Nov 9, 2008

உளறல்-10 ஆன்மீகம்

நீண்ட நாளாக ஆன்மீகம் பற்றி எழுதி வைக்கலாம் என்ற எண்ணம் உண்டானது அதனை இப்போது எழுத முனைகிறேன். பல காரணகாரியங்களுக்கு நாம் இறைவனையும் அவன் திருவிளையாடல்களையும் காரணமாக கூறி அந்த குழப்பத்தில் இருந்து விடுபட முனைவது இயல்பு, இதில் இறைவன் என்கிற பதம் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு அதன் மீதான நம்பிக்கை சாதாரணமாக குழந்தை பருவத்தில் இருந்து உண்டாக்கப்பட்டு அது ஒருவகையில் மிகவும் ஆழ்ந்த மன அழுத்தம் போல சிலருக்கு ஏற்ப்பட்டு விடுகிறது,

சில மாணவர்கள் பரிட்சைக்கு செல்லும் முன் கடவுள் வழிபாடும் அதன் மூலம் சில சகுனங்களை தாங்களாகவே உண்டாக்கி கொண்டு அதனோடு ஒரு அடிமைபோல ஆகிவிடுவதை கண்டிருக்கிறேன், எனக்கும் கூட சிறு வயதில் 10 ம் வகுப்பு காலங்களில் அப்படி சில அடையாளங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன், இப்படி ஒவ்வொருவரும் ஒரு கட்டமைப்பை இறைவன் என்கிற சக்தியின் மீது கொண்டுள்ள காதலால் அல்லது பயத்தால் உருவாக்கி கொள்கிறார்கள்,

காதல் என்று சொல்வதை விட பயம் என்கிற பதம்தான் இதில் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். இது எல்லா வயதிலும் தொடரக்கூடிய ஆபத்து இல்லாமலில்லை, கடவுள் என்பதன் உண்மையான சொரூபம் யாருக்கும் சரியாக தெளிவு படுத்த படவில்லை என்பதுதான் காரணம் என்பது என் எண்ணம், அதற்காக கடவுள் என்கிற பதம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டதா? எனக்கேட்காதீர்கள், அதனைப்பற்றிய தெளிவு இந்த கட்டுரை முடிவில் உங்களுக்கு கிடைக்கலாம்,

இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்கள் மறுபிறவி பற்றி ஏதும் கூறவில்லை, அவர்களின் புனிதநூல் கூறுவதன்படி எல்லா ஜீவன்களும் கடைசி தீர்ப்பு நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவனால் இறுதி விசாரனைக்கு அழைக்கப்பட்டு அவரவர் குற்றங்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்கிற தகவல் கூறப்பட்டுள்ளது, அதன் பின் இந்த உலகில் புதிய ஜீவன்கள் மீண்டும் கடவுளால் படைக்கப்பட்டு அடுத்த உலக அமைப்பு உருவாகும் என்பது அவர்கள் நம்பிக்கை.

அடுத்து அறிவியலில் டார்வினின் கொள்கைப்படி பரிணாம தத்துவம் நம்பப்படுகிறது அதாவது ஓருயிரி முதல் மனிதன் வரையான பரிமாண மாற்றமாக அது விளக்குகிறது, என்றாலும் கிருஸ்துவம் கூறும் பதில் டார்வின் தனது பரிமாணத்தத்துவத்தை தனது இறுதி காலத்தில் மறுத்துவிட்டார் என்பதாக. அது முதுமைக் காலத்தில் அவருக்கு ஏற்ப்பட்ட குழப்பமாயிருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் ஏற்ப்படுகிற மாற்றங்களை காணும்போது டார்வின் தத்துவம் பொருந்தி வருவதை நாம் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை காஞ்சி பெரிய சங்கராச்சாரியிடம் ஒரு கேள்வி கேட்டப்பட்டது, கேட்டவர் ஒரு வெளிநாட்டு பெண்மணி என்று தகவல், மறுபிறவி உண்டு என்பதை நீங்கள் எப்படி நிருபிக்கமுடியும் என்பதாக, ஏனனில் இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அடிப்படை மறுபிறவி என்பது அதன் பின் தான் கடவுளின் எண்ணிக்கைகள் வருகின்றன.
அந்த கேள்விக்கு பெரியவரின் பதில் மிக முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது, அவர் அந்த பெண்ணிடம் ஒரே நேரத்தில் பிறந்த பல குழந்தைகளின் பிறவி மற்ற மதங்களின் படி அதுதான் முதல் என்றால் இறைவனின் கருணை எல்லோருக்கும் சமம் என்றால் ஏன் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு பொருளாதார சூழலிலும் உடல் குறைபாடுகளோடும் பிறக்கின்றன, ஏதோ ஒரு காரணத்தால் அதன் இந்த பிறப்பு சிலருக்கு ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் சிலருக்கு தண்டனை தரப்பட்டதாகவும் அமைகின்றன அதன் காரணம் என்கிற விஷ்யம்தான் இந்து மதத்தில் முந்தைய பிறவியின் பலாபலன்கள் என்கிற ஒரு தத்துவமாக அமைந்துள்ளது என்று விளக்குகிறார்.

இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் ஏனனில் கடவுள் எல்லா மதத்திலும் கருணை வடிவமாகவே நம்பப்படுகிறார், மேலும் மற்ற மத கூற்றுப்படிதனது முதல் இரண்டு ஜீவன்களையும் சமமாகவே படைக்கிறார். பாலினத்தில் மட்டும் வேறுபாடு கொண்டு.

இந்த இடத்தில் மறுபிறவி என்பது மிகசரியான பதிலாக பொருந்தக்கூடும், ஏனனில் இந்து மதம் தனது இப்பிறவி நடவடிக்கைகளின் மூலம் அவரவரின் பிறவியின் பயனை அடைய முடியும் என்கிறது, எல்லா மனித பிறவியிலும் இறைவனிடம் சென்று சேர்வதற்காண வாய்புகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன அதைப்பயன்படுத்தி இறைவனிடம் சேர்வதும் அல்லது அதனை தவறாக பயன் படுத்தி மீண்டும் மீண்டும் பிறந்து தனது தவறை எப்போது திருத்திக்கொண்டு இறைவனை அடையமுடிகிறதோ அப்போது அடைவதும் நடைபெறுகிறது என்பது இந்து மத தத்துவமாக இருக்கிறது.

உறங்குவது போல் சாக்காடு
உறங்கி விழித்தல் பொல் பிறப்பு

என்று ஒரு பாடல் உண்டு, மனிதனின் மரணம் ஒரு உறக்கம், மீண்டும் பிறப்பது ஒரு விழிப்பு அவ்வளவே, மனிதன் என்னவாக உறங்குகிறானோ அவ்வாறே மீண்டும் பிறக்கவும் செய்கிறான் என்பது இதன் வழி நாம் அறியலாம், இன்று இரவு நல்லவனாக
தூங்குபவன் நாளையும் நல்லவனாகவே எழுகிறான், அதனால் தான் இப்பிறவியில் இறைவனை அடைய முடியாமல் போனாலும் குறைந்த பட்சம் நல்ல மனிதனாக வாழ்ந்து வந்தால் அதன் தொடர்ச்சியாக அடுத்த பிறவி நல்லதாக அமையும் என்பது போதிக்கப்படுகிறது.

அதனால்தான் ரமணர் போன்றோர் தனது 12ம் வயதில் இந்த உலகவாழ்க்கையை விட்டு துறவு வாழ்வுக்கு செல்லமுடிந்தது, போன பிறவியின் தொடர்ச்சி அவரை தனது சிறு பிராயத்திலேயே மீண்டும் ஞான வாழ்க்கைக்கு கொண்டு போனது,

இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் எல்லாம் ஞானிகளாக முடியுமா என்று கேட்காதீர்கள், நல்லவர்கள் எல்லாம் ஞானிகள் இல்லை, ஆனால் ஞானிகள் எல்லாம நல்ல மனிதர்களாக இருந்துதான் அந்த நிலையை அடைகிறார்கள்.

நல்ல நிலைக்கு மனிதன் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் போது அவனைநோக்கி ஞான அறிவும் வருகிறது, யாரோ ஒரு குருவின் இருப்பிடம் அவனுக்கு கூறப்பட்டு அல்லது அழைக்கப்பட்டு அங்கே அது போதிக்கப்படுகிறது,

அதன் பின் அவன் தனது பயிற்சிகளுக்கேற்ப இறைநிலையை அடைகிறான், அதாவது மீண்டும் பிறக்காத நிலையை. இதுதான் இந்து மதத்தின் நம்பிக்கை, நல்ல மனிதானாக மாற்றும் பணியைதான் மதங்கள் தனது கோவில்களாலும், பிரச்சாரகர்களாலும் செய்து வரணும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.

செல்வம்

2 comments:

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்