Dec 30, 2010

பீஹார். (அரசியல் அல்ல)



பீஹார் மாநிலத்தைப்பற்றிய பல செய்திகள் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது, அரசியல் ரீதியாகவும், வளர்ச்சியிலும் மிகவும் பிற்பட்டு போன ஒரு மாநிலமாக கடந்தகாலங்களில் இருந்து விட்டதால் இந்த நிலை என்று நினைக்கிறேன். பீஹாரைப்பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
பீகாரில் பல மொழிகள் பேசப்படுகின்றன,ஆனால் ஹிந்தி பொது மொழியாகவும் அரசு மொழியாகவும் இருக்கிறது. பீகாரில்தான் மகாபாரத கர்ணன் ஆண்ட அங்கதேசம் உள்ளது. அதன் பகுதிகளில் பேசப்படும் மொழி “அங்கிகா” என்று அழைக்கப்படுகிறது. ஹிந்தி எழுத்துக்களே உபயோகப்படுத்தினாலும் உச்சரிப்பு பேசும் முறையில் மாற்றம் உள்ள ஒரு மொழி. கர்ணன் தினமும் காலையில் தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்த இடம் இன்றும் கர்ணசோலா என்று இருக்கிறது. பிறகு தலைநகர் பாட்னா முன்பு வரலாற்றில் பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட இடம் சந்திரகுப்த மெளரியர் தொடங்கி மகா அசோகர், குப்த பேரரசு ஹர்ஷவர்தனர் போன்ற மகா அரசர்கள், ஏசு பிறப்பதற்கு முன்பே ஆண்ட மிகுந்த பெருமை உடைய நகரம் பாடலிபுத்திரம்(பாட்னா).

மிகுந்த செல்வ வளத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கிய பூமியாக இருந்தது, இந்த பாட்னா பகுதியில் பேசப்படும் மொழி “மகஹி” என்று அழைக்கப்படுகிறது, இது மகத நாட்டுப்பகுதியாகும், நாம் நன்கு அறிந்த பீகாரின் போஜ்பூரி மொழி பீகாரில் 5 மாவட்டங்களில் மட்டும்பேசப்படுகிறது. அதுவும் உத்திரபிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் மட்டும்தான். மகத நாட்டைப்பற்றி நாம் சிறு வயதில் படித்திருப்போம், நந்த வம்ச அரசர்கள் ஆண்ட பூமி, தனநந்தருக்கும் சாணக்கியருக்கும் ஏற்ப்பட்ட சண்டையால் சந்திரகுப்த மெளரியர் உருவாகி நந்த வம்சத்தை முழுமையாக அழிக்கிறார், இடையில் அலெக்ஸாண்டர் கூட பாடலிபுத்திரம் வந்து சென்று, செல்யூகஸ் நிகேடாரை தனது பிரதிநிதியாக நியமித்து, திரும்பி கிரேக்கம் செல்லும் வழியில் பாபிலோனில்( ஈராக்) இறந்து போக, மெளரிய சந்திரகுப்தர் இங்கிருந்த கிரேக்கப்படைகளை விரட்டி அடித்து, முழுமையான மெளரிய பேரரசை நிறுவுகிறார். மெளரிய பேரரசு அசோகர் காலத்தில் மிகப்பெரிய பேரரசாக மாறியது, அந்த அளவுக்கு இந்தியாவை அதன் பிறகு ஆண்டவர்கள் ஒளரங்கசீபூம் ஆங்கிலேயர்களும்தான்.



வடபீகாரில் மைதிலி என்ற ஒரு மொழி பேசப்படுகிறது, இந்த மொழியில் வித்யாபதி என்ற கவிஞர் இறைப்பாடல்கள் பலவற்றை சிவன் மீது பாடி இருக்கிறார், இவரின் பாடல்கள் இன்றும் பீஹாரின் பொக்கிஷமாக கருத்தப்படுகிறது. இவர் வாழ்க்கை ஒரு சுவையான கதையாக சொல்லப்படுகிறது. இவர் வீட்டில் ஒரு வேலைக்காரன் உதவிக்கு இருந்ததாகவும், இவரின் மனைவி அந்த வேலைக்காரனை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், ஒருநாள் எங்குமே தண்ணீர் இல்லாத போது கவிஞரின் மனைவி மிகவும் கோபம் கொண்டு அவனை கங்கைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரப்பணித்ததாகவும், அப்போது அந்த வேலைக்காரன் சாதாரணமாக வீட்டிற்கு வெளிப்புறத்தில் உள்ள தரையில் பானையை தண்ணீர் எடுப்பதுபோல் கவிழ்த்து எடுக்க அதில் தண்ணீர் நிரம்பி இருந்ததாகவும் அதனை கண்ட கவிஞர் வித்யாபதி தன் மனைவியிடம் இவன் சாதாரண ஆள் இல்லை சிவபெருமானே இங்கு வந்து இருக்கிறான் என்று தன் மனைவிக்கு உணர்ந்தியதாகவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்த நிலையில் அந்த வேலைக்காரன் மறைந்து போய்விட, வித்யாபதி அவனைத்தேடி குடும்பம் விட்டு வெளியே வந்து, ஒரு சந்நியாசி போல வாழ்ந்து வந்ததாகவும். அந்த பித்தநிலையில் அவர் பாடியபாடல்கள் “மைதிலி” மற்றும் “பெங்காலி” மொழியில் அற்புதமான கவிதைகள் என்பதும் அறியமுடிகிறது.அந்த வேலைகாரன் பெயர் கூப்னா என்று கூறப்படுகிறது.
இதில் முழுமையான கதை யாரவது அறிந்திருந்தால் அதை தெரிவிக்கவும். இது என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல்.


நாலந்தா பல்கலைக்கழகம்

இன்னும் நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி நாம் படித்திருப்போம், அதனை உருவாக்கியவர்கள் மெளரியர்களும் குப்த மன்னர்களும்தான், புத்தர் நாலந்தாவில் தங்கி பல சேவைகளை செய்த பகுதியாக இருந்ததால் அங்கு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது, பின்னர் மொகலாய ஆட்சிகாலத்தில் அது முழுமையாக எரிக்கப்பட்டது, இந்த பல்கலைக்கழகத்தில் பல தேசத்து மாணவர்களும், இலக்கியங்களும் இடம்பெற்று இருந்ததாகவும் சொல்லப்படுகிறது, உலகின் முதல் பல்கலைக்கழகம் இதுதான் என்று நினைக்கிறேன்,
சீன யாத்திரீகர் யுவான்சுவாங் போன்றவர்கள் வந்து பார்த்து இதைப்பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள், பீகாரில் புத்த கயா இருப்பது எல்லோரும் அறிந்ததே, நாலந்தாவின் காலம் கிமு 427- கிபி 1197 வரை.


“விக்ரம் சீலா”

இதே நேரத்தில் “விக்ரம் சீலா” என்ற இன்னொரு பல்கலைக்கழகமும் இதே பகுதியில் உருவாக்கப்பட்டது. இரண்டு புத்தமத அடிப்படைகளை கொண்ட பல்கலைக்கழகங்கள் என்றாலும் உலகின் பல தத்துவங்கள் அங்கே பாதுகாக்கப்பட்டன, அங்கிருந்த நூலகம் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாக இருந்தது. தர்மபாலர் என்ற அரசரால் உருவாக்கப்பட்டு கிபி 783ல் உருவாகி பின்னர் அழிக்கப்படு இப்போது சிதிலங்களாக இருக்கிறது. அதன் புகைப்படங்களை கொடுத்துள்ளேன்.
பீகாரைப்பற்றி பேசும் போது மன்னர் ஷெர்ஷா சூரி பற்றி பேசாமல் இருக்கமுடியாது, இவரின் நிர்வாகத்திறைமை பற்றி பல ஆச்சர்யமான தகவல்கள் உண்டு, மொகலாய இரண்டாம் அரசர் ஹிமாயுனை ஓடஓட விரட்டி அடித்து சில ஆண்டுகளே ஆண்டாலும் ஒரு அற்புதமான நிர்வாகத்தை ஏற்படுத்திய இந்த ஆப்கானிய வீரர் வாழ்ந்ததும் இங்குதான், இவரின் அடியொற்றிய நிர்வாகத்தால்தான் அக்பர் மகா அக்பர் என்று மொகலாய வரலாற்றில் பேசப்படுகிறார். இவரைப்பற்றிய தகவல்கள் மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தில் அற்புதமாக விளக்கபட்டுள்ளது.
சீக்கியகுரு குருகோவிந்த் சிங் பிறந்ததும் பீகாரில்தான் அவரின் அடக்கஸ்தலம் இன்றும் பீகாரில் மிகவும் முக்கிய சரித்திர சான்றாக இருக்கிறது.
இப்படி பீகாரைப்பற்றி பல அற்புத வரலாறு குவிந்து கிடக்கிறது, கிருஸ்த்து பிறப்பதற்கு முன்னரே மிகவும் மேன்மையான பகுதியாக திகழ்ந்த இந்த பகுதி இன்று இந்தியாவின் பின் தங்கியபகுதியாக மாறிக்கிடப்பதற்கு காரணம் அதனில் உண்டான ஜாதி மத ஏற்ற தாழ்வுதான் என்று படித்த பீகாரிகள் நினைக்கிறார்கள். இதனை மீண்டும் மேல்நோக்கி கொண்டு செல்லும் பணியில் இன்றைய பீகாரின் முதல்வர் திரு நிதிஷ்குமார் இருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம்.

தவநெறிச்செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்