பகவத் கீதை இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது. இஸ்லாம் மதத்திற்கு எப்படி திருகுரான் கடமைகளை கூறுகின்றதோ, கிருஸ்துவத்தில் எப்படி விவிலியம் கூறுகின்றதோ, புத்த மதத்தில் எப்படி திரிபிடகா கூறுகின்றதோ அவைகளை பின்பற்றிதான் மதம் தனது பாதையை செலுத்துகிறது. இதில் ஏற்படுகிற புத்தி ஜீவிகளின் குறும்புகள்தான் மதங்களிடையேயான பிரச்சினைகளுக்கு காரணம். இப்படி எல்லா மதங்களுக்கும் ஒரு புனித நூல் இல்லாமல் இல்லை. ஒரு மதத்தை சேர்ந்தவன் தனது வாழ்முறைக்கு வேண்டிய கடமைகளை அல்லது சிரமங்களைப் பற்றிய சந்தேகங்களை அந்த புத்தகத்தில்தான் தேட வேண்டியுள்ளது.
மத பெரியவர்களின் பணி, அதில் உள்ள விஷயங்களை சராசரி மனிதனின் தேவையான தருணங்களில் சொற்பொழிவுகளாகவோ அல்லது எழுத்துக்களாகவோ மக்களை சென்று அடையச்செய்யும் பணியில் இருக்கிறார்கள். இதைதான் சர்ச்சுகளும், பள்ளிவாசல்களும், திருக்கோயில்களும், மடங்களும் செய்யவேண்டும், அவரவர் வாழ்முறை சிரமங்களை எல்லாம் களைய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தர இப்படி ஓர் அமைப்பு உருவானது.
இந்து மதத்தின் தொடங்கிய காலம் மிகவும் பழமையானது என்பதோடு, அதன் பழமையான கோட்பாடுகள் மனு ஸ்மிருதியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கீதை வழங்கப்பட்டது மகாபாரதத்தில்தான். அதற்கு முன் சட்டங்களை வகுக்க காரணமானது மனுஸ்மிருதிதான். ஆனால் மனு தர்மம் தற்போதைய பெரியார், அம்பேத்கார் இவர்களின் காலம் வரை பின்பற்ற பட்டிருக்கிறது. உண்மையில் இந்த சாஸ்திரங்களை கடுமையாக எதிர்க்க தொடங்கியது இவர்கள் இருவர்தான் என்று தெரிகிறது. இதற்கு முன் இத்தனை நீண்ட காலமாக இந்த மனுதர்மம் எப்படி எல்லோராலும் கடை பிடிக்க பட்டது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. மிகுந்த ஒரு அடிமை வாழ்வை மிக சாதாரணமாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிக மேன்மையான வாழ்வை பிராம்ணர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
என்றாலும் பெண் என்ற விஷயத்தில் எல்லா மதங்களும் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருக்கின்றன அதன் ஆழமான சூட்சுமம் என்ன வென்று தெரியவில்லை. இன்றைய பிராமணர்கள் கூட அந்த விஷயத்தில் மனுதர்மத்தை தொடரவில்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்கள் தங்கள் கர்ப்ப பைகளை வெட்டி எறிய வேண்டும் என்று பெரியாரின் சிந்தனை மிகுந்த ஆழமான புரிதலுக்குரியது. ஒரு கடுமையான அடிமைத்தனத்தை வேறோடு பிடிங்கி எறிய வேண்டிய, ஒரு தாங்க முடியாத ஆழமான கோபத்தின் வெளிப்பாடு அது. இதை எல்லாம் உணரும் போது பெரியாரின் பிரமாண்டம் ஒரு விஸ்வரூபமாக தெரிகிறது.
ஆதி சங்கரர் தொடங்கி எல்லா மதவாதிகளும் தத்தம் மதங்களின் குறைபாடுகளை அப்போதைய வாழ்முறையை அனுசரித்து மாற்றி அமைத்திருக்கிறார்கள், நரபலி இந்து மதத்தில் இருந்து நீக்கப்பட்டது ஒரு உதாரணம். எல்லா மதங்களிலும் பல விஷயங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன, மதபற்றாளர்கள் அதை மறுக்கத்தான் செய்வார்கள், மிகக்கடுமையான சட்டங்களை கொண்ட இஸ்லாம் கூட இதில் விதி விலக்கில்லை, ஏனென்றால் உலகின் தற்போதைய வளர்ச்சியில் வாழ் முறைகளின் சிரமங்கள் காரணமாக இவைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாராணமாக இஸ்லாம் சட்டங்கள் அதிகம் கடைபிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் மது முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும், புகைபிடிக்கும் சாதனங்கள் மக்கா மதினா தவிர மற்ற இடங்களில் தாராளமாக கிடைக்கிறது. இத்தனைக்கும் திருக்குரான் மற்றும் நபிமொழிகள் எந்த வகையான போதை வஸ்துக்களையும் கடுமையாக எதிர்க்கிறது.
இது தொடர்புடைய நபிமொழி கீழே:
"ஒரு பொருளை அதிகம் பாவிப்பதால் போதை ஏற்படும் என்றால் அப்பொருளை குறைவாகப் பாவிப்பதும் ஹராமே"
எனும் ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)அவர்களால் அறிவிக்கப்படும் அபூதாவுதில் இடம்பெற்றிருக்கும் பொன்மொழி.
ஹராம் என்றால் தீமையானது, விலக்கப்படவேண்டியது என்று பொருள்.
இதுவே திரு குரானில்:
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
நபிமொழிகள் என்ற தொகுப்பு ஹதீஸ்கள் என்று இஸ்லாத்தில் வழங்கப்படுகிறது, அதாவது நபிகளாரல் சொல்லப்பட்டது, நபிகளாரால் செய்யப்பட்டது, நபிகளாரால் பல்வேறு சூழலில் அங்கீகரிக்கப்பட்டது. குரானில் கிடைக்காத தீர்வுகளுக்கு, அல்லது எளிதில் புரிந்துகொள்ளமுடியாதவைகளின் விளக்கம் என்று கொள்ளலாம். உதாரணமாக திருக்குரான் அல்லாஹுவுக்கு வழிபடுங்கள் என்று கூறுகிறது ஆனால் எப்படி வழிபடவேண்டும் என்று கூறவில்லை, அதை நபியவர்கள் வழிபடும் முறையைப்பார்த்து தொழுகை முறை பின்பற்றப்படுகிறது. அதனால் மது பற்றிய மேலே கொடுக்கப்பட்டுள்ள நபிமொழி மிகவும் அத்தாட்சி வாய்ந்தது.
இப்படி மதங்கள் தங்களின் மறு உருவாக்கத்தை காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப மாற்றி வந்திருக்கின்றன. மனுதர்மம், இன்று கிட்டத்தட்ட உபயோகத்தில் இல்லாத ஒரு சாஸ்திரமாக இருக்கிறது. கலப்புத்திருமணங்களும், சேரிகளுக்கு செல்லும் சங்காராச்சாரிகளும் ஒரு உதாரணம். எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களும் சமுதாய தேவைகளை பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இதில் இறைவன் என்கிற பதம் பல்வேறு நிலைகளை அடைந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். எல்லா மதங்களின் அடிப்படை இறைவன், ஆகையால் மதங்கள் தங்களை மறு உருவாக்கம் செய்யும்போது இறைவன் பற்றிய நிலைப்பாடுகளையும் அவனுடனான வணக்கமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டி இருக்கிறது.
பத்து அவதாரங்களையும் கூர்ந்து கவனித்தால் அது புரியும். கடைசியாக வந்த ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் மிகவும் அதிகம் வேறுபாடு கொண்டவை, ராம அவதாரத்தில் மனிதனின் ஏகப்பத்தினி விரதம் மேன்மையாக சொல்லப்பட்டு பின்னர் வந்த காலத்திற்கு ஏற்ப கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணருக்கு பாமா ருக்குமணியை மனைவியாக்கினார்கள். கூடவே எளிமையான நாமாவளி சங்கீர்த்தனம் மற்றும் பஜனை முறைகள் வழிபாட்டு முறைகளில் புதிய அவதாரங்களாகின. இன்றைய நவநாகரீக கேளிக்கைவிடுதிகளில் ஆடிப்பாடும் இளைஞர் கூட்டம் கிடைப்பதாக சொல்லும் ஒரு வகை ரிலாக்ஸ், ராதாகல்யாண பஜனைகளிலும் அங்கே இனிமையான பஜனை இசைகளில் மூழ்கி ஆடும்போது கூடுதலாகவே கிடைக்கும். அதனை அனுபவித்து தெரிந்து கொள்ளலாம்.
இதில் நுட்பமாக புரிவது ஆங்கிலத்தில் சொல்வதானால் option என்று சொல்லப்படுகிற வாய்ப்புகள். அவைகள் மற்றவரை பாதிக்காதவகையில் இருந்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ராமர் காலத்தில் அவருடைய தந்தையாருக்கு கூடுதல் மனைவிகள் ராமருக்கோ ஒரு மனைவி மட்டும்தான்.
இரண்டாவது மூன்றாவது மனைவிகளின் தேவை வரும்பொது அதுவும் ஒரு அங்கீகரிக்ப்பட்ட விதமாக அமைய வேண்டிய சூழல்வரும்போது கிருஷ்ண அவதாரம் வருகிறது. நீ ஒரு மனைவியோடு வாழ்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு ராமன், இல்லை கூடுதல் மனைவிகள் வேண்டுமானால் அதற்கு ஒரு கிருஷ்ணன், மனைவியே இல்லாமல் வாழவேண்டுமானால் அதற்கும் ஒரு வாமன பரசுராம அவதாரம். என்று option களை கூட்டிக்கொண்டே போகவேண்டிய தேவை உண்டாகும்போது மதங்கள் தங்களை திருத்திக்கொண்டன.
எப்படி ஆரம்பத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ரீமோட் கண்ட்ரோல் இல்லாமல் இருந்தது, ஆனால் பின்னர் ஒரு புண்யவான் ரீமோட் கண்ட்ரோலை கண்டுபிடித்து சந்தையில் விட்ட பின் அந்த வசதி இல்லாத நிறுவனங்களும் அதை கடைபிடிக்கவேண்டி வந்ததுபோல், ஒரு மதம் சில சிந்தனை மாற்றங்களை, எளிய வழிபடும் முறைகளை கொண்டு வந்த பின், மற்ற மதங்கள் தானே தன்னிலும் அவைகளை ஏதோ ஒரு ரீதியில் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் மாற்றங்களை உட்புகுத்துகின்றன.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!’ என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘‘இல்லை!” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவ ளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.
நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த ‘அறக்’ எனும் கூடை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ‘‘நான்தான்!” என்று அவர் கூறினார். ‘‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு ‘‘இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936).
மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து நான் புரிந்து கொண்டது, தண்டனையின் அளவை அந்த தொண்டரின் குடும்ப சூழலுக்கு ஏற்ப குறைத்துக்கொண்டே வந்திருக்கிறார் நாயகம் அவர்கள், இதைத்தான் நான் முதலில் கூறிய option என்பதன் தேவை. கடைசியில் இவ்வளவு ஏழ்மையான ஒரு குடும்பத்தில் உள்ள மனிதரிடம் நாம் போய் ஒரு அடிமை உண்டா, 60 ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என்று கேட்டு விட்டோமே என்று நினைத்து சிரித்திருக்ககூடும் என்று நினைக்கிறேன். இந்த சம்பவத்தில் அவரின் சிரிப்பு பல சிந்தனைக்களுக்கு நம்மை உள்ளாக்குகிறது, ஒரு நபித்துவம் பெற்ற மனிதர் தன்னிடம் அபயம் தேடி வந்த தொண்டரை எள்ளி நகையாடி சிரிக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தை வாசகர்கள் உள்வாங்கி அவர் ஏன் சிரித்திருக்க கூடும் என்று உணர்ந்து பார்த்தீர்கள் என்றால் பல சுவையான காரணங்கள் கிடைக்கும்.
கேரளத்தில் கோயில்களில் மிகச்சாதாரணமாக ஒரு காட்சியை காணமுடியும். அங்கு உள்ள கோயில்களுக்கு செல்லும் போது மேல்சட்டை அணியாமல்தான் செல்லவேண்டும், கீழே வேஷ்டி அணிய வேண்டும் இதை கடுமையாக முன்பெல்லாம் நடைமுறைப்படுத்தி இருந்திருக்க கூடும். இப்போது என்ன நடக்கிறது என்றால் கீழே பேண்ட் அணிந்தவர்கள் சட்டையை மட்டும் கழட்டி விட்டு உள்ளே செல்லலாம் என்று மாறி, பின்னர் சட்டையைகூட ஒருகையை கழட்டிவிட்டு மறுகையில் மாட்டிக்கொண்டு செல்லலாம் என்று மாறிவிட்டது. இதன் வெளிப்பாடு என்ன, பழய முறைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் கோவிலுக்கு வரும் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். ஆகையால் மாற்ற வேண்டிய அவசியம்.
அது இன்னும் சிறிது காலத்தில் இது இன்னும் எளிமையாகிப்போகும் என்றுதான் நம்புகிறேன்.
இப்படி எல்லா மதங்களும் எளியமுறைகளையும் கடுமையான முறைகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன, புத்த மதத்தில் ஹீனயான, மகாயான பிரிவுகள் இப்படித்தோன்றியவைதான். பல மத அறிஞர்கள் தங்களின் மத கோட்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார்கள் அதன் அவசியம் தங்களின் மதம் சார்ந்தவர்களின் கூட்டம் குறைந்து விடக்கூடாதென்ற எண்ணம் அவ்வாறு குறையும் பட்சத்தில் சமுதாயத்திற்கு கிடைக்கும் லாபம் குறைந்து போகும், இப்படியாக அரசியல் பொருளாதாரா வாழ்நிலை காரணங்கள்தான் மதங்களை கட்டிப்பிணைத்து வைத்திருக்கின்றன.
இதில் இறைவன் என்ற நிலையை நாம் எங்கே இணைக்கிறோம் என்றால், பயத்தில்தான் என்று தோன்றுகிறது. மனிதன் தன் அறியாமையினால் அல்லது முழுதும் அறிந்து கொள்ளக்கூடிய நிலையை அடையாததினால் ஏற்படுகிற குழப்பத்தில் காரணகாரியங்களைத்தேடி அலைகழிக்கப்படும்போது யாராவது ஒருவர் தன் மனநிலைக்கு கேற்ப ஒரு விளக்கத்தை கூறி அதன் தற்செயலான வெளிப்பாடுகளை உதாராணங்களாக காட்டும்போது ஏற்படும் மயக்கம் அல்லது ஆறுதல், மனிதனை அந்த திசையில் பயணிக்க வைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
கர்ணன் படத்தில் ஒரு வசனம் வரும் கர்ணன் மீது அர்ச்சுனன் வீசும் அம்புகள் மாலையாக விழும்போது கிருஷ்ணர் ஒரு வசனம் சொல்வார், “தருமம் அவன் தலையைக்காக்கிறது, படைத்தவன் வலிமையும் அதன் முன் செல்லாது” என்று. இது கீதையில் இருந்து எடுக்கப்பட்ட வசனம்.
படைத்தவன் இறைவன் என்றால் தர்மத்தின் முன் எல்லாம் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்ற பொருள் வருகிறது, தர்மத்தின் விளைவு என்ன மற்றவருக்கு உதவுவது, அதன் அடிப்படை மனித வாழ்வின் மேன்மைதான். இப்படி எல்லா சண்டைகளும் தத்துவங்களும் சுற்றி சுற்றி மனித வாழ்வின் மேன்மையை அதில் நிலவ வேண்டிய அமைதியையும் நிம்மதியையும்தான் குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. மதங்களின் சட்டத்திட்டங்கள் நோக்கம் இதைத்தான் சொல்கின்றன, கால நேர அறிவின் வீச்சுக்கு ஏற்ப அந்த சட்டங்களின் குறைகள் களையப்பட்டுக்கொண்டே இருக்கின்றன, எப்படி பல சாஸ்திரங்கள், புனித நூல்களின் கட்டளைகள் அப்படியே பின்பற்றாமல் மாறி வசதிக்கேற்றார்போல் பொருள் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகின்றனவோ அப்படி.
இறைவன் மனிதனுக்கு உள்ளே உள்ள பயத்தில்தான் இருக்கிறான், மனித இன நிம்மதிக்கு கேடு நேர்ந்தால் அதை ஏற்படுத்தியவர் இறைவனின் தண்டனைக்கு உட்பட்டவர் என்கிற பயம்தான் எல்லோரரையும் ஒரு ஒழுங்கில் செல்லவைக்கிறது. பைபிளில் சொல்லப்படுகிற பாவத்தின் சம்பளம் மரணம் என்பது ஒரு உதாரணம்.
மரணத்திற்கு பிந்திய வாழ்வைப்பற்றி மதங்களின் நிலையும் கூட பயத்தை அடிப்படையாகக் கொண்டேதான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, இந்த பயத்தின் நோக்கம் மனித குல அமைதி என்றாலும், இந்த பயம் நம்மை ஆட்கொள்ள காரணமாக இருப்பது பற்று, ஒரு பற்றுள்ள வாழ்வில் இருந்து விடுபடப்போகிறோமே என்ற பயம்தான் நம்மை பல தவறுகளில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்த பற்றை எல்லா மதங்களும் தவிர்க்கவேண்டும் என்று கூறினாலும், அதன் சட்டதிட்டங்களின் வழியே பற்றை போற்றி பாதுகாக்க செய்கின்றன. நமது வழிபாட்டு முறைகள் சடங்குகள்,அதற்கான உடைகள், குழந்தைகளை பேணுதல், குடும்ப வாழ்வின் மகத்துவம், உணவின் சுவைகள், பெருமைகள் என்று பலவற்றை மதங்கள் நமக்கு கற்றுக்கொடுத்து அந்த பற்றை இழந்துவிடுவாய் என்று பயம் காட்டியும்தான், மதங்கள் ஒருவகை சட்டத்தை நிலை நிறுத்துக்கின்றன.
இது ஒருவகை அரசியல், இங்கே எல்லா செயல்பாடுகளின் மொத்த நோக்கம் மனித சமுதாயத்தின் நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டும்தான். அதில் மதங்கள் தங்கள் தங்கள் வழிகளின் மூலம் வெற்றியும் பெற்றிருக்கின்றன, அதில் தோல்விகண்ட மதங்கள், சட்டங்கள் அழிந்து போய்விட்டன, அல்லது நிராகரிக்கப்பட்டன.
யூத மதம் உலகின் உயர்ந்த குடிமக்கள் நாங்கள்தான் என்கிற பெருமையோடு இருந்தாலும், அவர்களின் அந்த வகைக்கோட்பாடுகள் ஓட்டுமொத்த சமுதாயத்திற்கு நல்லதாக படாததால் மெல்ல மெல்ல மற்ற மதங்கள் தோன்ற வேண்டிய தேவை வந்தது, இன்று யூத மதம் சொற்பமாக சுருங்கிப்போனதும் அதனால்தான். மனுதர்மம் காணாமல் போனது கூட இந்த ஓவ்வாத கோட்பாடுகளால்தான். இப்படி மனித சமுதாயத்திற்கு நிம்மதியையும், மகிழ்ச்சியும் தரமுடியாத மதங்கள், தன்னை காலசூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் அல்லது மெல்ல மெல்ல காணாமல் போகும் என்பதுதான் வரலாறு கண்ட உண்மை.
மதங்களின் நீண்ட பயணத்தில் அவைகள் தங்களை பல உருவங்களாக மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன, எந்த மதமும் தொடங்கிய விதத்தில் இன்று இல்லவே இல்லை, மதங்கள் உருவான காலத்தில் உலகின் அரசியல் பொருளாதார வாழ்வியல் முறைகள் வேறு. இன்று வேறு. ஆகவே இந்த மாற்றங்களை தவிர்க்க முடியவில்லை, இந்த மாற்றங்களை அங்கீகரிக்காத மதங்கள் மக்களின் ஆதரவை இழந்திருக்கிறது. அல்லது தன்னை மாற்றிக்கொண்டு பல புதிய பிரிவுகளை ஏற்று புதிய அவதாரங்களை கொண்டிருக்கிறது. இந்து மதம் தனது பழய நிலைகளை விட்டு இன்று கண்டுள்ள பிரிவுகள் ஏராளம் ஆனால் அவை எல்லாம் ஒன்றே என்கிற மனோபாவம் இந்துக்களிடம் ஏற்பட்டுவிட்டது, ஒரு காலத்தில் திராவிட தென்னாட்டில் இருந்த சைவ வைஷ்ணவ போட்டிகள் இன்று மக்களிடம் இல்லை,இன்னும் பல இயக்கங்களாக அவைகள் மாறி இருந்தாலும் மக்களுக்கு அவைகள் எல்லாம் ஓன்றாகவே தெரிகிறது.
ஆனால் கிருஸ்துவத்திலும் இஸ்லாத்திலும் உள்ள பிரிவுகள் மிக கடுமையான எதிர்வாதங்களை கொண்டிருக்கின்றன, அவர்கள் பரஸ்பரம் தங்கள் வழிபடும் இடங்களைக்கூட பிரித்தே வைத்திருக்கிறார்கள், இந்து மதத்தில் இருந்து பிரிந்து புதிய மதமாக உருவான சீக்கிய மதத்தினர் இந்து கோவில்களுக்கு செல்வதும், இந்து தெய்வ வழிப்பாடுகளை தொடரவும் செய்க்கிறார்கள். வாழ்க்கை போராட்டம், உழைப்பின் தேவை உணர்ந்து கடும் உழைப்பாளிகளான மனிதர்கள் இறைவன், மதம் போன்றவற்றை எந்த பாகுபாடும் இல்லாமல் இயல்பாக அணுக பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் உழைப்பும் வேலையும்தான் முதல், வழிபாடும், மதங்களும் எந்த பெரிய இடத்தையும் வகிக்கவில்லை.
மேற்கத்திய நாடுகளிலும் கூட கிருஸ்துவமதம் எங்கும் பரவி இருந்தாலும், பல விஷயங்களை அது வாழ்முறைக்கு தோதாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
போப்பாண்டவர் பல புதிய விஷயங்களை இனி கத்தோலிக்க இறைச்சேவையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்முறையாக ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது ஒருவகை எடுத்துக்காட்டு. இப்படி மதங்களின் தேவைகள் குறைந்துகொண்டே வருகிறது, அல்லது மதங்கள் தங்களை வாழ வைத்துக்கொள்ள தங்களை மறு உருவாக்கம் செய்து கொள்கின்றன.
மனிதனின் கல்வி அறிவின் வளர்ச்சிதான் இந்த எல்லாவகை மதம் சார்ந்த உணர்வுகளை தெளிவு படுத்துகிறது, மனிதனின் சிந்தனையின் வளர்ச்சி குறைவாக இருந்த காலத்தில் மதம் அவனுக்காக சிந்தித்தது, இன்று மனிதனின் சிந்தனை அபார வளர்ச்சி கண்டுள்ள நிலையில் மெதுவாக மதம் தனது அடையாளங்களை இழந்து ஒரு பொது தன்மைக்கு தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது, அதனால்தான் இப்போது இந்திய கார்பரேட் சாமியார்கள் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களையும் தங்கள் இயக்கங்களில் சேர்த்துக்கொண்டு சர்வமத பிரார்த்தனைகளை தங்கள் தினசரி வழிபாடுகளில் சகஜமாக்கி இருக்கிறார்கள்.
கிட்டதட்ட இது ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை துறத்தல் என்ற நிலைதான், ஒரு சிந்தனை தன்னைப்பக்குவப்படுத்திக்கொள்வதற்காக உருவாகிறது, அதன் பலனால் பக்குவம் அடைந்துவிட்ட பின் அதற்கான அடையாளத்தை தனது எந்த உருவத்திலும் ஏற்படுத்திக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. பெயரை வைத்துதான் பெரும்பாலானவர்களின் மதங்கள் அடையாளம் காணப்படுகின்றன, புதிய தலைமுறையினர் இன்று மத அடையாளங்களை அணிவதை தவிர்க்கவே விரும்புகிறார்கள், தமிழகத்தில் ஜாதி முறை கணிசமாக நடைமுறையில் இருந்தாலும், இப்போது தனது ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் இடுவதை சுத்தமாக தவிர்த்து விட்டார்கள். ஒரு சில ஜாதி தலைவர்களைத் தவிர. அதுபோல்தான் மதங்களின் அடையாளங்கள் மெல்ல தவிர்க்கப்படுகின்றன.
இவையெல்லாம் மதங்களின் ஒருவகை மறு உருவாக்கம்தான், இவைகளை தவிர்க்கவே முடியாது, அதற்காக மதங்களில் மாறதவைகள் இல்லவே இல்லையா எனக்கேட்கலாம், நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உதாராணமாக திருக்குரான் அரபி மொழியின் மூல வடிவம் கிட்டதட்ட 1500 வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மற்றும் எல்லா மதங்களின் அடிப்படை கொள்கைகள் பெரிய மாற்றங்களை பெறவில்லை, ஆனால் வாழ்முறைகள் அணுசரிப்புகள் மாறி விட்டிருக்கின்றன.
எப்படி இன்றைய மென்பொருள் துறையில் ஒரு முக்கிய இயங்கும் மென்பொருள்( operationg system) ஓன்று போல உள்ள மொழிகளில் உருவாக்கப்பட்டாலும், அதன் உபயோகம் பல வாய்ப்புகளை உள்ளடக்கிய புதிய வெளியீடுகளாக வேகத்திலும் வசதிகளிலும் வருகிறதோ, அதாவது, window-3.0. windows -95,98,xp,vista, இப்போது win-7. இதில் எல்லாவற்றிலும் அடிப்படையான உருவாக்கும் மொழி கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும், ஆனால் அதன் பயன் நிகழ்கால வேகத்திற்கும் தேவைக்கும் ஏற்றபடி எளிமையாகவும் அதனுடனான கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரமானதாகவும் மாறி இருக்கிறது.
முன்பெல்லாம் கல்லூரிகளில் கம்யூட்டர் சாலைகளுக்கு உள்ளே செல்லும்போது காலனிகளை வெளியே விட்டுதான் செல்ல வேண்டும். இப்போது அது மாறிவிட்டது, குளிர்சாதனம் இல்லாமல் கம்யூட்டர்கள் வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலை மாறி எல்லா காலநிலையிலும் இன்று அவைகள் வேலைசெய்கின்றன. முன்பு கோவில்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தன, கேரளாவில் சட்டை போடக்கூடாது என்பது மாதிரி, கர்ப்பகிரகத்தில் மின் விளக்குகள் போடக்கூடாது என்பது, குடுமி வைத்துக்கொள்வது என்பன போன்று பல. இன்று சங்கராச்சாரியார்கள் டெம்போ டிராவலரில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
மதங்களின் மீதான தெளிவு கூடிக்கொண்டே வருவதுதான் இந்த குழப்பங்களுக்கான தீர்வு, அது மிகவும் சார்ந்திருப்பது மனித இனத்தின் அறிவின் வளர்ச்சியைத்தான் என்று தோன்றுகிறது.
நல்ல நடை, நல்ல அலசல்.
ReplyDeleteதொடரட்டும் உன் முயற்சி.