Oct 25, 2008

உளறல்-8

தொடர்பில்லாதது, வேண்டுமானால் nonlinear என்று வைத்துக்கொள்ளுங்கள், இதெல்லாம் சாருவிடம் தெரிந்து கொண்ட வார்த்தைகள், அவர் அளவுக்கு எதிர்பார்த்து படித்தால் அதற்கு நான் பொருப்பல்ல, ஒரு வழியாக இன்று வேலை முடிந்து அறைக்கு திரும்பினேன், அதென்ன வேலை என்று கேட்காதீர்கள் எல்லாம் வெளிநாட்டு இஞ்சினியர் வேலைதான், வெளிநாட்டு இஞ்சினியர் வேலை என்ற உடனே பல வெளிநாட்டு இஞ்சினியர்களுக்கு சிரிப்பு வரலாம் அதற்கு நான் பொருப்பல்ல

அப்படி என்ன கிழித்தேன் என்று கேட்காதீர்கள், காலை முதல் மதியம் சாப்பாடுவரை முடிந்தவரை எனக்கு பிடித்த வலைத்தளங்களூக்கெல்லாம் சென்று படித்தேன் அதன் பின்பு மதியம் சாப்பாடு அதுதான் கொஞ்சம் கவலையான விஷயம், குடும்பம் இல்லாமல் தனியே இருக்கும் என்னைப்போன்ற சைவ சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு அது ஒரு கொடுமையான அனுபவம் ஏதோ சில தழைகளையும் கொஞ்சம் அரிசி சோறு அது நிச்சயமாக வெள்ளையாக இருக்காது ஏதாவது சின்ன குழந்தைகளின் கலர் புத்தகம் போல பல வண்ணங்களில் இருக்கும் கொஞ்சம் பருப்பு இதெல்லாம் எப்படி செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யாது சாப்பிட வேண்டும் அதில்தான் உங்களின் திறமை இருக்கிறது, இல்லாது போனால் வாந்தி எடுப்பத்ற்கான முழு உத்திரவாதம் உண்டு, இவ்வளவும் சைவர்களுக்கே, ஆனால் அசைவர்கள் கூட சில நேரங்களில் இந்த வாந்தி வைபவத்திற்குள் போகவேண்டியிருக்கும், அதற்கு யாராவது ஒரு நல்ல பிலிப்பைன் நாட்டுக்காரன் தனது மதிய உணவு பாத்திரத்தை திறந்தாலே போதும், அப்படி ஒரு வாசனை? என்ன கொடுமை சார் இது? இதெல்லாம்தான் தினசரி இங்கு நாம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள், இங்குள்ள வேலை என்னமோ பெரிய சுமை என்று சொல்வதற்கில்லை,

ஒருவழியாக அறைக்கு போய் குளித்துவிட்டு, வேறு உடைமாற்றிக்கொண்டு சாப்பிட கிளம்பவேண்டும், உடை என்பதும் நிறைய விஷயங்கள் சொல்லவேண்டும், உடைவிஷயத்தில் எனக்கு நிறைய ஆச்சர்யம் உண்டு, இந்த பாகிஸ்தானியர்கள் அவர்களின் தேசிய உடையைத்தான்(பைஜாமா போல ) அணிந்து பெரும்பாலும் வெளியில் வருகிறார்கள், உண்மையிலேயே அந்த உடை ஒரு வசதிதான், அதன் கீழ்பகுதியின் முக்கால்வாசி பகுதியை மேல் உடை மறைத்து விடும் அதனால் உள்பகுதி எவ்வளவு அழுக்காய் இருந்தாலும் வெளியே தெரியாது அவர்களும், எங்காவது உட்கார்ந்தால் நம்ம வடிவேலு ஸ்டைலில் மேலுடையை தூக்கி விட்டு உட்கார்ந்து விடுவார்கள், அடுத்து நாம் பேண்ட் போட்டு இன் செய்தால் இடுப்பு பகுதி சரியாக சுருக்கம் இல்லாது பராமரிக்க வேண்டும், இல்லாது போனால் ஏதோ பாவாடை கட்டியதுபோல் தெரியும், ஆனால் இந்த பைஜாமாவில் உள்ளே எத்தனை கொடுமையாக இருந்தாலும் வெளியே தெரிவதே இல்லை, அந்த மேலாடை மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, அடுத்து என்னைப்போன்றவர்களுக்கு, இந்தியாவுக்கு சென்றால் ஒரு வயிரும், வளைகுடா நாட்டுக்கு வந்தால் ஒரு வயிரும் என்று இரண்டு பரிமாணங்கள் உண்டு, இந்த பிரச்சினை எனக்கு மட்டும்தானா அல்லது எல்லாருக்கும் உண்டா என்பது அவரவர் வீட்டு சாப்பாட்டு ருசியை பொருத்தது என்று நினைக்கிறேன், இந்த பரிமாண மாற்றத்தால் பேண்டின் அளவுகள் இடுப்பில் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும், இது பெரிய பிரச்சினை பேண்ட் பத்தவில்லை என்பதற்காக தூக்கிஎறியவும் முடியாது சரி வெளிநாடு போனால் உதவும் என்று எடுத்துக்கொண்டு செல்லவும் முடியாது ஏனனில் இந்த விமானத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை எதுவும் கிடையாது என்பதால் 25 கிலோவுக்குமேல் 1 கிலோ எடுத்து போவதானால் கூட உங்களை ஏதோ ஆப்பிரிக்க காட்டில் இருந்து வழிதவறிவிட்ட விலங்குபோல் பார்ப்பார், ஆனால் இந்த பாகிஸ்தானியர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை எவ்வளவு பெரிய மாற்றம் வந்தாலும் அதற்கேற்றார் போல மாற்றி கட்டி கொள்ளலாம், அந்த துணி தானாக கிழிந்து போவதுவரை இப்படியே உபயோகிக்கலாம்,

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நீண்டநாளாக பண்பாடுகளை காப்பாற்றி வருவதாக கூறிக்கொள்ளும் எந்த இந்தியனும், தனது பாரம்பரிய உடையில் வெளியில் வருவதே இல்லை, எந்த பிரகஸ்பதி எந்த நேரத்தில் இந்த பேண்ட் சட்டையை கண்டுபிடித்து இந்தியாவில் உலவவிட்டானோ அதிலிருந்து ஆங்கிலத்தில் சொல்வதானால் wearing flexibility என்பது இல்லாமலே போய்விட்டது, மேற்கத்தியர்களுக்கும் கிழக்காசியர்களுக்கும் இந்த பிரச்சினை இல்லை அவர்கள் நம்மைப்போல அரிசியையும் நல்ல காரவகைகளையும் மூக்கு பிடிக்க நிரப்புகிற பழக்கம் உள்ளவர்கள் இல்லையே, இந்திய பெண்கள் பாடு சற்று தேவலாம், புடவை ஒரு சுற்று குறைத்துக்கொண்டால் போதும் சமாளித்து விடலாம், அந்தகாலத்தில் அதனால்தால் ஜாக்கெட் போடாத பழக்கம் இருந்திருக்கும் போல தோன்றுகிறது, நமது முன்னோர்கள் wearing flexibilty ல் நல்ல அறிவு உள்ளவர்களாக இருந்திருப்பார்கள் போல் தெரிகிறது, இது மிகவும் ஆராய்ட்சிக்குரிய விஷயம்.

யாராவது பல்கலைகழக மாணவர்கள் இதனை குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவப்பட்டம் பெறலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்,

மூக்குபிடிக்க சாப்பிடுகிறதைப்பற்றி எழுதியதில் நினைவுக்கு வருகிறது, இந்த தயிர்சாதத்தை கண்டு பிடித்தவனை பாராட்டியே தீரவேண்டும், அதும் சைவமாக இருப்பவர்கள் அவனுக்கு வாழ்நாள் நன்றிக்கடன் பெற்றுள்ளார்கள் என்றே நினைக்கிறேன், எந்த நாட்டுக்கு போனாலும் தயிரும் அரிசியும் கிடைக்கும், அதைக்கொண்டு சில தினங்களை சமாளிக்க முடியும், பெரும்பாலான நாட்கள் இப்படி கழிவதை மறுப்பதற்கில்லை, இதுவும் நமது முன்னோர்கள் கண்டுபிடித்த eating flexibiltiy என்றே நினைக்கிறேன்.ஒரு வழியாக புறப்பட்டு எனது ஹோட்டலில் இருந்து வெளியே வந்தேன்___

வெளியில் கண்டவை அடுத்த பதிவில்

செல்வம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்