Jan 20, 2010

நீண்ட இடைவெளிக்க்குபிறகு

நீண்ட இடைவெளிக்க்குபிறகு இதை எழுதுகிறேன், பல வேலைகளுக்குகிடையில் நேரமின்மை காரணம் மற்றும் பல்வேறு பயணங்கள், பல்வேறு முயற்சிகள் என்று நிகழ்ந்து விட்ட நிலையில் எழுத்து சற்று தூரத்தில் இருந்து விட்டதாக உணர்கிறேன்.

சென்னை புத்தக கண்காட்சி முடிந்து விட்ட நிலையில் பல எழுத்தாளர்களின் நேரடி சந்திப்புகளையும், பல வாசகர்களின் நேரடி சந்திப்புகளையும் பற்றிய கட்டுரைகள் பல வந்து கொண்டிருக்கின்றன, அவைகளின் சுவாரஸ்யங்களுக்கு இடையில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்குமான மன வேறுபாடுகள் மிக உச்சத்தை அடைந்து ஒரு பெரிய இலக்கிய சண்டையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

சாரு தொடங்கி வைத்த இந்த விளையாட்டு இருவரின் எழுத்துப்போராக மாறிவிட்டிருக்கிறது, அவரவர் தளங்களில் அதற்கான வாசகர்கள் இன்னும் தூபம் போடும் பணிகளை செய்கிறார்கள், அதனை எழுத்தாளர்களும் ஊக்குவிகிறார்கள்,
இங்கே வாசகர்கள் கவனிக்க வேண்டியது அதனில் கிடைக்கும் இலக்கிய சுவையைத்தான், அதை விட்டு சண்டையை பெரிதாக்குகிற வேலையை அல்ல.

மனுஷ்ய புத்திரன் ஜெயமோகனுக்கு எழுதியுள்ள ஒரு பதில் கட்டுரை சாரு தனது தளத்தில் வெளியிட்டிருக்கிறார், அதில் அமைந்துள்ள மேன்மையான மொழியின் வீச்சை கவனியுங்கள் அதைத்தாண்டி அதில் இருக்கும் மனுஷ்யபுத்திரன் என்கிற உயர்ந்த மனிதனையும் காணலாம்.

விலைவாசி உயர்வு மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது, கூடவே வருகின்ற இடைத்தேர்தலில் எல்லாம் திமுக கூட்டணி தான் கண்டுபிடித்து வைத்திருக்கிற புதிய பார்முலா மூலம் வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறது, அதிமுக கிட்டதட்ட செயல்படாத ஒரு இயக்கமாக தெரிகிறது, என்னதான் மக்கள் பிரச்சினை இமாலய அளவு இருந்தாலும் அதனை பயன்படுத்தி ஒரு போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் செய்து காட்டி திமுக அரசை பயமுறுத்தும் எந்த முயற்சியும் எடுக்காமல் ஜெயலலிதா இருப்பது எதனால் என்று தெரியவில்லை.

மத்தியிலும் பாஜக தனது வல்லமையை இழந்து தேய்ந்து கொண்டிருக்கிறது, இது ஆரோக்கியமான அரசியலாக எனக்கு தோன்றவில்லை, எங்கு பார்த்தாலும் விலை ஏற்றம் அதன் பாதிப்பு எங்கு கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை, தங்கம் வானத்தில் பறக்கிறது, ஒருவேளை இந்த ஏற்றம் 150 டாலர் வரை போய் பின்னர் வேகமாக கீழிறங்கிய பெட்ரோலிய எண்ணையைப்போல் இருந்தால் மிகவும் பிரச்சினைதான். ஆகையால் தங்கத்தின் நிலை என்ன ஆகுமோ.

வானிலை பிரச்சினைகள் மிக அதிகமாக மாறிக்கொண்டிருக்கின்றன, ஐரோப்பாவில் மிகவும் கொடூரமான பனி பொழிவு வாட்டுகிறது இதற்கெல்லாம் காரணம் என்று நம்மைதான் குற்றம் சாட்டுகின்றனர், கோபன்ஹேகனில் நடந்த மாநாட்டில் இந்தியாவையும் சீனாவையும் பிரேசிலையும் பிடித்து நெருக்கி பார்த்தார்கள் அதன் விளைவாக இந்தியாவில் சூரிய மின் உற்பத்தியை அதிகப்படுத்த மன்மோகன்சிங் முயற்சிப்பது தெரிகிறது, எல்லார்வீட்டு மொட்டை மாடியிலும் விரைவில் சோலார் பாட்டரிகள் உருவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நிறைய விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன, முக்கியமாக தஞ்சை மாவட்டத்தில் இது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், இதனால் உணவு உற்பத்தி மிகவும் மோசமான ஒரு நிலைக்கு போகவேண்டிவரலாம், புதிய விளைநிலங்களை உருவாக்கும் வகையில் அரசு திட்டங்கள் ஏதும் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை, புதிய புறவழிச்சாலைகளை அமைக்கும் போது கூடவே அந்த பகுதிகளில் விவசாயம் செய்து வந்த இடங்கள் எல்லாம் உடனடியாக மனைகளாக மாறி விடுகின்றன. இந்த வேகம் மிக மோசமானதாக தோன்றுகிறது.

ஈழம் போர் முடிந்து விட்ட நிலையில் வழக்கம் போலவே போர் சம்பந்த பட்ட குற்றங்களும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் மிகவும் மனவேதனையை தருகின்றன. ஆனாலும் அதனிடையே வருகின்ற தேர்தல் ஒரு புதிய கணக்கை இந்தியாவுக்கும் ஏற்படுத்தி கொடுத்திருகின்றன, ஜனவரி 26ல் தேர்தல் முடிந்தால் இந்த கணக்கின் விடைகள் தெரிய வரலாம், ஆனால் இவையெல்லாம் வேதனையில் இருக்கும் தமிழர்களுக்கு எத்தனை உதவி செய்யும் என்று புரியவில்லை.

உலகத்தமிழ் மகாநாடு கோவையில் நடைபெறப்போகிறது, அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில், இந்த மாநாடு முக்கியமான இடத்தை பெறுகிறது, அதற்கு முன் புதிய சட்டசபை வளாகத்தையும் திறந்து பணியாற்றிவிடக்கூடும்,

புதிய வருடம் தொடங்கி இருக்கிறது வழக்கம்போல் பல வாழ்த்துகள் தீர்மானங்கள் என்று தொடங்கி இருக்கிறது. என்ன ஆகிறதென்று பார்க்கலாம்.

சினிமாக்களில் வேட்டைக்காரன் மிக கடுமையான விமர்சனத்தை வலைகளில் சந்தித்தது, விஜய் ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை, இனி ஆந்திர ரீமேக் படங்கள் விஜய்க்கு அத்தனை கைகொடுக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் ஒரு முக்கியமான படமாக இருக்ககூடும் என்று தோன்றுகிறது, அதனைப்பற்றிய விமர்சனங்கள் பல்வேறு விதமாக இருப்பது ஒரு குழப்பம்தான், என்றாலும் தமிழின் தரம் ஒரு மிரட்டலான் முன் நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகத்தான் உணரமுடிகிறது. படம் பார்க்கவில்லை தியேட்டரில் சென்றுதான் பார்க்கவேண்டும், முடிந்தால்

சரி இன்னும் நிறைய எழுதவேண்டும் பிரகு சந்திக்கலாம்

எல்லோருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

தவநெறிச்செல்வன்