Dec 10, 2008

உளறல் - 12 (நினைவுகள்)

தங்கர் பச்சனின் பள்ளிகூடம் பார்த்தபின் எனது பள்ளிக்கு சென்று காணவேண்டும் என்கிற ஆசை உண்டானது, அனேகமாக இது எல்லோருக்கும் தோன்றிய விஷ்யமாக இருக்கலாம், எனது பள்ளி வாழ்க்கை இரண்டு இடத்தில் என்பதால் எனது இரண்டு பள்ளிகளையும் காணவேண்டிய அவசியம் உள்ளது ஆனால் அது இன்னமும் நிறைவேறவில்லை.

சிலருக்கு பள்ளிகள் மாறிக்கொண்டே இருக்கும், காரணம் தந்தை தனது பணிமாற்றத்தால் அவ்வாறு நடைபெரும், பெரும்பாலானவர்கள் தனது பிள்ளகளின் கல்விக்காக குடும்பத்தை ஒரு இடத்திலும் தினசரி பயணித்து வேலைக்கு செல்பவர்களாகவும் இருப்பார்கள், அப்படி உள்ளவர்களின் குழந்தைகள் ஒரே இடத்தில் படிக்கும், எனக்கு கிட்டத்தட்ட 10 ம் வகுப்பு வரை ஒரே பள்ளியும் ஒரே ஊரும் அமைந்தது.

பள்ளி என்பது ஒரு சுகமான அனுபவமாக அதனைவிட்டு வெளியே வந்த பின் தான் உணரமுடியும், படிக்கும் காலங்களில் பெரும்பாலும் எப்போது விடுமுறை கிடைக்கும் என்கிற மனநிலையே இருந்து, ஆனால் இப்போது குழந்தைகளுக்கு இருக்கும் படிப்பு சுமைகள் அப்போது இல்லை, வீட்டுபாடம் என்பதுகூட அதிகம் எழுதி சென்றதாய் நினைவு இல்லை, அதிக நேரம் விளையாட்டு மைதானத்தில் கழிந்ததாக நினைவு. எனது வரலாற்று வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக கழிந்தன, மற்ற வகுப்புகள் அப்படி சென்றதாக நினைவு இல்லை, என்றாலும் கணிதம் மிகவும் கைவந்த கலையாக இருந்தது.

ஆசிரியர்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதை எப்போதும் இருக்கும், சைக்களில் எவ்வளவு வேகமாக வந்தாலும் எதிரில் ஒரு ஆசிரியர் வருவது கண்டால் உடனே நிறுத்தி இறங்கி அவருக்கு வணக்கம் தெரிவித்து அவர் கடந்து போனபின் தான் மீண்டும் சைக்கிளில் ஏறுவது வழக்கம் அது கிட்டதட்ட உடம்போடு ஊறிப்போன ஒரு செய்கை. அப்படி செய்யாவிட்டால் அவர் கோபிப்பார் என்றெல்லாம் எண்ணி செய்ததில்லை, இப்போதைய மாணவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை, இன்னும் முந்தைய காலங்களில் என்ன மாதிரி மரியாதைகள் இருந்தன என்று என்னை விட மூத்தவர்கள் எழுதவேண்டும்.

ஆசிரியர்கள் கற்று கொடுக்கும் சுவாரஸ்யத்தை பொருத்தே மிகவும் நேசிக்கப்பட்டார்கள், கடுமையான ஆசிரியர்களை கண்டால் மாணவர்களுக்கு பயம் மிக அதிகமாக இருக்கும். அவர்களின் வகுப்புகளில் மாணவர்கள் ஒரு கைதி போலோ அல்லது தற்காலிக மனநோயாளிபோலோதான் இருக்கவேண்டி இருந்தது. ஆனால் இப்போதைய சட்டங்கள் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கமுடியாமல் செய்து விட்டதால் ஒருவேளை மாணவர்களின் மரியாதை மாறிபோயிருக்கலாம்,

சைக்கிள் ஓட்ட பழகுவது பற்றி எழுத வேண்டும் என்று பல நாள் நினைத்தது உண்டு. சிறு வயதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எல்லோருக்கும் சைக்கிள் பழக்வேண்டிய சூழல் வந்துவிடும் இது ஒரு கட்டாய விஷயமாக அப்போது இருந்தது. இப்போது அது மோட்டார் சைக்கிள் கார் என்று மாறிவிட்டது,

சைக்கிள் ஓட்ட தருகிறேன் என்றால் அப்போது எவ்வளவு பெரிய வேலையானாலும் செய்ய காத்திருந்த காலம்.குரங்கு பெடல் என்று ஆரம்பித்து, பின்னர் கம்பிகளில் பயனித்து பின்னர் சீட்டுக்கு தாவி பின்னர் கேரியரில் அமர்ந்து கொண்டு ஓட்டுவது வரை ஒரு வளர்சி இருக்கும் அதன் பின்னர் டபுள்ஸ் டிரிபிள்ஸ் என்று தொடரும், குரங்கு பெடலில் யாராவது சைக்கள் ஓட்டிசெல்வதை பார்க்கும் போது சைக்கிள் ஒரு மாதிரி சாய்ந்த நிலையில் செல்வது போல் இருக்கும் அது ஒரு அற்புதமான அனுபவம். அந்த நேரத்தில் விழுகின்ற அடிகள் மிக மோசமானவை அதற்காக யாரும் மெதுவாக போனதாக நினைவு இல்லை, போடு போடுதான். அப்படி ஒரு வேகம்.

கம்பிக்கு மாறும் காலத்தில்தான் நிறைய பிரச்சினைகள் அடிகள் சற்று மோசமான இடங்களில் எல்லாம் விழும். அதிலிருந்து சீட்டிற்கு மாறும்போது கால் சற்று பெடலில் பட்டாமலும் பட்டும் மாறி மாறி இருக்கும் அப்போது பின்புறம் இருந்து பார்த்தால் ஓட்டுபனுடைய பின்புறம் படும் சிரமம் புரியும். நிறைய அடிபட்டால்தான் சைக்கிள் கற்றுக்கொள்ளமுடியும் என்று ஒரு சட்டமே இருந்தது, அது என்னவோ யாரோ எழுதிய தீர்ப்பு போல அடிபட்டாதான் கத்துக்க முடியும் தம்பி என்று சொல்வது ஒரு வாடிக்கையான சொல் அப்போது. கொஞ்சம் காசு கிடைத்தாலும் உடனே வாடகை கடைக்குபோய் சைக்கிள் எடுக்கவேண்டும், அந்த கடைக்காரர் ஏதோ ஒரு தீவிரவாதி போல நம்மை பார்ப்பார், காசு வைச்சிருக்கியா என்று கேட்டுவிட்டு அதையும் முன்னே பெற்றுக்கொண்டு இருப்பதிலேயே ஒரு பழய சைக்கிளை கொடுப்பார் அதுவும் சில பொருட்கள் இல்லாததாக இருக்கும், மணி, பெடல், போன்ற சாதனங்கள் இல்லாமல், அதுவும் இந்த பெடல் கட்டை இல்லாமல் அதன் மைய rod மட்டும் உள்ள சைக்கிளாய் இருந்தால் பெரும்பாடுதான், அதனை மிதிக்கும் போது வலி எடுக்கும் ஆனால் அதெல்லாம் அப்போது ஒரு பெரிய பொருட்டே இல்லை சைக்கிளை கொடுத்தாரே என்று ஒரு பெரிய நன்றி உணர்வுதான் வரும்.

சைக்கிள் அப்போது நம் வீட்டில் ஒரு மனிதர் போல இருந்தது, அதனை வீட்டு உறுப்பினர் போல மதித்தும் கழுவியும் துடைத்தும் ஆயுதபூஜை காலங்களில் அலங்கரித்தும் வைத்திருப்பது வழக்கம். அதெல்லாம் அடுத்த பதிவில் காணலாம்.

செல்வம்

2 comments:

  1. சின்ன வயதில் நானும்,என் மாமா மகனும் மிதிவண்டி ஓட்ட பழகிகொண்டிருந்த நேரத்தில், எனது மாமா மகன் ஒரு தண்ணி குடம் தூக்கி கொண்டு வந்துகொண்டிருந்த பெண் மீது மிதிவண்டியை விட்டுவிட்டான் , பிறகு அந்த பெண் வீட்டில் மிதிவண்டியை பிடுங்கி வைத்துவிட்டார்கள். இப்பொழுது அதை ஞாபகபடுத்தியது உங்கள் கட்டுரை. நன்றி நண்பரே

    ஜீவா

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்