Oct 14, 2008

காலி செய்கிறேன் - சிறுகதை

ஒரு ஆழமான மனநிலையில் இப்போது நான் இருப்பது புரிகிறது, அதன் அழுத்தம் எனது உள்ளமெங்கும் பரவி அது மனதில் அழுத்துவது புரிகிறது, எனது வயது 65 யை கடந்து விட்ட நிலையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் ஒரு அயர்வும் அதன் மூலமான உடல் களைப்பும் சேர சற்று நேரம் எனது வழக்கமான சாய்வு நாற்காலில் அமர்ந்து கொண்டேன். வாழ்க்கை மனிதனுக்கு எல்லா வயசிலும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது, இந்த 65 வருட வாழ்வில் எனது அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தி இருக்கலாம் ஆனால் இப்போது நான் சந்திக்கும் சம்பவங்கள் எனது பழய அனுபவங்களுக்கு சவால் விடுகின்றன, அதனால் எனது பழய அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது,

இப்படி ஒரு சூழல் எனக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, எதையும் புரிந்தோ அல்லது உள் மனதோடோ செய்ததாக உணரமுடியவில்லை, இப்போது எனது நிலையின் இந்த குழப்பங்களுக்கு காரணம் யாராக இருக்ககூடும் என்று சிந்திக்க மனதுக்கு தோன்றவில்லை, சிந்திப்பதில் ஒரு உபயோகம் இருப்பதாகவும் தெரியவில்லை, நட்பு, உறவு, எதிரி, நண்பன், சொந்தம் பந்தம் எல்லாமே ஒரு கானலாய் தெரிகிறது, எதுவும் எந்த நேரத்திலும் ஒரு எட்டாத தொலைவுக்குள் சென்று நின்றுகொள்ளும் என்பது புரிகிறது, ஆனால் இந்த புரிதலில் என்ன உபயோகம் இருக்கிறது என்று புரியவில்லை,

எனது ஆழமான மனம் ஒரு வழிந்து போன நிலையில் உள்ளது அதில் சுவடுகள்தான் மிச்சம் உள்ளன அதில் இனி வறட்சி மட்டுமே மீதமாய் அல்லது வரக்கூடும், அந்த சுவடுகளோடு எனது எண்ணங்கள் பயணிக்க விரும்புகின்றன அவ்வளவே அது கூட ஒரு தோற்றுப்போன சுகம் அனுபவிக்கிற மனநிலையில்தான், தோற்பதில் ஒரு சுகமா எனத்தோன்றலாம், ஆமாம் சுகந்தான் அதை ஒரு செயல்பட முடியாத சூழலில் ஒரு மன தேற்றலாகவே தோன்றுகின்றன, அதனை எப்படியும் விட முடியாதென்றுதான் தோன்றுகிறது,

எனது இளைமைக்காலத்திலும் சரி இப்போதும் சரி எனது குணம் ஒரு புதிராகவே இருந்திருக்கிறது பலருக்கு, என்பது எனக்கு இப்போது புரிகிறது, எனது நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்று எல்லோரும் ஒவ்வொரு காலத்திலும் திணறி இருப்பதும், இப்போது மெல்ல எனது புதிரை அவிழ்க்க முடியாமல் என்னை வெளியிலேயே வைத்திருக்கும் மனநிலைக்கு அவர்களை கொண்டு வந்து சேர்த்து விட்டது போல தெரிகிறது, ஆனால் இதில் இறுதியில் ஒரு வெற்றிடம் ஏற்படக்கூடிய சூழலை எல்லோருமே எதிர்கொள்ளும் நிலைக்கு அறிந்தோ அறியாமலோ எல்லோருமே சென்றுவிட்டது தெரிகிறது. குடும்பம் என்கிற அமைப்பில் இந்த சங்கடங்களை எல்லோரும் ஒரு வயதில் சந்திக்க வேண்டியிருப்பது கட்டாயம் போலும், அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய தவிர்கமுடியாத நிலைதான் உள்ளது,

இதையெல்லாம் ஏன் சுமக்கவேண்டும் என்கிற ஞானம் வரும்போது வாழ்க்கையின் பெரும் பகுதி முடிந்து போய்விடுவதுதான் மிகவும் ஜீரணிக்க முடியாமல் போகிறது, இது ஒரு தோல்விதான் எனக்கு மட்டுமல்ல சமுதாய அமைப்பு அல்லது மரபுகளை உருவாக்கி விட்டு சென்று விட்டவர்களுக்கும் கூட இது ஒரு தோல்விதான், மனிதன் இத்தனை காலங்கள் கடந்த பின்னும் இன்னும் சுய அடையாளத்தை தெளிவை அடையக்கூடிய நிலைக்கு வர ஒவ்வொரு முறையும் 60 வருடம் ஆகிறதே என்பது ஒரு குறைதான், பெரும்பாலனவர்களுக்கு அது மரணம் வரைகூட தெரிவதே இல்லை, இதை ஏன் சரிசெய்ய முடிவதே இல்லை, இன்று உருவாக்கிய ஒரு பொருள் சில விஷயங்களில் சரியாக செயல்படாமல் போனால் அடுத்த தயாரிப்பில் அது சரிசெய்யப்பட்டே மீண்டும் வருகிறது, ஆனால் மனிதன் தனது ஒவ்வொரு புதிய தயாரிப்பிலும் இதே தவறை செய்கிறான்,

இன்று காலை எனது எல்லா சாமான்களும் லாரிகளில் ஏற்றப்பட்டன, என் மனைவியும் மகனும் மருமகளும் காரில் ஏறி புறப்படப்போகிறார்கள், நானும் அவர்களோடு செல்ல வேண்டும், எனக்கு இடப்பெயர்ச்சி புதிதில்லை, எனது அரசாங்க பணியில் தொடர்ந்து பல ஊர்களில் பணி புரிய வேண்டி வந்ததால் நான் பல முறை வீடு மாற்றி சென்று கொண்டே இருந்திருக்கிறேன், அப்போதெல்லாம் இப்படி எந்த மன குழப்பமோ வேதனையோ வந்ததில்லை ஏனனில் அங்கெல்லாம் நான் தற்காலிகம் என்றே உணர்ந்திருந்தேன்,எல்லா இடத்திலும் எனது குழந்தைகளுடன் இருந்து வந்தது ஒரு பெரிய ஆறுதலாக எனக்கு இருந்திருக்கலாம்,ஆனால் அவர்களோடு நான் அதிகம் அன்பாக பேசி இருந்ததில்லை என்றே நினைக்கிறேன், அவர்கள் ஏனோ ஒரு தொலைவிலேயே இருந்தார்கள். என்னால் எந்த ஒரு முறையான வாழ்க்கை முறையை அவர்களுக்கு பழக்க முடியவில்லை, அவர்களே தங்களூக்கான முடிவுகளை எடுக்க பழகினார்கள் அது ஒரு வகையில் அவர்களின் அடையாளங்களை நல்ல முறையில் உருவாக்கி கொள்ள உதவியது, ஆனால் அது அவர்களின் சில உறவினர்களோடான அணுகுமுறையில் தவறான முடிவுகளை எடுக்க வழிவகுத்தது அதனை நான் கண்டும் அதன் விளைவுகளை அவர்களிடம் சொல்லமுடியாத தொலைவுகளில் இருந்தேன் மனதளவில். அதனை ஒரு குறையாக நான் உணரடத்தொடங்கிய போது கிட்டதட்ட என் குழந்தைகள் அப்பா என்கிற ஸ்தானம் பணம் சம்பாதிக்க மட்டுமானதாக முடிவு செய்திருந்தார்கள்.

இதில் நான் யாரையும் குற்றம் சொல்ல முடியாது எனக்கு பழக்கமானதை அல்லது எனக்கு பிடித்துப்போனதை அல்லது எனக்கு இயன்றதை நான் செய்துவிட்டேன். என்கிற மன நிலையில் நான் யாரையும் பொருட்படுத்த தயாராக இல்லை, ஆனால் என்னைப்போலவே எனது சுற்றம் என்னை பொருட்படுத்தாது விடுகின்ற இந்த நிலையில் என்னால் அதனை ஏற்க முடியவில்லை அல்லது ஏதோ தோல்வியும் பெரிய இழப்புமாக தோன்றுகிறது.

என்னால் என் உறவினர்களூக்கு நிறைய உதவி கிடைத்ததாக நம்பினேன், ஆனால் அது ஒவ்வொன்றும் எனது குடும்பத்தாரால் பெரிதாக கணக்கிடப்பட்டபோதுதான் புரிந்தது எனது உதவிகள் ஒரு சராசரி மனிதன் கூட செய்யக்கூடியதுதான், நான் எனக்குள்ளே கேட்கிறேன், எங்கிருந்து வந்தது இந்த மனநிலை எனக்கு, நாம் எல்லோருக்கும் செய்கிறோம், நமக்கு எல்லோரும் செய்யவேண்டும் என்கிற மனநிலை எங்கிருந்து வந்தது என்று யோசிக்கிறேன், அது மிக எளிதாக புரிகிறது எனது பணக்கார மனநிலையில் இருந்துதான், நான் ஒரு தவிர்க்க முடியாத மனிதனாக இருக்கவேண்டும் என்கிற நினைப்பில்தான் எனது எல்லா செயல்களையும் செய்கிறேன், நான் மட்டுமல்ல பெரும்பாலான மனிதர்களின் நோக்கம் அதுதான் போலும், உதவி என்கிற முன்னிலை தன்னை நிறுவுவதற்காக செய்யும் முயற்சி என்பது புரிகிறது, ஆனால் அந்த நிறுவுதலில் இருக்கிற சுயநலம் வெகுகாலம் மறைக்க முடியாமல் போகிறது அல்லது அது யாரோவால் அடையாளம் காணப்பட்டு உடைக்கப்பெரும் போது அது நம்மை நிராதரவாக விட்டு விட்டு எட்டி நின்று சிரிக்கிறது, அதுதான் என்னை இப்படி மிகுந்த மன சுமையோடு அல்லாட வைக்கிறது,

எனது பணிக்காலம் முடிந்தபின் எத்தனையோ ஊர்களில் சுற்றி இருந்தாலும் கடைசியில் சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமாக இருக்கும் அதுதான் எனது முடிவுமாக இருந்தது, அதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றாக இருக்கலாம், ஆனால் நான் கண்ட காரணம் வேறு கொஞ்சம் புதிதாக இருக்கலாம், பிள்ளைகளோடான மன நெருக்கம் என்னைப்பொருத்தவரை எனது உடன்பிறந்தோரைவிட குறைவுதான் என்பது ஒரு காரணம், அவர்களோடு இருக்கவேண்டிய மன ஓட்டம் என்னை எனது சொந்த ஊர் நோக்கி விரட்டியது என்று சொல்லலாம்,

எனது வருகை எந்த ஒரு சகோதரனையோ சகோதரியையோ சந்தோஷப்படுத்தியதா என்று எனக்கு புரியவே இல்லை இப்போதுவரை, நான் இங்கிருந்து என் மகனோடு சென்று தங்குவதற்கு வேண்டி இந்த வீட்டை இப்போது காலி செய்யும் வரை இந்த கேள்வி எனக்குள் வந்து கொண்டேதான் இருக்கிறது, நான் போகவேண்டி எந்த நிர்பந்தமும் எப்படி இதுவரை இல்லையோ அதுபோல் நான் வரும்போதும் அப்படி ஒரு நிர்பந்தம் இல்லாமல்தான் வந்தேன், எனது வருகை எல்லோரையும் பல கேள்விகளை ஏற்படுத்தியதில் எனக்கு முதல் ஆச்சர்யம் ஆனால் அந்த கேள்விகளின் பொருள் நேரடியாக எந்த இடத்திலும் எனக்கு புரியவே இல்லை, ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பது மட்டும் எனக்கு இப்போது வரை புரிகிறது, அதனால்தான் நான் கோபம் கொள்ளாமல் வேறு மனநிலையில் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன், எனது சகோதரர்கள் மீது எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு அவர்கள் எந்த சூழலிலும் வெட்டிக்கொண்டு போக விரும்புபவர்கள் இல்லை, எனது எல்லா விழாக்களிலும் அவர்கள் மிகவும் முக்கியமான பங்கு வகித்து உதவினார்கள் அது மறுக்கமுடியாதது. கூட்டமாக வாழ விரும்புகிறார்கள், தனது சுற்றங்கள் வரும்போது மகிழ்கிறார்கள், ஆனால் இத்தனையும் இருந்தும் எனது இந்த விடைபெறுதலுக்கும் அவர்களே காரணமாக இருக்கிறார்கள், அது எப்படி என்பது புரிகிறது, அவர்கள் என்னை நிராகரிக்கவில்லை, என்னை நன்கு உபசரிக்கிறார்கள் என்னிடம் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள், அதில் எந்த போலித்தனமும் இல்லை, ஆனால் நான் இங்கு இருப்பதை அவர்களின் ஏதோ ஒரு நடவடிக்கை தடுக்கிறது, ஆனால் அதை இதுதான் என்று என்னால் அடையாளம் காண முடியவே இல்லை, அதில் உள்ள நியாயம் அந்த அடையாளத்தை மறைக்ககூடும் என்று தோன்றுகிறது,

ஆனாலும் எனக்கு நேரடியாக யாரையும் அணுக முடியவில்லை அதற்கான காரணம் என்ன என்பது புரியவே இல்லை, எனது பக்கம் நியாயம் இல்லாமல் போய்விட்டதா என்றும் தெரியவில்லை,

எனது பிள்ளைகளின் செயல்கள் அவர்களை நேரடியாக பாதித்திருப்பது உண்மை, அதன் ஆழமான காரணம் அதில் இணைக்கப்பட்டிருக்கலாம், ஒரு மோசமான புரிதலின் கெடுதல் அது, அதனை ஆரம்பத்தில் சரியாக்க வேண்டிய நான் அதனை வேடிக்கை பார்த்தது இப்போது வளர்ந்து நிற்கிறது, மற்ற எந்த குடும்பத்திலும் இப்படி ஒரு விலக்கம் தேவையாயில்லை, அவர்களின் விழாக்கள் எனது குடும்ப விழாக்களை விட கூடுதல் மனிதர்களோடு ஆர்ப்பாட்டமாய் நடக்கிறது, அது ஏன் என்பது எனக்கு ஆரம்பத்தில் கோபத்தைதான் வரவழைத்தது, ஆனால் இதில் எல்லாம் எனக்கு ஒன்றும் புரியாமல்தான் இருந்தது, இப்போது வரை ஏனனில் இப்போது நான் சந்திக்கும் இந்த விடைபெறுதல் முடிவு செய்யப்பட்டபோதுதான், உண்மையான காரணம் மெல்ல எனக்குள் விரிய ஆரம்பித்தது, வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலியாக இருந்திருக்கவில்லை, அது என்னை ஜெயித்துவிட்டது, அதன் போக்கில் என்னை கொண்டுபோக வைத்து, எனது எல்லா முடிவுகளையும் யாரோ எடுப்பது போல் பார்த்துக்கொண்டது, விளைவு நான் எனது சொந்த விஷயங்களில் கூட ஒரு பார்வையாளனாக இருந்து கொண்டே வந்திருக்கிறேன், அது என்னை மிகவும் செயல்படாத மனிதனாக ஆக்கிவிட்டது, மனிதன் இப்படி வாழ்வின் சாதாரண சந்தர்பங்களில் கூட தனது சுயத்தை வெளிப்படுத்தாமல் போனால் கடைசிவரை அவனது நிகழ்வுகள் எல்லாம் மூன்றாவது மனிதனாலேயே முடிவுசெய்யப்படும்.

எனது பிள்ளைகள் என்னை பணம் பண்ணும் இயந்திரமாக மட்டும் பார்க்கத்தொடங்கிவிட்ட நிலையில் நான் ஒரு சக்கையாக வெளியே வீசப்பட்டிடக்கூடும் என்கிற பயம் எனக்குள் வரத்தொடங்கிய போது நான் பெரிதும் பயந்தேன் ஆனாலும் ஒரு உணர்வு என்னை கட்டிப்போட்டு வந்தது அது ஒரு நம்பிக்கை சமூகம் தரும் நம்பிக்கை என்றுதான் நம்புகிறேன், எனது பணக்கட்டுபாடுகளை ஓரளவுக்கு என்னகத்தே நான் கொண்டிருக்கிறேன். அதனால் ஓரளவுக்கு எனது நம்பிக்கைகள் என்னை ஏமாற்றவில்லை, ஒருவேளை எனது சகோதரர்கள் என்னை நெருங்கி வந்திருந்தால் எனது பிள்ளைகள் என்னை சக்கையாக்கி இருக்ககூடுமோ என்னவோ, அதன் பின் எனது நிலையின் கடுமை என்னை மிகவும் ஒரு வேதனையான கட்டத்திற்கு கொண்டு போயிருக்கலாம்,

இந்த காரணம் எனக்குள் மெல்ல வரத்தொடங்கியபின் எனக்குள் ஒரு தெளிவு வருகிறது அது, ஆனாலும் எனது உடன்பிறந்தோர் ஒரு வெளிவட்டத்தில் நிற்க காரணமான இந்த பயணம் என்னை சந்தோஷ படுத்தவில்லை, இதோ எனது கார் எனது சொந்த ஊரை தாண்டி செல்கிறது எனது பல மன வேதனைகளை பகிர்ந்து கொண்ட குளமும் குளக்கரையும் என் கண்களின் பார்வையில் இருந்து மறைந்து விட்டன எனது இந்த மனவேதனை தெரிந்து கொள்ளாமலே.


செல்வம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்