Feb 19, 2009

சினிமா கொட்டகை

எனது சிறு வயதில் நாங்கள் குடியிருந்த தெருவில் நான்கு வீடுகள் தள்ளி ஒரு திருப்பத்தில் ஒரு கீற்று சினிமா கொட்டகை, ஒரு கிராமத்திற்கே உரிய எளிமையோடு இருந்தது பரணி திரையரங்கம் என்று பெயர், பிற்பாடு அது கீற்று மாறி இரும்பு தகடுகளோடு பல புதிய விஷயங்களை இணைத்துக்கொண்டது, பல புதிய முதலாளிகளும், புதிய பெயரும் என மாறி இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை என்ன பெயரோ யார் முதலாளியோ,

ஆனால் அந்த காலத்தில் அந்த வயதுக்கு அது ஒரு அற்புதம்தான், மாலை 4 மணிக்கே சீர்காழி கோவிந்த ராஜன் தனது கணீர் குரலில் ஒரு வினாயகர் பாடலைத்தொடங்கி விடுவார், அதன் பின் பல பழய பாடல்கள், சித்தாட கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு என்கிற பழய பாடல் ஒன்றும் தினமும் தவறாமல் வரும், அது அங்கு பணிபுரியும் ஆப்பரேட்டரின் ரசனையா அல்லது யாருடைய முடிவு அது என்று தெரியாது, பிறகு ஒரு 5:30 அல்லது 6 மணிக்கு படம் தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் சீர்காழி வருவார் “வினாயகனே வினை தீர்ப்பவனே” என்று பாடத்தொடங்கிவிட்டால் படம் தொடங்கப்போகிறார்கள் என்பது ஒரு அடையாளம் அப்போதே ஸ்லைடுகள் தொடங்கிவிடும்,

மூன்று விதமான இருக்கை வசதிகள் அதில் இருந்தது மணல் தரை, பின்னர் பெஞ்ச், அடுத்தது சேர் டிக்கட், இதில் இருந்துதான் சிலரை தரை டிக்கட் கோஷ்டி என்று கிண்டல் செய்வது பிறந்தது என்று தோன்றுகிறது, அல்லது நாடக காலத்திலும் இப்படி தரை டிக்கட் விவகாரம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை, நான் நாடகம் எதுவும் இப்படி தியேட்டர்களில் கண்டதில்லை, கிராமங்களில் கோடைகாலங்களில் வயல்வெளிகளில் நடக்கும் நாடகம் பார்த்திருக்கிறேன்,

தரை டிக்கட் எனது நினைவுகளில் 55 காசுகளில் தொடங்கியதாக நினைவு, பெஞ்ச் 1ரூ, சேர் 1.50 என்றும் நினைக்கிறேன், அது பின்னர் விலை கூடிக்கொண்டே வந்தது, நான் பெரும்பாலும் தரை டிக்கட் மட்டுமே அதில் சில வசதிகள் இருந்தன, பெஞ்ச் பனைமரங்களின் அடிப்பாகத்தை நட்டு அதன் மீது ஒரு பலகை அடித்திருப்பார்கள், சேர் நமது சாதாராண மர நாற்காலிகளை ஒன்றோடு ஒன்று கட்டி நகர முடியாமல் இருக்கும், பெரும்பாலும் மூட்டை பூச்சிகளின் இருப்பிடமாக வும் இருக்கும்,

அப்போது சினிமாக்களுக்கு வீட்டில் அனுமதி கிடைப்பது மிகவும் சிரமம், இப்போது குழந்தைகளுக்கு அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், தரை டிக்கட் எடுத்து போய் நல்ல திரைக்க்கு முன் வெகு அருகில் மணலை குவித்து அதில் உட்கார்ந்து கொண்டு திரையை பார்த்துக்கொண்டே இருப்போம், இதில் அங்கு உள்ள கடையில் போண்டா முறுக்கு வறுகடலை,டீ போன்ற விஷ்யங்கள் கிடைக்கும் ஒரு மூங்கில் தட்டில் இதெல்லாம் வைத்துக்கொண்டு சிறு பையன்கள் திரையரங்கத்தின் உள்ளே இடையிடையே விற்ப்பார்கள், அவர்களை பார்க்கும் போது ஒரு பொறாமை வரும் தினமும் இலவசமாக சினிமா பார்ப்பதோடு காசும் கிடைக்கிறதே என்று,

அந்த போண்டா இருக்கிறதே அத்தனை சுவையாக இருக்கும், இன்று வரை அப்படி ஒரு போண்டா நான் சாப்பிட்டதே இல்லை என்றுதான் நினைக்கிறேன், ஒரு மென்மை மிதமான சூடு என்று மிகவும் ருசியாக இருக்கும், ஒரு முறை வீட்டில் நன்றாக தூங்கி கொண்டிருந்த நான் இரண்டாவது காட்சி இடைவேளை விட்ட சமயம் திடீரென விழித்துக்கொண்டேன், மணி இரவு 12 இருக்கும், வீட்டில் அப்போது யாரோ புதியவர்கள் வந்திருந்ததால் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள், எனக்கு என் கால் சட்டையில் 30 காசு மீதம் இருந்தது நினைவுக்கு வர திடுதிடுவென வாசலுக்கு போனேன் அப்போது 10 வயது இருக்கலாம், அப்பா நான் ஏதோ தூக்கத்தில் வெளியே போகிறேன் என்ற நினைத்து எங்கே போகிறாய் என கேட்க நான் சிறுநீர் கழிக்க போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு நேராக தியேட்டர் கடைக்கு சென்று இரண்டு போண்டாக்கள் வாங்கி தின்று கொண்டே வீட்டிற்கு வந்தேன் வெளிப்புறத்தில் இருந்தும் வாங்கலாம், அதற்குள் சிறுது நேரம் ஆகிவிட்டதால் வீட்டு உறுப்பினர்கள் எல்லாம் தெரு முழுக்க தேடத்தொடங்கிவிட்டார்கள், அவர்கள் தேடிக்கொண்டே தியேட்டர் வாசலுக்கு வந்தால் அங்கே நான் போண்டாவும் கையுமாக பிடிபட வெகுகாலம் எங்கள் குடும்பத்தில் இந்த சம்பவம் ஒரு நகைச்சுவையை உண்டாக்கி கொண்டிருந்தது, அத்தனை சுவையானது அந்த போண்டா. சரி இனி தியேட்டர் கதைக்கு போவோம்.

படம் தொடங்குவதற்கு முன்பாக ஊரில் உள்ள, கடை விளம்பரங்கள், மற்றும் தடுப்பூசி விளம்பரங்கள் என்று போடுவார்கள், அடுத்து வாரீல் என்று அழைக்கப்படும் அரசு செய்தி பிரிவு தரும் ஒரு செய்திபடம் வரும் அதில் பேசுபவரின் குரல் மற்றும் இசை மிகவும் மறக்கமுடியாத ஒரு பிரத்யோகமானது, போர் காலங்களில் இந்த நடைமுறை தொடங்கியதால் வார்(war)ரீல் என்கிற பெயர் வந்திருக்குமோ என்னவோ,

அதில் நிறைய இந்திராவின் 20 அம்ச திட்டங்கள் பற்றி வடக்கே ராஜஸ்தானில் இருந்து ஒரு முக்காடு போட்ட பெண்ணோ அல்லது பெரிய முண்டாசு கட்டிய ஆணோ ஏதோ சொல்ல நமது மொழியில் ஒருவர் “இவர் சொல்கிறார்” என்று
தொடங்கி அதனை விளக்கிகொண்டிருப்பார். இதெல்லாம் எவண்டா கேட்டான் என்று பின் புறத்தில் இருந்து குரல் வரும்.

இப்படி பட்ட செய்தி பிரிவு செய்திகளை யார் இவர்களுக்கு கொடுப்பார்கள், அதனை கட்டாயம் இவர்கள் திரையிடுவது ஏன், இதன் நன்மைகள் என்ன என்பது போன்ற கேள்விகள் மனதில் வரும். ஆனால் இதில் எனக்கு தெரிந்திட்ட ஒரே நன்மை, கடைசி டிக்கட் எடுத்து வரும் ஆசாமிகளுக்கும் படம் முதலில் இருந்தே காணமுடியும் என்பதுதான்.

சினிமா கொட்டகை தினமும் இரண்டு காட்சிகள் மட்டுமே ஏனனில் சுற்றுப்புறம் முழுக்க திறந்து இருக்கும் என்பதால் பகலில் காட்சிகள் தெளிவாக இருக்காது.
அதனால் பகல் நேரங்களில் அது ஒரு சாதாரண இடமாக தோன்றும் யாரும் நடமாட்டம் இல்லாமல் ஏதோ வெறிச்சோடி கிடக்கும், மாலை தொடங்கியவுடன் களைகட்ட தொடங்கிவிடும்,
மிகவும் ஆழமான நண்பனாக பள்ளிப்பருவத்தில் திரையரங்கம் பலருக்கு அமைந்திருக்கும் நான் சிறுவயதில் பார்த்த முதல் படம் எவ்வளவு முயன்றாலும் நினைவுக்கு வரவில்லை, அடுத்த பதிவில் இங்கு கண்ட சினிமாக்கள் பற்றியும் தொடர்கிறேன்.
தவநெறிச்செல்வன்

6 comments:

 1. சுமார் 30 வயதை கடந்த எல்லோருக்கும், இது போன்ற டுரிங் டாக்கீஸ் அனுபவங்கள் இருந்திருக்கும், நினைவுட்டியமைக்கு நன்றி

  ReplyDelete
 2. சினிமாவிலும், வாழ்க்கையிலும்
  வலைப்பதிவிலும் வலம்வருகிறது
  பிளாஷ் பேக்
  அன்புடன்
  ச.ஜீவா

  ReplyDelete
 3. சினிமாவிலும், வாழ்க்கையிலும்
  வலைப்பதிவிலும் வலம்வருகிறது
  பிளாஷ் பேக்
  அன்புடன்
  ச.ஜீவா

  ReplyDelete
 4. சினிமாவிலும், வாழ்க்கையிலும்
  வலைப்பதிவிலும் வலம்வருகிறது
  பிளாஷ் பேக்
  அன்புடன்
  ச.ஜீவா

  ReplyDelete
 5. சினிமாவிலும், வாழ்க்கையிலும்
  வலைப்பதிவிலும் வலம்வருகிறது
  பிளாஷ் பேக்
  அன்புடன்
  ச.ஜீவா

  ReplyDelete
 6. சினிமாவிலும், வாழ்க்கையிலும்
  வலைப்பதிவிலும் வலம்வருகிறது
  பிளாஷ் பேக்
  அன்புடன்
  ச.ஜீவா

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்