Nov 25, 2008

நண்பரின் கைவண்ணம்

எனது நண்பர் திரு ஜீவா அவர்கள் ஒரு வித்தியாசமான விஷயத்தை எழுதியுள்ளார் அவரின் வேண்டுகோளின் படி இந்த பதிவு, வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், தொடர் பணி சுமையால் ஏதும் எழுத முடியாத நிலை விரைவில் எழுத முயல்கிறேன். அன்புடன் செல்வன்

எனது அன்பு தமிழ் வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கம், எனக்கு தமிழ்மேல் அதிக பற்று உண்டு, ஆனால் அது உறங்கி கொண்டிருந்தது, அதை தட்டி எழுப்பியது எனது அன்பு நண்பர் திரு. செல்வம் அவர்கள்தான். இது எனது முதல் பயணம் இதில் தமிழில் சில சொற்களை பற்றி ஆராய்வோம். நாம் அன்றாடம் காணும் சினிமாவிலும், மற்றும் சமுதாயத்திலும் வழக்கமாக உபயோகிக்கும் வார்த்தை ஒக்கமக்கா, குண்டக்கமண்டக்க என்ற வார்த்தை இது எப்படி வந்தது என்று இப்பொழுது பார்ப்போம். ஒரு கற்பனைதான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பம் இருந்தது, அந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள், அதில் மூத்தது ஒரு குண்டான பெண்பிள்ளை, இரண்டாவது ஒல்லியான பெண்பிள்ளை ,மூன்றாவது ஆண் பிள்ளை, இந்த மூன்றுபேரும் ஒரே பள்ளிகூடத்தில் படித்து வந்தார்கள், இவர்கள் எப்பொழுதும் பள்ளிக்கூடம் போனால் ஒன்றாகத்தான் சேர்ந்து போவார்கள். இதில் அதிக புத்திசாலி ஒல்லியானபெண், மூத்த பெண் நன்றாக படிக்காது, அதனால் அந்த பெண்ணை எல்லோரும் மண்டு என்றுதான் சொல்வார்கள், பள்ளிகூடத்தில் கேள்வி கேட்டால் தவறாகத்தான் பதில் சொல்லும், ஆனால் இரண்டாவது பெண் நன்றாக பதில் சொல்லும், ஒருநாள் இரண்டாவது பெண் ஆசிரியர் கேள்வி கேட்கும் பொழுது தவறாக பதில் சொல்லிவிட்டது, அதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், உங்க அக்கா குண்டு அக்கா மண்டு அக்கா மாதிரி பதில் சொல்லாதே என்று ஆசிரியர் சொல்ல , அது முதல் அது மருவி குண்டக்க மண்டக்க (குண்டு அக்கா மண்டு அக்கா) என்று ஆகிவிட்டது, இதுதான் குண்டக்க மண்டக்க கதை, அது மாதிரி ஒக்கமக்க எப்படி வந்தது என்றால், அந்த குண்டான அக்காவை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள், அந்த அக்கா ஒருமுறை மாப்பிள்ளையோடு வீட்டிற்கு வந்துஇருந்தபொழுது , மாப்பிள்ளை ஏதோ கேள்விகேட்க்க அதற்க்கு பதில் தெரியாமல் அந்த பெண் நின்றுகொண்டிருந்தது, அப்பொழுது அந்த வீட்டில் உள்ள பையன் அத்தான் பெரியக்காவிற்கு ஒன்றும் படிக்கத்தெரியாது மண்டு அக்கா என்று மாபிள்ளை இடம் சொல்ல, அதை கேட்ட அந்த மாப்பிளை ஆச்சிரியத்தோடு, உங்க அக்கா மக்கா என்று கேட்டுஇருக்கிறார், உங்க அக்கா மக்கா என்றது மருவி ஒக்கமக்க என்று ஆகிவிட்டது. மேலும் அடுத்த பயணத்தில், கொய்யால, டகால்டி பற்றி பார்ப்போம்

இப்படிக்கு என்றும் அன்புடன்
S.ஜீவரத்தினம்.

Nov 9, 2008

உளறல்-10 ஆன்மீகம்

நீண்ட நாளாக ஆன்மீகம் பற்றி எழுதி வைக்கலாம் என்ற எண்ணம் உண்டானது அதனை இப்போது எழுத முனைகிறேன். பல காரணகாரியங்களுக்கு நாம் இறைவனையும் அவன் திருவிளையாடல்களையும் காரணமாக கூறி அந்த குழப்பத்தில் இருந்து விடுபட முனைவது இயல்பு, இதில் இறைவன் என்கிற பதம் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு அதன் மீதான நம்பிக்கை சாதாரணமாக குழந்தை பருவத்தில் இருந்து உண்டாக்கப்பட்டு அது ஒருவகையில் மிகவும் ஆழ்ந்த மன அழுத்தம் போல சிலருக்கு ஏற்ப்பட்டு விடுகிறது,

சில மாணவர்கள் பரிட்சைக்கு செல்லும் முன் கடவுள் வழிபாடும் அதன் மூலம் சில சகுனங்களை தாங்களாகவே உண்டாக்கி கொண்டு அதனோடு ஒரு அடிமைபோல ஆகிவிடுவதை கண்டிருக்கிறேன், எனக்கும் கூட சிறு வயதில் 10 ம் வகுப்பு காலங்களில் அப்படி சில அடையாளங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன், இப்படி ஒவ்வொருவரும் ஒரு கட்டமைப்பை இறைவன் என்கிற சக்தியின் மீது கொண்டுள்ள காதலால் அல்லது பயத்தால் உருவாக்கி கொள்கிறார்கள்,

காதல் என்று சொல்வதை விட பயம் என்கிற பதம்தான் இதில் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். இது எல்லா வயதிலும் தொடரக்கூடிய ஆபத்து இல்லாமலில்லை, கடவுள் என்பதன் உண்மையான சொரூபம் யாருக்கும் சரியாக தெளிவு படுத்த படவில்லை என்பதுதான் காரணம் என்பது என் எண்ணம், அதற்காக கடவுள் என்கிற பதம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டதா? எனக்கேட்காதீர்கள், அதனைப்பற்றிய தெளிவு இந்த கட்டுரை முடிவில் உங்களுக்கு கிடைக்கலாம்,

இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்கள் மறுபிறவி பற்றி ஏதும் கூறவில்லை, அவர்களின் புனிதநூல் கூறுவதன்படி எல்லா ஜீவன்களும் கடைசி தீர்ப்பு நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவனால் இறுதி விசாரனைக்கு அழைக்கப்பட்டு அவரவர் குற்றங்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்கிற தகவல் கூறப்பட்டுள்ளது, அதன் பின் இந்த உலகில் புதிய ஜீவன்கள் மீண்டும் கடவுளால் படைக்கப்பட்டு அடுத்த உலக அமைப்பு உருவாகும் என்பது அவர்கள் நம்பிக்கை.

அடுத்து அறிவியலில் டார்வினின் கொள்கைப்படி பரிணாம தத்துவம் நம்பப்படுகிறது அதாவது ஓருயிரி முதல் மனிதன் வரையான பரிமாண மாற்றமாக அது விளக்குகிறது, என்றாலும் கிருஸ்துவம் கூறும் பதில் டார்வின் தனது பரிமாணத்தத்துவத்தை தனது இறுதி காலத்தில் மறுத்துவிட்டார் என்பதாக. அது முதுமைக் காலத்தில் அவருக்கு ஏற்ப்பட்ட குழப்பமாயிருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் ஏற்ப்படுகிற மாற்றங்களை காணும்போது டார்வின் தத்துவம் பொருந்தி வருவதை நாம் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை காஞ்சி பெரிய சங்கராச்சாரியிடம் ஒரு கேள்வி கேட்டப்பட்டது, கேட்டவர் ஒரு வெளிநாட்டு பெண்மணி என்று தகவல், மறுபிறவி உண்டு என்பதை நீங்கள் எப்படி நிருபிக்கமுடியும் என்பதாக, ஏனனில் இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அடிப்படை மறுபிறவி என்பது அதன் பின் தான் கடவுளின் எண்ணிக்கைகள் வருகின்றன.
அந்த கேள்விக்கு பெரியவரின் பதில் மிக முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது, அவர் அந்த பெண்ணிடம் ஒரே நேரத்தில் பிறந்த பல குழந்தைகளின் பிறவி மற்ற மதங்களின் படி அதுதான் முதல் என்றால் இறைவனின் கருணை எல்லோருக்கும் சமம் என்றால் ஏன் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு பொருளாதார சூழலிலும் உடல் குறைபாடுகளோடும் பிறக்கின்றன, ஏதோ ஒரு காரணத்தால் அதன் இந்த பிறப்பு சிலருக்கு ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் சிலருக்கு தண்டனை தரப்பட்டதாகவும் அமைகின்றன அதன் காரணம் என்கிற விஷ்யம்தான் இந்து மதத்தில் முந்தைய பிறவியின் பலாபலன்கள் என்கிற ஒரு தத்துவமாக அமைந்துள்ளது என்று விளக்குகிறார்.

இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் ஏனனில் கடவுள் எல்லா மதத்திலும் கருணை வடிவமாகவே நம்பப்படுகிறார், மேலும் மற்ற மத கூற்றுப்படிதனது முதல் இரண்டு ஜீவன்களையும் சமமாகவே படைக்கிறார். பாலினத்தில் மட்டும் வேறுபாடு கொண்டு.

இந்த இடத்தில் மறுபிறவி என்பது மிகசரியான பதிலாக பொருந்தக்கூடும், ஏனனில் இந்து மதம் தனது இப்பிறவி நடவடிக்கைகளின் மூலம் அவரவரின் பிறவியின் பயனை அடைய முடியும் என்கிறது, எல்லா மனித பிறவியிலும் இறைவனிடம் சென்று சேர்வதற்காண வாய்புகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன அதைப்பயன்படுத்தி இறைவனிடம் சேர்வதும் அல்லது அதனை தவறாக பயன் படுத்தி மீண்டும் மீண்டும் பிறந்து தனது தவறை எப்போது திருத்திக்கொண்டு இறைவனை அடையமுடிகிறதோ அப்போது அடைவதும் நடைபெறுகிறது என்பது இந்து மத தத்துவமாக இருக்கிறது.

உறங்குவது போல் சாக்காடு
உறங்கி விழித்தல் பொல் பிறப்பு

என்று ஒரு பாடல் உண்டு, மனிதனின் மரணம் ஒரு உறக்கம், மீண்டும் பிறப்பது ஒரு விழிப்பு அவ்வளவே, மனிதன் என்னவாக உறங்குகிறானோ அவ்வாறே மீண்டும் பிறக்கவும் செய்கிறான் என்பது இதன் வழி நாம் அறியலாம், இன்று இரவு நல்லவனாக
தூங்குபவன் நாளையும் நல்லவனாகவே எழுகிறான், அதனால் தான் இப்பிறவியில் இறைவனை அடைய முடியாமல் போனாலும் குறைந்த பட்சம் நல்ல மனிதனாக வாழ்ந்து வந்தால் அதன் தொடர்ச்சியாக அடுத்த பிறவி நல்லதாக அமையும் என்பது போதிக்கப்படுகிறது.

அதனால்தான் ரமணர் போன்றோர் தனது 12ம் வயதில் இந்த உலகவாழ்க்கையை விட்டு துறவு வாழ்வுக்கு செல்லமுடிந்தது, போன பிறவியின் தொடர்ச்சி அவரை தனது சிறு பிராயத்திலேயே மீண்டும் ஞான வாழ்க்கைக்கு கொண்டு போனது,

இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் எல்லாம் ஞானிகளாக முடியுமா என்று கேட்காதீர்கள், நல்லவர்கள் எல்லாம் ஞானிகள் இல்லை, ஆனால் ஞானிகள் எல்லாம நல்ல மனிதர்களாக இருந்துதான் அந்த நிலையை அடைகிறார்கள்.

நல்ல நிலைக்கு மனிதன் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் போது அவனைநோக்கி ஞான அறிவும் வருகிறது, யாரோ ஒரு குருவின் இருப்பிடம் அவனுக்கு கூறப்பட்டு அல்லது அழைக்கப்பட்டு அங்கே அது போதிக்கப்படுகிறது,

அதன் பின் அவன் தனது பயிற்சிகளுக்கேற்ப இறைநிலையை அடைகிறான், அதாவது மீண்டும் பிறக்காத நிலையை. இதுதான் இந்து மதத்தின் நம்பிக்கை, நல்ல மனிதானாக மாற்றும் பணியைதான் மதங்கள் தனது கோவில்களாலும், பிரச்சாரகர்களாலும் செய்து வரணும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.

செல்வம்

Nov 5, 2008

உளறல்-9


நிறைய விஷயங்கள் நமது நினைவுகளில் தங்குவதே இல்லை அவைகளை பற்றி நாம் நிறைய கவலைப்படுவதும் இல்லை, எனது சிறு பிராயத்தில் நிறைய கதைகளை படித்திருக்கிறேன், ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், பெரிய புராண கதைகளையும் நிறைய படித்தும், பல தேவார திருவாசக பாடல்களை மனப்பாடம் செய்தும் எனது சிறு வயதில் நல்ல பல வழக்கங்களை எனது தந்தையாரின் தூண்டுதலால் கற்றிருக்கிறேன், அது அந்த காலத்தில் ஒரு சாதாரணமான வழக்கமாக இருந்தது, பெரும்பாலும் எனது நண்பர்கள் சிலரும் கூட இது போன்ற பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்,

பெரும்பாலும் பிராமணக் குழந்தைகள் இந்த மாதிரியான அறிவில் சிறந்து விளங்கினார்கள், அதற்கு காரணம் அவர்களின் இல்லங்களில் இருந்த வசதியும் புத்தகங்களும்தான், எனக்கு தெரிந்த வரை புத்தகங்கள் வாங்குவதென்பது சாதாரண மனிதர்களிடம் குமுதம் ஆனந்த விகடன் மட்டுமே, மற்ற நாவல்களோ வேறு இலக்கிய வகை புத்தங்களை படிப்பதென்பது அப்போது பிராமணர் அல்லாதோரிடம் இல்லை என்றே நினைக்கிறேன்,

துக்ளக் மற்றும் கல்கி போன்ற பத்திரிக்கைகள் அப்போது சற்று வேறுதளத்தில் இயங்கியதால் அதன் மூலம் சற்று அதிக வளமான சிந்தனை வளர்ச்சி இருந்ததென்று சொல்லலாம், சிறுவர்களுக்கு அம்புலிமாமா ஒரு பெரிய வரப்பிரசாதம், ஆனால் அப்போது இருந்த பொருளாதார சூழல் புதிய புத்தகங்களை வாங்க அனுமதிக்காததினால் வாடகை புத்தக முறை பெரிய உதவியாக இருந்தது, அப்போது வாடகை புத்தகம் கொண்டு வரும் பையனிடம் அம்புலிமாமா வுக்காக கெஞ்சி கூத்தாட வேண்டும், அது எங்கெல்லாமோ சுற்றி விட்டு பிறகு மெதுவாக வரும்போது அட்டையெல்லாம் காணாமல் போயிருக்கும்,

இவைகளில் எல்லாம் வந்த கதைகளும், விஷ்யங்களும் இப்போது நினைவில் இல்லை, எனது குழந்தைக்கு கதை சொல்ல முயலும்போதுதான் நமது நினைவின் வறட்சியும் கற்பனையின் வறட்சியும் தெரிகிறது, ஆனால் அன்று பாடிய பாசுரங்கள் இப்போதும் நம் நிலைகொள்ளாத நேரத்தில் கூட நினைவில் வருகின்றன, அப்போது திருக்குறள் மனப்பாடம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது, அதனால் ஒரளவுக்காண திருக்குறள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், இப்போது உள்ள குழந்தைகள் எப்படி இவைகளைக்கற்கின்றன என்று தெரிய வில்லை,

அப்போதைய பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் அரசாங்க பள்ளிகள் மட்டுமே சில நகரங்களில் மட்டும் கிருஸ்துவ சபையாரின் பள்ளிகளும், ராமகிருஷ்ண மட பள்ளிகளூம் ஒரு சில தணியார் தொண்டு நிறுவன பள்ளிகளூம் இருக்கும், ஆனால் அப்போதைய அரசு பள்ளிகள் மிகவும் தரமானதாக இருந்தது என்றூ சொல்ல முடியும், காரணம் எல்லாவகை மாணவர்களும் அதில் இருந்தார்கள், என்னோடு பிராமண ஆதிதிராவிட நண்பர்களும் இணைந்தே படித்தார்கள், அப்போது வேறுபாடுகள் எல்லாம் புரியாதகாலம், கிராமத்திற்கு வரும்போதுதான் இந்த வேறுபாடுகள் நாம் கடைபிடிக்க வேண்டிய சூழல் வரும், எனது தந்தையாரின் பணி காரணமாக கிராமத்தை விட்டு சற்று பெரிய ஊரில் படிக்க நேர்ந்த்தில் இந்த சாதி வேறுபாடுகள் பெரிதாக பாதிக்கவில்லை,

எனது 10ம் வகுப்பு காலங்களில் எனது பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை பக்கத்து நகரத்துக்கு அனுப்பி தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தார்கள், அது மிகவும் பெரிய விஷயமாக அப்போது பார்க்கப்பட்டது.

அந்த வயதில் பஸ்பிடித்து அதிகாலை சென்று மாலை 6 மணிக்குமேல் வீடுதிரும்பும் அவர்களை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் இன்று கிட்டதட்ட எல்லா பிள்ளைகளும் பஸ்களில் சென்றுதான் படிக்கின்றன, படிப்பு என்பது ஒரு கட்டாய கடமையாக இன்று உணரப்பட்டிருப்பது மிகப்பெரிய வளர்ச்சி ஆனால் அது ஒரு மிகப்பெரிய சுமையாக பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமை, காமராஜர் எதிர்பார்த்தது இப்படி ஒரு கல்வியைதானா? இந்தியாவை விட எல்லா நாடுகளிலும் கல்வி ஒரு பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றன என்றுதான் தோன்றுகிறது,

கல்வி, சேவை என்கிற தளத்தில் இருந்து லாபகரமான தொழில் என்கிற நிலைக்கு வந்ததன் விளைவு, என்றாலும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மற்றும் அலுவலர்கள் நிலையும் யோசிக்கவேண்டியுள்ளது, ஆகையால் அரசு புதிய கல்வி கொள்கைகளை உருவாக்கும் போது பாடதிட்டங்களை மட்டும் கணக்கில் கொள்ளாது பொருளாதார செலவினங்களையும் கருத்தில் கொண்டு இவைகளை முடிவு செய்ய வேண்டும்,

கூடவே கல்வி என்பது அறிவு வளர்ச்சிகு மட்டுமே உதவ வேண்டும் வேலைவாய்ப்பிற்கான ஒரு பயிற்சியாக ஆகிவிட்டதும் கூட அது ஒரு சுமையாக ஆனதற்கான காரணம், என்ன செய்வது இன்றைய போட்டி உலகில் இப்படியான ஒரு வாழ்க்கை முறை நமக்குள் திணிக்கப்பட்டுவிட்டது, அதன் தவறு அரசாங்கத்திடமா அல்லது தனிமனிதர்களிடமா என்பது விவாதத்திற்கு உரிய விஷ்யம்,

பெரும்பாலான மனிதர்கள் பிடித்தவேலையை விட கிடைத்த வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார்கள், அதன் வலி எல்லோரிடமும் இருக்கிறது, பிடித்த வேலையை ஆத்மார்தமாக செய்பவர்களுக்கு அதன் அங்கீகாரமும் பொருளும் கிடைப்பதில்லை, அதனால் அந்த சாராரும் திருப்தியாக இல்லை, இப்படி ஒரு பொருந்தாத வாழ்க்கை நமக்குள் திணிக்கப்பட்டிருந்தாலும், அதனை பிடித்துக்கொண்டு வாழ்க்கை வாழவேண்டுமே என்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இவைகளில் இருந்தெல்லாம் நம்மை காப்பாற்றி வருவது நமக்குள் அருளப்பட்டிருக்கும் மறதி என்கிற ஒரு தன்மைதான், அது சில நேரங்களில் நம் நல்ல விஷ்யங்களையும் மறந்து போக வைத்துவிடுகிறது, அந்த ஒரு நல்ல விஷ்யம்தான் நாமும் ஒரு நல்ல மனிதன் என்பது, எப்போதெல்லாம் மனதில் கோபமும் பொறாமையும் வருகிறதோ அப்போதெல்லாம் நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் மிகவும் நல்ல மனிதர், மிகவும் இரக்கமுள்ள மனிதர் என்பதை,

அது உங்களால் வர இருக்கும் ஒரு பெரிய இழப்பை தடுத்து நிறுத்தும்.

தவநெறிசெல்வன்