Oct 15, 2008

எனது கிராமம்-1

கிராமம் என்பது மிகவும் சுகமான ஒரு சொல் என்றே நினைக்கிறேன், அதனை உச்சரிக்கும் போது ஒரு பரவசம் வரத்தான் செய்கிறது, சென்னை போன்ற ஊர்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அந்த சுகம் தெரியவாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், கிரமத்தைவிட்டு நகரத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் கிராமத்திற்கே என்றாவது போகமாட்டோமா? என்கிற எண்ணம் அப்பப்போது வராமல் இருக்காது என்றே நம்புகிறேன்,

எனது கிராமம் ஒரு அழகிய அமைப்பில்தான் இருந்தது, கிட்டதட்ட 35 வருடங்களுக்கு முன், முக்கிய சாலையில் இருந்து செல்லும் கிளை சாலை இரண்டு பக்கமும் அழகிய தென்னை மர வரிசைகள் இருந்தன, இப்போது வெறும் இரண்டு மரங்களே இருக்கின்றன, மற்ற மரங்கள் எங்கே போனது, அவைகளை திரும்பவும் வைக்க ஏன் யாரும்முயலவில்லை என்று தெரியவில்லை, அப்போது கிராமத்தில் இளைஞர்கள் குழந்தைகள் கூட்டம் அதிகம் இருக்கும், அதனால் கிராமத்தில் பல விழாக்கள் நிறைந்து காணப்படும், விழாக்களில் எல்லாம் பலவிதமான சந்தோஷங்கள் உறவுகளின் கிண்டல்கள் விதவிதமான உபசரிப்புகள் என்று நிறைந்து காணப்படும்,

கிட்டத்தட்ட தெருவில் உள்ள எல்லாவீடுகளும் உறவினர்களாகவே இருப்பார்கள் எந்த நேரத்தில் போனாலும் எல்லா வீட்டிலும் சாப்பிட ஏதாவது கொடுப்பார்கள், நடுநிசியில் வந்தால் கூட தண்ணீர் விட்ட சோறு கிடைக்கும், ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை, வீணாகிறதே என்று கூடுதலாக சமைபதே இல்லை, முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு வேலைக்காக பல ஆதிதிராவிடர்கள் ஆண்களும் பெண்களூம் இருப்பார்கள், மாடு பார்பது சாணி அள்ளுவது வரட்டி தட்டுவது, பாத்திரங்கள் கழுவுவது என்று, எல்லா வீட்டிலும் மாடுகள் இருக்கும், ஆகையால் அவர்களுக்கும் வேண்டி உணவு கூடுதலாக சமைக்கப்படும், பெரும்பாலும் அவர்கள் வீட்டில் சமைப்பது கிடையாது என்றே நினைக்கிறேன், இப்போதெல்லாம் அவர்கள் அவ்வாறு வருவதும் இல்லை, மாடுகளும் பெரும்பாலும் குறைந்து விட்டன இப்போது பால்காரர்தான் பெரும்பாலான வீடுகளுக்கு பால் கொடுக்கிறார்,

நான் சிறுவனாக இருந்த போது தினமும் காலையில் எனது பாட்டி தயிர்கடைவதை பார்த்திருக்கிறேன் அப்போது அவர்களை சுற்றி சுற்றி வருவோம், காரணம் மத்தில் திரண்டு வரும் வெண்ணையை அப்பப்போது கொஞ்சம் வாயில் தடவி விடுவார்கள், அது மிக சுவையாக இரூக்கும், பாலும் தயிரும் ஆறாய் ஓடிய காலம், கிராமத்தில் எங்கள் வீடு மிகப்பெரியது ஒரே மாடி வீடும் கூட அதனால் மெத்தைவீடு என்றுதான் சொல்வார்கள், இப்போது பல வீடுகள் வந்து விட்டன, இப்போது எப்படி அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை,

எல்லா வீட்டிலும் தென்னங்கீற்றினால் ஆன பந்தல் இருக்கும், அதனால் வாசலில் திண்ணை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், பந்தல் மிகவும் கெளரவமான விஷயமாக கருதப்பட்டது , தென்னங்கீற்று பழுதாகிப்போனதும் புதிய கீற்று மாற்றுவதில் அவ்வளவு அக்கறையான செயல்பாடு இருக்கும், வீட்டின் உள்ளே இரண்டு பெரிய முத்தங்கள் அதிலும் காற்று கொட்டகை என்று போட்டிருப்பார்கள் அதனால் வீட்டுக்குள் நல்ல வெய்யிலில் கூட காற்று வந்துகொண்டே இருக்கும்,
காலையிலிருந்து யாரவது பக்கத்துவீட்டு உறவினர்கள் என்று எதற்காகவாவது வருவது போவதுமாக இருப்பார்கள், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு மருமகள்களாவது இருப்பார்கள் அதனால் அவர்களுடைய குழந்தைகள் என்று சின்னஞ்சிறுசுகள் விளையாடுவதும், யார் வீட்டில் இருந்தாவது கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து விளையாடுவதும் மிக சாதாரணம், தெருவில் யாராவது போவதும் வருவதுமாக இருப்பார்கள், மாடுகளும் ஆடுகளும் உழவுக்காகவும், மேச்சலுக்காகவும் காலையில் சென்றுவிட்டு பின் மாலையில் திரும்ப வருவதும் தினமும் நடக்கிற விஷயமாக இருக்கும், இப்போது டிராக்டர் வந்த பின் உழவு மாடுகள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது, அப்போதெல்லாம் ஒரு கிராமவாசியுடைய பொருளாதாரம் நிலத்தை தவிர அவர்களிடம் உள்ள உழவுமாடு ஆடு பசுமாடு வண்டிகள் கொண்டே கணிக்கப்பட்டது ஆனால் இன்றோ இவைகள் எல்லாம் குறைந்து போனதில் கிராம பொருளாதாரம் எப்படி வாழ்கிறது என்றே ஆச்சர்யமாக இருக்கிறது,

கிராமத்து இளைஞர்கள் நகரங்களுக்கு பொருளீட்ட நகர்ந்த பிறகு, புதிய தலைமுறையின் பாதிப்புகள் கிராமங்களுக்கு வந்து விட்டன, ஆனால் அங்கே இருப்பவர்களோ பழய தலைமுறை மனிதர்கள்தான், இன்றைய இளைஞார்கள் இல்லாது கிராமங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன, வீட்டில் உள்ள முதியவர்களும் தொலைக்காட்சி பெட்டிகளில் தங்களின் பொழுதுகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள், பேரக்குழந்தைகளுடன் வாழ வேண்டிய சுகங்களை கொடுக்கமுடியாத நிலைக்கு இன்றைய இளையதலைமுறை தேவைகளின் பெருக்கத்தினால் போராடிக்கொண்டிருக்கிறது, முன்பெல்லாம் கிராமங்களில் பெரும்பாலும் இளைஞர்கள் இரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பதும் அப்படியே திண்ணைகளில் படுத்துறங்குவதும் வாடிக்கை, ஆனால் இன்று திண்ணைகள் காலியாகத்தான் கிடக்கின்றன, அவைகளை பராமரிக்க முடியாமல் அவைகள் வேறு உருவத்துக்கு மாறிக்கொண்டிருக்கின்றன,

மண்சாலைகள் தார் சாலைகளாகிவிட்டன தொலைபேசி கம்பிகளும் இன்றைய தொலைக்காட்சி கம்பிகளுமாய் கிராமங்கள் அறிவியல் வலைக்குள் மாட்டி கொண்டிருக்கின்றன, முன்பெல்லாம் காமன் பண்டிகை, காத்தவராயன் பண்டிகை போன்ற விழாக்கள் நடக்கும், அப்போது வித விதமான போட்டிகளும் அதில் வரும் மன சங்கடங்களால் ஏற்படும் சண்டைகள் பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி விசாரணை என்று வித விதமான காட்சிகள், அவைகள் இப்போதெல்லாம் குறைந்து போய்விட்டன என்றே நினைக்கிறேன், கிராமத்தில் படிப்பகங்கள் திராவிட இயக்கங்கள் காலத்தில் உருவானது, இப்போது அவைகளும் இல்லை, பேப்பர் போடும் ஆட்கள் கூட வருவதில்லை

இன்னமும் கிராமங்களில் மீதமிருப்பது ஒரு வித ஏக்கமும், நல்ல காற்றும்தான், எல்லா கிராமங்களிலும், பண்டிகை காலத்திலாவது நமது பேரப்பிள்ளைகள் வரமாட்டார்களா என்று ஒரு தாத்தாவோ பாட்டியோ ஏங்கிகொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது, இன்னும் கொஞ்ச காலம் போனால் அப்படி எதிர்பார்க்கும் மனிதர்களும், சுத்தமான காற்றும்கூட இந்த விஞ்ஞான விளையாட்டில் காணாமல் போய் புதிய தலைமுறைக்கு அவைகள் வெறும் பாடங்களாக பாடப்புத்தகங்களில் மட்டுமே பதுங்கிகொள்ளும்.

செல்வம்

3 comments:

 1. Dear Sir,

  How could you think? I really so happy when I read the article …. I am really expecting you’re new article everyday

  Murugavel
  Japan

  ReplyDelete
 2. Dear sir,

  Nalla katturai.Nagarankalil pakkathu veedil yar entru theriyathu.Gramathil puthiyathaga yar vanthalum otane ellorum arivargal
  tsseethalakshmi

  ReplyDelete
 3. சீதாலஷ்மி அவர்களுக்கு, தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி, தங்களின் வலைப்பூ முகவரி அறியத்தரவும்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்