Jun 30, 2011

மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை

மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை, பேஸ்புக்கில் வந்திருக்கிறது எனது நண்பர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறேன், சாரு பதில் சொல்வாரா தெரியவில்லை, ஆனால் மனுஷ்யபுத்திரன் மிக உயர்வாக தெரிகிறார்.



சமீபத்தில் சண்டே இந்தியன் இதழில் வெளிவந்துள்ள பேட்டியில் சாரு நிவேதிதா கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கனிமொழி அழைக்கபட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க பதிப்பாளரின் விருப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தன்னலம் இல்லாதவர் என்று ஜெயலலிதாவையே அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு தமிழ் எழுத்தாளர் கருணாநிதியை ’கடவுள்’ என்று அழைத்து பெரும் புகழ் பெற்றார். அவருக்கான பரிசு கடந்த தேர்தலில் அவருக்குக் கிடைத்தது. சீசருக்கு உரியது சீசருக்குக் கிடைக்கும்.



இந்தக் கருத்தின் மூலம் என்னை தி.மு.க காரனாகவும் அவரை அ.தி.மு.க காரராகவும் நிறுவுவதற்கு சாரு விரும்புகிறார். என்னுடைய நட்பை இழப்பதன் வாயிலாக அவர் அதன் நஷ்டத்தை எப்படி உடனடியாக சந்திக்கிறார் பாருங்கள். அவரை இவ்வளவு பலவீனமாக கருத்துச்சொல்ல நான் அனுமதித்ததே இல்லை. இப்படி சொன்னால் ஜெயலலிதா என்னை உடனே ஜெயில் தூக்கிப் போட்டுவிடுவார் என்று யோசிக்கிறார். இவ்வளவு எளிமையாக சாருவைத் தவிர யாரும் யோசிக்க முடியாது. தமிழ் எழுத்தாளர்களைவிட ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ ஜனநாயக பண்புகள் கொண்டவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயமோகன் கருணாநிதியின் மீது செய்த விமர்சனங்களுக்காக கருணாநிதி அவரை ஒரு ட்ரான்ஸ்பருக்கு கூட முயற்சி செய்யவில்லை. முரசொலியில் கவிதை எழுதினார். ’அரசி’ கவிதை எழுதியதற்காக ஜெயலலிதா என்மேல் என்ன கஞ்சா கேஸா போட்டார்?



ஆனால் ஜெயலலிதாவை தன்னலம் அற்றவர் என எழுதுவது சுயமுன்னேற்றதிற்கான ஒரு செயல். ரவிபெர்னாட் இந்த வேலையை பத்து வருடமாக செய்ததன் விளைவாக இன்று அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்திருக்கிறது. சாருவுக்கு உரியது சாருவுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜெயலலிதா தன்னலமற்றவராக இருக்கவேண்டும் என்றுதான் நானும் உளமாற விரும்புகிறேன். அப்படி இருந்தால் அடுத்த தேர்தலில் நான் அவருக்கு வாக்களிப்பேன். ஆகவே சாரு அ.தி.மு.கவிலோ பஜ்ரங்தள் ளிலோ இருப்பது அவரது தேர்வு. நாம் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனது நிர்ப்பந்தத்தினாலேயே கனிமொழி அழைக்கப்பட்டார் என்று அவர் சொல்வது தொடர்பாக ஒரு சிறு விளக்கம்.



கடந்த ஆண்டு டிசம்பர் 13 புத்தக வெளியீட்டு விழாவில் சாரு தான் கனிமொழியை அழைத்தது தொடர்பாக கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.



’’கனிமொழிக்கு நன்றி சொல்லணும். அவங்க கிளம்பிப் போயிட்டதால என் நன்றியை வீடியோவில பார்த்துப்பாங்கிறதால விளக்கமா சொல்லிடுறேன். அவங்க ஹிந்துலே வேலை பார்த்துட்டு இருந்தப்போ அடிக்கடி அவங்கள ஃப்லிம் சேம்பரில பார்ப்பேன். அவங்க கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர் என்பதால தயக்கத்தோடு போய் ஹலோ சொன்னேன். அவங்களும் ரொம்ப எளிமையா ஹலோ சொன்னாங்க. என் ரைட்டிங் படிச்சிருக்கீங்களான்னு கேட்டன். இல்லை. கேள்விப்பட்டிருக்கேன்னாங்க. உடனே அவங்களுக்கு என்னோட முதல் நாவலை அனுப்புறதா சொன்னேன். 15 நாள் கழித்து பார்த்தப்ப புக் கிடைக்கலைன்னாங்க. நான் அனுப்பினாத்தானே கிடைக்கும். நேரிலேயே கொடுத்தேன். ஒரு கூட்டத்தில கனிமொழி சொன்னாங்க, சாரு என்னை adopt பண்ணிக்கிட்டாருன்னு. நிறைய சண்டை போட்ருக்கோம். நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். கனிமொழி ரொம்ப down to earth. அவங்க normal politician கிடையாது. இவங்க punch ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை சுப்ரமணியசுவாமி எதிர்ல வந்தப்பா ஹலோ சொல்லியிருக்காங்க. உடனே அவர் உங்க அப்பா கோவிச்சுக்கப் போறார்னு சொல்லியிருக்கார். அதுக்கு கனிமொழி, எங்க அப்பா கோவிச்சுக்க மாட்டார். உங்க அம்மா கோவிச்சுக்காம இருக்கணும் சொல்லியிருக்காங்க. அம்மான்னு சொன்னது ஜெயலலிதாவ.

இந்த கூட்டத்துக்கு நான் கனிமொழிய கூப்டத்துக்கு ஏகப்பட்ட விமர்சனம். சாரு தி.மு.க.ல சேரப் போறான், அதிகாரத்தின் பக்கம் போறான்னு. அதெல்லாம் கிடையாது, கனிமொழி ஒரு ஃப்ரெண்ட். கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்க வீட்டு உறுப்பினர்கள் மாதிரி. கனிமொழிய பற்றி ஒரு நாவலே எழுதலாம். ஒரு முறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நான் ஒரு சினிமா தலைப்பை பட்டபெயராகக் கொடுத்தேன். அப்போது நான் கனிமொழிக்குக் கொடுத்த பெயர் ‘அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது’இந்த மாதிரி நிறைய எபிஸோட்ஸ்.’’





இந்த இடத்தில் சாரு இன்று ’தன்னை அழிக்க, ஒடுக்க முயலும் ’ ஒரு ஒரு நிறுவனம் பற்றி ஆறு மாதத்திற்கு முன்பு குறிப்பிடும் கருத்துக்களையும் சேர்த்துப் படியுங்கள்.


’’உயிர்மைதான் என்னை வளர்த்தது என்று சொல்வேன்..ஒவ்வொரு ப்ரஸ்ஸாக என்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது காலச்சுவடிலிருந்து மனுஷ்ய புத்திரன் வெளியே வந்து உயிர்மை ஆரம்பித்ததன் மூலம் எனக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது. உயிர்மை இல்லையென்றால் நான் இல்லை. உயிர்மை என்னை வளர்த்தது. நான் இல்லையென்றால் எஸ்.ராமகிருஷ்ணனோ வேறு ஏதோ ஒரு ராமகிருஷ்ணனோ எழுதியிருப்பார்கள். உயிர்மையில் நான் ஒரு கடைநிலை ஊழியன் மாதிரி. உயிர்மையில் எனக்கு ஃபோரம் கிடைத்தது. ஸ்பேஸ் கிடைத்தது. உயிர்மைக்கு நான் என்றைக்கும் நன்றியுடையவனா இருப்பேன். நல்லி செட்டியார் மாதிரி உயிர்மை ஒரு பெரும் passion னோடு இலக்கியத்திற்கு சேவை செய்துகொண்டு இருக்கிறது.’’





உணர்ச்சி பாவங்களோடு இந்தக் கருத்துக்களை பார்க்க விரும்புகிறவர்கள் இந்த வீடியோ இணைப்பிற்குச் செல்லலாம்

http://www.dailymotion.com/video/xhen2c_charu-2010-charu-speechvideo_creation



உயிர்மையின் அனைத்து நூல் வெளியீட்டுக் கூட்டங்களிலும் அதன் பேச்சாளர்கள் சமபந்தப்பட்ட நூலாசிரியர்களின் விருப்பப்படியே இதுவரை தேர்வு செய்யப்பட்டிருகிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு அழைக்கும் பொறுப்பைக்கூட அவர்கள்தான் செய்திருகிறார்கள். உயிர்மை கூட்டங்களில் கமல்ஹாசன், மணிரத்தினம், வைகோ, ஸ்டாலின், சீமான், திருமாவளவன், வைரமுத்து என்று ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத எத்தனையோ பேர் வந்து பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் அந்தந்த நூலாசிரியர்களின் தேர்வு மட்டுமே. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், தமிழச்சி தங்கபாண்டியன் இன்னும் பல படைப்பாளிகளின் கூட்டங்கள் அப்படித்தான் ஒழுங்கு செய்யபட்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் பொன். வாசுதேவன், நிலா ரசிகன், முகுந்த் நாகராஜன் போன்ற இளம் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழாக்களின்போதுகூட பேச்சாளர்களை பரிந்துரைக்கும்படி அவர்களுக்கு பல முறை ஃபோன் செய்வேன்.( அவர்கள் ’நீங்களே பேசினால் நல்லா இருக்கும்’ என்று சொல்லி என்னை சித்தரவதை செய்வது வேறு கதை) உதாரணமாக கடந்த டிசம்பரில் சாருவின் கூட்டதிற்கு அழைக்கபட்ட குஷ்புவின் மொபல் நம்பர் சாருவுக்குதான் தெரியும், எனக்குத் தெரியாது.( கடைசி நேரத்தில் குஷ்பு வரவில்லை). எனது நிர்ப்பந்தத்தால் அழைக்கப்பட்ட ஒருவருடன் நடந்து கொண்டது போலவா சாரு அன்று நடந்துகொண்டார்? அவர் கனிமொழியிடம் காட்டிய இணக்கத்தை அன்று கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் புன் சிரிப்புடன் பார்த்துக்கொண்ருந்தார்கள்.. ஆனந்த விகடனின் சாரு கனிமொழி கூட்டதிற்கு வருவது பற்றி அவ்வளவு புளாகாங்கிதத்துடன் எழுதினார்.



இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் கனிமொழிக்கும் எனக்கும் எந்த நட்பும் இல்லை என்று சொல்வதற்காக அல்ல. அப்படிச் சொல்வதற்கான அவசியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. நான் எனது புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்தபோது தி.மு.க ஆட்சியில் இல்லை. இப்போது மிக இக்கட்டான நிலையில் அவர் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரை என் நண்பர் என்று குறிப்பிட விரும்புகிறேன்.



இன்று 2 ஜி விவகாரத்தில் அவரது பங்கு தொடர்பாக எனது விமர்சங்களை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் 2 ஜி விவகாரத்தில் கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் வினியோகித்தற்காக எழுத்தாளர் இமையத்தை திட்டி உயிர்மையில் எழுதினேன். ஆனால் ஒரு நண்பனாக கனிமொழியின் இன்றைய நிலை எனக்கு ஏற்படுத்தும் துயரத்திற்கும் அவல உணர்ச்சிக்கும் அளவேதும் இல்லை



கனிமொழியை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வலியப் போய் சேர்த்துக்கொண்டவர்கள், அவரது முதல் பாராளுமன்ற உரையை வரிக்கு வரி அச்சிட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று கனிமொழி கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார்கள். கணவர் அதற்கேற்ற உடல் பருமன் கொண்டவர் என்று எழுதுகிறார்கள்.



கனிமொழியின் பேட்டியை மாதம் ஒருமுறையேனும் வெளியிட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள் இப்போது அவரது கவிதைகளின் இலக்கியத் தரமின்மை பற்றி விவாதம் நடத்துகின்றன



கனிமொழி யாரை நோக்கி ’அவர் எனது தந்தையைப் போன்றவர் ’என்றுநெகிழ்ச்சியுடன் அழைத்தாரோ அவர் இன்று கனிமொழி ஜெயிலில் எப்படிக் குளிப்பார், அவரது கணவருக்கு ஃபீஸ் எவ்வளவு என்று எழுதுகிறார்.



இது என்ன மாதிரியான காலம்? இவ்வளவு பெரிய இழிவை நோக்கி மனிதர்கள் எப்படி வந்து சேருகிறார்கள் என்பதை நம்பக்கூட முடியவில்லை.



கனிமொழியின் கவிதைகள் உலகத் தரமானவை என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. நான் பேட்டிகளில் நம்பிக்கைக்குரிய கவிஞர்களின் பெயர்களைச் சொன்ன சந்தர்ப்பதில்கூட அவரது பெயரைச் சொன்னதில்லை என்று அவருக்கு என்மேல் மிகுந்த வருத்தம் உணடு. கடந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் இரண்டு முறை சிறு உதவிக்காக போயிருக்கிறேன். இரண்டு முறையும் அதை அவர் மறுத்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நானும் அவரும் பங்கேற்ற மேடைகளில் அவர் பல முறை நான் பேசியதை கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். குட்டி ரேவதி தொடர்பான சர்ச்சையில் அவர் என்னை திட்டியே எழுதினார். அவர் உயிர்மையில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அதனால் என்ன? ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா? அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா? நான் மகாபாரதம் படித்து வளர்ந்தவன். பொது நீதிக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் நடுவே உள்ள போராட்டத்தை அதுபோல சொன்ன ஒரு காப்பியம் இந்த உலகில் இல்லை. எவ்வளவு நீதியுணர்ச்சியுள்ள கர்ணன் துரியோதனை ஆதரித்து நின்ற தருணத்தை கவித்துவ நீதியால்தான் விளக்க முடியுமே தவிர உலகியல் நீதியால் அல்ல.



எனக்கு கனிமொழியிடம் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. நாளை அவரை நான் எனது ஒரு புத்தக வெளியீட்டுக் கூடத்திற்கு எந்தத் தயக்கமும் இன்றி அழைப்பேன். 2 ஜி விவகாரம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனையடைந்தால் கூட அவர் எனது நண்பர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திருட்டுக் குற்றத்த்தின் சந்தேகத்தின் பேரில் மரத்தை கட்டிவைக்கப்பட்ட ஒருவரை போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நாலு அடி அடிப்பதுபோல நமது பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்கள் நடந்துகொள்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி பொது இடங்களில் சிறு மதிப்பு தேட முயன்றவர்கள் இன்று அவரை மானபங்கம் செய்ய முற்படுகிறார்கள். நமது தார்மீக எழுச்சியின் அளவுகோல்கள் எவ்வளவு கபடத் தன்மை வாய்ந்தது என்பதை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வரப்போவதில்லை



எதிர்பார்புகளோடும் ஆதாயங்கள் குறித்த கனவுகளோடும் உறவுகளை பராமரிக்க விரும்கிறவர்கள் அவை நிறைவேறாதபோது தடுமாறிப் போகிறார்கள்.



சாருவை கொண்டாடிய நண்பர்கள், அவரை பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் என்ன நடந்தததோ அதுதான் எனக்கும் நடக்கும் என்பது நன்கு அறிந்ததுதான். ஆனால் எனது முறை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்தது யார் என்பதும் ஏற்கனெவே முடிவாகி விட்டது.



நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகையாளன், புத்தகங்களை அச்சிட்டு ஊர் ஊராகச் சென்று விற்பவன். எனக்கு கனிமொழியாலோ ஜெயலலிதாவாலோ ஆகவேண்டியது எதுவுமே இல்லை. யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர் பொய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதுமில்லை.



நாமார்கும் குடியல்லோம்

நமனையஞ்சோம்.