Sep 13, 2012

காப்பி அடிக்கும் கலைஞன்

நான் கலைஞான முடிவதேயில்லை


எப்படி எழுதினாலும் சுவையாயில்லை

எப்படி இசைத்தாலும் சுகமாயில்லை

எப்படி நடித்தாலும் இதமாயில்லை

ஆனாலும்

நான் முயற்சித்துகொண்டே இருக்கிறேன்

உனக்காக ஒரு காதல் கடிதமும்

உன் சிரிப்புக்காக ஒரு சிம்பொனியும்

உன் கண்களுக்காக ஒரு கலைப்படமும்

ஆனால்

எடுத்து முடித்த பின்

எனக்குப்புரிந்தது

கலைஞர்கள்

உருவாவதில்லை

பிறக்கிறார்கள்  என்று.

அணு அரசியல்

அணுவை பிளக்க அறிந்தோம்


அதை ஆக்கத்திற்கென்றே உரைத்தோம்

ஆனாலும்

பொக்கரான்களில் புழுதிகளுக்கிடையே

போர்த்தி வைத்தோம்.

ஆக்கத்திற்கென்று கூறீனீர்களே? என்றார்கள்

ஆமாம்

அதற்காகத்தான் அதற்கு

“அமைதி அணுகுண்டு”

என்று பெயரிட்டோம் என்றோம்.

உலகமெல்லாம்

அணுவைக்கண்டு அலறுகிறபோதும்

நாங்கள் அதை

கூடங்குளத்தில் கொண்டுவந்தோம்

2020ம் ஆண்டில்

உலக வல்லரசாய் உயர்வதற்கு

உதவும் திட்டம் என்றோம்

அன்று கேரளம்

இந்தியா 2020ல் வல்லரசாய் மாறுவதை விரும்பவில்லை

தானைத் தமிழகம்

தலைகுனிந்து வல்லரசு பட்டத்தை

வாரி வழங்க முன் வந்தது.

ஆனாலும்

ஒன்றும் அறியா மக்கள்

வேண்டாம் வீபரீதம் என்றார்கள்

எங்களின் சவக்குழியில் விளக்குகள்

எதற்கென்றார்கள்.

நாங்கள் நிபுணர்களை நாடினோம்

ஒரே நாளில் உற்பத்திக்கான

ஓப்புதலை வழங்கினார்கள்

என்னே எளிமை

பின்னே ஏன் போராட்டம் என்றோம்?

20 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்

அழிக்க முடியாதது அணுக்கதிர் வீச்சு

என்றார்கள்,

கதீர் வீச்சை கண்ணிலே காட்டமாட்டோம் என்றோம்

கழிவுகள் கடலில் கரைந்தால்

கடல் வளம் காணாமல் போகுமே என்றார்கள்

இருக்கும் அணு உலைகளில்

ஏற்பட்ட விபத்தை எல்லாம் பட்டியலிட்டார்கள்.

கவலைப்படாதீர்கள் காப்பாற்றுகிறோம் என்றோம்

எப்படி காப்பாற்றுவீர்கள் என்றார்கள்

இன்னும் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்றோம்

போபாலில் போனவர்களை

காப்பாற்றிய கதை தெரியாதா என்றார்கள்

மீடியாக்களின் மீது கோபம் வந்தது,

செய்திகளை வெளியிடுவதில் தர்மம் வேண்டும் என்றோம்.

எல்லா செய்திகளையும்

இப்படி வெளியிட்டால்

எப்படி வளர்ச்சி திட்டங்களால் எங்களை வளர்த்துக்கொள்வது என்றோம்

ஆயிரங்களில் தொடங்கி

கோடிகளைத்தாண்டி

லட்சம் கோடிகளையும்

கோடி கோடிகளை தாண்டி விட்டோம், இதுவா பிரமாதம்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று

எங்களுக்கு நன்றாக தெரியும்

எதிர்பாருங்கள்

இதுவும் தாண்டிப்போகும் ஒருநாள்.

-------------------------------------------------------------------------தவநெறிச்செல்வன்

Sep 11, 2012

ஏதோ எழுதுகிறேன்

நீண்டநாளாகிவிட்டது பதிவு புதியது எழுதி, முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் face book எனது நேரத்தை பிடித்துக்கொண்டது மற்றும் கூடவே பிறந்த சோம்பேறித்தனம் என்று சொல்லலாம், இப்படி பல காரணங்கள். நீண்ட நாளுக்கு பிறகு நடக்க முடியுமோ என்று பயந்து பயந்து தள்ளிப்போட்ட அண்ணாமலையாரின் கிரிவலம் இரண்டு முறை செய்து முடித்தேன், நம்ம ஊர் சாமிதானே என்கிற அலட்சியம் மற்றும் 14 கிமீட்டர் நடக்க முடியுமா என்கிறதான பயம் இப்படி பல காரணங்கள். மலையை சுற்றும்போது செருப்பு போடாமல் சுற்ற வேண்டும் என்று கூறினாலும் நான் செருப்பு போட்டுக்கொண்டுதான் சுற்றி வந்தேன். மெல்ல நடந்து ஒரு 6 மணிநேரத்தில் சுற்றிவந்தேன், வரும் வழியில் கிடைக்கும் உணவு பதார்த்தங்கள் மற்றும் குளிர்பானங்கள் என சாப்பிட்டுக்கொண்டே ஒரு சுற்றுலா போலத்தான் வந்தேன் என்றாலும் கோவிலைத்தாண்டியபிறகு நடப்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. என்றாலும் மெல்ல நடந்து வந்து சேர்ந்தேன்.


நடப்பதில் பல நன்மைகள் இருப்பது உண்மை, மாதிரிமங்கலம் ஸ்ரீ ரோட்டு சாமிகள், மனசு கவலையா இருந்தா உலாத்துங்கோ சரியாயிடும் என்று பலமுறை சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதுபோல் பல சித்புருஷர்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் குருமூர்த்து சாமிகள் வீட்டிற்கு வந்திருந்தார்கள், அவர்களின் அருகாமை பல அற்புதங்களை விளக்கியது, முதல்நாள் திருகழுக்குன்றத்தில் இருந்து வந்த அடியார் தலமையில் நடந்த திருவாசக முற்றோதல் விழா திருவண்ணாமலையில் நடந்தது. திருவாசகத்தை இப்படியும் படிக்கலாம் ஒரு கொண்டாட்டத்தோடு என்பது எனக்கு புதிதாக இருந்தது. ஒரு புளகாங்கிதமான பரவசநிலையில்தான் முழுமையாக இந்த விழா நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டு பாடல்களை பாடி மகிழ்ந்தேன்.

ஸ்ரீகுருமூர்த்தி சாமிகள் வந்திருந்து எனக்கு திரு அருட்பாவினை விளக்கி பல விஷயங்களை எடுத்து கூறினார், மகான்களில் வகைப்படுத்தல்களில் எங்குமே அடங்காத ஒரு அற்புத வடிவம் வள்ளல் பெருமானார், மகாத்மா காங்தி அடிகள் எப்படி வாழ்முறை சோதனைகள் ஓவ்வொன்றையும் செய்துபார்த்து உலக்கு விளக்கினாரோ அதுபோல் வள்ளல் பெருமான் ஞான வழி சோதனைகள் பலவற்றையும் தானே செய்துபார்த்து அதனை அனுபவித்து நமக்காக விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரியும் அத்தனை தெளிவு, நான் சொல்கிறேன், பொய்யில்லை, நம்பு மானிடா என்பதை மிகத்தெளிவாக கூறுகிறார், இத்தனை அற்புதமான ஒரு வள்ளலை நாம் எப்படி தொடராமல் போனோம் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. எம்ஜியாரையும், கருணாநிதியையும், சாதாரண சொற்ப அதிகாரங்களுக்காக தொடரும் இத்தனைக்கோடி கூட்டம், அற்புதங்கள் பல செய்யும் வாய்ப்புகள் உள்ள சன்மார்க்க நெறியை ஏன் தொடரவில்லை, வள்ளலாருக்கு பின் ஒருவர் கூட அவர் நிலையை அடைந்தவர் இல்லையா? அல்லது வெளியில் தெரியவில்லையா? என்று தெரியவில்லை.

இப்பொது அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கிய தொழிற்ச்சாலையில் இருந்து இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன், இது செனக்டடி என்ற ஊரில் நியுயார்க் மாகானத்தில் இருக்கிறது. GE நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி நிலையம், மிக பிரமாண்டமான தொழிலகம், ஆச்சர்யமான பணிகள், பயிற்சிக்காக இங்கே இரண்டு வாரம் தங்கி இருக்கிறேன்.

**********

மொட்டையன் சாமிகள், மூக்குப்போடி சாமிகள், முருகானந்தம் சாமிகள், கோணிப்பை சாமிகள், என்று பலவாறு அழைக்கப்படும் மகான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர். திருவண்ணாமலையில். சிலகாலங்களுக்கு முன் எல்லோராலும் அனுகக்கூடியவராக இருந்தார், இப்போது கடும் தனிமைதேடி யாரையும் அருகில் அனுமதிப்பதை தவிர்க்கும் வண்ணம் மிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோல் நடித்து, அருகில் போனால் விரட்டும் விதமும் நம்மை குலை நடுக்க வைக்கும் பயமுறுத்தலும் கொண்ட மகானாய் இருந்து வருகிறார். பலருக்கு அவரைத்தெரிந்திருக்கலாம், அவரால் பல நன்மைகள் பெற்றவர்கள் திருவண்ணாமலையில் எங்கும் உள்ளார்கள். எப்போதாவது அப்பிரதட்சனமாய் அண்ணாமலையை சுற்றி வருவார், காரிலோ, ஆட்டொவிலோ, அல்லது இரண்டு சக்கர வாகனத்திலோ, அப்படி அழைத்துப்போகிறவருக்கு அன்று அதிர்ஷ்டம்தான்.

அடுத்து சின்ன குஞ்சு என்று அழைக்கப்படும் மகான், இவர் வாழ்ந்து வருவது பூந்தோட்டம் என்கிற கிராமம், மயிலாடுதுறை திருவாரூர் செல்லும் வழியில், புகழ்பெற்ற சரஸ்வதிதேவி ஆலையம் உள்ள கூத்தனுரூம் இங்குதான் உள்ளது. முக்கிய சாலையின் பக்கத்திலேயே இந்த பெண் மகானின் தங்குமிடம், மகா நிர்வாணகோலத்தில் இருக்கும் இவர் நன்கு நம்மிடம் சாதாரணமாக பேசும் நிலையில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவரை ஊர்மக்கள் கல் போன்றவற்றால் அடித்து துன்புறுத்தினாலும், பின்னர் திருவண்ணாமலையில் இருந்து சென்ற சேதுராமன் அவர்கள் அவரிடம் வணங்குவதும் அவருக்கு பணிவிடைகள் செய்வதும் கண்டு ஊர்மக்கள் மெல்ல புரிந்து கொண்டு இப்போது குடில் அமைத்து தந்திருக்கிறார்கள்.

அடுத்து பெயர் தெரியாத இன்னொரு மகான் ஆத்தா என்று என்னாலும் என் குடும்த்தினராலும் அழைக்கப்படும் பெண் மகான், இவர் இப்போது திருவண்ணாமலையில் இருக்கிறார். தினம் அண்ணாமலை சுற்றி வருவதும், தனது இரண்டு மூக்கிலும் காகிதத்தை வைத்து அடைத்துக்கொண்டு 24 மணிநேரமும் காணப்படுவதும் ஆச்சர்யமான ஒன்று. பல மொழிகளை பேசுவதால் பூர்வீகம் எதுவெனத்தெரியவில்லை, ஆந்திராவக இருக்கும் என்ற ஊகம் உண்டு பெயர் தெரியவில்லை.

இன்னும் பல மகான்களைப்பற்றி தொடர்ந்து எழுதவேண்டும். இதை எல்லாம் எழுதும் படி என்னை வற்புறுத்தியது எனது மனைவிதான்.

இது ஒரு ஆன்மிக பதிவுபோன்று ஆகிவிட்டது. என்றாலும் வாழ்வின் திசையில் நாம் எங்கு அடித்துச்செல்லப்படுகிறோம் என்று தெரியாமல், உறவுகள் சொந்தங்கள் இப்படி பலவற்றில் உழன்று வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று தேடிக்கொண்டே இருந்தாலும், அது நமது பக்கத்தில் இருப்பதை நாம் உணர்வதே இல்லை. இது போன்ற காலாவதியான தத்துவங்களை எழுதிக்கொண்டே இருப்பது என்னைப்போன்றவர்களுக்கு வாடிக்கையாகபோய்விட்டது என்றுதான் அவைகளை நான் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று தோன்றுகிறது. ஆனாலும், வீட்டில் பிரச்சினைகள் எல்லோருக்கும் பின்னாடி வந்து கொண்டேதான் இருக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மனசிக்கல்களை என்னதான் செய்து தொலைத்தாலும் தாண்டி வரமுடியவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கு இருக்கும். எல்லாவற்றின் மூலமும் எளிமையும் தொண்டும்தான். அவைகளில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதில் இருக்கும் சுகம் வேறில் இல்லை. எல்லா பந்தங்களையும் நேசிப்பதிலும் அதை இழுத்துக்கொண்டு ஓடுவதிலும் பல சிரமங்கள் இருந்தாலும், அது நமக்கு வேண்டியவர்களுக்கு செய்கிறோம் என்று எண்ணாமல் நமது கடமையை செய்கிறோம் என்று எண்ணும்போது ஒரு திருப்தி வரும்,

ஆமாம் ஒரு ஏழைக்கு உதவும்போது நமது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதே அதே மகிழ்ச்சி நமது தாய் தந்தைக்கோ அல்லது உடன்பிறந்தோருக்கோ அல்லது உறவினருக்கோ செய்யும்போது உடனடியாக அதைச்சுட்டிக்காண்பிக்க ஏன் தோன்றுகிறது, அல்லது அவனுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அங்கே நீங்கள் வள்ளலாய் இல்லாமல் ஒரு வேலைக்காரனாய் மாறிப்போவதால்தான், அங்கேயும் ஒரு வள்ளல் தன்மையோடு நான் ஒரு மனிதனுக்கு உதவினேன், ஒரு உயிரின் மகிழ்ச்சிக்கு உதவினேன் என்று நினைத்துப்பாருங்கள் உங்கள் மனம் சொல்லொன்னாத பேரின்ப நிலையை அடைவதை காணலாம், ஆகையால் உங்கள் நிழலைத்தவிர மற்றதெல்லாவற்றுக்கும் நீங்கள் வள்ளல் பெருமான் தான். முடிந்தது கொடுக்கும்போது அந்த ஜீவன் மகிழும், அது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மேன்மைப்படுத்தும், சரியாக சொல்லிவிட்டேனா தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.

தவநெறிச்செல்வன்.