Oct 8, 2008

ரஜினியும் அரசியலும் உளறல்-5


இப்போது ரஜினிகாந்த அவர்கள் அரசியலுக்கு வரவேண்டி ரசிகர்கள் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது, இதன் இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தொடக்கம் என்பது எந்த காரணத்தில் உருவாகிறது என்று யோசிக்க வேண்டியிருக்க்கிறது.

இந்திய அரசியலை பொருத்தவரை ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டன, அதன் காரணங்கள் ஒரு பொதுவான மக்கள் பிரச்சினையாக இருந்ததை காணமுடியும். இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது நமது நாட்டின் மக்கள் படும் அடிமை நிலையை துடைத்து அவர்களுக்கு வேண்டிய அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டி உருவாக்கப்பட்டு பின்னர் அதுவே பெரிய சுதந்திர இயக்கமாகி இந்திய விடுதலைக்கு வித்திட்டது, அதன் தோன்றுவதற்கான காரணத்தில் இருந்த முக்கியம் எவ்வளவு ஆழமானது என்பது நாம் எல்லோருக்கும் புரியும்,

அடுத்து நமது தமிழகத்தில் தோன்றிய கட்சிகளின் தோன்றிய காரணங்கள் மிகவும் ஆழமாகத்தான் இருந்தன, திராவிடக்கழகம் தோன்றிய போது அது தொடங்கிய காரணம் எவ்வளவு மாற்றங்களை கொண்டுவந்தது என்பதும், அது ஒரு அரசியல் இயக்கமாக இல்லாததால் அதனால் சில தொலைவுகளை தொட முடியவில்லை என்பதும் அதனால் திராவிட முன்னேற்ற கழகம் உருவானது என்பதும் எல்லோரும் அறிந்ததே அந்த நேரத்தில் அப்படி ஒரு தேவையும் வெற்றிடமும் ஏற்ப்பட்டதால் அதனை தொடங்கியபோது பெரும் ஆதரவும் பெரும் மக்கள் மன மாற்றமும் தொடங்கியதை நாம் அறிவோம், காமராஜரின் அரசியல் வீழ்ச்சிக்கு பின்னாள் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு வெற்றிடம் ஏற்ப்பட்டது அதனை நிறைவு செய்ய அப்போது எம்ஜிஆரின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவானது அதுவும் பெரும் வெற்றி பெற்றது அதற்கான காரணம் எம்ஜிஆரின் கவர்ச்சி என்பது ஒரு உண்மை என்றாலும் திமுக வுக்கு அடுத்ததாக காங்கிரஸ் இல்லாமல் அது ஒரு குழப்பமான நிலையில் இருந்தது அது மக்களை இன்னொரு இயக்கத்தை நோக்கி செல்ல வைத்தது.

அதன்பிறகு கடந்த 1996ல் ஜெயலலிதா அரசு தன் மோசமான ஆட்சி காரணமாக கெட்ட பெயர் எடுத்த நிலையில் வந்த தேர்தலில் உண்மையிலேயே ஒரு வெற்றிடம் ஏற்ப்பட்டு இருந்தது அது தமிழ்மாநில காங்கிரஸ் மூலம் ஓரளவுக்கு நிறைவு பெற்றாலும் அப்போது ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் அது இன்னொரு எம்ஜிஆர் ஆக மாறி ஒரு புதிய தருணத்தை தமிழக அரசியலில் உண்டாக்கியிருக்கலாம்.

ஆனால் அப்போதும் அவர்கள் திமுக கூட்டனிக்குள் போனதால் எதிர்கட்சி என்ற இரண்டாமிடம் மீண்டும் அதிமுகவுக்கே கேட்காமலேயே போய்விட்டது, எம்ஜிஆர் எப்படி காங்கிரஸை பின் தள்ளி தமிழகத்தில் திமுக அதிமுக என்று ஆக்கினாரோ அதுபோல் திமுக காங்கிரஸ் என்று அதிமுகவை பின் தள்ளிவிட்டு அந்த இடத்தில் தமிழ்மாநில காங்கிரஸோ அல்லது ரஜினியுடைய கட்சியோ வந்திருக்கவேண்டும்.
ஆனால் இவர்களுக்கு இருந்த கடைசிநேரக் குழப்பம் இவர்களை மீண்டும் திமுக கூட்டணிக்குள்ளே கொண்டுபோனது அதை கலைஞரும் நன்கு புரிந்து கொண்டு தன்னால் முடிந்தவரை அந்த தேர்தலை தனக்கு சாதகமான கூட்டனியாக மாற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றார், அதன் பிறகு அடுத்த தேர்தலில் தனது மோசமான கூட்டணி முடிவை எடுத்ததன் மூலம் மீண்டும் அதிமுகவே வரவும் வாய்ப்பை ஏற்படுத்தினார், இந்த நேரத்தில் அப்படி பெரிய வெற்றிடம் ஏதும் இல்லை என்றே சொல்லவேண்டும், அதன் பிறகு வந்த தேர்தலிலும் அதிமுகவும் திமுகவும் கிட்டதட்ட பெரிய வீழ்ச்சிகளை நோக்கி செல்லவில்லை அதனால் அந்த வெற்றிடம் என்கிற சூழல் இப்போதுவரையில்லை,

ஆனால் இன்று பொதுவாக ஒரு மன மாற்றம் காணப்படுகிறது, முக்கியமாக திமுக அரசின் செயல்பாடுகள் பெரும் அதிர்ப்தியை மக்களிடம் உருவாகியுள்ளது, அதற்கான முக்கியமான காரணங்கள் விலைவாசி உயர்வு, மின் தடை, இலங்கை பிரச்சினை, ஆகியவை மற்றும் சன் டிவி உடனான எதிர்நிலை பாமக வின் பிரிவு, இடதுசாரிகளின் பிரிவு மற்றும் கலைஞரின் கவிதைகள் என்று நிறைய அதிர்ப்தி அலைகள் போன்ற காரணங்களால் இன்று திமுக கூட்டனி ஒரு பலவீனமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஒரு சிறிய வெற்றிடம் உருவாகியிருக்கிறது, ஏன் சிறிய வெற்றிடம் என்று சொல்கிறேன் என்றால் இப்போது ஏற்ப்பட்டிருக்கும் இந்த பின்னடைவை சரிசெய்யக்கூடிய நிலையில்தான் திமுக உள்ளது அதற்கான காலமும் நிறைய இருக்கிறது, ஒருவேளை பாமக மீண்டும் கூட்டணியில் மீண்டும் சேரலாம் அல்லது அதிமுக அணி தனது செயல்பாடுகளால் நல்ல கூட்டணியை அமைக்காமல் போகலாம் இப்படி நிறைய காரணங்கள் இருப்பதால் அது சிறிய வெற்றிடமாக இருக்கிறது, அதனை நிரப்ப விஜயகாந்த் மிக சரியான பாதையில் தனது கட்சியை இயக்கி கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன், காரணம் இன்று 1967 போல் இல்லாமல் வாழ்க்கை முறைகள் மிகவும் மாறிவிட்டன மக்கள் எந்த நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக அலைந்துகொண்டும் அதிகரித்துப்போன வாழ்க்கை தேவைகளுக்காக அலைந்துகொண்டும் இருக்கிற சூழலில் கூட விஜகாந்துக்கு கூட்டம் கூடுவதை பார்க்கவேண்டும் மற்ற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் பொது மக்களும் அதிகம் கூடுகிறார்கள் என்பது கவனிக்கவேண்டியது.

எனவே இந்த வெற்றிடத்தேவை இப்போது இல்லாத நிலையில் ரஜினியின் புதிய கட்சி எந்தகாரணத்திற்காக தொடங்கமுடியும் என்பது மிகவும் முக்கியமான கேள்வி.
அப்படியே தொடங்கினாலும் அது ரஜினியின் செல்வாக்கை சிரமப்படித்திவிடக்கூடும் என்றே நினைக்கிறேன். ஆனால் ரஜினிக்கு இப்போது ஒரு தேவை இருக்கிறது அது தனது குசேலன் படம் தோல்வி அடைந்ததால் தனது அடுத்த படமான எந்திரன் மிக அதிக பொருட்செலவில் வர இருக்கும் நிலையில் அது எந்த பாதிப்பும் அடையாமல் இருக்கவேண்டி தனது ரசிகர்களை எழுச்சியுடன் வைத்திருக்கவேண்டியதும் வேறு யாருடைய பகைமையையும் பெறாமலும் இருப்பது அவசியம், ஏனனில் அதுவும் பலரது உழைப்பும் எதிர்காலமும் இணைக்கப்பெற்ற தொழில் அதில் ரஜினியின் அக்கறை மிகவும் இன்றியமையாதது.

இதெல்லாம் மனசில் கொண்டே அவரும் தனது தற்போதைய ரசிகர்களை சந்தித்திருக்ககூடும் என்று நினைக்கிறேன். எனக்கும்கூட இந்த குழப்பங்கள் எல்லாம் ரஜினி என்கிற தனிமனிதனின் இயல்பில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நல்லமுறையில் சரியாக்கப்படவேண்டும் என்றுதான் தோன்றுகிறது, அதற்கான காலம் சரியான வெற்றிடம் உருவாகுதல் பொருத்ததுதான்,

முன்பெல்லாம் கட்சிகளின் தலைவர்கள் அப்பப்போது மாறி வருவார்கள் அது இப்போது இடதுசாரிகளிடமும் பாஜக விடம் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறேன், அதன் பொருள் கட்சிகாகத்தான் தலைவர் என்பது மாதிரி, மக்களும் கட்சியின் கொள்கைகளை நம்பி வாக்களிகலாம், ஆனால் இப்போது காங்கிரஸ் தொடங்கி கிட்டதட்ட பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் நிரந்தர தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள் ஆகையால்தான் ஒரு தனிமனிதன் நினைத்தால் தனது செல்வாக்கை கொண்டு கட்சி தொடங்கமுடிகிறது, இந்நிலை எவ்வளவு ஆரோக்கியமானது என்று தெரியவில்லை,

செல்வம்

2 comments:

  1. சரியான முடிவினை தவறான நேரத்தில் எடுப்பதும் தவறே.

    ரஜினிகாந்த் இதற்கு விதிவிலக்கா?
    காலம் பதில் சொல்லும்.

    என் மனதில் உள்ளதை நீங்கள் அப்படியே எளுதிவிட்டிர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி கண்ணன் அவர்களே

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்