Dec 18, 2008

உளறல்-13 (மனிதர்கள்)

ஒரு மனிதனின் அனுபவங்கள் மிக முக்கியமானவை, அதனைக்கொண்டேதான் அவன் தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறான், அனுபவமில்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனிதன் தடுக்கி விழுவதும் அது புதிய அனுபவமாக மாறுவதும்தான் அவனை வாழ்வின் எல்லா காலங்களிலும் எதிர்பாராத ஒன்றை எதிர்பார்க்க பழக்கி விட்டிருக்கிறது. நான் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் ஒரு வயதான பெரியவர் என்னிடம் கூறிய விஷயம் நான் வெகுநாள் கடைபிடித்தேன் அது ஒருவகை அனுபவ கொள்முதல் என்று சொல்லலாம்,

அவர் சொன்னார் தினசரி ஒரு புதிய மனிதனையாவது அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் அது உங்களின் பார்வையையும் அனுபவத்தையும் அதிகரிக்கும் என்று சொன்னார், புதிய மனிதன் நல்லவன் கெட்டவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடு இல்லாமல் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று சொன்னார், அதுமுதல் மாலை நேரங்களில் நானும் எனது நண்பர்கள் வைத்திருந்த கடைகளில் சென்று உட்காருவதை பழக்கிக்கொண்டேன், கடைக்கு வரும் மனிதர்கள் சிலரோடு அவ்வப்போது உரையாடுவது எனது நண்பர்களின் நண்பர்களை அறிமுகப்படுத்திக்கொள்வது என்று புதிய சுற்றம் உருவாக தொடங்கியது, ஆரம்பத்தில் எனது தங்குமிடத்தை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி நிகழ்சிகளிலேயே இருந்து வந்த எனக்கு அது புதிய வெளியாக தொடங்கியது, பலரை அறிமுகப்படுத்தியதன் மூலம் பல வழிகளில் பல உதவிகள் அனுபவங்கள் என்பன நம்மை அடைவது மறுக்கமுடியாதது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல குணங்கள் பல சூழல்களைப்பொருத்து வெளிப்படுகின்றன அதன் எல்லா அடிப்படை தேவையும் வாழ்வாதாரம்தான். தான் வாழ வேண்டிய கட்டாயம் மனிதனை வெவ்வேறு விதமாக தன்னை வெளிப்படுத்த வைக்கிறது, கடும் கோபம் பொறாமை,வன்மம், துரோகம் இப்படி பல விதமான உணர்வுகள் அவனிடமிருந்து வெளிப்படுகின்றன, இதெல்லாம் நீங்கள் மனிதர்களிடம் பழக பழக அதனை வெளிப்படுத்தாத மனநிலையில் ஒரு மனிதனை எப்படி எப்போதும் வைத்திருக்க முடியும் என்பதை உங்களுக்கு கற்றுத்தரும். அந்த உத்தி தெரிந்தவனே எல்லா நிலையிலும் சமாளிக்க தெரிந்தவனாகிறான். அது மனிதர்களை சந்திக்க சந்திக்க கூடும் என்பது உண்மை.

செல்வம்

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்