Feb 23, 2009

பெரியார் எழுதிய இக்கட்டுரை

பெரியார் எழுதிய இக்கட்டுரை ஒரு நண்பரின் பதிவில் இருந்து உங்களுக்காக, பொது தொண்டு பற்றி மிக அரிதான ஒரு விளக்கத்தை இங்கே அவர் கொடுத்துள்ளார், அவருடைய இந்த பார்வை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் இது இங்கே பதிவாக இடுகிறேன், நமது நண்பர்கள் இதன் மீதான ஒரு விவாதத்தை தொடங்கலாம் என்பதும் என் வேண்டுகோள்.

ஒரு சராசரி பார்வையில் பொது தொண்டு புனிதமாக காணப்படுகின்ற நிலையில் அதனை மறுக்கும் பெரியாரின் பார்வை ஒரு அதிர்ச்சியை எனது நண்பர்களுக்கு தரலாம் அதனால்தான் இதை நாம் விவாதத்திற்குள் கொண்டு செல்ல விரும்புகிறேன். Comment பகுதி அல்லது எனது e-mail ல் தொடரலாம்.

பொதுத் தொண்டு, அதாவது உண்மையான பொதுத் தொண்டு தன்னை, தன்னலத்தை அடியோடு மறந்து, தன்னைத் தவிர்த்த மற்ற மனித சமுதாய நலத்திற்கென்றே மனிதன் பொதுத் தொண்டு செய்வது என்பது இயற்கைக்கு மாறுபட்ட காரியமேயாகும்.
ஜீவன் என்பதே சுயநலம் என்ற தத்துவத்தைக் கொண்டதேயாகும்.எந்த ஜீவனும் எப்படியாவது தான் வாழவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாழ்கிறது‡ ஜீவிக்கிறது என்கின்ற தன்மையில் தான் வாழ்கிறது; அதற்கேற்றபடிதான் நடக்கிறது; இதற்கு மாறான ஜீவனைக் காண முடியாது.மனித ஜீவனும் இதே தத்துவத்திற்கு, நியதிக்கு ஆட்பட்ட ஜீவனேயாகும். மனிதனுக்குப் பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்பதற்கு ஒரு அவசியம் வேண்டுமே! அப்படி என்ன அவசியமிருக்கிறது?
பிறந்த மனிதன் வாழவேண்டும். முதலாவதாக உயிர் வாழவேண்டும். இது குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டு விடுகிறது. உயிர்வாழவேண்டுமென்றால் ஜீவிக்கவேண்டும். ஜீவிக்க வேண்டு மென்றால், உணவு கொள்eவேண்டும். இந்த விளக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாதுதான். ஆனால், அதற்கு ஆகவே பசி என்கிற உபாதை - நோய் (பசி நோய்) இயற்கையாகவே ஏற்பட்டு, அழுவது, அலைவது என்கிற தன்மை இருந்து வருகின்றது. அறிவு வந்த மனித ஜீவனும் எப்படியாவது உணவு கொள்ள வேண்டும் என்கின்ற ஆசைக்காக, அவசியத்துக்காகவே வாழ வேண்டியவனாகி விடுகிறான். பிறகு, உணவு பெற்று திருப்தியடைந்த பிறகு உறக்கத்திற்குப் பாடுபடுகிறான். பிறகு படிப்படியாக உடை, தங்குமிடம், அதற்குப்பிறகு காமஉணர்ச்சிக்குப் பரிகாரம். இவ்வய்ந்தோடு மனிதனின் இயற்கைத் தேவை முடிந்துவிடுகிறது.பிறகு சுற்றுச்சார்பு - ‘சார்ந்ததன் வண்ணம்’ (சவகாசம்) ஊர் நடப்பு முதலியவைகளால் படிப்படியாய் ஆசை, இயற்கையான ஆசை ஏற்படுகிறது. இது கைகூடுவதற்கு என்ன என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யத் துணிந்துவிடுகிறான். இதுவும் மனித இயற்கையாகிவிடுகிறது.
இந்த இயற்கை மனிதனுக்குப் பிள்ளை, குட்டி, உடைமைகளை உண்டாக்கி விடுகிறது. இவைகளைக் காப்பாற்றுவதும் இயற்கையே யாகிவிடுகிறது. இவற்றிற்கும் மேலாக மனிதனுக்குக் கவுரவம், பெருமை, புகழ் வேண்டியதாக ஆகிவிடுகிறது. பிறகு அதுவும் இயற்கை யாகிவிடுகிறது.இவ்வளவு இயற்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; செய்தாக வேண்டும் என்கின்ற தத்துவம் மனிதனுக்குச் சட்டமாய் விளங்குகின்றது. இவற்றிலிருந்து, இந்தச் சட்டத்திற்குப் புறம்பான சமுதாய மனிதன் உலகத்திலேயே கிடையாது என்பது எனது தாழ்மையான கருத்து, அப்படி யாராவது இருந்தால் அது இயற்கைக்கு விரோதமான தோற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஏன் சொல்ல வேண்டு மென்றால், அப்படி இயற்கைக்கு விரோதமாய் இருக்க என்ன அவசியம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், அந்தப்படி இருக்கச் சாதாரண நிலையில் யாரும் இருப்பதாய்க் காணப்படமாட்டார்கள்.மேற்கண்ட மனிதனின் இயற்கைத் தன்மைகளான தேவைகள் பூர்த்தியாக மனிதன் எது வேண்டுமானாலும் செய்து பூர்த்தி செய்துகொள்வது மனித இயற்கை என்று சொல்லப்பட்ட எது வேண்டுமானாலும் என்பதில் அடங்கிய பல காரியங்களில் பொதுத் தொண்டு என்பதும் ஒன்றாகும்.
அதாவது, கக்கூசு எடுப்பதும் பொதுத்தொண்டேயாகும். ஆனால், எதற்காக அந்தப் பொதுத்தொண்டு செய்யப்படுகிறது என்றால், மேற்கண்ட இயற்கைத் தேவைகள் பூர்த்தியாவதற்கேதான் என்பது போலவே மனிதன் பொதுத்தொண்டையும் ஒரு சாதனமாகக் கைக்கொள்ளுகிறான். இந்தப் பொதுத்தொண்டுகளில் தாசிப் பிழைப்பும் ஒரு பொதுத்தொண்டுக் காரியம்தான். வக்கீலும் ஒரு பொதுத் தொண்டுக்காரன்தான். வியாபாரியும் ஒரு பொதுத்தொண்டுக் காரன்தான். அதுபோலவே, அரசியல், சமுதாய இயல், தெய்வீக இயல், பத்திரிக்கை இயல், நடிப்பு இயல் முதலிய காரியங்களில் ஈடுபடுபவர்களும் பொதுத்தொண்டுக்காரர்கள்தாம். இவர்கள் எப்படிப்பட்ட பொதுத்தொண்டுக்காரர்கள் என்பவைகளில், இந்த இயற்கைக் காரியங்களை, தேவைகளைப் பூர்த்தி செய்ய எது வேண்டு மானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சட்டப்படி ஏற்பட்ட பொதுத் தொண்டர்களேயாவார்கள்.
இந்த, மேலே காட்டிய தாசி, வக்கீல், வியாபாரி, அரசியல், சமுதாய இயல், தெய்வீக இயல், பத்திரிகை இயல் முதலிய துறைகளில் ஜீவனம் வைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ஏற்பட்ட இயற்கையான குணம் என்ன வென்றால், இவர்கள் இத்தனை பேர்களுக்கும், இத்தனை பேர்களிடத்திலும் உண்மை, ஒழுக்கம், நாணயம், நேர்மை, நன்றி, மானம், ஈனம், தயவுதாட்சண்யம் முதலிய ‘நற்குணங்கள்’ என்று சொல்லப்படுகிற எந்தக் குணமுமே இருக்காது; இருக்க முடியாது; இருந்தால் அது இயற்கைக்கு விரோதமேயாகும்.
இது எப்படிப் பார்த்தால் விளங்கும் என்றால், இதில் ஈடுபட்டவர்கள் யார்? இவர்களுக்கு ஜீவனம் என்ன? இவர்கள் இதற்குமுன் எந்த நிலைமையில் இருந்தவர்கள்? என்ன பரம்பரை? வாழ்க்கையில் முதல்முதல் புகும்போது என்ன தொண்டில் இறங்கினார்கள்? பிறகு இதற்கு ஏன் வந்தார்கள். இவர்கள் பொதுத்தொண்டில் புகும்போது என்ன அந்தஸ்து? என்ன தகுதி? எவ்வeவு செல்வம்? அப்போதைய கொள்கை என்ன? எத்தனை மாற்றம் அடைந்தார்கள்? அதனால் என்ன அடைந்தார்கள்? ‘பொதுத் தொண்டின்’ உண்மையான லட்சியம் ஏதாவது உண்டா? அப்படியானால், அந்த லட்சியம் என்ன? அந்த லட்சியம் யாருக்காக? எந்த மக்களுக்காக? அதில் உண்மை நேர்மை உண்டா? இப்படிப்பட்ட தொண்டுகளால் இவர்கள் அடைந்த நட்டம் என்ன? இலாபம் என்ன? இவைகளில் எது பெரிது? இவர்களுக்குப் பெண்டுபிள்ளைகள் இருக்கின்றனவா? அவர்கள் படிப்பு, வாழ்வு ஆகியவைகளுக்கு இவர்களுக்கு உள்ள சொந்த வசதிவாய்ப்பு என்ன? இவர்களது இன்றைய வாழ்வுக்கு எந்த வழியில் தேடிய, அடைந்த பொருளைக் கொண்டு என்ன செய்யப்பட்டது? ‡ என்பது போன்ற பரிட்ச்சைகளை வைத்துப் பார்த்தால் எந்தப் பொதுத்தொண்ட னும் மிஞ்சவேமாட்டான். அனேகமாய் எல்லாப் பொதுத்தொண்டனும் கன்னக்கோல், கத்தரிக்கோல் பொதுத்தொண்டர்களை விடக் கீழ்ப்பட்ட தொண்டர்களேயாவார்கள்.
பொதுவாகச் சொல்லப்படவேண்டுமானால், நாட்டில் மனித சமுதாயத்தில் இன்று நிலவி வாழ்ந்து வளர்ந்து பெருகிவரும் எல்லாக் கூடா ஒழுக்கங்களுக்கும், பொய், பித்தலாட்டம், நாணயக் குறைவு, துரோகம், சதி, நன்றிக்கெட்டதனம் முதலான ஈனக் காரியங்களுக்கும் இந்தவகைப் பொதுத்தொண்டே காரணம் என்பேன்.
பொதுத்தொண்டின் இலட்சணம் இந்த மாதிரியாக அடைந்துவிட்டதாலேயே பொதுவாக மனித சமுதாய ஒழுக்கம், நேர்மை, நாணயம் முதலிய தன்மைகள் ஒழிந்து நேர்மாறான தன்மைகள் வளர்ந்துகொண்டே வருகிறது.
உதாரணமாக, கடவுள் தன்மை என்பது பொது அயோக்கியத் தன்மைகள் தஞ்சமடையப் பாதுகாப்பு ஸ்தலமாகிவிட்டது.தண்டனை (ஜெயில்) தன்மை - அயோக்கியர்கள், காலிகள் இளைப்பாறி உடலைத் தேற்றிக்கொண்டு திரும்பும் சுகவாச ஸ்தலமாகி, சுகாதார ஸ்தாபனமாக ஆகிவிட்டது.
கோர்ட்டு, நீதிஸ்தலத்தன்மை- மனிதனை எப்படி எப்படி நேர்மைக்கேடான காரியம் செய்யலாம்; செய்துவிட்டு எப்படித் தப்பித்துக்கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியாக ஆகிவிட்டது.
பத்திரிக்கைகள் தன்மை - காலிப்பயல்களையும், அயோக்கியர் களையும், மக்கள் துரோகிகளையும், மடையர்களையும் பெரிய மனிதர்கள், மகான்கள், தேச பக்தர்கள், மேதாவிகள் ஆக்கும் சலவைச் சாலைகளாக ஆகிவிட்டது.
ஜனநாயகம் என்பது காலிகள், அயோக்கியர்கள் எப்படியாவது பணம், பதவி சம்பாதிக்கும் ஒழுக்கமற்ற செல்வர்கள், பதவியாளர்கள் ஸ்தாபனமாக ஆகிவிட்டது.
பொதுத்தொண்டு போனபோக்கானது இன்று நாட்டுக்கு ஒரு சம்பிரதாயமான தலைவனில்லாமல் போய்விட்டது. முன்பு தலைவர், தலைவர்கள் என்றால் அது தானாகவே மக்கள் உள்ளத்தில் புகுந்து யாரையாவது தலைவர்கள் என்று கருதச் செய்யும். அந்தப் பதவியையும் யாரோ சிலர் - வெகு சிலர்தான் விரும்புவார்கள். அவர்களும் நாடொப்பிய தலைவர்களில் ஒருவராக இருப்பார். மக்களும் தலைவராகக் கருதுவார்கள்; மதிப்பார்கள். இப்போது ஒவ்வொருவனும் தனது வாழ்க்கைப் பிழைப்பை மாத்திரம் முன்னிட்டே கவுரவத்தைக்கூடக் கருதாமல் தலைவனாக முயற்சித்து, கூலி ஆட்களைப் பிடித்து தன்னைத் தலைவனாக ஆக்கச் சொல்லுகிறான்; செய்துகொள்ளுகிறான். அதற்கேற்ற கீழ் மக்களும் எவ்வளவு கீழானவனையும் சுயநல, பதவி, பணத்தாசைக்காரனையும் தலைவனாகக் கூப்பாடு போடுகிறார்கள்.
பத்திரிக்கைக்காரர்களும் இந்த இழித்தன்மைக்கு முழுமுயற்சியோடு ஒத்துழைக்கிறார்கள்ஆனதினாலேயே, நாட்டில் உண்மைத் தலைவர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமற்போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்கவேண்டும் என்பதல்லாமல் நாட்டுப் பொதுமக்கள் நலனுக்கு என்று ஒன்றுகூட ஏற்படவில்லை; இந் நாட்டில் ஏற்பட்டதில்லை. இன்றுள்ள பொது ஸ்தாபனங்கள் என்பவைகள் சூதாடுமிடமாகவே ‘மேஜைக் காசு’வாங்க ஏற்பாடு செய்யப்பட்ட சூதாடுமிடங்கள் போலவே இருந்துவர வேண்டியவைகளாக அமைக்கப்பட்டு விட்டன. இவை மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்கள் நலத்துக்கு முன்னேற்றத்திற்குமான வாழ்வுக்கு - அறிவு வாழ்வுக்கு ஏற்ற கொள்கைகளோ லட்சியங்களோ இந்நாட்டில் யாராலும் கையாளப்படுவதில்லை. எவரும் அந்தத்துறையை அணுக பயப்படக் கூடியவர்களாகவே, அதாவது அதனிடம் அக்கொள்கை களிடம் சென்றால், அணுகினால் நமது வாழ்வே போய்விடுமே, பிழைக்கவே முடியாதே என்று பொதுத் தொண்டு செய்பவர்கள் எல்லாம் பயப்பட வேண்டியவர்களாகிவிட்டார்கள்.
ஆகவே, இதுவரை பொதுத்தொண்டு என்பது மக்கள் சுயநல வாழ்வுக்காக இந் நாட்டில் இருந்துவரும் பல தொழில்கள், மார்க்கங்கள் என்பவைபோலவே பிழைப்பு மார்க்கம்தான் என்றும் இதற்கு எந்தப் பொதுத்தொண்டரும் விலக்கு இல்லை என்றும் ஏதோ ஒரு அளவுக்கு என் 83 ஆண்டு அனுபவத்தைக் கொண்டு விளக்கினேன். அதோடு கூடவே, இதற்கு மாறாக பொதுத்தொண்டு இருக்குமானால் அது இயற்கைக்கு மாறுபட்டது என்றும் கூறினேன். இந்தக் கருத்து நான் வெகுநாளாகச் சொல்லிக்கொண்டு வரப்பட்ட கருத்தே ஒழிய இன்று புதிதாகச் சொல்லப்படுவதல்ல. மற்றும், உண்மையான பொதுத்தொண்டு செய்ய மக்களில் ஆள் கிடைப்பதும் மிகக் கஷ்டம்; மிகமிகக் கஷ்டம் என்றே சொல்லுவேன்.
யாராவது இருப்பார்களேயானால், அப்படிப்பட்டவர் மனிதனின் இயற்கை அமைப்புக்கு மாறுபட்டவர்களாகத்தான் இருக்க முடியும். அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால்,
1. முதலாவது, பொதுத்தொண்டனுக்குச் சோற்றுக்கு, குடும்ப வாழ்க்கைக்கு வகைதேட வேண்டிய அவசியமில்லாத வசதி இருக்கவேண்டும். வசதி இல்லா விட்டாலும், பொதுத்தொண்டையே கொண்டு பிழைக்கவேண்டிய அவசிய மில்லாத ஒரு மார்க்கமாவது இருக்க வேண்டும்.
2, தனக்கு மாத்திரமல்லாமல் தன்னால் போஜ­ணை செய்யவேண்டிய, பாதுகாக்கவேண்டிய நபர்கள் பளுவுகள் இருக்கவே கூடாது.
3. தன்னால் பாதுகாக்க, பெருக்கவேண்டிய பெரிய தொழிலில் பெரிய சொந்த சொத்தும் இருக்கக்கூடாது. இருந்தால், எதிரிகளுக்குப் பயந்து இலட்சியத்தை விட்டுக்கொடுக்க நேரும்.
4. மனைவி, பிள்ளைகுட்டிகள் இருக்கக்கூடாது; இருக்கவே கூடாது.‘காணப்படும் பொருள்களில் உயிர் பிரியமாம். உயிரினும் மக்கள் பிரியமாம். இவற்றைப் பாதுகாக்க எதுவும் செய்யலாம்’ - ஆய்ந்த பழமொழி. ஏனெனில், அவற்றைப் பாதுகாக்க வேண்டுமே, வளர்க்கவேண்டுமே, படிக்க வைக்க வேண்டுமே, உத்தியோகம் தேடிக்கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணத்தினால் எப்படிப் பட்டவனும் பொதுத்தொண்டுக்கு அயோக்கியனாகியேவிடுவான்.
5. பொதுத்தொண்டன் அல்லாத, சுயநலத் தொண்டனான மனிதன் எவனும் பிள்ளைகுட்டிகள் இருந்தால் சுயநல வாழ்விலேயே, அவனுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் அயோக்கியனாகிவிடுகிறான். அப்படி இருக்கும்போது, வசதி இல்லாதவன் அவற்றின் (பிள்ளை குட்டிகள்) வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு அயோக்கியத்தனம் செய்ய முடியாமல் எவனாலும் இருக்கவே முடியாது.
6. பொதுத் தொண்டுப் பணியில் இருந்து தன் வயிற்றுக்கு - வாழ்வுக்கு மாத்திரம் வகை செய்து கொள்பவனையே கூட இரண்டாந்தரம், விலக்கு அளிக்கப்படவேண்டிய தொண்டன் என்றுதான் சொல்லுவேன்.
7. எந்தப் பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்கவேண்டும். அல்லது, அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாப் பொதுத்தொண்டர்களாக இருக்கவேண்டும்.
8. பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்குமேல் வாழக்கூடாது; வாழவே கூடாது. வாழ வேண்டிவந்தால், வாழ்ந்துகொள். ஆனால் நான் பொதுத்தொண்டன் தியாகி கஷ்டநஷ்டப்பட்டவன் என்று சொல்லாதே. சொல்லுவதற்கு வெட்கப்படு. உன் மனதிலும் நீ நினைத்துக்கொள்ளாதே.
9. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால் - நீ மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று விட்டதாகக் கருதிக்கொண்டிருப்பவன் என்றுதான் சொல்லவேண்டும்.
10. மற்றும், இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத்தொண்டன் ஆகாமல் சுயநலத்தொண்டனாக ஆகி, உனக்கென்றெ நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம், அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக்கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத்தொண்டு (வே­சம்) ஆனது உன்னைத் தியாகம் செய்யச் செய்ததா, அல்லது உன் தகுதிக்கு மேற்பட்ட செல்வத்தையும் வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக்கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார்.
இந்த முறையில் எண்ணிப் பார்த்தால், நாட்டில் எவனாவது பொதுத் தொண்டன், தன்னலத்தை வெறுத்தவன், தியாகி என்பதாக எங்காவது இருக்கின்றானா என்பது தெரியும். நான் வெகு பொதுத்தொண்டர்களோடு பழகியிருந்த பழக்கத்தையும், வெகு பேருக்குத் தலைவனாக இருந்து அவர்கள் நடத்தையையும் அவர்களால் அடைந்த பலனையும் அவர்களது போக்கையும், அவர்கள் எதிர்ப்பையும், அவர்கள் இன்று எதிர் பார்ப்பதையும் இலட்சியத்தையும் உணர்ந்தே இதைச் சொல்லுகிறேன்.
எனது பொதுத்தொண்டு வாழ்விலே நான் நெருங்கி உண்மையாகப் பழகிய தோழர்கள் இராஜாஜி, கண்ணப்பர், இராமநாதன், கே.ஏ.பி. விஸ்வநாதன், பொன்னம்பலம், அண்ணாதுரை, சவுந்தரபாண்டியன், பி. பாலசுப்பிரமணியம், எஸ்.குருசாமி முதலியவர்களுடைய பொதுத்தொண்டு தன்மையை அனுபவித் தும், உணர்ந்துமே எழுதுகிறேன். மற்றும், இவர்கள் எல்லாம் எனக்கு ஆதரவாக, நண்பர்களாக இருந்ததாலேயும், இவர்களுக்கு நான் ‘தலைவனாக’ அவர்க ளாலேயே கருதப்பட்டதினாலேயும் நானும் இவர்களைக் குறிப்பிடுகிறேன்.
இதிலிருந்து பொதுமக்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்றால், பொதுத் தொண்டு என்பதாக ஒன்று, ஒரு தொண்டு இல்லை? பொதுவாக இல்லவே இல்லை.எவன் அந்தப்பெயரால் தொண்டு செய்வதாகக் காணப்பட்டாலும் சுயநலத்துக்காகத் தெரிந்தெடுக்கும் தொண்டுகளில் (பொதுத் தொண்டு என்பது) அது ஒன்று என்றுதான் கொள்ளவேண்டும். சிலருக்குத் துவக்கத்தில் சுயநலம் கருதாமல் பொதுத் தொண்டுக்கு வர எண்ணமேற்பட்டிருக்கலாம். பெண்டு பிள்ளை ஏற்பட்டால் எவனும் சுயநலப் புலிதான்.என்னைப் பற்றி நீங்கள் நீயும் அப்படித்தானே என்று கேட்கலாம்.
ஆம்; நானும் அப்படித்தான். என் தொண்டும் உண்மையில் சுயநலத் தொண்டுதான். என்ன சுயநலம்? அவரவர் சொந்தப் பிள்ளைகுட்டி, மனைவி, வாழ்க்கை சுயநலம் அல்லாமல், எனக்கு ஒரு திருப்தியையும் இன்பத்தையும் கொடுக்கத்தக்கதும், கம்பீரத்தோடு நானே பெருமைப்படத்தக்கதுமான நலத்தை அளிக்கிறது. அவற்றை நானும் அனுபவிக்கிறேன். இதுதான் என் சுயநலம்.செல்வத்தைப் பற்றியும், மற்றவர்களையெல்லாம் விட எனக்குப் பேராசையுண்டு. மற்ற மேற்கண்ட தோழர்களைவிடச் செல்வத்தில் நான் பொதுத்தொண்டின் பேரால் அதிகமான பணம், சொத்து சம்பாதித்தவன் ஆவேன். எனது முயற்சியில், தொண்டின் சரிபகுதிப் பாகம் பணம் சேர்ப்பதிலே செலவழிக்கிறேன். சிறு வயது முதலே வாழ்க்கையின் இலட்சணம் பணம் என்றே பழக்கப்பட்டவன் நான்.
இப்படிப்பட்ட நான், பொதுத்தொண்டனாக ஆனபின்பு உண்மையான பொதுத் தொண்டுக்கு என்றே சற்றேறக்குறைய 15 இலட்ச ரூபாய் மதிப்பிடத்தக்க பொதுச்செல்வம் சேமித்து இருக்கிறேன். எல்லோருக்கும் தெரியும்படியாகவே சம்பாதித்தே சேர்த்திருக்கிறேன். இதில் என்னுடைய சொந்த சொத்து, அதாவது எனக்கு உரிமையான என் சொத்துக்களை விற்று பொதுநலனுக்கு உதவிய வகையில் பெரும்பாகம் கூடச் சேர்க்கப்பட்டதால் இந்த மதிப்பு ஏற்பட்டதென்றே சொல்லுவேன். (எனதல்லாத) மற்றதெல்லாம் பொதுமக்களிடம் இருந்து மாநாடு, கூட்டத்துக்கு - அழைப்புக்குச் செல்லுதல், கொள்கைப் புத்தகம் விற்றல், கழகத்திற்கு நன்கொடை என்னும் பேரால் பெற்ற, அளிக்கப்பட்ட - வசூல் செய்யப்பட்ட வகையிலும் அவற்றை நானும் பெருக்கியவகையிலும் சொத்துக்களுக்குப் பொதுமதிப்பு ஏறியவகையிலும் சேர்க்கப்பட்ட செல்வம், சொத்துக்களெல்லாம் இந்த சுமார் பதினைந்து இலட்ச ரூபாய் மதிக்கக்கூடிய சொத்தாகும். இந்தச் சொத்திலும் என் இஷ்டப்படி -வேறுயாரும் கேள்வி கேட்கமுடியாதபடி, யாருக்கும் கணக்குக்காட்டவேண்டிய அவசியமில்லாத சொத்தாக, ஒரு நல்லபாகம் பொதுத் தொண்டுக்கு இருக்கிறது எனலாம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு இவ்வளவு செல்வ வசதி இருந்தும் எனது வாழ்வானது மக்களின் சராசரி வாழ்வுதான். எனக்கு உணவுச் செலவு மாதம் ரூ.50 - க்குள் தான் ஆகும். எனது துணிமணி செலவு ஆண்டுக்கு ரூ.50 - க்குள் தான் ஆகும். அதிலும் பெரும்பகுதி ஓசியில் நடக்கும். இதற்குச் செலவு செய்யவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது. (எதனால்) பிள்ளை குட்டி கிடையாது. மனைவி உண்டு என்றாலும் அவர்கள் மாதம் ரூ.200 போல் சம்பளம் கொடுத்து வாங்கக்கூடிய வேலையை இயக்கத்திற்கு இந்த 5 ஆண்டுகளாகச் செய்துவந்ததோடு, அதற்கு முன்பாகப் பதினைந்து ஆண்டாக பல ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை மூலம் கழகத்துக்குப் பணவருவாயும் அவர்களால் ஏற்பட்டது என்று சொல்லுவேன். அந்த அம்மையாருக்கும் உணவுச் செலவு மாதம் 50 ரூ. உடை செலவு வரு­ம் 150 ரூபாய்க்கு உள்ளாகத்தான் செலவாகும்.
எனது பிரயாணம் சிம்ப்சன் கம்பெனியின் பங்காளித் தோழர் ஆரோக்கியசாமி அவர்கள் சொன்னதுபோல், ஒரு லாரிக்குச் சமமான - சாமான் ஏற்றத்தக்க மோட்டார் வண்டியில்தான்! பிரயாணம் முக்கால் பாகம் இரவில்.மாதத்தில் 20 நாள்போல சராசரி சுற்றுப்பிரயாணம். சதா கழகத்துக்குக் கட்டட வேலை. கழகச் செல்வத்தைப் பெருக்கும் கணக்கு வேலை. இது அதிசயமான வேலை. எந்தவிதக் கணக்கும் வைக்காமல் சதா கணக்குப் போட்டுப் பார்க்கும் வேலை! எல்லாம் பெரிதும் டைரி குறிப்புத்தான்.
சில பொறாமைக்காரர்கள், ஏமாற்றமடைந்து வெந்து புழுங்கிக்கொண்டிருப்பவர் கள் ஆகிய கூட்டத்தார் தவிர ‘எதிரிகள்’ என்று கருதப்பட்டவர்கள் முதல் எந்த மனிதரும் நம்மைக் கண்டவுடன் நான் வெட்கப்படத்தக்கபடி என்னைப் ‘புகழ்வதும்’ ‘போற்றுவதும்’ ‘அன்பு காட்டுவது’மான தன்மையை இடைவிடாமல் அனுபவிக்கிறேன்.
இவை எல்லாம் எனக்குச் சுயநலமில்லாமல் வேறு என்ன பொதுநலம் என்று சொல்ல முடியும்? எனக்கு ஏதாவது கவலை உண்டு என்றால் அது கழகச் சொத்துக்களையும், மற்றும் பொதுநலத்துக்காகவே அளிக்கப்பட்ட பொருள்கள், சொத்துக்கள் ஆகியவைகளைப் பாதுகாத்து, அதன் வருவாய்களைக் கழக லட்சியங்களுக்கும் அனாதியாய்ப் பராமரிப்பு இல்லாத மக்களுக்கும், அவர்கள் நல்வாழ்வுக்கும் வகைதரப் பயன்படும்படியாய்ச் செலவு செய்யச் செய்வது எப்படி என்கிற கவலைதான்.
மற்றொரு கவலை என்னவென்றால், இனியும் ஒரு பத்து ஆண்டுகளுக்காவது காமராசர் ஆட்சி நீடித்து நிலைத்து இருக்குமானால் சுயமரியாதை இயக்கவேலை பூர்த்தியாகாவிட்டாலும் திராவிடர் கழக இலட்சிய வேலை பெரும் அளவுக்குப் பூர்த்தியாகுமே என்கின்ற கவலைதான்.மேலால், ஒரு விசயத்தைக் குறிப்பிட்டுவிட்டு இதை முடிக்கிறேன்.
அதாவது,எனது ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் அடுத்த ஆண்டு முடிவுக்குள் நம் கழகம் செய்யவேண்டிய காரியம் என்ன என்று வேலைத் திட்டம் தெரிவிப்பது வழக்கம்.சென்றசில பிறந்தநாள் விழாக்களில் ‘அடுத்த ஆண்டு’ வேலைத் திட்டம் தெரிவித்தேன் என்றாலும் அந்த ஆண்டுகளின் வேலைத் திட்டங்களை காமராசர் ஆட்சி எதிர்ப்புக்களை முறியடிக்கின்ற வேலைகளுக்கே பெரும்பகுதி முயற்சியும் நேரமும் செலவழிக்கப்பட்டுச் சரியாக வேலைத் திட்டங்கள் கவனிக்கப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதற்குச் சமாதானம் என்னவென்றால், காமராசர் ஆட்சி எதிர்ப்புகளை முறியடித்து, மறுபடியும் அவர் ஆட்சி வரும்படி செய்வதும் வேலைத் திட்ட நிறைவேற்றுவேலை என்று கருதவேண்டியதாயிற்று. இதில் ஒரளவு வெற்றி பெற்றோம் என்றாலும் முழுவெற்றி பெறவில்லை.ஒர் அளவு வெற்றி என்னவென்றால், எலக்­னில் ஜெயித்த ஒருவன் ‘நான் ஒரு அளவுக்குத்தான் வெற்றிபெற்றேனேயயாழிய முழுவெற்றி பெறவில்லை. முழுவெற்றி பெற்றேன் என்று எப்போது சொல்லலாம் என்றால், எதிரியை டெபாசிட் கிடைக்காமல் செய்திருந்தால்தான் முழுவெற்றி. இது சாதாரணமாய்க் கிடைக்கக்கூடிய வெற்றிதான்’ என்று ஒருவன் சொல்லுவது போன்றே, நானும் முழுவெற்றி கிடைக்கவில்லை என்கின்றேன்.
அது போகட்டும்; வரப்போகிற ஆண்டுக்கு வேலைத் திட்டமாக:-
(1) பார்ப்பனப் பத்திரிகைகளின் ஆணவமும் ஆதிக்கமும் ஒழிக்கப்படவேண்டும்; குறைக்கப்படவாவது வேண்டும்.
(2) சினிமா மோகம், வளர்ச்சி ஒழிக்கப்படவேண்டும்.
(3) கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும்.
கழகத்திற்கு 25,000 மெம்பர்களுக்குக் குறையாமல் சேர்க்கப்படவேண்டும். கழகத்திற்குக் குறைந்தது 500 - க்குக் குறையாமல் கிளைக் கழகங்கள் இருக்கச் செய்யவேண்டும். கமிட்டிகள், மத்தியக் கமிட்டி, மாவட்டக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு மற்ற கமிட்டிகள் புதுப்பிக்கப்படவேண்டும். கழகப் புத்தகங்கள் ரூ.25,000-க்குக் குறையாமல் விற்கப்படவேண்டும். பிரச்சாரங்களுக்கு ஒழுங்குமுறை, கட்டுப்பாடு ஏற்படுத்தவேண்டும்.கமிட்டிக்கு மேலும் கட்டுத் திட்டங்கள் ஏற்படுத்தப் படவேண்டும். இவைகளை இந்த ஆண்டு வேலைத் திட்டங்களாகக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ஆதாரம் - நன்றி - (விடுதலை - 84 வதுபிறந்த நாள் விழாமலர் - 17.09.1962)

Feb 19, 2009

சினிமா கொட்டகை

எனது சிறு வயதில் நாங்கள் குடியிருந்த தெருவில் நான்கு வீடுகள் தள்ளி ஒரு திருப்பத்தில் ஒரு கீற்று சினிமா கொட்டகை, ஒரு கிராமத்திற்கே உரிய எளிமையோடு இருந்தது பரணி திரையரங்கம் என்று பெயர், பிற்பாடு அது கீற்று மாறி இரும்பு தகடுகளோடு பல புதிய விஷயங்களை இணைத்துக்கொண்டது, பல புதிய முதலாளிகளும், புதிய பெயரும் என மாறி இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை என்ன பெயரோ யார் முதலாளியோ,

ஆனால் அந்த காலத்தில் அந்த வயதுக்கு அது ஒரு அற்புதம்தான், மாலை 4 மணிக்கே சீர்காழி கோவிந்த ராஜன் தனது கணீர் குரலில் ஒரு வினாயகர் பாடலைத்தொடங்கி விடுவார், அதன் பின் பல பழய பாடல்கள், சித்தாட கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு என்கிற பழய பாடல் ஒன்றும் தினமும் தவறாமல் வரும், அது அங்கு பணிபுரியும் ஆப்பரேட்டரின் ரசனையா அல்லது யாருடைய முடிவு அது என்று தெரியாது, பிறகு ஒரு 5:30 அல்லது 6 மணிக்கு படம் தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் சீர்காழி வருவார் “வினாயகனே வினை தீர்ப்பவனே” என்று பாடத்தொடங்கிவிட்டால் படம் தொடங்கப்போகிறார்கள் என்பது ஒரு அடையாளம் அப்போதே ஸ்லைடுகள் தொடங்கிவிடும்,

மூன்று விதமான இருக்கை வசதிகள் அதில் இருந்தது மணல் தரை, பின்னர் பெஞ்ச், அடுத்தது சேர் டிக்கட், இதில் இருந்துதான் சிலரை தரை டிக்கட் கோஷ்டி என்று கிண்டல் செய்வது பிறந்தது என்று தோன்றுகிறது, அல்லது நாடக காலத்திலும் இப்படி தரை டிக்கட் விவகாரம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை, நான் நாடகம் எதுவும் இப்படி தியேட்டர்களில் கண்டதில்லை, கிராமங்களில் கோடைகாலங்களில் வயல்வெளிகளில் நடக்கும் நாடகம் பார்த்திருக்கிறேன்,

தரை டிக்கட் எனது நினைவுகளில் 55 காசுகளில் தொடங்கியதாக நினைவு, பெஞ்ச் 1ரூ, சேர் 1.50 என்றும் நினைக்கிறேன், அது பின்னர் விலை கூடிக்கொண்டே வந்தது, நான் பெரும்பாலும் தரை டிக்கட் மட்டுமே அதில் சில வசதிகள் இருந்தன, பெஞ்ச் பனைமரங்களின் அடிப்பாகத்தை நட்டு அதன் மீது ஒரு பலகை அடித்திருப்பார்கள், சேர் நமது சாதாராண மர நாற்காலிகளை ஒன்றோடு ஒன்று கட்டி நகர முடியாமல் இருக்கும், பெரும்பாலும் மூட்டை பூச்சிகளின் இருப்பிடமாக வும் இருக்கும்,

அப்போது சினிமாக்களுக்கு வீட்டில் அனுமதி கிடைப்பது மிகவும் சிரமம், இப்போது குழந்தைகளுக்கு அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், தரை டிக்கட் எடுத்து போய் நல்ல திரைக்க்கு முன் வெகு அருகில் மணலை குவித்து அதில் உட்கார்ந்து கொண்டு திரையை பார்த்துக்கொண்டே இருப்போம், இதில் அங்கு உள்ள கடையில் போண்டா முறுக்கு வறுகடலை,டீ போன்ற விஷ்யங்கள் கிடைக்கும் ஒரு மூங்கில் தட்டில் இதெல்லாம் வைத்துக்கொண்டு சிறு பையன்கள் திரையரங்கத்தின் உள்ளே இடையிடையே விற்ப்பார்கள், அவர்களை பார்க்கும் போது ஒரு பொறாமை வரும் தினமும் இலவசமாக சினிமா பார்ப்பதோடு காசும் கிடைக்கிறதே என்று,

அந்த போண்டா இருக்கிறதே அத்தனை சுவையாக இருக்கும், இன்று வரை அப்படி ஒரு போண்டா நான் சாப்பிட்டதே இல்லை என்றுதான் நினைக்கிறேன், ஒரு மென்மை மிதமான சூடு என்று மிகவும் ருசியாக இருக்கும், ஒரு முறை வீட்டில் நன்றாக தூங்கி கொண்டிருந்த நான் இரண்டாவது காட்சி இடைவேளை விட்ட சமயம் திடீரென விழித்துக்கொண்டேன், மணி இரவு 12 இருக்கும், வீட்டில் அப்போது யாரோ புதியவர்கள் வந்திருந்ததால் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள், எனக்கு என் கால் சட்டையில் 30 காசு மீதம் இருந்தது நினைவுக்கு வர திடுதிடுவென வாசலுக்கு போனேன் அப்போது 10 வயது இருக்கலாம், அப்பா நான் ஏதோ தூக்கத்தில் வெளியே போகிறேன் என்ற நினைத்து எங்கே போகிறாய் என கேட்க நான் சிறுநீர் கழிக்க போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு நேராக தியேட்டர் கடைக்கு சென்று இரண்டு போண்டாக்கள் வாங்கி தின்று கொண்டே வீட்டிற்கு வந்தேன் வெளிப்புறத்தில் இருந்தும் வாங்கலாம், அதற்குள் சிறுது நேரம் ஆகிவிட்டதால் வீட்டு உறுப்பினர்கள் எல்லாம் தெரு முழுக்க தேடத்தொடங்கிவிட்டார்கள், அவர்கள் தேடிக்கொண்டே தியேட்டர் வாசலுக்கு வந்தால் அங்கே நான் போண்டாவும் கையுமாக பிடிபட வெகுகாலம் எங்கள் குடும்பத்தில் இந்த சம்பவம் ஒரு நகைச்சுவையை உண்டாக்கி கொண்டிருந்தது, அத்தனை சுவையானது அந்த போண்டா. சரி இனி தியேட்டர் கதைக்கு போவோம்.

படம் தொடங்குவதற்கு முன்பாக ஊரில் உள்ள, கடை விளம்பரங்கள், மற்றும் தடுப்பூசி விளம்பரங்கள் என்று போடுவார்கள், அடுத்து வாரீல் என்று அழைக்கப்படும் அரசு செய்தி பிரிவு தரும் ஒரு செய்திபடம் வரும் அதில் பேசுபவரின் குரல் மற்றும் இசை மிகவும் மறக்கமுடியாத ஒரு பிரத்யோகமானது, போர் காலங்களில் இந்த நடைமுறை தொடங்கியதால் வார்(war)ரீல் என்கிற பெயர் வந்திருக்குமோ என்னவோ,

அதில் நிறைய இந்திராவின் 20 அம்ச திட்டங்கள் பற்றி வடக்கே ராஜஸ்தானில் இருந்து ஒரு முக்காடு போட்ட பெண்ணோ அல்லது பெரிய முண்டாசு கட்டிய ஆணோ ஏதோ சொல்ல நமது மொழியில் ஒருவர் “இவர் சொல்கிறார்” என்று
தொடங்கி அதனை விளக்கிகொண்டிருப்பார். இதெல்லாம் எவண்டா கேட்டான் என்று பின் புறத்தில் இருந்து குரல் வரும்.

இப்படி பட்ட செய்தி பிரிவு செய்திகளை யார் இவர்களுக்கு கொடுப்பார்கள், அதனை கட்டாயம் இவர்கள் திரையிடுவது ஏன், இதன் நன்மைகள் என்ன என்பது போன்ற கேள்விகள் மனதில் வரும். ஆனால் இதில் எனக்கு தெரிந்திட்ட ஒரே நன்மை, கடைசி டிக்கட் எடுத்து வரும் ஆசாமிகளுக்கும் படம் முதலில் இருந்தே காணமுடியும் என்பதுதான்.

சினிமா கொட்டகை தினமும் இரண்டு காட்சிகள் மட்டுமே ஏனனில் சுற்றுப்புறம் முழுக்க திறந்து இருக்கும் என்பதால் பகலில் காட்சிகள் தெளிவாக இருக்காது.
அதனால் பகல் நேரங்களில் அது ஒரு சாதாரண இடமாக தோன்றும் யாரும் நடமாட்டம் இல்லாமல் ஏதோ வெறிச்சோடி கிடக்கும், மாலை தொடங்கியவுடன் களைகட்ட தொடங்கிவிடும்,
மிகவும் ஆழமான நண்பனாக பள்ளிப்பருவத்தில் திரையரங்கம் பலருக்கு அமைந்திருக்கும் நான் சிறுவயதில் பார்த்த முதல் படம் எவ்வளவு முயன்றாலும் நினைவுக்கு வரவில்லை, அடுத்த பதிவில் இங்கு கண்ட சினிமாக்கள் பற்றியும் தொடர்கிறேன்.
தவநெறிச்செல்வன்

Feb 11, 2009

படகு புகட்டிய பாடம்

எனது நண்பர் ஜீவா அனுப்பிய ஒரு ஜென் கதை, மிகவும் தேவையான அறிவுரையை நமக்கு தருகிறது, இதனை பின்பற்ற முயலுங்கள் இனிமையாக
இருக்கலாம்

(கோபத்தைக் களைவது எப்படி?)லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது."என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும். பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.பிறர் மீது போபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம். எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தகைளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.-

Feb 9, 2009

இலங்கையை மறப்பார்களா மக்கள்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர் திரு.மாலன் அவர்கள் தொடங்கியுள்ள தேர்தலின் திசைகள் என்ற புதிய கூட்டு பதிவில் வெளியான கட்டுரை, அதன் தொடர்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, திரு மாலன் அவர்களின் பாராட்டை பெற்ற இக்கட்டுரை உங்களின் பார்வைக்கு

http://therthal.blogspot.com/2009/02/2009.html

இந்திய பொது தேர்தல் தொடங்கப்போகிறது, கட்சிகள் தங்கள் தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் காட்சிகள் நிறைய மாறி கிடக்கின்றன அதற்கான முக்கிய காரணம் இலங்கை பிரச்சினைதான். கலைஞர் கருணாநிதியின் இலங்கை பற்றிய நிலைபாடுகள் ஒரு மிக மோசமான அதிருப்தியை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தனது கூட்டனியில் சில கட்சிகளை இழக்க நேரிடலாம், இந்த இலங்கை பற்றிய பொறி அடங்காத சூழல் தேர்தல் வரை இருக்குமானால் நிச்சயம் அது காங்கிரஸுக்கு பாதகமாக முடியக்கூடும்,

முத்துகுமார் அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயளாலர் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுவது இளைஞர்கள் மத்தியில் திமுகவின் மீதான எதிர் வினையாக கொள்ளலாம், அது தேர்தல் வரை நிலைகொண்டிருந்தால் அது மிகப்பெரிய வீழ்ச்சியாக நிச்சயம் மாறும்.

ஆனால் இந்த வீழ்ச்சியை யார் உபயோகப்படுத்தப்போகிறார்கள் என்பது மிகவும் குழப்பமாக இருப்பதுதான் திமுக வின் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம், அதிமுக எடுத்திருக்கும் விடுதலைப்புலிகளுக்கான எதிர் நிலையில் அதிமுக இந்த வாய்ப்பை பயன் படுத்த முடியாமல் போககூடும். அதே நேரம் புலி ஆதரவு நிலையில் இருக்கிற மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், கம்னிஸ்டுகள் ஓரணியில் திமுகவை விட்டும் அதிமுகவை விட்டும் தனியாக வந்து கூட்டனி அமைப்பார்களா என்பது சாத்தியமில்லாததாகவே எனக்கு படுகிறது, முக்கியமாக கம்னியூஸ்டுகள் அதிமுகவை விட்டு வருகிற வாய்ப்பு மிகக் குறைவாகவே தோன்றுகிறது, பாமக வின் நிலை இன்னும் தெளிவில்லை அவர் ஜெயிக்கும் கூட்டணியில்தான் இருப்பார் என்பதால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இருக்கும் மக்கள் சூழலைப்பொருத்தே அவரின் முடிவு இருக்கும், எனது எண்ணம் அவர் இலங்கை பிரச்சினை தேர்தலுக்கு முன் மறக்கடிக்கப்பட்டால் அவர் திமுகவுடன் இணைவார் என்பதுதான்,

ஆக இந்த தேர்தல் இலங்கை பிரச்சினை மக்கள் மனதில் எந்த அளவு நினைவில் இருக்கிறதோ அதைப்பொருத்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது ஆழமான எண்ணம்,

ஆனால் சமீபத்திய திருமங்கலம் தேர்தல் இலங்கை பிரச்சினையை சுத்தமாக மறந்த நிலையில் நடந்ததையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும், தேர்தல் நேரத்தில் இலங்கை பிரச்சினை சுத்தமாக மறக்கடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியவில்லை, ஆனால் மின் தட்டுப்பாடு பிரச்சினை இப்போது ஓரளவுக்கு மறந்து போய்விட்டது, இப்படி ஒரு பிரச்சினையை கொண்டு மற்ற பிரச்சினைகள் மறந்து போவது நடந்தாலும் இரண்டுமே திமுக வுக்கு எதிராக நடக்கிறது என்பதுதான் கவனிக்கவேண்டியது.

காங்கிரஸுடன் உள்ள கூட்டணி திமுகவுக்கு இந்த தேர்தலில் சுமையாக முடியக்கூடிய நிலையிலும் முதல்வர் தனது முடிவுகளை குழப்பமாக வைத்திருப்பது தற்போதைய சட்டசபை பலத்தில் உள்ள குறையால்தான், ஆனால் இந்த குழப்பம் நிச்சயம் பெரிய மாற்றத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்தப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்குள் வரக்கூடும் என்பது போல் செய்திகள் வருகின்றன, உண்மையில் இந்த இலங்கை பிரச்சினை அதிகம் பாதிக்க போவது விஜயகாந்தின் வளர்ச்சியைதான் என்று தோன்றுகிறது, கட்சி தொடங்கி மிக குறுகியகாலத்தில் வளர்ந்து ஒரு நல்ல கூட்டணி அமைந்திட வாய்ப்பு ஏற்ப்பட்டு அதும் வெற்றி வாய்ப்பு கூடுதல் இருந்த ஒரு கூட்டணியாக அது இருந்து திடீரென இந்த இலங்கைப்பிரச்சினையால் அந்த கூட்டணியின் வெற்றி கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவர் இந்த கூட்டணிக்குள் செல்வது ஒரு பெரிய தர்மசங்கடம்தான் என்று தோன்றுகிறது.

இன்றைய நிலையில் தேர்தலோடு இலங்கை பிரச்சினை முடிச்சு போடப்படவில்லை என்றே தோன்றுகிறது, கடைசி கூட்டணி காட்சிகளைப்பொருத்து இலங்கை பிரச்சினை ஒரு நல்ல காரணியாக மாறும் என்று தோன்றுகிறது, ஆனால் இதெல்லாம் புரியாத ஆள் இல்லை முதல்வர், அதற்கு முன் செய்ய வேண்டியதை செய்து தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த கூடும் ஆனால் காலம்தான் குறைவாக இருக்கிறது.

திமுகவுக்கு சாதகமான அம்சங்கள் நிறைய கொண்டவராக ஜெயலலிதா தோன்றுகிறார், மின் தட்டுபாடு இலங்கை பிரச்சினை இன்னும் பல்வேறு ஆட்சி குறைகளை அவர் பயன் படுத்திக்கொள்ளவே இல்லை, அதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றும் சக்தியும் கூட்டமும் அவருக்கு இருந்தும் அதை அவர் செய்யவில்லை, ஏதோ சின்ன சின்ன போராட்டங்களை ஊர் ஊருக்கு நடத்தி அதுபோதும் என்று இருக்கிறார் என்பதால் அவரிடம் கூட்டணி தேடி ஓடும் ஒரு கட்டாயத்தை அவர் மற்ற கட்சிகளுக்கு ஏற்படுத்த தவறிவிட்டார், கம்னியூஸ்ட் கூட ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்புகள் பிரமாதமாக இருப்பதால் அங்கு செல்லவில்லை, காங்கிரஸ் இல்லாத கூட்டணி அவ்வளவே, பாமக இன்னும் பெரிய அளவில் அதிமுக வுடன் பேசாததும் அதனால்தான். பாஜக மட்டும்தான் அதிமுக வின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார்கள் அது தமிழகத்தை பொருத்தவரை பாஜக வின் பலவினமான நிலைமை,

எனவே இலங்கை பிரச்சினை இந்த தேர்தலில் பெரும் பங்குவகிக்கப்போவது மக்களின் மறதி நிலையைப்பொருத்துதான் என்று தோன்றுகிறது. எல்லா தேர்தலும் போலவே மக்களிம் மறதி ஒரு முக்கிய காரணி பிரச்சினைதான் வேறு வேறு.

தவநெறிச்செல்வன்