Dec 29, 2008

இந்திய - பாக் போர் வாய்ப்புகள்


இன்று ஏற்ப்பட்டுள்ள போர் பதட்டம் மிக முக்கியமான ஒரு சூழலை இந்திய பாகிஸ்தான் இடையே ஏற்ப்படுத்தியுள்ளது, இரண்டு நாடுகளும் தத்தம் எல்லைகளில் தனது ராணுவத்தை குவித்துக்கொண்டிருக்கின்றன, இதையெல்லாம் அமெரிக்க அரசு மிகவும் பொறுமையோடு இருக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது, இது ஒன்றும் சாதாரண விஷ்யமில்லை, நமக்கென்று ஒரு குணம் இருக்கிறது,

முன்பு இலங்கை பிரச்சினையில் நாம் தலையிட்டு நமது ராணுவம் மோசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டு இந்திய மண்ணில் வந்து இறங்கியபோது அப்போது முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் எனது தமிழ் மக்களை கொன்று மானபங்கப்படுத்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று ஒதுங்கி கொண்டது நினைவிருக்கலாம், அதன் பின் இந்திய தேசமும் இலங்கை பிரச்சினையில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டாலும் பின்னர் ராஜிவ் படுகொலை நடந்த பின் பெரும்பாலான இந்திய தமிழர்கள் அதோடு இலங்கையை மறந்தே போனார்கள், அதாவது அந்த பிரச்சினையால் நமக்கு வீண் தலைவலிதான் என்பதால் ஒதுங்கிகொள்வது என்று,

இப்படி ஒதுங்கிப்போன நிலை மாறி இப்போதுதான் பழய சூடு தொடங்கியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் நிலை வேறு எத்தனை முறை சூடுபட்டாலும் அவர்களால் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது. எத்தனை குண்டு வெடிப்புகள் தற்கொலைப்படை தாக்குதல்கள் என்று அந்தநாடு அல்லோகலப்பட்டாலும் அவர்கள் நம் நாட்டின் மீதான வெறுப்பை மாற்ற விரும்ப வில்லை.

இந்தியாவின் நிலை போரை தொடங்குவதில் ஆர்வமில்லை என்று கூறிக்கொண்டிருந்தாலும் இந்திய படைகள் எல்லைப்புறத்தை நோக்கி நகர்த்தப்படுவதாக செய்திகள் வருகின்றன தினசரிகளில், இதன் நோக்கம்தான் என்ன, ஒரு பயமுறுத்தல் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் போர் இப்போது வருமா வராதா என்பது ஒரு தொங்கி நிற்கும் கேள்வி,

என்னைப்பொருத்தவரை போர் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருப்பதாக நினைக்கிறேன், உலகின் இரு அணு ஆயுத நாடுகள் நேரடியாக போர் செய்ததாக இதுவரை வரலாறு இல்லை, இந்திய பாகிஸ்தான் போர் வருமானால் அது அணு ஆயுதபோராக மாற வாய்ப்பில்லாமல் இல்லை, இதில் வெற்றி தோல்வி என்பது அடுத்த விஷயம் ஆனால் அதனால் இழக்கப்போகிற இழப்பு ஈடு செய்யக்கூடியதா என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

இன்றைய பொருளாதார குழப்ப நிலையில் இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு தாக்கு பிடித்து வருகிறது, ஆனால் பாகிஸ்தான் பொருளாதாரம் கிட்டதட்ட மிக மோசமான நிலையில் எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிராகரிக்கப்பட்ட பின் இப்போது உலக வங்கி கொஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது அந்த பணம் வராமல் போனால் அந்த நாடு போர் இல்லாமலேயே உள்நாட்டு போரால் அழியக்கூடிய அபாயம் உள்ளது, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலைக்கு அரசு செல்லும் வாய்ப்பு இருப்பதாக பல்வேறு பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
இந்நிலையில் அந்த நாடும் போரை விரும்ப சாத்தியமே இல்லை, இப்போது அவர்கள் ஆப்கான் எல்லையில் இருந்து தனது துருப்புக்களை இந்திய எல்லைக்கு மாற்றி கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன அது அமெரிக்க நேட்டோ படைகளுக்கு மிக கெடுதலான விஷ்யமாகும், ஆப்கானிஸ்தானில் போரிட்டு கொண்டிருக்கும் நேட்டோ படைகளுக்கு உணவு ஆயுதம் எல்லாம் பாகிஸ்தான் வழியாகத்தான் சென்றாக வேண்டும் அந்த பகுதியில் நடைபெறும் தாலிபான் தாக்குதல்களால் அந்த சப்ளை வாகனங்கள் தொடர்ந்து தாக்கி அழிக்கப்படுகின்றன, அவைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் அப்பகுதியில் உள்ள தாலிபான் ஊடுருவல்களை தடுக்கவும் பாகிஸ்தான் படைகள் ஆப்கான் எல்லையில் அவசியம் அதனால் அமெரிக்க நேட்டோ நாடுகள் இந்த போர் நடந்தால் அது அவர்களின் பிரச்சினையாக பார்க்ககூடும்.

ஆனால் தாலிபான் தலைவர் முல்லா உமர் தனது சமிபத்திய செய்தி ஒன்றில் இந்திய போர் நடந்தால் அதில் தாலிபான்கள் பாகிஸ்தான் சார்பாக போர் புரிவார்கள் என்பது போல் கூறியுள்ளார், இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமில்லாத விஷ்யங்கள். ஒரு அரசு நாட்டின் வளர்சி மீது கவனம் செலுத்தாமல் வெறும் பக்கத்து நாட்டுடனான வெறுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை காலமாய் மாறி மாறி பிழைத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பாகிஸ்தானின் அரசுதான், அங்குள்ள அறிவு ஜீவிகள் எழுத்தாளர்கள் மற்றும் சமாதான விரும்பிகள் எல்லாம் அந்த நாட்டு மக்களை வழிநடத்தமுடியாமல் இருப்பதுதான் மிக கொடுமையான விஷயம், ஒரு வெறுப்பு என்பது இப்படி மறையாமல் 60 ஆண்டுகளுக்கு மேலாக வளர்கப்பட்டு புரிந்து கொள்ளாமல் விடப்பட்டுள்ளதுதான் இந்த சமுதாயம் செய்த தவறு,

பாகிஸ்தானுக்குள்ளேயே வடமேற்கு மாகாணம் கிட்டதட்ட தன்னை தனி நாடாகத்தான் நடத்தி கொண்டிருக்கிறது, அதுபோல் பலுசிஸ்த்தானும் கிட்டதட்ட தனிநாடு போல்தான் தனி வரி வசூல் நிர்வாகம் எல்லாம், பாகிஸ்தான் என்பது சிந்து மற்றும் மத்திய மகாணங்கள்தான் அங்கு மட்டும்தான் போலிஸ் அரசு எல்லாம் செல்லுபடியாகும், மற்ற மகாணங்களில் எல்லாம் ராணுவம் சென்றால்தான் கொஞ்சம் பேச்சை கேட்பார்கள் அப்படி இருக்கிற நிலையில் அவர்களுடனான போர் முடியும் போது கிட்டதட்ட அந்த நாடு சிறு சிறு துண்டுகளாக சிதறிவிட வாய்ப்பிருக்கிறது.

இதெல்லாம் தெரியாமல் இல்லை அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, இனி ஒரு போரை நிச்சயம் பாகிஸ்தான் தாங்காது, அவர்கள் வேண்டுமானால் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்று சொல்லிக்கொள்ளலாம், போர் நடத்த முதலில் பணம் வேண்டும் எங்கே இருக்கிறது பணம், இந்தியா தனது மிகப்பெரிய மக்கள் தொகையால் அதனை சரி செய்து கொள்ளும் ஆனால் பாகிஸ்தான்?

இப்போதைய இந்திய தேவை பாகிஸ்தானை நிர்பந்த படுத்துவதுதான், அதைதான் நமது நாடு செய்து கொண்டிருக்கிறது கூடவே இப்போது IMF டம் இருந்து பணம் பெற அதற்கு அமெரிக்காவின் சிபாரிசு தேவை ஆகையால் அவர்கள் சொல்வதை அது கேட்கும் எனவே நமது நாடு தொடர்ந்து அமெரிக்கா மூலமாக அழுத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்,

ஒரு அமைதி இழந்த அல்லது பொருமை இழந்த நிலையில் ஏதேனும் ஒரு பொறி எங்காவது தூண்டப்பட்டால் அது ஒரு மோசமான அழிவிற்கான போரை தொடங்கி வைத்த நிகழ்வாக மாறிவிடும் அது எந்த மாதிரியான நிகழ்வோடு முடியும் என்று சொல்வதற்கில்லை.

செல்வம்

Dec 28, 2008

புத்தக விழா

நீண்ட நாளாக எழுதாமல் இருந்துவிட்ட ஒரு இடைவெளி தோன்றுகிறது, கிழக்கு பதிப்பகம் தற்போது புத்தக கண்காட்சி வருகின்ற சூழலில் நிறைய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது, அதன் விழா ஒலிபதிவுகள் பத்ரியின் “எண்ணங்கள்” வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருக்கின்றன, எனது வலைப்பூவில் உள்ள தொடர்பின் மூலம் அதனை down load செய்து கொள்ளலாம்.

இலக்கியம் என்பது மிக மன நிம்மதி தரக்கூடிய விஷ்யம் என்பதும், இது போன்ற பேச்சுக்கள் மிகவும் உற்சாகம் தரக்கூடியதாகவும் இருக்கும். கிழக்கு பதிப்பகம் என்பது பா.ராகவன், பத்ரி மற்றும் பலர் நிறைந்த ஒரு எழுத்தாளர் குழுமம், பா.ராகவனின் எழுத்து நடை மிக உற்சாகமானது, டாலர் தேசம், 9/11, நிலமெல்லாம் ரத்தம் போன்ற மிக அற்புதமான புத்தகங்களை எழுதியவர், இப்போது குமுதம் ரிப்போர்டரில் “யுத்தம் சரணம்” என்று இலங்கையின் சம்பவங்களை எழுதி வருகிறார். சாருவும் தனது புத்தகங்களை இந்த புத்தக காட்சியில் வெளியிடுகிறார், உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் சொல்லுங்கள் புத்தகங்களை சென்று பார்த்து வாங்கி படிக்க.

ஒரு மிக அற்புதமான அனுபவம் இந்த புத்தகங்களை சென்று பார்ப்பது, எவ்வளவு துறைகளில் எவ்வளவு மனிதர்கள் தங்கள் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதும் அவைகள் நமக்கு எப்படியெல்லாம் உதவும் என்பதும் புரியும். நான் இந்தியாவில் இருக்கும் காலங்களில் புத்தக கண்காட்சிகளை விரும்பி சென்று பார்த்து பல புத்தகங்களை வாங்குவது வழக்கம். ஆகையால் எல்லோருக்கும் சொல்லுங்கள், வெறும் சமையல் புத்தகங்களையும் யோகா போன்ற உடற்பயிற்சி புத்தகங்களை மட்டுமே வாங்காமல் நல்ல இலக்க்கிய புத்தகங்களையும் வாங்குங்கள். எனது வலைப்பூவில் தமிழின் தலைசிறந்த 100 புத்தகங்கள் முந்தைய பதிவில் உள்ளது அதனை கூட முயன்று பாருங்கள்.

செல்வம்

Dec 18, 2008

உளறல்-13 (மனிதர்கள்)

ஒரு மனிதனின் அனுபவங்கள் மிக முக்கியமானவை, அதனைக்கொண்டேதான் அவன் தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறான், அனுபவமில்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனிதன் தடுக்கி விழுவதும் அது புதிய அனுபவமாக மாறுவதும்தான் அவனை வாழ்வின் எல்லா காலங்களிலும் எதிர்பாராத ஒன்றை எதிர்பார்க்க பழக்கி விட்டிருக்கிறது. நான் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் ஒரு வயதான பெரியவர் என்னிடம் கூறிய விஷயம் நான் வெகுநாள் கடைபிடித்தேன் அது ஒருவகை அனுபவ கொள்முதல் என்று சொல்லலாம்,

அவர் சொன்னார் தினசரி ஒரு புதிய மனிதனையாவது அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் அது உங்களின் பார்வையையும் அனுபவத்தையும் அதிகரிக்கும் என்று சொன்னார், புதிய மனிதன் நல்லவன் கெட்டவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடு இல்லாமல் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று சொன்னார், அதுமுதல் மாலை நேரங்களில் நானும் எனது நண்பர்கள் வைத்திருந்த கடைகளில் சென்று உட்காருவதை பழக்கிக்கொண்டேன், கடைக்கு வரும் மனிதர்கள் சிலரோடு அவ்வப்போது உரையாடுவது எனது நண்பர்களின் நண்பர்களை அறிமுகப்படுத்திக்கொள்வது என்று புதிய சுற்றம் உருவாக தொடங்கியது, ஆரம்பத்தில் எனது தங்குமிடத்தை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி நிகழ்சிகளிலேயே இருந்து வந்த எனக்கு அது புதிய வெளியாக தொடங்கியது, பலரை அறிமுகப்படுத்தியதன் மூலம் பல வழிகளில் பல உதவிகள் அனுபவங்கள் என்பன நம்மை அடைவது மறுக்கமுடியாதது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல குணங்கள் பல சூழல்களைப்பொருத்து வெளிப்படுகின்றன அதன் எல்லா அடிப்படை தேவையும் வாழ்வாதாரம்தான். தான் வாழ வேண்டிய கட்டாயம் மனிதனை வெவ்வேறு விதமாக தன்னை வெளிப்படுத்த வைக்கிறது, கடும் கோபம் பொறாமை,வன்மம், துரோகம் இப்படி பல விதமான உணர்வுகள் அவனிடமிருந்து வெளிப்படுகின்றன, இதெல்லாம் நீங்கள் மனிதர்களிடம் பழக பழக அதனை வெளிப்படுத்தாத மனநிலையில் ஒரு மனிதனை எப்படி எப்போதும் வைத்திருக்க முடியும் என்பதை உங்களுக்கு கற்றுத்தரும். அந்த உத்தி தெரிந்தவனே எல்லா நிலையிலும் சமாளிக்க தெரிந்தவனாகிறான். அது மனிதர்களை சந்திக்க சந்திக்க கூடும் என்பது உண்மை.

செல்வம்

Dec 10, 2008

உளறல் - 12 (நினைவுகள்)

தங்கர் பச்சனின் பள்ளிகூடம் பார்த்தபின் எனது பள்ளிக்கு சென்று காணவேண்டும் என்கிற ஆசை உண்டானது, அனேகமாக இது எல்லோருக்கும் தோன்றிய விஷ்யமாக இருக்கலாம், எனது பள்ளி வாழ்க்கை இரண்டு இடத்தில் என்பதால் எனது இரண்டு பள்ளிகளையும் காணவேண்டிய அவசியம் உள்ளது ஆனால் அது இன்னமும் நிறைவேறவில்லை.

சிலருக்கு பள்ளிகள் மாறிக்கொண்டே இருக்கும், காரணம் தந்தை தனது பணிமாற்றத்தால் அவ்வாறு நடைபெரும், பெரும்பாலானவர்கள் தனது பிள்ளகளின் கல்விக்காக குடும்பத்தை ஒரு இடத்திலும் தினசரி பயணித்து வேலைக்கு செல்பவர்களாகவும் இருப்பார்கள், அப்படி உள்ளவர்களின் குழந்தைகள் ஒரே இடத்தில் படிக்கும், எனக்கு கிட்டத்தட்ட 10 ம் வகுப்பு வரை ஒரே பள்ளியும் ஒரே ஊரும் அமைந்தது.

பள்ளி என்பது ஒரு சுகமான அனுபவமாக அதனைவிட்டு வெளியே வந்த பின் தான் உணரமுடியும், படிக்கும் காலங்களில் பெரும்பாலும் எப்போது விடுமுறை கிடைக்கும் என்கிற மனநிலையே இருந்து, ஆனால் இப்போது குழந்தைகளுக்கு இருக்கும் படிப்பு சுமைகள் அப்போது இல்லை, வீட்டுபாடம் என்பதுகூட அதிகம் எழுதி சென்றதாய் நினைவு இல்லை, அதிக நேரம் விளையாட்டு மைதானத்தில் கழிந்ததாக நினைவு. எனது வரலாற்று வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக கழிந்தன, மற்ற வகுப்புகள் அப்படி சென்றதாக நினைவு இல்லை, என்றாலும் கணிதம் மிகவும் கைவந்த கலையாக இருந்தது.

ஆசிரியர்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதை எப்போதும் இருக்கும், சைக்களில் எவ்வளவு வேகமாக வந்தாலும் எதிரில் ஒரு ஆசிரியர் வருவது கண்டால் உடனே நிறுத்தி இறங்கி அவருக்கு வணக்கம் தெரிவித்து அவர் கடந்து போனபின் தான் மீண்டும் சைக்கிளில் ஏறுவது வழக்கம் அது கிட்டதட்ட உடம்போடு ஊறிப்போன ஒரு செய்கை. அப்படி செய்யாவிட்டால் அவர் கோபிப்பார் என்றெல்லாம் எண்ணி செய்ததில்லை, இப்போதைய மாணவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை, இன்னும் முந்தைய காலங்களில் என்ன மாதிரி மரியாதைகள் இருந்தன என்று என்னை விட மூத்தவர்கள் எழுதவேண்டும்.

ஆசிரியர்கள் கற்று கொடுக்கும் சுவாரஸ்யத்தை பொருத்தே மிகவும் நேசிக்கப்பட்டார்கள், கடுமையான ஆசிரியர்களை கண்டால் மாணவர்களுக்கு பயம் மிக அதிகமாக இருக்கும். அவர்களின் வகுப்புகளில் மாணவர்கள் ஒரு கைதி போலோ அல்லது தற்காலிக மனநோயாளிபோலோதான் இருக்கவேண்டி இருந்தது. ஆனால் இப்போதைய சட்டங்கள் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கமுடியாமல் செய்து விட்டதால் ஒருவேளை மாணவர்களின் மரியாதை மாறிபோயிருக்கலாம்,

சைக்கிள் ஓட்ட பழகுவது பற்றி எழுத வேண்டும் என்று பல நாள் நினைத்தது உண்டு. சிறு வயதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எல்லோருக்கும் சைக்கிள் பழக்வேண்டிய சூழல் வந்துவிடும் இது ஒரு கட்டாய விஷயமாக அப்போது இருந்தது. இப்போது அது மோட்டார் சைக்கிள் கார் என்று மாறிவிட்டது,

சைக்கிள் ஓட்ட தருகிறேன் என்றால் அப்போது எவ்வளவு பெரிய வேலையானாலும் செய்ய காத்திருந்த காலம்.குரங்கு பெடல் என்று ஆரம்பித்து, பின்னர் கம்பிகளில் பயனித்து பின்னர் சீட்டுக்கு தாவி பின்னர் கேரியரில் அமர்ந்து கொண்டு ஓட்டுவது வரை ஒரு வளர்சி இருக்கும் அதன் பின்னர் டபுள்ஸ் டிரிபிள்ஸ் என்று தொடரும், குரங்கு பெடலில் யாராவது சைக்கள் ஓட்டிசெல்வதை பார்க்கும் போது சைக்கிள் ஒரு மாதிரி சாய்ந்த நிலையில் செல்வது போல் இருக்கும் அது ஒரு அற்புதமான அனுபவம். அந்த நேரத்தில் விழுகின்ற அடிகள் மிக மோசமானவை அதற்காக யாரும் மெதுவாக போனதாக நினைவு இல்லை, போடு போடுதான். அப்படி ஒரு வேகம்.

கம்பிக்கு மாறும் காலத்தில்தான் நிறைய பிரச்சினைகள் அடிகள் சற்று மோசமான இடங்களில் எல்லாம் விழும். அதிலிருந்து சீட்டிற்கு மாறும்போது கால் சற்று பெடலில் பட்டாமலும் பட்டும் மாறி மாறி இருக்கும் அப்போது பின்புறம் இருந்து பார்த்தால் ஓட்டுபனுடைய பின்புறம் படும் சிரமம் புரியும். நிறைய அடிபட்டால்தான் சைக்கிள் கற்றுக்கொள்ளமுடியும் என்று ஒரு சட்டமே இருந்தது, அது என்னவோ யாரோ எழுதிய தீர்ப்பு போல அடிபட்டாதான் கத்துக்க முடியும் தம்பி என்று சொல்வது ஒரு வாடிக்கையான சொல் அப்போது. கொஞ்சம் காசு கிடைத்தாலும் உடனே வாடகை கடைக்குபோய் சைக்கிள் எடுக்கவேண்டும், அந்த கடைக்காரர் ஏதோ ஒரு தீவிரவாதி போல நம்மை பார்ப்பார், காசு வைச்சிருக்கியா என்று கேட்டுவிட்டு அதையும் முன்னே பெற்றுக்கொண்டு இருப்பதிலேயே ஒரு பழய சைக்கிளை கொடுப்பார் அதுவும் சில பொருட்கள் இல்லாததாக இருக்கும், மணி, பெடல், போன்ற சாதனங்கள் இல்லாமல், அதுவும் இந்த பெடல் கட்டை இல்லாமல் அதன் மைய rod மட்டும் உள்ள சைக்கிளாய் இருந்தால் பெரும்பாடுதான், அதனை மிதிக்கும் போது வலி எடுக்கும் ஆனால் அதெல்லாம் அப்போது ஒரு பெரிய பொருட்டே இல்லை சைக்கிளை கொடுத்தாரே என்று ஒரு பெரிய நன்றி உணர்வுதான் வரும்.

சைக்கிள் அப்போது நம் வீட்டில் ஒரு மனிதர் போல இருந்தது, அதனை வீட்டு உறுப்பினர் போல மதித்தும் கழுவியும் துடைத்தும் ஆயுதபூஜை காலங்களில் அலங்கரித்தும் வைத்திருப்பது வழக்கம். அதெல்லாம் அடுத்த பதிவில் காணலாம்.

செல்வம்

Dec 6, 2008

உளறல்-11 மும்பை சம்பவம்


மும்பையில் நடந்த சம்பவங்களைப்பற்றி நிறைய கட்டுரைகள் ஆராட்சிகள் என வந்து கொண்டே இருக்கின்றன சோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை தாக்க வேண்டும் என்பது போன்றும் பல விதமான கருத்துக்கள் எல்லா திசையிலும் இருந்தும் வந்து கொண்டே இருக்கின்றன, அதிலும் பொடா போன்ற சில சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதும், மிக கடுமையான சட்டங்களை இயற்ற வில்லை கூடவே அரசியல்வாதிகள் தங்களின் ஓட்டு அரசியலால் ஒரு பாதுக்காப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தி விட்டார்கள் என்பதும், இன்னும் சில வலைபூக்கள் தீவிரவாதிகள் இந்துக்களின் காவிநிற கயிறு கட்டியிருந்தார்கள் எனவும் புதிய திசையில் சில வாதங்களை வைக்கிறார்கள், கீழே உள்ள தொடர்பில் காணலாம்,

http://kalaiy.blogspot.com/2008/12/blog-post_04.html

இவைகள் எல்லாம் அடிப்படையில்லாத வாதங்கள் என்பது புரியும், ஆனால் நடந்தது ஒரு மோசமான சம்பவம், அதனை முன்கூட்டியே நமது உளவுத்துறை கணிக்க தவறிவிட்டது, நமது நாட்டு அமைப்பில் இது மிகசிக்கலான விஷயம், எந்த கட்சியும் யார் மீது வேண்டுமானாலும் குறை சொல்லலாம், ஆனால் அவரவர் ஆட்சிகாலத்தில் அவர்கள் அப்படித்தான் நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குரியது,

உளவுத்துறை தனது இரு பிரிவுகளையும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே பெரிதும் பயன் படுத்துவதால் இது போன்ற சம்பவங்களை அவர்கள் முன்னறிவிக்க முடியாமல் போகிறது, சரியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் நிர்வாகம் அரசியல் சாராமல் நாட்டின் பாதுகாப்பு மட்டும் நோக்கமாக கொண்டு அதனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும், அது அரசியல் கண்காணிப்புகளால் தனது நேரத்தை வீணடிப்பதற்கு வாய்ப்பில்லாமல், தனது பணியை செய்ய அனுமதிக்கவேண்டும்,

பாகிஸ்தான் மீது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும், அது பி.ஜே.பி ஆட்சியின் போதும் தெரியும், அப்போது நடந்த கார்கில் போரில் எல்லைக்கோட்டை தாண்டாமல்தான் குண்டு வீச நம்மால் முடிந்தது, போர் நடக்கிறது, ஆளூம் அரசு பி.ஜே.பி ஆனால் எல்லைக்கோட்டை கடந்து நமது விமானங்கள் பறக்கவோ குண்டு வீசவோ முடியவில்லை, ஆனால் அந்த புரத்தில் இருந்து நமது tiger hill வரை அவர்களது ஆட்கள் ஊடுரூவி இருந்தார்கள்,

ஆகையால் எல்லா அரசுக்கும் எல்லா வகையிலும் இப்படி சில நெருக்கடிகள் இருக்கின்றன, உணர்சிவசப்பட்ட பேச்சுக்கள் எல்லா நிலையிலும் இருக்கின்றன, அதுவா இப்போதைய தேவை, இறந்து போன நமது வீரர்களுக்கு மரியாதைகள் செய்வதும் அதனை பெரிய சாதனைகளாக பேசி ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று பார்பதும் இப்போது அரசியல்வாதிகளின் நாடகங்கள் ஆகிவிட்டன.


எல்லா சம்பவங்களுக்கும் ஒரு எதிர் மறையான காரணத்தை கண்டு பிடிக்கிற சில அதி பயங்கர மதசார்பற்ற வாதிகளையும் கண்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இப்போதைய நடவடிக்கையாக திரு ப.சிதம்பரம் தனது அமைச்சகத்தில் நல்ல மாற்றங்களை உண்டு பண்ணுவார் என எதிர்பார்க்கலாம்,

மேலும் ஓட்டு அரசியல் வேறு இந்த பிரச்சினையில் முக்கிய பங்கு வகிக்கிறது, முஸ்லீம்களின் ஓட்டு போய்விடுமோ என்கிற பயம் காரணமாக அரசியல் கட்சிகள் மிகவும் மிதமான போக்கை தீவிரவாதிகளிடம் கடைபிடிப்பது மிகவும் அருவருக்கதக்கது,

பாகிஸ்தானோடு எல்லா உறவுகளையும் மீண்டும் மீண்டும் புதிப்பிக்கவேண்டிய அவசியம் என்ன, வாஜ்பாயி பஸ் விட்டார், மன்மோகன்சிங் ரயில் விட்டார் இப்படி கொஞ்சி குலாவ இரு கட்சிகளுமே முயன்று விட்டு, மற்றவரை குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது, ஒரு சரியான உத்திரவாதம் வரும்வரை எல்லா உறவுகளையும் நிறுத்துங்கள், சார்க் போன்ற கூட்டணிகளில் இருந்து விலக்குங்கள் அல்லது விலகுங்கள், எந்த முக்கியத்துவம் இல்லாத கடுமையான அரசியல் நெருக்கடிகளை உண்டாக்குங்கள்,

அதேநேரம் எல்லா வகையிலும் நமது நாட்டின் உளவுப்பிரிவை மிக பரவலான முறையில் கடுமையாக்குங்கள், எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாத ஒரு தினசரி ஆலோசனைகளின் மூலம் புதிய திட்டங்களை வகுக்கவேண்டும்,

அவைகள் நடக்கும் என்று எதிர்பார்போம், புதிய அமைச்சர் அதனை செய்வதாக கூறியுள்ளார் உளவு பிரிவுகளின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது ஒருவகையில் அதன்மீதான அணுகுமுறை அதிக முனைப்போடு இருக்கும் என்பதை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

இனியாவது நமது அப்பாவி மக்களின் உயிர்கள் மதிக்கப்படவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

துணுக்குகள்

நல்ல முடிவுகள்,அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால்
அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

ஒரு நொடி துணிந்தால்
இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும்
துணிந்தால் நாம்
ஜெயித்து விடலாம்.

மிகவும் நேர்மையாக
இருக்காதீர்கள்;
ஏனெனில் நேரான மரங்கள்
முதலில் வெட்டப்படும்;

நேர்மையானவர்களே
முதலில்
பழிதூற்றப்படுவார்கள்.

கொஞ்சம் வளைந்து
கொடுங்கள். வாழ்க்கை,
லகுவாய் இருக்கும்.

நர்சரி பள்ளி ஒன்றின்
உணவறையில் ஒரு கூடை
நிறைய ஆப்பிள்கள்
வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல்,
"ஒன்றுக்கு மேல்
எடுக்காதீர்கள்;
கடவுள்
பார்த்துக்கொண்டிருக்கிறார்"
என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு
பெட்டி நிறைய
சாக்லேட்டுகள்
வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட்

பெட்டியின் மீது ஒரு
குழந்தை பின்வருமாறு
எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ
எடுத்துக்கொள்ளுங்கள்;
கடவுள், ஆப்பிளைப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

Nov 25, 2008

நண்பரின் கைவண்ணம்

எனது நண்பர் திரு ஜீவா அவர்கள் ஒரு வித்தியாசமான விஷயத்தை எழுதியுள்ளார் அவரின் வேண்டுகோளின் படி இந்த பதிவு, வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், தொடர் பணி சுமையால் ஏதும் எழுத முடியாத நிலை விரைவில் எழுத முயல்கிறேன். அன்புடன் செல்வன்

எனது அன்பு தமிழ் வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கம், எனக்கு தமிழ்மேல் அதிக பற்று உண்டு, ஆனால் அது உறங்கி கொண்டிருந்தது, அதை தட்டி எழுப்பியது எனது அன்பு நண்பர் திரு. செல்வம் அவர்கள்தான். இது எனது முதல் பயணம் இதில் தமிழில் சில சொற்களை பற்றி ஆராய்வோம். நாம் அன்றாடம் காணும் சினிமாவிலும், மற்றும் சமுதாயத்திலும் வழக்கமாக உபயோகிக்கும் வார்த்தை ஒக்கமக்கா, குண்டக்கமண்டக்க என்ற வார்த்தை இது எப்படி வந்தது என்று இப்பொழுது பார்ப்போம். ஒரு கற்பனைதான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பம் இருந்தது, அந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள், அதில் மூத்தது ஒரு குண்டான பெண்பிள்ளை, இரண்டாவது ஒல்லியான பெண்பிள்ளை ,மூன்றாவது ஆண் பிள்ளை, இந்த மூன்றுபேரும் ஒரே பள்ளிகூடத்தில் படித்து வந்தார்கள், இவர்கள் எப்பொழுதும் பள்ளிக்கூடம் போனால் ஒன்றாகத்தான் சேர்ந்து போவார்கள். இதில் அதிக புத்திசாலி ஒல்லியானபெண், மூத்த பெண் நன்றாக படிக்காது, அதனால் அந்த பெண்ணை எல்லோரும் மண்டு என்றுதான் சொல்வார்கள், பள்ளிகூடத்தில் கேள்வி கேட்டால் தவறாகத்தான் பதில் சொல்லும், ஆனால் இரண்டாவது பெண் நன்றாக பதில் சொல்லும், ஒருநாள் இரண்டாவது பெண் ஆசிரியர் கேள்வி கேட்கும் பொழுது தவறாக பதில் சொல்லிவிட்டது, அதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், உங்க அக்கா குண்டு அக்கா மண்டு அக்கா மாதிரி பதில் சொல்லாதே என்று ஆசிரியர் சொல்ல , அது முதல் அது மருவி குண்டக்க மண்டக்க (குண்டு அக்கா மண்டு அக்கா) என்று ஆகிவிட்டது, இதுதான் குண்டக்க மண்டக்க கதை, அது மாதிரி ஒக்கமக்க எப்படி வந்தது என்றால், அந்த குண்டான அக்காவை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள், அந்த அக்கா ஒருமுறை மாப்பிள்ளையோடு வீட்டிற்கு வந்துஇருந்தபொழுது , மாப்பிள்ளை ஏதோ கேள்விகேட்க்க அதற்க்கு பதில் தெரியாமல் அந்த பெண் நின்றுகொண்டிருந்தது, அப்பொழுது அந்த வீட்டில் உள்ள பையன் அத்தான் பெரியக்காவிற்கு ஒன்றும் படிக்கத்தெரியாது மண்டு அக்கா என்று மாபிள்ளை இடம் சொல்ல, அதை கேட்ட அந்த மாப்பிளை ஆச்சிரியத்தோடு, உங்க அக்கா மக்கா என்று கேட்டுஇருக்கிறார், உங்க அக்கா மக்கா என்றது மருவி ஒக்கமக்க என்று ஆகிவிட்டது. மேலும் அடுத்த பயணத்தில், கொய்யால, டகால்டி பற்றி பார்ப்போம்

இப்படிக்கு என்றும் அன்புடன்
S.ஜீவரத்தினம்.

Nov 9, 2008

உளறல்-10 ஆன்மீகம்

நீண்ட நாளாக ஆன்மீகம் பற்றி எழுதி வைக்கலாம் என்ற எண்ணம் உண்டானது அதனை இப்போது எழுத முனைகிறேன். பல காரணகாரியங்களுக்கு நாம் இறைவனையும் அவன் திருவிளையாடல்களையும் காரணமாக கூறி அந்த குழப்பத்தில் இருந்து விடுபட முனைவது இயல்பு, இதில் இறைவன் என்கிற பதம் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு அதன் மீதான நம்பிக்கை சாதாரணமாக குழந்தை பருவத்தில் இருந்து உண்டாக்கப்பட்டு அது ஒருவகையில் மிகவும் ஆழ்ந்த மன அழுத்தம் போல சிலருக்கு ஏற்ப்பட்டு விடுகிறது,

சில மாணவர்கள் பரிட்சைக்கு செல்லும் முன் கடவுள் வழிபாடும் அதன் மூலம் சில சகுனங்களை தாங்களாகவே உண்டாக்கி கொண்டு அதனோடு ஒரு அடிமைபோல ஆகிவிடுவதை கண்டிருக்கிறேன், எனக்கும் கூட சிறு வயதில் 10 ம் வகுப்பு காலங்களில் அப்படி சில அடையாளங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன், இப்படி ஒவ்வொருவரும் ஒரு கட்டமைப்பை இறைவன் என்கிற சக்தியின் மீது கொண்டுள்ள காதலால் அல்லது பயத்தால் உருவாக்கி கொள்கிறார்கள்,

காதல் என்று சொல்வதை விட பயம் என்கிற பதம்தான் இதில் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். இது எல்லா வயதிலும் தொடரக்கூடிய ஆபத்து இல்லாமலில்லை, கடவுள் என்பதன் உண்மையான சொரூபம் யாருக்கும் சரியாக தெளிவு படுத்த படவில்லை என்பதுதான் காரணம் என்பது என் எண்ணம், அதற்காக கடவுள் என்கிற பதம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டதா? எனக்கேட்காதீர்கள், அதனைப்பற்றிய தெளிவு இந்த கட்டுரை முடிவில் உங்களுக்கு கிடைக்கலாம்,

இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்கள் மறுபிறவி பற்றி ஏதும் கூறவில்லை, அவர்களின் புனிதநூல் கூறுவதன்படி எல்லா ஜீவன்களும் கடைசி தீர்ப்பு நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவனால் இறுதி விசாரனைக்கு அழைக்கப்பட்டு அவரவர் குற்றங்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்கிற தகவல் கூறப்பட்டுள்ளது, அதன் பின் இந்த உலகில் புதிய ஜீவன்கள் மீண்டும் கடவுளால் படைக்கப்பட்டு அடுத்த உலக அமைப்பு உருவாகும் என்பது அவர்கள் நம்பிக்கை.

அடுத்து அறிவியலில் டார்வினின் கொள்கைப்படி பரிணாம தத்துவம் நம்பப்படுகிறது அதாவது ஓருயிரி முதல் மனிதன் வரையான பரிமாண மாற்றமாக அது விளக்குகிறது, என்றாலும் கிருஸ்துவம் கூறும் பதில் டார்வின் தனது பரிமாணத்தத்துவத்தை தனது இறுதி காலத்தில் மறுத்துவிட்டார் என்பதாக. அது முதுமைக் காலத்தில் அவருக்கு ஏற்ப்பட்ட குழப்பமாயிருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் ஏற்ப்படுகிற மாற்றங்களை காணும்போது டார்வின் தத்துவம் பொருந்தி வருவதை நாம் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை காஞ்சி பெரிய சங்கராச்சாரியிடம் ஒரு கேள்வி கேட்டப்பட்டது, கேட்டவர் ஒரு வெளிநாட்டு பெண்மணி என்று தகவல், மறுபிறவி உண்டு என்பதை நீங்கள் எப்படி நிருபிக்கமுடியும் என்பதாக, ஏனனில் இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அடிப்படை மறுபிறவி என்பது அதன் பின் தான் கடவுளின் எண்ணிக்கைகள் வருகின்றன.
அந்த கேள்விக்கு பெரியவரின் பதில் மிக முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது, அவர் அந்த பெண்ணிடம் ஒரே நேரத்தில் பிறந்த பல குழந்தைகளின் பிறவி மற்ற மதங்களின் படி அதுதான் முதல் என்றால் இறைவனின் கருணை எல்லோருக்கும் சமம் என்றால் ஏன் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு பொருளாதார சூழலிலும் உடல் குறைபாடுகளோடும் பிறக்கின்றன, ஏதோ ஒரு காரணத்தால் அதன் இந்த பிறப்பு சிலருக்கு ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் சிலருக்கு தண்டனை தரப்பட்டதாகவும் அமைகின்றன அதன் காரணம் என்கிற விஷ்யம்தான் இந்து மதத்தில் முந்தைய பிறவியின் பலாபலன்கள் என்கிற ஒரு தத்துவமாக அமைந்துள்ளது என்று விளக்குகிறார்.

இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் ஏனனில் கடவுள் எல்லா மதத்திலும் கருணை வடிவமாகவே நம்பப்படுகிறார், மேலும் மற்ற மத கூற்றுப்படிதனது முதல் இரண்டு ஜீவன்களையும் சமமாகவே படைக்கிறார். பாலினத்தில் மட்டும் வேறுபாடு கொண்டு.

இந்த இடத்தில் மறுபிறவி என்பது மிகசரியான பதிலாக பொருந்தக்கூடும், ஏனனில் இந்து மதம் தனது இப்பிறவி நடவடிக்கைகளின் மூலம் அவரவரின் பிறவியின் பயனை அடைய முடியும் என்கிறது, எல்லா மனித பிறவியிலும் இறைவனிடம் சென்று சேர்வதற்காண வாய்புகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன அதைப்பயன்படுத்தி இறைவனிடம் சேர்வதும் அல்லது அதனை தவறாக பயன் படுத்தி மீண்டும் மீண்டும் பிறந்து தனது தவறை எப்போது திருத்திக்கொண்டு இறைவனை அடையமுடிகிறதோ அப்போது அடைவதும் நடைபெறுகிறது என்பது இந்து மத தத்துவமாக இருக்கிறது.

உறங்குவது போல் சாக்காடு
உறங்கி விழித்தல் பொல் பிறப்பு

என்று ஒரு பாடல் உண்டு, மனிதனின் மரணம் ஒரு உறக்கம், மீண்டும் பிறப்பது ஒரு விழிப்பு அவ்வளவே, மனிதன் என்னவாக உறங்குகிறானோ அவ்வாறே மீண்டும் பிறக்கவும் செய்கிறான் என்பது இதன் வழி நாம் அறியலாம், இன்று இரவு நல்லவனாக
தூங்குபவன் நாளையும் நல்லவனாகவே எழுகிறான், அதனால் தான் இப்பிறவியில் இறைவனை அடைய முடியாமல் போனாலும் குறைந்த பட்சம் நல்ல மனிதனாக வாழ்ந்து வந்தால் அதன் தொடர்ச்சியாக அடுத்த பிறவி நல்லதாக அமையும் என்பது போதிக்கப்படுகிறது.

அதனால்தான் ரமணர் போன்றோர் தனது 12ம் வயதில் இந்த உலகவாழ்க்கையை விட்டு துறவு வாழ்வுக்கு செல்லமுடிந்தது, போன பிறவியின் தொடர்ச்சி அவரை தனது சிறு பிராயத்திலேயே மீண்டும் ஞான வாழ்க்கைக்கு கொண்டு போனது,

இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் எல்லாம் ஞானிகளாக முடியுமா என்று கேட்காதீர்கள், நல்லவர்கள் எல்லாம் ஞானிகள் இல்லை, ஆனால் ஞானிகள் எல்லாம நல்ல மனிதர்களாக இருந்துதான் அந்த நிலையை அடைகிறார்கள்.

நல்ல நிலைக்கு மனிதன் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் போது அவனைநோக்கி ஞான அறிவும் வருகிறது, யாரோ ஒரு குருவின் இருப்பிடம் அவனுக்கு கூறப்பட்டு அல்லது அழைக்கப்பட்டு அங்கே அது போதிக்கப்படுகிறது,

அதன் பின் அவன் தனது பயிற்சிகளுக்கேற்ப இறைநிலையை அடைகிறான், அதாவது மீண்டும் பிறக்காத நிலையை. இதுதான் இந்து மதத்தின் நம்பிக்கை, நல்ல மனிதானாக மாற்றும் பணியைதான் மதங்கள் தனது கோவில்களாலும், பிரச்சாரகர்களாலும் செய்து வரணும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.

செல்வம்

Nov 5, 2008

உளறல்-9


நிறைய விஷயங்கள் நமது நினைவுகளில் தங்குவதே இல்லை அவைகளை பற்றி நாம் நிறைய கவலைப்படுவதும் இல்லை, எனது சிறு பிராயத்தில் நிறைய கதைகளை படித்திருக்கிறேன், ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், பெரிய புராண கதைகளையும் நிறைய படித்தும், பல தேவார திருவாசக பாடல்களை மனப்பாடம் செய்தும் எனது சிறு வயதில் நல்ல பல வழக்கங்களை எனது தந்தையாரின் தூண்டுதலால் கற்றிருக்கிறேன், அது அந்த காலத்தில் ஒரு சாதாரணமான வழக்கமாக இருந்தது, பெரும்பாலும் எனது நண்பர்கள் சிலரும் கூட இது போன்ற பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்,

பெரும்பாலும் பிராமணக் குழந்தைகள் இந்த மாதிரியான அறிவில் சிறந்து விளங்கினார்கள், அதற்கு காரணம் அவர்களின் இல்லங்களில் இருந்த வசதியும் புத்தகங்களும்தான், எனக்கு தெரிந்த வரை புத்தகங்கள் வாங்குவதென்பது சாதாரண மனிதர்களிடம் குமுதம் ஆனந்த விகடன் மட்டுமே, மற்ற நாவல்களோ வேறு இலக்கிய வகை புத்தங்களை படிப்பதென்பது அப்போது பிராமணர் அல்லாதோரிடம் இல்லை என்றே நினைக்கிறேன்,

துக்ளக் மற்றும் கல்கி போன்ற பத்திரிக்கைகள் அப்போது சற்று வேறுதளத்தில் இயங்கியதால் அதன் மூலம் சற்று அதிக வளமான சிந்தனை வளர்ச்சி இருந்ததென்று சொல்லலாம், சிறுவர்களுக்கு அம்புலிமாமா ஒரு பெரிய வரப்பிரசாதம், ஆனால் அப்போது இருந்த பொருளாதார சூழல் புதிய புத்தகங்களை வாங்க அனுமதிக்காததினால் வாடகை புத்தக முறை பெரிய உதவியாக இருந்தது, அப்போது வாடகை புத்தகம் கொண்டு வரும் பையனிடம் அம்புலிமாமா வுக்காக கெஞ்சி கூத்தாட வேண்டும், அது எங்கெல்லாமோ சுற்றி விட்டு பிறகு மெதுவாக வரும்போது அட்டையெல்லாம் காணாமல் போயிருக்கும்,

இவைகளில் எல்லாம் வந்த கதைகளும், விஷ்யங்களும் இப்போது நினைவில் இல்லை, எனது குழந்தைக்கு கதை சொல்ல முயலும்போதுதான் நமது நினைவின் வறட்சியும் கற்பனையின் வறட்சியும் தெரிகிறது, ஆனால் அன்று பாடிய பாசுரங்கள் இப்போதும் நம் நிலைகொள்ளாத நேரத்தில் கூட நினைவில் வருகின்றன, அப்போது திருக்குறள் மனப்பாடம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது, அதனால் ஒரளவுக்காண திருக்குறள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், இப்போது உள்ள குழந்தைகள் எப்படி இவைகளைக்கற்கின்றன என்று தெரிய வில்லை,

அப்போதைய பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் அரசாங்க பள்ளிகள் மட்டுமே சில நகரங்களில் மட்டும் கிருஸ்துவ சபையாரின் பள்ளிகளும், ராமகிருஷ்ண மட பள்ளிகளூம் ஒரு சில தணியார் தொண்டு நிறுவன பள்ளிகளூம் இருக்கும், ஆனால் அப்போதைய அரசு பள்ளிகள் மிகவும் தரமானதாக இருந்தது என்றூ சொல்ல முடியும், காரணம் எல்லாவகை மாணவர்களும் அதில் இருந்தார்கள், என்னோடு பிராமண ஆதிதிராவிட நண்பர்களும் இணைந்தே படித்தார்கள், அப்போது வேறுபாடுகள் எல்லாம் புரியாதகாலம், கிராமத்திற்கு வரும்போதுதான் இந்த வேறுபாடுகள் நாம் கடைபிடிக்க வேண்டிய சூழல் வரும், எனது தந்தையாரின் பணி காரணமாக கிராமத்தை விட்டு சற்று பெரிய ஊரில் படிக்க நேர்ந்த்தில் இந்த சாதி வேறுபாடுகள் பெரிதாக பாதிக்கவில்லை,

எனது 10ம் வகுப்பு காலங்களில் எனது பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை பக்கத்து நகரத்துக்கு அனுப்பி தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தார்கள், அது மிகவும் பெரிய விஷயமாக அப்போது பார்க்கப்பட்டது.

அந்த வயதில் பஸ்பிடித்து அதிகாலை சென்று மாலை 6 மணிக்குமேல் வீடுதிரும்பும் அவர்களை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் இன்று கிட்டதட்ட எல்லா பிள்ளைகளும் பஸ்களில் சென்றுதான் படிக்கின்றன, படிப்பு என்பது ஒரு கட்டாய கடமையாக இன்று உணரப்பட்டிருப்பது மிகப்பெரிய வளர்ச்சி ஆனால் அது ஒரு மிகப்பெரிய சுமையாக பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமை, காமராஜர் எதிர்பார்த்தது இப்படி ஒரு கல்வியைதானா? இந்தியாவை விட எல்லா நாடுகளிலும் கல்வி ஒரு பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றன என்றுதான் தோன்றுகிறது,

கல்வி, சேவை என்கிற தளத்தில் இருந்து லாபகரமான தொழில் என்கிற நிலைக்கு வந்ததன் விளைவு, என்றாலும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மற்றும் அலுவலர்கள் நிலையும் யோசிக்கவேண்டியுள்ளது, ஆகையால் அரசு புதிய கல்வி கொள்கைகளை உருவாக்கும் போது பாடதிட்டங்களை மட்டும் கணக்கில் கொள்ளாது பொருளாதார செலவினங்களையும் கருத்தில் கொண்டு இவைகளை முடிவு செய்ய வேண்டும்,

கூடவே கல்வி என்பது அறிவு வளர்ச்சிகு மட்டுமே உதவ வேண்டும் வேலைவாய்ப்பிற்கான ஒரு பயிற்சியாக ஆகிவிட்டதும் கூட அது ஒரு சுமையாக ஆனதற்கான காரணம், என்ன செய்வது இன்றைய போட்டி உலகில் இப்படியான ஒரு வாழ்க்கை முறை நமக்குள் திணிக்கப்பட்டுவிட்டது, அதன் தவறு அரசாங்கத்திடமா அல்லது தனிமனிதர்களிடமா என்பது விவாதத்திற்கு உரிய விஷ்யம்,

பெரும்பாலான மனிதர்கள் பிடித்தவேலையை விட கிடைத்த வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார்கள், அதன் வலி எல்லோரிடமும் இருக்கிறது, பிடித்த வேலையை ஆத்மார்தமாக செய்பவர்களுக்கு அதன் அங்கீகாரமும் பொருளும் கிடைப்பதில்லை, அதனால் அந்த சாராரும் திருப்தியாக இல்லை, இப்படி ஒரு பொருந்தாத வாழ்க்கை நமக்குள் திணிக்கப்பட்டிருந்தாலும், அதனை பிடித்துக்கொண்டு வாழ்க்கை வாழவேண்டுமே என்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இவைகளில் இருந்தெல்லாம் நம்மை காப்பாற்றி வருவது நமக்குள் அருளப்பட்டிருக்கும் மறதி என்கிற ஒரு தன்மைதான், அது சில நேரங்களில் நம் நல்ல விஷ்யங்களையும் மறந்து போக வைத்துவிடுகிறது, அந்த ஒரு நல்ல விஷ்யம்தான் நாமும் ஒரு நல்ல மனிதன் என்பது, எப்போதெல்லாம் மனதில் கோபமும் பொறாமையும் வருகிறதோ அப்போதெல்லாம் நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் மிகவும் நல்ல மனிதர், மிகவும் இரக்கமுள்ள மனிதர் என்பதை,

அது உங்களால் வர இருக்கும் ஒரு பெரிய இழப்பை தடுத்து நிறுத்தும்.

தவநெறிசெல்வன்

Oct 25, 2008

உளறல்-8

தொடர்பில்லாதது, வேண்டுமானால் nonlinear என்று வைத்துக்கொள்ளுங்கள், இதெல்லாம் சாருவிடம் தெரிந்து கொண்ட வார்த்தைகள், அவர் அளவுக்கு எதிர்பார்த்து படித்தால் அதற்கு நான் பொருப்பல்ல, ஒரு வழியாக இன்று வேலை முடிந்து அறைக்கு திரும்பினேன், அதென்ன வேலை என்று கேட்காதீர்கள் எல்லாம் வெளிநாட்டு இஞ்சினியர் வேலைதான், வெளிநாட்டு இஞ்சினியர் வேலை என்ற உடனே பல வெளிநாட்டு இஞ்சினியர்களுக்கு சிரிப்பு வரலாம் அதற்கு நான் பொருப்பல்ல

அப்படி என்ன கிழித்தேன் என்று கேட்காதீர்கள், காலை முதல் மதியம் சாப்பாடுவரை முடிந்தவரை எனக்கு பிடித்த வலைத்தளங்களூக்கெல்லாம் சென்று படித்தேன் அதன் பின்பு மதியம் சாப்பாடு அதுதான் கொஞ்சம் கவலையான விஷயம், குடும்பம் இல்லாமல் தனியே இருக்கும் என்னைப்போன்ற சைவ சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு அது ஒரு கொடுமையான அனுபவம் ஏதோ சில தழைகளையும் கொஞ்சம் அரிசி சோறு அது நிச்சயமாக வெள்ளையாக இருக்காது ஏதாவது சின்ன குழந்தைகளின் கலர் புத்தகம் போல பல வண்ணங்களில் இருக்கும் கொஞ்சம் பருப்பு இதெல்லாம் எப்படி செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யாது சாப்பிட வேண்டும் அதில்தான் உங்களின் திறமை இருக்கிறது, இல்லாது போனால் வாந்தி எடுப்பத்ற்கான முழு உத்திரவாதம் உண்டு, இவ்வளவும் சைவர்களுக்கே, ஆனால் அசைவர்கள் கூட சில நேரங்களில் இந்த வாந்தி வைபவத்திற்குள் போகவேண்டியிருக்கும், அதற்கு யாராவது ஒரு நல்ல பிலிப்பைன் நாட்டுக்காரன் தனது மதிய உணவு பாத்திரத்தை திறந்தாலே போதும், அப்படி ஒரு வாசனை? என்ன கொடுமை சார் இது? இதெல்லாம்தான் தினசரி இங்கு நாம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள், இங்குள்ள வேலை என்னமோ பெரிய சுமை என்று சொல்வதற்கில்லை,

ஒருவழியாக அறைக்கு போய் குளித்துவிட்டு, வேறு உடைமாற்றிக்கொண்டு சாப்பிட கிளம்பவேண்டும், உடை என்பதும் நிறைய விஷயங்கள் சொல்லவேண்டும், உடைவிஷயத்தில் எனக்கு நிறைய ஆச்சர்யம் உண்டு, இந்த பாகிஸ்தானியர்கள் அவர்களின் தேசிய உடையைத்தான்(பைஜாமா போல ) அணிந்து பெரும்பாலும் வெளியில் வருகிறார்கள், உண்மையிலேயே அந்த உடை ஒரு வசதிதான், அதன் கீழ்பகுதியின் முக்கால்வாசி பகுதியை மேல் உடை மறைத்து விடும் அதனால் உள்பகுதி எவ்வளவு அழுக்காய் இருந்தாலும் வெளியே தெரியாது அவர்களும், எங்காவது உட்கார்ந்தால் நம்ம வடிவேலு ஸ்டைலில் மேலுடையை தூக்கி விட்டு உட்கார்ந்து விடுவார்கள், அடுத்து நாம் பேண்ட் போட்டு இன் செய்தால் இடுப்பு பகுதி சரியாக சுருக்கம் இல்லாது பராமரிக்க வேண்டும், இல்லாது போனால் ஏதோ பாவாடை கட்டியதுபோல் தெரியும், ஆனால் இந்த பைஜாமாவில் உள்ளே எத்தனை கொடுமையாக இருந்தாலும் வெளியே தெரிவதே இல்லை, அந்த மேலாடை மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, அடுத்து என்னைப்போன்றவர்களுக்கு, இந்தியாவுக்கு சென்றால் ஒரு வயிரும், வளைகுடா நாட்டுக்கு வந்தால் ஒரு வயிரும் என்று இரண்டு பரிமாணங்கள் உண்டு, இந்த பிரச்சினை எனக்கு மட்டும்தானா அல்லது எல்லாருக்கும் உண்டா என்பது அவரவர் வீட்டு சாப்பாட்டு ருசியை பொருத்தது என்று நினைக்கிறேன், இந்த பரிமாண மாற்றத்தால் பேண்டின் அளவுகள் இடுப்பில் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும், இது பெரிய பிரச்சினை பேண்ட் பத்தவில்லை என்பதற்காக தூக்கிஎறியவும் முடியாது சரி வெளிநாடு போனால் உதவும் என்று எடுத்துக்கொண்டு செல்லவும் முடியாது ஏனனில் இந்த விமானத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை எதுவும் கிடையாது என்பதால் 25 கிலோவுக்குமேல் 1 கிலோ எடுத்து போவதானால் கூட உங்களை ஏதோ ஆப்பிரிக்க காட்டில் இருந்து வழிதவறிவிட்ட விலங்குபோல் பார்ப்பார், ஆனால் இந்த பாகிஸ்தானியர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை எவ்வளவு பெரிய மாற்றம் வந்தாலும் அதற்கேற்றார் போல மாற்றி கட்டி கொள்ளலாம், அந்த துணி தானாக கிழிந்து போவதுவரை இப்படியே உபயோகிக்கலாம்,

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நீண்டநாளாக பண்பாடுகளை காப்பாற்றி வருவதாக கூறிக்கொள்ளும் எந்த இந்தியனும், தனது பாரம்பரிய உடையில் வெளியில் வருவதே இல்லை, எந்த பிரகஸ்பதி எந்த நேரத்தில் இந்த பேண்ட் சட்டையை கண்டுபிடித்து இந்தியாவில் உலவவிட்டானோ அதிலிருந்து ஆங்கிலத்தில் சொல்வதானால் wearing flexibility என்பது இல்லாமலே போய்விட்டது, மேற்கத்தியர்களுக்கும் கிழக்காசியர்களுக்கும் இந்த பிரச்சினை இல்லை அவர்கள் நம்மைப்போல அரிசியையும் நல்ல காரவகைகளையும் மூக்கு பிடிக்க நிரப்புகிற பழக்கம் உள்ளவர்கள் இல்லையே, இந்திய பெண்கள் பாடு சற்று தேவலாம், புடவை ஒரு சுற்று குறைத்துக்கொண்டால் போதும் சமாளித்து விடலாம், அந்தகாலத்தில் அதனால்தால் ஜாக்கெட் போடாத பழக்கம் இருந்திருக்கும் போல தோன்றுகிறது, நமது முன்னோர்கள் wearing flexibilty ல் நல்ல அறிவு உள்ளவர்களாக இருந்திருப்பார்கள் போல் தெரிகிறது, இது மிகவும் ஆராய்ட்சிக்குரிய விஷயம்.

யாராவது பல்கலைகழக மாணவர்கள் இதனை குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவப்பட்டம் பெறலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்,

மூக்குபிடிக்க சாப்பிடுகிறதைப்பற்றி எழுதியதில் நினைவுக்கு வருகிறது, இந்த தயிர்சாதத்தை கண்டு பிடித்தவனை பாராட்டியே தீரவேண்டும், அதும் சைவமாக இருப்பவர்கள் அவனுக்கு வாழ்நாள் நன்றிக்கடன் பெற்றுள்ளார்கள் என்றே நினைக்கிறேன், எந்த நாட்டுக்கு போனாலும் தயிரும் அரிசியும் கிடைக்கும், அதைக்கொண்டு சில தினங்களை சமாளிக்க முடியும், பெரும்பாலான நாட்கள் இப்படி கழிவதை மறுப்பதற்கில்லை, இதுவும் நமது முன்னோர்கள் கண்டுபிடித்த eating flexibiltiy என்றே நினைக்கிறேன்.ஒரு வழியாக புறப்பட்டு எனது ஹோட்டலில் இருந்து வெளியே வந்தேன்___

வெளியில் கண்டவை அடுத்த பதிவில்

செல்வம்

கிராமம்-2 விளையாட்டுக்கள்,

கிராமத்தின் விளையாட்டுக்கள் மிகவும் இயல்பானவை கூடவே சொற்ப செலவில் விளையாடக்கூடியவை, பெரும்பகுதி விளையாடு பொருட்கள் எல்லாம் அவர்களே தயாரிப்பதும் அல்லது கிராமத்தில் தச்சர்களிடம் செய்யப்பட்டதாகவோ இருக்க்கும்,

கிட்டி புல் என்பது கிட்டதட்ட மறைந்து விட்டதென்றே தோன்றுகிறது, இந்த முறை கிராமத்தில் இருந்த 1 மாத காலத்தில் யாரும் விளையாடவே இல்லை, ஒரு ஒன்றரை அடி நீளம் கொண்ட கிட்டியும், 3 அங்குல நீளமுள்ள புல்லும் தான் இதன் தேவை, அது பல்வேறு மரத்தால் செய்யப்பட்டிருக்கும், கருவை,சவுக்கு பூசனை போன்று வசதிக்கும் கிடைப்பதற்கும் ஏற்றவாறு செய்திருப்பார்கள், அதனை செய்ய பெரிய திறமையெல்லாம் வேண்டாம், ஒரு அரிவாள் இருந்தால் போதுமானது எத்தனை ஆட்கள் இருந்தாலும் சேர்த்துக்கொண்டு விளையாடலாம், இரண்டு பிரிவாக பிரித்து விளையாடுவார்கள், அதிலும் பல வகையான விளையாட்டுகள் இருந்ததாக நினைவு, பெரும் பகுதி நினைவில் இல்லை,

கிட்டியால் அடித்தோ அல்லது கிந்தியோ விளையாடப்படும், பெரும்பாலும் தெருவில் தான் விளையாடப்படும் அதற்கென விளையாட்டு மைதானங்களுக்கு சென்றதில்லை, பல முறை வீதியில் விளையாடும்போது யாராவது தலையில் அடிபடுவதும் நாங்கள் பயந்து ஓடி ஒளிவதும் பின்னர் கிட்டியும் புல்லும் அடுப்புக்கு பெற்றோர்களால் தாரைவார்க்கப்படுவதும், ஒரு சில நாட்களில் மீண்டும் புதிய கிட்டியும் புல்லும் இன்னொரு பிறவி எடுப்பதும் நடந்து கொண்டே இருக்கும்,

இன்று அது கிரிகெட் விளையாட்டாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன், அதுவும் இதுவும் ஒரு ஜாதி விளையாட்டுப்போல்தான் தோன்றும், நான் 8ம் வகுப்பு படிக்கும்போதெல்லாம கிரிக்கெட் மிக பிரபலமாக தொடங்கிவிட்டது எங்கள் ஊரில் அப்போதுதான் ரிலயன்ஸ் உலகக்கோப்பை இந்தியாவில் நடந்து கொண்டிருந்தகாலம், கிரிக்கெட் ஒரு செலவு தரும் விளையாட்டு, ஆரம்பத்தில் மரத்தாலான பேட் நாங்களாகவே செய்தோம் பந்துதான் பெரும் பிரச்சினையாக இருந்தது, சைக்கிள் tube பழயது வாங்கி சின்ன சின்ன வளையங்களாக வெட்டி பேப்பரில் சுற்றி மாட்டுவோம் அது நல்ல கனமாக இருக்கும், அது நிறைய மாட்ட மாட்ட பந்தின் கனமும் உருவமும் அதிகரிக்கும், வேறு சாதாரண கடையில் விற்கும் ரப்பர் பந்தோ அல்லது அப்போது 25 ரூபாய் விற்ற நிஜ கிரிக்கெட் பந்தோ சரிப்பட்டு வராது ஏனனில் எங்கள் பேட்டின் பவர் அப்படி அது நல்ல வேங்கை மரக்கட்டை ஆதலால் இரண்டு பவுண்ட்ரிகளில் எல்லாம் இரண்டு துண்டுகளாக போய்விடும், அப்போது நடந்த ரிலயன்ஸ் உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதென்று நினைக்கிறேன், அப்போது குதித்த குதி இன்னும் மறக்க முடியாது, ஆனால் நாம் இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோற்றுப்போய் கோட்டை விட்டது வேறுகதை,

பம்பரம், அதுவும் கூட ஆரம்பத்தில் கிராம தச்சர்களிடம்தான் செய்யப்பட்டது, பின்னர் கடைகளில் அழகழகாக வரத்தொடங்கியது, பம்பரம் வாங்குவது பெரிதில்லை, அதை பராமரிப்பது பெரும்பாடு, அதைவாங்கியபின் புதிதாக நல்ல ஆணி அடிக்கவேண்டும், எனக்கு தெரிந்தவரை அது பெரிய கம்பசித்திரம்தான், சரியான மையத்தில் அடிக்காமல் போனால் அவ்வளவும் வீணாகும், சரியான மையம் கண்டுபிடிக்க அவ்வளவாக பசங்களிடம் தொழிற்நுட்பம் இல்லாதகாலம், எப்படியோ சரியாக ஆணிஅடித்துவிட்டாலும், அதன் பின்தான் மற்ற விஷயங்கள் இருக்கின்றன, ஆணியின் கொண்டைபகுதியை கரைத்து நல்லகூறாக மாற்ற வேண்டும், யோசித்து பாருங்கள் எவ்வளவு கஷ்டம், இப்போது போல கிரண்டிங் இயந்திரமெல்லாம் அப்போது அறிந்ததே கிடையாது யார் யார் வீட்டில் தரை சொரசொரப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் யாராவது ஒருவன் தோளில் பம்பரக்கயிறும் கையில் பம்மரத்தின் ஆணியை வைத்து தீட்டிக்கொண்டிருப்பதை காணலாம்,

ஒருவாறு பம்பரம் தயாரானதும், விளையாட்டு, கடலோரம், என்பது போல் பலபெயர்கள் உண்டு,பெயர்கள் நினைவில் இல்லை, கடைசியில் விளையாட்டின் இறுதியில் அக்கு வைப்பது என்பது சடங்கு எவன் தோற்றுப்போனானோ அவன் பம்பரம் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் உடல் பகுதி சிறிது வெளியே தெரியும்படி வைத்து வெற்றி பெற்றவர்கள் தங்கள் பம்பரங்களின் கூர்மையான ஆணிகளால் ஓங்கி குத்துவார்கள், பெரும்பாலும் அந்த வைபவத்தில் அந்த பம்பரம் தனது உடலை இரண்டாக பிளந்து வைகுண்ட பதவி அடைந்துவிடும்,

அப்படியே பிழைத்துக்கொண்டாலும் அது ஒரு பெரிய அவமானமாக கருதி அதன் பின் அந்த பம்பரம் பொது விளையாட்டுகளில் விளையாடாமல் ஒதுங்கிவிடும்.
பம்பரம் சுழற்றுபவர்களின் திறமைகள், பலவாறு இருக்கும், தரையில் பம்பரம் விடாமல் காற்றில் விட்டு அப்படியே கையில் எடுப்பவர்கள் இருந்தார்கள், கடைசியில் வெற்றி பெரும் நேரத்தில் எல்லோரும் அவசரமாக தரையில் பம்பரத்தை சுழற்றி விட்டு கயிரால் தூக்கி கையில் பிடிக்கவேண்டும், அதை கோஸ் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் சரியாக நினைவில் இல்லை, அப்படி பிடிக்காமல் விட்டவனது பம்பரம் வட்டத்துக்குள் வைக்கவேண்டிவரும், அதனை மற்ற ஆட்கள் தனது பம்பரத்தாலே வெளியே கொண்டுவரவேண்டும், அல்லது வட்டதின் உள் சுழலவிட்டு அது சுழற்சி முடிந்த உடன் தனது உந்து விசையால் தானே வெளிவரவேணும் அப்படி வராமல் வட்டத்துக்குள்ளே மாட்டிக்கொண்டால், அதுவும் பிரச்சினைதான், இப்படி தெருவுக்கு தெரு வட்டம் போட்டு அதைச்சுற்றி பலர் நின்று விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்கலாம்., இன்று வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில் கையில் பம்பரத்தோடு நானும் எனது அண்ணன்கள், மற்றும் நண்பர்கள் இருந்ததை கற்பனை செய்தால் மிகவும் சிரிப்பும் குதூகலமும் தோன்றுவதை மறுக்கமுடியவில்லை,

ஆனால் இன்றைய நமது குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டியிலும் கணினி விளையாட்டிலும் தன்னை மறந்து போவதால் கிராம விளையாட்டுகள், அவர்களின் கவனத்தில் வராமலேயே போய்விட்டன,

என்றாலும் என்னால் முடிந்தவரை அவைகளை தொடர்ந்து எழுத நினைக்கிறேன்
பலரின் மலரும் நினைவுகளை அவைகள் தூண்டலாம், அது அந்த நிமிடம் நிச்சயமாக அவர்களை சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு

மீண்டும் வருகிறேன்

செல்வம்

ஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் சமாதி (தவநெறிபூங்கா)


Oct 22, 2008

உளறல்-7
என்ன எழுதுவது என்று தெரியவில்லை, ஒரு வாரமாக எதுவும் எழுதாதது ஒரு சோர்வாக இருக்கிறது, காலை 5 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் புறப்படும் போது 6:30 ஆகிவிடுகிறது, மதிய சாப்பாடு ஒன்று இரவிலேயே செய்து வைப்பதை காலையில் எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்தேன், மதியம் சூடு செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம், காலை உணவு பெரும்பாலும் சாண்ட்விச் ஆகவே அமைந்துவிட்டது, பட்டரும் ஜாமுமாய், இது கொண்டுபோய் புதிய வியாதியில் விடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலை,

வலையில் இன்றுகாலை பஞ்சாங்கம் தேடினேன் ஒரு நண்பருக்காக எல்லா பஞ்சாங்கங்களிலும் மாத விபரங்கள் மட்டுமே காணப்படுகின்றன, திசாபுத்திகள் போன்ற விபரங்கள், காணப்படவில்லை, பின்னர் இந்தியாவுக்கு அழைத்து பின் போனிலேயே புத்தி விபரங்களைப்பெற்றேன், அப்படி யாருக்காவது இந்த வலை தெரிந்திருந்தால் எழுதுங்கள், சாதாரணமாக ஜோதிடர்கள் திசை கணக்குகளை மனப்பாடமாக வைத்திருப்பார்கள், நான் தொழில்முறை ஜோதிடனாக இல்லாததால் ஒவ்வொருமுறையும் பார்த்துதான் செய்ய வேண்டியுள்ளது,

ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தை பார்ப்பது வழக்கம், அதற்கு பல காரணங்கள் உண்டு, ஜோசியம் பார்த்துதான் எல்லாம் செய்கிறேனா? என்று கேட்காதீர்கள், என்னைப்பொருத்தவரை ஜோசியம் எனபது ஒரு அறிவிப்பு போல சில முடிவுகளை நம் உள்மனது எடுக்க அது சில வார்த்தைகளை சொல்லும் அவ்வாறு சொல்லும் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் ஒரு சில மனிதர்களிடம் வெளிப்படுத்தும்போது நமக்கான தீர்வும் அதில் வெளிவரும் இது எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் அதைநான் தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறேன்,

ஜோதிடம் பற்றி ஒரு விவரமான பதிவு எழுதவேண்டும் என்று ஆசை அதனை பின்னர் ஒரு சமயத்தில் செய்யலாம் என்று நினைக்கிறேன், இன்று உலகம் ஒரு மோசமான நிலையில் பொருளாதார ரீதியாக போய்கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, அமெரிக்காவில் நிறைய மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன அவர்கள் இப்போது சிறு குடிசைகளை அமைத்துக்கொண்டு வாழ்வதாகவும் செய்திகள் கூறுகின்றன, கீழே உள்ள இந்த தொடர்பில் கூடுதல் விபரங்கள் உள்ளன.
அதற்கான காரணம், வங்கிகளுக்கு வரவேண்டிய தவணைகள் கட்டப்படாததுதான், கூடவே வங்கிகளின் சொத்து மதிப்பும் மிக மோசமாக அதனால் அவைகள் திவலாகி அரசு அவற்றை காப்பாற்ற முயல்வதும் நடந்து வருகிறது, இதனால் நமது நாட்டு பங்கு சந்தையும் பாதாளம் வரை சென்று மீண்டு வந்திருக்கிறது,

இவையெல்லாம் உலகை எங்கு கொண்டுபோய்சேர்க்குமோ தெரியவில்லை, மகாத்மா சொன்னதுபோல் வாழ்வில் எளிமை இல்லாதுபோனால் இப்படிதான் ஆகும்போல் தெரிகிறது, நமது இந்தியாவில் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச எளிமைதான் மக்களை இன்னும் தத்தமது சுய அடையாளத்தில் வைத்திருக்கிறது, தனக்கான தேவைகளை அரசிடம் எதிர்பார்க்காமல் மனிதன் வாழும்போது அரசின் வீழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை பாதிக்காது, இன்று டாலர் உயரப்பறக்கிறது, ஆனால் அது எத்தனைகாலத்திற்கு என்று தெரியவில்லை, ரஷ்யாவும், ஈரானும், கத்தாரும் இயற்கை வாயு சம்பந்தமாக ஒரு அமைப்பை ஏற்படுத்த போகிறார்கள், அவர்கள் மூவரும்தான் இன்று உலகின் 60 சதவீத இயற்க்கைவாயு உற்பத்தியாளர்கள் என்பது கவனிக்கவேண்டிய விஷயம், எண்ணை எரிவாயு வர்த்தகம் டாலரில் இருந்து வேறு பணத்துக்கு மாறினால் டாலரின் பாடுதிண்டாட்டமாகலாம், என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை,

இந்திய வங்கிகள் எந்தபாதிப்பும் அடையாது என்று பிரதமர் சொல்கிறார் இன்றய நிலையில் அவர் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும், இந்த விஷயத்தில் அவரைவிட நம்பகமான, விஷயம் தெரிந்த ஆள்வேறு இல்லை,

இன்று இந்திய வரலாற்றில் மிகமுக்கியமான நாள், சந்திராயன் - 1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விட்டது, அது தனது நிலையை அடைந்த பின் அதன் செயல்பாடுகள் தொடங்கும் 380 கோடி ரூபாய் செலவில் அனுப்பட்டுள்ளது, அனேகமாக மிக குறைந்த செலவில் இவ்வளவும் செய்யப்பட்டது நம்நாட்டில்தான் என்று நினைக்கிறேன், இதற்காக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு தருணம் இது,

இரண்டு வருடங்கள் இந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரும் பல தகவல்களை நமக்கு அனுப்பும், அது அடுத்த நிலைக்கான உதவியாக இருக்கும், இதைப்பற்றிய மேலதிக தகவலுக்கு கீழ் உள்ள இணைப்பில் நண்பர் பத்ரி அருமையாக விளக்கியுள்ளார்

http://thoughtsintamil.blogspot.com/2008/10/blog-post_21.html

இன்று இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் கவலை தருவதாக உள்ளது, இதற்கெல்லாம யார் காரணம், என்பது போன்ற விவாதங்கள் நடைபெறுகிறது ஒரு பக்கம், ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளும் பெண்களும், அப்பாவிகளும் இன்று எந்த நியாயமான காரணமும் இன்றி கொல்லப்படுகிறார்கள், அது மிகப்பெரிய கொடுமை, மகாத்மா, காமராஜர், பெரியார் போன்ற தன்னலம் கருதாத தலைவர்கள் இல்லாதது ஒரு பெரிய குறையாக தோன்றுகிறது, உயிரின் மதிப்பு தெரிந்த மனிதர்கள் குறைந்து கொண்டே வருவதன் பாதிப்பு இது, உயிர் எத்தனை மகத்தானது அதன் துன்பங்களை ஏன் மனிதன் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறான், மனிதனை மனிதனே கொல்லும் இந்த கொடுரம் தவிர்க்க எத்தனை காந்தி வந்தாலும் தீராது போலிருக்கிறது, உனது கொள்கைகள் எதுவாவது இருக்கட்டும், ஒரு உயிர் போகிறது எந்த இயற்கை காரணமும் இல்லாமல் என்றால் அதற்கு துடிக்கவேண்டாமா உள்ளம்,செயல்பட வேண்டாமா? இதிலும் எத்தனை ஓட்டு கிடைக்கும் என்று சிந்திப்பது எத்தனை கேவலம், நல்ல தலைவர்கள் இல்லாமல் போனதின் கொடுமை இது, காந்தி படத்தில் ஒரு காட்சி வரும்,

காந்தி முதன் முதலாக காங்கிரஸ் மாகாநாட்டில் பேசுவார், அதில் எல்லோரும் சுயாஆட்சி வேண்டும் என்று கேட்பார்கள் ஆனால் காந்தி பேசுவது அப்படியே வேறு தொணியில் இருக்கும், நாம் இங்கே சுயாட்சி கேட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனால் ஒரு சராசி இந்தியன் இன்றைய ஒருவேளை உணவுக்கே போராடிக்கொண்டிருக்கிறான், இந்தியா 700,000 கிராமங்களைக்கொண்ட ஒரு தேசம் அதன் ஒவ்வொரு மனிதனோடு களத்தில் இறங்கி நின்றால்தான் நாம் இந்தியாவின் சார்பாக போராடுவதாக அர்த்தம், அதைவிட்டு ஏதோ பாம்பேயிலும் டெல்லியிலும் உள்ள சில வக்கீல்கள்தான் இந்தியா என்றால் சுயாட்சி கொடுப்பதற்கு ஆங்கிலேயனுக்கு எந்த தேவையும் அவசியமும் இல்லை என்பார், அந்த நினைப்புதான் அவரை ஒரு சராசரி இந்தியனாக வாழவைத்ததது அந்த வாழ்க்கை முறைதான் ஒவ்வொரு இந்தியனையும் இவர் நமக்காக வந்தவர் வாழ்பவர் என்று அவர் பின்னால் செல்ல வைத்தது,

இது இன்று உள்ள தலைவர்களுக்கு தெரியாதா? பின் ஏன் அவர்கள் ஏதோ ஒரு அதிசய உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல் மக்களிடம் இருந்து விலகி கொள்கிறார்கள், தான் உயரத்தில் இருந்துதான் பார்ப்பேன் என்று மாறிக்கொள்கிறார்கள், இதனை நமது மக்களின் கெட்ட நேரம் என்றுதான் சொல்லவேண்டும், ஒரு நல்ல தலைவருக்காக ஏங்கி கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை இப்போது.

எனது வாழ்வில் மிக முக்கியமான ஒரு படம் “ காந்தி ” அது, எல்லோருமே பலமுறை தனிமையில் அந்த படத்தை பார்க்கவேணும், அப்போதுதான், நமது சுதந்திரத்தின் பெருமையும் உயிர்களின் மதிப்பும் நம்மனதில் பதியும், உங்கள் குழந்தைகளுக்கும் இதை பார்க்க செய்யுங்கள் எதிர்கால சமுதாயம் வன்முறைக்குள் போகாமல் இருக்க இது உதவலாம்.

உலகம் பிழைக்கத்தெரியாதவர்களால்தான் இன்னமும் உயிரோடு இருப்பதாக ஒரு அறிஞன் கூறினான், ஆமாம் எல்லோரும் பிழைக்க தெரிந்தவர்களாக மாறிப்போனால் வெறும் பொறாமையும் வெறுப்பும் வேதனையும்தான் மிஞ்சி இருக்கும்,

முடிந்தவரை எல்லோரயும் நேசியுங்கள்,


செல்வம்.

Oct 15, 2008

எனது கிராமம்-1

கிராமம் என்பது மிகவும் சுகமான ஒரு சொல் என்றே நினைக்கிறேன், அதனை உச்சரிக்கும் போது ஒரு பரவசம் வரத்தான் செய்கிறது, சென்னை போன்ற ஊர்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அந்த சுகம் தெரியவாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், கிரமத்தைவிட்டு நகரத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் கிராமத்திற்கே என்றாவது போகமாட்டோமா? என்கிற எண்ணம் அப்பப்போது வராமல் இருக்காது என்றே நம்புகிறேன்,

எனது கிராமம் ஒரு அழகிய அமைப்பில்தான் இருந்தது, கிட்டதட்ட 35 வருடங்களுக்கு முன், முக்கிய சாலையில் இருந்து செல்லும் கிளை சாலை இரண்டு பக்கமும் அழகிய தென்னை மர வரிசைகள் இருந்தன, இப்போது வெறும் இரண்டு மரங்களே இருக்கின்றன, மற்ற மரங்கள் எங்கே போனது, அவைகளை திரும்பவும் வைக்க ஏன் யாரும்முயலவில்லை என்று தெரியவில்லை, அப்போது கிராமத்தில் இளைஞர்கள் குழந்தைகள் கூட்டம் அதிகம் இருக்கும், அதனால் கிராமத்தில் பல விழாக்கள் நிறைந்து காணப்படும், விழாக்களில் எல்லாம் பலவிதமான சந்தோஷங்கள் உறவுகளின் கிண்டல்கள் விதவிதமான உபசரிப்புகள் என்று நிறைந்து காணப்படும்,

கிட்டத்தட்ட தெருவில் உள்ள எல்லாவீடுகளும் உறவினர்களாகவே இருப்பார்கள் எந்த நேரத்தில் போனாலும் எல்லா வீட்டிலும் சாப்பிட ஏதாவது கொடுப்பார்கள், நடுநிசியில் வந்தால் கூட தண்ணீர் விட்ட சோறு கிடைக்கும், ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை, வீணாகிறதே என்று கூடுதலாக சமைபதே இல்லை, முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு வேலைக்காக பல ஆதிதிராவிடர்கள் ஆண்களும் பெண்களூம் இருப்பார்கள், மாடு பார்பது சாணி அள்ளுவது வரட்டி தட்டுவது, பாத்திரங்கள் கழுவுவது என்று, எல்லா வீட்டிலும் மாடுகள் இருக்கும், ஆகையால் அவர்களுக்கும் வேண்டி உணவு கூடுதலாக சமைக்கப்படும், பெரும்பாலும் அவர்கள் வீட்டில் சமைப்பது கிடையாது என்றே நினைக்கிறேன், இப்போதெல்லாம் அவர்கள் அவ்வாறு வருவதும் இல்லை, மாடுகளும் பெரும்பாலும் குறைந்து விட்டன இப்போது பால்காரர்தான் பெரும்பாலான வீடுகளுக்கு பால் கொடுக்கிறார்,

நான் சிறுவனாக இருந்த போது தினமும் காலையில் எனது பாட்டி தயிர்கடைவதை பார்த்திருக்கிறேன் அப்போது அவர்களை சுற்றி சுற்றி வருவோம், காரணம் மத்தில் திரண்டு வரும் வெண்ணையை அப்பப்போது கொஞ்சம் வாயில் தடவி விடுவார்கள், அது மிக சுவையாக இரூக்கும், பாலும் தயிரும் ஆறாய் ஓடிய காலம், கிராமத்தில் எங்கள் வீடு மிகப்பெரியது ஒரே மாடி வீடும் கூட அதனால் மெத்தைவீடு என்றுதான் சொல்வார்கள், இப்போது பல வீடுகள் வந்து விட்டன, இப்போது எப்படி அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை,

எல்லா வீட்டிலும் தென்னங்கீற்றினால் ஆன பந்தல் இருக்கும், அதனால் வாசலில் திண்ணை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், பந்தல் மிகவும் கெளரவமான விஷயமாக கருதப்பட்டது , தென்னங்கீற்று பழுதாகிப்போனதும் புதிய கீற்று மாற்றுவதில் அவ்வளவு அக்கறையான செயல்பாடு இருக்கும், வீட்டின் உள்ளே இரண்டு பெரிய முத்தங்கள் அதிலும் காற்று கொட்டகை என்று போட்டிருப்பார்கள் அதனால் வீட்டுக்குள் நல்ல வெய்யிலில் கூட காற்று வந்துகொண்டே இருக்கும்,
காலையிலிருந்து யாரவது பக்கத்துவீட்டு உறவினர்கள் என்று எதற்காகவாவது வருவது போவதுமாக இருப்பார்கள், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு மருமகள்களாவது இருப்பார்கள் அதனால் அவர்களுடைய குழந்தைகள் என்று சின்னஞ்சிறுசுகள் விளையாடுவதும், யார் வீட்டில் இருந்தாவது கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து விளையாடுவதும் மிக சாதாரணம், தெருவில் யாராவது போவதும் வருவதுமாக இருப்பார்கள், மாடுகளும் ஆடுகளும் உழவுக்காகவும், மேச்சலுக்காகவும் காலையில் சென்றுவிட்டு பின் மாலையில் திரும்ப வருவதும் தினமும் நடக்கிற விஷயமாக இருக்கும், இப்போது டிராக்டர் வந்த பின் உழவு மாடுகள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது, அப்போதெல்லாம் ஒரு கிராமவாசியுடைய பொருளாதாரம் நிலத்தை தவிர அவர்களிடம் உள்ள உழவுமாடு ஆடு பசுமாடு வண்டிகள் கொண்டே கணிக்கப்பட்டது ஆனால் இன்றோ இவைகள் எல்லாம் குறைந்து போனதில் கிராம பொருளாதாரம் எப்படி வாழ்கிறது என்றே ஆச்சர்யமாக இருக்கிறது,

கிராமத்து இளைஞர்கள் நகரங்களுக்கு பொருளீட்ட நகர்ந்த பிறகு, புதிய தலைமுறையின் பாதிப்புகள் கிராமங்களுக்கு வந்து விட்டன, ஆனால் அங்கே இருப்பவர்களோ பழய தலைமுறை மனிதர்கள்தான், இன்றைய இளைஞார்கள் இல்லாது கிராமங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன, வீட்டில் உள்ள முதியவர்களும் தொலைக்காட்சி பெட்டிகளில் தங்களின் பொழுதுகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள், பேரக்குழந்தைகளுடன் வாழ வேண்டிய சுகங்களை கொடுக்கமுடியாத நிலைக்கு இன்றைய இளையதலைமுறை தேவைகளின் பெருக்கத்தினால் போராடிக்கொண்டிருக்கிறது, முன்பெல்லாம் கிராமங்களில் பெரும்பாலும் இளைஞர்கள் இரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பதும் அப்படியே திண்ணைகளில் படுத்துறங்குவதும் வாடிக்கை, ஆனால் இன்று திண்ணைகள் காலியாகத்தான் கிடக்கின்றன, அவைகளை பராமரிக்க முடியாமல் அவைகள் வேறு உருவத்துக்கு மாறிக்கொண்டிருக்கின்றன,

மண்சாலைகள் தார் சாலைகளாகிவிட்டன தொலைபேசி கம்பிகளும் இன்றைய தொலைக்காட்சி கம்பிகளுமாய் கிராமங்கள் அறிவியல் வலைக்குள் மாட்டி கொண்டிருக்கின்றன, முன்பெல்லாம் காமன் பண்டிகை, காத்தவராயன் பண்டிகை போன்ற விழாக்கள் நடக்கும், அப்போது வித விதமான போட்டிகளும் அதில் வரும் மன சங்கடங்களால் ஏற்படும் சண்டைகள் பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி விசாரணை என்று வித விதமான காட்சிகள், அவைகள் இப்போதெல்லாம் குறைந்து போய்விட்டன என்றே நினைக்கிறேன், கிராமத்தில் படிப்பகங்கள் திராவிட இயக்கங்கள் காலத்தில் உருவானது, இப்போது அவைகளும் இல்லை, பேப்பர் போடும் ஆட்கள் கூட வருவதில்லை

இன்னமும் கிராமங்களில் மீதமிருப்பது ஒரு வித ஏக்கமும், நல்ல காற்றும்தான், எல்லா கிராமங்களிலும், பண்டிகை காலத்திலாவது நமது பேரப்பிள்ளைகள் வரமாட்டார்களா என்று ஒரு தாத்தாவோ பாட்டியோ ஏங்கிகொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது, இன்னும் கொஞ்ச காலம் போனால் அப்படி எதிர்பார்க்கும் மனிதர்களும், சுத்தமான காற்றும்கூட இந்த விஞ்ஞான விளையாட்டில் காணாமல் போய் புதிய தலைமுறைக்கு அவைகள் வெறும் பாடங்களாக பாடப்புத்தகங்களில் மட்டுமே பதுங்கிகொள்ளும்.

செல்வம்

Oct 14, 2008

காலி செய்கிறேன் - சிறுகதை

ஒரு ஆழமான மனநிலையில் இப்போது நான் இருப்பது புரிகிறது, அதன் அழுத்தம் எனது உள்ளமெங்கும் பரவி அது மனதில் அழுத்துவது புரிகிறது, எனது வயது 65 யை கடந்து விட்ட நிலையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் ஒரு அயர்வும் அதன் மூலமான உடல் களைப்பும் சேர சற்று நேரம் எனது வழக்கமான சாய்வு நாற்காலில் அமர்ந்து கொண்டேன். வாழ்க்கை மனிதனுக்கு எல்லா வயசிலும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது, இந்த 65 வருட வாழ்வில் எனது அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தி இருக்கலாம் ஆனால் இப்போது நான் சந்திக்கும் சம்பவங்கள் எனது பழய அனுபவங்களுக்கு சவால் விடுகின்றன, அதனால் எனது பழய அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது,

இப்படி ஒரு சூழல் எனக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, எதையும் புரிந்தோ அல்லது உள் மனதோடோ செய்ததாக உணரமுடியவில்லை, இப்போது எனது நிலையின் இந்த குழப்பங்களுக்கு காரணம் யாராக இருக்ககூடும் என்று சிந்திக்க மனதுக்கு தோன்றவில்லை, சிந்திப்பதில் ஒரு உபயோகம் இருப்பதாகவும் தெரியவில்லை, நட்பு, உறவு, எதிரி, நண்பன், சொந்தம் பந்தம் எல்லாமே ஒரு கானலாய் தெரிகிறது, எதுவும் எந்த நேரத்திலும் ஒரு எட்டாத தொலைவுக்குள் சென்று நின்றுகொள்ளும் என்பது புரிகிறது, ஆனால் இந்த புரிதலில் என்ன உபயோகம் இருக்கிறது என்று புரியவில்லை,

எனது ஆழமான மனம் ஒரு வழிந்து போன நிலையில் உள்ளது அதில் சுவடுகள்தான் மிச்சம் உள்ளன அதில் இனி வறட்சி மட்டுமே மீதமாய் அல்லது வரக்கூடும், அந்த சுவடுகளோடு எனது எண்ணங்கள் பயணிக்க விரும்புகின்றன அவ்வளவே அது கூட ஒரு தோற்றுப்போன சுகம் அனுபவிக்கிற மனநிலையில்தான், தோற்பதில் ஒரு சுகமா எனத்தோன்றலாம், ஆமாம் சுகந்தான் அதை ஒரு செயல்பட முடியாத சூழலில் ஒரு மன தேற்றலாகவே தோன்றுகின்றன, அதனை எப்படியும் விட முடியாதென்றுதான் தோன்றுகிறது,

எனது இளைமைக்காலத்திலும் சரி இப்போதும் சரி எனது குணம் ஒரு புதிராகவே இருந்திருக்கிறது பலருக்கு, என்பது எனக்கு இப்போது புரிகிறது, எனது நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்று எல்லோரும் ஒவ்வொரு காலத்திலும் திணறி இருப்பதும், இப்போது மெல்ல எனது புதிரை அவிழ்க்க முடியாமல் என்னை வெளியிலேயே வைத்திருக்கும் மனநிலைக்கு அவர்களை கொண்டு வந்து சேர்த்து விட்டது போல தெரிகிறது, ஆனால் இதில் இறுதியில் ஒரு வெற்றிடம் ஏற்படக்கூடிய சூழலை எல்லோருமே எதிர்கொள்ளும் நிலைக்கு அறிந்தோ அறியாமலோ எல்லோருமே சென்றுவிட்டது தெரிகிறது. குடும்பம் என்கிற அமைப்பில் இந்த சங்கடங்களை எல்லோரும் ஒரு வயதில் சந்திக்க வேண்டியிருப்பது கட்டாயம் போலும், அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய தவிர்கமுடியாத நிலைதான் உள்ளது,

இதையெல்லாம் ஏன் சுமக்கவேண்டும் என்கிற ஞானம் வரும்போது வாழ்க்கையின் பெரும் பகுதி முடிந்து போய்விடுவதுதான் மிகவும் ஜீரணிக்க முடியாமல் போகிறது, இது ஒரு தோல்விதான் எனக்கு மட்டுமல்ல சமுதாய அமைப்பு அல்லது மரபுகளை உருவாக்கி விட்டு சென்று விட்டவர்களுக்கும் கூட இது ஒரு தோல்விதான், மனிதன் இத்தனை காலங்கள் கடந்த பின்னும் இன்னும் சுய அடையாளத்தை தெளிவை அடையக்கூடிய நிலைக்கு வர ஒவ்வொரு முறையும் 60 வருடம் ஆகிறதே என்பது ஒரு குறைதான், பெரும்பாலனவர்களுக்கு அது மரணம் வரைகூட தெரிவதே இல்லை, இதை ஏன் சரிசெய்ய முடிவதே இல்லை, இன்று உருவாக்கிய ஒரு பொருள் சில விஷயங்களில் சரியாக செயல்படாமல் போனால் அடுத்த தயாரிப்பில் அது சரிசெய்யப்பட்டே மீண்டும் வருகிறது, ஆனால் மனிதன் தனது ஒவ்வொரு புதிய தயாரிப்பிலும் இதே தவறை செய்கிறான்,

இன்று காலை எனது எல்லா சாமான்களும் லாரிகளில் ஏற்றப்பட்டன, என் மனைவியும் மகனும் மருமகளும் காரில் ஏறி புறப்படப்போகிறார்கள், நானும் அவர்களோடு செல்ல வேண்டும், எனக்கு இடப்பெயர்ச்சி புதிதில்லை, எனது அரசாங்க பணியில் தொடர்ந்து பல ஊர்களில் பணி புரிய வேண்டி வந்ததால் நான் பல முறை வீடு மாற்றி சென்று கொண்டே இருந்திருக்கிறேன், அப்போதெல்லாம் இப்படி எந்த மன குழப்பமோ வேதனையோ வந்ததில்லை ஏனனில் அங்கெல்லாம் நான் தற்காலிகம் என்றே உணர்ந்திருந்தேன்,எல்லா இடத்திலும் எனது குழந்தைகளுடன் இருந்து வந்தது ஒரு பெரிய ஆறுதலாக எனக்கு இருந்திருக்கலாம்,ஆனால் அவர்களோடு நான் அதிகம் அன்பாக பேசி இருந்ததில்லை என்றே நினைக்கிறேன், அவர்கள் ஏனோ ஒரு தொலைவிலேயே இருந்தார்கள். என்னால் எந்த ஒரு முறையான வாழ்க்கை முறையை அவர்களுக்கு பழக்க முடியவில்லை, அவர்களே தங்களூக்கான முடிவுகளை எடுக்க பழகினார்கள் அது ஒரு வகையில் அவர்களின் அடையாளங்களை நல்ல முறையில் உருவாக்கி கொள்ள உதவியது, ஆனால் அது அவர்களின் சில உறவினர்களோடான அணுகுமுறையில் தவறான முடிவுகளை எடுக்க வழிவகுத்தது அதனை நான் கண்டும் அதன் விளைவுகளை அவர்களிடம் சொல்லமுடியாத தொலைவுகளில் இருந்தேன் மனதளவில். அதனை ஒரு குறையாக நான் உணரடத்தொடங்கிய போது கிட்டதட்ட என் குழந்தைகள் அப்பா என்கிற ஸ்தானம் பணம் சம்பாதிக்க மட்டுமானதாக முடிவு செய்திருந்தார்கள்.

இதில் நான் யாரையும் குற்றம் சொல்ல முடியாது எனக்கு பழக்கமானதை அல்லது எனக்கு பிடித்துப்போனதை அல்லது எனக்கு இயன்றதை நான் செய்துவிட்டேன். என்கிற மன நிலையில் நான் யாரையும் பொருட்படுத்த தயாராக இல்லை, ஆனால் என்னைப்போலவே எனது சுற்றம் என்னை பொருட்படுத்தாது விடுகின்ற இந்த நிலையில் என்னால் அதனை ஏற்க முடியவில்லை அல்லது ஏதோ தோல்வியும் பெரிய இழப்புமாக தோன்றுகிறது.

என்னால் என் உறவினர்களூக்கு நிறைய உதவி கிடைத்ததாக நம்பினேன், ஆனால் அது ஒவ்வொன்றும் எனது குடும்பத்தாரால் பெரிதாக கணக்கிடப்பட்டபோதுதான் புரிந்தது எனது உதவிகள் ஒரு சராசரி மனிதன் கூட செய்யக்கூடியதுதான், நான் எனக்குள்ளே கேட்கிறேன், எங்கிருந்து வந்தது இந்த மனநிலை எனக்கு, நாம் எல்லோருக்கும் செய்கிறோம், நமக்கு எல்லோரும் செய்யவேண்டும் என்கிற மனநிலை எங்கிருந்து வந்தது என்று யோசிக்கிறேன், அது மிக எளிதாக புரிகிறது எனது பணக்கார மனநிலையில் இருந்துதான், நான் ஒரு தவிர்க்க முடியாத மனிதனாக இருக்கவேண்டும் என்கிற நினைப்பில்தான் எனது எல்லா செயல்களையும் செய்கிறேன், நான் மட்டுமல்ல பெரும்பாலான மனிதர்களின் நோக்கம் அதுதான் போலும், உதவி என்கிற முன்னிலை தன்னை நிறுவுவதற்காக செய்யும் முயற்சி என்பது புரிகிறது, ஆனால் அந்த நிறுவுதலில் இருக்கிற சுயநலம் வெகுகாலம் மறைக்க முடியாமல் போகிறது அல்லது அது யாரோவால் அடையாளம் காணப்பட்டு உடைக்கப்பெரும் போது அது நம்மை நிராதரவாக விட்டு விட்டு எட்டி நின்று சிரிக்கிறது, அதுதான் என்னை இப்படி மிகுந்த மன சுமையோடு அல்லாட வைக்கிறது,

எனது பணிக்காலம் முடிந்தபின் எத்தனையோ ஊர்களில் சுற்றி இருந்தாலும் கடைசியில் சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமாக இருக்கும் அதுதான் எனது முடிவுமாக இருந்தது, அதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றாக இருக்கலாம், ஆனால் நான் கண்ட காரணம் வேறு கொஞ்சம் புதிதாக இருக்கலாம், பிள்ளைகளோடான மன நெருக்கம் என்னைப்பொருத்தவரை எனது உடன்பிறந்தோரைவிட குறைவுதான் என்பது ஒரு காரணம், அவர்களோடு இருக்கவேண்டிய மன ஓட்டம் என்னை எனது சொந்த ஊர் நோக்கி விரட்டியது என்று சொல்லலாம்,

எனது வருகை எந்த ஒரு சகோதரனையோ சகோதரியையோ சந்தோஷப்படுத்தியதா என்று எனக்கு புரியவே இல்லை இப்போதுவரை, நான் இங்கிருந்து என் மகனோடு சென்று தங்குவதற்கு வேண்டி இந்த வீட்டை இப்போது காலி செய்யும் வரை இந்த கேள்வி எனக்குள் வந்து கொண்டேதான் இருக்கிறது, நான் போகவேண்டி எந்த நிர்பந்தமும் எப்படி இதுவரை இல்லையோ அதுபோல் நான் வரும்போதும் அப்படி ஒரு நிர்பந்தம் இல்லாமல்தான் வந்தேன், எனது வருகை எல்லோரையும் பல கேள்விகளை ஏற்படுத்தியதில் எனக்கு முதல் ஆச்சர்யம் ஆனால் அந்த கேள்விகளின் பொருள் நேரடியாக எந்த இடத்திலும் எனக்கு புரியவே இல்லை, ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பது மட்டும் எனக்கு இப்போது வரை புரிகிறது, அதனால்தான் நான் கோபம் கொள்ளாமல் வேறு மனநிலையில் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன், எனது சகோதரர்கள் மீது எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு அவர்கள் எந்த சூழலிலும் வெட்டிக்கொண்டு போக விரும்புபவர்கள் இல்லை, எனது எல்லா விழாக்களிலும் அவர்கள் மிகவும் முக்கியமான பங்கு வகித்து உதவினார்கள் அது மறுக்கமுடியாதது. கூட்டமாக வாழ விரும்புகிறார்கள், தனது சுற்றங்கள் வரும்போது மகிழ்கிறார்கள், ஆனால் இத்தனையும் இருந்தும் எனது இந்த விடைபெறுதலுக்கும் அவர்களே காரணமாக இருக்கிறார்கள், அது எப்படி என்பது புரிகிறது, அவர்கள் என்னை நிராகரிக்கவில்லை, என்னை நன்கு உபசரிக்கிறார்கள் என்னிடம் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள், அதில் எந்த போலித்தனமும் இல்லை, ஆனால் நான் இங்கு இருப்பதை அவர்களின் ஏதோ ஒரு நடவடிக்கை தடுக்கிறது, ஆனால் அதை இதுதான் என்று என்னால் அடையாளம் காண முடியவே இல்லை, அதில் உள்ள நியாயம் அந்த அடையாளத்தை மறைக்ககூடும் என்று தோன்றுகிறது,

ஆனாலும் எனக்கு நேரடியாக யாரையும் அணுக முடியவில்லை அதற்கான காரணம் என்ன என்பது புரியவே இல்லை, எனது பக்கம் நியாயம் இல்லாமல் போய்விட்டதா என்றும் தெரியவில்லை,

எனது பிள்ளைகளின் செயல்கள் அவர்களை நேரடியாக பாதித்திருப்பது உண்மை, அதன் ஆழமான காரணம் அதில் இணைக்கப்பட்டிருக்கலாம், ஒரு மோசமான புரிதலின் கெடுதல் அது, அதனை ஆரம்பத்தில் சரியாக்க வேண்டிய நான் அதனை வேடிக்கை பார்த்தது இப்போது வளர்ந்து நிற்கிறது, மற்ற எந்த குடும்பத்திலும் இப்படி ஒரு விலக்கம் தேவையாயில்லை, அவர்களின் விழாக்கள் எனது குடும்ப விழாக்களை விட கூடுதல் மனிதர்களோடு ஆர்ப்பாட்டமாய் நடக்கிறது, அது ஏன் என்பது எனக்கு ஆரம்பத்தில் கோபத்தைதான் வரவழைத்தது, ஆனால் இதில் எல்லாம் எனக்கு ஒன்றும் புரியாமல்தான் இருந்தது, இப்போது வரை ஏனனில் இப்போது நான் சந்திக்கும் இந்த விடைபெறுதல் முடிவு செய்யப்பட்டபோதுதான், உண்மையான காரணம் மெல்ல எனக்குள் விரிய ஆரம்பித்தது, வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலியாக இருந்திருக்கவில்லை, அது என்னை ஜெயித்துவிட்டது, அதன் போக்கில் என்னை கொண்டுபோக வைத்து, எனது எல்லா முடிவுகளையும் யாரோ எடுப்பது போல் பார்த்துக்கொண்டது, விளைவு நான் எனது சொந்த விஷயங்களில் கூட ஒரு பார்வையாளனாக இருந்து கொண்டே வந்திருக்கிறேன், அது என்னை மிகவும் செயல்படாத மனிதனாக ஆக்கிவிட்டது, மனிதன் இப்படி வாழ்வின் சாதாரண சந்தர்பங்களில் கூட தனது சுயத்தை வெளிப்படுத்தாமல் போனால் கடைசிவரை அவனது நிகழ்வுகள் எல்லாம் மூன்றாவது மனிதனாலேயே முடிவுசெய்யப்படும்.

எனது பிள்ளைகள் என்னை பணம் பண்ணும் இயந்திரமாக மட்டும் பார்க்கத்தொடங்கிவிட்ட நிலையில் நான் ஒரு சக்கையாக வெளியே வீசப்பட்டிடக்கூடும் என்கிற பயம் எனக்குள் வரத்தொடங்கிய போது நான் பெரிதும் பயந்தேன் ஆனாலும் ஒரு உணர்வு என்னை கட்டிப்போட்டு வந்தது அது ஒரு நம்பிக்கை சமூகம் தரும் நம்பிக்கை என்றுதான் நம்புகிறேன், எனது பணக்கட்டுபாடுகளை ஓரளவுக்கு என்னகத்தே நான் கொண்டிருக்கிறேன். அதனால் ஓரளவுக்கு எனது நம்பிக்கைகள் என்னை ஏமாற்றவில்லை, ஒருவேளை எனது சகோதரர்கள் என்னை நெருங்கி வந்திருந்தால் எனது பிள்ளைகள் என்னை சக்கையாக்கி இருக்ககூடுமோ என்னவோ, அதன் பின் எனது நிலையின் கடுமை என்னை மிகவும் ஒரு வேதனையான கட்டத்திற்கு கொண்டு போயிருக்கலாம்,

இந்த காரணம் எனக்குள் மெல்ல வரத்தொடங்கியபின் எனக்குள் ஒரு தெளிவு வருகிறது அது, ஆனாலும் எனது உடன்பிறந்தோர் ஒரு வெளிவட்டத்தில் நிற்க காரணமான இந்த பயணம் என்னை சந்தோஷ படுத்தவில்லை, இதோ எனது கார் எனது சொந்த ஊரை தாண்டி செல்கிறது எனது பல மன வேதனைகளை பகிர்ந்து கொண்ட குளமும் குளக்கரையும் என் கண்களின் பார்வையில் இருந்து மறைந்து விட்டன எனது இந்த மனவேதனை தெரிந்து கொள்ளாமலே.


செல்வம்

Oct 12, 2008

நன்றி நண்பரே. (தமிழில் எழுதலாம் வாருங்கள்)

நேற்று மாலை நண்பர் ஜீவா அவர்கள் அபுதாபியில் இருந்து தொலைபேசியில் அழைத்து, எல்லாம் செய்த பின்னும் தமிழில் எழுதமுடியவில்லை என கூறினார், அதன் பின் தான் எனது தவறு புரிந்தது.

படம் 7 ம் படம் 8 ம் இப்போது புதிதாக இணைத்து Alt+2 பட்டனை உபயோகப்படுத்த வேண்டிய விவரத்தை இணைத்துள்ளேன்.

படம் ஏழில் உள்ளது போன்று உங்கள் கணினியின் கீழ்பகுதியில் காணப்படும், அது உங்கள் மென்பொருள் சரியாக நிறுவப்பட்டு செயல்படுவதை உறுதி செய்கிறது, இப்போது Alt+2
பட்டனை அழுத்துங்கள் இப்போது படம் எட்டில் உள்ளது போல் என மாறும்அவ்வளவுதான் இப்போது நீங்கள் தமிழில் எழுதலாம்


இப்போது சரியாக இயங்கும் என நம்புகிறேன்.

நண்பர் ஜீவா வுக்கு எனது நன்றிகள்.

செல்வன்

Oct 11, 2008

தமிழில் எழுதலாம் வாருங்கள். உளறல்-6

எல்லோருக்கும் தமிழில் எப்படி எழுதுவது என்ற கவலை இருக்கும், அது பல இணைய தளங்களால் மிகவும் எளிதாக தரப்பட்டுள்ளது அதிலிருந்து, அதனை எப்படி உபயோகிக்கலாம் என்கிற முறையை இதனுடன் இணைத்துள்ளேன், அனைவருக்கும் எளிதில் புரியும் என்றே நினைக்கிறேன், ஏதும் ஐயங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள், எவ்வளவு சிறியதான குழப்பமாக இருந்தாலும் தயக்கமின்றி கேளுங்கள் என்னால் முடிந்தவரை உதவுகிறேன். எழில்நிலா இணைய தளத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

1. முதலில் இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்
http://www.ezilnila.com/2. மேலே படம் ஒன்றில் உள்ள மென்பொருள் பகுதியை தேர்ந்தெடுங்கள்


3. மேலே படம் இரண்டில் உள்ள download eKalappai என்பதை click செய்யுங்கள்,4.மேலே மூன்றில் உள்ள Run button னை click செய்யுங்கள்

5. நான்காவது செயல் முடிந்த பிறகு புதிய eKalappai downlaoad ஆகும், அதன் பின் மேலே படம் நான்கில் காணும் படத்தில் உள்ள Run buttonனை click செய்யவும்


6. இப்போது மேலே படம் ஐந்தில் உள்ளது தோன்றும் இதில் உள்ள install button னை click செய்யவும்.
7. இப்போது licence agreement வரும் அதனை Accept click செய்யுங்கள்

8. அதன் பின் Installation complete ஆனதும் close செய்யுங்கள்.


இப்போது தமிழ் டைப் செய்ய வேண்டிய முறைகள் முடிந்து விட்டன,


9. இப்போது Ms-word செல்லுங்கள் அங்கே
மேலே படம் ஆறில் உள்ளது போல் font selection ல் TSCu_Paranar என்கிற font யை select செய்யுங்கள்.
இப்போது படம் ஏழில் உள்ளது போன்று உங்கள் கணினியின் கீழ்பகுதியில் காணப்படும், அது உங்கள் மென்பொருள் சரியாக நிறுவப்பட்டு செயல்படுவதை உறுதி செய்கிறது, இப்போது Alt+2
பட்டனை அழுத்துங்கள் இப்போது படம் எட்டில் உள்ளது போல் என மாறும்

அவ்வளவுதான் இப்போது நீங்கள் தமிழில் எழுதலாம்

Type செய்யும் போது கவனிக்க வேண்டியவை.

அம்மா என்பதை ammaa என்று செய்யவேண்டும்

அன்புடன் என்பதை anpudan என்று செய்ய வேண்டும்

ழ என்பது za ஆகவும் ழ் என்பது z ஆகவும் உள்ளது.

ந என்பது wa ஆகவும் ந் என்பது w ஆகவும் உள்ளது.

இது போல மற்ற எழுத்துக்களையும் முயன்று பாருங்கள்.

ஏதும் சந்தேகம் இருந்தால் எனக்கு எழுதுங்கள்.

செல்வம்

Oct 8, 2008

ரஜினியும் அரசியலும் உளறல்-5


இப்போது ரஜினிகாந்த அவர்கள் அரசியலுக்கு வரவேண்டி ரசிகர்கள் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது, இதன் இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தொடக்கம் என்பது எந்த காரணத்தில் உருவாகிறது என்று யோசிக்க வேண்டியிருக்க்கிறது.

இந்திய அரசியலை பொருத்தவரை ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டன, அதன் காரணங்கள் ஒரு பொதுவான மக்கள் பிரச்சினையாக இருந்ததை காணமுடியும். இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது நமது நாட்டின் மக்கள் படும் அடிமை நிலையை துடைத்து அவர்களுக்கு வேண்டிய அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டி உருவாக்கப்பட்டு பின்னர் அதுவே பெரிய சுதந்திர இயக்கமாகி இந்திய விடுதலைக்கு வித்திட்டது, அதன் தோன்றுவதற்கான காரணத்தில் இருந்த முக்கியம் எவ்வளவு ஆழமானது என்பது நாம் எல்லோருக்கும் புரியும்,

அடுத்து நமது தமிழகத்தில் தோன்றிய கட்சிகளின் தோன்றிய காரணங்கள் மிகவும் ஆழமாகத்தான் இருந்தன, திராவிடக்கழகம் தோன்றிய போது அது தொடங்கிய காரணம் எவ்வளவு மாற்றங்களை கொண்டுவந்தது என்பதும், அது ஒரு அரசியல் இயக்கமாக இல்லாததால் அதனால் சில தொலைவுகளை தொட முடியவில்லை என்பதும் அதனால் திராவிட முன்னேற்ற கழகம் உருவானது என்பதும் எல்லோரும் அறிந்ததே அந்த நேரத்தில் அப்படி ஒரு தேவையும் வெற்றிடமும் ஏற்ப்பட்டதால் அதனை தொடங்கியபோது பெரும் ஆதரவும் பெரும் மக்கள் மன மாற்றமும் தொடங்கியதை நாம் அறிவோம், காமராஜரின் அரசியல் வீழ்ச்சிக்கு பின்னாள் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு வெற்றிடம் ஏற்ப்பட்டது அதனை நிறைவு செய்ய அப்போது எம்ஜிஆரின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவானது அதுவும் பெரும் வெற்றி பெற்றது அதற்கான காரணம் எம்ஜிஆரின் கவர்ச்சி என்பது ஒரு உண்மை என்றாலும் திமுக வுக்கு அடுத்ததாக காங்கிரஸ் இல்லாமல் அது ஒரு குழப்பமான நிலையில் இருந்தது அது மக்களை இன்னொரு இயக்கத்தை நோக்கி செல்ல வைத்தது.

அதன்பிறகு கடந்த 1996ல் ஜெயலலிதா அரசு தன் மோசமான ஆட்சி காரணமாக கெட்ட பெயர் எடுத்த நிலையில் வந்த தேர்தலில் உண்மையிலேயே ஒரு வெற்றிடம் ஏற்ப்பட்டு இருந்தது அது தமிழ்மாநில காங்கிரஸ் மூலம் ஓரளவுக்கு நிறைவு பெற்றாலும் அப்போது ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் அது இன்னொரு எம்ஜிஆர் ஆக மாறி ஒரு புதிய தருணத்தை தமிழக அரசியலில் உண்டாக்கியிருக்கலாம்.

ஆனால் அப்போதும் அவர்கள் திமுக கூட்டனிக்குள் போனதால் எதிர்கட்சி என்ற இரண்டாமிடம் மீண்டும் அதிமுகவுக்கே கேட்காமலேயே போய்விட்டது, எம்ஜிஆர் எப்படி காங்கிரஸை பின் தள்ளி தமிழகத்தில் திமுக அதிமுக என்று ஆக்கினாரோ அதுபோல் திமுக காங்கிரஸ் என்று அதிமுகவை பின் தள்ளிவிட்டு அந்த இடத்தில் தமிழ்மாநில காங்கிரஸோ அல்லது ரஜினியுடைய கட்சியோ வந்திருக்கவேண்டும்.
ஆனால் இவர்களுக்கு இருந்த கடைசிநேரக் குழப்பம் இவர்களை மீண்டும் திமுக கூட்டணிக்குள்ளே கொண்டுபோனது அதை கலைஞரும் நன்கு புரிந்து கொண்டு தன்னால் முடிந்தவரை அந்த தேர்தலை தனக்கு சாதகமான கூட்டனியாக மாற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றார், அதன் பிறகு அடுத்த தேர்தலில் தனது மோசமான கூட்டணி முடிவை எடுத்ததன் மூலம் மீண்டும் அதிமுகவே வரவும் வாய்ப்பை ஏற்படுத்தினார், இந்த நேரத்தில் அப்படி பெரிய வெற்றிடம் ஏதும் இல்லை என்றே சொல்லவேண்டும், அதன் பிறகு வந்த தேர்தலிலும் அதிமுகவும் திமுகவும் கிட்டதட்ட பெரிய வீழ்ச்சிகளை நோக்கி செல்லவில்லை அதனால் அந்த வெற்றிடம் என்கிற சூழல் இப்போதுவரையில்லை,

ஆனால் இன்று பொதுவாக ஒரு மன மாற்றம் காணப்படுகிறது, முக்கியமாக திமுக அரசின் செயல்பாடுகள் பெரும் அதிர்ப்தியை மக்களிடம் உருவாகியுள்ளது, அதற்கான முக்கியமான காரணங்கள் விலைவாசி உயர்வு, மின் தடை, இலங்கை பிரச்சினை, ஆகியவை மற்றும் சன் டிவி உடனான எதிர்நிலை பாமக வின் பிரிவு, இடதுசாரிகளின் பிரிவு மற்றும் கலைஞரின் கவிதைகள் என்று நிறைய அதிர்ப்தி அலைகள் போன்ற காரணங்களால் இன்று திமுக கூட்டனி ஒரு பலவீனமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஒரு சிறிய வெற்றிடம் உருவாகியிருக்கிறது, ஏன் சிறிய வெற்றிடம் என்று சொல்கிறேன் என்றால் இப்போது ஏற்ப்பட்டிருக்கும் இந்த பின்னடைவை சரிசெய்யக்கூடிய நிலையில்தான் திமுக உள்ளது அதற்கான காலமும் நிறைய இருக்கிறது, ஒருவேளை பாமக மீண்டும் கூட்டணியில் மீண்டும் சேரலாம் அல்லது அதிமுக அணி தனது செயல்பாடுகளால் நல்ல கூட்டணியை அமைக்காமல் போகலாம் இப்படி நிறைய காரணங்கள் இருப்பதால் அது சிறிய வெற்றிடமாக இருக்கிறது, அதனை நிரப்ப விஜயகாந்த் மிக சரியான பாதையில் தனது கட்சியை இயக்கி கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன், காரணம் இன்று 1967 போல் இல்லாமல் வாழ்க்கை முறைகள் மிகவும் மாறிவிட்டன மக்கள் எந்த நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக அலைந்துகொண்டும் அதிகரித்துப்போன வாழ்க்கை தேவைகளுக்காக அலைந்துகொண்டும் இருக்கிற சூழலில் கூட விஜகாந்துக்கு கூட்டம் கூடுவதை பார்க்கவேண்டும் மற்ற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் பொது மக்களும் அதிகம் கூடுகிறார்கள் என்பது கவனிக்கவேண்டியது.

எனவே இந்த வெற்றிடத்தேவை இப்போது இல்லாத நிலையில் ரஜினியின் புதிய கட்சி எந்தகாரணத்திற்காக தொடங்கமுடியும் என்பது மிகவும் முக்கியமான கேள்வி.
அப்படியே தொடங்கினாலும் அது ரஜினியின் செல்வாக்கை சிரமப்படித்திவிடக்கூடும் என்றே நினைக்கிறேன். ஆனால் ரஜினிக்கு இப்போது ஒரு தேவை இருக்கிறது அது தனது குசேலன் படம் தோல்வி அடைந்ததால் தனது அடுத்த படமான எந்திரன் மிக அதிக பொருட்செலவில் வர இருக்கும் நிலையில் அது எந்த பாதிப்பும் அடையாமல் இருக்கவேண்டி தனது ரசிகர்களை எழுச்சியுடன் வைத்திருக்கவேண்டியதும் வேறு யாருடைய பகைமையையும் பெறாமலும் இருப்பது அவசியம், ஏனனில் அதுவும் பலரது உழைப்பும் எதிர்காலமும் இணைக்கப்பெற்ற தொழில் அதில் ரஜினியின் அக்கறை மிகவும் இன்றியமையாதது.

இதெல்லாம் மனசில் கொண்டே அவரும் தனது தற்போதைய ரசிகர்களை சந்தித்திருக்ககூடும் என்று நினைக்கிறேன். எனக்கும்கூட இந்த குழப்பங்கள் எல்லாம் ரஜினி என்கிற தனிமனிதனின் இயல்பில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நல்லமுறையில் சரியாக்கப்படவேண்டும் என்றுதான் தோன்றுகிறது, அதற்கான காலம் சரியான வெற்றிடம் உருவாகுதல் பொருத்ததுதான்,

முன்பெல்லாம் கட்சிகளின் தலைவர்கள் அப்பப்போது மாறி வருவார்கள் அது இப்போது இடதுசாரிகளிடமும் பாஜக விடம் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறேன், அதன் பொருள் கட்சிகாகத்தான் தலைவர் என்பது மாதிரி, மக்களும் கட்சியின் கொள்கைகளை நம்பி வாக்களிகலாம், ஆனால் இப்போது காங்கிரஸ் தொடங்கி கிட்டதட்ட பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் நிரந்தர தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள் ஆகையால்தான் ஒரு தனிமனிதன் நினைத்தால் தனது செல்வாக்கை கொண்டு கட்சி தொடங்கமுடிகிறது, இந்நிலை எவ்வளவு ஆரோக்கியமானது என்று தெரியவில்லை,

செல்வம்

Oct 5, 2008

உளறல்-4


ஒரு நிலையான தருணத்தில் மனதில் ஏற்படும் உணர்வுகளை நாம் நமக்குள்ளே கூர்ந்து கவனிப்பதில்லை அதன் ஆழமான வடிவங்கள் பெரும்பாலும் வெளிப்படுத்த முடியாததாக இருப்பதை காணமுடியும், இதை தான் சுய சரிதை அல்லது டைரி எழுத நினைப்பவர்கள் உண்மையை எழுத முடிவதில்லை என்று கூறப்படுகிறது,

உங்களின் தனிமைப்பொழுதில் வரும் எண்ணங்களை கொஞ்சம் வரிசைப்படுத்தி ஒரு காகிதத்தில் எழுதிப்பாருங்கள் எந்த ஒளிவும் இல்லாமல் அது பின்னர் அழித்து விடலாம், அந்த எழுத்தை பிறகு படித்துப்பாருங்கள் அதுதான் உங்களின் உண்மையான சொரூபம், அதை நீங்கள் வெளிப்படுத்தாமல் இருக்கலாம் அல்லது வெளிப்படுத்த விரும்பாமல் இருக்கலாம் அல்லது வெளிப்படுத்த பயமாக இருக்கலாம், இப்படி ஏதாவது ஒரு உணர்வு உங்களுக்குள்ளே அடைப்பட்டு கிடப்பதுதான் மிகப்பெரிய சுமை அது தனது தணிமைப்பொழுதில் வாய்ப்புகளைப்பொருத்து கொஞ்சமோ கூடுதலாகவோ வெளிப்படுகிறது அதன் பலன் அந்த எண்ணத்தின் தன்மையை பொருத்து நல்லதோ கெட்டதோ ஒரு விளைவையும் கொடுக்கும்.

இப்படி தனிமையில் மட்டும் வெளிப்படும் தன்மை நம்மை சுற்றியுள்ளவர்களின் தொடர் நடவடிக்கைகளால் பொது இடங்களிலும் வெளிப்படுகிறது, அதுதான் உங்களை ஒருவகையில் பிரபலமான மனிதனாக மாற்றுகிறது, அந்த பிரபலத்தின் தன்மை எதுவாக இருக்கும் எனபது உங்களின் உண்மையான உள் மனத்தன்மையை பொருத்தது. உங்களின் உள் மனத்தன்மை உங்களை ஒரு ஞானியாகவும் அல்லது ஒரு சேவகனாகவும் அல்லது ஒரு திருடனாகவும் அல்லது ஒரு மனநிலைபாதிக்கப்பட்ட மிருகமாகவும் கூட வெளிப்படுத்த வைக்கலாம்.

சராசரியில் மனிதனுக்குள் ஏற்ப்படும் மன அழுத்தங்களும் இந்த வகையினில்தான் வருகிறது தனது மனம் ஒரு எல்லையை வகுத்து கொண்டு சிரமப்படுகிறது என்கிற உண்மை நிறைய பேருக்கு தெரிவதே இல்லை, அவர்களுக்கு அதை எத்தனை விளக்கினாலும் புரிவதே இல்லை, உதாரணாமாக ஒரு மகன் தன் தந்தை தன்னை டாக்டருக்கு படிக்கவைக்கவில்லை என்று மனதில் ஏற்படுதிக்கொண்டு தான் சாகும் வரைக்கும் தன் தந்தையால்தான் நம் வாழ்க்கை பாழாகப்போனது என்று குற்றம் சொல்லிக்கொண்டிருந்தால் அது எவ்வளவு முட்டாள்தனமாக நமக்கு தோன்றுமோ அப்படித்தான் நாமும் கூட பல விஷயங்களில் அப்படி செயல் படுகிறோம் ஆனால் அதற்கு வசதியான ஒரு காரணம் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் நம்மை நமது குற்ற உணர்வில் இருந்தே காப்பாற்றி விடுகிறது,

ஏதோ ஒரு வகையான கயிறு நம்மையெல்லாம் சில பந்தங்களில் கட்டிவைத்திருக்கிறது அது அறியாமல் நாம் அதை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம், வேறு யாரும் அப்படி நம்மிடம் இல்லை எல்லோரும் ஒரு சுயநலத்தோடுதான் சுற்றி வருகிறார்கள் என்று கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஒரு மனக்குறை இருக்கிறது, நீங்கள் அப்படி உங்களை இணைத்துக்கொள்வதில் என்ன சுகம் கண்டீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப்பார்த்ததுண்டா? நன்றாக நம்புங்கள் எந்த சுகமும் இல்லாமல் நீங்கள் அல்லது எந்த உயினமும் ஒரு செயலை தொடர்ந்து செய்யாது, ஒரு உணவையோ, அன்பையோ, எந்த தேவையும் இல்லாமல் எதுவும் வெளிப்படுத்துவதில்லை,
ஒரு குழந்தை உங்களிடம் வரமறுக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு சில முறைகள் முயன்று பார்பீர்கள் அதன் பிறகு அது நம்மிடம் வராது என்று முடிவுக்கு வந்து தூக்கும் முயற்சியை செய்யக்கூட மாட்டீர்கள், அதாவது அதனால் நமக்கு சந்தோஷம் இல்லை என்று தெரியும்போது உங்களின் அந்த குழந்தைக்கான ஒரு சேவை முடிந்துவிடுகிறது, அப்படித்தான் உங்களின் நண்பர்களுக்கான, உறவினர்களுக்கான சேவையும் உதவியும்,

உங்களால் அவர்களுக்கு தொடர்ந்து உதவியிலோ அல்லது ஆறுதலிலோ இருக்கமுடிகிறது என்றால் நிச்சயம் உங்களுக்கு அதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது என்பதை நம்புங்கள் அதனை எதுவென்று கண்டுபிடியுங்கள்.

இப்போது புரியும் உங்களின் நடவடிக்கைகள் உங்களுக்காக மட்டுமே என்பது, அதன் உண்மையான காரணம், உங்கள் உள் மனதில் ஒளிந்து இருக்கும் அது தெரியும்போது நீங்கள் வருத்தப்பட ஏதும் இல்லாது போவது புரியும்.

வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், இந்த உலகம் ஒவ்வொரு அங்குலத்தையும் உங்களுக்காகவே படைத்து வைத்திருக்கிறது அதில் சென்று பாருங்கள் உலகம் மிகப்பரந்த 350 கோடி மக்களை கொண்ட மிகப்பெரிய விதவிதமான எண்ணங்களைக்கொண்ட கடல் அதனுள்ளே சென்று புதிய மனிதர்களையும் அவர்களின் செயல்களையும் ரசியுங்கள் நம்மைச்சுற்றியுள்ள ஒரு சில மனிதர்களிடம் காணும் குறைகளை சுமந்து கொண்டு திரியாதீர்கள் அது உங்களுக்கு எந்த உதவியும் செய்யாது.


செல்வன்

Oct 4, 2008

உளறல்-3


எனது வலைப்பூ தொடங்கி எனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய பின் சில நண்பர்கள் தங்கள் மன மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் தெரிவித்திருந்தார்கள், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், அவர்கள் மூலம் இது இன்னும் பலபேருக்கு பரவவும் வாய்ப்பிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்,

இந்த வலைப்பூ தொடங்கவேண்டிய அவசியத்தை நான் எழுத நினைக்கிறேன், அது பல பேருக்கு உதவலாம் என்பதால்,

ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்த காரியம் இருக்கும், மனோதத்துவத்தில் சொல்வார்கள் உனது மனம் சோர்வடையும்போது உனக்கு பிடித்த செயலை செய் அது உன் மனதை சமநிலைப்படுத்தும், இது பல நாட்களாக நான் சோதித்து பார்த்து செயல்படுத்துவது, எனது பெரும்பாலான நண்பர்களிடம் நான் கேட்டிருக்கிறேன் உனது பிடித்த விஷயம் என்னவென்று பல பேருடைய பதில் அனேகமாக அவரின் பிடித்த விஷயம் இன்னும் அவர்களால் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்பதுதான்.

அதற்காக அவருக்கு பிடித்த விஷயம் இல்லாமல் இல்லை என்பதல்ல, அது இருக்கிறது ஆனால் அவர்களுக்கு சொல்லத்தெரியவில்லை, ஆனால் உங்களின் பொழுதுபோக்கு என்னவென்று கேட்டால் உடனையாக சொல்லி விடுகிறார்கள், தொலைக்காட்சி பார்ப்பது சமைப்பது,விளையாடுவது, படிப்பது என்று. இந்த பொழுதுபோக்குகள் அவர்களின் பிடித்த விஷயமாக இருக்ககூடும் அல்லது அதில் உள்ள ஏதோ ஒரு விஷயம் இருக்ககூடும், இந்த குழப்பம் புத்தகம் படிப்பவர்களுக்கு அவ்வளவாக வருவதில்லை ஏனனில் தனது மனநிலை சரியில்லாதபோது ஏதோ ஒரு புத்தகத்தை தேடிசென்றுவிடுகிறார்கள், அது அவர்களை சரிசெய்து கொள்ளச்செய்வதுடன் மற்றவர்களையும் பாதிக்காது செய்யமுடிகிற செயலாக இருக்கிறது, அதனால்தான் இன்றும் பலர் புத்தக புழுக்களாக இருப்பதை பார்க்க முடிகிறது, இசையோ அல்லது வேறு எந்த மார்க்கமானாலும் உங்களுக்கு அடுத்தவருடைய உதவி தேவை.

அந்த புத்தகங்களை படிக்கிற பழக்கம்தான் மனிதனை மனிதனாக வாழ உதவும் என்பது என் எண்ணம், எனது சிறிய வயதில் 10 ம் வகுப்பு காலத்தில்தான் நான் எழுத தொடங்கியதாக நினைவு அப்போது எழுதிய கவிதைகள் இன்னும் எனது டைரிகளில் பாதுகாப்பாக உள்ளது அவைகளின் தரம் பற்றி என்னால் எந்த உத்திரவாதமும் தரமுடியாததால் அவைகளை இப்போதைக்கு பதிவுகளில் ஏற்ற உத்தேசம் இல்லை ஆனால் அந்த காலம் தொடங்கி எனது தந்தையார் எழுதிய கடிதங்கள் எனது எழுத்து ஆர்வத்தை அதிகப்படுத்தின, எனது தந்தையாரின் கடிதங்கள் மிக நீண்டவையாகவும் வெகுகாலம் பாதுக்காக்க வேண்டியவையாகவும் அமைந்திருந்தன அத்தனை செய்திகள் ஆறுதல்கள் அதில் நிரம்பி இருக்கும், அப்பாவின் நண்பர்கள் சீடர்கள் என்று எல்லோருக்கும் அவரின் கடிதங்கள் பெரும் இன்றியமையாத பொருளாகிப்போயிருந்தது, நான் வீட்டில் இருந்து வெளிப்புறப்பட்ட காலத்தில், எனது வெளிநாட்டு வாழ்க்கையில் எனக்கும் எனது தந்தையாருக்குமான கடித தொடர்பு அதிகரித்தது, அந்த காலங்களில் எனது பிடித்த விஷயம் என்பது என் தந்தையாருக்கு நான் எழுதும் கடிதங்கள்தான், எனது வெளிநாட்டு வாழ்க்கை முறைகள் கலாச்சாரம் எனது சிரமங்கள் என்று நான் எழுதாத விஷயங்கள் எதுவும் இல்லை எனலாம் மனது சோர்வாக இருக்கும்போது நான் கடிதமெழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன், இத்தனைக்கும் கைத்தொலைபேசிகள் மலிந்துவிட்ட காலம். பெரும்பாலான கடிதங்கள் சிலநாட்களில் முழுமை பெற்று இந்தியாவில் எனது தந்தையை அடைந்துவிடும், அம்மாவுக்கும், அப்பாவுக்க்கும் எனது கடிதங்கள் எனது இருப்பை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன் அதில் வெளிப்படும் நமது பிம்பம் ஒரு கம்பீரமானதாக அவர்கள் உணர்ந்திருப்பதை அறிந்தேன், தனது நண்பர்களிடமெல்லாம் எனது கடிதங்களை தந்தையார் கொடுத்து படிக்க சொன்னதை சில நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன், இந்த விஷயமும் கூட என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டியது,

எனது தந்தையாரின் கடிதங்கள் பெரும் ஆசீர்வாதங்களும் ஞான அனுபவங்களும் குடும்பத்து நிகழ்ச்சிகளைப்பற்றிய வர்ணனைகளையும், பேரப்பிள்ளைகளின் திருவிளையாடல்களயும் கொஞ்சம் தற்காலிக அரசியல் சூழல்களையும் விவரித்த வண்ணம் இருக்கும்.

தனது நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர்கள் எனக்கு கடிதமெழுதும் பொருப்பை எனது தாயாரிடம் வலியுருத்தியுள்ளார்கள் அது தனது இறுதி நேரத்தை அறிந்து கொண்டதின் காரணமாக ஆனால் எனது அம்மையார் அதனை அப்போது ஏற்க முடியாமல் மறுத்துவிட்டதும், ஆனால் அந்த கடிதமே எனக்கு அவர் எழுதிய கடைசிகடிதமாக அமைந்து விட்டது. அதன் பிறகு அவரை நான் சந்தித்தது அவரின் இறந்த நாளில்தான், அவரின் மரணம் எங்களின் வாழ்க்கை முறையையே மாற்றி போட்டுவிட்டது, அவரின் ஆதிக்கத்தால் எத்தனை துயர்கள் எங்களை அணுகாமல் இருந்தன என்பது இப்போது புரிகிறது, அவர் எளிமையின் மறு உருவம் அவரைப்பற்றி எழுத எனக்கு நேரங்கள் போதாது, அத்தனை பெரிய தியாகங்களை எங்களுக்காக அவர் செய்து இருக்கிறார்கள், ஒவ்வொரு தகப்பனும் அப்படித்தான், அதில் அவர் சற்று அதிகமான பாதிப்புகளை ஏற்ப்படுத்தினார், யாரையும் குறைகூறவோ குற்றம் சொல்லவோ விரும்பியதில்லை, எல்லோரையும் நேசிக்கும் பழக்கம் அவரிம் இருந்தது அது எப்படி வந்தது என்று தெரியவில்லை,

உறவினர்களை நண்பர்களாக பார் என்று எண்ணிடம் பலமுறை சொல்லி இருக்கிறார் அப்போதுதான் அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது இருக்கமுடியும் என்று பலமுறை சொல்வார்.

அவருக்கு கடிதம் இனிமேல் எழுத முடியாமல் போனதை என்னால் ஜீரணிக்கமுடியாமல் இருந்தகாலத்தில்தான் இந்த வலைப்பூவை தொடங்க அதுவும் அவர் சமாதி படங்களுடன் ஆரம்பித்தேன், அவரோடான எனது கடித உரையாடல் இப்போது எனது நண்பர்களோடும் தொடர முடிகிறது, எனது எண்ணங்கள் எனது பிடித்த விஷயங்கள் இதில் வரும் உங்களின் கருத்துக்களை கீழே உள்ள comments
பகுதியில் ஆங்கிலத்திலும் முடிந்தால் தமிழிலும் எழுதலாம், தமிழில் எழுத வழி வேண்டுபவர்கள் தொடர்பு கொண்டால் வழிகளை சொல்லித்தர தயாராக இருக்கிறேன்.

தமிழில் எழுதுவது சிரமமான விஷயமில்லை, மிக எளிது மிகமிக எளிது பல மென்பொருள்கள் உள்ளன,

அன்புடன்

செல்வம்

Oct 3, 2008

வில்லியமின் தேசம்

ஒரு பெரிய நிலப்பரப்பு, மலைகளும் சின்ன சின்ன ஓடைகளும் நிறைந்த வளமான பூமி, அங்கங்கே காடுகளும் சிறிய களர் நிலங்களும் நிறைந்த ஒரு இயற்க்கையின் படைப்பு சின்ன சின்ன கிராமங்களாக மனிதர்கள் வெவ்வேறு இனங்களாக பிரிந்து பெரிய தலைமையோ சட்டதிட்டங்களோ இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ரூவன் என்ற ஊரைச்சேர்ந்த வில்லியம் என்கிற வீரன் தன் நகரத்தை தனக்கு கட்டுப்பட்டதாக அறிவித்து அதன் மன்னராக தன்னை ஆக்கிகொள்கிறான் அவனின் அந்த முடிவுக்கு பெரிய எதிர்பில்லாமல் போகவே அவன் அது முதல் அந்த நகரத்தின் நிர்வாகத்தை விரிவுபடுத்த முயல்கிறான்,

அதே நேரத்தில் ரூவன் நகரத்தில் இருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கப்பால் சோனோரி என்ற வீரன் தனது ஜெல்லிங் என்ற நகரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னை மன்னனாக அறிவித்துக்கொள்கிறான். மற்ற கிராமங்களும் நகரங்களும் தனித்தனியே இயங்கி கொண்டிருக்கின்றன,

வில்லியம் தனது மக்கள் விவசாயம் மட்டுமே கொண்டு வாழ்வதை விரும்பவில்லை தனது மக்களில் நல்ல அறிவுள்ளவர்களை தேர்ந்தெடுத்து புதிய தொழில்களை தொடங்க ஆலோசனை கேட்கிறான் அவர்கள் சில பேர் பக்கத்து நகரங்களை தாக்கி அதனை அடிமைகொண்டு நமது பொருளாதாரத்தை அதிகரிக்கலாம் என்று சொல்கிறார்கள், ஆனால் போரிடுவதை பெரிதும் விரும்பாத வில்லியம் வேறு வழிகளை கோருகிறான், அதில் ஒருவன் நிகல் ருசல் அவன் சொல்கிறான் நமது நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தாமிர குகைகள் இருக்கின்றன அவைகளை வெட்டி எடுத்தால் பக்கத்து நகரங்களில் விற்பனை செய்யலாம் என்று கூறுகிறான், அது வில்லியமுக்கும் பிடிக்கிறது நிகலை தனது அமைச்சராக ஆக்கிகொள்கிறான்.

பக்கத்தில் உள்ள தாமிர சுரங்கத்தில் இருந்து தாமிரம் எடுக்கப்படுகிறது அது தொழிற்ச்சாலைகள் மூலம் தாமிர பாத்திரங்கள் செய்யப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, நிகல் தனது உதவியாளர்கள் மூலம் அந்த நிலப்பரப்பில் எங்கெல்லாம் இதுபோல் தாதுக்கள் கிடைக்கிறது என்று கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பி வைத்தான், ஆனால் இத்தனைக்கும் இடையில் பொருளாதாரம் கூடிக்கொண்டேவந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு உற்பத்தி குறையத்தொடங்கியது, பெரும்பாலான மக்கள் அதிக சம்பளத்திற்காக சுரங்கத்திலும் தொழிற்சாலைகளும் பணிபுரிய தொடங்கியதில் விவசாயம் பிந்தங்கியதுதான் காரணம், வில்லியம் மீண்டும் அறிவாளிகளின் கூட்டத்தை கூட்டினான், அவர்கள் மக்கள் தொகை பெருக்கம்தான் ஓரேவழி என கூறி சண்டைக்கு தாயாராக வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்கள் ஆனால் நிகல் மீண்டும் அதை மறுத்தான் மேலும் அவன் தனது உதவியாளர்கள் மூலம் அறிந்த ஒரு செய்தியை கூறினான், ரூவன் நகரத்தில் இருந்து 500 மைல் தூரத்தில் பாஸிங்காம் என்ற நகரம் உள்ளது அதன் இனத்தவர்கள் நமது மொழியே பெசுவதாகவும் அவர்களை நமது மன்னர் பரிவாரங்களுடன் சென்று சந்தித்தால் அல்லது அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து பேசினால் அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ சம்மதிப்பார்கள் என்றான்.

வில்லியம் போரில்லாத இந்த வழி பிடித்திருந்ததால் ஓப்புக்கொண்டு புறப்பட்டான் பெரும் பரிசுப்பொருட்களும் பலவகை பரிவாரங்களும் சூழ பாஸிங்காம் புறப்பட்டான்,
இதேநேரத்தில் மன்னன் சோனேரி தனது படைகளுடன் பக்கத்து நகரங்களைதாக்கிட திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான் அதனால் அவன் நாட்டில் மக்கள் சற்று கவலையில் இருந்தார்கள், அவர்கள் ஒரு இரும்பு சுரங்கதை கண்டுபிடித்து உழைத்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் சோனேரி தனது படை பலத்தை பெருக்குவதில் ஆர்வம் கொண்டு தனது மக்களின் வரிகளை அதிகப்படுத்தி இருந்தான்.

வில்லியம் பாஸிங்காம் சேர்ந்து தனது பரிவாரங்களுடன் நகரத்துக்கு வெளியே கூடாரம் அமைத்து காத்திருந்தான், பாஸிங்காம் நகர பெரியவர்கள் மன்னனை சந்தித்து உரையாடினார்கள் அவனின் நொக்கத்தை புரிந்துகொண்டார்கள் அவனின் பரிசுப்பொருட்களும் அவர்களை மகிழ்ச்சி படுத்தின அவர்களுக்கு அந்த முறைகள் பிடித்திருந்தன பல சுற்று பேச்சுக்களுக்கு பிறகு அவர்கள் அவன் அதிகாரத்திற்கு கீழ் வர ஓப்புக்கொண்டார்கள் ஒப்புக்கொள்ளாத சிலர் பணத்தாலும் மிரட்டலாமும் பணியவைக்கப்பட்டார்கள் பெரிய இழப்புகள் இன்றி பாஸிங்காம் நகர மக்கள் ரூவன் நகரத்திற்கு பக்கத்திலேயே புதிய பாட்டில் என்ற நகரம் உருவாக்கப்பட்டு தங்கவைக்கபட்டார்கள்

இப்போது வில்லியம் நிர்வாகத்தில் உணவு உற்பத்தி பொருளாதாரம் எல்லாம் நல்ல நிலைக்கு வந்தது, வியாபாரம் எல்லா கிராம்மங்களுக்கும் விரிந்தது, மற்ற மக்களிடமும் வில்லியம் அரசனின் புகழ் பரவத்தொடங்கியது, பல்வேறு இனத்தவர்கள் வில்லியம் நாட்டுக்கு பிழைக்கவும் பொருளீட்டவும் வரத்தொடங்க்கினார்கள்.

சோனேரி மன்னனும் பல போர்களினால் பல நகரங்களை பிடித்திருந்தான் அவன் நாடும் விரிவடைந்து கொண்டிருந்தது அவன் புகழும் தனது உதவியாளர்கள் மூலம் அமைச்சர் நிகல் காதில் விழுந்தது, அவர் உடனே மன்னனை சந்தித்து பாதுகாப்பு விஷயங்களை பற்றி பேசினார் புதிதாக கோட்டைகள் கட்டப்பட்டன புதிய வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர், ஆனால் போரில் விருப்பமில்லாத வில்லியம் தனது தூதுவர்களை சோனரி நாட்டுக்கு அனுப்பி வர்த்தக உறவு கொள்ள விரும்பினான், வில்லியம் நாட்டின் வளங்கள் பற்றி கேள்விப்பட்ட சோனரியும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு நாடுகளும் வளர்ந்து கொண்டே வந்தன, இந்நிலையில் மக்களின் பொருளாதாரத்தேவை அதிகரிக்க தொடங்கியது வேலைவாய்ப்பும் கூடுதலாக தேவைப்பட்டபோது நிகல் தனது உதவியாளர்கள் மூலம் கண்டுபிடித்த தாது சுரங்கள் எல்லாம் நோண்டப்பட்டன பெரும் பொருள்கள் பல்வேறு வண்டிகள் குதிரைகள் ஒட்டகங்கள் மூலம் ரூவன் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டன களிமண் இருப்பு தாமிரம் போன்றவற்றில் செய்த பொருட்களுக்கு நல்ல தேவை இருந்தது அது சம்பந்தமான தொழிற்கள் தொழிற்சாலைகள் அது சார்ந்த நகரங்கள் ரூவன் நகரத்தை சுற்றி உண்டாகிக்கொண்டே வந்தன.

மற்ற நகரங்களை சேர்ந்த மக்களுடன் வில்லியமின் ஆட்கள் சென்று பேச்சு வார்த்தை மற்றும் சின்ன நிர்பந்தங்களும் பிறகு பெரிய பரிசுகளும் கொடுத்து தங்கள் வசம் கொண்டுவந்தார்கள், அவர்களுக்கு புதிய தொழிற்மையங்கள் தொடங்கப்பட்டன, மக்களிடம் நல்ல பெயருடன் வில்லியம் தொடர்ந்து ஆண்டு கொண்டு வந்தான்.

ஆனால் அமைச்சர் நிகலுக்கு சோனரி நாட்டின் மீது அவ்வளவு நம்பிக்கையில்லை அவனின் நாடு பிடிக்கும் வெறி அவருக்கு புரிந்தது அதனால் தனது நாட்டை பாதுகாப்பானதாக விரும்பினார், ஆனால் வில்லியம் தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் கவலை கொண்டிருந்தான், கொஞ்சம் கொஞ்சம் புதிய கோட்டைகள் கட்டப்பட்டாலும் பெரும்பாலும் போதிய வீரர்கள் இல்லாமலேயே அவைகள் இருந்தன, தொழிற் ரீதியாக சோனரி நாட்டுடன் சிறிய பினக்குகள் தோன்றிக்கொண்டிருந்தன, அஹர் என்ற நகரம் சோனரி நாட்டின் முற்றுகையில் இருந்த போது அது வில்லியம் நாட்டிடம் தன்னை அடிமைப்படுத்திக்கொண்டதில் சோனரிக்கு கோபம் அதிகம் இருந்தது.

சோனரியின் தொடர் போர்களால் நாடு பெரிதானாலும் மக்கள் பெரும் எதிர்ப்பு மனநிலையில் இருந்தார்கள் ஆகையால் அவன் வில்லியம் நாட்டின் மீது இப்போதைக்கு போர் தொடுக்க முடியாமல் இருந்தான், தனது ஒற்றர்கள் மூலம் இதெல்லாம் அறிந்த நிகல் வில்லியம் மன்னனை எச்சரித்தான். அதனால் புதிய கோட்டைகள் கட்டப்பட்டன புதிய வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டன, வரியில்லாமல் இருந்த வில்லியம் நாட்டில் புதிய வரிகள் இடப்பட்டன பொருளாதாரம் பாதுகாப்புக்காக திருப்பிவிடப்பட்டது என்றாலும் மக்கள் பெரிதும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது போல் வரிகள் கடுமையாக்கப்படாமல் கவனிக்கப்பட்டது.

வில்லியம் நாட்டில் புதிய புதிய மொழிபேசும் மக்களும் அவர்களை நிர்வகிக்க அவர்களின் இனங்களை சேர்ந்த தளபதிகள் நியமிக்கப்பட்டனர் நல்ல சேவை செய்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன, எல்லா நகரங்களும் அந்தந்த தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தன அவர்கள் அங்கங்கே கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கங்கள் மூலம் கொண்ட வருமானங்கள் மூலம் நகரத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன மக்கள் மன்னனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டு வாழ்ந்தார்கள் கிட்டதட்ட போரே இல்லாத காலங்கள் அவைகள்.

இந்த நேரத்தில்தான் சோனரி நாடுதனது எல்லா வர்த்தக உறவுகளையும் முறித்துக்கொள்வதாக வில்லியமுக்கு செய்தி அனுப்பியது, வில்லியம் மிக கவலையில் ஆழ்ந்தான், நிகல் உடனடியாக தளபதிகளை அழைக்க கோரினான்,

தளபதிகள் அழைக்கப்பட்டார்கள் எல்லா கோட்டைகளில் இருந்தும் வீரர்கள் சோனரி நாடு செல்லும் வழியில் குவிக்கப்படவேண்டும், புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கோட்டைகளை நிரப்பவேண்டும் என்று உத்திரவு இடப்பட்டது, அதற்குள் சோனரி நாட்டில் இருந்து சண்டை அறிவிக்கப்பட்ட செய்தி வந்தது, இது வரை சண்டை ஏதும் பழக்கப்படாதால் மக்கள் மிகுந்த மனக்குழப்பத்தைல் இருந்தார்கள். மக்களிடம் நம்பிக்கை தளராமல் இருக்க வரிகள் குறைக்க முடிவுசெய்யப்பட்டது.

வில்லியமிடம் ஒன்பது கோட்டைகள் இருந்தன அத்தனையிலும் பயிற்றுவிக்கப்பட்ட வீரர்கள் இருந்தார்கள், ஆனால் சோனரி பதினைந்து கோட்டைகளைக்கொண்டிருந்தான் அவர்களும் நல்லப்பயிற்சி பெற்று இருந்தார்கள், வில்லியமிடம் நீண்டகாலாமாக போர் செய்யாமல் இருந்ததால் நல்ல உணவு கையிருப்பும் பொருளாதாரமும் மக்கள் நல்ல நிலையிலும் இருந்தார்கள் ஆனால் சோனரியிடம் உணவு கையிருப்பு மற்றும் பொருளாதாரம் மக்கள் மனநிலைமை எல்லாமே மோசமாகைருந்தது,

போரின் முழு முடிவுகளுக்கும் தலைமை தளபதி கிப்போர்டு வசம் கொடுக்கப்பட்டன என்றாலும் அவர் நிகலை கேட்டே திட்டங்களை வகுத்துகொண்டிருந்தார். கிட்டதட்ட எல்லா கோட்டையில் இருந்தும் வீரர்கள் சோனரி நாட்டுக்கான பாதையில் குவிக்கப்பட்டார்கள் வீரர்கள் குறையும் போது புதிய வீரர்கள் கோட்டைகளில் இருந்து அனுப்பபடவேண்டும் என உத்தரவு இடப்பபட்டது,

சோனரி நாட்டுப்படைகள் புறப்பட்டு விட்ட செய்தி வந்தது, நிகல் எதிர்பார்த்தது போலவே இரண்டு இரண்டு கோட்டைகளில் இருந்தே வீரர்கள் கொண்டுவரப்பட்டனர்.
அவர்கள் நீண்டதூரம் வந்து களைத்துப்போன நிலையின் வில்லியம் வீரர்களை எதிர் கொண்டனர் கடும் யுத்தம் நடந்தது இறக்க இறக்க புதிய புதிய வீரர்கள் வந்து கொண்டே இருந்தனர் இரண்டுபக்கமும் வீரர்கள் இறந்து கொண்டே இருந்தனர், புதிய வீரர்கள் வேறு வழி புகுந்து நகரங்களுக்குள் தாக்க தொடங்கினார்கள் நல்லவேளையாக கோட்டைகளில் புதிதாக பயிற்சியில் இருந்த வீரர்கள் அவர்களுடன் போரிட்டு மடிந்தார்கள்.

கிட்டதட்ட ஏழு நாட்கள் போர் கடந்த நிலையில் இரண்டுபக்கமும் கடும் இழப்புகள் இருந்தன பல தளபதிகள் இரண்டுபக்கமும் மடிந்திருந்தார்கள், போர் சற்று வில்லியம் பக்கம் சாதகமாக இருந்தாலும் சோனரி வீரர்கள் தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தார்கள் ஒரு கட்டத்தில் எல்லா பயிற்றுவிக்கப்பட்ட வீரர்களும் மடிந்து புதிய வீரர்கள் நேரடியாக நகரங்களில் இருந்து வரவேண்டிய நிலை, மக்களிடம் நம்பிக்கை வேறு குறைய தொடங்கிவிட்டது, வில்லியம் இரண்டு முறை போர் நிறுத்தம் கோரி தூது அனுப்பினார் ஆனால் அது சோனரியால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நிகலின் ஒற்றர் படையினர் சோனரின் நகர மக்களிடையே ஊடுருவி இருந்தனர் பெரும் எண்ணிக்கையில், அவர்கள் மக்களிடையே சோனரி நாட்டின் பொருளாதார நிலைகளையும் போரின் அழிவுகளையும் எடுத்துக்கூறி மக்களை போராட்டத்துக்கு தூண்ட சோனரி நாட்டின் பல இடங்களில் மக்கள் திரண்டு அரசு அலுவலகங்கள் கோட்டைகள் போன்றவற்றை தாக்க தொடங்கினார்கள். சோனரி மன்னன் திகைத்துப்போனான் அவனுடைய வீரர்கள் உடனடியாக கலவரங்களை அடக்க திருப்பி விடப்பட்டனர். நிகல் தனது படைவீரர்களை முன்னேறி சொனரி நாட்டு கோட்டைகளை தாக்க உத்தரவிட்டார், ஆனால் அதற்குள் சோனரி மன்னன் போர் நிருத்தம்கோரி தூதுவனை வில்லியமிடம் அனுப்பினான், போரில் விருப்பமில்லாத வில்லியம் உடனடியாக ஒப்புக்கொள்ள நிகலின் கட்டளைப்படி சோனரி கோட்டைகளை தாக்கப்போன படைகள் நாடு திரும்ப வேண்டியதாகிவிட்டது

ஒரு வழியாக போர் நின்றதும் நாட்டின் பராமரிப்பு பணிகளில் வில்லியம் ஆர்வம் காட்டினார் நல்லவேளையாக பொருளாதாரம் பாதுகாப்பாக இருந்தது உணவும் குறையவில்லை, கோட்டைகள் புதிபிக்கபட்டன, இறந்த வீரர்களுக்கு பதக்கங்களும் கெளரவமும் வழங்கப்பட்டன.
சோனரியின் நாட்டில் தொடர்ந்து கலவரங்கள் ஏற்படுவதும் அதை அடக்குவதுமாய் பெரிதும் இழப்புகள் இருந்தன, மக்கள் தொகையும் குறைந்து உணவு பற்றாக்குறையும் வந்தது, உணவு உதவிகேட்டு வில்லியம் நாட்டுக்கு தூதுவர்களை அனுப்பவேண்டிய நிலைக்கு வந்தது, வில்லியம் உணவும் பொருளாதார உதவியும் அளித்ததோடு வர்த்தக உறவுக்கும் விருப்பம் தெரிவித்து தொடர்ந்தார் என்றாலும் சொனரியின் நாடு பழய நிலையை அடைய கொஞ்சகாலம் பிடிக்கும் என்பது அமைச்சர் நிகலுக்கு புரிந்தது.


அவருக்கு போரினால் ஏற்ப்பட்ட சங்கடங்கள் புரிந்திருந்தன, வில்லியமுக்கு போரில் விருப்பமில்லை கூடவே உயிரிழப்புகளிலும் விருப்பமில்லை எனவே பாதுக்காப்பு விஷயத்தில் புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்று விரும்பினார், புதிய சிந்தனைகளை வரவேற்க அறிஞர்கள் கொண்ட சோதனைசாலை ஒன்றை உருவாக்க முடிவுசெய்து செயலாக்கினார் அவர்கள் புதிய பாதுக்காப்பு யுத்திகளை ஆராய தொடங்கினார்கள், கூடவே நாட்டின் புதிய முன்னேற்றங்களையும் சிந்திக்க தொடங்கினார்கள்.

சோனரி நாட்டின் நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது, அவர்களின் புதிய செயல்கள் வில்லியம் நாட்டிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வர்த்தக சந்தைகள் மாற்றப்பட்டன,

நகரங்கள் வெளியாட்கள் புகாத வண்ணம் அமைக்கப்பட்டன எல்லா நிலைகளிலும் பாதுக்காப்பு கோட்டைகள் கட்டப்பட்டன. சோதனை நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாக்குதல் ஆயுதங்கள் கட்டாபில்ட்,பீரங்கிகள் உருவாக்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன அவைகள் எண்ணற்ற தளவாடங்களை செய்து குவித்தன, சோனரியின் ஒற்றர்கள் புதிய ஆயுதங்களை பற்றிய ரகசியங்களை திருடி தனது நாட்டிலும் தொழிற்சாலைகளை நிறுவி தளவாட தயாரிப்புகளை தொடங்கினார்கள், ஆனாலும் பொருளாதார பற்றாகுறை காரணமாக பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை,

இப்போது சோனரி நாடு தனது ராணுவ நிலைகளை அதிகரிக்கும் போதெல்லாம் வில்லியம் நாட்டு பீரங்கி படைகள் தற்காலிக போர் அறிவித்தலுடன் சென்று அவைகளை தகர்த்துவிட்டு வந்து விடுகின்றன, மற்றபடி பெரிய போர் இழப்புகள் இல்லாமல் சிறிய போர்களுடன் இரண்டு நாடும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.அப்பப்போது சோனரி என்ற குட்டி நாட்டுக்கு வில்லியம் நாடு நிதி உதவி செய்து வருகிறது, அந்த நிதிகள் போர் தளவாடங்களுக்கு திருப்பி விடப்பட்டால் அதுவும் உடனடியாக அழிக்கப்படுகிறது.


செல்வன்

Oct 2, 2008

மகாத்மா
இன்று மகாத்மா பிறந்த நாள், இந்தியாவில் நிறைய பேருக்கு பிடிக்கும் நிறைய பேருக்கு பிடிக்காது, ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம், ஏனெனில் மகாத்மா ஒரு திறந்த புத்தகம் அதனில் ஒருவர் எதிர்மறையானதும் நேர்மறையானதுமான எந்த ஆய்வையும் மேற்க்கொள்ளலாம், அதுதான் மகாத்மா இந்த உலகத்திற்கு செய்த சேவை. சத்யாகிரகம் ,அஹிம்சை என்கிற கூறுகள் கூட தன் சுய அடையாளத்தை கண்டு எடுக்க அவர் கையாண்ட யுத்திகள் என்றுதான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு செயலிலும் அதன் கூறுகளை தனியே பிரித்து அதன் நன்மை தீமைகளை சத்தியத்தியத்தின் வழியே உணர்ந்த பின் நடைமுறைபடுத்த மனித ஜீவனால் இயலும் என்பது நிருபிக்க முடிந்த வாழ்க்கை அவருடையது, அவரின் வாழ்க்கை அக்குவேறு ஆணிவேறாக அவரின் எதிர்ப்பாளர்களாலும் ஆதரவாளர்களாலும் பிரித்து தொங்க விடப்பட்டும் கூட அவரின் ஆளுமை இன்னமும் தனது நாட்டு மக்களின் நெஞ்கங்களில் செயலாகிக்கொண்டிருக்கிறது ஒரு கடுகளவாவது என்பதுதான் உண்மை.

தன் வருங்கால சந்ததியிடம் மகாத்மா என்ற கேள்விக்கு மத இன ஜாதி வேறுபாடு இன்றி எல்லோரும் ஒரு உயர்வான பொருளை மட்டுமே சொல்லமுடியும், இது இறை தூதர்களுக்கோ அல்லது மத அடையாளம் கொண்ட எந்த தனிமனிதனுக்கோ கிடைக்காத பெருமை. அவர் யாரையும் வெறுக்கமுடியாமல் வாழ்ந்தார்,

யாரையும் வெறுக்காமல் வாழ்வதென்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவரவர் கற்பனைக்கே விடுகிறேன், எந்த மதத்தையும் கூட அவர் வெறுத்ததில்லை இது மதவாதிகளுக்கும் இறைதூதர்களுக்கும் ஏற்க முடியாத விஷயம், ஒரு மதத்தை அவர் உண்டாக்கியிருந்தால் இந்த அவரின் அடையாளாங்கள் இன்று ஒரு சின்ன வட்டத்துக்குள் கொண்டுபோய் மூடியிருப்பார்கள். மதம் என்ற அடையாளத்துக்குள் அவர் போகவே விரும்பவில்லை ஆனாலும் அவர் ராம பக்தராய்தான் இருந்தார்,

இன்றைய ராம பக்தர்களுக்கும் அவருக்குமான வேறுபாடு புரியக்கூடியதுதான். அவரைப்பற்றிய விமர்சனங்கள் ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது அவரின் கொள்கைகள் இன்னும் ஆளுமை கொண்டிருப்பதையே காட்டுகிறது, அவரின் சத்தியாகிரக முறையைப்பற்றி ஒரு கணிப்பு உண்டு அது கணவன் மனைவி இடையே கொண்ட ஊடல் போன்றது அது சட்டத்தை மதித்த ஆங்கிலேயர்களிடம்தான் சாத்தியமாகும் இன்றைய இந்திய அமைப்பில் அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளில் அவரின் போராட்டங்கள் ஒரு மோசமான பலனையேதரும் என்பது போன்ற ஒரு கருத்து உண்டு.

ஆனால் எனது எண்ணத்தில் அது பற்றிய வேறு ஒரு கோணம் தோண்றுகிறது, தென்னாப்பிரிக்காவுக்குள் நுழைந்தபோது மகாத்மா சத்தியாகிரகத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் செல்லவில்லை, அங்கே எந்த போராட்டத்தையும் அவர் எதிர்பார்த்தும் சென்றிருக்க முடியாது, ஆனால் அந்த சூழல் அவரை சத்தியாகிரகத்தை சிந்திக்கவைத்தது அதை பரிசோதிக்கவைத்தது அதன் வெற்றி இங்கே செயலாக்கமுடியும் என்பதை அவருக்கு உணர்த்தியது, அது கணவன் மனைவி ஊடல் முறையாயிருந்தாலும் அதுதானே வெற்றிபெற்று தரக்கூடியதாக இருக்கிறது என்பதுதான் முக்கியம், இன்றைக்கு காந்தியடிகள் இருந்து இன்றைய அரசியல்வாதிகளிடம் போராட வேண்டியிருந்தால் அவர் அதற்கேற்ற ஒரு முறையை கண்டுபிடித்திருக்ககூடும்.

ஆனாலும் இந்திய பிரிவினையின்போது மகாத்மா தோற்றுதான் போனார் தனது எந்த முயற்சியும் வெற்றிபெறாது போன நிலையில் தனது நாட்டுமக்களின் ரத்தம் ஆறாக ஓடப்போவதை உணர்ந்து அதன் அளவை குறைக்கும் முகமாக கல்கத்தாவுக்கும் டெல்லிக்குமாக பிரயாணம் செய்து தடுக்க போராடிக்கொண்டிருந்தார்.பாகிஸ்தானுக்கும் கூட அவர் செல்ல நினைத்திருந்தார், ஆனாலும் அவர் பயந்த படியேதான் அனைத்தும் நடந்தது, ஆனால் அவரின் வழிகளை ஏற்றுக்கொள்ளாத ஜின்னாவும் அதனால் வேறு வழியில்லாமல் அந்த திட்டத்திற்கு உடன்பட்ட இந்திய பிரிட்டிஷ் தலைவர்களும் நடந்த விபரிதங்களுக்கு மெளன சாட்சியாக நின்றார்கள்,

அந்த கொடுரமான சம்பவங்களை பற்றி எத்தனையோ புத்தகங்களும் விவாதங்களும் வந்து விட்டன, அதையெல்லாம் மீண்டும் படிக்கவோ கேட்கவோ யாருக்கும் தைரியமிருக்காது அத்தனை இழப்புகள் வேதனைகள் கொடுரங்கள் நிறைந்த ஒரு அத்தியாயம் அது. அதனை தனது தீர்க்கதரிசனத்தால் கண்டுணர்ந்ததால்தான் அவர் பிரிவினையை எதிர்த்தார்.

ஆனாலும் பிரிவினை நடந்துவிட்டது, அதனை அவருடைய சத்தியாகிரகம் கூட தடுக்கமுடியவில்லை, அதன் பாதிப்புகள் இன்று நமது நாட்டிலும் பாகிஸ்த்தானிலும் பங்களாதேஷிலும் இல்லாமல் இல்லை.

ஒருவேளை மகாத்மா இன்னும் சில காலம் உயிரோடிருந்தால் இந்த குழப்பங்கள் குறைந்திருக்குமோ அல்லது அது கூடியிருக்குமோ தெரியவில்லை,ஆனாலும் அவரின் ஆன்ம பலம் ஒரு புதிய அத்தியாயத்தை உண்டாக்கி கொடுத்திருக்கும், அவரின் தொடர் முயற்சியால் பாகிஸ்த்தான் மக்கள் நம்மோடு நல்ல நண்பர்களாகியிருக்ககூடும் அது மகாத்மாவால் முடிகிற காரியம்தான் என்று எனக்கு தோன்றுகிறது, ஏனெனில் அவர்தான் எல்லோரையும் நேசித்துக்கொண்டிருந்தாரே அது ஒன்று போதுமே.

இந்த நாளில் ஏதோ மகாத்மாவைப்பற்றி தோன்றியதை எழுதிவிட்டேன்

செல்வம்