Oct 2, 2008

மகாத்மா




இன்று மகாத்மா பிறந்த நாள், இந்தியாவில் நிறைய பேருக்கு பிடிக்கும் நிறைய பேருக்கு பிடிக்காது, ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம், ஏனெனில் மகாத்மா ஒரு திறந்த புத்தகம் அதனில் ஒருவர் எதிர்மறையானதும் நேர்மறையானதுமான எந்த ஆய்வையும் மேற்க்கொள்ளலாம், அதுதான் மகாத்மா இந்த உலகத்திற்கு செய்த சேவை. சத்யாகிரகம் ,அஹிம்சை என்கிற கூறுகள் கூட தன் சுய அடையாளத்தை கண்டு எடுக்க அவர் கையாண்ட யுத்திகள் என்றுதான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு செயலிலும் அதன் கூறுகளை தனியே பிரித்து அதன் நன்மை தீமைகளை சத்தியத்தியத்தின் வழியே உணர்ந்த பின் நடைமுறைபடுத்த மனித ஜீவனால் இயலும் என்பது நிருபிக்க முடிந்த வாழ்க்கை அவருடையது, அவரின் வாழ்க்கை அக்குவேறு ஆணிவேறாக அவரின் எதிர்ப்பாளர்களாலும் ஆதரவாளர்களாலும் பிரித்து தொங்க விடப்பட்டும் கூட அவரின் ஆளுமை இன்னமும் தனது நாட்டு மக்களின் நெஞ்கங்களில் செயலாகிக்கொண்டிருக்கிறது ஒரு கடுகளவாவது என்பதுதான் உண்மை.

தன் வருங்கால சந்ததியிடம் மகாத்மா என்ற கேள்விக்கு மத இன ஜாதி வேறுபாடு இன்றி எல்லோரும் ஒரு உயர்வான பொருளை மட்டுமே சொல்லமுடியும், இது இறை தூதர்களுக்கோ அல்லது மத அடையாளம் கொண்ட எந்த தனிமனிதனுக்கோ கிடைக்காத பெருமை. அவர் யாரையும் வெறுக்கமுடியாமல் வாழ்ந்தார்,

யாரையும் வெறுக்காமல் வாழ்வதென்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவரவர் கற்பனைக்கே விடுகிறேன், எந்த மதத்தையும் கூட அவர் வெறுத்ததில்லை இது மதவாதிகளுக்கும் இறைதூதர்களுக்கும் ஏற்க முடியாத விஷயம், ஒரு மதத்தை அவர் உண்டாக்கியிருந்தால் இந்த அவரின் அடையாளாங்கள் இன்று ஒரு சின்ன வட்டத்துக்குள் கொண்டுபோய் மூடியிருப்பார்கள். மதம் என்ற அடையாளத்துக்குள் அவர் போகவே விரும்பவில்லை ஆனாலும் அவர் ராம பக்தராய்தான் இருந்தார்,

இன்றைய ராம பக்தர்களுக்கும் அவருக்குமான வேறுபாடு புரியக்கூடியதுதான். அவரைப்பற்றிய விமர்சனங்கள் ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது அவரின் கொள்கைகள் இன்னும் ஆளுமை கொண்டிருப்பதையே காட்டுகிறது, அவரின் சத்தியாகிரக முறையைப்பற்றி ஒரு கணிப்பு உண்டு அது கணவன் மனைவி இடையே கொண்ட ஊடல் போன்றது அது சட்டத்தை மதித்த ஆங்கிலேயர்களிடம்தான் சாத்தியமாகும் இன்றைய இந்திய அமைப்பில் அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளில் அவரின் போராட்டங்கள் ஒரு மோசமான பலனையேதரும் என்பது போன்ற ஒரு கருத்து உண்டு.

ஆனால் எனது எண்ணத்தில் அது பற்றிய வேறு ஒரு கோணம் தோண்றுகிறது, தென்னாப்பிரிக்காவுக்குள் நுழைந்தபோது மகாத்மா சத்தியாகிரகத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் செல்லவில்லை, அங்கே எந்த போராட்டத்தையும் அவர் எதிர்பார்த்தும் சென்றிருக்க முடியாது, ஆனால் அந்த சூழல் அவரை சத்தியாகிரகத்தை சிந்திக்கவைத்தது அதை பரிசோதிக்கவைத்தது அதன் வெற்றி இங்கே செயலாக்கமுடியும் என்பதை அவருக்கு உணர்த்தியது, அது கணவன் மனைவி ஊடல் முறையாயிருந்தாலும் அதுதானே வெற்றிபெற்று தரக்கூடியதாக இருக்கிறது என்பதுதான் முக்கியம், இன்றைக்கு காந்தியடிகள் இருந்து இன்றைய அரசியல்வாதிகளிடம் போராட வேண்டியிருந்தால் அவர் அதற்கேற்ற ஒரு முறையை கண்டுபிடித்திருக்ககூடும்.

ஆனாலும் இந்திய பிரிவினையின்போது மகாத்மா தோற்றுதான் போனார் தனது எந்த முயற்சியும் வெற்றிபெறாது போன நிலையில் தனது நாட்டுமக்களின் ரத்தம் ஆறாக ஓடப்போவதை உணர்ந்து அதன் அளவை குறைக்கும் முகமாக கல்கத்தாவுக்கும் டெல்லிக்குமாக பிரயாணம் செய்து தடுக்க போராடிக்கொண்டிருந்தார்.பாகிஸ்தானுக்கும் கூட அவர் செல்ல நினைத்திருந்தார், ஆனாலும் அவர் பயந்த படியேதான் அனைத்தும் நடந்தது, ஆனால் அவரின் வழிகளை ஏற்றுக்கொள்ளாத ஜின்னாவும் அதனால் வேறு வழியில்லாமல் அந்த திட்டத்திற்கு உடன்பட்ட இந்திய பிரிட்டிஷ் தலைவர்களும் நடந்த விபரிதங்களுக்கு மெளன சாட்சியாக நின்றார்கள்,

அந்த கொடுரமான சம்பவங்களை பற்றி எத்தனையோ புத்தகங்களும் விவாதங்களும் வந்து விட்டன, அதையெல்லாம் மீண்டும் படிக்கவோ கேட்கவோ யாருக்கும் தைரியமிருக்காது அத்தனை இழப்புகள் வேதனைகள் கொடுரங்கள் நிறைந்த ஒரு அத்தியாயம் அது. அதனை தனது தீர்க்கதரிசனத்தால் கண்டுணர்ந்ததால்தான் அவர் பிரிவினையை எதிர்த்தார்.

ஆனாலும் பிரிவினை நடந்துவிட்டது, அதனை அவருடைய சத்தியாகிரகம் கூட தடுக்கமுடியவில்லை, அதன் பாதிப்புகள் இன்று நமது நாட்டிலும் பாகிஸ்த்தானிலும் பங்களாதேஷிலும் இல்லாமல் இல்லை.

ஒருவேளை மகாத்மா இன்னும் சில காலம் உயிரோடிருந்தால் இந்த குழப்பங்கள் குறைந்திருக்குமோ அல்லது அது கூடியிருக்குமோ தெரியவில்லை,ஆனாலும் அவரின் ஆன்ம பலம் ஒரு புதிய அத்தியாயத்தை உண்டாக்கி கொடுத்திருக்கும், அவரின் தொடர் முயற்சியால் பாகிஸ்த்தான் மக்கள் நம்மோடு நல்ல நண்பர்களாகியிருக்ககூடும் அது மகாத்மாவால் முடிகிற காரியம்தான் என்று எனக்கு தோன்றுகிறது, ஏனெனில் அவர்தான் எல்லோரையும் நேசித்துக்கொண்டிருந்தாரே அது ஒன்று போதுமே.

இந்த நாளில் ஏதோ மகாத்மாவைப்பற்றி தோன்றியதை எழுதிவிட்டேன்

செல்வம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்