கேரளத்தின் அழகினை காண ஒரு நீண்டகால ஆசை இருந்தது. திடீரென்று ஒருநாள் மைசூர் வழி கேரளா புறப்பட்டோம் குடும்ப சகிதம். அம்மாவுக்கு புதிய இடங்களை காண்பிக்க வேண்டிய ஆவல் இருந்தது.
கேரளத்தின் மீது ஒரு அளவில்லாத காதல் எனக்குள் உண்டாகி இருந்தது, கடவுளின் சொந்த பூமி என்கிற கேரள சுற்றுலா மையத்தின் வாசகம் என்னை அந்த ஊரின் மீது மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது, நான் தற்போது கண்டுகொண்டிருக்கும் எல்லா சினிமாக்களும் மலையாளப்படங்கள்தான், தமிழ்ப்படங்கள் ஒரு சராசரி மலையாளப்படத்தை எட்டிப்பிடிக்க வெகுகாலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது, ஒரு அழகான கதையை எடுத்துக்கொண்டு அதில் எந்த ஜோடனையும் சேர்க்காமல், அந்த கதை களத்தில் எந்த ஒரு நெருடலும் சடாரென்ற காட்சிதாவலும் இல்லாத எத்தனையோ சினிமாக்கள். மிக அழகான ஒரு நகைச்சுவையை கொண்டிருக்கின்றன.
பல தமிழ்படங்கள் மலையாளப்படங்களின் தழுவல் அல்லது மறு உருவாக்கம் என்பது எனக்கு மலையாளத்திரை உலகில் நுழைந்த பின் தான் புரிந்தது.
திண்டுக்கல் சாரதி என்கிற புதிய தமிழ்படம், ஒருகாலத்தில் வடக்கு நோக்கி இயந்திரம் என்று மலையாளத்தில் வந்த படம்தான், அது எடுக்கப்பட்ட விதமும், தமிழில் எடுக்கப்பட்ட விதமும் மிகுந்த வேறுபாடுகொண்டது. தமிழில் வந்த வெள்ளித்திரைப் படம் மலையாளத்தில் உதயபானுதாரா என்ற பெயரில் வந்ததுதான்.
சரி இது சினிமா கட்டுரையாகி விடப்போகிறது. நான் மைசூரில் மிருக காட்சிசாலைக்கு முதலில் சென்றோம், நல்ல அழகான சூழலில் அமைக்கப்பட்டிருக்கிறது, பல மிருகங்கள் நல்ல செழுமையோடு இருக்கின்றன, மிகவும் கவர்ந்தது ஓட்டகச்சிவிங்கியும் வெள்ளைப்புலியும்தான், பலவகை கிளிகள் ஒரு அற்புதம்தான்.
அதன்பின் மாலை 5 மணிவாக்கில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா கண்ணூருக்கு புறப்பட்டோம் பலரிடம் வழி கேட்டு எனது ஓட்டுனர் ஒரு நல்ல வழியைப்பிடித்தார்.
மைசூரில் இருந்து கண்ணூர் செல்லும் நண்பர்களுக்கு ஒரு அறிவுரை பகல் நேரத்தில் மழை இல்லாத காலத்தில் செல்லவும் பார்க்க நல்ல அழகிய பாதை, ஒரு நீண்ட மலைப்பாதை.
சுமார் 250 கிமீ தூரத்தை நாங்கள் 8 மணிநேரம் செலவழித்து கடக்க வேண்டி இருந்து, கடுமையான மலைப்பாதை மைசூரில் இருந்து விராஜ் பேட்டை என்ற ஊருக்கு செல்லவேண்டும், கிட்டத்தட்ட ஒரு காட்டுக்குள் செல்கிற வழிதான் அந்த வழியை பிடிக்கும் போது இரவு 7 மணிக்குமேல் ஆகிவிட்டிருந்தது. சிறிய ஒருவழிச்சாலை, அடர்ந்த காட்டு வழி எதிரில் வருகின்ற வாகனங்களைத்தவிர வேறு ஓன்றும் கிடையாது, சாலை வேறு மிகமிக மோசம், வழிகேட்க கூட வசதியில்லை, ஆனால் இயற்கை அங்கே பத்திரமாயிருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட இடங்களே கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவுக்கு காங்ரீட் காடுகளாக மாறிவிட்டன, இயற்கை நமக்கும் காடுகளை கொடுத்திருக்ககூடும் அவ்வளவையும் அழித்து விட்டிருக்கிறோம் என்று நினைத்தால் நெஞ்சில் ரத்தம் வடிகிறது.
இடையில் இரு வன சோதனைச்சாவடி வந்தது, மற்றபடி மனித நடமாட்டம் இல்லாத பகுதிபோல்தான் காணப்பட்டது, இந்த விராஜ்பேட்டை இருப்பது கர்நாடகத்தில்தான், சரோஜா சினிமாவில் வருகின்ற ஒரு ஊரைப்போல பல ஊர்கள் வந்து போனது, ஆள் நடமாட்டம் இல்லை, கடுமை இல்லாத மெல்லிய பனிப்பொழிவு, மெல்ல மெல்ல எங்களது வாகனம் மேல் நோக்கி சென்றுதான் விராஜ்பேட்டையை அடைய வேண்டி இருக்கிறது, அது கடல் மட்டத்தில் இருந்து நல்ல உயரத்தில் இருக்கின்ற ஊர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் போகும் வழியில் நாங்கள் ஏறிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை சாலை சாதாரணமாகத்தான் இருந்தது.
எல்லோருக்கும் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்தது அத்தனை பீதியான பாதையாகத்தான் அது இருந்து. ஒருவேளை பகலில் சென்றிருந்தால் நல்ல கண்ணுக்கு விருந்தான காட்சிகள் கிடைத்திருக்கும். விராஜ் பேட்டையில் இருந்து கேரளா செல்ல வேண்டிய வழியில் திரும்பும் முன் அங்கே வழிகேட்டால் அவர்கள் வழியும் சொல்லி சுமார் 90 கிமீ போகவேண்டும் என்று சொன்னார்கள். மிக மோசமான காலநிலையும் சாலை வளைவுகளும், கொண்டை ஊசி வளைவுகளும் எங்களுக்காக காத்திருந்தன
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்