May 4, 2012

நான் படித்த புத்தகம்- மொகலாய பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

மூலம்: வின்செண்ட் A.ஸ்மித், தமிழில்: சிவ.முருகேசன்.


விலை:300.00, வெளியீடு : சந்தியா பதிப்பகம்- சென்னை- 044 24896979.



பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த பெர்னியர் மொகலாய சாம்ராஜ்ய காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து எழுதப்பட்ட ஒரு பயணநூல், மிகவும் ஆழமான குறிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது, ஜாஹாங்கீர், ஷஜஹான், ஒளரங்கசீப் ஆகிய மன்னர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்ற இவர் தான் கண்டவற்றைப்பற்றி மிக அழகாக அந்த கால இந்தியாவினைப்பற்றிய குறிப்புகளாய் எழுதியுள்ளார், படிக்க சுவாரஸ்யத்துடன் பல சம்பவங்கள் உள்ளன, ஒளரங்கசீப் ஆட்சியில் அமர்ந்தபோது ஏற்பட்ட சகோதரசண்டையை அருகில் இருந்து விவரித்துள்ளார், மிகவும் கொடூரமான சகோதர யுத்தம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது,



தாரா ஷூகோ (ஷஜகானின் முதல் மகன்) எவ்வளவு துன்பங்களை அனுபவித்து கடைசியில் பலியாகிற சம்பவங்கள் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. தர்பாரில் நடக்கும் விசாரனை முறைகள், அந்தபுற மாதர் நிலை, அலிகளின் பங்கு, கோட்டை காவல் முறைகள், உள்ளுக்குள் நடந்த விதிமுறை மீறல்கள், அரசர்களின் ஊர்வலங்கள், அவர்களின் பொழுதுபோக்குகள், என்று மிக விரிவான விளக்கங்களுடன் மிக சுவாரஸ்யமாக செல்கிறது நூல்.


1656-1668 வரையிலான டெல்லியையும் ஆக்ராவையும் மிக அற்புதமாக ஓப்பிட்டு அதன் நகர அமைப்பும், வீடுகள் ஏன் மெற்கத்திய நாடுகள் போல் அமைக்கப்படவில்லை, காலநிலையின் பாதிப்பு எப்படி கட்டட கலையோடு இணைந்து செயல்படுகிறது என்று விளக்கமாக கூறியுள்ளார். வந்தார்கள் வென்றார்கள் மதன் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சில மாறி இருக்கின்றன. உதாராணம் தாரா ஷூகோ வின் இறுதி ஊர்வலம். ஷஜஹானுக்கும் அவர் மகள் பேகம் சாஹேப் ஆகியோரின் வாழ்நிலை.


ஒளரங்கசீப் தனது ஆட்சிமுறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், அவரின் கீழ் இருந்த பிரபுக்கள்(ஒமர்) மற்றும் அதன் கீழ் நிலை அதிகாரிகள், அவர்கள் வீட்டு பெண்கள், மன்னரின் வருமானம், பிரபுக்கள், முதல் சிப்பாய்கள் வரையிலான சம்பளம் நிலவரம், மக்களின் பொருளாதார நிலை, விவசாயிகள் எப்படி நடத்தப்பட்டார்கள், மதம் எத்தனை பங்கு வகித்தது.


நிலங்கள் மன்னரைத்தவிர யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் எப்படி உற்பத்தி முன்னேற்றம் அடையாமல் போகிறது போன்ற வற்றை மேற்கத்திய நிர்வாகத்துடன் ஓப்பிட்டு எழுதியுள்ளார்.


நூலின் தொடக்கத்தில் உள்ள அறிமுகங்கள் கொஞ்சம் போரடித்தாலும் முக்கிய நூலுக்குள் நுழைந்ததும் வேகம் எடுக்கிறது. தமிழ் படுத்திய சிவ முருகேசன் மிக போரடிக்காமல் அழகாக வேகமாக படிக்கும் வண்ணம் எளிய தமிழில் அழகாக எழுதியுள்ளார். பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள உதவிய நூல். அவசியம் படிக்கலாம்.

தவநெறிச்செல்வன்.