Nov 1, 2010

தமிழக தேர்தல்-2011ம் காங்கிரஸ் கட்சியும்


தமிழக தேர்தல் 2011 தொடங்க இன்னும் சுமார் 150 நாட்களே உள்ள நிலையில் பலவாறு கணிப்புகள் காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அவைகளில் கூர்ந்து நோக்கும் போது ஏற்படும் எண்ணங்களே இக்கட்டுரை.

ஒரு புதிய சிந்தனையாகவும் இதைக்கொள்ளலாம், அகில இந்திய காங்கிரஸ் தனது திருச்சி கூட்டத்தில் சோனியா காந்தியை கலந்து கொள்ளவைத்து ஒரு புதிய செய்தியை சொல்லி இருக்கிறது, அந்த செய்தி தமிழக மக்களுக்கும் இன்றைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கும்தான். இது நடந்து ஒரிரு தினங்களில் முதல்வரின் அறிக்கை வருகிறது கூட்டத்தை பார்த்து அது ஓட்டாக மாறும் என்று நினைப்பது சரியல்ல என்ற ரீதியில். பலருக்கு இந்த அறிக்கையின் நோக்கம் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்களுக்குத்தான் முதல்வர் கூறி இருக்கிறார் என்று தோன்றலாம், அதன்பிறகு மற்றொரு அறிக்கை, தன்னையும் நேரு குடும்பத்தினரையும் பிரிக்க ஒரு முயற்சி நடப்பதாக. இப்படி வந்த அறிக்கைகளை மனதில் கொண்டு யோசித்தால் அதன் உள்ளர்த்தம் புரியும்.

இன்றைய நிலையில் திமுக கொண்டுள்ள தேர்தல் நடைமுறைகளும், காங்கிரஸும் சேர்ந்தால் சுலபமாக ஒரு வெற்றியை அவர்கள் பெறக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. திமுக இடைத்தேர்தல்களில் கையாண்ட யுக்திகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த சக்தியோடு காங்கிரசின் பலமும் சேரும்போது வெற்றி சுலபம் என்பது ஒரு கணக்கு. ஆனால் 234 தொகுதிகளிலும் அதே முனைப்போடு செயல்படுவது என்பது ஒரு ஆகாத காரியம் என்பதால்தான் திமுக தலைமை பாமக வை தங்களோடு சேர்த்து ஒரு பாதுகாப்பான நிலையை அடைய யோசிக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியலாம், இதில் என்னதான் பாமக இணைந்தாலும், அதன் தொகுதிகளில் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிவரலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் மந்திரிசபையில் சேர முயற்சித்த வாய்ப்புகளை எல்லாம் திமுக தலைவர் தட்டிபறித்து விட்ட கோபம் அல்லது வருத்தம் நிச்சயம் இருக்கும். கூடவே இன்று ராகுல் காந்தி அவர்கள் ஒரு எழுச்சியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் மாற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இதில் முக்கிய பங்கு வகிக்க போவது பீகார் மாநிலத்தில் இப்போது நடந்து வரும் தேர்தல். அந்த மாநிலத்தில் திரு. நிதிஷ்குமார் தலைமையில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கடந்து 5 வருடத்தில் செய்துள்ள மாற்றம் அவருக்கு ஒரு நல்ல முடிவைத்தரும் என்று தோன்றுகிறது, அங்கு காங்கிரஸ் தனது முன்னாள் சகாக்களான லாலு மற்று பஸ்வான் போன்றவர்களை நம்பாமல் தனியே எல்லா தொகுதிகளிலும் தனிப்பெரும் கட்சியாக களத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சென்ற மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் லாலுவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக நின்ற காங்கிரஸ் யாருமே எதிர்பார்க்காத அளவில் ஒரு நல்ல வெற்றியை பெற்று கணிசமான இடங்களை அள்ளியது. உத்திரபிரதேசத்திலும் அதுதான் நடந்தது ஆகையால் ராகுலின் பயணம் இந்த தேர்தலிலும் அதே மாதிரியான ஒரு சோதனையாக அமைந்ததுள்ளது. அது நல்ல பலனைத்தரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் நவம்பர் இறுதியில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதன் வெற்றி காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் அதே பார்முலாவை காங்கிரஸ் தொடர ராகுல் நினைக்கலாம், மதுரையில் கக்கன் நினைவு விழாவிலும் திருச்சியில் சோனியாகாந்தி கலந்து கொண்ட கூட்டத்திலும் சரி காங்கிரஸ் தனது விஸ்வரூபத்தை காட்டி இருக்கிறது.

வியஜகாந்த் தலமையிலான தேமுதிக காங்கிரஸ் தனியாக வரும் நிலையில் இயல்பாகவே மிக பொருத்தமான ஒரு கூட்டணியை உருவாக்க தயாராகும். ராகுல் ஈடுபாடு அதிகமாகி இந்த தேர்தலில் தமிழகத்தில் தங்கி செயல்பட நேர்ந்தால் அது திமுக அதிமுக இருவருக்கும் என்னதான் கூட்டணிகள் இருந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிமுக தனது பலத்தை கடந்த சில ஆர்ப்பாட்டங்களில் மிக பெரிய அளவில் காட்டியுள்ளது, திமுக என்னதான் இலவச திட்டங்களை மக்களுக்கு கொடுத்து வந்தாலும், மது விற்பனையில் அவர்கள் காட்டி வரும் உற்சாகம் பலரின் மனவேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது, அடுத்து விலைவாசி ஏற்றம், அது மக்களை ஒரு தாங்கமுடியாத மனநிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
கூடவே இன்றுள்ள சட்ட ஒழுங்கு. குடும்ப அரசியல்,இலங்கை பிரச்சினை இப்படி பல விஷயங்கள் திமுக அரசின் எதிர்மறை ஓட்டாக மாறக்கூடிய சூழல், இவைகளை எல்லாம் ஓட்டாக மாற்றும் சக்தி அதிமுக கூடாரத்தில் அதிகரிப்பதாகவே இப்போது கூடிய கூட்டம் தெரிவிக்கிறது.

இதில் காங்கிரசின் தனித்த தேர்தல் முயற்சி மிக முக்கிய கட்டத்தை தமிழக அரசியலில் கொடுக்க வேண்டிய அவசியம் தோன்றுகிறது. காங்கிரஸ் முயன்று நின்றால் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவரலாம் என்பது பல நல்ல காங்கிரஸாரின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் காங்கிரஸில் முன்னிறுத்த ஒரு வலுவான மாநிலத்தலைவர் இல்லாமை ஒரு குறைதான், ப.சிதம்பரம் ஜீ.கே வாசன், ஈ.வி,கே.ஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு போன்றவர்கள் இருந்தாலும் சிதம்பரம் தவிர மற்றவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக அறியப்படவில்லை என்பதும் முக்கியம், ஆனால் தமிழக காங்கிரசில் திரு, வாசனுக்கு அதிக தொண்டர்பலம் உள்ளது ஓப்புக்கொள்ளப்படவேண்டிய ஒரு விஷயம்தான்.

ஆகையால் இந்த இருவரில் ஒருவர் முன்னிறுத்தப்படலாம், எனக்கென்னவோ பீகார் தேர்தல் ஒரு நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் கொடுக்க கூடும் என்று தோன்றுகிறது.

விரைவில் போன மக்களைவைத்தேர்தல் போல ஒரு தேர்தலுக்கான முழு தொகுதி வாய்ப்புகளையும் ஒரு பதிவாக விரைவில் போட முயல்கிறேன்.

தவநெறிச்செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்