Mar 20, 2010

தேசபக்தி என்றால் என்ன. ( மறுபதிப்பு)

சமீபத்தில் குமுதம் தீரா நதி இதழில் திரு அ. மார்க்ஸ் அவர்கள் எழுதிய மானுடத்தை நேசிப்பவர்கள் ஏன் தேசபக்தியை வெறுத்தார்கள் என்ற தொடரினைப் படிக்க நேர்ந்தது.

அதனை என் நண்பர்களும் அறியவேண்டி தருகிறேன்
கடந்துபோன ஒரு காலகட்டத்தின் கொடூரமான ஒரு பாரம்பரியமாகவே இன்று தேசபக்தி இருந்து வருகிறது. வெறும் எச்ச சொச்சமாக மட்டும் அது இருந்துவிடவில்லை. மாறாக தங்கள் அதிகாரத்தின் மூலமாக மட்டுமே அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் கோலோச்சிவிட இயலாது என்பதை உணர்ந்து வைத்திருப்பதால், அவை தமது இருப்பிற்கு தேசபக்தியையே நம்பியுள்ளன. எனவே தந்திரமாகவும், வன்முறையின் மூலமாகவும் மக்கள் மத்தியில் அவை தேசபக்தியைத் தூண்டிவிடுகின்றன. அது அணைந்துவிடாமல் காப்பாற்றுகின்றன. அதன்மூலம் தம் அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

எந்த அரசாங்கமும் அதன் மக்களை அமைதியில் வாழவிடாது. ஏனெனில் அதன் இருப்பின் நியாயப்பாட்டிற்கான தலையாய காரணமாக விளங்குவது தேசங்களிடையே சமாதானத்தை நிலைநாட்டுகிற பணியை அது செய்கிறது என்கிற ஒரு பிம்பத்தை அது கட்டமைத்து வைத்திருப்பதால்தான். தேசபக்தியைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தப் பகை உணர்வைக் கட்டமைப்பதே இந்த அரசாங்கங்கள்தான். மக்களைப் பாதுகாக்கும் தம் திறனை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தேசங்களிடையே பகை அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்தப் பகையை உருவாக்க தேசபக்தியின் துணையும் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. வித்தை காட்டும் ஒரு நாடோடி, குதிரையின் வாலுக்கடியில் கொஞ்சம் மிளகாய்ப் பொடியை வைத்து அதைச் சீண்டிப் பின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப் போராடிதான் கட்டுப்படுத்திவிட்டதாகக் காட்டுகிறானல்லவா அப்படித்தான் இதுவும்...

அடுத்த நாடு உங்களை ஆக்ரமிக்கக் காத்திருக்கிறது. நீங்கள் ஆபத்திலிருக்கிறீர்கள் என அரசு மக்களை நம்ப வைக்கிறது. அல்லது உள்நாட்டிலுள்ள சில துரோகிகளினால் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்கிறது என அது சொல்லுகிறது. எனவே இந்த ஆபத்துக்களிலிருந்து நீங்கள் தப்பவேண்டுமானால் அரசுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமென, அது மக்களை நம்ப வைக்கிறது. மக்களின் எதிர்ப்புகளின்போதும், (கொடும்) சர்வாதிகாரத்தை அது நிலைநாட்டுகிறபோதும் இவ்வாறு அது தேசபக்தியை அதிகம் வற்புறுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அரசதிகாரம் செயல்படுகிற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு அரசும் அதன் இருப்பை விளக்கியாக வேண்டும். வன்முறையை நியாயப்படுத்தியாகவேண்டும். தான் இப்படி இல்லாவிட்டால் இன்னும் நிலைமை மோசமாகவிருக்கும் என்பதே அதன் தர்க்கம். மக்களுக்கு இந்த `ஆபத்து' குறித்து அது எச்சரித்தபின், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீதான கட்டுப்பாட்டை அது நிலைநிறுத்துகிறது. இந்நிலையில், அது இன்னொரு நாட்டைத் தாக்குகிற கட்டாயத்திற்குள்ளாகிறது. இவ்வாறு மற்ற நாட்டின் தாக்குதல் குறித்த அதன் எச்சரிக்கை எத்தனை `உண்மையானது' என்பது கண்முன் நிறுத்தப்பட்டு விடுகிறது...

ஆட்சியாளர்கள் தங்களின் பேராசைகளையும், பெருந் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், ஆளப்படுபவர்கள் தமது மனித கண்ணியம், பகுத்தறிவு, மனச்சாட்சி எல்லாவற்றையும் இழந்து அதிகாரத்திற்கு அடிமையாவதற்கும் இன்னொரு எளிய, தெளிவான, குழப்பமற்ற பெயர்தான் தேசபக்தி...

தேசபக்தி என்பது அடிமைத்தனம்...

தேசபக்த உணர்வு என்பது இயற்கையானதல்ல, அது அறிவுக்குப் புறம்பானது, ஆபத்தான உணர்வு என நான் பலமுறை கூறியுள்ளேன். மனிதகுலம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் துயர்களுக்கெல்லாம் பெரும்பான்மையான காரணமாக அதுவே உள்ளது.

இந்த உணர்வு துளிர்விடுவதற்கு நாம் அனுமதிக்கவே கூடாது. மாறாக மனித அறிவிற்குச் சாத்தியமான எல்லாக் காரணிகளையும் பயன்படுத்தி அது அழித்தொழிக்கப்பட வேண்டும். உலகளவில் நடைபெறும் ஆயுதக் குவிப்புகள், பேரழிவுக்குக் காரணமான போர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த தேசபக்தி உணர்வுதான். பிற்போக்குத்தனமான, காலத்திற்கொவ்வாத, ஆபத்தான இந்தத் தேசபக்தி குறித்த என் கருத்துக்கள் அனைத்தும் இதுவரையில், இன்று வரையில் (கள்ள) மௌனத்தின் மூலமாகவோ, உள்நோக்கத்துடன் திரித்துக் கூறியோதான் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அல்லது சம்பந்தமில்லாமல் `கெட்ட தேசபக்தி' (அதாவது தேசவெறி)தான் மோசம், நல்ல தேசபக்தி ரொம்பவும் உயர்ந்தது, அறம் சார்ந்த உணர்வு என்கிற ரீதியிலேயே பதிலளிக்கப்பட்டுள்ளன.

இந்த உண்மையான, நல்ல தேசபக்தி என்றால் என்ன என்று இதுவரை நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அது வெறும் அலங்கார வார்த்தைகளாகவும், அர்த்தமற்ற உரைவீச்சுக்களாகவுமே இருந்துள்ளன. இறுதியில் தேசபக்திக்குச் சம்மந்தமில்லாத வேறு எதையாவது சொல்லி முடிப்பார்கள்.

தனது சொந்த மக்களின்மீது மட்டுமேயான அன்பு; ஒருவர் தன் அமைதியான வாழ்வை, சொத்துக்களை, ஏன் உயிர் வாழ்க்கையையே, எதிரிகளிடமிருந்து தம் மக்களைக் காப்பாற்றுவதற்குத் தியாகம் செய்யும் பண்பு - இதுதான் தேசபக்தி என்கிற கருத்து ஒவ்வொரு நாளும் தனது நலனுக்காக மற்றவர்களைக் கொன்று குவித்து மானபங்கப்படுத்துவதை நீதியாகவும், (ஒரே) சாத்தியமாகவும் கருதிய ஒரு காலத்திற்குரியது.

ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே மானுடத்தின் உயர் அறிவின் வித்தாகத் தோன்றியவர்கள், `மானுடர்க்கிடையேயான சகோதரத்துவம்' என்கிற உன்னதக் கருத்தாக்கத்தை உணரத் தொடங்கினர். இந்த உன்னதக் கருத்து மனிதப் பிரக்ஞையினூடாகப் பயணித்து வந்து நம்முடைய சகாப்தத்தில் பல்வேறு வடிவங்களில் கையகப்படத் தொடங்கியுள்ளது. தொடர்புச் சாதனங்களில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, தொழில், வணிகம், கலை, அறிவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்கள் ஆகியவற்றின் விளைவாக இன்று மனிதர்கள் மேலும் நெருக்கமாகப் பிணைந்துள்ளார்கள். அடுத்த நாட்டு மக்கள் மீதான ஆக்ரமிப்பு, படுகொலைகள், வன்முறைகள் எல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டன. எனவே எல்லா மக்களும் (மக்கள்தான், அரசாங்கங்கள் அல்ல) அமைதியாகவும், பரஸ்பர பயனளிப்பவர்களாகவும், வணிகம், தொழில், கலை, அறிவியல் எல்லா அம்சங்களிலும் உறவுகளைப் பேணுபவர்களாகவும், எக்காரணம் கொண்டும் இவ்வுறவுகளை அழிக்க விரும்பாதவர்களாகவும் ஆகியுள்ளனர். எனவே காலாவதியாகிவிட்ட தேசபக்தி இன்று தேவையற்றதாகி விட்டது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனிதர்களுக்கிடையேயான சகோதரத்துவம் என்கிற உயர் நிலையை நாம் எட்டிவிட்டதால் இந்த தேசபக்தி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இறுதியில் முற்றாக அழிந்துவிடும் என ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால், இதற்கு நேரெதிராகத்தான் இன்றைய நிகழ்வுகள் உள்ளன. காலத்திற்கொவ்வாத இந்தத் தீய உணர்வு தொடர்ந்து இருந்துகொண்டிருப்பது மட்டுமின்றி மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது.

இந்த இடத்தில் ஒரு சிறிய இடைவெளி. இதுவரை நீங்கள் வாசித்தது எதுவும் என்னுடைய எழுத்தல்ல. மனிதகுலம் கண்ட மகத்தான படைப்பாளிகளில் ஆகச் சிறந்தவரான லியோ டால்ஸ்டாய் `தேசபக்தி'யைக் கண்டித்து எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சில கூற்றுக்களை மட்டுமே இங்கு நான் மொழியாக்கித் தந்துள்ளேன். இந்த முழுக்கட்டுரையையும் மொழியாக்குவது என் நீண்டநாள் ஆசைகளில் ஒன்று.

டால்ஸ்டாய் ஒரு புனைவு எழுத்தாளர். ஆராய்ச்சியாளரோ, தத்துவ ஞானியோ அல்லர். ஆனால் எண்ணற்ற சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகட்கு ஊற்றுக் கண்ணாக அவரது இந்தச் சிந்தனைகள் அமைந்துள்ளன. குறிப்பாக சிலரை நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். புகழ்பெற்ற சமூகவியல் அறிஞரான மாக்ஸ் வெலர், வால்டர் பெஞ்சமின், ஜியார்ஜியோ அகம்பன், ழாக் தெரிதா... தேசியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்முறை,. ஒரு சமூக அமைப்பு குறித்துச் சிந்தித்த ழீன் லுக் நான்சி (The Inoperative community, 1983) மாரிஸ் பிளாங்காட் (The unavowable Community, 1983), பெனடிக்ட் ஆன்டர்சன் (The Imagined community, 1983) ஜியார்ஜியோ அகம்பன் (The comming community, 1993) முதலிய நவீன சிந்தனையாளர்கள் பலரும் டால்ஸ்டாயின் சிந்தனைகளால் தூண்டப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவற்றோடு தெரிதாவின் இறுதி நூற்களில் ஒன்றான Polity of friendshipஐயும் கூடச் சேர்த்துக்கொள்ளலாம். இன்னொருவரை விட்டுவிட்டேன். அவர்தான் ஹன்னா ஆரன்ட் (The origin of Totalitarianism).

அது சரி இத்தகைய தத்துவச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒரு புனைவு எழுத்தாளனால் தூண்டப்பட்டது எங்ஙனம்? உலகத் தரத்திலான நாவல்கள் ஏன் தமிழில் வரவில்லை. இன்னும் பல காலத்திற்கு வருவதற்கான சாத்தியமும் தெரியவில்லை என்பதற்கான பதிலை நாம் இங்கிருந்துதான் தொடங்கிச் சிந்திக்கவேண்டும்.

இதுகுறித்து மேலே பேசுவதற்கு முன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். தேசபக்திக்கு எதிராக இத்தகைய சிந்தனையை உதிர்த்துள்ளது டால்ஸ்டாய் மட்டுமல்ல. வேறு சில கூற்றுக்களையும் தொகுத்துக்கொள்வோம். வலைத்தளங்களில் இன்னும் உங்களுக்கு ஏராளமாகக் கிடைக்கக்கூடும்.

தேசபக்தியைப் `பழங்குடித் தேசியவாதம்' (Tribal Nationalism)) எனக் கூறும் ஹன்னா ஆரன்ட்: ``இது (தேசபக்தி) தனது மக்களனைவரும் `எதிரிகளின் உலகம்' ஒன்றால் சூழப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. `எல்லோருக்கும் எதிராக ஒருவர்' - நம் மக்களுக்கும் பிற எல்லோருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உள்ளது என அது வற்புறுத்திச் சொல்கிறது. நாம் என்பது தனித்துவமானது, ஒப்புவமையில்லாதது, மற்ற எல்லோரிடமும் எந்த வகையிலும் இணைய முடியாதது எனக் கூறும் அது பொது மனிதம் சாத்தியமே இல்லை எனக் கோட்பாட்டு ரீதியாக மறுக்கிறது.''

மார்க் ட்வெய்ன்: ``ஒரு தேசபக்தன் தனது சொந்த நாட்டில், சொந்தக் கொடியின் கீழ் `செட்டில்' ஆகிறான். மற்ற தேசங்களை அவன் இழிவு செய்கிறான். சீருடை அணிந்த கொலைகாரர்களை (படைகள் / பயங்கரவாதிகள்) அமைத்துக்கொள்கிறான். அடுத்த நாட்டின் துண்டு துக்கானிகளைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கும் ஏராளமாகச் செலவிடுகிறான். இடைப்பட்ட காலங்களில் தன் கைகளில் படிந்த ரத்தக் கறைகளைக் கழுவிக்கொண்டே `உலகளாவிய மனித சகோதரத்துவத்தை' வாயால் செயல்படுத்துகிறான்.''

அல்டாஸ் ஹக்ஸ்லி: ``தேசபக்தியின் பெரிய ஈர்ப்பு என்னவெனில், அது நமது மோசமான ஆசைகளைத் திருப்தி செய்கிறது. நாம் ரொம்பவும் மேன்மையானவர்கள் என்ற எண்ணத்தினூடாக (மற்றவர்களை) ஏமாற்றவும் அவர்களுக்கு ஊறு செய்யவும் விழைகிறான்.''

பெர்னாட் ஷா: அற்ப காரணங்களுக்காகக் கொல்லவும், கொல்லப்படவும் துணிவதே தேசபக்தி.''

ஆங்கார் வைல்ட்: ``தேசபக்தி - கயவர்களின் உயர் பண்பு.''

ஆல்பர்ட் ஈன்ஸ்டின்: ``தேசியம் - ஒரு இளம்பிள்ளைவாதம்.''

எம்மா கோல்ட்மான்: ``தேசபக்தி - சுதந்திரத்தின் கேடு.''

எர்னட்ஸ் பி பாக்ஸ்: ``தேசபக்தன் என்கிற சொல்லை ஒரு அவமானமாகக் கருதும் காலம் ஒன்று வரும்.''

சாமுவேல் ஜான்சன்: ``தேசபக்தி - அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.'' (பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்த மேற்கோளைப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளதைக் காண்க).

ஆம்புரோஸ் பியர்ஸ்: ``மன்னிக்கவும். தேசபக்தி அயோக்கியர்களின் முதல் புகலிடம்.

எச்.எல். மென்கென்: ``இல்லை அது இன்னும் மோசமானது. அது முதல், இடை மற்றும் இறுதி எல்லா நிலைகளிலும் முட்டாள்தனமானது.''

சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இப்படியான ஒரு பட்டியலை நான் இங்கே சுட்டிக் காட்டியதற்கான காரணம் நம்மூர் குண்டுசட்டிக் குதிரை ஓட்டிகள், உள்ளூர் புராணக் குப்பைகளால் மட்டுமே மண்டையை நிரப்பிக் கொண்டவர்கள், விசாலமான படிப்பனுபவமோ, வாழ்வனுபவமோ இல்லாத சுயவிரும்பிகளை ஒரு பரந்த தளத்தில் வைத்துக் காட்டுவதற்காகத்தான்.

டால்ஸ்டாய் முதல் ஈன்ஸ்டின்வரை, ஹன்னா ஆரன்ட் முதல் தெரிதாவரை தேசபக்தியை வெறுத்ததற்குக் காரணம் வெறும் போர் வெறுப்பும் அமைதி நாட்டமும் மட்டுமல்ல. `மற்றமை'யுடனான உறவு குறித்த அறம் சார்ந்த நோக்கங்களின்பாற்பட்டது இந்த வெறுப்பு. அறம் என்பது ஒரு கடப்பாடு (obligation)மதங்களும்கூட அதை ஒரு கடப்பாடுதான் எனச் சொன்னாலும் அறத்தை இறைவனுக்கான கடப்பாடாக (obligation to God) அவை முன்வைக்கும். அதை அரசுக்கான கூப்பாடாக மதவழிப்பட்ட அரசியலும், அதற்குப் பிந்தி அதே வடிவத்தில் `ஜனநாயக அரசுகளை'க் கட்டமைத்த நவீனத்துவமும் முன்வைக்கும். ஆனால் தத்துவமோ அறத்தை `மற்றதற்'கான கடப்பாடாக (obligation to other)க் கருதுவதன் விளைவாக மற்றதனைத்தையும் அயலாக (alien),எதிரியாகக் கருதும் தேசபக்தியை ஏற்றுக்கொள்வதற்கு அதில் இடமேயில்லை.

இந்தியச் சூழலில் மற்றதனைத்தையுமே எதிரியாகக் கருதும் மனநிலை உயர்சாதி மனங்களுக்கு இயல்பாகிப் போனதற்கு இன்னொரு உதாரணமாக மௌலியைக் குறிப்பிடலாம். கிராமப் பொதுச் சாவடியை `எத்தனை எதிரிகள் தங்கிப்போன இடமோ' என அவரது (கதை மாந்தரின்) மனம் கருகியதை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது.

மனிதர்களைப் பொருத்தமட்டில், வாழ்வது என்பது மற்றவர்களோடு வாழ்வதுதான். `மனிதன் ஓர் அரசியல் மிருகம்' எனச் சொல்வதன் பொருள் அதுவே. மனித உயிர்களுக்கு மட்டும்தான் இரு வாழ்வுகள் உள்ளன. வெறும் உயிர் வாழ்வுக்கு அப்பாற்பட்ட அரசியல் வாழ்வுக்கும் உரியவன் அவன். இந்த அரசியல் வாழ்வு அவனுக்கு மறுக்கப்படும்போது அவன் வெற்று வாழ்க்கைக்கு (bare life) உரியவனாகிறான்.

அரசியல் என்பது ஏதோ கட்சி நடத்துகிற விவகாரமோ, இல்லை கட்சியில் உறுப்பினராவதோ அல்ல. அது சக மனிதர்களுடன் தொடர்ந்து உரையாடுவது (negotiating). மற்றவர்களுடன் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது (engagement).மற்ற யாருடனும் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொள்ளத் தக்கவனாகவே மனிதன் அமைக்கப்பட்டுள்ளான். மனிதன் மட்டுமே பேசுபவனாக இருப்பதன் தாத்பர்யம் அதுவே. மற்றமையுடனான ஈடுபாடு என்பது அதைப் புரிந்துகொள்வதல்ல. தவறாகப் புரிந்துகொள்ளுதல்கூட ஒரு நல்ல அம்சமே. தவறாகப் புரிந்துகொள்ளுதலே உரையாடலுக்கு இட்டுச் செல்கிறது. அறிவு உற்பத்திக்குக் காரணமாகிறது. அதன்மூலம் மற்றமையுடனான தொலைவு குறைகிறது. இந்தத் தொலைவு குறையும்போது மற்றமையின் `அன்னியத்தன்மை' (strangeness) அழிகிறது.

மற்றமையுடனான இந்தத் தொலைவை அழித்துக் கொள்ளுதலைவிட மானுட வாழ்வின் இறுதி லட்சியம் என்னவாக இருக்கமுடியும்? ஆனால் மற்றவர்களை `அன்னியர்களாக' மட்டுமே பார்ப்பது, அவர்களுடன் ஈடுபடுத்திக்கொள்ளச் சாத்தியமே இல்லை எனக் கருதுவதன் உச்சபட்ச நீட்சியே தேசபக்தி. மற்றமையுடனான உரையாடல், பேச்சு, உரிமை கோருதல், உரிமை அளித்தல், தொலைவைக் குறைத்தல், ஈடுபடுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் உச்சபட்ச வெளிப்பாடே அரசியல். இந்த வகையில்தான் தேசபக்தியும் அரசியலும் சந்தித்துக்கொள்ள இயலாத இரு துருவங்களாகின்றன.

தேசபக்தி அரசியலை மறுக்கிறது.
அரசியலுக்கு இடமில்லாமற் செய்துவிடுகிறது. 9/11-க்குப் பின் ஜார்ஜ் புஷ் உருவாக்கிய `தேசபக்தி சட்டம்) (PatrioticAct)அயலவர்களின் (immigraants) உரிமைகளைக் கட்டுப்படுத்துவது நினைவிருக்கலாம். மாநில அளவுகளிலும்கூட பிஸி 4437 முதலான பல்வேறு சட்டங்கள் இவ்வாறு இயற்றப்பட்டன. இங்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் காட்டித்தான் `தடா', `பொடா'க்களெல்லாம் உருவாயின. இவை `எல்லை'யில் எப்போதும் அமர்ந்து கொண்டிருக்கும் எதிரி ஒருவரை வலிமையாகக் கட்டமைப்பது மட்டுமின்றி உள்நாட்டு மக்களின் அரசியற் பெயற்பாடுகளையும் ஒழித்துக்கட்டுவதை நாம் பார்க்காதிருக்கக்கூடாது.

தேசத்தின் மீது பக்தி செலுத்துவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. ஜெயமோகனின் தேசபக்திக் கட்டுரையை மறுபிரசுரம் செய்து மகிழ்ச்சியடையும் என்.ஆர்.அய். தமிழிலக்கியவாதிகள் இன்று அவர்கள் வாழ்கிற அமெரிக்காவை விட்டுவிட்டு, அங்கிருந்து துரத்தப்பட்டால் ஒழிய தேசபக்தி காரணமாக இந்தியா திரும்புவார்களா, அவர்தம் வாரிசுகள்தான் இங்கே வர ஒப்புக்கொள்வார்களா? அவ்வளவு ஏன் இன்று ஈழத்தில் போர் முடிந்து ஏதோ ஒரு வகையில் அமைதி திரும்பினால் இன்று அகதிகளாய் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எத்தனை பேர் நாடு திரும்புவர்?

டால்ஸ்டாய் இன்றுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மனிதர்க்கிடையே ஏற்படுத்தியுள்ள நெருக்கத்தைச் சுட்டிக்காட்டி தேசபக்தி சாத்தியமற்றுப் போனதைக் குறிப்பிடுவதைப் பார்த்தோம். அக்கட்டுரை மே 10, 1900-த்தில் எழுதப்பட்டது. 108 ஆண்டுகள் ஓடிவிட்டன. எத்தனையோ மாற்றங்கள். குடிமை, அடையாளம் தொடர்பான கருத்தரங்கங்களெல்லாம் ஏராளமாக மாறிவிட்டன. அடையாளம் இல்லாத சமூகக் கட்டமைப்பின் சாத்தியமின்மை, குடிமகன், உள்நாட்டவர் (indigenem), உள்நுழைந்தோர் (immigrants) என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம், இவற்றுக்கிடையேயான தெளிவான வரைகோடுகள் எல்லாம் இனி சாத்தியமேயில்லை. ஆனாலும் தேசபக்தியின் பெயரால்தான் இன்று அயலார்கள் (j / aliens / immigrants) வெற்று வாழ்க்கைக்குரியவர்களாக்கப்படுகிறார்கள்.

ஜியார்ஜியோ அகம்பன் இந்நிலையை `ஹோமோ சாசர்' (புனித மனிதன்) என்பார். பண்டைய ரோம ஆட்சியில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் `சிவீ‡வீக்ஷ்மீஸீ' என்கிற அங்கீகாரத்தை இழந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அந்த நகர நாகரிகத்தில் எந்த சிவில் உரிமைகளும் கிடையாது. இவர்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம். குற்றமாகக் கருதப்படாது. ஆனால் இவர்கள் புனித பலிகளுக்கு உரியவர்களல்ல. தேசபக்தியின் பெயரால்தான் அன்று முதல் இன்றுவரை மனிதர்கள் அரசியல் வாழ்விலிருந்து அகற்றப்பட்டு வெற்று வாழ்க்கைக்கு உரியவர்களாக்கப்பட்டார்கள். இன்று இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தேசபக்திக் கதையாடல் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அடையாளத்தை வெற்று வாழ்வுக்குரியவர்களாக மாற்றுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது.

தெரிதா தனது இறுதிப் பேட்டி ஒன்றில் கூறினார்: ``அடிப்படையில் ஒரு தத்துவவியலாளர் `பாஸ்போர்ட்' வைத்திருக்கக்கூடாது. அல்லது வேறு எந்த அடையாள அட்டைகளையும் அவர்களிடம் கோரக்கூடாது. `விசா'வும்கூட அவர்களுக்குத் தேவையாக இருக்கக்கூடாது. அவருக்கு எந்தத் தேசிய இனத்தின் அடையாளமோ, ஏன் தேச மொழியுமோ கூடத் தேவையில்லை. ஒரு தத்துவவியலாளராவதற்கான விறுப்புறுதி என்பது உலகளாவிய சமூகத்திற்கான (Universal community) பங்களிப்பைச் செய்வதற்கான விறுப்புறுதியாகும். உலகளாவிய சமூகம் என்பது வெறும் கலப்பினச் சமூகமல்ல. அது உலகளாவியது. குடியுரிமை, அரசு, கலப்பினச் சமூகம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.''

மானுடத்தை நேசிப்பவர்கள் வேறெப்படிச் சிந்திக்க முடியும்?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்