Feb 9, 2012

எழுத்தாளர்களின் அடிதடிகள்.

தமிழ் இலக்கிய உலகில் ஒரு அடிதடி நடந்து கொண்டிருக்கிறது, அதனைப்பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசனை. சரி கருத்து தெரிவிக்கிற உரிமை என்னத்திற்கு விட்டு கொடுப்பானேன் என்று இங்கே எனது கருத்தை பதிவு செய்து விடலாம் என்று இருக்கிறேன்.
பெரும்பாலும் இந்த அடிதடி சாருவுக்கும் ஜெயமோகனுக்கும் நடக்கும் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் முடிந்தவர்கள் எண்ணை ஊற்றுவார்கள். இப்படி சர்ச்சைகளின் உருவமாக இருந்த சாரு ஜெயமோகனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மனுஷ்யபுத்திரனையும் ரஜினியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். இந்த கூட்டமைப்பின் விதமே புரியவில்லை, பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் இந்த எழுதாளர்களின் சண்டைகள் கொஞ்சம் நஞ்சம்மல்ல.
ஆனால் வாசகர்களுக்கு இது ஒருவகை அல்வாதான், இவர் இப்படியும் பேசுவாரா என்றும் ஒவ்வொருவரைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. கூடவே சுவாரஸ்யமான கூத்துக்களும் கிடைக்கும்.
இத்தனை வருஷம் தமிழ்நாட்டில் இருந்தும் ரஜினி இன்னும் நல்லா தமிழ் பேசவில்லையே என்று சந்திரமெளலீஸ்வரன் கேட்டபோது எனக்கும் கூட கொஞ்சம் உறுத்ததான் செய்தது. ரஜினி எங்கே பேசினார் என்கின்றீர்களா, எஸ். ராமகிருஷ்ணனுக்கு கனடாவின் ஒரு அமைப்பு இயல் விருது கொடுத்திருக்கிறது. அதற்கு உயிர்மைப்பதிப்பகம் ஒரு விழா எடுத்தது, அதில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு பேச அதுதான் இன்று முக்கிய விஷயம் ஆகி விட்டது. டிசம்பர் 6ம் தேதி சாரு எக்சைல் என்ற தனது நாவல் வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்த, அதற்கு போட்டியாக மனுஷ்ய புத்திரனும் எஸ்ராவும் சேர்ந்துகொண்டு கூட்டம் கூட்ட ரஜினியை கூட்டி வந்து விட்டார்கள்.
இதனை உடனடியாக சாரு எக்சைல் விமர்சனக்கூட்டம் போட்டு எழுத்தாளர்கள் நடிகர் பின்போவது வெட்கக்கேடு என்று பேச, நீ மட்டும் குஷ்புவையும், ஓவியாவையும் கூப்பிடவில்லையா, மிஷ்கினிடன் கொஞ்சநாள் கோண்டாட வில்லையா என்று கேள்விகள்.
மனுஷ்யபுத்திரனுடன் சாரு பிரிந்ததில் எக்சைல் நாவல் கிழக்கு பதிப்பகத்துக்கு கிடைத்து. இன்னும் பல சாருவின் நாவல்கள் மனுஷ்யபுத்திரந்தான் வெளியிடுகிறார்.
இதனிடையில் காவல்கோட்டம் எழுதிய சு,வெங்கடேசனையும் அந்த நாவலையும் எஸ்ரா போட்டு கிழிகிழி என்று கிழித்து அதைப்படித்து அது குப்பை என்ற் நான் வாங்க கூட இல்லை. இப்பொது அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்து விட்டதில் எஸ்ராவின் பேரும் கிழிகிறது. ஒரு பக்கம் ஜெயமோகன் காவல்கோட்டம் அற்புதமான நாவல் என்று கூற, எஸ்ரா சொந்த பிரச்சினையால்தான் அப்படி எழுதினார் என்று பதிவுகள் வர, நம்ம எஸ்ரா இதெல்லாம் செய்வாரா என்று கேள்வி வருகிறது.
அடபோங்கப்பா என்று அலுப்பு வந்து தொலைக்கிறது. இடையில் சாரு தனது பேஸ்புக்கில் எஸ்ரா நல்ல டிரான்ஸ்லேட்டர் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சாருவுக்கும் எஸ்ராவுக்கும் பிரச்சினை என்னவென்று தெரியவில்லை, அவர் மனுஷ்யபுத்திரன் கூட இருப்பதால் இருக்கலாம். இடையில் சாரு ஒரு பெண்ணிடம் உரையாடியதை தமிழச்சி போட்டு வறுத்தெடுத்தார் அது என்ன ஆயிற்று அதற்கு சாரு ஏதும் பதில் சொன்னாரா என்றும் தெரியவில்லை.
சாரு ஒருபக்கம் ரஜினி ரசிகர்களை சமாதானப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரன் தன்னால் முடிந்த அளவுக்கு சாருவையும் தனது பேஸ்புக்கில் போட்டு தாக்குகிறார், சாரு இப்போது ஞானியை சேர்ந்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஞானி சாருவை இண்டெர்நெட்டில் பிச்சை எடுக்கும் எழுத்தாளர் என்று திட்டியதாக ஞாபகம். இப்படி இந்த சண்டை போய்கொண்டிருக்கிறது. எனது போன பதிவு போல இது எழுதாளர்களைப்பற்றிய புரளி என்பதால் கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருக்கிறது.
எனக்கென்னமோ இவர்கள் எல்லாம் பேசிவைத்துக்கொண்டு சொல்வதுபோல்தான் எனக்கு தோன்றுகிறது, ஆகையால் விரைவில் இவர்கள் எல்லாம் சேர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.
சரி ஒரு புரளி பேசிய திருப்தியுடன் முடிக்கிறேன்.
தவநெறிச்செல்வன்

Jan 21, 2012

புரளிதான் அடிநாதம்.

”எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும் ? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டுமென்றால் பிறர் மனைவியைக் காதலிக்கற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும், எனக்கும் எழுதும் பொழுதோ, மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும், நிர்ப்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும், பிடுங்கல்களும், அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்கு பணியாதவர்களைக் கண்டும் நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.”

தி. ஜானகிராமன்! சிலிர்ப்பு என்ற சிறுகதைத் தொகுப்பில். இந்த மேற்க்கோளை குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் கீழே நான் எழுதப்போவதவற்கும் எந்த சம்பந்தமில்லை. இந்த விவரம் சாரு தளத்தில் இருந்து கிடைத்தது.

ஒருவன் மாங்கு மாங்கு என்று உட்கார்ந்து எழுதுவதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் மேலே உள்ள முதல் பாரா ஒரு சரியான பதிலாக இருக்க கூடும்,

தி.ஜானகிராமனின் மோகமுள் கொஞ்சம் படித்ததோடு சரி, வேறு எதையும் படிக்கவில்லை, சில எழுத்தாளர்களின் எழுத்துக்களை இழுத்து பிடித்து படிக்க முயன்றாலும் முடிவதில்லை. சில எழுத்தாளர்களின் எழுத்து நம்மை இழுத்துக்கொண்டே இருக்கும். இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எழுத்தாளர்கள் மாறி இருப்பார்கள், அல்லது மாறிக்கொண்டே இருப்பார்கள். சாரு அந்தவிதத்தில் மாறாமல்தான் இருக்கிறார். அவருடைய எழுத்தை பிடிக்காதவர்கள் கூட தொடர்ந்து படிக்க நேரும் என்றுதான் தோன்றுகிறது படிக்க தொடங்கிவிட்டால், அதற்கு பயந்து கொண்டு வாங்காமல் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

போகட்டும். இந்த கட்டுரை எழுதவேண்டிய நோக்கம் புத்தக விழா நடந்து முடிந்து விட்ட நிலையில் ஊரில் இருந்தும் போகமுடியாமல் போய்விட்ட வருத்தம் ஒரு பக்கம். நீண்ட நாட்களாக எதுவும் பதிவிடாதது ஒருபக்கம், முதல் பாராவை படித்து விட்டது ஒருபக்கம் என்று பல காரணங்கள். விளைவு உங்களுக்கு இந்த கட்டுரைத் தொல்லை.
மனிதன் தன்னைப்பற்றி அல்லது தான் அறிந்தது பற்றி வெளியே சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான், இல்லாது போனால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடக்கூடும். அதற்காகத்தான் அவனை சமூகச்சூழலில் வைத்திருக்கிறார்கள். காலையில் எழுந்து பல்தேய்க்க பிரஷ் கேட்பதில் தொடங்கி வழக்கமாக கைக்கு வரும் காப்பியை ரெடியா என்று கேட்டு. எவ்வளவு எழுப்பினாலும் எழும்பாத குழந்தையை அதே முறையில் மீண்டும் முயற்சி செய்து. அன்றைய பேப்பர் படித்து அடிக்கும் கமெண்ட் களை ரசிக்க நேரமில்லாத மனைவியிடம் அந்த காலை வேளையில் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் கூறிப்பார்த்து.

அல்லது காலையில் கரவைக்கு இழுத்து போகும் மாட்டிடம் தன் வீட்டு கதைகள் எல்லாம் சொல்லி, எல்லோரும் படுத்துகிறார்கள் நீயாவது சீக்கிரம் வந்து தோலையேன் என்று புலம்புவதும்.

பக்கத்து வீட்டு கதைகளை வேலைக்காரி சொல்லும்போது அது அநாகரீகம் என்று தெரிந்தாலும் நாம் கேட்டு நமக்குள் வைத்துக்கொள்ளப்போவதால் தப்பேதும் இல்லை என்று உற்சாகப்படுவதும். அதே கதையை அக்கறையாய் சொல்லக்கூடாத இடத்தில் சொல்லும்போது அக்கறையின் காரணமாக அறிவுரைதானே சொல்கிறோம் என்று நியாயப்படுத்திக்கொள்வதும். அதனால் பூகம்பம் வெடிக்கும் போது பிரச்சினைகள் வெளிவந்தால்தான் அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பதற்காக முயன்ற பெருமையை ஏற்றுக்கொள்வதும் அதுபோய் ஒரு ஸ்டவ் வெடிப்பில் முடிகிறபோது தர்மபிரபுவாய் மாறி அங்கேயே நீதி வழங்குவதும் கூட ஒருவகையில் முதல் பாராவைத்தான் நினைவு படுத்துகிறது.

மனித மனம் பேசத்தான் ஆசைப்படுகிறது. ஆனால் அங்கே பேசமுடியாத போத அது எழுத்தாய் வருகிறது. தூய தமிழில் இதை புரளி பேசுவது என்பார்கள். புரளி மட்டும் பேசாமல் இருந்தால் மனிதன் பைத்தியம் பிடித்தவனாகிவிடுவான். அவரவர் நிலைக்கேற்ப அந்த புரளி சுகமும், தன்மையும், சுவையும் கூடியதாக இருக்கிறது. ஆகையால் இப்படி புரளி பேசி பெரிய பிரச்சினைகளை கண்ட மனிதன் ஒரு முடிவுக்கு வந்தான்.

நிஜத்தில் நடக்கும் விஷயங்களை பேசினால்தானே பிரச்சினை வருகிறது. என் வீட்டு வாசலில் வந்து கண்ட கண்ட வார்த்தைகளில் திட்டுகிறாய். நானே ஒரு குடும்பத்தை அல்லது கூட்டத்தை கற்பனை செய்து கொண்டு அதைப்பற்றிய புரளியை பேசுவதென்ன பதிப்பித்து புத்தகமாகவே வெளியிடுவேன் என்று முடிவெடுத்த புரளி மன்னர்களால்தான் கதைகளும் நாவல்களும் வந்தனவோ என்னவோ.

இப்போது பெரிய எழுத்தாளர்கள் அல்லது புத்தகம் வாசிப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் நல்ல 100 புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று அறிவுரை சொல்வதை காணலாம். அவையெல்லாம் புரளிகளா என்றால் இல்லை. புரளிகளை தேடிப்போனவைகள் பயணக்கட்டுரைகளாகின்றன, நாகரீக பறிமாற்றங்களாகின்றன. அல்லது வரலாற்று புதினங்களாகின்றன. ராஜராஜன் அல்லது சுந்தரசோழர் வீட்டு குடும்பச்சண்டைதானே பொன்னியின் செல்வனாகியது. அதை எத்தனை சுவாரஸ்யத்துடன் படிக்க முடிந்தது. ஆனால் கற்பனை நாவல்கள் அத்தனை சுவாரஸ்யமாக படிக்க முடியாமல் போனதன் காரணம், பொன்னியின் செல்வன் நடந்த ஒரு குடும்பசண்டை. கற்பனை அல்ல என்பதால் கூடுதல் சுவாரஸ்யம்.

இது ஏதோ ஒரு சாதராண சம்பவமாக தோன்றினாலும் ஆழமாக யோசித்துப்பார்த்தால் இதில் உள்ள மனோ தத்துவம் புரியும் எல்லா கலைகளிலும் அடி ஆழம் ஒரு புரளிதான் என்று தோன்றுகிறது.

Dec 25, 2011

அமெரிக்க பயணம்-2

இந்த முறை இரண்டுவார பயணமாக அமெரிக்க செல்ல வாய்ப்பு கிடைத்தது, போனமுறைக்கும் இந்த முறைக்கும் நிறைய வேறுபாடுகள், அப்போது கொஞ்சம் கோடைகாலமாக இருந்தது. இப்போது நல்ல குளிர்கால தொடக்கம் நல்ல வேளையாக பனிப்பொழிவு ஆரம்பிக்கவில்லை, ஒருநாள் மட்டும் மழை அப்படியே பனியாக கொட்டியது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் இருந்தது.
இந்தமுறை முதலில் சென்றது பென்சில்வேனியா மாகாணதில் உள்ள பிட்ஸ்பர்க் நகரம், இது ஜார்ஜ் வாஷிங்டன் முதலில் அமெரிக்க சுதந்திரபோருக்காக முழங்கிய இடம். அவர் ஒரு பண்ணையாரக இருந்து சந்தர்ப்பவசத்தால் தளபதி ஆக்கப்பட்டவர். முழுவிவரம் வேண்டுமானால் பா.ராகவனின் “டாலர் தேசம்” படித்தால் புரியும்.



பிட்ஸ்பர்க் ஒரு மலைநகரம் என்று சொல்லலாம் சமதரையாக பார்க்கவே முடியவில்லை, எங்கும் மெலும் கீழுமாக வீடுகள் கட்டிடங்கள் என்று அற்புதமாக இருக்கிறது.பிர்மாண்டமான கட்டுமானங்கள் பள்ளத்தாக்குகளும் அவைகளை இணைக்க பெரும் பாலங்கள் என்று பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்தனை சாதனைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நில அமைப்பில் பிட்ஸ்பர்க் ஒரு அற்புத நகரம்தான்.

நமது இந்தியர்கள் ஒரு அழகான வெங்கிடேஸ்வரா கோவிலை அங்கே கட்டி இருக்கிறார்கள். நான் போனது சுமார் ஒரு டிகிரி குளிர். உள்ளே வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு சீராக வைத்திருக்கிறார்கள், பகல் 12 மணிக்கு சுமார் 50 பேர் அமர்ந்து பெருமாளுக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வழிபாட்டுக்கு வருகிறார்கள். தமிழ் தெலுங்கு பட்டாச்சார்யார்கள் காலில் சாக்ஸ் மாட்டிக்கொண்டு பெருமாளையும், தாயாரையும் அன்போடு ஆராதனை செய்வதை பார்க்க முடிந்தது. பெருமாள் மிக அழகாக இருக்கிறார் எப்போதும் போலவே. கோவில் கொஞ்சம் மலைமேல்தான் அமைந்துள்ளது. நல்ல மடப்பள்ளி ஒன்றும் உள்ளது. புளிசாதம், தயிர்சாதம், உப்புமா போன்ற பல உணவு பதார்த்தங்கள் விலைக்கு கிடைக்கிறது. நல்ல சுவையோடு.




குளிர்காலம் என்பதால் மரங்கள் மிகசோகமாக இலைகளை தொலைத்துவிட்டு எங்கும் ஒரு வெறுமை படர்ந்திருந்தது காண கஷ்டமாக இருந்து, குளிர் என்றால் சரியான குளிர். அதிகநேரம் சரியான காப்பு உடைகள் இல்லாமல் வெளியே நின்றால் அவ்வளவுதான். நான் சுமாரான உடைகளுடன் சென்று மிகவும் சிரமப்பட்டேன். என்றாலும் பின்னர் சில தேவையான உடைகளை வாங்கிக்கொண்டேன்.



இரண்டாம்நாள் வேலை செய்யும் இடத்தில் இருக்கும்போது மழைத்தூறல் தொடங்கியது அது ஒரு பனிப்பொழிவு, வெப்பநிலை மிககுறைவாக இருப்பதால் விழும் மழை அப்படியே பனியாக பொழிகிறது. வெளியே வந்தால் கார் எல்லாம் மெல்லிய பனி மூடிக்கிடக்கிறது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் அடித்ததால் மழை இல்லை, ஆகையால பனி பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் குளிர் 1 டிகிரி அளவில் இருக்கத்தான் செய்தது.
இரண்டு வாரம் அங்கிருந்துவிட்டு எதுவும் பார்க்க முடியவில்லை, காரணம் குளிர், பின்னர் வேலை சரியாக இருந்தது.