Apr 23, 2009

அவரவர் அவர் வேலையை பார்க்கிறார்கள் இலங்கையாம் இலங்கை.

என்னையா உலகம் இது, மனது பதறுகிறது, அப்பாவி மக்கள் தலையில்லாத குழந்தைகளின் சடலங்கள், சோற்றுக்காக மக்கள் போராடும் அவலம், பதறிக்கொண்டு வருகிறது, முன்பெல்லாம் ஆப்பிரிக்க தேசத்தில் நடந்து கொண்டிருந்தது போல் இன்று நமது பக்கத்து தேசத்தில் உலகின் ஒரு அற்புதமான ஒரு மனித இனம் அழிகிறது அல்லது அழிக்கப்படுகிறது,

 

இதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே இல்லை, கருணாநிதி உள்ளிட்ட அரசியல் வாதிகள் வழக்கம் போல எந்த இழப்பும் இல்லாமல் என்ன என்ன நாடகம் நடத்தி ஓட்டு வாங்கலாம் என்று யோசிக்கிறார்கள், அதை நிறைவேற்றவும் செய்கிறார்கள்

 

தமிழகத்தின் எல்லா பத்திரிக்கைகளும் இதையெல்லாம் பயன்படுத்தி தத்தமது சர்குலேஷனை உயர்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள், காங்கிரஸ் இந்த பிரச்சினை தனது அடுத்த ஆட்சி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக்கூடாதே என்று பதறுகிறது அல்லது அப்படி நடிக்க முயல்கிறது,

 

தமிழக தொலைக்காட்சி சானல்கள் வழக்கம் போல் தனது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களையும் சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளையும் வழமைபோல் தந்து கொண்டிருக்கிறது,

 

எல்லா பிரச்சினையிலும் கருத்து கூறும் அல்லது கவலை அல்லது அக்கறை தெரிவிக்கும் சினிமாதுறை வழக்கம் போல நடைபெறுகிறது அதன் பெரிய நடிகர்கள் தத்தமது தினசரி கடமைகளை செய்வனே நிறைவேற்றி தனது அடுத்த படங்களைப்பற்றிய கவலையில் இருக்கிறார்கள்,

 

IPL ன் இன்றைய போட்டிகளை கண்டு அதன் வெற்றிகளை விவாதித்து ஒரு இளைஞர் கூட்டம் சாவகாசமாய் பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறது,

 

இன்னும் எத்தனையோ உபயோகம் இல்லாத செயல்களின் தமிழன் வழக்கம் போலவே வீண் செய்து கொண்டிருக்கிறான், இதெல்லாம் இலங்கை அரசுக்கு தெரியாமல் இல்லை, இது வெறும் வாய்ப்பேச்சு கூட்டம் அதனால்தான் அவர்கள் தங்களின் எந்த செயல்பாட்டையும் மாற்றாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள்,

 

தலைவர்களே இப்படி சுயநலமாகவும் செயல்பட முடியாத சிங்கங்களாகவும் ஆகிவிட்ட நிலையில் நாம் என்னதான் செய்யப்போகிறோம் என்று தெரியாமல் செய்திகளைப்படித்து பதறுகிற ஒரு சராசரி நிலையில் சாதாரணமக்களாகிய நாம் இருக்க வேண்டிய நிலை மிகவும் மனது வலிக்கிறது, ஒரு சுய நலமில்லாத ஒரு தலைவன் தமிழினத்தில் தோன்றவே மாட்டானா?

 

அப்படி ஒருதலைவன் வந்து மிகப்பெரிய வன்முறையில்லாத ஒரு போராட்டத்தின் மூலம் இன்னொரு மகாத்மாவாய் இந்த மனித குல சீரழிவையெல்லாம் தடுத்து நிறுத்த மாட்டானா என்று உள்ளம் ஏங்குகிறது.

1 comment:

  1. நம் தமிழ் இனம் அழிவதை தடுக்க முத்து குமார் உயிரைவிட்டார், முத்தமிழ் கலைஞர் அறிக்கைவிட்டார் , நாம் அனுதாப அலையைவிட்டோம், இலங்கை படையினர் அணுகுண்டை விட்டனர், நம் இனம் மூச்சை விட்டது, எல்லாம் முடிந்துவிட்டது போங்கள் என்று இயலாத என்னால் கருத்துரையை மட்டும்தான் இடமுடியும்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்