Dec 29, 2008

இந்திய - பாக் போர் வாய்ப்புகள்


இன்று ஏற்ப்பட்டுள்ள போர் பதட்டம் மிக முக்கியமான ஒரு சூழலை இந்திய பாகிஸ்தான் இடையே ஏற்ப்படுத்தியுள்ளது, இரண்டு நாடுகளும் தத்தம் எல்லைகளில் தனது ராணுவத்தை குவித்துக்கொண்டிருக்கின்றன, இதையெல்லாம் அமெரிக்க அரசு மிகவும் பொறுமையோடு இருக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது, இது ஒன்றும் சாதாரண விஷ்யமில்லை, நமக்கென்று ஒரு குணம் இருக்கிறது,

முன்பு இலங்கை பிரச்சினையில் நாம் தலையிட்டு நமது ராணுவம் மோசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டு இந்திய மண்ணில் வந்து இறங்கியபோது அப்போது முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் எனது தமிழ் மக்களை கொன்று மானபங்கப்படுத்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று ஒதுங்கி கொண்டது நினைவிருக்கலாம், அதன் பின் இந்திய தேசமும் இலங்கை பிரச்சினையில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டாலும் பின்னர் ராஜிவ் படுகொலை நடந்த பின் பெரும்பாலான இந்திய தமிழர்கள் அதோடு இலங்கையை மறந்தே போனார்கள், அதாவது அந்த பிரச்சினையால் நமக்கு வீண் தலைவலிதான் என்பதால் ஒதுங்கிகொள்வது என்று,

இப்படி ஒதுங்கிப்போன நிலை மாறி இப்போதுதான் பழய சூடு தொடங்கியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் நிலை வேறு எத்தனை முறை சூடுபட்டாலும் அவர்களால் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது. எத்தனை குண்டு வெடிப்புகள் தற்கொலைப்படை தாக்குதல்கள் என்று அந்தநாடு அல்லோகலப்பட்டாலும் அவர்கள் நம் நாட்டின் மீதான வெறுப்பை மாற்ற விரும்ப வில்லை.

இந்தியாவின் நிலை போரை தொடங்குவதில் ஆர்வமில்லை என்று கூறிக்கொண்டிருந்தாலும் இந்திய படைகள் எல்லைப்புறத்தை நோக்கி நகர்த்தப்படுவதாக செய்திகள் வருகின்றன தினசரிகளில், இதன் நோக்கம்தான் என்ன, ஒரு பயமுறுத்தல் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் போர் இப்போது வருமா வராதா என்பது ஒரு தொங்கி நிற்கும் கேள்வி,

என்னைப்பொருத்தவரை போர் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருப்பதாக நினைக்கிறேன், உலகின் இரு அணு ஆயுத நாடுகள் நேரடியாக போர் செய்ததாக இதுவரை வரலாறு இல்லை, இந்திய பாகிஸ்தான் போர் வருமானால் அது அணு ஆயுதபோராக மாற வாய்ப்பில்லாமல் இல்லை, இதில் வெற்றி தோல்வி என்பது அடுத்த விஷயம் ஆனால் அதனால் இழக்கப்போகிற இழப்பு ஈடு செய்யக்கூடியதா என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

இன்றைய பொருளாதார குழப்ப நிலையில் இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு தாக்கு பிடித்து வருகிறது, ஆனால் பாகிஸ்தான் பொருளாதாரம் கிட்டதட்ட மிக மோசமான நிலையில் எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிராகரிக்கப்பட்ட பின் இப்போது உலக வங்கி கொஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது அந்த பணம் வராமல் போனால் அந்த நாடு போர் இல்லாமலேயே உள்நாட்டு போரால் அழியக்கூடிய அபாயம் உள்ளது, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலைக்கு அரசு செல்லும் வாய்ப்பு இருப்பதாக பல்வேறு பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
இந்நிலையில் அந்த நாடும் போரை விரும்ப சாத்தியமே இல்லை, இப்போது அவர்கள் ஆப்கான் எல்லையில் இருந்து தனது துருப்புக்களை இந்திய எல்லைக்கு மாற்றி கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன அது அமெரிக்க நேட்டோ படைகளுக்கு மிக கெடுதலான விஷ்யமாகும், ஆப்கானிஸ்தானில் போரிட்டு கொண்டிருக்கும் நேட்டோ படைகளுக்கு உணவு ஆயுதம் எல்லாம் பாகிஸ்தான் வழியாகத்தான் சென்றாக வேண்டும் அந்த பகுதியில் நடைபெறும் தாலிபான் தாக்குதல்களால் அந்த சப்ளை வாகனங்கள் தொடர்ந்து தாக்கி அழிக்கப்படுகின்றன, அவைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் அப்பகுதியில் உள்ள தாலிபான் ஊடுருவல்களை தடுக்கவும் பாகிஸ்தான் படைகள் ஆப்கான் எல்லையில் அவசியம் அதனால் அமெரிக்க நேட்டோ நாடுகள் இந்த போர் நடந்தால் அது அவர்களின் பிரச்சினையாக பார்க்ககூடும்.

ஆனால் தாலிபான் தலைவர் முல்லா உமர் தனது சமிபத்திய செய்தி ஒன்றில் இந்திய போர் நடந்தால் அதில் தாலிபான்கள் பாகிஸ்தான் சார்பாக போர் புரிவார்கள் என்பது போல் கூறியுள்ளார், இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமில்லாத விஷ்யங்கள். ஒரு அரசு நாட்டின் வளர்சி மீது கவனம் செலுத்தாமல் வெறும் பக்கத்து நாட்டுடனான வெறுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை காலமாய் மாறி மாறி பிழைத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பாகிஸ்தானின் அரசுதான், அங்குள்ள அறிவு ஜீவிகள் எழுத்தாளர்கள் மற்றும் சமாதான விரும்பிகள் எல்லாம் அந்த நாட்டு மக்களை வழிநடத்தமுடியாமல் இருப்பதுதான் மிக கொடுமையான விஷயம், ஒரு வெறுப்பு என்பது இப்படி மறையாமல் 60 ஆண்டுகளுக்கு மேலாக வளர்கப்பட்டு புரிந்து கொள்ளாமல் விடப்பட்டுள்ளதுதான் இந்த சமுதாயம் செய்த தவறு,

பாகிஸ்தானுக்குள்ளேயே வடமேற்கு மாகாணம் கிட்டதட்ட தன்னை தனி நாடாகத்தான் நடத்தி கொண்டிருக்கிறது, அதுபோல் பலுசிஸ்த்தானும் கிட்டதட்ட தனிநாடு போல்தான் தனி வரி வசூல் நிர்வாகம் எல்லாம், பாகிஸ்தான் என்பது சிந்து மற்றும் மத்திய மகாணங்கள்தான் அங்கு மட்டும்தான் போலிஸ் அரசு எல்லாம் செல்லுபடியாகும், மற்ற மகாணங்களில் எல்லாம் ராணுவம் சென்றால்தான் கொஞ்சம் பேச்சை கேட்பார்கள் அப்படி இருக்கிற நிலையில் அவர்களுடனான போர் முடியும் போது கிட்டதட்ட அந்த நாடு சிறு சிறு துண்டுகளாக சிதறிவிட வாய்ப்பிருக்கிறது.

இதெல்லாம் தெரியாமல் இல்லை அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, இனி ஒரு போரை நிச்சயம் பாகிஸ்தான் தாங்காது, அவர்கள் வேண்டுமானால் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்று சொல்லிக்கொள்ளலாம், போர் நடத்த முதலில் பணம் வேண்டும் எங்கே இருக்கிறது பணம், இந்தியா தனது மிகப்பெரிய மக்கள் தொகையால் அதனை சரி செய்து கொள்ளும் ஆனால் பாகிஸ்தான்?

இப்போதைய இந்திய தேவை பாகிஸ்தானை நிர்பந்த படுத்துவதுதான், அதைதான் நமது நாடு செய்து கொண்டிருக்கிறது கூடவே இப்போது IMF டம் இருந்து பணம் பெற அதற்கு அமெரிக்காவின் சிபாரிசு தேவை ஆகையால் அவர்கள் சொல்வதை அது கேட்கும் எனவே நமது நாடு தொடர்ந்து அமெரிக்கா மூலமாக அழுத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்,

ஒரு அமைதி இழந்த அல்லது பொருமை இழந்த நிலையில் ஏதேனும் ஒரு பொறி எங்காவது தூண்டப்பட்டால் அது ஒரு மோசமான அழிவிற்கான போரை தொடங்கி வைத்த நிகழ்வாக மாறிவிடும் அது எந்த மாதிரியான நிகழ்வோடு முடியும் என்று சொல்வதற்கில்லை.

செல்வம்

Dec 28, 2008

புத்தக விழா

நீண்ட நாளாக எழுதாமல் இருந்துவிட்ட ஒரு இடைவெளி தோன்றுகிறது, கிழக்கு பதிப்பகம் தற்போது புத்தக கண்காட்சி வருகின்ற சூழலில் நிறைய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது, அதன் விழா ஒலிபதிவுகள் பத்ரியின் “எண்ணங்கள்” வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருக்கின்றன, எனது வலைப்பூவில் உள்ள தொடர்பின் மூலம் அதனை down load செய்து கொள்ளலாம்.

இலக்கியம் என்பது மிக மன நிம்மதி தரக்கூடிய விஷ்யம் என்பதும், இது போன்ற பேச்சுக்கள் மிகவும் உற்சாகம் தரக்கூடியதாகவும் இருக்கும். கிழக்கு பதிப்பகம் என்பது பா.ராகவன், பத்ரி மற்றும் பலர் நிறைந்த ஒரு எழுத்தாளர் குழுமம், பா.ராகவனின் எழுத்து நடை மிக உற்சாகமானது, டாலர் தேசம், 9/11, நிலமெல்லாம் ரத்தம் போன்ற மிக அற்புதமான புத்தகங்களை எழுதியவர், இப்போது குமுதம் ரிப்போர்டரில் “யுத்தம் சரணம்” என்று இலங்கையின் சம்பவங்களை எழுதி வருகிறார். சாருவும் தனது புத்தகங்களை இந்த புத்தக காட்சியில் வெளியிடுகிறார், உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் சொல்லுங்கள் புத்தகங்களை சென்று பார்த்து வாங்கி படிக்க.

ஒரு மிக அற்புதமான அனுபவம் இந்த புத்தகங்களை சென்று பார்ப்பது, எவ்வளவு துறைகளில் எவ்வளவு மனிதர்கள் தங்கள் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதும் அவைகள் நமக்கு எப்படியெல்லாம் உதவும் என்பதும் புரியும். நான் இந்தியாவில் இருக்கும் காலங்களில் புத்தக கண்காட்சிகளை விரும்பி சென்று பார்த்து பல புத்தகங்களை வாங்குவது வழக்கம். ஆகையால் எல்லோருக்கும் சொல்லுங்கள், வெறும் சமையல் புத்தகங்களையும் யோகா போன்ற உடற்பயிற்சி புத்தகங்களை மட்டுமே வாங்காமல் நல்ல இலக்க்கிய புத்தகங்களையும் வாங்குங்கள். எனது வலைப்பூவில் தமிழின் தலைசிறந்த 100 புத்தகங்கள் முந்தைய பதிவில் உள்ளது அதனை கூட முயன்று பாருங்கள்.

செல்வம்

Dec 18, 2008

உளறல்-13 (மனிதர்கள்)

ஒரு மனிதனின் அனுபவங்கள் மிக முக்கியமானவை, அதனைக்கொண்டேதான் அவன் தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறான், அனுபவமில்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனிதன் தடுக்கி விழுவதும் அது புதிய அனுபவமாக மாறுவதும்தான் அவனை வாழ்வின் எல்லா காலங்களிலும் எதிர்பாராத ஒன்றை எதிர்பார்க்க பழக்கி விட்டிருக்கிறது. நான் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் ஒரு வயதான பெரியவர் என்னிடம் கூறிய விஷயம் நான் வெகுநாள் கடைபிடித்தேன் அது ஒருவகை அனுபவ கொள்முதல் என்று சொல்லலாம்,

அவர் சொன்னார் தினசரி ஒரு புதிய மனிதனையாவது அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் அது உங்களின் பார்வையையும் அனுபவத்தையும் அதிகரிக்கும் என்று சொன்னார், புதிய மனிதன் நல்லவன் கெட்டவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடு இல்லாமல் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று சொன்னார், அதுமுதல் மாலை நேரங்களில் நானும் எனது நண்பர்கள் வைத்திருந்த கடைகளில் சென்று உட்காருவதை பழக்கிக்கொண்டேன், கடைக்கு வரும் மனிதர்கள் சிலரோடு அவ்வப்போது உரையாடுவது எனது நண்பர்களின் நண்பர்களை அறிமுகப்படுத்திக்கொள்வது என்று புதிய சுற்றம் உருவாக தொடங்கியது, ஆரம்பத்தில் எனது தங்குமிடத்தை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி நிகழ்சிகளிலேயே இருந்து வந்த எனக்கு அது புதிய வெளியாக தொடங்கியது, பலரை அறிமுகப்படுத்தியதன் மூலம் பல வழிகளில் பல உதவிகள் அனுபவங்கள் என்பன நம்மை அடைவது மறுக்கமுடியாதது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல குணங்கள் பல சூழல்களைப்பொருத்து வெளிப்படுகின்றன அதன் எல்லா அடிப்படை தேவையும் வாழ்வாதாரம்தான். தான் வாழ வேண்டிய கட்டாயம் மனிதனை வெவ்வேறு விதமாக தன்னை வெளிப்படுத்த வைக்கிறது, கடும் கோபம் பொறாமை,வன்மம், துரோகம் இப்படி பல விதமான உணர்வுகள் அவனிடமிருந்து வெளிப்படுகின்றன, இதெல்லாம் நீங்கள் மனிதர்களிடம் பழக பழக அதனை வெளிப்படுத்தாத மனநிலையில் ஒரு மனிதனை எப்படி எப்போதும் வைத்திருக்க முடியும் என்பதை உங்களுக்கு கற்றுத்தரும். அந்த உத்தி தெரிந்தவனே எல்லா நிலையிலும் சமாளிக்க தெரிந்தவனாகிறான். அது மனிதர்களை சந்திக்க சந்திக்க கூடும் என்பது உண்மை.

செல்வம்

Dec 10, 2008

உளறல் - 12 (நினைவுகள்)

தங்கர் பச்சனின் பள்ளிகூடம் பார்த்தபின் எனது பள்ளிக்கு சென்று காணவேண்டும் என்கிற ஆசை உண்டானது, அனேகமாக இது எல்லோருக்கும் தோன்றிய விஷ்யமாக இருக்கலாம், எனது பள்ளி வாழ்க்கை இரண்டு இடத்தில் என்பதால் எனது இரண்டு பள்ளிகளையும் காணவேண்டிய அவசியம் உள்ளது ஆனால் அது இன்னமும் நிறைவேறவில்லை.

சிலருக்கு பள்ளிகள் மாறிக்கொண்டே இருக்கும், காரணம் தந்தை தனது பணிமாற்றத்தால் அவ்வாறு நடைபெரும், பெரும்பாலானவர்கள் தனது பிள்ளகளின் கல்விக்காக குடும்பத்தை ஒரு இடத்திலும் தினசரி பயணித்து வேலைக்கு செல்பவர்களாகவும் இருப்பார்கள், அப்படி உள்ளவர்களின் குழந்தைகள் ஒரே இடத்தில் படிக்கும், எனக்கு கிட்டத்தட்ட 10 ம் வகுப்பு வரை ஒரே பள்ளியும் ஒரே ஊரும் அமைந்தது.

பள்ளி என்பது ஒரு சுகமான அனுபவமாக அதனைவிட்டு வெளியே வந்த பின் தான் உணரமுடியும், படிக்கும் காலங்களில் பெரும்பாலும் எப்போது விடுமுறை கிடைக்கும் என்கிற மனநிலையே இருந்து, ஆனால் இப்போது குழந்தைகளுக்கு இருக்கும் படிப்பு சுமைகள் அப்போது இல்லை, வீட்டுபாடம் என்பதுகூட அதிகம் எழுதி சென்றதாய் நினைவு இல்லை, அதிக நேரம் விளையாட்டு மைதானத்தில் கழிந்ததாக நினைவு. எனது வரலாற்று வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக கழிந்தன, மற்ற வகுப்புகள் அப்படி சென்றதாக நினைவு இல்லை, என்றாலும் கணிதம் மிகவும் கைவந்த கலையாக இருந்தது.

ஆசிரியர்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதை எப்போதும் இருக்கும், சைக்களில் எவ்வளவு வேகமாக வந்தாலும் எதிரில் ஒரு ஆசிரியர் வருவது கண்டால் உடனே நிறுத்தி இறங்கி அவருக்கு வணக்கம் தெரிவித்து அவர் கடந்து போனபின் தான் மீண்டும் சைக்கிளில் ஏறுவது வழக்கம் அது கிட்டதட்ட உடம்போடு ஊறிப்போன ஒரு செய்கை. அப்படி செய்யாவிட்டால் அவர் கோபிப்பார் என்றெல்லாம் எண்ணி செய்ததில்லை, இப்போதைய மாணவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை, இன்னும் முந்தைய காலங்களில் என்ன மாதிரி மரியாதைகள் இருந்தன என்று என்னை விட மூத்தவர்கள் எழுதவேண்டும்.

ஆசிரியர்கள் கற்று கொடுக்கும் சுவாரஸ்யத்தை பொருத்தே மிகவும் நேசிக்கப்பட்டார்கள், கடுமையான ஆசிரியர்களை கண்டால் மாணவர்களுக்கு பயம் மிக அதிகமாக இருக்கும். அவர்களின் வகுப்புகளில் மாணவர்கள் ஒரு கைதி போலோ அல்லது தற்காலிக மனநோயாளிபோலோதான் இருக்கவேண்டி இருந்தது. ஆனால் இப்போதைய சட்டங்கள் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கமுடியாமல் செய்து விட்டதால் ஒருவேளை மாணவர்களின் மரியாதை மாறிபோயிருக்கலாம்,

சைக்கிள் ஓட்ட பழகுவது பற்றி எழுத வேண்டும் என்று பல நாள் நினைத்தது உண்டு. சிறு வயதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எல்லோருக்கும் சைக்கிள் பழக்வேண்டிய சூழல் வந்துவிடும் இது ஒரு கட்டாய விஷயமாக அப்போது இருந்தது. இப்போது அது மோட்டார் சைக்கிள் கார் என்று மாறிவிட்டது,

சைக்கிள் ஓட்ட தருகிறேன் என்றால் அப்போது எவ்வளவு பெரிய வேலையானாலும் செய்ய காத்திருந்த காலம்.குரங்கு பெடல் என்று ஆரம்பித்து, பின்னர் கம்பிகளில் பயனித்து பின்னர் சீட்டுக்கு தாவி பின்னர் கேரியரில் அமர்ந்து கொண்டு ஓட்டுவது வரை ஒரு வளர்சி இருக்கும் அதன் பின்னர் டபுள்ஸ் டிரிபிள்ஸ் என்று தொடரும், குரங்கு பெடலில் யாராவது சைக்கள் ஓட்டிசெல்வதை பார்க்கும் போது சைக்கிள் ஒரு மாதிரி சாய்ந்த நிலையில் செல்வது போல் இருக்கும் அது ஒரு அற்புதமான அனுபவம். அந்த நேரத்தில் விழுகின்ற அடிகள் மிக மோசமானவை அதற்காக யாரும் மெதுவாக போனதாக நினைவு இல்லை, போடு போடுதான். அப்படி ஒரு வேகம்.

கம்பிக்கு மாறும் காலத்தில்தான் நிறைய பிரச்சினைகள் அடிகள் சற்று மோசமான இடங்களில் எல்லாம் விழும். அதிலிருந்து சீட்டிற்கு மாறும்போது கால் சற்று பெடலில் பட்டாமலும் பட்டும் மாறி மாறி இருக்கும் அப்போது பின்புறம் இருந்து பார்த்தால் ஓட்டுபனுடைய பின்புறம் படும் சிரமம் புரியும். நிறைய அடிபட்டால்தான் சைக்கிள் கற்றுக்கொள்ளமுடியும் என்று ஒரு சட்டமே இருந்தது, அது என்னவோ யாரோ எழுதிய தீர்ப்பு போல அடிபட்டாதான் கத்துக்க முடியும் தம்பி என்று சொல்வது ஒரு வாடிக்கையான சொல் அப்போது. கொஞ்சம் காசு கிடைத்தாலும் உடனே வாடகை கடைக்குபோய் சைக்கிள் எடுக்கவேண்டும், அந்த கடைக்காரர் ஏதோ ஒரு தீவிரவாதி போல நம்மை பார்ப்பார், காசு வைச்சிருக்கியா என்று கேட்டுவிட்டு அதையும் முன்னே பெற்றுக்கொண்டு இருப்பதிலேயே ஒரு பழய சைக்கிளை கொடுப்பார் அதுவும் சில பொருட்கள் இல்லாததாக இருக்கும், மணி, பெடல், போன்ற சாதனங்கள் இல்லாமல், அதுவும் இந்த பெடல் கட்டை இல்லாமல் அதன் மைய rod மட்டும் உள்ள சைக்கிளாய் இருந்தால் பெரும்பாடுதான், அதனை மிதிக்கும் போது வலி எடுக்கும் ஆனால் அதெல்லாம் அப்போது ஒரு பெரிய பொருட்டே இல்லை சைக்கிளை கொடுத்தாரே என்று ஒரு பெரிய நன்றி உணர்வுதான் வரும்.

சைக்கிள் அப்போது நம் வீட்டில் ஒரு மனிதர் போல இருந்தது, அதனை வீட்டு உறுப்பினர் போல மதித்தும் கழுவியும் துடைத்தும் ஆயுதபூஜை காலங்களில் அலங்கரித்தும் வைத்திருப்பது வழக்கம். அதெல்லாம் அடுத்த பதிவில் காணலாம்.

செல்வம்

Dec 6, 2008

உளறல்-11 மும்பை சம்பவம்


மும்பையில் நடந்த சம்பவங்களைப்பற்றி நிறைய கட்டுரைகள் ஆராட்சிகள் என வந்து கொண்டே இருக்கின்றன சோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை தாக்க வேண்டும் என்பது போன்றும் பல விதமான கருத்துக்கள் எல்லா திசையிலும் இருந்தும் வந்து கொண்டே இருக்கின்றன, அதிலும் பொடா போன்ற சில சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதும், மிக கடுமையான சட்டங்களை இயற்ற வில்லை கூடவே அரசியல்வாதிகள் தங்களின் ஓட்டு அரசியலால் ஒரு பாதுக்காப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தி விட்டார்கள் என்பதும், இன்னும் சில வலைபூக்கள் தீவிரவாதிகள் இந்துக்களின் காவிநிற கயிறு கட்டியிருந்தார்கள் எனவும் புதிய திசையில் சில வாதங்களை வைக்கிறார்கள், கீழே உள்ள தொடர்பில் காணலாம்,

http://kalaiy.blogspot.com/2008/12/blog-post_04.html

இவைகள் எல்லாம் அடிப்படையில்லாத வாதங்கள் என்பது புரியும், ஆனால் நடந்தது ஒரு மோசமான சம்பவம், அதனை முன்கூட்டியே நமது உளவுத்துறை கணிக்க தவறிவிட்டது, நமது நாட்டு அமைப்பில் இது மிகசிக்கலான விஷயம், எந்த கட்சியும் யார் மீது வேண்டுமானாலும் குறை சொல்லலாம், ஆனால் அவரவர் ஆட்சிகாலத்தில் அவர்கள் அப்படித்தான் நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குரியது,

உளவுத்துறை தனது இரு பிரிவுகளையும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே பெரிதும் பயன் படுத்துவதால் இது போன்ற சம்பவங்களை அவர்கள் முன்னறிவிக்க முடியாமல் போகிறது, சரியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் நிர்வாகம் அரசியல் சாராமல் நாட்டின் பாதுகாப்பு மட்டும் நோக்கமாக கொண்டு அதனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும், அது அரசியல் கண்காணிப்புகளால் தனது நேரத்தை வீணடிப்பதற்கு வாய்ப்பில்லாமல், தனது பணியை செய்ய அனுமதிக்கவேண்டும்,

பாகிஸ்தான் மீது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும், அது பி.ஜே.பி ஆட்சியின் போதும் தெரியும், அப்போது நடந்த கார்கில் போரில் எல்லைக்கோட்டை தாண்டாமல்தான் குண்டு வீச நம்மால் முடிந்தது, போர் நடக்கிறது, ஆளூம் அரசு பி.ஜே.பி ஆனால் எல்லைக்கோட்டை கடந்து நமது விமானங்கள் பறக்கவோ குண்டு வீசவோ முடியவில்லை, ஆனால் அந்த புரத்தில் இருந்து நமது tiger hill வரை அவர்களது ஆட்கள் ஊடுரூவி இருந்தார்கள்,

ஆகையால் எல்லா அரசுக்கும் எல்லா வகையிலும் இப்படி சில நெருக்கடிகள் இருக்கின்றன, உணர்சிவசப்பட்ட பேச்சுக்கள் எல்லா நிலையிலும் இருக்கின்றன, அதுவா இப்போதைய தேவை, இறந்து போன நமது வீரர்களுக்கு மரியாதைகள் செய்வதும் அதனை பெரிய சாதனைகளாக பேசி ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று பார்பதும் இப்போது அரசியல்வாதிகளின் நாடகங்கள் ஆகிவிட்டன.


எல்லா சம்பவங்களுக்கும் ஒரு எதிர் மறையான காரணத்தை கண்டு பிடிக்கிற சில அதி பயங்கர மதசார்பற்ற வாதிகளையும் கண்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இப்போதைய நடவடிக்கையாக திரு ப.சிதம்பரம் தனது அமைச்சகத்தில் நல்ல மாற்றங்களை உண்டு பண்ணுவார் என எதிர்பார்க்கலாம்,

மேலும் ஓட்டு அரசியல் வேறு இந்த பிரச்சினையில் முக்கிய பங்கு வகிக்கிறது, முஸ்லீம்களின் ஓட்டு போய்விடுமோ என்கிற பயம் காரணமாக அரசியல் கட்சிகள் மிகவும் மிதமான போக்கை தீவிரவாதிகளிடம் கடைபிடிப்பது மிகவும் அருவருக்கதக்கது,

பாகிஸ்தானோடு எல்லா உறவுகளையும் மீண்டும் மீண்டும் புதிப்பிக்கவேண்டிய அவசியம் என்ன, வாஜ்பாயி பஸ் விட்டார், மன்மோகன்சிங் ரயில் விட்டார் இப்படி கொஞ்சி குலாவ இரு கட்சிகளுமே முயன்று விட்டு, மற்றவரை குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது, ஒரு சரியான உத்திரவாதம் வரும்வரை எல்லா உறவுகளையும் நிறுத்துங்கள், சார்க் போன்ற கூட்டணிகளில் இருந்து விலக்குங்கள் அல்லது விலகுங்கள், எந்த முக்கியத்துவம் இல்லாத கடுமையான அரசியல் நெருக்கடிகளை உண்டாக்குங்கள்,

அதேநேரம் எல்லா வகையிலும் நமது நாட்டின் உளவுப்பிரிவை மிக பரவலான முறையில் கடுமையாக்குங்கள், எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாத ஒரு தினசரி ஆலோசனைகளின் மூலம் புதிய திட்டங்களை வகுக்கவேண்டும்,

அவைகள் நடக்கும் என்று எதிர்பார்போம், புதிய அமைச்சர் அதனை செய்வதாக கூறியுள்ளார் உளவு பிரிவுகளின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது ஒருவகையில் அதன்மீதான அணுகுமுறை அதிக முனைப்போடு இருக்கும் என்பதை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

இனியாவது நமது அப்பாவி மக்களின் உயிர்கள் மதிக்கப்படவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

துணுக்குகள்

நல்ல முடிவுகள்,அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால்
அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

ஒரு நொடி துணிந்தால்
இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும்
துணிந்தால் நாம்
ஜெயித்து விடலாம்.

மிகவும் நேர்மையாக
இருக்காதீர்கள்;
ஏனெனில் நேரான மரங்கள்
முதலில் வெட்டப்படும்;

நேர்மையானவர்களே
முதலில்
பழிதூற்றப்படுவார்கள்.

கொஞ்சம் வளைந்து
கொடுங்கள். வாழ்க்கை,
லகுவாய் இருக்கும்.

நர்சரி பள்ளி ஒன்றின்
உணவறையில் ஒரு கூடை
நிறைய ஆப்பிள்கள்
வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல்,
"ஒன்றுக்கு மேல்
எடுக்காதீர்கள்;
கடவுள்
பார்த்துக்கொண்டிருக்கிறார்"
என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு
பெட்டி நிறைய
சாக்லேட்டுகள்
வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட்

பெட்டியின் மீது ஒரு
குழந்தை பின்வருமாறு
எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ
எடுத்துக்கொள்ளுங்கள்;
கடவுள், ஆப்பிளைப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்!'