Jan 29, 2009

என்ன செய்யப்போகிறோம் இலங்கை தமிழருக்கு


இலங்கைப் பிரச்சினை, இன்று மிகவும் முக்கியமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது, எல்லா புறம் இருந்தும் ஆதரவு பெருகி கொண்டிருக்க பிரணாப் முகர்ஜி சென்று பேசிவிட்டு வந்திருக்கிறார். நிறைய மாறுப்பட்ட கருத்துக்கள் எங்கு பார்த்தாலும் நிலவுகின்றன. இதன் ஆரம்பம் கொண்டு பல விஷயங்களை குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன் “யுத்தம் சரணம்” என்ற தொடர் எழுதி கொண்டிருக்கிறார் அதனைப்படித்தால் அதன் ஆரம்ப நிலைகளை புரிந்து கொள்ளலாம்,

ஆனால் இன்றைய தேவை என்ன என்பது மிகவும் புதிரான விஷயமாக இருக்கிறது.
எதை நாம் நமது மத்திய அரசிடம் கோருகிறோம் என்பது தொடங்கி எதை நாம் செய்ய வேண்டும் இலங்கை தமிழர்களுக்காக என்பது வரை எல்லாமே புதிராக இருக்கிறது, அதற்கான காரணங்களை நாம் காணவேண்டும்.

1. ஒரு நாடு தனது நாட்டில் நடைபெறும் பிரிவினைவாதத்தை அடக்க ராணுவத்தை பயன்படுத்தி முன்னேறுகிறது, இதை நாம் எப்படி நிறுத்த சொல்ல முடியும், அதற்கு நாம் ஒன்றும் உலக போலிஸ் அமெரிக்கா இல்லை.
2. அப்படியே செய்ய வேண்டுமானாலும் அதை செய்வதால் பலனை யார் நேரடியாக அடையப்போகிறார்கள்.
3. இந்திய தலைவர் ஒருவரை கொடுரமான முறையில் கொன்று போட்டவர்களை ஆதரிக்க அந்த தலைவரை சார்ந்த கட்சியால் எப்படி முடியும்.
4. நமது இனம் என்பதால் தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், ஊர்வலம், உண்ணாவிரதம்,போராட்டங்கள் நடத்தி ஏதாவது செய்தால் அதன் பலனாக என்ன நடக்கும், ராஜபக்ச அதற்கெல்லாம் கலங்ககூடிய ஆள் இல்லை. தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று இலங்கை தளபதியை சொல்லவைத்தவர்தானே அவர்.
5. இந்தியா முன்பு செய்தது போல விடுதலை புலிகளுக்கு, பயிற்சி கொடுத்து அதனை வலுப்படுத்தி சண்டையை இன்னும் வலுவோடு நடத்த உதவ வேண்டுமா? அப்படி செய்தால் இலங்கை தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்களா?
6. அல்லது இன்றைய அரசியல்வாதிகள் கோருவது போல போர் நிறுத்தம் செய்யப்பட்டால் போதுமா?, போர் நிறுத்தம் செய்து விட்டு எனது நாட்டிற்குள் புலிகள் தனித்து இயங்கி கொள்ளட்டும் என்று இலங்கை அரசு விட்டு விட்டு சும்மா இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பா?
7. அதிக பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், குழந்தைகள் பெண்கள் என்று எண்ணற்ற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், உண்மைதான், மிகவும் கவலையும் வேதனையும் கலந்த செய்திதான், ஆனால் இதற்கு இலங்கை அரசு மட்டும்தான் காரணமா புலிகளின் பங்கு இந்த ரத்த வெள்ளத்தில் இல்லவே இல்லையா? அப்படி அவர்களும் பங்காளிகள் என்றால் யாருக்காக இந்த போராட்டங்கள் இங்கே நடக்கின்றன?
8. நமது நேரடியான கடமை என்ன என்ன தீர்வை வைத்துக்கொண்டு நாம் இந்த போராட்டங்களை நடத்துகிறோம், தமிழர்கள் நாம் அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.
9. நமது இனமக்களுக்காக என்ன தீர்வை நாம் வைத்திருக்கிறோம், இன்று தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை என்ன என்று பொங்கி எழும் நம்மக்களுக்கு புரியுமா?
10. அவர்கள் எல்லாம் அங்கிருந்து வந்த போது எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இன்று வரை கிட்டதட்ட 25 வருடங்களாய் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை நிலையை எந்த இந்திய அனுதாபிகளும் உயர்த்த பாடுபடவில்லை, அவர்கள் படும் வேதனைகள் கஷ்டங்கள் பல முறை பத்திரிக்கைகளில் வந்தாலும் அதற்கெல்லாம் எந்த முயற்சியும் இவர்கள் எடுக்கவில்லை.
11. போரை நிறுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது ஆனால் போரை நிறுத்தி ஒரு அமைதி ஓப்பந்தம் உண்டாக்கி அதன்மூலம் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரு வழியை அல்லது திட்டத்தை தனி ஈழம் அல்லாத ஒரு நியாயமான தீர்வை எந்த அரசியல்வாதியோ அல்லது அனுதாபிகளோ வைத்திருக்கிறார்களா?
12. அப்படியே இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளச்செய்ய பிரபாகரனை வற்புறுத்த இவர்களால் முடியுமா?
13. பங்களாதேஷ் பிரிக்க இந்தியாவால் முடிந்ததே இப்போது ஏன் முடியாது ஒரு ஈழத்தை அப்படி பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பது சிலருடைய கோரிக்கையாக இருக்கிறது அது சரியா? இன்றிய உலக சூழலில் அப்படி ஒரு ராணுவ நடவடிக்கை எடுத்து பிரித்து கொடுக்க முடியுமா?
14. பங்களாதேஷ் என்பது ஒரு தனி பிரதேசமாக இருந்தது, அதனால் அதை பிரித்துக்கொடுக்க முடிந்தது, இதே பங்களாதேஷ் பாகிஸ்தானை ஓட்டி இருந்து அங்கு தனிநாடு கேட்டு போராடினால் இந்தியா அதை செய்திருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம், ஏனெனில் ஒன்று சேர்ந்த ஒரு பகுதியை பிரித்து சுதந்திரம் வாங்கி கொடுப்பதென்பது அவ்வளவு எளிய விஷயமில்லை, அதனால் தான் இன்னும் காஷ்மீர், காலிஸ்தான் போராட்டங்கள் எல்லாம் வெற்றி பெற முடியாமலே இருக்கின்றன.
15. அப்படியே பிரித்துக்கொடுத்தாலும் அது நிரந்தர தலைவலியாக இரண்டு நாட்டுக்கும் அமைந்து விடும் என்பதுதான் உண்மை.
16. நாம் பங்களாதேஷுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த பின்னர் அதன் எல்லைகளில் பாகிஸ்தான் நாடு இல்லாததால் அதன் சுதந்திரம் மற்றும் எல்லைகள் ஏதும் பாதிக்கப்படாமல் இருந்து விட்டன, ஆனாலும் அதன் உள்ளே ஊடுருவிய பாகிஸ்தானின் ஆட்கள்தான் ராணுவம் மூலம் பின்னர் முஜ்பூர் ரகுமானை கொன்று பழிவாங்கினர் என்பதை மறக்க கூடாது.
17. புலிகள் உலகின் மிக சக்தி வாய்ந்த ஒரு போராளி குழு, தமிழர்கள் மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம். உலகின் திறமையான இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது தமிழினம் என்பது உண்மையானால் அதில் புலிகளின் பங்கு மிக முக்கியமானது.
18. இன்று தமிழ் என்ற வார்த்தை tamil என்று பல உலக நாடுகளில் உச்சரிக்கப்படுகிறதென்றால் அதில் புலிகளின் ஆற்றல் இல்லாமல் இல்லை.
19. ஆனால் இன்று புலிகள் ஒடுக்கப்படுகிறார்கள், அதற்கு சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் உதவுகின்றன, இந்தியாவும் கூட உதவுவதாக கூறப்படுகிறது, அதில் இந்தியா உதவாமல் இருந்தாலும் அங்கு ஒன்றும் நடக்கபோவதில்லை என்பது நேரடியாக தெரிகிறது.
20. ஆகையால் இதில் ஏதாவது நல்லது செய்ய நினைக்கும் தலைவர்கள் சாத்தியமான ஒரு தீர்வை திட்டத்தை உண்டாக்கி அதனை பிரபாகரன் சம்மதிக்க வைக்கவும், பின்னர் அதனை நடைமுறை படுத்த செய்யவும் கூடிய வழிகளை கொண்ட ஒரு திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்த முயல்வதே ஒரு சரியான தீர்வாக இருக்கும், வெறுமனே போராடிக்கொண்டே இருந்தால் நமது தமிழினம் அழிவததை காணக்கூடிய ஒரு மெளன சாட்சியாக மட்டுமே நாம் இருக்க முடியும்.
21. ஆனால் இன்று தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் அப்படி ஒரு தீர்வும் கொண்டு இருப்பதாக சொல்லமுடியவில்லை, எல்லா போராட்டங்களும் ஒரு அடையாள போராட்டங்களாகவே இருக்கின்றன.

இன்னும் இந்த போராட்டம் உலக அளவில் செல்லவே இல்லை, ஊடகங்கள் மிகவும் இரண்டாம் தரமாகவே இந்த போராட்டத்தை முன்னிறுத்துகின்றன.
ஆனானப்பட்டஅமெரிக்காவே தாலிபான்களிடம் மூச்சு வாங்கும்போது இலங்கை அரசு ராணுவத்தை கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, அமெரிக்கா நேரடி போரில் தாலிபான்களை வெற்றி கொண்டு ஆப்கனை பிடித்தது, ஆனால் கொரில்லா போர் தொடங்கிய பின் திணறிக்கொண்டிருக்கிறார்கள், இதே நிலைதான் இனி இலங்கையிலும் என்பது நிச்சயம், நேரடிப்போர் 95 சதவீதம் முடிந்து விட்டது என்றால் இனி 105 சதவீதம் கொரில்லா போர் மீதம் இருக்கிறது என்பதுதான் அதன் பொருள், கொரில்லா போர் கொரில்லாக்களுக்கு வெற்றியும் பொது மக்களுக்கு நிம்மதியின்மையும், அரசுகளுக்கு இழப்பையும் கொடுக்கும் ஒரு போர்முறை, அதைத்தான் நோக்கி இலங்கை சென்று கொண்டிருக்கிறது, இதுதான் தீர்வு என்று எண்ணி இலங்கை அரசும் ராணுவத்தை கொண்டு சாதிக்க நினைக்கிறது இது எல்லாமே ஒரு மோசமான நிலைமைக்கே கொண்டு செல்லப்போகிறதோ என்ற கவலைதான் தோன்றுகிறது.

தவநெறிச்செல்வம்.

3 comments:

  1. அருமையான பதிவு , நீங்கள் சொல்வது போல் தற்காலிக போர் நிருத்தத்திர்க்குதான் இப்பொழுது வழி நடந்துகொண்டிருக்கிறது, இலங்கை இனவெறிக்கு ஒரு நிரந்தர தீர்வை யாரும் எடுக்கபோவதில்லை என்பதுதான் உண்மை.
    அன்புடன்
    ஜீவா

    ReplyDelete
  2. தமிழனுக்கு எதற்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே பிரதான குறிக்கோள்.

    மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கையை
    கண்டிக்கக்கூட வக்கிலாத இந்தியாவா இலங்கையில் தமிழனுக்கு நீதி கிடைக்கச்
    செய்யப்போகிறார்கள்.

    ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம். நாளை
    தமிழனும் தனித்தமிழ்நாடு கேட்ப்பானோ என்ற அச்சம்!

    ReplyDelete
  3. இதில் இந்தியாவிட தமிழக தலைவர்கள்தான் மோசம் அவர்கள் எந்த ஒரு முயற்சியையும் முனைப்போடு செய்யவில்லை, காந்திஜி ஒவ்வொரு கடுமையான நேரத்திலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சாதித்தார், ஏன் மொழிவாரி மாகாணங்கள் உருவாக எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள்,இயக்குனர் சீமானின் முயற்சிகள் விவாதத்திற்கு உரியன என்றாலும் அவரிடம் ஒரு உண்மையான போராட்ட குணம் உள்ளது அது ஏன் மற்ற தலைவர்களிடம் இல்லை, எல்லா தலைவர்களும் ஒன்று கூடி ஒரு தொடர்போராட்டம் நடத்தட்டும் கூடவே ஒரு திட்டத்தையும் முன் வைக்கட்டும் அதெல்லாம் இல்லாமல் ஏதும் நடக்கப்போவதில்லை.

    தங்கள் கருத்துக்கு நன்றி வாமுகோமு அவர்களே

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்