இருபது வருடம் ஒரு வளைகுடா நாட்டில் தன் குடும்பம் குட்டிகள் விட்டு பணிபுரிந்த ஒரு மனிதர் தான் இனி இந்தியாவில் சென்று தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று எண்ணி முடிவெடுக்கிறார், அவருடைய பிள்ளைகள் 10, 15 வயதினராய் படிப்பில் இருக்கிற ஒரு சூழல். அவருக்கு இப்படி முடிவெடுக்கும் முன்னர் ஒருவேளை நாம் இப்படியே பணி செய்து இங்கேயே இறந்து போக நேரிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்கிற ஒரு பயத்தில்தான் இனி நாட்டுக்கு சென்று விடலாம் சம்பாதித்தது போதும் என்கிற முடிவுக்கு வருகிறார், அதற்கு முன் தன் மனைவியிடம் தெரிவிக்க ஆசைப்பட்டு அதனை இப்படி தொடங்குகிறார்.
கணவர்: ஹலோ நல்லாயிருக்கியா?
மனைவி:: ம் சொல்லுங்க,
கணவர்: எனக்கு மனசே சரியில்லை, நான் இப்படியே இங்க இருந்து வேலை செஞ்சு செஞ்சு செத்திருவேன் போல இருக்கு.
மனைவி: ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.
கணவர்: இல்லை, எனக்கு ஒரு ஆசை ஒருவேளை எனக்கு அப்படி ஏதும் ஆயிட்டா நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்களின் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும்
மனைவி:: எனக்கென்னமோ இத்தனை வயசுள்ள பிள்ளைகள் சம்மதிப்பார்களா என்று கவலையாக இருக்கிறது.
கணவர்:!!!!!!!?????????
இப்படி ஒரு கதை எனது கேரள நண்பர் பிரதீபன் கூறினார், அதனைக்கேட்டு நாங்கள் இருவரும் வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தோம், அந்த சிரிப்பில் உள்ளார்ந்த சோகம் மிக அதிகம், வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டி வருபவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தனது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து விலக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பது மிகவும் சத்தியமான உண்மை.
வெளிநாட்டில் வேலையில் இருக்கும் எங்களைப்போன்றவர்கள் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு செல்லும்போது மனதுக்குள் இருக்கிற ஆனந்தம் எண்ணில் அடங்காத ஒரு விஷயம் ஆனால் அங்கே போய் சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களின் அணுகுமுறை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.
இதில் நான் புரிந்து கொண்டது இப்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும், அப்பா அம்மா, மனைவி தன் குழந்தைகள் மற்றும் சகோதர்களின் குழந்தைகள் மட்டுமே, மற்றவர்கள் யாருக்கும் அத்தனை பெரிய எதிர்பார்ப்பில்லை,
இதன் காரணம் மிக நியாயமானதுதான், நம்மால் அவர்களுக்கு உள்ளூரில் ஆககூடிய காரியம் ஒன்றுமே இல்லை, நம்மை சாராமல் அல்லது எதிர்பாராமல் அவர்களால் வாழ முடியும், அப்படிப்பட்ட சூழலில் நாம் அத்தனை முக்கியமானவர்களாக இருக்கப்போவதில்லை, ஒரு வீட்டு வேலைக்காரியால் ஆகக்கூடிய காரியம் கூட இயல்பில் ஒரு வெளிநாட்டு உறவினனால் செய்ய முடியாது, பின்னர் எப்படி அந்த உணர்வு வரும், ஆகவே அது இயல்புதான், கூடவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு உள்நாட்டில் எல்லா உதவிகளும் செய்ய வேண்டிய சுமையும் அவர்களுக்கு வந்து சேரும் இதெல்லாம்தான் அந்த உணர்வு இல்லாமல் போவதற்கான காரணம்,
அம்மா, அப்பா போன்றவர்கள் இருக்கும் காலம்வரை அவர்கள் ஒரு பாலமாக சகோதரர்களுக்கு இருப்பார்கள், அவர்களின் மீதுள்ள அன்பு அல்லது அவர்களின் நடு நிலைமை ஒரு பிள்ளையிடம் சிரமம் இருந்தால் மற்ற பிள்ளையிடம் பேசி அவனுக்கு உதவசொல்ல அவர்களால் முடியும், அதன் மூலம் ஒரு பிணைப்பை அவர்கள் உருவாக்குவார்கள், ஒரு குடும்பத்தில் அப்பா அம்மாவின் மறைவுக்கு பிறகு யாராவது ஒரு பிள்ளைக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த மகன் அல்லது மகளின் நிலை மிக பரிதாபமானது. அப்போதுதான் பெற்றொர்களின் அருமை புரியும். சமீபத்தில் வந்த “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் அந்த காட்சி மிக அழகாக எடுத்து காட்டப்பட்டிருக்கும்.
இப்படியான ஒரு சூழலில் இந்த குடும்ப மதிப்புகள் எல்லாம் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி தீவுகளாக மாற்றப்போகின்றன அதன் கொடூரத்தை நமது இணக்கம் இல்லாத சூழலின் மூலம் அதிகப்படுத்த தொடங்கி வருகிறோம். சொந்த சகோதரன் வெளிநாடு விட்டு வரும்போது வீட்டிற்கு அழைத்து ஒருவேளை சோறு போடக்கூட இன்றைய உறவுகள் முடியாமல் இருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன வென்று எத்தனை யோசித்தாலும் மிஞ்சுவது வெறும் கண்ணீர்தான்.
எத்தனை வயது ஆனாலும் எத்தனை பணக்காரன் ஆனாலும் இந்த வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்களின் எண்ணங்கள் சொந்தபந்தங்களை நினைத்துதான் இன்னும் தினசரி வாழ்வுக்கான உற்சாகத்தை இங்கே கொடுக்கிறது, அது மட்டும் இல்லாமல் போனால் மனிதன் வெறும் மரமாகத்தான் இங்கே இருப்பான்.
தவநெறிச்செல்வன்
நல்ல பகிர்வு நண்பரே
ReplyDeleteஉண்மை எப்பொழுது கசக்க தான் செய்யும் ...என்னதான் நாம் நினைத்தால் அடுத்தவரை எதுவும் சொல்ல முடியாது...நானும் இதனை அனுபவித்தேன்..இந்த முறை இந்தியா சென்ற பொழுது...
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
வெளிநாட்டில் வேலையில் இருக்கும் எங்களைப்போன்றவர்கள் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு செல்லும்போது மனதுக்குள் இருக்கிற ஆனந்தம் எண்ணில் அடங்காத ஒரு விஷயம் ஆனால் அங்கே போய் சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களின் அணுகுமுறை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.எவ்வளவு உண்மையான விஷயம்? எனக்கு கூட இப்படியான அனுபவம் இருக்கிறது! நல்ல பதிவு நண்பரே!
ReplyDelete