத்துடன் பாடக்கூடியவராக இருந்தார், அவர் பாடிய ஆண்டாள் பாசுரங்கள் அப்போது அர்த்தம் புரியாமலேயே எனக்கு அவ்வளவு இனித்தது, அதனை வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்வேன், அந்த பாடல் எதுவென்று சொல்லத்தெரியாமல் அந்த பாடல் பற்றி பேசும்போது அது அப்பாவுக்கு மிகவும் சிரிப்பாக இருக்கும்.

சில இடங்களில் வீதிகளில் இரண்டு பஜனை கோஷ்டிகளும் சந்தித்து கொள்வதும் உண்டு, அப்போது இந்த பஜனையில் இருந்து அந்த பஜனை கோஷ்டிக்கு சில சில்வண்டுகள் தாவிவிடும் அது அன்றைய விநியோகத்தை பொருத்தது அல்லது உடன் செல்லும் நண்பர் குழுக்களைப்பொருத்தது.

ஒரு வழியாக வீதியெல்லாம் முடிந்து, அதன் தொடங்கிய இடம் எதுவோ அங்கே வந்ததும் ஒரு சிறப்பு பூஜை நடந்து பின்னர் விநியோகம் நடக்கும், இதற்கு தானே இப்படி வந்தது, பொங்கல், சில நேர வேறுமாதிரியான பிரசாதங்களும் கிடைக்கும், பஜனையில் கலந்து கொண்டவர்களுக்கு, இரண்டு பங்கு கிடைக்கும், மார்கழி மாதத்தில் வரும் சில திருவிழாக்களும் உண்டு, திருவாதிரை போன்ற விழாக்களில் களி மற்றும் இனிப்புகள் கூட விநியோகமாக கிடைக்கும்

அதிகாலையில் எழுந்து குளிகாமல் வேகவேகமாக பல் தேய்த்து விட்டு, குளிரில் இப்படி அடிக்கும் கும்மாளம் அது. தூங்கி எழும்போது மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் பின்னர் ஒரே ஜாலிதான், மிதமான குளிரும் அந்த போர்வையும் கொடுக்கும் சுகம் இப்போது நினைத்தாலும் மனசு குளிரும்.


தவநெறிச்செல்வம்