Sep 23, 2008

உளறல்-1

சிறிது நாட்களுக்கு முன்பு எழுதியது.

கண்டதை படிக்க பண்டிதனாகலாம் என்பதைபோல கண்டதை எழுதி எழுத்தாளனாகிவிடலாம் என்று தோன்றுகிறது, நீண்டகாலமாய் எழுத்தாளனாக வேண்டிய கனவு பாக்கியுள்ளது, ஏதோ மற்ற கனவுகள் நிறைவேறிவிட்டதாக கருத வேண்டாம்,மீதமுள்ள கனவுகளில் எழுத்தாள கனவும் ஒன்று. கொஞ்சம் கவிதைகள் சிறுகதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதுண்டு கல்லூரி காலங்களில் ஆனால் அவைகள் வெளிவரவே இல்லை, தமிழ் தகறாறு வேறு நிறைய பிழைகளைக் குவித்துவிடும், எப்போதாவது நல்ல எழுத்துக்களைப்படிக்கும்போது உடனே எழுத வேண்டும் என்று ஒரு உள் உணர்வு தட்டி எழுப்பும் , இதெல்லாம் நல்ல எழுத்துக்களின் விளைவு என்பது புரியாமல் பேனாவும் பேப்பரும் விரயமான நேரமும் அதிகம்.

எழுத்து என்பது எவ்வாறு இருக்கவேண்டும் சிறுகதை எவ்வாறு நிறைவு செய்யப்படவேண்டும் என்று சுஜாதா அவர்கள் கூறியதை படித்திருக்கிறேன் பிற்பாடு அதைபோல எழுதி படித்துப்பார்த்துவிட்டு கிழித்துப்போடவேண்டுமென்று தோன்ற அது செயலாகிவிட்டது.

நாம் ஏன் எழுதக்கூடாது என்று எல்லா எழுத்தாளர்களின் தொடர்களையும் கட்டுரைகளையும் படிக்கும் போது தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை, ஆனால் அது ஏன் என்று புரியவில்லை, எல்லா எழுத்தாளர்களுக்கும் எழுதி முடித்து அதை திரும்ப படிக்கும்போது என்ன தோன்றும் என்று தெரிந்துகொள்ள ஆசையுள்ளது. ஆனால் புளியமரத்தின் கதையில் சு.ரா.வின் முன்னுரையை படித்தபோது அதி முதல் வெளீயீட்டில் இருந்த சில குறைகளை சரிசெய்து அடுத்த வெளியீடுகளில் வெளியிட்டதாக கூறியுள்ளார், நான் நம்புவது அதன் ஆன்மாவில் திருத்தம் வந்திருக்காது என்றுதான்.

இத்தனை மீடியாக்களின் பலமான ஆளுமை எல்லா இந்திய குடிமக்களிடமும் இருக்கும்போது அவைகள் தரமான இலக்கியவாதிகளாஇ மக்களிடம் பரப்பாமல் போனது ஏன் எனப்புரியவில்லை, சாருவையும் நாஞ்சில் நாடனையும் ஜெயமோகனையும் எஸ்ராமகிருஷ்ணனயும் இன்னும் பல சிறுபத்திரிக்கை காரர்களையும் கொண்டு நல்ல நிகழ்ச்சிகளை ஏன் இவர்கள் வடிவமைக்க முயல்வதில்லை, நடிகை கெளதமியைக்கொண்டு அன்புடன் என்றொரு நிகழ்சி சிறிதுகாலம் வந்து காணாமல் போனது தெரிந்திருக்கலாம், அதைவிட நல்ல நிகழ்சிகளை எழுத்தாளர்களால் நிச்சயம் தரமுடியும். DD யில் மட்டும் அவ்வப்போது இப்படி யாராவது பேசுகிறார்கள்.

முக்கியமாக இதுபோன்ற நிகழ்சிகளுக்கு சரியான விளம்பரம் செய்வதில்லை
“ சாருவுடன் சண்டை போடுகிறார் சக்கரைத்தேவன், பளீர் கேள்விகள் சுளீர் பதில்கள் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்தால் சாருவைத்தெரியாதாவர்கூட இது யாரு என்று பார்ப்பார்கள் அது நன்றாக ரசிக்கப்படும்போது நிரந்தர ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் அல்லவா? இதையேன் மீடியா மனிதர்கள் யோசிப்பதில்லை.

எழுத்தாளன் என்றாலே பேனாவுக்கும் பேப்பருக்கும் என்று இருந்த காலம் மாறி கணிணிக்குள்ளும் கலக்க தொடங்கிவிட்டார்கள்.

இன்று ஜெயகாந்தன் பற்றி சாரு எழுதியதை படித்தேன். கொஞ்சகாலம் முன்பு தமிழ்சினிமா பற்றி எழுதியதையும் படித்தேன், கமலஹாசனும், பாலுமகேந்திராவும் ஏன் ஒரு பருத்திவீரன் போல் ஒரு படைப்பை உருவாக்கமுடியவில்லை என்று எழுப்பி இருந்த கேள்வி நியாயமாக பட்டது,

சாருவுக்கு சிவாஜி பார்க்க விருப்பமிருக்காது என்று எனக்குத்தெரியும் ஆனால் தமிழினக்கடமையாக அது மாறிப்போய்விட்ட இந்த சூழலில் சாரு அதைப்பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் எழுதலாம் இது சங்கருக்கோ ரஜினிக்கோ உதவப்போவதில்லை ஆனால் சாருவின் வாசகர்களுக்கு உதவலாம்.

சந்திரமுகி பற்றியும் சொர்ணா காதில் பூ வைத்த ரஜினியின் செய்கை பற்றியும் சாருவின் விவரிப்பை போன்ற இன்னொரு நகைச்சுவை கிட்டும் அல்லவா?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்