Mar 20, 2012

என்னவோ போங்க மனசே சரியில்லை.

இதோ அமெரிக்காவுக்கு மூன்றாம் முறை வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது, ஆனால் இது வரை அமெரிக்கப் பயணம் -3 இன்னும் எழுதவில்லை, இந்த முறை அமெரிக்க கிராமங்களுக்கிடையே பயணம். நிறைய எழுதலாம், டெக்ஸாஸ், நியு மெக்சிகோ , கலிபோர்னியா என்று பயணம் தொடர்கிறது. செவ்விந்தியர்கள் வாழும் பகுதிகளில் மாதக்கணக்கில் இருக்கிறேன். அமெரிக்காவின் இன்னொரு முகம். நல்ல பனியும் குளிரும். சில இரவுகள் -11 டிகிரி வரை செல்கிறது. இரவு நேரப்பணி என்பதால் அதை நேரடியாக அனுபவிக்க வேண்டி இருக்கிறது.

எழுத்தில் ஆழம் இல்லாமல் போனதாக நண்பர் கூறி இருந்தார், பல வருடங்களுக்கு முன் அப்படித்தான் எழுத தோன்றியது. அது என்னவோ பலருக்கு புரியாமல் போனதாக தோன்றவே எளிமையாக எழுத தொடங்கினேன்.

ஒரு எழுத்தாளனின் வலிமை அல்லது ஆத்ம சுகம் ஒரு ஆழமான எழுத்தில்தான் இருக்கிறது என்று கொள்வதா, இல்லை பலர் படிக்க அதனால் கிடைக்கும் ஆழமான இன்பமா என்று தெரியவில்லை.

ஏதாவது எழுதலாம் என்று தோன்றுவது ஒருவகை கிளுகிளுப்பான உணர்வு, திருடனுக்கு நல்ல அடர்த்தியான தங்க சங்கிலியைப்பார்க்கும் போதும் காமுகனுக்கு நல்ல அழகான பெண்களைப் பார்க்கும்போதும், இயற்கை ரசிகனுக்கு ஒரு மலர்த்தோட்டத்தை பார்க்கும்போதும், சாப்பாட்டு ராமனுக்கு நல்ல விருந்தை பார்க்கும்போதும், ஒரு தாய்க்கு ஏதாவது ஒரு கைக்குழந்தையைப் பார்க்கும்போதும், அரசியல் வாதிக்கு ஒரு ஓப்பந்தகாரரை பார்க்கும்போதும், ஏற்படுவதுபோன்ற உணர்வுதான் இது.

எதையாவது புதிதாக பார்க்கும்போது (அது எழுத்தாளனுக்குத்தான் புதிதாக இருக்கும்,) அதை படிக்கப்போகிறவர்களுக்கு அது புதிதானதல்ல என்றாலும் அது புதிதுபோல தோன்றும்படி எழுதநினைப்பான், ஆனால் அது புதிதாக இருந்ததா என்று தெரியாது.

காதலில் சொதப்புவது எப்படி என்று ஒரு படம் வந்திருக்கிறது, காதலைப்பற்றிய படம் என்பதால் சுவாரஸ்யம் குறையவில்லை, ஆனால் இளைஞர்களின் புதிய கலாச்சாரத்தை இது கூறுகிறது, மயக்கமென்ன என்று ஒரு படம் அதுவும் கிட்டதட்ட இப்படி ஒரு கதைதான், அம்மாக்கள் அப்பாக்கள் குழந்தைகள் தன் ஆண்பெண் நண்பர்களுடன் பழகுவதை மிக சாதாரணமாக பார்க்கிறார்கள், அல்லது ரசிக்கிறார்கள். ஒருவன் காதலியை இன்னொருவன் சாதாரணமாக கைப்பற்றுகிறார்கள். காதலிகள் மிக வீராப்பாக இருக்கிறார்கள். காதலர்களை மிரட்டுகிறார்கள். அப்படி மிரட்டுகின்ற காதலி கிடைக்காமல் போனதில் மிக கவலைப்படுகிறார்கள் உருகுகிறார்கள். இது ஒன்றுதான்வேலை என்பதுபோல் இருக்கிறது.


முன்பெல்லாம் காதல் என்றால் வெளியில் சொல்ல பயப்படுவார்கள், ஆனால் இன்று காதலர்கள், கல்லூரி கூட்டத்தில் வைத்துதான் காதலை சொல்கிறார்கள், அல்லது பெண்ணின் காலில் விழுகிறார்கள், அதைப்பெண் மிகுந்த பெருமையுடன் அல்லது அதிகாரத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இது என்ன கொடுமை என்றுதான் கூறத்தோன்றுகிறது. இப்படி தொடங்கும் ஒரு காதல் கல்யாணத்தில் முடியும்போது அந்த பெண் எப்படி தனது மாமனார் மாமியார் இருவரையும் ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று தெரியவில்லை.

பெண்கள் மிக சுலபமாக ஆண் நண்பர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி படம் போகிறது, படத்தில் கதை சாதனைகள் இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், இன்றைய இளைஞர்களின் கலாச்சாரத்தை காணும்போது ஆச்சர்யமும் பயமும்தான் வருகிறது. ஒருவேளை எனக்குள் இருக்கும் ஹைதர் காலத்து மனிதனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையோ என்னவோ.

இன்னொரு படம் செல்வராகவனின் “மயக்கமென்ன” ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் ஒன்றாக இரவு கடற்கரையில் மதுபானம் உணவு சகிதம் இருக்கிறார்கள், இவர்களின் மற்றொரு நண்பன் தனக்கு புதிதாக கிடைத்த தோழியை அல்லது காதலியாக போகிறவளை அறிமுகப்படுத்த அழைத்து வருகிறான் அப்போது நடக்கும் உரையாடல் மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஒருவேளை இதுதான் யதார்த்தமான உலகம் என்று இயக்குனருக்கு தெரிந்து இருக்கலாம். அப்படியே அந்த பெண் நண்பர்களின் பெற்றோர்களின் யதார்த்த மன உணர்வுகளையும் காட்டி இருக்கலாம்.

அதன் பின் அந்த காதலியை கதாநாயகன் கைபிடிக்கிறான், இந்த படத்தில் அடிப்படை கதை இதுவல்ல, கதா நாயகன் ஒரு புகைப்படக்கலைஞன் அவன் வாய்ப்புகள் இன்றி அலைக்கழிக்கப்பட்டு பிற்பாதியில் மனநிலை கெட்டு அந்த நேரத்தில் அவன் காதல் மனைவி மிகுந்த அவமானங்களுக்கு இடையில் அவனை உலக விருது கிடைக்கும் நிலைக்கு உயர்த்துகிறாள். ஆனால் மனதில் நிற்பதோ முன் பாதி படம்தான். எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் பார்த்தவர்கள் கூறலாம்.

இதில் வசனங்கள் மிக சக்தி வாய்ந்தது. காடுகளில் பறவைகளை படம் எடுக்க புறப்படும் கதாநாயகன் தன் உடைகளை எடுத்து வைக்கும்போது அவனின் நண்பன் தன் காதலியையும் (கதாநாயகி) அழைத்துக்கொண்டு வர விரும்பி அவளுக்கு தொலைபேசுகிறான். அப்போதில் இருந்து அவர்கள் காட்டில் இருந்து திரும்பி வரும் வரை உள்ள வசனங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாகவே தோன்றுகின்றன.

உண்மையில் அந்த கதாநாயகியின் பாத்திரப்படைப்பும் அதன் வசனமும், அதன் நடிப்பும் படத்திற்கு மிக அற்புதமான உதவி ஆனால் இடைவேளைக்கு பிறகு அது முழுக்க வீணாக்கப்படுகிறது, அதாவது திருமணத்திற்கு பிறகு.

இந்த படங்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறதா? அல்லது இயக்குனர் மனதில் உள்ளதை சொல்கிறதா? அல்லது இளைஞர்களுக்கு புதிய வழியை சொல்கிறதா? இதில் எதுவாய் இருந்தாலும் இது ஒரு நல்ல அடையாளமாக தோன்றவில்லை.

கூட்டுக்குடும்பங்கள் குறைந்து வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் வந்து சிதறிக்கொண்டிருக்கும் நமது கலாச்சார அமைப்பில் இது என்னவகையான நன்மையை செய்யப்போகிறதோ தெரியவில்லை. கல்யாணம் வரை இப்படி ஆளை மாற்றிக்கொண்டிருப்பவருக்கு கல்யாணத்திற்கு பிறகு அப்படி ஒரு எண்ணம் வர எத்தனை தயக்கம் வரபோகிறது. இது எப்படி பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உதவப்போகிறது என்று புரியவில்லை.

பழமை நிறைய பிற்பொக்குத்தனம் நிறைந்தது என்பதுதான் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை, ஆனால் சில அடிப்படையான விஷயங்கள் விட்டுக்கொடுக்க முடியாததுதான். ஒரு பெற்றோருக்கு தன் பிள்ளைகள் மீதான உரிமையை கேள்விகேட்கும் நிலைக்கு கொண்டு செல்வதுதான் இந்த வாழ்க்கை முறையின் விளைவு என்றால் அவர்களின் எதிர்காலம் என்னாவது. மெல்ல மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இந்தியா போகுமாயின் அதன் தேவை என்ன என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

இங்கே அமெரிக்காவில் இருக்கும் வாழ்க்கை முறை என்னை பெரிதும் ஆச்சர்யப்படுத்துகிறது. உணவகங்களுக்கு போனால், பல வயதான தம்பதியர் தாங்களே காரில் வந்து உணவருந்தி விட்டு செல்கிறார்கள், இதிலென்ன அதிசயம் என்றால், அவர்கள் மிகவும் முதுமையில் இருக்கிறார்கள். அவர்கள் தன் பிள்ளைகளை சார்ந்து இருக்கவில்லை, அது அவர்களுக்கும் பிடிக்கவில்லை. தங்களது தனிமை கெட்டுவிடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுபோல் பெரும்பாலான அமெரிக்க குடும்பங்களில் சமையல் என்பது என்றாவது ஒருநாளைக்குத்தான் இருக்கும்போல் தெரிகிறது. ஆண் பெண் இருவரும் வேலைக்கு போவதால் அவரவர்கள் அங்கு உள்ள உணவகங்களில் சாப்பிட்டுக்கொள்கிறார்கள். இரவும் ஒன்றாக எங்காவது சாப்பிட்டுக்கொள்கிறார்கள். ஆகையால் இங்கு உணவகங்கள் நல்ல விற்பனையை பார்க்கின்றன.

உணவு உண்டாக்குவது என்பது பெண்ணுக்கு மட்டும் விடப்பட்ட காரியம் இல்லை. அந்த பணியில் ஆண்களும் சேர்ந்தாக வேண்டும். நம் நாட்டில் தினமும் உணவகங்களில் சாப்பிட்டால் நம் வயிறு என்னாவது நினைத்தாலே பகீர் என்கிறது.

சென்னைப்போன்ற பெரு நகரங்களில் இந்த பழக்கம் இருவரும் வேலைப்பார்க்கும் இடங்களில் இருக்க கூடும் என்றே நினைக்கிறேன், அதெல்லாம் பார்த்தால் பழய தலைமுறைக்கு ‘“பொண்டாட்டிக்கு சமைச்சு போடறான் வெக்கங்கெட்ட பய” என்று சொல்ல தோன்றுமோ?

வாழ்க்கையில் பழமைக்கும் புதுமைக்குமான போராட்டம் என்றும் ஓயப்போவதில்லை, அவரவர் வசதிக்கு ஏற்ற சூழலுக்கு அவரவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. என்ன இருந்தாலும் பிரயாண தூரம் குறைவுதான் அதிக பட்சம் 100 வருடம். ஆகையால் சுற்றி இருப்போர்களிடம் அன்பாக இருங்கள். பார்க்கின்றவர்களிடம் எல்லாம் குறைகளை மட்டுமே தேடிப்பிடிக்காதீர்கள். உங்களின் கோபம் அல்லது ஒருவர் மீதான வெறுப்பு எந்த நன்மையும் செய்யாது உங்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி.
தவநெறிச்செல்வன்.