May 29, 2010

இன்னும் ஒரு உளறல்

மாவோஸ்ட் பிரச்சினைகள் இப்போது நமக்கு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது, அதன் பின்னனியில் உள்ள காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், உள்துறை அமைச்சர் தனது செயல்பாடுகளில் தானே திருப்தி இல்லாததுபோல் பேசுகிறார் அதை நிதி அமைச்சர் வேறு குறை கூறுகிறார் ஆனால் மக்கள் என்னவோ செத்துக்கொண்டிருக்கிறார்கள்,

ஓட்டு அரசியல் அப்படி ஒரு நிலை ஏற்படுத்தி விட்டிருக்கிறது, மதமும் ஜாதிகளும், குழுக்களும் வர்க்கங்களும் இப்போதைய அரசியல் நிர்ணயத்தை உண்டாக்கும் காரணிகளாக இருக்கிறார்கள், சுதந்திரம் வந்தபின் இந்திய அரசியல் இப்படி ஒரு நிலையில்தான் பயணிக்கும் என்று தெரிந்துதானோ என்னவோ ஜின்னா தனியாக போக ஆசைப்பட்டார் என்று தோன்றுகிறது,

ஒருவிதமாக குழப்பமான அரசியல் முறையை நோக்கி இன்று இந்திய அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது, ஆகையால் குழப்பமில்லாத கொள்கை உடைய கட்சிகள் மிகவும் திணறுகின்றன என்றே தோன்றுகிறது, உதாரணம் கம்னியூஸ்ட் கட்சி. அவர்கள் எடுத்த நிலைபாடுகள் இன்றைய இந்த சந்தர்ப்பவாத குழப்பங்களுக்கு ஈடு கொடுக்க முடியாததால் இப்படி ஒரு சரிவை சந்திக்கிறார்கள்.

எனக்கென்னவோ எதிர்கால சாணக்கியத்தனம் அல்லது ராஜதந்திரம் என்பது சந்தர்ப்பவாதம்தான் என்று ஒரு அங்கீகாரத்தோடு நிறுவப்பட்டு விடுமோ என்று தோன்றுகிறது.

உலக சிந்தனா சமூகத்தின் பார்வையின் வெளிப்பாடு கொண்டிருக்கும் பல புதிய யுக்திகளில் அதுவும் சேர்ந்துவிடும் என்று தோன்றுகிறது, மக்களும் அந்த சந்தர்ப்பவாத குட்டையில் அகப்படுவதுவரை லாபம் என்கிற ஒரு தாந்தோன்றி மனநிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒருவகை மேற்கு சித்தாந்தம், ஆனால் மேற்கில் கீரிஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி விரைவில் விழித்துக்கொள்ளாமல் போனால் மேற்கை நடுத்தெருவில் விடுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது, ஸ்பெயின் இரண்டாவது விக்கட்டாக விழப்போகிறது என்றே தோன்றுகிறது.

இந்திய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் சோசலிசமா அல்லது கம்னியூசமா அல்லது பாஸிசமா அல்லது எல்லாம் கலந்த ஒரு கலவையா என்று தெரியவில்லை, நானும் ஒரு கம்னீயூஸ்ட்தான் என்று முதல்வர் கருணாநிதி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, ஒரு காலத்தில் ஆதிசங்கரர் இந்து மதத்தை காப்பாற்ற மற்ற மதங்களில் இருந்த நல்ல கருத்தை எல்லாம் இந்து மதத்தில் கொண்டு வந்து சேர்த்தார் என்று சொல்வார்கள் அதுபோல் எல்லா கட்சிகளின் கொள்கைகளை எல்லாம் எல்லாரும் பங்கு போட்டத்தில் ஒரு தனிப்பட்ட அடையாளம் இல்லாத ஒரு குழம்பிய அமைப்பில் கட்சிகள் காணப்படுவது ஒரு சோகம்தான்,

தமிழகத்தின் அரசியல் களம் ஒரு சிங்கிள்மேன் ஷோவாக ஆகிப்போய்விட்டது, அதன் காரணம் முதல்வர்தான், எதிர்கட்சிகள் எல்லாம் தொடர் தோல்விகளுக்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை, அதிமுக தனது கட்சிகளின் களையெடுப்பு பணிகளில் தீவிரமாக இருப்பதுபோல் தெரிகிறது, யாரோடும் இணையமுடியாத நிலையில் அவர்களின் எதிர்காலம் மிக மோசமான நிலையில் இருப்பதாக தோன்றுகிறது,

நம்மைப்போன்ற ஒரு சராசரிகள் வேடிக்கை பார்க்க பழகிவிட்டார்கள், ஓட்டுக்கு என்ன விலை என்று இனிமேல் பேரம் பேசுவது வாடிக்கையாகிடும், விதியின் கையில் நம்மை விட்டு விட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்

மலேசியாவில் எம்.ஆர். ராதா பேசியதுதான் நினைவுக்கு வருகிறது, “கடவுளே வந்து ஆட்சி செய்தாலும் நீ உழைத்துதான் வாழவேண்டும்”.

கனவுகாணும் வாழ்க்கையாவும் என்ற பாடலில் ஒரு வரி வரும் இறுதியாக “ கடமை ஒழுங்காய் செய்வதுதானே ஆனந்தம்” இதெல்லாம்தான் இதன் தீர்வு.

தவநெறிச்செல்வன்