நேற்று Asianet என்ற மலையாள தொலைக்காட்சியில் Idea star singer என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன், அதைப்பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த நிகழ்ச்சியின் தன்மை பற்றி அறிவார்கள், மிக அற்புதமான ஒரு நிகழ்ச்சி.
அதில் உள்ள மூன்று நடுவர்களில் ஒருவர் பிரபல பாடகி திருமதி சித்ரா அவர்கள், நேற்று போட்டியாளரில் ஒரு பெண் ஒரு தமிழ் பாடல் பாடும்போது சில தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரித்தார், அதனை சரி செய்யும் விதத்தில் திருமதி சித்ரா அவர்கள் தவறாக பாடக்கூடாது தமிழர்கள் தங்கள் மொழிமீது மிகவும் நேசம் கொண்டவர்கள் ஆகையால் அது அவர்களை புண்படுத்தும் நன்கு புரிந்துகொண்டு சரியாக பாடவேண்டும் என்று சொன்னார்கள்.
தமிழர்களின் மொழிப்பற்றின் ஒரு பிரபலத்தை இது காட்டுகிறது என்றே நினைக்கிறேன்
சாதாரணமாக நாம் இப்போது பல தமிழ் வார்த்தைகளை உண்டாக்கி வைத்துள்ளோம், மிகுந்த முயற்சியில் அவைகளை பயன் படுத்தவும் செய்கிறோம், ஆனால் பல மொழிசார்ந்த என் நண்பர்களுக்கு அவர்கள் மொழியில் அதற்கான வார்த்தைகள் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை, ஆனால் அவர்களின் மொழிப்பற்றில் குறையில்லை ஆனால் அந்த மொழியின் கலைச்சொற்கள் அவர்களின் மொழியாளர்கள், ஊடகவியலாளர்களால் சாதாரண மக்கள் வரை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்,
சாதாரணமாக கணினி, மடிகணினி, மிதிவண்டி, திரைப்படம், மற்றும் பல வார்த்தைகள் மிகவும் புழக்கத்தில் நம்மிடையே வந்துவிட்டன, வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்ற மாநிலத்தவர் அல்லது மற்ற நாட்டினர் மத்தியில் ரகசியம் பேச தூய தமிழுக்கு மாறுவதை சாதாரணமாக பார்க்கலாம், ஆனால் மற்ற இந்திய மொழிக்காரர்கள் அதில் ஆங்கில வார்த்தைகளையே உபயோகப்படுத்தவேண்டியுள்ளது.
நமது தமிழ் இப்போது ஒருவகையில் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது என்று நம்பலாம், 1 லட்சம் பேர் பேசினால் அந்த மொழி குறைந்தது அடுத்த 100 ஆண்டுகள் அழியாது என்று ஒரு கணக்கு சொல்கிறது, மிகவும் பழமையான நமது தமிழ் மிகவும் பரவலாக பேசப்படுகிற மொழியாக இருப்பது மிகவும் பெரிய விஷயம்தான். அடுத்து புதிய விஞ்ஞான உலகில் கணிப்போறியில் மிகவும் உபயோகப்படுகிற மொழியாக இருப்பதும் முக்கியகாரணம்.
நமது புதிய கல்வி அமைப்புகள் ஆங்கிலத்தின் மீதான வாய்ப்புகளால் அதனை முதன் மொழியாக ஆக்கிவிட்டார்கள், ஆகையால் எல்லா புதிய குழந்தைகளும் அதிகம் ஆங்கில வார்த்தைகளை பேசுவதை பெற்றோர்கள் பெருமையாக பேசக்கூடிய காலமாக இருக்கிறது, ஆகையால் அவர்களுக்கு தமிழின் பெருமையை பேசவேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியம், நம்மை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் தாய் மொழியையே எல்லாவற்றுக்கும் பேசுகிறார்கள்.
நாம் ஏன் இப்படி ஆகிப்போனோம் என்கிற கவலை உள்ளது, தைரியமாக தமிழில் பேச நினைப்போம், அதையே எல்லா சூழலிலும் பேச முயல்வோம், தமிழர்கள் தங்களுக்குள் தமிழ் தெரியும் நிலையில் அதையே பயன் படுத்தலாம், முக்கியமாக தமிழ் பேசுவர்கள் பெருமை கொண்டு பேச வேண்டும்.
தமிழ் பேசுவதால் ஒரு படி மேலே இருப்பதாய் உணரவேண்டும், ஒரு வெளிநாட்டு மொழியை பேச தெரியாததால் அதற்காக கவலைப்பட வேண்டாம், ஜெர்மன் நமக்கு எப்படி தெரியாதோ அதுபோல் ஆங்கிலம் நமக்கு தெரியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,
முடிந்தவரை தமிழில் பேசுவோம்.
தவநெறிச்செல்வன்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்