Jan 21, 2012

புரளிதான் அடிநாதம்.

”எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும் ? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டுமென்றால் பிறர் மனைவியைக் காதலிக்கற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும், எனக்கும் எழுதும் பொழுதோ, மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும், நிர்ப்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும், பிடுங்கல்களும், அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்கு பணியாதவர்களைக் கண்டும் நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.”

தி. ஜானகிராமன்! சிலிர்ப்பு என்ற சிறுகதைத் தொகுப்பில். இந்த மேற்க்கோளை குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் கீழே நான் எழுதப்போவதவற்கும் எந்த சம்பந்தமில்லை. இந்த விவரம் சாரு தளத்தில் இருந்து கிடைத்தது.

ஒருவன் மாங்கு மாங்கு என்று உட்கார்ந்து எழுதுவதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் மேலே உள்ள முதல் பாரா ஒரு சரியான பதிலாக இருக்க கூடும்,

தி.ஜானகிராமனின் மோகமுள் கொஞ்சம் படித்ததோடு சரி, வேறு எதையும் படிக்கவில்லை, சில எழுத்தாளர்களின் எழுத்துக்களை இழுத்து பிடித்து படிக்க முயன்றாலும் முடிவதில்லை. சில எழுத்தாளர்களின் எழுத்து நம்மை இழுத்துக்கொண்டே இருக்கும். இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எழுத்தாளர்கள் மாறி இருப்பார்கள், அல்லது மாறிக்கொண்டே இருப்பார்கள். சாரு அந்தவிதத்தில் மாறாமல்தான் இருக்கிறார். அவருடைய எழுத்தை பிடிக்காதவர்கள் கூட தொடர்ந்து படிக்க நேரும் என்றுதான் தோன்றுகிறது படிக்க தொடங்கிவிட்டால், அதற்கு பயந்து கொண்டு வாங்காமல் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

போகட்டும். இந்த கட்டுரை எழுதவேண்டிய நோக்கம் புத்தக விழா நடந்து முடிந்து விட்ட நிலையில் ஊரில் இருந்தும் போகமுடியாமல் போய்விட்ட வருத்தம் ஒரு பக்கம். நீண்ட நாட்களாக எதுவும் பதிவிடாதது ஒருபக்கம், முதல் பாராவை படித்து விட்டது ஒருபக்கம் என்று பல காரணங்கள். விளைவு உங்களுக்கு இந்த கட்டுரைத் தொல்லை.
மனிதன் தன்னைப்பற்றி அல்லது தான் அறிந்தது பற்றி வெளியே சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான், இல்லாது போனால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடக்கூடும். அதற்காகத்தான் அவனை சமூகச்சூழலில் வைத்திருக்கிறார்கள். காலையில் எழுந்து பல்தேய்க்க பிரஷ் கேட்பதில் தொடங்கி வழக்கமாக கைக்கு வரும் காப்பியை ரெடியா என்று கேட்டு. எவ்வளவு எழுப்பினாலும் எழும்பாத குழந்தையை அதே முறையில் மீண்டும் முயற்சி செய்து. அன்றைய பேப்பர் படித்து அடிக்கும் கமெண்ட் களை ரசிக்க நேரமில்லாத மனைவியிடம் அந்த காலை வேளையில் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் கூறிப்பார்த்து.

அல்லது காலையில் கரவைக்கு இழுத்து போகும் மாட்டிடம் தன் வீட்டு கதைகள் எல்லாம் சொல்லி, எல்லோரும் படுத்துகிறார்கள் நீயாவது சீக்கிரம் வந்து தோலையேன் என்று புலம்புவதும்.

பக்கத்து வீட்டு கதைகளை வேலைக்காரி சொல்லும்போது அது அநாகரீகம் என்று தெரிந்தாலும் நாம் கேட்டு நமக்குள் வைத்துக்கொள்ளப்போவதால் தப்பேதும் இல்லை என்று உற்சாகப்படுவதும். அதே கதையை அக்கறையாய் சொல்லக்கூடாத இடத்தில் சொல்லும்போது அக்கறையின் காரணமாக அறிவுரைதானே சொல்கிறோம் என்று நியாயப்படுத்திக்கொள்வதும். அதனால் பூகம்பம் வெடிக்கும் போது பிரச்சினைகள் வெளிவந்தால்தான் அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பதற்காக முயன்ற பெருமையை ஏற்றுக்கொள்வதும் அதுபோய் ஒரு ஸ்டவ் வெடிப்பில் முடிகிறபோது தர்மபிரபுவாய் மாறி அங்கேயே நீதி வழங்குவதும் கூட ஒருவகையில் முதல் பாராவைத்தான் நினைவு படுத்துகிறது.

மனித மனம் பேசத்தான் ஆசைப்படுகிறது. ஆனால் அங்கே பேசமுடியாத போத அது எழுத்தாய் வருகிறது. தூய தமிழில் இதை புரளி பேசுவது என்பார்கள். புரளி மட்டும் பேசாமல் இருந்தால் மனிதன் பைத்தியம் பிடித்தவனாகிவிடுவான். அவரவர் நிலைக்கேற்ப அந்த புரளி சுகமும், தன்மையும், சுவையும் கூடியதாக இருக்கிறது. ஆகையால் இப்படி புரளி பேசி பெரிய பிரச்சினைகளை கண்ட மனிதன் ஒரு முடிவுக்கு வந்தான்.

நிஜத்தில் நடக்கும் விஷயங்களை பேசினால்தானே பிரச்சினை வருகிறது. என் வீட்டு வாசலில் வந்து கண்ட கண்ட வார்த்தைகளில் திட்டுகிறாய். நானே ஒரு குடும்பத்தை அல்லது கூட்டத்தை கற்பனை செய்து கொண்டு அதைப்பற்றிய புரளியை பேசுவதென்ன பதிப்பித்து புத்தகமாகவே வெளியிடுவேன் என்று முடிவெடுத்த புரளி மன்னர்களால்தான் கதைகளும் நாவல்களும் வந்தனவோ என்னவோ.

இப்போது பெரிய எழுத்தாளர்கள் அல்லது புத்தகம் வாசிப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் நல்ல 100 புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று அறிவுரை சொல்வதை காணலாம். அவையெல்லாம் புரளிகளா என்றால் இல்லை. புரளிகளை தேடிப்போனவைகள் பயணக்கட்டுரைகளாகின்றன, நாகரீக பறிமாற்றங்களாகின்றன. அல்லது வரலாற்று புதினங்களாகின்றன. ராஜராஜன் அல்லது சுந்தரசோழர் வீட்டு குடும்பச்சண்டைதானே பொன்னியின் செல்வனாகியது. அதை எத்தனை சுவாரஸ்யத்துடன் படிக்க முடிந்தது. ஆனால் கற்பனை நாவல்கள் அத்தனை சுவாரஸ்யமாக படிக்க முடியாமல் போனதன் காரணம், பொன்னியின் செல்வன் நடந்த ஒரு குடும்பசண்டை. கற்பனை அல்ல என்பதால் கூடுதல் சுவாரஸ்யம்.

இது ஏதோ ஒரு சாதராண சம்பவமாக தோன்றினாலும் ஆழமாக யோசித்துப்பார்த்தால் இதில் உள்ள மனோ தத்துவம் புரியும் எல்லா கலைகளிலும் அடி ஆழம் ஒரு புரளிதான் என்று தோன்றுகிறது.