Oct 4, 2008

உளறல்-3


எனது வலைப்பூ தொடங்கி எனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய பின் சில நண்பர்கள் தங்கள் மன மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் தெரிவித்திருந்தார்கள், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், அவர்கள் மூலம் இது இன்னும் பலபேருக்கு பரவவும் வாய்ப்பிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்,

இந்த வலைப்பூ தொடங்கவேண்டிய அவசியத்தை நான் எழுத நினைக்கிறேன், அது பல பேருக்கு உதவலாம் என்பதால்,

ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்த காரியம் இருக்கும், மனோதத்துவத்தில் சொல்வார்கள் உனது மனம் சோர்வடையும்போது உனக்கு பிடித்த செயலை செய் அது உன் மனதை சமநிலைப்படுத்தும், இது பல நாட்களாக நான் சோதித்து பார்த்து செயல்படுத்துவது, எனது பெரும்பாலான நண்பர்களிடம் நான் கேட்டிருக்கிறேன் உனது பிடித்த விஷயம் என்னவென்று பல பேருடைய பதில் அனேகமாக அவரின் பிடித்த விஷயம் இன்னும் அவர்களால் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்பதுதான்.

அதற்காக அவருக்கு பிடித்த விஷயம் இல்லாமல் இல்லை என்பதல்ல, அது இருக்கிறது ஆனால் அவர்களுக்கு சொல்லத்தெரியவில்லை, ஆனால் உங்களின் பொழுதுபோக்கு என்னவென்று கேட்டால் உடனையாக சொல்லி விடுகிறார்கள், தொலைக்காட்சி பார்ப்பது சமைப்பது,விளையாடுவது, படிப்பது என்று. இந்த பொழுதுபோக்குகள் அவர்களின் பிடித்த விஷயமாக இருக்ககூடும் அல்லது அதில் உள்ள ஏதோ ஒரு விஷயம் இருக்ககூடும், இந்த குழப்பம் புத்தகம் படிப்பவர்களுக்கு அவ்வளவாக வருவதில்லை ஏனனில் தனது மனநிலை சரியில்லாதபோது ஏதோ ஒரு புத்தகத்தை தேடிசென்றுவிடுகிறார்கள், அது அவர்களை சரிசெய்து கொள்ளச்செய்வதுடன் மற்றவர்களையும் பாதிக்காது செய்யமுடிகிற செயலாக இருக்கிறது, அதனால்தான் இன்றும் பலர் புத்தக புழுக்களாக இருப்பதை பார்க்க முடிகிறது, இசையோ அல்லது வேறு எந்த மார்க்கமானாலும் உங்களுக்கு அடுத்தவருடைய உதவி தேவை.

அந்த புத்தகங்களை படிக்கிற பழக்கம்தான் மனிதனை மனிதனாக வாழ உதவும் என்பது என் எண்ணம், எனது சிறிய வயதில் 10 ம் வகுப்பு காலத்தில்தான் நான் எழுத தொடங்கியதாக நினைவு அப்போது எழுதிய கவிதைகள் இன்னும் எனது டைரிகளில் பாதுகாப்பாக உள்ளது அவைகளின் தரம் பற்றி என்னால் எந்த உத்திரவாதமும் தரமுடியாததால் அவைகளை இப்போதைக்கு பதிவுகளில் ஏற்ற உத்தேசம் இல்லை ஆனால் அந்த காலம் தொடங்கி எனது தந்தையார் எழுதிய கடிதங்கள் எனது எழுத்து ஆர்வத்தை அதிகப்படுத்தின, எனது தந்தையாரின் கடிதங்கள் மிக நீண்டவையாகவும் வெகுகாலம் பாதுக்காக்க வேண்டியவையாகவும் அமைந்திருந்தன அத்தனை செய்திகள் ஆறுதல்கள் அதில் நிரம்பி இருக்கும், அப்பாவின் நண்பர்கள் சீடர்கள் என்று எல்லோருக்கும் அவரின் கடிதங்கள் பெரும் இன்றியமையாத பொருளாகிப்போயிருந்தது, நான் வீட்டில் இருந்து வெளிப்புறப்பட்ட காலத்தில், எனது வெளிநாட்டு வாழ்க்கையில் எனக்கும் எனது தந்தையாருக்குமான கடித தொடர்பு அதிகரித்தது, அந்த காலங்களில் எனது பிடித்த விஷயம் என்பது என் தந்தையாருக்கு நான் எழுதும் கடிதங்கள்தான், எனது வெளிநாட்டு வாழ்க்கை முறைகள் கலாச்சாரம் எனது சிரமங்கள் என்று நான் எழுதாத விஷயங்கள் எதுவும் இல்லை எனலாம் மனது சோர்வாக இருக்கும்போது நான் கடிதமெழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன், இத்தனைக்கும் கைத்தொலைபேசிகள் மலிந்துவிட்ட காலம். பெரும்பாலான கடிதங்கள் சிலநாட்களில் முழுமை பெற்று இந்தியாவில் எனது தந்தையை அடைந்துவிடும், அம்மாவுக்கும், அப்பாவுக்க்கும் எனது கடிதங்கள் எனது இருப்பை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன் அதில் வெளிப்படும் நமது பிம்பம் ஒரு கம்பீரமானதாக அவர்கள் உணர்ந்திருப்பதை அறிந்தேன், தனது நண்பர்களிடமெல்லாம் எனது கடிதங்களை தந்தையார் கொடுத்து படிக்க சொன்னதை சில நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன், இந்த விஷயமும் கூட என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டியது,

எனது தந்தையாரின் கடிதங்கள் பெரும் ஆசீர்வாதங்களும் ஞான அனுபவங்களும் குடும்பத்து நிகழ்ச்சிகளைப்பற்றிய வர்ணனைகளையும், பேரப்பிள்ளைகளின் திருவிளையாடல்களயும் கொஞ்சம் தற்காலிக அரசியல் சூழல்களையும் விவரித்த வண்ணம் இருக்கும்.

தனது நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர்கள் எனக்கு கடிதமெழுதும் பொருப்பை எனது தாயாரிடம் வலியுருத்தியுள்ளார்கள் அது தனது இறுதி நேரத்தை அறிந்து கொண்டதின் காரணமாக ஆனால் எனது அம்மையார் அதனை அப்போது ஏற்க முடியாமல் மறுத்துவிட்டதும், ஆனால் அந்த கடிதமே எனக்கு அவர் எழுதிய கடைசிகடிதமாக அமைந்து விட்டது. அதன் பிறகு அவரை நான் சந்தித்தது அவரின் இறந்த நாளில்தான், அவரின் மரணம் எங்களின் வாழ்க்கை முறையையே மாற்றி போட்டுவிட்டது, அவரின் ஆதிக்கத்தால் எத்தனை துயர்கள் எங்களை அணுகாமல் இருந்தன என்பது இப்போது புரிகிறது, அவர் எளிமையின் மறு உருவம் அவரைப்பற்றி எழுத எனக்கு நேரங்கள் போதாது, அத்தனை பெரிய தியாகங்களை எங்களுக்காக அவர் செய்து இருக்கிறார்கள், ஒவ்வொரு தகப்பனும் அப்படித்தான், அதில் அவர் சற்று அதிகமான பாதிப்புகளை ஏற்ப்படுத்தினார், யாரையும் குறைகூறவோ குற்றம் சொல்லவோ விரும்பியதில்லை, எல்லோரையும் நேசிக்கும் பழக்கம் அவரிம் இருந்தது அது எப்படி வந்தது என்று தெரியவில்லை,

உறவினர்களை நண்பர்களாக பார் என்று எண்ணிடம் பலமுறை சொல்லி இருக்கிறார் அப்போதுதான் அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது இருக்கமுடியும் என்று பலமுறை சொல்வார்.

அவருக்கு கடிதம் இனிமேல் எழுத முடியாமல் போனதை என்னால் ஜீரணிக்கமுடியாமல் இருந்தகாலத்தில்தான் இந்த வலைப்பூவை தொடங்க அதுவும் அவர் சமாதி படங்களுடன் ஆரம்பித்தேன், அவரோடான எனது கடித உரையாடல் இப்போது எனது நண்பர்களோடும் தொடர முடிகிறது, எனது எண்ணங்கள் எனது பிடித்த விஷயங்கள் இதில் வரும் உங்களின் கருத்துக்களை கீழே உள்ள comments
பகுதியில் ஆங்கிலத்திலும் முடிந்தால் தமிழிலும் எழுதலாம், தமிழில் எழுத வழி வேண்டுபவர்கள் தொடர்பு கொண்டால் வழிகளை சொல்லித்தர தயாராக இருக்கிறேன்.

தமிழில் எழுதுவது சிரமமான விஷயமில்லை, மிக எளிது மிகமிக எளிது பல மென்பொருள்கள் உள்ளன,

அன்புடன்

செல்வம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்