இன்றைக்கு பாராளுமன்றத்தை உலுக்கிகொண்டிருக்கும் அலைவரிசை ஊழல் பற்றி, ஒரு பதிவு போட்டாகவேண்டிய நிலையில் கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் இருக்கும் நிலையில், நானும் ஒரு பதிவு போட முடிவெடுத்தேன். காலதாமதமான பதிவுதான்.
2G அலைவரிசைகளை 3G அலைவரிசைகள் போல் ஏலம் போடாமல், முதலில் வந்து கேட்பவர்களுக்கு கொடுக்கலாம், என்ற 1999 வருட தொலைப்பேசி கொள்கையின்படி திரு.ராஜா அவர்களின் துறை விற்றுவிட்டது என்பதுதான் பிரச்சினை.
2G என்பது இரண்டாவது ஜெனரேஷன். 3G என்பது 3 வது ஜெனரேஷன்., அதனை எளிதாக எனக்கு புரிந்தமாதிரி சொல்கிறேன். சென்னையில் இருந்து மும்பை செல்ல மூன்று சாலைகள் இருப்பதாக கொள்வோம். அதில் முதல் சாலை 1G, இரண்டாம் சாலை 2G, மூன்றாம் சாலை 3G. முதல் சாலை சிரிய சாலை வேகமாகவும் போகமுடியாது எல்லா வகை வாகனங்களும் போகமுடியாது, இரண்டாவது சாலை கொஞ்சம் வேகமாக போகலாம், கூடவே இன்னும் கொஞ்சம் கனரக வாகனங்களும் போகலாம், மூன்றாவது சாலை மிகவும் அகலமானது எல்லாவகை, தற்போதைய வாகனங்களும் போகலாம். நிறைய வேகம் போகலாம், டிராபிக் ஜாம் போன்றவை ஏற்பட மிகவாய்ப்பு குறைவு.
இன்னும் கொஞ்சநாள் கழித்து 4Gயும் வரக்கூடும். இப்படி சாலைகள் இருப்பது போல் இது 2Gயும் 3Gயும் தொலைபேசி அலைகளின் அகலம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பிரிக்கிறார்கள், 2G என்பதில் உங்களின் தொலைபேசி தொடர்புகள் ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் அளவிலும்தான் செல்லும், அதுவே 3Gயில் இன்னும் கூடுதலான வேகத்திலும் MMs போன்ற செய்திகளை பரிமாறும்போது இன்னும் கூடுதலான வசதியோடு செல்வதால் டிராபிக் ஜாம், செய்தி இழப்பு போன்றவைகள் இல்லாமல் இருக்கும், வலைத்தொடர்புக்கு மிகவும் உதவிகரமானது.
2G அலைகள் ஒரு குறிப்பிட்ட MHZ வரைதான். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 3G அலைகள். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 4G. இப்படி போய்க்கொண்டே இருக்கும், அது போகட்டும் இதில் பிரச்சினை எங்கே உள்ளது என்று பார்க்கலாம்,
இப்போது 3G அலைவரிசைகளை இந்தியா முழுக்க உபயோகம் செய்ய, தொலைபேசி தொடர்புகளை கொடுக்க பல நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு, அவை ஏலத்தில் விடப்பட்டதில் ஏலத்தொகை கடுமையாக ஏறி நல்ல வருமானம் இந்திய அரசுக்கு, அதைப்பார்த்த மத்திய தணிக்கை குழு ( இந்தகுழு எல்லா அரசு அமைப்புகளையும் கண்காணித்து அவர்கள் லாபகரமாக செயல்படுகிறார்களா என்று பார்த்து சொல்லும் ஒரு கண்காணிப்பு அமைப்பு) 2G யையும் இதுபோல் ஏலம் விட்டிருந்தால் நல்ல காசுகிடைத்திருக்குமே, ஏன் அப்படி செய்யவில்லை, என்று கேட்டு, ஏலம் விட்டிருந்தால் கூடுதலாக 1,75000 கோடி (சுமாராக) கிடைத்திருக்கலாம், என்று ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறது.
புரியும்படி சொன்னால் தேசிய சாலைகளில் டோல்கேட் போட்டு நமது காருக்கு பணம் வசூலிக்கிறார்கள் இல்லையா, அது ஏலம் முறையில் விற்கப்பட்டு, எவர் அதிக ஏலம் எடுக்கிறாரோ அவருக்கு கொடுக்கப்படும், அந்த ஏலத்தொகையைப் பொருத்து அவர் ஒரு காருக்கு இத்தனை ரூபாய் என்று கேட்பார், ஆகவே ஏலத்தொகை அதிகமானால் கடைசியில் பாதிக்ப்போவது நாம்தான்.
அதுபோல் இந்த 3G அலைவரிசைகளை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஏலம் விட்டதில், அவர்கள் அதிகவிலை கொடுத்து எடுத்தார்கள், நல்ல விலை. ஆனால் இது சராசரி மனிதனின் தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்கும் அல்லவா, ஆகையால் 1999ல் ஏற்பட்ட தொலைபேசிக்கொள்கை குறைந்த விலைக்கு இதை ஒரு நிறுவனத்திற்கு விற்று, அவர்கள் குறைந்த விலையில் சாதாரணமக்களுக்கு இதை கொடுக்கவேண்டும், என்று உத்திரவாதம் பெற்று, சாதாரண மக்களுக்கும் தொலைபேசி கிடைக்கும் அதனால் ஏலம் விடவேண்டாம் என்று முடிவு செய்தது அரசு.
அந்த அடிப்படையில்தான் திரு, ராஜா அதை ஏலம் விடாமல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தவறு எங்கே இருக்கலாம் என்று பார்த்தால்.
1.1999 தொலைபேசிக்கொள்கையின் மற்ற சரத்துக்கள் பின்பற்றாமல் போனதில்.
2.குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மிகமிக அதிக விலையில் அதனை விற்று விட்டதால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்காமல் போகும்.
3.அறிவிக்கப்பட்ட விற்பனை கடைசி நாளுக்கு ஒருநாள் முன்பே விற்பனை முடிந்து விட்டதாக அறிவித்துவிட்டது.
4.தகுதியான நிறுவனங்களுக்குதான் அவைகள் விற்கப்பட்டனவா.
இந்த விவகாரத்தை யாரோ பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட் கொண்டுபோக பிரச்சினை பெரிதாகி இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.
இதன் விளைவுகள் தமிழக அரசியலில் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.
1. இதைப்பயன்படுத்தி காங்கிரஸ் வரும் சட்டசபைத்தேர்தலில் கூடுதல் இடம் தமிழக தேர்தலில் திமுகவிடம் பேரம் பேசலாம்.
2. அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு கையிலெடுக்கும், அல்லது காங்கிரஸை தனது கூட்டணிக்குள் கொண்டுவர முயலும்.
3. பிஜேபியும் மற்ற எதிர்கட்டசிகளும் தங்கள் கட்சியின் செயல்பாடுகளை இன்னும் கொஞ்ச நாளைக்கு உற்சாகமாக்க உதவும்.
4. பத்திரிக்கைகளுக்கு சில மாதங்களுக்கு வருமானம் கூடும்.
5. நம்மூர் டீ கடை விவாதக்காரர்களுக்கு இன்னும் ஒரு விஷயம் விவாதிப்பதற்கு
6. பார்லிமெண்ட் செயல்பாடுகள் சிறிதுநாளைக்கு முடங்கும்.
7. அடுத்த விவகாரம் வரும் வரை இந்திய குடிமகன் நினைவுகளில் இருக்கும்.
அவ்வளவுதான். மற்றபடி பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை.
தவநெறிச்செல்வன்.