Aug 25, 2011

அமெரிக்கபயணம்அமெரிக்காவுக்கு வந்து கிட்டதட்ட 2 மாதம் ஆகிவிட்டது, தொடர் பணிசுமையால் எதுவும் எழுதமுடியாத ஒரு நிலை, என்றாலும் இங்கு வந்தபின் இந்த நாட்டின் சூழல் பற்றிய விஷயங்களை என்னை கவர்ந்தவைகளை எழுத நினைக்கிறேன். டெல்லியில் இருந்து சிகாகோ வழியாக அல்பணி என்கிற நான் தங்கவேண்டிய நகரத்திற்கு வந்து சேர்ந்தேன், சுமார் 13 மணி நேரபயணம் டெல்லியில் இருந்து சிகாகோ பிஸினஸ் கிளாஸ் டிக்கட் என்பதால் நமது ஏர் இந்திய விமானத்தில் நல்ல கவனிப்புகள், மற்றும் இருக்கை கிட்டதட்ட ஒரு படுக்கை போல மிக சுகமாக மாறிக்கொண்டது ஒரு களைப்பும் இல்லாமல் சிகாகோவில் வந்து இறக்கி விட்டது. நேரமாற்ற குழப்பங்கள்தான் நமக்கு பெரிய சங்கடம்.

சிகாகோ ஏர்போர்டில் இருந்து வெளிவந்தால் வெளியே ஒரு ஈ காக்காவையும் காணும். நாம் நம் சென்னை திருச்சி ஏர்போர்ட் வாசலில் காத்துக்கிடக்கும் பல பயணிகளின் உறவுகளையும் நண்பர்களை கண்ட பழக்கத்ததில் இங்கு அப்படி கூட்டமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அப்படியாருமே இல்லை, எனது மொத்தமே ஒர் 10 பேருக்குள்ளாக மனிதர்கள் காணப்பட்டார்கள், அதுவும் இந்தியாவில் இருந்து வரும் உறவினர்களை அழைப்பதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன், அதில் ஒரு இந்தியர் நான் அடுத்த விமான நிலையத்திற்கு செல்லும் தொடர்வண்டியை பிடிக்க வழி சொன்னார்.

அந்த தொடர்வண்டியை பிடித்து அடுத்த விமானம் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தேன். எல்லா இடத்திலும் அத்தனை பெரிய மனித கூட்டம் இல்லை. பிறகு பெரிய காத்திருப்பு நான் அமெரிக்க நேரப்படி அதிகாலை 7 மணிக்கு சிகாகோ வந்து சேர்ந்து விட்டேன், எனது அடுத்த விமானம் மாலை 4 மணிக்கு ஆகையால் அதிகநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமிகவும் தண்டனையான விஷயம்தான்.

சரி அமெரிக்க வாழ்க்கையைப்பற்றி எழுதுதலாம், எங்கும் பசுமை நான் இருந்த இடம். குளிர்காலத்தில் ஒரே பனிக்காடாக மாறிவிடுமாம், நம் இமய மலை போல. செப்டம்பர்வரை கோடைகாலம் என்பதால் பசுமை. அழகான ஆறுகளை கடந்துதான் எனது பணிபுரியும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

தங்கிய விடுதியின் ஜன்னலைத்திறந்தால் ஒரு பூங்காவில் இருப்பதைப்போல்தான் சுகமாக இருக்கிறது. எங்கும் யாரையும் உதவி கேட்கதேவையே இல்லை. விமான நிலையத்தில் இறங்கியதும் நம்மூரில் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதுபோல் கார் வாடகைக்கு கிடைக்கிறது. அதில் இருக்கும் GPS(GLOBAL POSOTIONING SYSTEM) உலக வரைபட உதவி இயந்திரம் கிட்டத்தட்ட எல்லா கார்களிலும் கிடைக்கிறது. அதில் நாம் செல்லும் விடுதியின் முகவரியை தெரிவித்தால் நாம் எப்படி போகவேண்டும் என்று பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வழி சொல்கிறது. சாலைகளும் காரோட்டிகளும் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதால் நமக்கு மிக சுலபமாக பழக்கமே இல்லாவிட்டாலும் கார் ஓட்டி குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியும். தவறாக மாறிப்போய்விட்டால் கூட இருக்கிற இடத்தில் இருந்து மீண்டும் வழி சொல்கிறது. அமெரிக்க பழக்கமானவர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் என்னைப்போல் நாட்டுபுறத்தானுக்கு ஒரு அதிசயம்தான்.

பிறகு அமெரிக்க இரவு நடன விடுதிகள். அங்கே சிகரெட்புகையும், இசையின் ஒலியும் கட்டுக்கடங்காதது. வெள்ளிக்கிழமை இரவுகளில் தொடங்கும் கூத்துக்கள் மறுநாள் காலை வரை தொடர்கிறது. அங்கே தனியாக ஆடிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று நீங்களும் நடனத்தில் கலந்து கொள்ள வேண்டியது. அவருக்கு விருப்ப பட்டால் அவள் உங்களுடன் சேர அதன் பிற்கு நடக்கும் உற்சாக நிகழ்வுகளை இங்கே எழுத முடியாது. என்னால் அதிக நேரம் உள்ளே இருக்க முடியவில்லை புகை மூட்டத்தால். மற்றபடி அமெரிக்க பெண்களின் உடையும் நிறமும் அவர்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.

எல்லா இடத்துலும் ஒரு புன்னகை கிடைக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு விலை. எங்குபோனாலும் நல்ல வரவேற்பு. ஆனால் பணம் பிரதானம். எல்லாம் குறியீடுகளுடனான வாழ்க்கை. எல்லா குறியீடுகளையும் புரிந்து கொள்ள பழகவேண்டும். காலநிலை நேர மாற்றங்கள் பழக சிரமப்படும் பின்னர் நம்மை அடிமையாக்கிவிடும் இந்த வாழ்க்கை.

இப்போது சிகாகோ விமான நிலைத்தில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் சுகங்களை எந்த சிரமமும் இல்லாமல் கட்டணத்திற்கு தருகிறார்கள். உங்களின் சுதந்திரம் 100 சதம் உத்திரவாதம். ஆனால் நிற வேற்றுமை உணர்வுகள் இல்லாமல் இல்லை. இல்லை என்பதுபோல் காட்ட முயற்சிகள் நடைபெறுகிறது. தொலைக்காட்சி சானல்களில் காணும்போது மேலே சொன்னவைகளை எதுவும் காணமுடியவில்லை. அதெல்லாம் காசு கொடுத்து காணவேண்டிய விஷயங்கள்.

உணவு, என்னைப்போல் சைவர்களுக்கு பிரச்சினைதான். சமைக்க தேவையான எல்லா விஷயங்களும் இந்திய கடைகளில் கிடைக்கின்றன. சமைக்கலாம்.முஸ்லீம் நண்பர் ஒருவர் என்னுடன் இங்கே பணியில் பயிற்சிக்காக வந்தார். அவருடன் ஒரு மசூதிக்கு சென்றேன். அங்கே பல நாட்டினரை சேர்ந்த இஸ்லாமியர்களை கண்டேன். நோம்பு நேரம் என்பதால் மாலையில் உணவும் தருகிறார்கள். ஒரு நல்ல சினேகம் அவர்களுக்குள்ளே. வளைகுடா நாட்டில் வெகு நாட்கள் இருந்ததால் சலாம் சொல்லுவது பழகிப்போன விஷயம் அந்த சுகம் இங்கேயும் கிடைத்தது.நயாகரா சென்று வந்ததை மறக்க முடியாது. அங்கு போனது காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது ஒழுங்காக படியில் பார்த்து நடக்காததால். என்றாலும் நொண்டிக்கொண்டே எல்லாம் பார்த்து முடித்தேன். பிரமாண்டமான அருவிகள். குகைவழியே கீழே இறக்கி அருவியின் அருகே அழைத்துச்செல்கிறார்கள் ஒரு சாரலில் நனைந்த சுகம் கிடைக்கிறது. கனடா பகுதியில் இருந்து பார்த்தால் மிக அழகாக தெரியும் ஆனாலும் அமெரிக்க பகுதியில் இருந்துதான் விழுகிறது. ஆகையால் மிக அருகில் இருந்து பார்க்க முடிகிறது.பெரிய படகுகுகளில் கூட்டமாக ஆட்களை ஏற்றிச்சென்று அருவிக்கு அருகே கொண்டு போகிறார்கள். எதுவும் இலவசம் இல்லை. கார் நிறுத்துமிடத்தில் 10 டாலர் வசூலிக்கிறார்கள் என்றால் மற்ற விஷயங்களை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம். நமது கொல்லிமலை அருவியை விட உயரம் என்று தோன்றவில்லை, ஆனால் அகலமும் நீரின் அளவும் மிக அதிகம். 5 மணிநேரம் பயணம் செய்து கண்டேன். இந்திய உணவகங்கள் இருக்கின்றன. நிறைய இந்தியர்கள் தனது பெற்றோரை அழைத்து வந்து நயாகராவை காட்டிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்க வாழ் தன் மக்களின் நாகரீக உடைகளுக்குள் பொருந்தாமல் அவர்கள் நம்மவர்களாகவே இருந்தார்கள். தன் பேரப்பிள்ளைகளின் பார்வையாளர்களாக.நயாகராவைக்கண்டபோது எனக்கு என்னமோ நம்மூர் சுற்றுலா தளத்தில் இருப்பதுபோல்தான் தோன்றியது. பூங்காக்கள் வரிசைகள் என்று என்னை பெரிதாக பிரமிப்படையச்செய்யவில்லை என்று மற்றும் தோன்றியது.ரசனை குறைவானதால் இருக்கலாம்.
பெரிய வியாபர நிலயங்களில் எல்லாம் பொருட்களைப்பார்க்கும்போது எல்லாம் வாங்க தூண்டுகிறது. நல்ல விலை. அமெரிக்கர்கள் எப்படி சமாளிக்கிறார்களோ. குழந்தைகளுக்கு மிக நல்ல சிந்தனையைத்தூண்டும் விதத்தில் பொருட்கள் இருக்கின்றன. எங்கும் சினேகத்துடன் உதவியாளர்கள். விதவிதமான உபகரணங்கள் சொல்லிமாளாது. ஒரு புதிய உலகம் புதிய வாழ்க்கைமுறை. எல்லாமும் எல்லா சுதந்திரங்களும் விலைக்கு கிடைக்கிறது. அழகான வீடுகள் ஆனால் புயலுக்கும் மழைக்கும் பயப்படவேண்டும். நான் இருந்தபோது நியுயார்க்கிலும் வடக்கு கரோலினாவிலும் இரின் புயல் தாக்கியது. நான் இருந்த இடம் நியுயார்க்கில் இருந்து 150 மைல் ஆகையால் ஓரளவு காற்றும் நல்ல மழையும். பல சாலைகள் மூழ்கி விட்டன. மற்ற சேதங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சானல்களில் கண்டிருக்கலாம். என்றாலும் எனக்கென்னமோ இந்த வாழ்க்கை ஒரு இயந்திரத்தனமாகத்தான் தோன்றுகிறது. எதுவும் நிரந்தரமில்லை. அறிவியல் எல்லா இடங்களிலும் பொங்கிவழிகிறது. எதுவும் அறிவியல் உதவிகொண்டே பார்க்கப்படுகிறது. அதுசரியா என்றுதான் தெரியவில்லை.

எல்லா பயணக்கட்டுரைப்போல நம்மூர் இட்லிக்கும் சாம்பாருக்கும் எதுவும் ஈடில்லை என்றுதான் எழுதிமுடிக்கதோன்றுகிறது. நிறைய சீமான் மற்றும் தமிழருவி மணியனின் பேச்சுக்களைக்கேட்டேன். எல்லாம் பழயதுதான், பல மலையாளப்படங்களைப்பார்த்தேன். எல்லாம் youtube உபயம். அதைப்பற்றியெல்லாம் எழுதுகிறேன் பின்னர்.

இப்போதைக்கு இதுபோதும் என்றே தோன்றுகிறது.