Oct 25, 2008

கிராமம்-2 விளையாட்டுக்கள்,

கிராமத்தின் விளையாட்டுக்கள் மிகவும் இயல்பானவை கூடவே சொற்ப செலவில் விளையாடக்கூடியவை, பெரும்பகுதி விளையாடு பொருட்கள் எல்லாம் அவர்களே தயாரிப்பதும் அல்லது கிராமத்தில் தச்சர்களிடம் செய்யப்பட்டதாகவோ இருக்க்கும்,

கிட்டி புல் என்பது கிட்டதட்ட மறைந்து விட்டதென்றே தோன்றுகிறது, இந்த முறை கிராமத்தில் இருந்த 1 மாத காலத்தில் யாரும் விளையாடவே இல்லை, ஒரு ஒன்றரை அடி நீளம் கொண்ட கிட்டியும், 3 அங்குல நீளமுள்ள புல்லும் தான் இதன் தேவை, அது பல்வேறு மரத்தால் செய்யப்பட்டிருக்கும், கருவை,சவுக்கு பூசனை போன்று வசதிக்கும் கிடைப்பதற்கும் ஏற்றவாறு செய்திருப்பார்கள், அதனை செய்ய பெரிய திறமையெல்லாம் வேண்டாம், ஒரு அரிவாள் இருந்தால் போதுமானது எத்தனை ஆட்கள் இருந்தாலும் சேர்த்துக்கொண்டு விளையாடலாம், இரண்டு பிரிவாக பிரித்து விளையாடுவார்கள், அதிலும் பல வகையான விளையாட்டுகள் இருந்ததாக நினைவு, பெரும் பகுதி நினைவில் இல்லை,

கிட்டியால் அடித்தோ அல்லது கிந்தியோ விளையாடப்படும், பெரும்பாலும் தெருவில் தான் விளையாடப்படும் அதற்கென விளையாட்டு மைதானங்களுக்கு சென்றதில்லை, பல முறை வீதியில் விளையாடும்போது யாராவது தலையில் அடிபடுவதும் நாங்கள் பயந்து ஓடி ஒளிவதும் பின்னர் கிட்டியும் புல்லும் அடுப்புக்கு பெற்றோர்களால் தாரைவார்க்கப்படுவதும், ஒரு சில நாட்களில் மீண்டும் புதிய கிட்டியும் புல்லும் இன்னொரு பிறவி எடுப்பதும் நடந்து கொண்டே இருக்கும்,

இன்று அது கிரிகெட் விளையாட்டாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன், அதுவும் இதுவும் ஒரு ஜாதி விளையாட்டுப்போல்தான் தோன்றும், நான் 8ம் வகுப்பு படிக்கும்போதெல்லாம கிரிக்கெட் மிக பிரபலமாக தொடங்கிவிட்டது எங்கள் ஊரில் அப்போதுதான் ரிலயன்ஸ் உலகக்கோப்பை இந்தியாவில் நடந்து கொண்டிருந்தகாலம், கிரிக்கெட் ஒரு செலவு தரும் விளையாட்டு, ஆரம்பத்தில் மரத்தாலான பேட் நாங்களாகவே செய்தோம் பந்துதான் பெரும் பிரச்சினையாக இருந்தது, சைக்கிள் tube பழயது வாங்கி சின்ன சின்ன வளையங்களாக வெட்டி பேப்பரில் சுற்றி மாட்டுவோம் அது நல்ல கனமாக இருக்கும், அது நிறைய மாட்ட மாட்ட பந்தின் கனமும் உருவமும் அதிகரிக்கும், வேறு சாதாரண கடையில் விற்கும் ரப்பர் பந்தோ அல்லது அப்போது 25 ரூபாய் விற்ற நிஜ கிரிக்கெட் பந்தோ சரிப்பட்டு வராது ஏனனில் எங்கள் பேட்டின் பவர் அப்படி அது நல்ல வேங்கை மரக்கட்டை ஆதலால் இரண்டு பவுண்ட்ரிகளில் எல்லாம் இரண்டு துண்டுகளாக போய்விடும், அப்போது நடந்த ரிலயன்ஸ் உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதென்று நினைக்கிறேன், அப்போது குதித்த குதி இன்னும் மறக்க முடியாது, ஆனால் நாம் இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோற்றுப்போய் கோட்டை விட்டது வேறுகதை,

பம்பரம், அதுவும் கூட ஆரம்பத்தில் கிராம தச்சர்களிடம்தான் செய்யப்பட்டது, பின்னர் கடைகளில் அழகழகாக வரத்தொடங்கியது, பம்பரம் வாங்குவது பெரிதில்லை, அதை பராமரிப்பது பெரும்பாடு, அதைவாங்கியபின் புதிதாக நல்ல ஆணி அடிக்கவேண்டும், எனக்கு தெரிந்தவரை அது பெரிய கம்பசித்திரம்தான், சரியான மையத்தில் அடிக்காமல் போனால் அவ்வளவும் வீணாகும், சரியான மையம் கண்டுபிடிக்க அவ்வளவாக பசங்களிடம் தொழிற்நுட்பம் இல்லாதகாலம், எப்படியோ சரியாக ஆணிஅடித்துவிட்டாலும், அதன் பின்தான் மற்ற விஷயங்கள் இருக்கின்றன, ஆணியின் கொண்டைபகுதியை கரைத்து நல்லகூறாக மாற்ற வேண்டும், யோசித்து பாருங்கள் எவ்வளவு கஷ்டம், இப்போது போல கிரண்டிங் இயந்திரமெல்லாம் அப்போது அறிந்ததே கிடையாது யார் யார் வீட்டில் தரை சொரசொரப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் யாராவது ஒருவன் தோளில் பம்பரக்கயிறும் கையில் பம்மரத்தின் ஆணியை வைத்து தீட்டிக்கொண்டிருப்பதை காணலாம்,

ஒருவாறு பம்பரம் தயாரானதும், விளையாட்டு, கடலோரம், என்பது போல் பலபெயர்கள் உண்டு,பெயர்கள் நினைவில் இல்லை, கடைசியில் விளையாட்டின் இறுதியில் அக்கு வைப்பது என்பது சடங்கு எவன் தோற்றுப்போனானோ அவன் பம்பரம் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் உடல் பகுதி சிறிது வெளியே தெரியும்படி வைத்து வெற்றி பெற்றவர்கள் தங்கள் பம்பரங்களின் கூர்மையான ஆணிகளால் ஓங்கி குத்துவார்கள், பெரும்பாலும் அந்த வைபவத்தில் அந்த பம்பரம் தனது உடலை இரண்டாக பிளந்து வைகுண்ட பதவி அடைந்துவிடும்,

அப்படியே பிழைத்துக்கொண்டாலும் அது ஒரு பெரிய அவமானமாக கருதி அதன் பின் அந்த பம்பரம் பொது விளையாட்டுகளில் விளையாடாமல் ஒதுங்கிவிடும்.
பம்பரம் சுழற்றுபவர்களின் திறமைகள், பலவாறு இருக்கும், தரையில் பம்பரம் விடாமல் காற்றில் விட்டு அப்படியே கையில் எடுப்பவர்கள் இருந்தார்கள், கடைசியில் வெற்றி பெரும் நேரத்தில் எல்லோரும் அவசரமாக தரையில் பம்பரத்தை சுழற்றி விட்டு கயிரால் தூக்கி கையில் பிடிக்கவேண்டும், அதை கோஸ் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் சரியாக நினைவில் இல்லை, அப்படி பிடிக்காமல் விட்டவனது பம்பரம் வட்டத்துக்குள் வைக்கவேண்டிவரும், அதனை மற்ற ஆட்கள் தனது பம்பரத்தாலே வெளியே கொண்டுவரவேண்டும், அல்லது வட்டதின் உள் சுழலவிட்டு அது சுழற்சி முடிந்த உடன் தனது உந்து விசையால் தானே வெளிவரவேணும் அப்படி வராமல் வட்டத்துக்குள்ளே மாட்டிக்கொண்டால், அதுவும் பிரச்சினைதான், இப்படி தெருவுக்கு தெரு வட்டம் போட்டு அதைச்சுற்றி பலர் நின்று விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்கலாம்., இன்று வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில் கையில் பம்பரத்தோடு நானும் எனது அண்ணன்கள், மற்றும் நண்பர்கள் இருந்ததை கற்பனை செய்தால் மிகவும் சிரிப்பும் குதூகலமும் தோன்றுவதை மறுக்கமுடியவில்லை,

ஆனால் இன்றைய நமது குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டியிலும் கணினி விளையாட்டிலும் தன்னை மறந்து போவதால் கிராம விளையாட்டுகள், அவர்களின் கவனத்தில் வராமலேயே போய்விட்டன,

என்றாலும் என்னால் முடிந்தவரை அவைகளை தொடர்ந்து எழுத நினைக்கிறேன்
பலரின் மலரும் நினைவுகளை அவைகள் தூண்டலாம், அது அந்த நிமிடம் நிச்சயமாக அவர்களை சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு

மீண்டும் வருகிறேன்

செல்வம்

3 comments:

 1. அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

  ReplyDelete
 2. வணக்கம் அய்யா, மிக நல்ல பதிவு. அருமையாக எழுதியுள்ளீர்கள்.
  சிறுவயதில் சாலையில் போன பெண்ணின் தலையில் நான் கிந்திய புல் பட்டு இரத்தம் வழிய அப்பாவிடம் அடி வாங்கியது நினைவுக்கு வருகிறது. மிக்க நன்றி அய்யா.

  ReplyDelete
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சுடர்மணி மற்றும் sivam அவர்களுக்கு

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்