Mar 26, 2011

முருகா.


திரு. பிரபு, ஒரு மெக்கானிகல் இஞ்சினியர், உண்மையான தெய்வ பக்தியும் சிறந்த குண நலங்களும் உள்ள மனிதர் அவர் எழுதிய ஒரு பிரார்த்தனைப்பாடல் இங்கே. இறையருள் கிட்ட ஓதி மகிழலாம்.

உடற் பிணிகால், ஓம் காரனை உருகி அளத்தவை


கொற்றவன் குருபரன்
பெற்றவன் மானிடன்
உற்றவன் விளைபயன்
நிற்றவன் நான்பதர்
பற்றிய செய்கையெலாம்
பயனது பாவமானால்,
அற்றவை செய்யுங்கால்,
அறம் நீ
கருத்தில் கொளாதொழிந்ததேன்?
சிறியவன் நானுற்றது,
வினை விளை பயனே!

கொற்றவா உனை-அழைக்கும்
திறன்கால் நிற்றவன் நீ
ஏற்றது என் செய்வாய்?-எனை
தேற்ற வா முருகா . . .
உருகி நான் நிற்கிறேன்,
நற்றவை செய்தொழுக ...
உற்றவா உந்துணை கொள்கிறேன்,

பெற்றவன் நீ குரு ...
பொறுப்பது உன் கடன்
பிள்ளையென்றன்பாய் பிரியமளித்து,
தஞ்சமடைந்த அடியேனுக்கு
அருள் செய் முருகா . . .


by.முருகனடிமை பிரபு . . .

Mar 23, 2011

தமிழக தேர்தல் 2011


தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி, கட்சிகள் கூட்டணி நாடகங்கள் முடிந்து பிரச்சாரங்களுக்கு தயாராகிவிட்டன. நீண்ட அரசியல் ஆர்வம் உள்ள யாவருக்கும் இந்த தேர்தல் ஒரு திருவிழாதான். இந்தியாவில் எனக்கு பிடித்த கொண்டாட்டம் என்ன என்று கேட்டால் அது தேர்தல் என்றுதான் நான் சொல்லுவேன்.

காரணங்கள், பல பெரிய சிறிய மனிதர்கள் என்றில்லாமல் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு கடமையும் நினைவு கூறப்படுகிற காலம். ஓவ்வொருவரும் சில மணித்துளிகளாவது நாட்டைப்பற்றி நினைக்கின்ற காலம். ஊரெல்லாம் வண்ண தோரணங்கள், வாணவேடிக்கைகள், பலரின் நிஜ முகங்களை கிழித்துப்போடும் பொது கூட்டங்கள். ஊர்வலங்கள். என்று மொத்த நாடுமே உற்சாகத்தில் திகழும் ஒரு சுகம் இப்போதுதான்.
முக்கியமாக தொலைக்காட்சி பெட்டிகள் மக்களை வீட்டுகுள்ளேயே கட்டிப்போட முடியாத ஒரு விழா, மற்ற விழாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மனிதர்களை வெளியே வரமுடியாமல் கட்டிப்போட இந்த நாட்களில் தொலைக்காட்சிகளால் முடியவில்லை. காரணம் தேர்தலின் பொருட்டு அவைகள் செய்யும் விளம்பரங்கள் பல நாட்களாய் தொடர்வதால் மக்கள் அதில் அலுத்துப்போய் விடுகிறார்கள்.

ஆனால் இப்போதைய தேர்தல் தேர்தல் எனக்கு கொஞ்சம் ஆர்வமில்லாமல்தான் இருக்கிறது. மிகுந்த காரணங்கள் உண்டு. கட்சிகளிடையே பொங்கி எழுந்திருக்கும் சந்தர்ப்பவாதம், பேரங்கள்,தேர்தலுக்காக மட்டும் கூட்டு என்ற புதிய சித்தாந்ததங்கள், ஊழலில் பொங்கி திளைத்து கிடப்பவர்கள் எல்லாம் ஊழல் என்றால் என்ன என்பது மாதிரி ஒரு அப்பாவியான முகத்தோடு உலாவரும் கொடூரம். நம் பிரதமர் கூட இப்படி ஆகிவிட்டாரே என்று ஒரு ஆதங்கம்.

நல்லவேளையாக உச்சநீதிமன்றம் சிறப்பாக செயல்படுகிறது என்பதால் கேள்வி கேட்க ஆளிருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல்.

சரி தேர்தலுக்கு வருவோம். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கலாம் என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாக எல்லாரிடமும் இருக்கும். எனக்கு அதற்கான பதில் சுலபமாக தெரியும். திருமங்கலம் தேர்தல் போல் நடந்தால் திமுக கூட்டணி ஜெயிக்கும், அல்லது அப்படி இல்லாமல் இருந்தால் அதிமுக கூட்டணி ஜெயிக்கும். ஆனாலும் வைகோவை இழந்தது அதிமுகவிற்கு இருவகையான இழப்பு, ஒன்று கூட்டணி மற்றும் பிரச்சார பலம் குறைந்துவிட்டது, இரண்டு வைகோவை ஏமாற்றிய ஒரு மோசமான சந்தர்ப்பாவதியாக ஜெ. என்னைப்போன்றவருக்கு தெரிவது.

இதில் தேர்தல் கமிஷனின் பணி பாராட்டக்குரியது என்றுதான் தோன்றுகிறது. காரணம் திமுக தலைவர் கமிஷனை கண்டிக்கிறார் என்றால் அவர்கள் சரியாக வேலை செய்கிறார்கள் என்றுதான் பொருள். ஆகையால் இறுதிவரை அவர்கள் அவ்வாறு செயல்பட வேண்டும் நடுநிலைமையோடு என்று எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.

சரி இதில் கட்சிகள் கூட்டு சேர்ந்திருக்கிற நிலையை பார்க்கும்போது வருகிற சட்டசபை ஒரு தொங்கு சட்டசபையாகத்தான் இருக்கும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதிமுக அணி வெற்றி பெற்றால் அது முழு மந்திரிசபை அமைக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது காரணம் 160 இடங்களில் அவர்கள் போட்டி இடுவதுதான். திமுக தலைவரின் தேர்தல் கணக்கு என்னவென்று புரியவில்லை, பல கணக்குகளை மாற்றும் திட்டங்களை வைத்திருக்க கூடும், கடுமையான அனுபவக்கூட்டணி திமுக அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதிமுக அணியில் காலத்தில் முடிவு எடுக்க முடியாத இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளதால் இது பலவகைகளில் இன்னல்களை கொடுக்கும், தேமுதிக கூட பண்ருட்டியாரை இரண்டாம் இடத்தில் வைத்து கொஞ்சம் அரசியல் காய்களை நகர்த்துகிறது என்பது தெளிவு, இப்போது அதிமுக அணி ஒரு பலம் பொருந்திய அணி போல காணப்படுவது உண்மை ஆனால் அதன் அனுபவ குறைவு திமுகவுக்கு மிகவும் சாதகமான சூழலை உண்டாக்கும்.

சரி மக்களின் மனநிலை எப்படி என்றால் சிறிய உதாரணம் திமுக தலைவர் சென்னை விட்டு திருவாரூருக்கு போனதும், தளபதி ஆயிரம் விளக்கு விட்டு குளத்தூருக்கு போனதும் ஒரு உதாரணம், 5 ஆண்டுகள் பொற்கால ஆட்சி என்று சொல்லும் தலைவர்களே தாங்கள் போட்டி இட்ட தொகுதிகளில் போட்டி இட முடியாத நிலை இருப்பது மக்களின் மனநிலையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

கிராமப் புறங்களில் இந்த பாதிப்புகள் இல்லாமல், இலவச தொலைக்காட்சி பெட்டியும், 108 சேவையும் சமையல் வாயு இணைப்பும் தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஆளும்கட்சி இருப்பதுதான் சோகம், இன்றைய ஊடகங்கள் நகரங்கள் அளவுக்கு செய்திகளை கிராமங்கள் தோறும் பரப்புகின்றன என்பது கவனிக்கவேண்டியது. 5 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்த தலைவர்கள் இப்படி ஒரு நிலைக்கு ஆளானதற்காக சோற்றால் அடித்த பிண்டங்களான தமிழ் மக்கள் விரைவில் திமுக தலைவரின் வாயால் திட்டு வாங்க போகிறார்களா அல்லது வாழ்த்து பெறப்போகிறார்களா என்பதை மே 13 க்கு பிறகுதான் தெரியும்.

இந்த தேர்தலின் பிரச்சார நாட்களை 17 நாட்களாக தேர்தல் கமிஷன் குறைத்திருப்பது ஒரு வித்தியாசமான மாற்றம், இது பல சட்டவிரோத பிரச்சினைகளுக்கு வாய்ப்புகளை குறைக்கும். என்றே தோன்றுகிறது. இதெல்லாம் திமுக தலைவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்காத விஷயம். மற்றும் கடுமையான சோதனைகளால் பணம் புழக்கம் கட்டுப்படுத்தப்படுவதும் ஒரு வகையில் இந்த தேர்தலின் திசையை தீர்மானிக்கும் காரணிகளாகும்.

போகப்போக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

Mar 22, 2011

ஜப்பான் அணு விபத்து கொஞ்சம் விளக்கமாக.


புக்குஷிமா தய் இச்சி அணுமின் நிலையம்

(படங்கள் விக்கீபிடியாவிலிருந்து)மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் ஜப்பான் புக்குஷிமா நகரில் உள்ள தய் இச்சி அணுமின் நிலையத்தில் உள்ள BWR அதாவது Boiling water Reactor. இது ஒரு கனமான காங்ரீட் கட்டிடம், இதன் அளவு என்ன என்பதற்கு ஒரு சிறிய ஓப்புமை. அதாவது எண் 5 குறிக்கப்பட்டுள்ள இடம் மட்டும் 40 அடி நீளம் 40 அடி அகலம் உள்ளது சுமார் 35 அடி உயரம் உள்ளது. அப்படியானால் மொத்த அணு உலையின் நீள அகலம் எவ்வளவு பிரமாண்டமாய் இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.
இதில் எண் 21, 10, 20, 2, இவையெல்லாம் கடுமையான காங்ரீட் சுவர்கள் இவைகளின் கனம் சுமார் 1 மீட்டர் வரை இருக்கும்(சரியான அளவு தெரியவில்லை). எண் 11 ஆரஞ்சு நிறத்தில் உள்ள இருப்புத்தகடு அதுவும் மிகுந்த கனம் உள்ளது. இந்த கனமான அமைப்புகள் அதிலிருந்து வரும் அணு அலைகளை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. இதில் வெடி விபத்து ஏற்பட்டது எண் 22, 26 அமைந்துள்ள மேற்கூரை பகுதியில்தான், எண் 22, 26 அணு உலைகளில் யுரேனியம் அல்லது அதுபோன்ற அணு உருளைகளை கையாளும் கிரேன் உள்ள பகுதி. மேற்பகுதியில் ஏற்பட்ட வெப்பநில்நிலை அதிகரிப்பால் அந்த வெடிப்பு நிகழ்ந்தது.
இங்கே ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஜப்பானியர்கள் தொழில் பாதுகாப்பு முறைகளில் மிக கவனம் உள்ளவர்கள் கூடவே மனிதர்களின் ஆரோக்கியத்திலும் மிக கவனம் உள்ளவர்கள், ஆகையால் தங்களின் பாதுகாப்பு அரண்களை எந்த அளவுக்கு செய்திருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
பிரச்சினை எங்கே.

மேலே உள்ளப்படத்தில் மூன்று இடங்களில் அணுக்கதிர் உருளைகள் பாதுகாக்கப்படுகின்றன. எண் 3ல் புதிய அணு உருளைகள், எண் 1ல் செயல்பாட்டில் உள்ள உருளைகள் அவைகள்தான் வெப்ப உற்பத்தியில் இருக்கின்றன. எண் 27ல் பயன்படுத்தப்பட்டு சொற்ப அணு கதிர்வீச்சு உள்ள உருளைகள் (spent fuel rod).

சரி இந்த அணு உலைகள் எப்படி செயல்படுகின்றன என்று பார்ப்போம். இந்த அணு கதிர் உருவாக்கும் உருளைகளை உலைகளுக்குள் வைத்து சிறிய அணுவைக்கொண்டு அதில் அணு கதிர் வீச்சை உருவாக்குகிறார்கள், அதன் பெயர் ஆங்கிலத்தில் chain reaction அதாவது அதில் இருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் அடுத்த அணுக்களைத்தாக்கும்பொது அது மேன்மேலும் அது சங்கிலித்தொடர்போல போய்க்கொண்டே இருக்கும் அந்த கலத்தின் உள்ளே அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோழிய இந்த தொடர்ச்சி நிற்காது. இந்த சூழலில் மிக அதிகமான வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தை தண்ணீரை சூடாக்க உபயோகப்படுத்தி நீராவியாக்கி அந்த நீராவி மூலம் மின் உற்பத்தி செய்கிறார்கள்.

இந்த அணு உருளைகளின் அணுக்களை கட்டுப்படுத்த எண் 39 கட்டுப்படுத்தும் உருளைகள் என்கிற control rod உள் செலுத்தப்பட்டுகின்றன, இதனால் அணு உலையின் செயல் நிறுத்தப்படும். காரணம் இந்த control rod என்பது உலைக்குள் இருக்கும் அணுக்களை தனக்குள் கவர்ந்துகொள்ளும் பண்பு வாய்ந்தது, அதனால் chain reaction நடைபெறுவது தவிர்க்கப்படுகிறது. பூகம்பம் வந்த அன்று இந்த கட்டுப்படுத்தும் உருளைகள் தானியங்கி கருவி மூலம் சரியாக செயல்பட்டு அணு உலை செயல்பாட்டை கட்டுப்படுத்திவிட்டன. ஆனாலும் வெப்பம் அதிகரிக்க காரணம்.

1.பக்கத்தில் எண் 5 ல் உள்ள எண் 27ல் பாதுகாக்கப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட உருளைகள் இருந்த தொட்டியின் தண்ணீர் அளவு குறைந்து அது தீ பிடித்தது.
2.மொத்த அணுமின் நிலையமும் மின் வெட்டு ஏற்பட்டு பிரதான அணு உலையின் குளிர்விக்கும் சாதனம், பம்புகள் செயல்பட முடியாமல் போனது.

சாதாரணமாக மின் வெட்டு ஏற்பட்டால் டீசல் ஜெனரேட்டர் செயல்பட்டு குளிர்விக்கும் பம்புகளை செயல்படுத்தும், அதுவும் தீர்ந்து போனால். பாட்டரிகள் செயல்ப்பட்டு 8 மணி நேரத்திற்கு பம்புகளை செயல்படுத்தும்.ஜப்பானில் பழய அனுபவங்களின்படி மின் வெட்டு பூகம்பங்களினால் ஏற்படும்போது அதனை சரி செய்ய சில மணிநேரங்களே ஆகும் அதனை கணக்கில் கொண்டுதான் இந்த கால அளவுக்குள் எல்லா அவசர அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் அதனைத்தொடர்ந்த சுனாமியும் ஜப்பான் கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் வந்ததுதான். ஜப்பானின் கட்டிடங்கள் மற்றும் பல அமைப்புகள் சுமார் 7 ரிக்டர் அளவு பூகம்பத்திற்கு தாங்க கூடியதாக கட்டமைக்க பட்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் 9 ரிக்டர் அளவில் வந்ததும், கூடவே சுனாமியும்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

இப்போது கடல்நீரைக்கொண்டு தற்காலிகமாக தீயணைப்பு எந்திரங்களாலும் ராணுவ ஹெலிக்காப்டர்களாலும் தண்ணீர் கொட்டி குளிர்விக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நேற்றைய நிலவரப்படி மின் நிலையம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வரும் நாட்களில் குளிர்விக்கும் பம்புகள் இயங்கத்தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அதன் பின் ஒரு பாதுகாப்பான நிலைவரும். அதுவரை எதுவும் சொல்வதற்கில்லை.

அதற்குள் ஏற்பட்ட அணுக்கசிவால் உணவுப்பொருட்கள், மற்றும் தண்ணீர் போன்றவற்றில் அணு கதிர்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மிகவும் ஒரு பாதுகாப்பற்ற நிலைதான் இவ்வளவும்.

Mar 18, 2011

ஜப்பானில் இன்றைய நிலமை(18/3/2011)

இன்றுகாலை முதல், பாதிக்கப்பட்ட அணுமின்நிலையத்தில் எமர்ஜென்சி டீசல் மின் உற்பத்தி இயந்திரம் செயல்படத்தொடங்கிவிட்டது. அதனால் தண்ணீர் மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள் மெல்ல செயல்படத்தொடங்கும், ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வரத்தொடங்குவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் நிச்சயம் இந்த முன்னேற்றம் ஒரு நல்ல அறிகுறிதான்.

ஆனால் உலகத்தில் அதிக வயதானவர்கள் உள்ள தேசம் என்பதால், இந்த நிலைமையில் அவர்களை பாதுகாப்பது மிக சிரமாக இருக்கிறது. பலர் காலநிலை மோசம் மற்றும் நல்ல இருப்பிடம் இல்லததால் மரணமடைந்திருக்கிறார்கள்.

Mar 17, 2011

ஜப்பானில் நடப்பதென்ன? ஒரு எளிமையான விளக்கம்.


இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அணு உலைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளால் அணு உலைகளை குளிர்விக்கும் அமைப்பு செயல்படவில்லை, கூடவே சாதாரணமாக அணுமின்சாரம் தயாரிக்க உதவும் கதிர் இயக்க பொருளான யுரேனியம் உருளைகள் எப்போதும் நீரின் அடியிலேயே பாதுகாக்கவேண்டும். அல்லது அது வெளியில் தெரியத்தொடங்கினால் அது உருகத்தொடங்கிவிடும். அந்த உருகுவது என்பது மிக மோசமான ஒரு விளைவு. பல அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம். அப்போது ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமான ஒரு அழிவைக்கொடுக்கும்.

அந்த உருளைகள் இருக்கும் ரீயாக்டர் என்கிற கொதிகலனை குளிர்விக்க பல முறைகளை தொடர்ந்து செயல்படுத்திப்பார்த்தும் ஓன்றும் நடைபெறவில்லை,இன்னும் அதன் வெப்பத்தை தணிக்க முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று புரியவில்லை. கடல் நீரை கொண்டும், ஹெலிக்காப்டர் மூலமும் தண்ணீர் கொட்டிப்பார்க்கிறார்கள் ஓன்றும் வெற்றிப்பெற்றதாக தெரியவில்லை, ஆகையால் ஒரு பெரிய விளைவை எதிர்பார்த்து உலகமே பயந்து போய் இருக்கிறது என்பதுதான் உண்மை.

இங்கே மனித முயற்சி தாண்டிய இரு விஷயம் நடைபெறவேண்டுமோ என்று தோன்றுகிறது.

Mar 12, 2011

ஜப்பானில் பயங்கர சூழல்ஜப்பானில் பயங்கர சூழல் பூகம்பங்கள், சுனாமி, அணுமின்நிலையம் வெடித்தது இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன, நண்பர் முருகவேல் அங்கிருக்கிறார், நேற்று தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை. எங்கும் மின்சாரம் இல்லை, இன்று காலை மீண்டும் தொடர்பு கொண்டேன் தொடர்பு கிடைத்தது. அவர் போனில் சொன்னது அப்படியே.

நான் 25ம் மாடியில் இருந்தேன் பூகம்பம் தொடங்கியவுடன் பக்கத்து கட்டடங்கள் சினிமாவில் ஆடுவதுபோல் ஆடத்தொடங்கின, முதலில் வழக்கமான சின்ன பூகம்பம் என்று நினைத்து சிர்த்துக்கொண்டிருந்த ஜப்பானியர்கள் ஆட்டம் அதிகமாக தொடங்கியதும் புரியாமல் பதற்றத்துடன் அழத்தொடங்கி இருந்தனர், நானும் எனது நண்பரும் அடுத்த 5ம் நிமிடத்தில் தரைத்தளத்தை எட்டி இருந்தோம் வரும் வழியெல்லாம் மனிதர்கள் புரியாமலும் செய்வதறியாமலும் ஓடிக்கொண்டிருந்தனர்.எனக்கு ஓடி வந்த ஓட்டத்தில் காலெல்லாம் பயங்கர வலி. 15 கிமீ நடந்தே வீடு வந்தேன். நான் இருப்பது டோக்கியோ என்பதால் சுனாமி தாக்குதல் பகுதியில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவு என்பதால் வெள்ள பாதிப்பு இல்லை.
இன்று காலை கடைகளில் உணவுப்பொருட்கள் எதுவும் இல்லை, இன்று காலை கடுமையான வெடிசப்தத்துடன் ஒரு அணுமின் நிலையம் வெடித்துள்ளது. என்ன நடக்கும் என்று புரியவில்லை. என்றாலும் இன்று மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணையம் செயல்படத்தொடங்கி இருக்கிறது.

வீட்டில் இருந்த அரிசியை மின் அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டதாகவும், இந்தியர்கள் நாளை முதல் விமானசேவை மீண்டும் தொடங்குவதால் நாட்டுக்கு திரும்ப முயல்வதாகவும் கூறினார்.

Mar 7, 2011

பின் நவினத்துவம் பற்றிய ஒரு விளக்கம்.

எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியது.

1) பின்னவீனத்துவம் ஒரு பொருளை,கருத்தை நேர்க்கோட்டில் விளக்கிச் சொல்லாது.2) ஆசிரியர் ஒரு பொருளைப் பற்றி எழுதுகிறார்.அதை அவருடைய சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறார்.வாசகரும் அவ்வாறே அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளலாம்.3) ஒவ்வொருவரும் தனது எண்ணங்களுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ளமுடியும் என்பதால்,ஆசிரியர் ஒரு படைப்பை வெளியிட்டவுடன் அவருக்கே அதன் மீதான உரிமை போய்விடுகிறது.அந்தப் படைப்பு சமூகத்திற்கானதாகி விடுகிறது.