Jan 19, 2009

எண்ணங்கள்

ஒரு புரியாத சூழலில் இதை எழுதுகிறேன், நடக்கும் சம்பவங்களை தொகுத்து அதன் செயல்பாடுகளை எழுதலாம் என்று நினைக்கிறேன், காசாவில் இன்று கணக்குப்படி 1000 த்துக்கும் மேலான உயிர்களை பலிவாங்கி விட்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது இஸ்ரேலின் ருத்திர தாண்டவம், குழந்தைகள் பெண்கள் என்று எல்லாவிதமான உயிர்களும் எந்த வேறுபாடும் இல்லாமல் கொல்லப்படுகிறார்கள். அங்கே வாழ முடியாமல் சாதாரணமக்கள் கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்கிறார்கள்.

இதை எல்லாம் தடுக்க ஐ.நா சபை கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானம் தங்களை கட்டுபடுத்தாது என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது காசாவில் இருந்து ஹமாஸ் தனது பங்குக்கு ராக்கெட்டுகளை ஏவிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்ரேல் தரப்பில் இது வரை 13 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள், அதில் 3 பேர் பொது மக்கள், மீதம் ராணுவ வீரர்கள்.

இந்த மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது புரியவில்லை, ஆனால் உலக உயிர்களின் மதிப்பு இடத்துக்கு இடம் எப்படி மாறுபடுகிறது என்பது ஒரு கொடுமையான புதிர். மனித உயிர்களின் மதிப்பு கிட்டதட்ட பணத்தின் மதிப்பு போல ஆகிவிட்டது, இதில் எது சரி என்று தெரியவில்லை,

சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடியப்போகிறது, பல வலைப்பூக்கள், நிறைய செய்திகளை கொடுத்திருக்கிறார்கள், இந்த முறை எனது அபிமான எழுத்தாளர் சாரு நிவேதாவின் புத்தகங்கள் முன்பை விட அதிகம் விற்பனையாவதாக சொல்கிறார்கள், உண்மை தெரியவில்லை, மனித மனம் புத்தகங்களை நாடுதல் மிகவும் பாராட்ட வேண்டிய விஷ்யம், பல எழுத்தாளர்கள் புத்தக விற்பனை நிலையத்தில் இருந்து வாசகர்களை சந்தித்து இருக்கிறார்கள், எஸ்.ராமகிருஷ்ணன், தன் தளத்தில் புத்தக விழா பற்றி எழுதியுள்ளார், கிழக்கு பதிப்பகமும், உயிர்மை பதிப்பகமும் நிறைய புத்தகங்களை வெளியிட்டுள்ளன, அவையாவும் இன்றைய பிரபலமான எழுத்தாளர்களின் உருவாக்கம், இந்த வலைப்பூக்கள் வந்த பின் நிறைய பேருக்கு எழுத்தாளர்கள் அறிமுகமாக தொடங்கி இருக்கிறார்கள்.

புத்தகங்களை படிக்க படிக்க உங்களுக்குள் ஒரு மாறுதல் நிச்சயம் வரும், சிறு வயதில் வெறும் இதிகாசங்களைப் படித்து படித்து ஒருவகையான சமுதாய அமைப்பியலில் இருந்து வெளியிலேயே இலக்கியங்களை வைத்துவிட்டோம், அதுவும் அவைகளை புனிதம் சார்ந்து கற்பிக்கவும் தொடங்கி அது வாழ்வுக்கு சம்பந்தமில்லாத போற்றுதலுக்கு உரிய ஒரு இலக்கியமாக இருந்து விட்டது,

ஆனால் இன்றய இலக்கியங்கள் நிறைய இயல்பு வாழ்வில் பின்னனியில் எழுதப்பட்டதால் அவைகளை படிக்கும்போது நாமும் அவர்களாக வாழ முயலவேண்டிய கட்டாயத்துக்குள் அழைத்துச்செல்வதை உணரமுடிகிறது அதனால் அதன் தன்மைகள் நமக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும், சாருவின் எழுத்துக்கள் மிகவும் இயல்பாக நம் தினசரி வாழ்வியல் பிரச்சினைகளை நகைச்சுவை ததும்ப சொல்வதை பார்க்கலாம். அதுபோல் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளும் மிகவும் சுகமாக நம்முள் பிரவேசிப்பதை உணரமுடியும். இப்படி பல எழுத்தாளர்களின் வெளியீடுகள் இன்று கண்காட்சிகளில் குவிந்து கிடக்கின்றன,

பொங்கலும் திருமங்கலம் இடைத்தேர்தலும் முடிந்து விட்டன, பொங்கல் பழய மகிழ்ச்சியுடன் இருந்திருக்குமா தெரியவில்லை, எனக்கு கிடைத்த சிறு வயது மகிழ்ச்சி இன்று என் குழந்தை என்னால் கொடுக்க முடியவில்லை, இதை எல்லா பெற்றோரும் உணர்வார்களா தெரியவில்லை, எங்கள் வீட்டில் நான் சிறுவனாக இருந்த காலங்களில் பொங்கல், தீபாவளி என்பதெல்லாம் 30, 40 பேர் கொண்ட பெரிய விழாக்கள், எல்லா குழந்தைகளும் ஒன்றாக பொங்கல் பொங்கி, அதுவும் பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் சொல்ல எல்லா குழந்தைகளையும் முன்பே அழைப்பார்கள், நாங்கள் எல்லாம் அங்கே சென்று சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருப்போம் பானை பொங்கும் போது ஒரே கோரஸாய் பொங்கலோ பொங்கல் என்று கத்துவது என்று மிக சுகமாக இருக்கும்.

எனது முந்தைய பதிவில் கூறியுள்ளது போல காலை பொங்கல் பானை கோலம் போடுவதில் இருந்தே பொங்கல் சுகம் தொடங்கிவிடும், அப்படிப்பட்ட பொங்கல் இப்போது இல்லை, மறுநாள் மாட்டுப்பொங்கல்தான் குழந்தைகளுக்கு பிடித்த பொங்கலாய் இருக்கும் ஏனனில் அன்றுதான் தாளங்களும் மாடுவிரட்டுகளும் வண்டி சவாரிகளும் இருக்கும் அதைப்பற்றி இன்னுமோர் பதிவில் விவரமாக எழுத வேண்டும்,

மூன்றாம் நாள் காணும் பொங்கல், அதை கன்னிப்பொங்கல் என்றுதான் சொல்லுவோம், பிற்பாடு அது காணும் பொங்கல் என்று மாறி அழைக்கிறோம், எது சரி என்பது தெரியவில்லை, அதில் சிறுவர்கள் தனியாக வைக்கும் கூட்டாஞ்சோறு விழா இருக்கும் அது மிக உற்சாகமாய் இருக்கும், அதெற்கென ஒரு திடல் இருக்கும் அதெல்லாம் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை, இதன் எல்லா விவரங்களும் வேறோரு பதில் விரமாக எழுதுகிறேன்.

இந்த சந்தோஷத்தில் சிறு அளவு கூட எனது குழந்தைகளுக்கு இப்போது கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது, கேஸ் அடுப்பில் வைக்கும் பொங்கல்தான் இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு தெரியும் என்பது மிகவும் கவலையான விஷயம்.

நேற்று நான் பணிபுரியும் இடத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு மற்றொரு பணி இடத்திற்கு சென்றேன், அரபு நாடுகளில் பெரும்பாலும் கிராமங்களை காண்பது அபூர்வம் காரணம் நம்மை போன்ற வெளிநாட்டினர் எல்லாம் வாழ்வது நகரங்களை சார்ந்த பணிகளில்தான் என்பதால், ஆனால் செளதி அரபியா மிக பரந்த நாடாய் இருப்பதால் நிறைய கிராமங்கள் நிறைந்த நாடாகவும் இருக்கிறது.

புகழ் பெற்ற புனித நகரான மதினா விற்கு செல்லும் சாலை வழியாக சென்றோம், வழி நெடுக நல்ல மலைபாங்கான சாலை மலைகளுக்கு இடையேதான் சாலை செல்கிறது, மிக அழகாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் அதன் வழியே செல்லும் போது ஒரு பாலைவன நாட்டில் இருக்கிற உணர்வில்லை, ஆனால் மலைகள் எல்லாம் வறட்சியாகத்தான் இருந்தன, மலைகளை குடைந்துதான் சாலை வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள், இடையிடையே பள்ளதாக்குதல் போல சில பகுதிகள் அதில் வீடுகளும் மசூதிகளும் காணப்படுகின்றன, மழையோ வெள்ளமோ அதிகம் வராத பகுதிகள் என்பதால் மேடு பள்ளம் என்பதெல்லாம் இல்லாமல் பிடித்த இடங்களில் வீடுகட்டி அங்கே ஒரு கிராமம் உருவாகி இருக்கும் என்பது போல் தெரிகிறது. அரபு காலாச்சாரங்களில் ஆரம்ப காலம் என்பதால் நிறைய அற்புதமான கதைகளும் வரலாறுகளும் நிறைந்த பகுதிகளாக இருக்கலாம், அவைகளை சொல்லக்கூடிய புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தால் அதைப்பற்றி எழுதுகிறேன், இடை இடையே சில ஒற்றை வீடுகளும் காணப்படுகின்றன, பெரும்பாலான கிராம வீடுகள் நல்லமுறையில் இல்லை, வெளிப்புரத்தில் பூச்சுக்கள் இல்லாமல் சற்று சிதிலாமன நிலையிலேயே காணப்படுகின்றன, ஆனால் எல்லா வீடுகளிலும் ஒரு ஜன்னல் குளிர்சாதனம் (window AC) அரத பழசாக இயங்கிகொண்டிருக்கிறது, மின்சாரம் விநியோகம் பெரிய தடையில்லாமல் கிடைக்கிறது. என்பதால், மிக மோசமான நிலையில் உள்ள பின்புறம் திறந்த காரில் காய்கறிகளும் மற்றும் சில பொருட்களும் வைத்துக்கொண்டு ஊர் கூடும் கடைத்தெரு போன்ற இடத்தில் மிகவும் ஏழ்மையான அரபிகள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்,

நம்மூரில் கூறு கட்டி விற்கும் பாட்டிகளையும் தாத்தாக்களையும் பார்த்திருபீர்கள், அதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள், பெரும்பாலும் ஏழைகள் அவர்களின் உடைகள் பெரிதும் எளிமையாகவே இருக்கின்றன, ஆனால் எல்லா விதமான அமைப்புகளும் உள்ளன ஒரு தபால் நிலையம், ஒரு காவல் நிலையம், தீயனைப்பு நிலையம், கடைகள் சிறு சிறு உணவகங்கள், மசூதிகள், பள்ளிகள், பெட்ரோல் நிலையம் ஆனால் எல்லாமே மிக பழயவை ஒரு எளிமையை தனக்குள் புகுத்திக்கொண்டு நம்மோடு இயல்பாய் இருப்பது மாதிரி இருக்கின்றன.

அந்த கிராமத்தின் கடைதெருவில் சிறுது நேரம் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சுற்றிப்பார்த்தேன், அதன் எளிமையும் பழமையும் என்னை ஒருவாறு புதிய உலகுக்கு கொண்டு வந்ததுபோல் இருந்தது,

அரபு நாட்டினர் எல்லாம் பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல தினசரி நன்கு உழைத்து வாழும் எளிமையான மனிதர்களும் நிறைந்து இருப்பது அறிந்து கொள்ளமுடிந்தது.

தவநெறிச்செல்வம்

1 comment:

  1. நான் சில நேரம் அதிகம் சிந்திப்பது உண்டு, ஏன் சில நாடுகள் மட்டும் யுத்த பூமியாக இருக்கிறது என்று, அதற்கு இதுவரை விடை கிடைக்க வில்லை, உதாரமனாக வைத்துக்கொள்ளுங்கள், ஸ்ரீலங்கா , ஆப்கானிஸ்தான் , இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈரான்-ஈராக், போன்ற நாடுகளில் யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது, அவர்களுக்கெல்லாம் என்ன வேண்டும் என்பதை உலக நாடுகள் எல்லாம் ஓன்று கூடி இந்த பிரச்சனைக்கு ஒரு வழி வகிர்க்க வேண்டும் இல்லையென்றல், தினம் தினம் மனித உயிர்கள் மாண்டுபோய் சுடுகாடாய் ஆகிவிடும். எந்த பாவமும் செய்யாத பச்சிளம் குழந்தைகள் கொல்லபடுவதை கண்டால் ஏன் நாம் மனித பிறவி எடுத்தோம் என்று கூட சில நேரம் சிந்திப்பது உண்டு. நம்மால் முடிந்தது பிராத்தனை ஓன்று மட்டும்தான் அதை தவிர வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

    அன்புடன்
    ச.ஜீவா

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்