Dec 31, 2010

பரோட்டாவும் சில பயங்களும் (Fear)


நேற்று (31-12-2010) Asianet middleeast தொலைக்காட்சியில் நம்மள் தம்மிள் என்ற பொது விவாத மேடை நிகழ்ச்சி ஓலிபரப்பினார்கள், அதன் தலைப்பு இன்றைய உணவுப்பொருட்கள் பற்றியது, உணவுகளில் குவிந்து கிடக்கும் கலப்படங்களைப்பற்றிய ஒரு அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்து முடித்தபோது தற்போது கடையில் விற்கும் எந்த உணவுப்பொருளையும் வாங்கி சாப்பிட முடியாதோ என்கிற பயம் வந்தது.

முக்கியமாக பரோட்டா, இது இன்று தமிழகத்திலும் கேரளத்திலும் மிக இன்றியமையாத ஒரு உணவுப்பொருளாகிவிட்டது. ஆனால் அதன் கெடுதல்கள் மிக அதிர்ச்சிகரமானதாக இருந்தது. ஒரு இயற்கை உணவாளர் பல நாகரீக உணவு பொருட்களை விவாத மேடையில் கொண்டு வந்து காட்டி இவைகளை தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பரோட்டா பற்றி மிக அவசியம் சொல்லவேண்டும் என்பதாலே இந்த பதிவு.

பரோட்டா செய்ய பயன்படும் மைதா கோதுமையின் பல வித நல்ல விஷயங்களை எடுத்தபின் அதில் உள்ள சக்கைதான் மைதாவாக மாறுகிறது, இதனால் உடலுக்கு எந்த உபயோகமும் இல்லை. இதன் வெள்ளை நிறத்தை ஏற்படுத்த ஒரு வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது அந்த வேதிப்பொருள்தான் மிக மோசமான விஷயம்.

சாதாரணமாக நம் வியாதிகளுக்கு கண்டுபிடிக்கும் மருந்துகளை விலங்கினக்களுக்கு கொடுத்து சோதித்து பார்த்து பின்னர்தான் மனிதர்களுக்கு கொடுப்பார்கள், ஆனால் சர்க்கரை வியாதிக்கான மருந்தை அப்படி சோதிக்க முடியவில்லை, காரணம் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதில்லை. ஆகையால் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு மருந்து கொடுத்து, பின்னர் சர்க்கரை நோய் வந்த பின் அதை தீர்க்க மருந்து கொடுத்து சோதிக்கிறார்கள்.அப்படி விலங்குகளுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு கொடுக்கப்படும் வேதிப்பொருள்தான், மைதாமாவை வெள்ளை நிறமாக மாற்ற பயன்படுகிறது, இப்போது யோசித்துப்பாருங்கள்,

மைதா வெள்ளைக்காரர்களால் பசை உபயோகத்திற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது இருந்த ஏழ்மை நம் மக்களை மைதா கஞ்சி அருந்த வைத்திருக்கலாம், பின்னர் அதுவே நமது சமையல் வல்லுனர்களால் பல உருவங்களை அடைந்து விட்டது,

பாரம்பரியமாக சர்க்கரை நோய் வரவாய்ப்பே இல்லாதவர்களுக்கு கூட இந்த பரோட்டா சர்க்கரை நோய் வரவைக்கும், நம்மில் எல்லா குடும்பத்தினரும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எத்தனைபேர் இல்லாதவர் எத்தனைபேர் என்று.கிட்டத்தட்ட 40 வயதைக்கடந்த எல்லோருக்கும் இருக்கும்.

அப்படியானால் நமக்கு எவ்வளவு முன்கருதல் வேண்டும், முடிந்தவரை மைதா இல்லாத உணவுப்பழக்கத்தை கடைபிடிப்போம். அந்த நிகழ்ச்சியின் ஓலி ஓளி வடிவை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அதனை இங்கே இணைக்கிறேன், பல நல்ல தகவல்கள் இருக்கின்றன.

தவநெறிச்செல்வன்

Dec 30, 2010

பீஹார். (அரசியல் அல்ல)பீஹார் மாநிலத்தைப்பற்றிய பல செய்திகள் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது, அரசியல் ரீதியாகவும், வளர்ச்சியிலும் மிகவும் பிற்பட்டு போன ஒரு மாநிலமாக கடந்தகாலங்களில் இருந்து விட்டதால் இந்த நிலை என்று நினைக்கிறேன். பீஹாரைப்பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
பீகாரில் பல மொழிகள் பேசப்படுகின்றன,ஆனால் ஹிந்தி பொது மொழியாகவும் அரசு மொழியாகவும் இருக்கிறது. பீகாரில்தான் மகாபாரத கர்ணன் ஆண்ட அங்கதேசம் உள்ளது. அதன் பகுதிகளில் பேசப்படும் மொழி “அங்கிகா” என்று அழைக்கப்படுகிறது. ஹிந்தி எழுத்துக்களே உபயோகப்படுத்தினாலும் உச்சரிப்பு பேசும் முறையில் மாற்றம் உள்ள ஒரு மொழி. கர்ணன் தினமும் காலையில் தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்த இடம் இன்றும் கர்ணசோலா என்று இருக்கிறது. பிறகு தலைநகர் பாட்னா முன்பு வரலாற்றில் பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட இடம் சந்திரகுப்த மெளரியர் தொடங்கி மகா அசோகர், குப்த பேரரசு ஹர்ஷவர்தனர் போன்ற மகா அரசர்கள், ஏசு பிறப்பதற்கு முன்பே ஆண்ட மிகுந்த பெருமை உடைய நகரம் பாடலிபுத்திரம்(பாட்னா).

மிகுந்த செல்வ வளத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கிய பூமியாக இருந்தது, இந்த பாட்னா பகுதியில் பேசப்படும் மொழி “மகஹி” என்று அழைக்கப்படுகிறது, இது மகத நாட்டுப்பகுதியாகும், நாம் நன்கு அறிந்த பீகாரின் போஜ்பூரி மொழி பீகாரில் 5 மாவட்டங்களில் மட்டும்பேசப்படுகிறது. அதுவும் உத்திரபிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் மட்டும்தான். மகத நாட்டைப்பற்றி நாம் சிறு வயதில் படித்திருப்போம், நந்த வம்ச அரசர்கள் ஆண்ட பூமி, தனநந்தருக்கும் சாணக்கியருக்கும் ஏற்ப்பட்ட சண்டையால் சந்திரகுப்த மெளரியர் உருவாகி நந்த வம்சத்தை முழுமையாக அழிக்கிறார், இடையில் அலெக்ஸாண்டர் கூட பாடலிபுத்திரம் வந்து சென்று, செல்யூகஸ் நிகேடாரை தனது பிரதிநிதியாக நியமித்து, திரும்பி கிரேக்கம் செல்லும் வழியில் பாபிலோனில்( ஈராக்) இறந்து போக, மெளரிய சந்திரகுப்தர் இங்கிருந்த கிரேக்கப்படைகளை விரட்டி அடித்து, முழுமையான மெளரிய பேரரசை நிறுவுகிறார். மெளரிய பேரரசு அசோகர் காலத்தில் மிகப்பெரிய பேரரசாக மாறியது, அந்த அளவுக்கு இந்தியாவை அதன் பிறகு ஆண்டவர்கள் ஒளரங்கசீபூம் ஆங்கிலேயர்களும்தான்.வடபீகாரில் மைதிலி என்ற ஒரு மொழி பேசப்படுகிறது, இந்த மொழியில் வித்யாபதி என்ற கவிஞர் இறைப்பாடல்கள் பலவற்றை சிவன் மீது பாடி இருக்கிறார், இவரின் பாடல்கள் இன்றும் பீஹாரின் பொக்கிஷமாக கருத்தப்படுகிறது. இவர் வாழ்க்கை ஒரு சுவையான கதையாக சொல்லப்படுகிறது. இவர் வீட்டில் ஒரு வேலைக்காரன் உதவிக்கு இருந்ததாகவும், இவரின் மனைவி அந்த வேலைக்காரனை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், ஒருநாள் எங்குமே தண்ணீர் இல்லாத போது கவிஞரின் மனைவி மிகவும் கோபம் கொண்டு அவனை கங்கைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரப்பணித்ததாகவும், அப்போது அந்த வேலைக்காரன் சாதாரணமாக வீட்டிற்கு வெளிப்புறத்தில் உள்ள தரையில் பானையை தண்ணீர் எடுப்பதுபோல் கவிழ்த்து எடுக்க அதில் தண்ணீர் நிரம்பி இருந்ததாகவும் அதனை கண்ட கவிஞர் வித்யாபதி தன் மனைவியிடம் இவன் சாதாரண ஆள் இல்லை சிவபெருமானே இங்கு வந்து இருக்கிறான் என்று தன் மனைவிக்கு உணர்ந்தியதாகவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்த நிலையில் அந்த வேலைக்காரன் மறைந்து போய்விட, வித்யாபதி அவனைத்தேடி குடும்பம் விட்டு வெளியே வந்து, ஒரு சந்நியாசி போல வாழ்ந்து வந்ததாகவும். அந்த பித்தநிலையில் அவர் பாடியபாடல்கள் “மைதிலி” மற்றும் “பெங்காலி” மொழியில் அற்புதமான கவிதைகள் என்பதும் அறியமுடிகிறது.அந்த வேலைகாரன் பெயர் கூப்னா என்று கூறப்படுகிறது.
இதில் முழுமையான கதை யாரவது அறிந்திருந்தால் அதை தெரிவிக்கவும். இது என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல்.


நாலந்தா பல்கலைக்கழகம்

இன்னும் நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி நாம் படித்திருப்போம், அதனை உருவாக்கியவர்கள் மெளரியர்களும் குப்த மன்னர்களும்தான், புத்தர் நாலந்தாவில் தங்கி பல சேவைகளை செய்த பகுதியாக இருந்ததால் அங்கு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது, பின்னர் மொகலாய ஆட்சிகாலத்தில் அது முழுமையாக எரிக்கப்பட்டது, இந்த பல்கலைக்கழகத்தில் பல தேசத்து மாணவர்களும், இலக்கியங்களும் இடம்பெற்று இருந்ததாகவும் சொல்லப்படுகிறது, உலகின் முதல் பல்கலைக்கழகம் இதுதான் என்று நினைக்கிறேன்,
சீன யாத்திரீகர் யுவான்சுவாங் போன்றவர்கள் வந்து பார்த்து இதைப்பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள், பீகாரில் புத்த கயா இருப்பது எல்லோரும் அறிந்ததே, நாலந்தாவின் காலம் கிமு 427- கிபி 1197 வரை.


“விக்ரம் சீலா”

இதே நேரத்தில் “விக்ரம் சீலா” என்ற இன்னொரு பல்கலைக்கழகமும் இதே பகுதியில் உருவாக்கப்பட்டது. இரண்டு புத்தமத அடிப்படைகளை கொண்ட பல்கலைக்கழகங்கள் என்றாலும் உலகின் பல தத்துவங்கள் அங்கே பாதுகாக்கப்பட்டன, அங்கிருந்த நூலகம் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாக இருந்தது. தர்மபாலர் என்ற அரசரால் உருவாக்கப்பட்டு கிபி 783ல் உருவாகி பின்னர் அழிக்கப்படு இப்போது சிதிலங்களாக இருக்கிறது. அதன் புகைப்படங்களை கொடுத்துள்ளேன்.
பீகாரைப்பற்றி பேசும் போது மன்னர் ஷெர்ஷா சூரி பற்றி பேசாமல் இருக்கமுடியாது, இவரின் நிர்வாகத்திறைமை பற்றி பல ஆச்சர்யமான தகவல்கள் உண்டு, மொகலாய இரண்டாம் அரசர் ஹிமாயுனை ஓடஓட விரட்டி அடித்து சில ஆண்டுகளே ஆண்டாலும் ஒரு அற்புதமான நிர்வாகத்தை ஏற்படுத்திய இந்த ஆப்கானிய வீரர் வாழ்ந்ததும் இங்குதான், இவரின் அடியொற்றிய நிர்வாகத்தால்தான் அக்பர் மகா அக்பர் என்று மொகலாய வரலாற்றில் பேசப்படுகிறார். இவரைப்பற்றிய தகவல்கள் மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தில் அற்புதமாக விளக்கபட்டுள்ளது.
சீக்கியகுரு குருகோவிந்த் சிங் பிறந்ததும் பீகாரில்தான் அவரின் அடக்கஸ்தலம் இன்றும் பீகாரில் மிகவும் முக்கிய சரித்திர சான்றாக இருக்கிறது.
இப்படி பீகாரைப்பற்றி பல அற்புத வரலாறு குவிந்து கிடக்கிறது, கிருஸ்த்து பிறப்பதற்கு முன்னரே மிகவும் மேன்மையான பகுதியாக திகழ்ந்த இந்த பகுதி இன்று இந்தியாவின் பின் தங்கியபகுதியாக மாறிக்கிடப்பதற்கு காரணம் அதனில் உண்டான ஜாதி மத ஏற்ற தாழ்வுதான் என்று படித்த பீகாரிகள் நினைக்கிறார்கள். இதனை மீண்டும் மேல்நோக்கி கொண்டு செல்லும் பணியில் இன்றைய பீகாரின் முதல்வர் திரு நிதிஷ்குமார் இருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம்.

தவநெறிச்செல்வன்

Dec 23, 2010

நந்தலாலா


இந்த படத்தைப்பற்றி பல பதிவர்கள் எழுத்தாளர்கள் எழுதி தள்ளிவிட்டார்கள், நான் இப்போதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு தோன்றியதை எழுதிவிட தோன்றுகிறது, இதில் பல காட்சிகள் ஆழமான உணர்வுக்கு இழுத்துச்செல்கின்றன, இளையராஜாவின் இசை சிலரால் விமர்சிக்கவும் பலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. கடைசியில் பாஸ்கர்மணி தனது தாயை சந்திக்கும் இடத்தில் இளையராஜவின் குரலில் ஒருபாடல் துவங்குகிறது (தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்) இந்த பாடல் இந்த இடத்துக்கு பொருத்தமானதா? கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அழகான தாயிடம் சந்தோஷமாக ஒரு குழந்தை விளையாடும் காட்சியை கற்பனை செய்துகொண்டு இந்த பாட்டைக்கேட்டால் அப்படியே பொருந்துகிறது. பின்னர் ஏன் இந்த பாடல் இந்த காட்சியில் சேர்க்கப்பட்டது என்று புரியவில்லை.

“சேது” படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது, கேமரா, சேது சேர்க்கப்படப்போகும் மனநலம் குன்றியவர்களின் விடுதி ஒன்றினை காண்பிக்க தொடங்கும்போது, அப்போது ஒரு பின்னனி இசை வரும், அப்படியே நமது அடிவயிறு குலுங்கும், இதை உண்டாக்கியதும் இளையராஜாதான், “நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைப்பாத்திரம் பாடல் கூட ஒரு சுகமான சூழலுக்கு பொருந்தும் பாடல்தான். அங்கேயும் இந்த பொருந்தாமை இருந்ததாக உணர்ந்தேன், சாரு எழுதியதும் கூட இதனால்தான் என்று தோன்றுகிறது.
சாரு கூறியிருக்கும் கிம்டுகிக்கின் spring summer fall winter படத்தில் கல்லை கட்டிக்கொண்டு மலைமேல் ஏறும் காட்சியில் வரும் இசையைக்கேட்டேன், அதன் உணர்வுகள் மிகவும் அபூர்வமாக இருந்தது, அந்தப்படத்தின் முழு இசையும் அப்படித்தான் இருக்கிறது.

அந்த இசை
மேலே உள்ள தொடர்பில் அந்த இசை இருக்கிறது. கேட்டுப்பாருங்கள்.

சினிமா பார்ப்பதில் ஒரு அற்புதமான உணர்வு விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். அம்மா மற்றும் பல துயரகாட்சிகளுக்கு இளையராஜா அவர்களின் குரலில் உண்டான பாடல்களைக்கேட்டு அதையே சோக உணர்வாக உணரக்கூடிய நிலைக்கு நாம் போனதால் அதையே எல்லா இயக்குனர்களும் கேட்டு அவரை அங்கே பாடவைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

நேற்று Asianet தொலைக்காட்சியில் idea star singer season -5 ல் அதன் நடுவர் சரத் அவர்கள் ஒரு விஷயம் சொல்கிறார் தமிழில் வந்த “சிறைச்சாலை” (மோகன்லால், தபு நடித்தது) படத்தில் வரும் “செம்பூவே” பாடல் பற்றி கூறும்போது இளையாராஜா என்ற மனிதர் உலகில் இசையை ரசிக்கும் எல்லோருக்கும் ஒரு அனுக்கிரகம் என்று. அனுக்கிரகம் என்றால் மலையாளத்தில் ஆசிர்வாதம் என்று பொருள்.இப்படி ஒரு அற்புதமான ஒரு சாதனை அல்லது சகாப்தம் என்று கூறும் அளவுக்கு சிறந்த இளையராஜா அவர்கள் நிச்சயமாக இதை தன்விருப்பத்திற்கு செய்திருக்கமாட்டாரோ என்று தோன்றுகிறது.

இந்தப்படத்தில் கதாநாயகி தன் கதையை விவரிக்கும் இடத்தில் உள்ள வசனம் மிக நேர்த்தியானதாக எனக்கு தோன்றியது “ புது சரக்குன்னு புது சரக்குன்னு மூனுநாள்ல என்ன முப்பத்தாறுபேறு மோந்து பார்த்தாங்க அதுக்கப்புறம் நான் எண்ணல” மிகுந்த வலியை ஏற்படுத்தியது. படம் முழுக்க நமது மனதை ஆழமாக பாதிக்கும் ஒரு அற்புதமான உணர்வை பெறவைக்கிறது படம், எல்லோரும் பல முறை பார்க்கவேண்டிய படம். மனம் பலவாறு பண்படும்.

தமிழ் சினிமா இப்படி எங்கோ பத்திரமாக இருக்கிறது என்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும். மிஷ்கின் ஒரு அற்புதமான கலை படைப்பை தந்திருக்கிறார், அவரைப்பற்றிய விமர்சனங்களை எல்லாம் இந்த ஒரு படத்திற்காக பொருத்துகொள்ளலாம் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது.

தவநெறிச்செல்வன்

Dec 7, 2010

கேரள பயணம்-1

கேரளத்தின் அழகினை காண ஒரு நீண்டகால ஆசை இருந்தது. திடீரென்று ஒருநாள் மைசூர் வழி கேரளா புறப்பட்டோம் குடும்ப சகிதம். அம்மாவுக்கு புதிய இடங்களை காண்பிக்க வேண்டிய ஆவல் இருந்தது.

கேரளத்தின் மீது ஒரு அளவில்லாத காதல் எனக்குள் உண்டாகி இருந்தது, கடவுளின் சொந்த பூமி என்கிற கேரள சுற்றுலா மையத்தின் வாசகம் என்னை அந்த ஊரின் மீது மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது, நான் தற்போது கண்டுகொண்டிருக்கும் எல்லா சினிமாக்களும் மலையாளப்படங்கள்தான், தமிழ்ப்படங்கள் ஒரு சராசரி மலையாளப்படத்தை எட்டிப்பிடிக்க வெகுகாலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது, ஒரு அழகான கதையை எடுத்துக்கொண்டு அதில் எந்த ஜோடனையும் சேர்க்காமல், அந்த கதை களத்தில் எந்த ஒரு நெருடலும் சடாரென்ற காட்சிதாவலும் இல்லாத எத்தனையோ சினிமாக்கள். மிக அழகான ஒரு நகைச்சுவையை கொண்டிருக்கின்றன.

பல தமிழ்படங்கள் மலையாளப்படங்களின் தழுவல் அல்லது மறு உருவாக்கம் என்பது எனக்கு மலையாளத்திரை உலகில் நுழைந்த பின் தான் புரிந்தது.

திண்டுக்கல் சாரதி என்கிற புதிய தமிழ்படம், ஒருகாலத்தில் வடக்கு நோக்கி இயந்திரம் என்று மலையாளத்தில் வந்த படம்தான், அது எடுக்கப்பட்ட விதமும், தமிழில் எடுக்கப்பட்ட விதமும் மிகுந்த வேறுபாடுகொண்டது. தமிழில் வந்த வெள்ளித்திரைப் படம் மலையாளத்தில் உதயபானுதாரா என்ற பெயரில் வந்ததுதான்.

சரி இது சினிமா கட்டுரையாகி விடப்போகிறது. நான் மைசூரில் மிருக காட்சிசாலைக்கு முதலில் சென்றோம், நல்ல அழகான சூழலில் அமைக்கப்பட்டிருக்கிறது, பல மிருகங்கள் நல்ல செழுமையோடு இருக்கின்றன, மிகவும் கவர்ந்தது ஓட்டகச்சிவிங்கியும் வெள்ளைப்புலியும்தான், பலவகை கிளிகள் ஒரு அற்புதம்தான்.

அதன்பின் மாலை 5 மணிவாக்கில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா கண்ணூருக்கு புறப்பட்டோம் பலரிடம் வழி கேட்டு எனது ஓட்டுனர் ஒரு நல்ல வழியைப்பிடித்தார்.
மைசூரில் இருந்து கண்ணூர் செல்லும் நண்பர்களுக்கு ஒரு அறிவுரை பகல் நேரத்தில் மழை இல்லாத காலத்தில் செல்லவும் பார்க்க நல்ல அழகிய பாதை, ஒரு நீண்ட மலைப்பாதை.

சுமார் 250 கிமீ தூரத்தை நாங்கள் 8 மணிநேரம் செலவழித்து கடக்க வேண்டி இருந்து, கடுமையான மலைப்பாதை மைசூரில் இருந்து விராஜ் பேட்டை என்ற ஊருக்கு செல்லவேண்டும், கிட்டத்தட்ட ஒரு காட்டுக்குள் செல்கிற வழிதான் அந்த வழியை பிடிக்கும் போது இரவு 7 மணிக்குமேல் ஆகிவிட்டிருந்தது. சிறிய ஒருவழிச்சாலை, அடர்ந்த காட்டு வழி எதிரில் வருகின்ற வாகனங்களைத்தவிர வேறு ஓன்றும் கிடையாது, சாலை வேறு மிகமிக மோசம், வழிகேட்க கூட வசதியில்லை, ஆனால் இயற்கை அங்கே பத்திரமாயிருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட இடங்களே கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவுக்கு காங்ரீட் காடுகளாக மாறிவிட்டன, இயற்கை நமக்கும் காடுகளை கொடுத்திருக்ககூடும் அவ்வளவையும் அழித்து விட்டிருக்கிறோம் என்று நினைத்தால் நெஞ்சில் ரத்தம் வடிகிறது.

இடையில் இரு வன சோதனைச்சாவடி வந்தது, மற்றபடி மனித நடமாட்டம் இல்லாத பகுதிபோல்தான் காணப்பட்டது, இந்த விராஜ்பேட்டை இருப்பது கர்நாடகத்தில்தான், சரோஜா சினிமாவில் வருகின்ற ஒரு ஊரைப்போல பல ஊர்கள் வந்து போனது, ஆள் நடமாட்டம் இல்லை, கடுமை இல்லாத மெல்லிய பனிப்பொழிவு, மெல்ல மெல்ல எங்களது வாகனம் மேல் நோக்கி சென்றுதான் விராஜ்பேட்டையை அடைய வேண்டி இருக்கிறது, அது கடல் மட்டத்தில் இருந்து நல்ல உயரத்தில் இருக்கின்ற ஊர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் போகும் வழியில் நாங்கள் ஏறிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை சாலை சாதாரணமாகத்தான் இருந்தது.

எல்லோருக்கும் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்தது அத்தனை பீதியான பாதையாகத்தான் அது இருந்து. ஒருவேளை பகலில் சென்றிருந்தால் நல்ல கண்ணுக்கு விருந்தான காட்சிகள் கிடைத்திருக்கும். விராஜ் பேட்டையில் இருந்து கேரளா செல்ல வேண்டிய வழியில் திரும்பும் முன் அங்கே வழிகேட்டால் அவர்கள் வழியும் சொல்லி சுமார் 90 கிமீ போகவேண்டும் என்று சொன்னார்கள். மிக மோசமான காலநிலையும் சாலை வளைவுகளும், கொண்டை ஊசி வளைவுகளும் எங்களுக்காக காத்திருந்தன