Apr 8, 2010

நீங்களும் படிக்கலாம்

.முத்துலிங்கம் கதைகள் என்ற அவரின் கதை தொகுப்பை படிக்கிறேன் அதில் அவருடைய முன்னுரை படிக்கும்போது மனதில் தோன்றிய விஷயம் அதுதான் இதை எழுத தூண்டியது, செய்திகள் நிறைந்த ஒரு எழுத்தை எழுத முயலவேண்டும் அதுதான் எழுத்தின் வெற்றி..

அப்படியானால் எவ்வளவு உழைக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய பிரச்சினைகள் உண்டு ஒரு நல்ல எழுத்தாளராவதில், சாரு ஒரு நாளைக்கு 23 மணிநேரம் உழைக்கிறேன் என்று கோபப்படுவது கூட இதனால்தான் போல.

ஒரு கவிதையை எழுத மனுஷயபுத்திரன் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை, எல்லா எழுத்தாளரிடமும் எல்லா வாசகர்களுக்கும் உள்ள ஒரு சந்தேகம், இந்த ஆள் எப்படி இப்படி எழுதுகிறார் என்பதுதான். அதற்காக மிக கடுமையான களப்பணிகளை அவர்கள் செய்கிறார்கள் என்பதும் அது இதற்காகத்தான் செய்யப்படுகிறது என்று எந்த குறிக்கோளும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அந்த களப்பணியின் விளைவால் வரும் ஒரு படைப்பு அதன் மிகுந்த பலனைத்தருகிறது.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்தபோது அப்படித்தான் தோன்றியது, முழுதும் படித்தேனா என்று கேட்டார்கள் நிறையபேர், அப்படியானால் நிறைய பேரை முழுதும் படிக்க முடியாமல் செய்கிற கடுமையான நடை அதுவென்று உணர்ந்தேன். ஆனால் அ.முத்துலிங்கம் அவர்களின் நடை ஒரு விறுவிறுப்பான நடை பல கதைகள் கீழே வைக்கமுடியாமல் படிக்கதூண்டுகிறது,

சிறு பிராயத்தில் கிரைம் நாவல்களில் ராஜேஷ் குமார் அப்படித்தான் செய்துகொண்டிருந்தார், அதற்கு முன் சங்கர்லால் படித்தியப்பாடு இருக்கிறதே, அதன் பெருமை எல்லாம் தமிழ்வானனுக்கே சேரும். பிற்பாடுதான் சுஜாதா வந்தார் அவர் இழுத்துக்கொண்டு ஓடிய ஓட்டம் மிக நீளமானது, அவரோடு ஓடும்போது ஏற்பட்ட மனநிலைகள் பல நிலைகள் என்றாலும் இடையில் பல பாக்கெட் நாவலாக பாலகுமாரன் வந்த போது அதன் தாக்கமும் அதிகம்தான், இந்த ஆள் என்னத்தை எழுதினாலும் இந்த பாடு படுத்துகிறானே என்று தோன்றும், பல பெண் வாசகர்களை கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன், இந்த இடையில் எனது சித்தப்பா மூலம் அப்போது கிடைத்த லாசரா வின் சிந்தாநதி ஒரு கலக்கு கலக்கியது, என்னடா இது எழுத்து, இதற்குபோய் சாகித்ய விருதெல்லாம் கொடுக்கிறார்களே என்று பலமுறை படிக்க எங்கோ கொஞ்சம் புரிந்தது, ஆனால் அந்த எழுத்தின் நளினம் ஒரு போதையாக இருந்தது. அதை நாடிப்போய் அவர் தினமணியில் எழுதியது அது இது வென்று கிடைத்ததெல்லாம் படித்தபோது இலக்கியம் என்பதன் தூரம் இன்னும் எங்கோ இருக்கிறது என்றும், நாம் கொஞ்சம் இலக்கியம் படிக்கிறோம் என்று புரியத்தொடங்கியது, அந்த இடைவெளியில் சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி படிக்க என்ன நடக்கிறதென்றே புரியாமல் ஒரு நாவலுக்காக இவ்வளவு உழைப்பு பின்னால் இருக்கிறது என்கிற அதிசயத்தை புரியவைத்த நாவல் அது.

அப்படி இப்படி என்று தட்டுப்பட்டதெல்லாம் படித்து ஒரு நண்பரின் மூலம் பொன்னியின் செல்வன் படிக்க நேர்ந்தது, உண்மையில் ஒரு வாசகனுடைய படிப்பு அனுபவ வழி இதுவாக இருக்க வேண்டும் என்றில்லை எனக்கு இருந்தது இப்படி அவ்வளவுதான், பொன்னியின் செல்வனின் போக்கும், அத்தனை பெரிய புத்தகத்தை படிப்பதை நிறுத்தமுடியாமல் அதன் விறுவிறுப்பு தாங்கமுடியாமல் அலைந்ததை இன்னும் மறக்க முடியாது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தி ஒரு வசனம் வருகிறதே “அடிச்சது அந்த காதல்” அப்படி ஒரு அடி அது பொன்னியின் செல்வன் தந்ததுதான், அந்த கதை நடந்த இடங்களில் நான் வாழ்தேன் அதனால் அதன் ஒவ்வொரு வருணனையும் என்னை அங்கே கொண்டு போனது, தஞ்சை குடந்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இதைதான் சொல்வார்கள் அந்த நாவலைப்பற்றி அப்படி ஒரு அனுபவம், புத்தகம் படிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலையை எனக்கு கொண்டு வந்த ஒரு நாவல் அது. அதன் பின் அதனை பலவடிவங்களில் நான் வாங்கி வாசித்து விட்டேன், பின்னர் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, உண்மையில் பார்த்திபன் கனவு புத்தகத்தை வாங்கியபோது எனக்கு ஏமாற்றம்தான் மற்ற நாவல்களைப்போல் 5, 6 புத்தகங்கள் என்றில்லாமல் இப்படி சிறிய பகுதியாக இருக்கிறதே என்று, கல்கி தன் வாழ்நாளில் இதைவிட உயர்வாக எதுவுமே செய்யமுடியாது, அவருக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று பலமுறை யோசிக்கவைத்த எழுத்து,

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஜீரோ டிகிரியும், ஜெயகாந்தனும் ஒரே நேரத்தில் நுழைந்தார்கள், இடையில் வாஸந்தி போன்றவர்களின் எழுத்துக்கள் வந்து அனுபவத்தை கூட்டி வைத்திருந்தாலும் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் என்று ஜெயகாந்தன் ஹென்றியை கொண்டுவந்து உள்ளே திணித்தபோது ஒரு கலக்கம் என்னடா வாழ்க்கை நாம் வாழுகிறோம் என்று, அதெப்படி ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அரைநிர்வாணத்தை ஒரு ரோஜாமலரின் அழகை ரசிக்கிற மனநிலையில் பார்க்கமுடிந்தது, அந்த ஒரு வரியில் ஹென்றியின் மனத்தின் கலங்கமின்மை அந்நாவலின் முழுக்க நம்மை அதே கோணத்தில் அழைத்துச்செல்வதை அனுபவிக்க முடிந்த நிலையில், நல்ல மனிதனாக வாழ்வதன் அர்த்தம் எனக்கு பிடிப்பட்டது அப்போதுதான்.அதன்பிறகு ஜெயகாந்தனின் எல்லா எழுத்துகளும் கிடைக்க படித்து திளைக்கமுடிந்தது ஆனாலும் ஹென்றிதான் எனக்கு உச்சம், ஜீரோ டிகிரி பற்றிய அறிமுகம் எனக்கு நல்லவிதம் இல்லை ஆனால் அதன் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த கடிதங்களின் வழி அதைப்பற்றிய பிம்பம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது, அந்த கடிதங்கள் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டதின் நோக்கமும் அதுதான், ஆனால் உள்ளே போகும்போது ஒரு பாலியல் கதையை படிக்கப்போகிறோமோ என்றுதான் நினைத்தேன்,

ஆனால் அதன் உள்ளே இருந்த பெண்களின் மீதான சமுதாய கட்டுகளின் துன்பவியல் வெளிப்பாடுகளும் அதன் ஊடே கிடந்த ஒரு அனாயசமான கோபமும், அதன் நகைச்சுவையும் என்னை முழுக்க புரட்டிப்போட்டது, அதன் பின் என்னை இந்த சாருவை நோக்கி ஒடவைத்தது, சாருவின் எல்லா நூல்களும் வரவர படிக்கத்தொடங்கினேன், இந்த காலங்களில் நான் சாருவைத்தவிர வேறுயாரையும் வாசிக்கவில்லை என்றே சொல்லலாம், பின் நவீனத்துவம், நான் லீனியர் போன்ற புதியவார்த்தைகளின் அறிமுகமும் அதன் வேகமும் என்னை பாலகுமாரனைப்படிப்பவர்களுடன் சண்டைபோடவைத்தது, ஆனாலும் இன்னும் வேகமான அடிக்ககூடிய ஒரு எழுத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன், இதுவரை படித்த இலக்கியங்களின் வாசல் தேடிக்கொடுத்த அறிவு, உலக இலக்கியங்களை நோக்கி திருப்புகிறது, சாருவுக்கு அதில் பெரும் பங்குண்டு, இன்றைய இளைய சமுதாயத்திற்கு பல உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு, இதன் பிறகு எஸ். ராமகிருஸ்ணன் வந்தார் எனது புத்தக அலமாரிக்கு அதன் சுகம் அடுத்து.

தவநெறிச்செல்வன்

3 comments:

  1. படிப்பது கூட ஒரு கலையாகத்தான் நான் நினைக்கிறேன்,என்னால் அதிக நேரம் அது முடிவதில்லை,இவ்வளவும் நீங்கள் எப்படித்தான் படித்தீர்களோ!அதைவிட மிக அழகாக எழுதும் கலை சில பேருக்குதான் வரும், அதிலும் நீங்கள் சொல்வது போல
    எஸ். ராமகிருஸ்ணன் அவர்களின் எழுத்து நடை மிக எளிமையாக இருக்கும் உங்கள் எழுத்து நடை போல, ’நீங்களும் படிக்கலாம்” மிகவும் அருமை.
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  2. சரியாக எழுதியிருக்கிறீர்கள் தோழரே... நான் நினைப்பதையெல்லாம் நீங்கள் உங்கள் எழுத்தில் அழகாக, எளிமையாக வெளிப்படுத்தியுள்ளதற்கு நன்றி.

    ReplyDelete
  3. அட.. நான் எழுதி இருக்க வேண்டிய கட்டுரை...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்