Nov 5, 2008

உளறல்-9


நிறைய விஷயங்கள் நமது நினைவுகளில் தங்குவதே இல்லை அவைகளை பற்றி நாம் நிறைய கவலைப்படுவதும் இல்லை, எனது சிறு பிராயத்தில் நிறைய கதைகளை படித்திருக்கிறேன், ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், பெரிய புராண கதைகளையும் நிறைய படித்தும், பல தேவார திருவாசக பாடல்களை மனப்பாடம் செய்தும் எனது சிறு வயதில் நல்ல பல வழக்கங்களை எனது தந்தையாரின் தூண்டுதலால் கற்றிருக்கிறேன், அது அந்த காலத்தில் ஒரு சாதாரணமான வழக்கமாக இருந்தது, பெரும்பாலும் எனது நண்பர்கள் சிலரும் கூட இது போன்ற பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்,

பெரும்பாலும் பிராமணக் குழந்தைகள் இந்த மாதிரியான அறிவில் சிறந்து விளங்கினார்கள், அதற்கு காரணம் அவர்களின் இல்லங்களில் இருந்த வசதியும் புத்தகங்களும்தான், எனக்கு தெரிந்த வரை புத்தகங்கள் வாங்குவதென்பது சாதாரண மனிதர்களிடம் குமுதம் ஆனந்த விகடன் மட்டுமே, மற்ற நாவல்களோ வேறு இலக்கிய வகை புத்தங்களை படிப்பதென்பது அப்போது பிராமணர் அல்லாதோரிடம் இல்லை என்றே நினைக்கிறேன்,

துக்ளக் மற்றும் கல்கி போன்ற பத்திரிக்கைகள் அப்போது சற்று வேறுதளத்தில் இயங்கியதால் அதன் மூலம் சற்று அதிக வளமான சிந்தனை வளர்ச்சி இருந்ததென்று சொல்லலாம், சிறுவர்களுக்கு அம்புலிமாமா ஒரு பெரிய வரப்பிரசாதம், ஆனால் அப்போது இருந்த பொருளாதார சூழல் புதிய புத்தகங்களை வாங்க அனுமதிக்காததினால் வாடகை புத்தக முறை பெரிய உதவியாக இருந்தது, அப்போது வாடகை புத்தகம் கொண்டு வரும் பையனிடம் அம்புலிமாமா வுக்காக கெஞ்சி கூத்தாட வேண்டும், அது எங்கெல்லாமோ சுற்றி விட்டு பிறகு மெதுவாக வரும்போது அட்டையெல்லாம் காணாமல் போயிருக்கும்,

இவைகளில் எல்லாம் வந்த கதைகளும், விஷ்யங்களும் இப்போது நினைவில் இல்லை, எனது குழந்தைக்கு கதை சொல்ல முயலும்போதுதான் நமது நினைவின் வறட்சியும் கற்பனையின் வறட்சியும் தெரிகிறது, ஆனால் அன்று பாடிய பாசுரங்கள் இப்போதும் நம் நிலைகொள்ளாத நேரத்தில் கூட நினைவில் வருகின்றன, அப்போது திருக்குறள் மனப்பாடம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது, அதனால் ஒரளவுக்காண திருக்குறள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், இப்போது உள்ள குழந்தைகள் எப்படி இவைகளைக்கற்கின்றன என்று தெரிய வில்லை,

அப்போதைய பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் அரசாங்க பள்ளிகள் மட்டுமே சில நகரங்களில் மட்டும் கிருஸ்துவ சபையாரின் பள்ளிகளும், ராமகிருஷ்ண மட பள்ளிகளூம் ஒரு சில தணியார் தொண்டு நிறுவன பள்ளிகளூம் இருக்கும், ஆனால் அப்போதைய அரசு பள்ளிகள் மிகவும் தரமானதாக இருந்தது என்றூ சொல்ல முடியும், காரணம் எல்லாவகை மாணவர்களும் அதில் இருந்தார்கள், என்னோடு பிராமண ஆதிதிராவிட நண்பர்களும் இணைந்தே படித்தார்கள், அப்போது வேறுபாடுகள் எல்லாம் புரியாதகாலம், கிராமத்திற்கு வரும்போதுதான் இந்த வேறுபாடுகள் நாம் கடைபிடிக்க வேண்டிய சூழல் வரும், எனது தந்தையாரின் பணி காரணமாக கிராமத்தை விட்டு சற்று பெரிய ஊரில் படிக்க நேர்ந்த்தில் இந்த சாதி வேறுபாடுகள் பெரிதாக பாதிக்கவில்லை,

எனது 10ம் வகுப்பு காலங்களில் எனது பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை பக்கத்து நகரத்துக்கு அனுப்பி தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தார்கள், அது மிகவும் பெரிய விஷயமாக அப்போது பார்க்கப்பட்டது.

அந்த வயதில் பஸ்பிடித்து அதிகாலை சென்று மாலை 6 மணிக்குமேல் வீடுதிரும்பும் அவர்களை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் இன்று கிட்டதட்ட எல்லா பிள்ளைகளும் பஸ்களில் சென்றுதான் படிக்கின்றன, படிப்பு என்பது ஒரு கட்டாய கடமையாக இன்று உணரப்பட்டிருப்பது மிகப்பெரிய வளர்ச்சி ஆனால் அது ஒரு மிகப்பெரிய சுமையாக பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமை, காமராஜர் எதிர்பார்த்தது இப்படி ஒரு கல்வியைதானா? இந்தியாவை விட எல்லா நாடுகளிலும் கல்வி ஒரு பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றன என்றுதான் தோன்றுகிறது,

கல்வி, சேவை என்கிற தளத்தில் இருந்து லாபகரமான தொழில் என்கிற நிலைக்கு வந்ததன் விளைவு, என்றாலும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மற்றும் அலுவலர்கள் நிலையும் யோசிக்கவேண்டியுள்ளது, ஆகையால் அரசு புதிய கல்வி கொள்கைகளை உருவாக்கும் போது பாடதிட்டங்களை மட்டும் கணக்கில் கொள்ளாது பொருளாதார செலவினங்களையும் கருத்தில் கொண்டு இவைகளை முடிவு செய்ய வேண்டும்,

கூடவே கல்வி என்பது அறிவு வளர்ச்சிகு மட்டுமே உதவ வேண்டும் வேலைவாய்ப்பிற்கான ஒரு பயிற்சியாக ஆகிவிட்டதும் கூட அது ஒரு சுமையாக ஆனதற்கான காரணம், என்ன செய்வது இன்றைய போட்டி உலகில் இப்படியான ஒரு வாழ்க்கை முறை நமக்குள் திணிக்கப்பட்டுவிட்டது, அதன் தவறு அரசாங்கத்திடமா அல்லது தனிமனிதர்களிடமா என்பது விவாதத்திற்கு உரிய விஷ்யம்,

பெரும்பாலான மனிதர்கள் பிடித்தவேலையை விட கிடைத்த வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார்கள், அதன் வலி எல்லோரிடமும் இருக்கிறது, பிடித்த வேலையை ஆத்மார்தமாக செய்பவர்களுக்கு அதன் அங்கீகாரமும் பொருளும் கிடைப்பதில்லை, அதனால் அந்த சாராரும் திருப்தியாக இல்லை, இப்படி ஒரு பொருந்தாத வாழ்க்கை நமக்குள் திணிக்கப்பட்டிருந்தாலும், அதனை பிடித்துக்கொண்டு வாழ்க்கை வாழவேண்டுமே என்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இவைகளில் இருந்தெல்லாம் நம்மை காப்பாற்றி வருவது நமக்குள் அருளப்பட்டிருக்கும் மறதி என்கிற ஒரு தன்மைதான், அது சில நேரங்களில் நம் நல்ல விஷ்யங்களையும் மறந்து போக வைத்துவிடுகிறது, அந்த ஒரு நல்ல விஷ்யம்தான் நாமும் ஒரு நல்ல மனிதன் என்பது, எப்போதெல்லாம் மனதில் கோபமும் பொறாமையும் வருகிறதோ அப்போதெல்லாம் நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் மிகவும் நல்ல மனிதர், மிகவும் இரக்கமுள்ள மனிதர் என்பதை,

அது உங்களால் வர இருக்கும் ஒரு பெரிய இழப்பை தடுத்து நிறுத்தும்.

தவநெறிசெல்வன்

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்