Jan 3, 2009

மார்கழியின் மலரும் நினைவுகள்

மார்கழி மாதம் தொடங்கி முடியப்போகிறது, எனது சிறு பிராயத்தில் மிகவும் மகிழ்சியான மாதம் என்று இதனை சொல்லலாம், கிராமங்களில் மார்கழி பிறந்த உடனே பல விதமான தயாரிப்புகள் தொடங்கும் கோலப்பொடி தயார் செய்தல் பல்வேறு விதமான புதிய கோலங்களை எனது வீட்டில் உள்ள இளம் பெண்கள் ஆர்வமுடன் சென்று பல தோழிகளுடன் உருவாக்கி ஒரு கோல புத்தகம் உருவாக்குவார்கள்,

அதிகாலை 4 மணிக்கெல்லாம் அந்த சுகமான குளிரில் எழுந்து வந்து கோலம் போட தொடங்குவார்கள், அந்த காலை நேரத்தில் அவர்களின் நடமாட்டம் மெல்ல மெல்ல எழவிரும்பாத சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட எழுப்பிவிடும், பின்னர் மெல்ல ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு வாசலுக்கு வந்தால் அப்போதுதான் நம் வீட்டு பெண்கள் வெள்ளை கோலமாவில் அடிப்படை கோலக்கோடுகள் வரையத்தொடங்கி இருப்பார்கள், நாங்கள் எல்லாம் அந்த கோலத்தை சுற்றி உட்கார்ந்து கொண்டு எப்போது கோடுவரையும் வேலை முடியும் என்று பார்த்துக்கொண்டிருப்போம், அதற்கிடையில் தெருவில் உள்ள மற்ற வீடுகளில் எல்லாம் எப்படி என்ன மாதிரி கோலங்கள் போடப்படுகிறது என்று ஒரு கிராம வலம் போல இந்த போர்வை போர்த்தியபடியே சென்று பார்த்து வருபவர்களும் உண்டு, அதிகாலை பனி சிலுசிலுவென முகத்தில் அடிக்கும், டேய் பனியில நிக்காதேடா என்று எல்லா வீட்டிலும் அப்பபோது ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

கோலம் வரைந்து முடிந்தவுடன், வண்ணம் கொடுக்கும் வேலைதான் எங்களுக்கெல்லாம், கோலத்தில் உள்ள பூ, காய் அல்லது விதவிதமான அமைப்புகளுக்கெல்லாம் பெண்கள் சொல்லும் வண்ணங்களை தூவுவோம், அதில் நிறைய பிரச்சினை வேறு, அந்த கோடுகளுக்குள் சரியாக தூவவேண்டும் இல்லாது போனால் வெளியில் சிதறி இருந்தால் அது முழு கோலத்தையே கெடுத்து விடும், சிறிது சிறிதாக தூவும் அழகே அழகுதான், இதில் மற்ற பக்கத்து வீட்டு பெண்கள் சிறுவர்கள் என்று எல்லோரும் மாறிமாறி மற்ற வீடுகளுக்கும் சென்று உதவுவார்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு போட்டி இருந்தாலும், அதிலும் ஒரு பெருந்தன்மை இருக்கும்,

நல்ல பெரிய கோலங்களாகத்தான் பெரும்பகுதி இருக்கும், அதன் பின் சிலர் வீட்டு கொல்லைக்கு சென்று அங்கிருந்து, பூசனி பூக்கள், சானியில் பிடித்த பிள்ளையார் என்று கொண்டு வந்து வைப்பார்கள், முதல் நாள் மாலையே பூசனி மொட்டுக்களை பறித்து வந்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பது வழக்கம், பின்னர் அதுகாலையில் நன்கு மலர்ந்து இருக்கும், பலவாறு உள்ள பூக்களும் வைக்கப்படும், பக்கத்து வீடுகளுக்கும் பூ கொடுப்பதும் உண்டு,

இப்படி எல்லாம் முடிய ஒரு ஐந்து ஐந்தரை மணி ஆனவுடன் சிறுவர்கள் அடுத்த பணி எல்லோரும் ஓடிபோய் மார்கழி பஜனை குழுக்களில் சேர்ந்து கொள்வதுதான், அப்போது ஊரில் இரண்டு பஜனை குழுக்கள் இருந்தன, முருகன் கோவிலில் இருந்து புறப்படும் குழு இதில் இளைஞர்கள் அதிகம் இருப்பார்கள், பெரும்பாலும் ஜாலியான கடவுள் பாடல்கள் பாடுவார்கள், அடுத்த குழு ராம மடத்தில் இருந்து தொடங்கும் அதில் எல்லாம் சற்று வயதானவர்கள், நல்ல சங்கீதம் முதல் சிறந்தபாடல்களும் அதற்கான துணைகருவிகளும் கொண்டு வருவார்கள், நான் இந்த இரண்டு குழுக்களிடமும் கலந்து கொண்டிருக்கிறேன், அதில் கலந்து கொண்டு வீதியில் பாடிக்கொண்டு வரும்போது மிக பெருமையாக இருக்கும், அதுவும் நம் வீடு உள்ள தெருவில் வரும்போது நம்வீட்டில் இருப்பவர்கள் வெளியில் வந்து பார்க்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி, மிருதங்கம், கஞ்சிரா சப்ளாக்கட்டை முதலிய இசைக்கருவிகள் உபயோகம் இருக்கும் அதெல்லாம் விட அந்த கோரஸ் சத்தம்தான் பஜனையின் அழகே,

சிலவீடுகளில் நிறுத்தி குடிக்க ஏதாவது தருவார்கள், பெரும்பாலும் பிராமண சிறுவர்கள் அதிகம் கலந்து கொள்வார்கள், என்னைப்போன்ற சிலர் பிராமணர் அல்லாதவர்களும் இருப்பார்கள், எனக்கெல்லாம் பெரும் பகுதி கோரஸ் பாட மட்டுமே வாய்ப்பு, எனது கவனம் முழுக்க மிருதங்கம் வாசிப்பவரின் மீதுதான் இருக்கும் அதன் மீது அப்படி ஒரு அலாதி பிரியம். ராம மடத்தில் இருந்து வரும் குழுவின் தலைவர் அந்த மடத்தின் நிர்வாகியும் கூட அவர் நல்ல குரல் வளத்துடன் பாடக்கூடியவராக இருந்தார், அவர் பாடிய ஆண்டாள் பாசுரங்கள் அப்போது அர்த்தம் புரியாமலேயே எனக்கு அவ்வளவு இனித்தது, அதனை வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்வேன், அந்த பாடல் எதுவென்று சொல்லத்தெரியாமல் அந்த பாடல் பற்றி பேசும்போது அது அப்பாவுக்கு மிகவும் சிரிப்பாக இருக்கும்.

சில இடங்களில் வீதிகளில் இரண்டு பஜனை கோஷ்டிகளும் சந்தித்து கொள்வதும் உண்டு, அப்போது இந்த பஜனையில் இருந்து அந்த பஜனை கோஷ்டிக்கு சில சில்வண்டுகள் தாவிவிடும் அது அன்றைய விநியோகத்தை பொருத்தது அல்லது உடன் செல்லும் நண்பர் குழுக்களைப்பொருத்தது.

ஒரு வழியாக வீதியெல்லாம் முடிந்து, அதன் தொடங்கிய இடம் எதுவோ அங்கே வந்ததும் ஒரு சிறப்பு பூஜை நடந்து பின்னர் விநியோகம் நடக்கும், இதற்கு தானே இப்படி வந்தது, பொங்கல், சில நேர வேறுமாதிரியான பிரசாதங்களும் கிடைக்கும், பஜனையில் கலந்து கொண்டவர்களுக்கு, இரண்டு பங்கு கிடைக்கும், மார்கழி மாதத்தில் வரும் சில திருவிழாக்களும் உண்டு, திருவாதிரை போன்ற விழாக்களில் களி மற்றும் இனிப்புகள் கூட விநியோகமாக கிடைக்கும்

அதிகாலையில் எழுந்து குளிகாமல் வேகவேகமாக பல் தேய்த்து விட்டு, குளிரில் இப்படி அடிக்கும் கும்மாளம் அது. தூங்கி எழும்போது மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் பின்னர் ஒரே ஜாலிதான், மிதமான குளிரும் அந்த போர்வையும் கொடுக்கும் சுகம் இப்போது நினைத்தாலும் மனசு குளிரும்.


தவநெறிச்செல்வம்

1 comment:

  1. மார்கழி மாத மலரும் நினைவுகள் படித்தேன், அது என்னை மார்கழி மாதத்திற்கே அழைத்து சென்றுவிட்டது. மார்கழிமாத பஜனையில் நான் பங்குகொண்டிருக்கிறேன். எனக்கு சங்கு ஊதுவதில் அதிக விருப்பம், சங்கு ஊதினால் மிளகு பொங்கல் அதிகம் கிடைக்கும். பாட்டு- மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரவேண்டும் இறைவா..... மருதப்ப நாயக்க மாமலை ஒருதரம், கோவிந்தனுக்கு சந்கீதனமாம் கோவிந்தா... , கோவிந்தா... என்று நான் பாடிய பாடல் மறக்க முடியாது. நான் இந்த மாதத்தில் அதிக நேரம் தூங்கினால், என்னை என் அம்மா திட்டுவார்கள், பீடை பிடித்தவனே எழுந்திருடா,எழுந்திருடா என்று எழுப்புவார்கள். இந்த மாதத்தை பீடை மாதம் என்றும் சொல்வது உண்டு. மார்கழி மாதத்தில் இரவு நேரம் சங்கு ஊதி பண்டாரம் வருவார், அதை நீங்கள் எழுத மறந்துவிட்டீர்கள், இந்த மாதத்தில் காலை நேரத்தில் நன்றாக உறக்கம் வரும் அது மிகவும் அருமையான உறக்கம். மறக்க முடியவில்லை. நினைவு படுத்தியதிற்கு மிகவும் நன்றி.

    அன்புடன்

    ஜீவா

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்