மகாத்மாவுக்கு தேசத்தந்தை பட்டம் கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இதைக்கேட்டவுடன் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இனி காங்கிரஸ் கட்சி நாட்டுக்கே தேவை இல்லை என்பதுதான்.
எனக்கு தெரிந்து பாரத ரத்னா, பத்ம பூஷன் போல தேசத்தந்தை பட்டம் ஒன்றும் அரசு கையிருப்பில் இல்லை என்பதால் கொடுக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள், கையிருப்பில் இருந்தால் இந்த வருடம் மகாத்மாவுக்கு கொடுத்த தேசதந்தை பட்டத்தை அடுத்த வருடம் எனக்கு கொடுங்கள் என்று பலரும் வரிசையில் நிற்க தொடங்குவார்கள், ஆகையால் இந்த முடிவு ஒரு வகையில் சரியென்றே பட்டாலும், அதை வெளிப்படுத்திய விதம் கொடுமையாக உள்ளது, சட்டத்தால் அங்கீகரிக்க முடியாத ஒரு பட்டத்தை ஏன் இத்தனை நாள் பாட புத்தகங்களிலும், சுதந்திர தின, குடியரசுதின பேச்சுக்களில் எல்லாம் இந்திய தலைவர்கள் உபயோகப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.இந்தியாவின் தேசத்தந்தை யார் என்று கேள்வி கேட்டு அதற்கு மகாத்மா காந்தி என்று பதில் எழுதி, மார்க்கும் கொடுத்த ஆசிரியர்களின் நிலை என்ன, இனி கொஞ்சநாளைக்கு மக்களுக்கு இந்த விஷயம் விவாதத்தில் இருந்தாலும் இருக்கும், மற்றதெல்லாம் மறக்கலாம்,
இனிமேல் அப்படி அரசால் அங்கீகரிக்கப்படாத பட்டங்கள் எல்லாம் என்ன ஆகும், அவைகள் வரலாறுகளில் இருந்து நீக்கப்படுமா?
நேதாஜியால் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டு அது பிரதமர் முதல் சாதாரண மனிதன் வரை எல்லோராலும் தொடரப்பட்டு வந்த இந்த பட்டம் இல்லாததால் மகாத்மாவுக்கு ஒன்றும் குறையில்லை, அந்த பட்டம் இத்தோடு நின்றுபோகப்போவதும் இல்லை,
மக்களால் போற்றிப்புகழப்படும் மகாத்மாவை தேசதந்தையாக பெற்றதற்காக இந்தியா பெருமைப்படுகிறது, அப்படிப்பட்ட மிக உயர்வான உணர்வை எல்லாம் சட்டம் என்கிற குறுகிய வட்டத்தில் சுருக்கத்தேவை இல்லை, அந்தப்பட்டம் அவருக்கு மட்டுமே உரியது என்றும் நமக்கு பெருமையான விஷயம் என்று சொல்லி அரசு விலகிக்கொண்டிருந்தால் இந்த குழப்பங்கள் எழப்போவதில்லை, அதைவிட்டு விட்டு சட்டத்தில் இடமில்லை அது இல்லை இது இல்லை என்றெல்லாம் கூறி மத்திய அரசு தன்னை கீழ்மைப்படுத்திக்கொண்டதாகத்தான் நான் நினைக்கிறேன்.
மகாத்மாவின் வாழ்வியலை, அவரின் தியாகங்களை அவரின் உழைப்பை, அவரின் சத்தியத்தை உணராத இன்றைய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மைதான் இதெல்லாம், இதெல்லாம் தெரிந்துதான் அன்றே மகாத்மா சொன்னார், கலைத்துவிட்டுப்போங்கள் இந்த காங்கிரஸை என்று, கடைசியாக மக்கள் இப்போது அதனை உணர்ந்து கொண்டார்கள் என்றுதான் தோன்றுகிறது, அடுத்த தேர்தலில் அதைச்செய்வார்கள் என்றே நினைக்கிறேன்,
தவநெறிச்செல்வன்.