Sep 26, 2011

தமிழக உள்ளாட்சித்தேர்தல்-2011

அனேகமாக இந்த உள்ளாட்சித்தேர்தல் சம்பந்தமான கூத்துக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி கூட்டணிகளை விரும்பாமல் தனியே போட்டியிட முடிவு எடுத்த நிலையில் இதன் ஆழமான காரணம் என்னவென்று எனக்குத்தோன்றியதை இங்கே எழுதுகிறேன்.



சதாரணமாக தேர்தல் என்றாலே அதிமுகவும் சரி திமுகவும் சரி கூட்டணி கட்சிகளுக்காக தூது விடுவதும், அதை சாக்காக வைத்துக்கொண்டு ராமதாஸ், திருமா, காங்கிரஸ், கம்னியூஸ்ட்,தேமுதிக போன்றவைகள் பேரம் பேசுவதும் நடக்கும். இதுதான் இத்தனை தேர்தலில் நாம் கண்டது. இப்போது, திமுக என்னடாவென்றால் காங்கிரஸ் வேண்டாம் என்கிறது. ராமதாஸ் என்னடாவென்றால் எனக்கு அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்கிறார். அதிமுக என்னடாவென்றால் எந்த கட்சியும் வேண்டாம் என்கிறார்கள்.

இதில் மக்களுடந்தான் கூட்டணி என்ற புரட்சிகலைஞர் அதிமுக வெளியே அனுப்பிவிட்டதில் மிகுந்த வருத்ததுடன் இருப்பதாக செய்திகள் வருகின்றன. பெரிய கட்சிகள் ஆட்சி அமைக்க சின்ன கட்சிகளை கூப்பிட்ட காலம்போய். சின்ன கட்சிகள் இப்போது பெரிய கட்சிகளின் கடைக்கண் பார்வைக்ககாக காத்திருக்கவேண்டிய நிலை உருவாகிவிட்டது.

நீண்டநாளக எல்லாருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும், இந்த ராமதாஸை இரண்டு பெரிய கட்சிகளும் வேண்டாம் என்று தைரியமாக ஒதுக்காததால்தான் அந்த ஆள் அங்கும் இங்கும் வசதிப்படி பேரம் பேசுகிறார் என்று. ஆனால் இன்று அப்படி பட்ட ஒரு முடிவை அவரே எடுத்திருக்கிறார்.

கிட்டதட்ட எல்லா கட்சிகளும் தனித்து நிற்க முயற்சிக்கின்றன, ராமதாஸும் திருமாவும் ஒருவேளை கூட்டணி போடலாம், அதிமுகவும் கம்னீயூஸ்ட் கட்சியும் கூட்டணிக்குள் வரலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன வென்றால், போன சட்டசபைத்தேர்தல் முடிவுகள் எல்லா அரசியல் கட்சிகளை குழப்பிவிட்டது என்பதுதான் உண்மை.
திமுக கூட்டணியில் ராமதாஸ் இருந்தார், திருமா இருந்தார், காங்கிரஸ் இருந்தது. இன்னும் சில்லரைக்கட்சிகள் எல்லாம் இருந்தும் திமுக படுதோல்வியை அடைந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக கம்னியூஸ்ட், மற்றும் சில்லரைக்கட்சிகள் இருந்தன அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள்.

உண்மையில் கூட்டணி கணக்கைப்பார்த்தால் திமுக கூட்டணிதான் வென்றிருக்கவேண்டும், பணநாயகம் வேறு ஆதரவாக இருந்த நிலையில். மதிமுக இல்லாத நிலையில் அதிமுக கூட்டணி ஒரு பலவீனமான கூட்டணிதான். என்றாலும் இந்த இமாலய வெற்றி எங்கிருந்து ஒரு பலவீனமான கூட்டணிக்கு கிடைத்தது.

இதற்கான காரணம் எந்த கட்சிக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை, அதைதெரிந்து கொள்ளத்தான் திமுகவும் அதிமுகவும் தனியாக நிற்கின்றன. திமுகவுக்கு ஒரு சந்தேகம் நாம் காங்கிரஸுடன் இருந்ததால் தான் தோற்றோமா இல்லை நாம் செய்த பொற்கால ஆட்சியில் மக்களின் வெறுப்பினால் தோற்றோமா என்று. ஆகையால் காங்கிரஸை கழற்றிவிட்டு அந்த சோதனையை நடத்தப்பார்க்கிறது. அதே நேரம் 2G குழப்பங்களில் கைகொடுக்காத காங்கிரசை கொஞ்சம் பயமுறுத்தவும், 63 இடங்கள் கேட்டு பாடாய்படுத்தினீர்களே தனியாக நின்று உங்கள் செல்வக்கை நீங்களே சுயபரிசோதனை செய்துகொண்டு வாருங்கள் என்ற தகவலையும் காங்கிரஸீக்கு கொடுக்க நினைக்கிறது திமுக.




ராமதாஸ்தான் முன்பே கழண்டுகொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் ஆகையால் அவரை கழட்டி விடத்தேவை இல்லாமல் போய்விட்டது. ராமதாஸீக்கும் ஒரு சந்தேகம், போன நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தோம் ஒரு இடம் கூட ஜெயிக்கவில்லை, பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி என நம்பி திமுகவுடன் இருந்தோம் அதுவும் படுதோல்வி அடைந்து விட்டது. உண்மையில் இனி எங்கிருந்தாலும் நமது செல்வாக்கு உயரப்போவதில்லை, உண்மையில் நமக்கு எத்தனை பேர் ஓட்டுப்போடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

தினமலரில் ராமதாஸ் பற்றி ஒரு செய்திவந்தால் அதற்கு வருகிற கமெண்ட்களின் எண்ணிக்கை சில நிமிடங்களில் 100ஐத் தாண்டிவிடுகிறது. அத்தனையும் வசவுகள்தான். அதெல்லாம் படிக்கிற வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை, யாராவது உதவியாளர்கள் அதை படித்துகாண்பிப்பார்கள் என்று நம்புவோம். இப்படி மக்களின் மனநிலை தனக்கு எதிர்மறையாக இருப்பதால் உண்மையில் தனது செல்வாக்கு என்னதான் என்பதை புரிந்துகொள்ள ஒரு சுயபரிசோதனை முயற்சியில் அவர் இருக்கிறார், ஆனால் அதை தனியே செய்தால் நிச்சயம் முடிவு என்ன என்பது ஓரளவு புரிவதால் திருமாவை கையைப்பிடித்து இழுக்கிறார். திருமாவின் நிலை இப்போது மிக மோசம்.

இலங்கை விஷயத்தில் தொடங்கி பல வகைகளில் தன்மீதான நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் அவர், எல்லோரும் கழட்டி விட்ட நிலையில் எதையாவது பிடித்துக்கொண்டு கரைசேர நினைக்கிற நிலையில் ராமதஸை கெட்டியாக பிடித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

அதிமுகவின் நிலை ஒருவகையில் ஒரு தீர்மானமான நிலைதான், சட்டமன்ற தேர்தலில் பெற்ற இமாலய வெற்றி, தேமுதிக இல்லாமல் இருந்திருதால் கூட கிடைத்திருக்கும் என்று தீர்மானமாக நம்புகிறார்கள். காரணம் மக்களின் திமுக மீதான வெறுப்பு. வைகோ தனியாக நின்றிருந்தால் கூட கணிசமாக ஜெயித்திருப்பாரோ என்னவோ? வேறுவழியில்லாமல் அதிமுகவுக்கு மக்கள் குத்தி தள்ளிவிட்டார்கள்.

ஆகையால் அந்த வெறுப்பின் தொடர்ச்சி இன்னும் இருப்பதால் அதை உபயோகப்படுத்தி தனியே நின்றே எளிதாக ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைப்பது சரிதானே? வரிசையாக திமுக முன்னாள்கள் உள்ளே போய்க்கொண்டிருக்க மக்களிடம் எந்த பதற்றத்தையும் காணோம் அதையெல்லாம் சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜான்பாண்டியனை கைது செய்ததற்கே பரமகுடி பற்றி எரிந்த நிலையில், இத்தனை தலைவர்களை கைதுசெய்தும் பேரியக்கமாக இருக்கிற திமுகவினால் ஒரு வலுவான எதிர்ப்பு போராட்டாத்தை நடத்தமுடியாமல் இருப்பதற்கு காரணம் மக்கள் கைதுகளை ரசிக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்ததால் தான்.

ஆகையால் இந்த திமுக எதிர்ப்பு உணர்வை முதலாக்க ஜெயலலிதா நினைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.



இந்த தேர்தல் நடந்து முடியும்போது பல சில்லரைக்கட்சிகளின் சுயரூபம்,பலம் தெரிந்துபோகும் என்றுதான் தோன்றுகிறது. அதனடிப்படையில் அடுத்த தேர்தலுக்கான சீட்டு பேரங்கள் முடிவாகக்கூடும். 63 இடங்களை கேட்ட காங்கிரஸ் இந்தமுறை மிக மோசமான காலத்தில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சீமான் போன்றவர்கள், ராஜீவ் கொலையில் தூக்குதண்டனைக்கு காத்திருக்கும் கைதிகளை பற்றிய சர்ச்சைகள், நிச்சயம் காங்கிரஸீக்கு ஒரு தலைவலிதான். கிட்டதட்ட காங்கிரஸீன் தமிழக நிலையை பரிதாபமாக்கும்.அதனை தூக்கி நிறுத்தும் சக்தி கொண்ட எந்த தலைவரும் இப்போது காங்கிரஸில் இல்லை, இனி வரப்போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை, ஜீ.கே.வாசன் ஒரு பரபரப்பான தலைவராக இல்லை, சிதம்பரம் பெயர் கெட்டுக்கொண்டே இருக்கிறது. மற்ற தலைவர்கள் கேட்கவே வேண்டாம், ஈவிகேஸ் கொஞ்சம்

பேசிக்கொண்டிருந்தாலும் அதேல்லாம் தலைமைபண்பை கொண்டு கட்சியை தூக்கி நிறுத்துமா என்று தெரியவில்லை. தங்கபாலு தனது குலாம் நபி ஆசாத்துடன் உள்ள நட்பின் காரணமாக தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடித்து ஒரு வழியாக்கிவிடுவார் என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் இருந்து ஒரு எம்பியும் தேறாது என்று காங்கிரஸ் தலைமைக்கு என்று தெரிகிறதோ அன்றுதான் ராகுல் காந்தி, உத்திரப்பிரதேசத்தில் வீடுவீடாக செல்வதுபோல் இங்கும் வரக்கூடும்.

தேமுதிக இதில் மொசமாக பாதிக்கப்போகும் கட்சியாக இருக்கும், சரியாக செயல்படாத நிலையில் அவர்களின் செல்வாக்கு குறைந்து காணப்படுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. இப்படி எல்லா கட்சிகளும் ஒருவகை சுய பரிசோதனையில் விருப்பத்துடனும் விருப்பமில்லாமலும் இறங்கி இருக்கின்றன.



ஆகவே இந்த தேர்தலில் பல கட்சிகளின் எதிர்கால முடிவாகும், மதிமுகவையும் கம்னீயூஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு தொலைக்காட்சி சானல்கள் இருப்பதால் அதுவும் களைக்கட்டும். பணநாயகத்தின் விளையாட்டு உண்டாகுமா இல்லையா என்றுதெரியவில்லை, இப்போதே ஸ்டாலின் தமிழக தேர்தல் ஆணையத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போக இருப்பதாக அறிவித்துள்ளார். சோ அய்யர் விரைவில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என்றே தோன்றுகிறது. தமிழகம் இன்னொரு ஜனநாகயக் திருவிழாவுக்கு தயாராகிறது. முடிவோடு சந்திப்போம்

தவநெறிச்செல்வம்.

1 comment:

  1. ஐயா வணக்கம் தங்களின் இந்த படைப்பை உஜிலாதேவி நந்தவனத்தில் வெளியிட்டுள்ளோம்

    http://ujiladevinandavanam.forumta.net/t27-2011#30

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்