Dec 25, 2011

அமெரிக்க பயணம்-2

இந்த முறை இரண்டுவார பயணமாக அமெரிக்க செல்ல வாய்ப்பு கிடைத்தது, போனமுறைக்கும் இந்த முறைக்கும் நிறைய வேறுபாடுகள், அப்போது கொஞ்சம் கோடைகாலமாக இருந்தது. இப்போது நல்ல குளிர்கால தொடக்கம் நல்ல வேளையாக பனிப்பொழிவு ஆரம்பிக்கவில்லை, ஒருநாள் மட்டும் மழை அப்படியே பனியாக கொட்டியது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் இருந்தது.
இந்தமுறை முதலில் சென்றது பென்சில்வேனியா மாகாணதில் உள்ள பிட்ஸ்பர்க் நகரம், இது ஜார்ஜ் வாஷிங்டன் முதலில் அமெரிக்க சுதந்திரபோருக்காக முழங்கிய இடம். அவர் ஒரு பண்ணையாரக இருந்து சந்தர்ப்பவசத்தால் தளபதி ஆக்கப்பட்டவர். முழுவிவரம் வேண்டுமானால் பா.ராகவனின் “டாலர் தேசம்” படித்தால் புரியும்.



பிட்ஸ்பர்க் ஒரு மலைநகரம் என்று சொல்லலாம் சமதரையாக பார்க்கவே முடியவில்லை, எங்கும் மெலும் கீழுமாக வீடுகள் கட்டிடங்கள் என்று அற்புதமாக இருக்கிறது.பிர்மாண்டமான கட்டுமானங்கள் பள்ளத்தாக்குகளும் அவைகளை இணைக்க பெரும் பாலங்கள் என்று பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்தனை சாதனைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நில அமைப்பில் பிட்ஸ்பர்க் ஒரு அற்புத நகரம்தான்.

நமது இந்தியர்கள் ஒரு அழகான வெங்கிடேஸ்வரா கோவிலை அங்கே கட்டி இருக்கிறார்கள். நான் போனது சுமார் ஒரு டிகிரி குளிர். உள்ளே வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு சீராக வைத்திருக்கிறார்கள், பகல் 12 மணிக்கு சுமார் 50 பேர் அமர்ந்து பெருமாளுக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வழிபாட்டுக்கு வருகிறார்கள். தமிழ் தெலுங்கு பட்டாச்சார்யார்கள் காலில் சாக்ஸ் மாட்டிக்கொண்டு பெருமாளையும், தாயாரையும் அன்போடு ஆராதனை செய்வதை பார்க்க முடிந்தது. பெருமாள் மிக அழகாக இருக்கிறார் எப்போதும் போலவே. கோவில் கொஞ்சம் மலைமேல்தான் அமைந்துள்ளது. நல்ல மடப்பள்ளி ஒன்றும் உள்ளது. புளிசாதம், தயிர்சாதம், உப்புமா போன்ற பல உணவு பதார்த்தங்கள் விலைக்கு கிடைக்கிறது. நல்ல சுவையோடு.




குளிர்காலம் என்பதால் மரங்கள் மிகசோகமாக இலைகளை தொலைத்துவிட்டு எங்கும் ஒரு வெறுமை படர்ந்திருந்தது காண கஷ்டமாக இருந்து, குளிர் என்றால் சரியான குளிர். அதிகநேரம் சரியான காப்பு உடைகள் இல்லாமல் வெளியே நின்றால் அவ்வளவுதான். நான் சுமாரான உடைகளுடன் சென்று மிகவும் சிரமப்பட்டேன். என்றாலும் பின்னர் சில தேவையான உடைகளை வாங்கிக்கொண்டேன்.



இரண்டாம்நாள் வேலை செய்யும் இடத்தில் இருக்கும்போது மழைத்தூறல் தொடங்கியது அது ஒரு பனிப்பொழிவு, வெப்பநிலை மிககுறைவாக இருப்பதால் விழும் மழை அப்படியே பனியாக பொழிகிறது. வெளியே வந்தால் கார் எல்லாம் மெல்லிய பனி மூடிக்கிடக்கிறது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் அடித்ததால் மழை இல்லை, ஆகையால பனி பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் குளிர் 1 டிகிரி அளவில் இருக்கத்தான் செய்தது.
இரண்டு வாரம் அங்கிருந்துவிட்டு எதுவும் பார்க்க முடியவில்லை, காரணம் குளிர், பின்னர் வேலை சரியாக இருந்தது.