Jul 30, 2009

இப்படித்தான் நாட்கள் அழிகின்றன,

அதிகாலை துயில் எழுவது எல்லா வளைகுடா நாட்டிலும் ஒரு தவிர்க்க முடியாத விஷயம், அதனால் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை கழிக்கும் நேரத்தில் ஒரு விதமான தனிமை மிகவும் கொடுரமாக உணர்வதால் அதில் இருந்து விடுபட அந்த நேரத்தில் புத்தகமோ அல்லது இசையோ கேட்பது வழக்கமாகி விட்டது, இப்போது இணையம் வந்து விட்டபின் மடிகணினியின் உதவியும் சேர பல விஷயங்களை சுகமாக செய்ய முடிகிறது, காலையில் எழுந்து அதிகாலை.காம் இணையத்தில் இருக்கும் பொன்னியின் செல்வன் ஒலி வடிவத்தை ஓலிக்க செய்து குளியல் அறைக்குள் சென்றேன்,

இன்று பழயாறை என்ற பகுதியை வாசித்தார், பொன்னியின் செல்வன் நான் முதலில் படித்த நீண்ட ஒரு வரலாற்று நாவல் அதுதான் எனக்கு படித்தலின் சுகத்தை கற்று தந்தது என்று சொன்னால் அது மிகையில்லை, அதன் பின் எனது படிப்பின் தூரம் அதிகமாகிவிட்டாலும் அந்த பொன்னியின் செல்வனின் மீது உள்ள காதலும் பரவசமும் அப்படியேதான் உள்ளது, நமது முற்காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஒரு பலம்பொருந்திய மன்னனின் வரலாறு என்பதை விடவும் அது ஒரு சினிமா போல நம்முன்னே விரிவதை எத்தனை எழுத்தினாலும் போதாது என்றுதான் சொல்வேன். அதில் கலந்து கிடக்கும் காதலும் வீரமும் நிர்வாக செயல்பாடுகளும் அரசுகளின் அதிகார தூரங்களும் அதில் இணைந்து கிடக்கும் சிற்றரசர்களின் தன்மைகளும் அவர்களுக்குள் பரவிக்கிடக்கும் ஒரு இனம் புரியாத ஒற்றுமையும் இப்படி இதெல்லாம் புரிந்து கொள்ள உதவிய ஒரு பொக்கிஷம்.

கம்பர் தனது ராமனை எப்படி ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்திகொண்டுபோனேரொ அப்படி ஒரு முயற்சியாகக்கூட இருக்கலாம், இயல்பில் ராஜராஜன் இத்தனை தன்மை கொண்டவனாக இல்லாமல் கூட இருந்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் இல்லாத ஒரு அற்புதமான கதாநாயகனாக வந்திய தேவனையும் அருண்மொழியையும் கல்கி ஆக்கிவிட்டார் என்றுதான் சொல்வேன்.

அந்த அத்தியாத்தை கேட்டபடியே காலைப்புறப்பாடு முடிந்து எனக்கான வாகனத்தில் ஏறினேன், இன்னும் 1 மணிநேர பயணம் இருக்கிறது அதனால் எனது Mp3 player மிகுந்த உதவியாக இருக்கும், அதெப்படியோ ஒரு அமைதியில்லாத இறைச்சல் நிறந்த மனிதனாக போய்விட்டோனோ என்று கூட சில நேரங்களில் நினைக்கதோன்றியது,
சில நாட்களாகவே ஜோதா அக்பர் பட ஹிந்தி பாடல்கள் என்னுள்ளே ஒரு அதிர்வை ஏற்படுத்திகொண்டிருக்கிறது, இந்த ஏ.ஆர். ரஹ்மான் அப்படி ஒரு ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது,

வந்தார்கள் வென்றார்கள் படித்ததில் இருந்து இந்த மொகலாய மன்னர்களிடம் ஒரு காதலே வந்து விட்டது என்று நினைக்கிறேன் ஆக்ரா கோட்டைக்குள் சென்று பார்த்த போது ஒவ்வொரு அடியிலும் எனக்கு ஒரு பரவசம் இருந்தது, அது தாஜ்மகலில் கூட இல்லை, எத்தனை முடிவுகளை எடுத்த தர்பார் மண்டபம் , ஷாஜகான் சிறைப்பட்டிருந்த அறைகள் இப்படி அது ஒரு பரவசமான ஒரு இடம், செங்கோட்டையை விடவும் எனக்கு பிடித்த இடம் ஹிமாயூன் சமாதியுள்ள அந்த பிரமாண்ட கல்லறை கட்டடமும் ஆக்ரா கோட்டையும்தான்,

அதன் வரலாறுகளுக்குள் பலமுறை பயணப்பட்ட ஒரு அற்புதமான அனுபவம், அதனால்தானோ என்னவோ ஜோதா அக்பர் படமும் பலமுறைபார்த்தேன், அதன் வரலாறுகள் மிகவும் நுணுக்கமாக படிக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
அதனால் அந்த பாடல்கள் என்னுள்ளே ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்தின, எனக்கு இந்தி மொழி தெரியாது என்றாலும் அது என்னை அப்படியே ஒரு பரவசத்துக்குள் அழைத்துப்போவதை உணரமுடிகிறது,

ஒரு மணிநேர பயணத்துக்கு பின் அலுவலகம் சென்று பாதுகாப்பு சோதனைகள் முடிந்து எனது இருக்கைக்கு சென்று அமர்ந்து அன்றைய காலை வேலைகள் தெவையான விஷயங்களை செய்து கொடுத்து விட்டு எனது தளத்தில் சில மாற்றங்களை செய்ய முயல்கிறேன், அதன், எப்போதோ கும்பகோணத்தில் படித்த போட்டோ ஷாப் மென்பொருளில் சில முயற்சிகளுக்கு பிறகு சில மாற்றங்களை செய்தேன், அதை இந்த தளத்தில் நீங்கள் காணலாம், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் நான் புதிதாக ஒரு முயற்சியை செய்த மகிழ்ச்சியில் எனது வழக்கமான தளங்களுக்கு செல்கிறேன், சாரு மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் மிக முக்கியமானவர்கள், அதில் சென்று படிக்க படிக்க ஒரு விதமான உணர்வுகள் வரும், அதெல்லாம் எப்படி எழுதுவது நான் என்ன எழுத்தாளரா வெறும் உளறுகின்ற ஒரு பிளாகர் மட்டுமே.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய தாஸ்தாயெவ்ஸ்கியை பற்றிய கட்டுரை படிக்க படிக்க ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, அவரைப்பற்றி தெரியும் அவ்வளவுதான், ஆங்கில நாவல்கள் படிக்கும் அளவுக்கெல்லாம் ஒரு ஆங்கில அறிவு இல்லை, அதைப்பார்த்து பயந்து போன ஒருதன்மைதான் உண்டு, ஆகையால் எதுவாய் இருந்தாலும் தமிழில் தேடிபடிக்கிறேன், சாருவின் கருணையில் பல தமிழ் மொழி பெயர்ப்புகளையும், உலக இலக்கியத்தின் அறிவையும் கொஞ்சம் பெற முடிகிறது, என்றாலும் இதெல்லாம் தீரக்கூடிய விஷயம் இல்லை, இதற்கிடையே, குடும்ப பிரச்சினைகள் லவ்கீக செண்டிமெண்டுகள் என்று பிரச்சினைகள் வேறுதிசைகளுக்கு நம்மை இழுத்துச்செல்வதும் உண்டுதான்,

இப்படி ஒன்றும் இல்லாத விஷயத்தில் எல்லாம் முறைத்துக்கொள்ளும் மனிதர்களைப்பார்க்கும்போது பலமுறை நினைத்தது உண்டு இவர்களுக்கெல்லாம் இலக்கியம் என்கிறதும் அதில் சுகித்து கிடக்கும் வாய்ப்பும் கிடைத்தால், இப்படி ஒரு உலகம் பறந்து விரிந்து கிடக்கும் போது அதைவிட்டு விட்டு இப்படி இயந்திரமாய் கழிக்கிறோமே என்று வெட்கப்படுவார்களோ என்று.

அத்தனை சுகம் இந்த படிப்பதில் அதிலும் நல்ல இலக்கியங்களை படிப்பதில் இருக்கிறது, இதில் எங்குமே நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. பா.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி என்கிற நாவலை இப்போது படித்து கொண்டிருக்கிறேன் அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் அது ஒரு கட்டுரையில் சொல்கிற விஷயமில்லை, அவர் சொன்ன ஒரு விஷயத்தை எஸ்.ரா மேற்கோள் காட்டியுள்ளார்

மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை, மனதை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை

இது எவ்வளவு பெரிய வாசகம், இதன் பொருள் துயரங்களில் வீழ்ந்து மீண்டு வந்தவருக்கெல்லாம் புரியாமல் இருக்காது, எல்லா துயரங்களையும் கடக்கத்தாம் முயல்கிறோம், எனது தந்தையார் இறந்த போது ஒரு தாங்கமுடியாத துயரம் எனக்குள் எழுந்தது, ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள நான் முயலவே இல்லை, அல்லது அதற்குள் பிரவேசிக்கவே முயலவில்லை, இப்போது தனிமையில் இருக்கும்போதெல்லாம் அவரின் நினைவுகள் மெல்ல கண்ணீருக்குள் வந்து விடுகின்றன, அவரின் கைகடிகாரம் கட்டிய கையைப்பிடித்துக்கொண்டு நடந்த காலங்கள் வந்து வந்து போகின்றன, ஆனால் அதெல்லாம் தாங்கி கொள்ள முடிவதுதான் ஒரு ஆறுதல்,

இப்படி எல்லோருக்கும் காலம் ஒரு துயரத்தின் வலிமையை உணர்த்தி அதை தாங்க கூடிய தனது வலிமையையும் உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு தொடர்கதை போல இருந்த உறவுகள் திடீரென முற்றும் போடும்போது ஏற்படும் ஒரு பாதுகாப்பின்மை கூட ஒரு துயரமாக எழுந்து மெல்ல மெல்ல கரைந்து ஒரு நுரைபோல அப்படியே வடுதெரியாமல் மறைந்து போய்விடுகின்றன அதன்பின் அந்த உறவுகள் நிரந்திரமாக தனது முக்கியத்துவத்தை இழந்து ஒரு சராசரியாய் தங்கிவிடுகிறது.

தவநெறிச்செல்வன்

4 comments:

  1. //மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை, மனதை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை”//

    சரியாக சொன்னீர்கள். உங்கள் எழுத்து நடையில் ஓர் எளிமை தவழ்கிறது. தொடருங்கள், வாழ்த்துக்களுடன் நானும் இணைகிறேன்.

    பாசமுடன்,
    க. பாலாஜி

    ReplyDelete
  2. What a beautiful post?. Particularly your last paragraph submersed me.

    Good Luck to you !!

    Anbudan,
    R.Gurusamy

    ReplyDelete
  3. நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும்.

    தமிழ் பக்கங்களை Reedit.com, Digg.com என்று submit செயும்போது கிடைக்கும் ஹிட்ஸ்கலை விட தமிழ் திரட்டிகளில் submit செயும்போது அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அதுவே இந்தியா சார்ந்த ஆங்கில தளங்கள் என்றால் Hotkilix, Humsuffer போன்ற இந்திய ஆங்கில திரட்டிகளில் இருந்து அதிக ஹிட்ஸ் கிடைக்கும் .

    தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக இந்திய மொழி தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் . இதை நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.


    தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில
    Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை
    வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம்
    தளத்தில் add செய்வதற்கு பதில் ஒரு Buttonலையே எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .


    Add-தமிழ் பட்டன் பெறுவதற்கான இணையதள முகவரி : இங்கு கிளிக் செய்யவும்
    http://www.findindia.net

    ReplyDelete
  4. கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி, திரு. ராம் அவர்களின் புதிய தகவலுக்கும் நன்றி, அதை செயல்படுத்தியுள்ளேன்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்