Sep 30, 2008

அது பிரமாண்டம்

அது பிரமாண்டம்

அதன் மொழி புரியவில்லை

மெல்ல மெல்ல சுற்றி இருப்பவர்களை சுவிகரிக்கிறது

கடந்து போகும் எல்லாரையும் சுண்டி இழுக்கிறது

பார்த்துக்கொண்டே இருந்தால் பரவாயில்லை போலிருக்கிறது

தனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வளர்ச்சி தெரிகிறது

யாரையும் நம்புகிறது

நம்பிய யாரும் ஏமாற்ற முடியவில்லை

என்ன நினைக்கிறது என்பது அறியவேமுடியவில்லை

ஆழமாய் பார்க்கிறது அதன் அர்த்தம் புரிய புத்தி போதவில்லை

உலகின் அத்தனை அசைவையும் ஒரு விழிப்பில் உணர்த்திவிடுகிறது

மெல்ல உதடு குவித்து ஒரு சொல் சொல்ல வரும்போது

கொடுப்பதற்கு ஈரேழு உலகும் போதாது போல் தோன்றுகிறது

ஏதேதோ தகவல்கள் அந்த அற்புத நொடிகளில்

ஆனால்

என் மறமண்டை அத்தனை அறிவாயில்லை

தெரியாத மொழி பேசும் மனிதனிடம்

அறியாமல் தலையாட்டும் ஐந்தறிவு ஜீவனாய்

நான்.

என்ன செய்ய

என் மூன்று மாத குழந்தை

என்னை இப்படித்தான் எழுதவைக்கிறது.
-Dhavaneri

Sep 24, 2008

தமிழில் படிக்க வேண்டிய 100 நாவல்கள்

தமிழில் படிக்க வேண்டிய 100 நாவல்கள் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தளத்தில் இருந்து பெற்றது. இதில் எத்தனை நூல்கள் படித்திருக்கின்றீர்கள் என எண்ணிப்பாருங்கள். நல்ல நாவல்கள் படிப்பது என்ன பலன் என்று கேட்க தோன்றலாம்,
அது மனதின் சங்கடமான நிமிடங்களை சரி செய்ய தேவையான சிந்தனை பலத்தை கொடுக்கும், கூடவே எல்லா உயிர்களையும் எந்த சூழலிலும் நேசிக்கும் பண்பை கொடுக்கும். அப்புறம் பாருங்கள் நீங்கள் எப்போதும் சந்தோஷமாகவே இருப்பீர்கள்.
1) பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம் - பி.ஆர். ராஜம் அய்யர்
3) கிளாரிந்தா - மாதவையா
4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
6) பொன்னியின் செல்வன் - கல்கி
7) வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன்
8) சயாம் மரண ரயில் - ரெ. சண்முகம்.
9) லங்காட் நதிக்கரை - அ.ரெங்கசாமி
10) தீ.- எஸ். பொன்னுதுரை.
11) பஞ்சமர் - டேனியல்
12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.
13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.
15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்
16) பசித்த மானுடம் - கரிச்சான்குஞ்சு
17) அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்?
18) மோகமுள் - தி. ஜானகிராமன்
19) மரப்பசு - தி.ஜானகிராமன்
20) வாசவேஸ்வரம் - கிருத்திகா
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
22) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
23) பாரீஸிக்கு போ - ஜெயகாந்தன்
24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்
26) நினைவுப்பாதை - நகுலன்
27) நாய்கள் - நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
29) ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்- சுந்தர ராமசாமி
31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
32) சாயாவனம் - சா. கந்தசாமி
33) தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி
34) நாளை மற்றுமொரு நாளே - ஜீ. நாகராஜன்
35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
36) கருக்கு -பாமா
37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்
38) வாடாமல்லி - சு.சமுத்திரம்.
39) கல்மரம் - திலகவதி.
40) போக்கிடம் - விட்டல்ராவ்
41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்
43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்
44) ஒற்றன் - அசோகமித்ரன்
45) இடைவெளி - சம்பத்
46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்
49) அசடு - காசியபன்
50) வெக்கை - பூமணி
51) பிறகு - பூமணி
52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்
54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
56) சந்தியா - பிரபஞ்சன்
57) காகிதமலர்கள் - ஆதவன்
58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
60) உடையார் - பாலகுமாரன்
61) கரிசல் - பொன்னிலன்
62) கம்பாநதி - வண்ணநிலவன்
63) கடல்புரத்தில் வண்ணநிலவன்
64) பழையன கழிதலும் - சிவகாமி
65) மௌனப்புயல் - வாசந்தி
66) ஈரம் கசிந்த நிலம் - சி. ஆர் ரவீந்திரன்
67) பாய்மரக்கப்பல் - பாவண்ணன்.
68) பாழி - கோணங்கி
69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்
70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.
71) கோவேறு கழுதைகள் - இமையம்
72) செடல்- இமையம்
73) உள்ளிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்.
74) வெள்ளாவி - விமல் குழந்தைவேல்
75) கரமுண்டார்வீடு - தஞ்சை பிரகாஷ்
76) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
77) காடு- ஜெயமோகன்
78) கொற்றவை ஜெயமோகன்
79) உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
80) நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்
81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,
82) கூகை சோ.தர்மன்
83) புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்.
84) ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
86) சொல் என்றொரு சொல் - பிரேம் ரமேஷ்
87) சிலுவை ராஜ் சரித்திரம்- ராஜ்கௌதமன்
88) தகப்பன்கொடி - அழகிய பெரியவன்.
89) கொரில்லா - ஷோபா சக்தி
90) நிழல்முற்றம் - பெருமாள் முருகன்
91) கூளமாதாரி - பெருமாள் முருகன்
92) சாயத்திரை- சுப்ரபாரதிமணியன்
93) ரத்தஉறவு - யூமாவாசுகி
94) கனவுச்சிறை - தேவகாந்தன்?
95) அளம் - தமிழ்செல்வி
96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.- எம்.ஜி.சுரேஷ்
97) அரசூர் வம்சம் - இரா.முருகன்
98) அஞ்சலை - கண்மணி குணசேகரன்
99) குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்
100) ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்?

Sep 23, 2008

உளறல்-1

சிறிது நாட்களுக்கு முன்பு எழுதியது.

கண்டதை படிக்க பண்டிதனாகலாம் என்பதைபோல கண்டதை எழுதி எழுத்தாளனாகிவிடலாம் என்று தோன்றுகிறது, நீண்டகாலமாய் எழுத்தாளனாக வேண்டிய கனவு பாக்கியுள்ளது, ஏதோ மற்ற கனவுகள் நிறைவேறிவிட்டதாக கருத வேண்டாம்,மீதமுள்ள கனவுகளில் எழுத்தாள கனவும் ஒன்று. கொஞ்சம் கவிதைகள் சிறுகதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதுண்டு கல்லூரி காலங்களில் ஆனால் அவைகள் வெளிவரவே இல்லை, தமிழ் தகறாறு வேறு நிறைய பிழைகளைக் குவித்துவிடும், எப்போதாவது நல்ல எழுத்துக்களைப்படிக்கும்போது உடனே எழுத வேண்டும் என்று ஒரு உள் உணர்வு தட்டி எழுப்பும் , இதெல்லாம் நல்ல எழுத்துக்களின் விளைவு என்பது புரியாமல் பேனாவும் பேப்பரும் விரயமான நேரமும் அதிகம்.

எழுத்து என்பது எவ்வாறு இருக்கவேண்டும் சிறுகதை எவ்வாறு நிறைவு செய்யப்படவேண்டும் என்று சுஜாதா அவர்கள் கூறியதை படித்திருக்கிறேன் பிற்பாடு அதைபோல எழுதி படித்துப்பார்த்துவிட்டு கிழித்துப்போடவேண்டுமென்று தோன்ற அது செயலாகிவிட்டது.

நாம் ஏன் எழுதக்கூடாது என்று எல்லா எழுத்தாளர்களின் தொடர்களையும் கட்டுரைகளையும் படிக்கும் போது தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை, ஆனால் அது ஏன் என்று புரியவில்லை, எல்லா எழுத்தாளர்களுக்கும் எழுதி முடித்து அதை திரும்ப படிக்கும்போது என்ன தோன்றும் என்று தெரிந்துகொள்ள ஆசையுள்ளது. ஆனால் புளியமரத்தின் கதையில் சு.ரா.வின் முன்னுரையை படித்தபோது அதி முதல் வெளீயீட்டில் இருந்த சில குறைகளை சரிசெய்து அடுத்த வெளியீடுகளில் வெளியிட்டதாக கூறியுள்ளார், நான் நம்புவது அதன் ஆன்மாவில் திருத்தம் வந்திருக்காது என்றுதான்.

இத்தனை மீடியாக்களின் பலமான ஆளுமை எல்லா இந்திய குடிமக்களிடமும் இருக்கும்போது அவைகள் தரமான இலக்கியவாதிகளாஇ மக்களிடம் பரப்பாமல் போனது ஏன் எனப்புரியவில்லை, சாருவையும் நாஞ்சில் நாடனையும் ஜெயமோகனையும் எஸ்ராமகிருஷ்ணனயும் இன்னும் பல சிறுபத்திரிக்கை காரர்களையும் கொண்டு நல்ல நிகழ்ச்சிகளை ஏன் இவர்கள் வடிவமைக்க முயல்வதில்லை, நடிகை கெளதமியைக்கொண்டு அன்புடன் என்றொரு நிகழ்சி சிறிதுகாலம் வந்து காணாமல் போனது தெரிந்திருக்கலாம், அதைவிட நல்ல நிகழ்சிகளை எழுத்தாளர்களால் நிச்சயம் தரமுடியும். DD யில் மட்டும் அவ்வப்போது இப்படி யாராவது பேசுகிறார்கள்.

முக்கியமாக இதுபோன்ற நிகழ்சிகளுக்கு சரியான விளம்பரம் செய்வதில்லை
“ சாருவுடன் சண்டை போடுகிறார் சக்கரைத்தேவன், பளீர் கேள்விகள் சுளீர் பதில்கள் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்தால் சாருவைத்தெரியாதாவர்கூட இது யாரு என்று பார்ப்பார்கள் அது நன்றாக ரசிக்கப்படும்போது நிரந்தர ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் அல்லவா? இதையேன் மீடியா மனிதர்கள் யோசிப்பதில்லை.

எழுத்தாளன் என்றாலே பேனாவுக்கும் பேப்பருக்கும் என்று இருந்த காலம் மாறி கணிணிக்குள்ளும் கலக்க தொடங்கிவிட்டார்கள்.

இன்று ஜெயகாந்தன் பற்றி சாரு எழுதியதை படித்தேன். கொஞ்சகாலம் முன்பு தமிழ்சினிமா பற்றி எழுதியதையும் படித்தேன், கமலஹாசனும், பாலுமகேந்திராவும் ஏன் ஒரு பருத்திவீரன் போல் ஒரு படைப்பை உருவாக்கமுடியவில்லை என்று எழுப்பி இருந்த கேள்வி நியாயமாக பட்டது,

சாருவுக்கு சிவாஜி பார்க்க விருப்பமிருக்காது என்று எனக்குத்தெரியும் ஆனால் தமிழினக்கடமையாக அது மாறிப்போய்விட்ட இந்த சூழலில் சாரு அதைப்பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் எழுதலாம் இது சங்கருக்கோ ரஜினிக்கோ உதவப்போவதில்லை ஆனால் சாருவின் வாசகர்களுக்கு உதவலாம்.

சந்திரமுகி பற்றியும் சொர்ணா காதில் பூ வைத்த ரஜினியின் செய்கை பற்றியும் சாருவின் விவரிப்பை போன்ற இன்னொரு நகைச்சுவை கிட்டும் அல்லவா?

Sep 19, 2008

ஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் வரலாறு


பூரணம் ஆன நாள்: 12 நவம்பர் 2007 திங்கள் கிழமை கேட்டை நட்சத்திரம் காலை 10:45 மணி மதுரையில்

அடக்கம் செய்யப்பட்ட நாள்:13 நவம்பர் 2007 செவ்வாய் கிழமை மாலை 3:00 மணி. நடுவச்சேரியில்.


நடுவச்சேரியில் சமாதி கட்டட பணிகள் தொடங்கிய விபரங்கள்

வாஸ்து நாள் :ஏப்ரல் 22 , 2008 சித்திரை 10 சர்வதாரி வருஷம்.

17x17 அடிகள் உள்கூடு கொண்ட கட்டடம்

சமாதி திறந்த நிலையில் தொட்டி வடிவில் 6.5x3 அடி அளவில் சமாதி தொட்டி

சமாதி மேல் மண்டபம் 6x6x4.2 அடி பிரமிடு போன்ற அமைப்பு

முன்புறம் முக்கோண வடிவ வாசல் 5x4 அடியில்

நிலமட்டத்தில் இருந்து 3 அடி உயரம் தளம் உயர்த்தப்பட்டுள்ளது, 6 படிகள் உள்ளது

உடல் தளத்தில் இருந்து ஒன்பது அடி ஆழத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விபூதி செங்கல் தூள் சந்தனம் உப்பு குங்குமம் இட்டு துணி பையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஞானம் தேடுவோர்க்கு ஞானகுருவாகவும்

ஆரோக்கியம் வேண்டுவோர்க்கு அருள்புரிபவராகவும்

அமைதி நாடுவோர்க்கு ஆறுதல் நல்பவராகவும்

இருக்கிறார்கள்

R.S.முத்துவேல் பிள்ளை குஞ்சம்மாள் தம்பதியினரின் இரண்டாவது ஆண்மகவாக 1940 செப்டம்பர் 12ம் நாள் விக்கரம வருஷம் ஆவணிமாதம் 28 ம் தேதி காலை 7:15 க்கு உத்திராட நட்சத்திரத்தில் விசலூரில் பிறந்தார்கள்.

தனது இளம் வயதில் துறவறம் பூணும் நோக்கதுடனே வாழ்வியல் முறையில் ஈடுபட்டு ஞானம் வேட்கை கொண்டு பல்வேறு பயணத்தில் அரசு கால்நடை உதவி ஆய்வாளராக விளாத்திகுளம் மேலக்கரந்தை கோவில்பட்டி போன்ற ஊர்களில் பணியில் இருந்து வாயில்லா ஜீவன்களுக்கு மிகுந்த அன்போடு மருத்துவம் செய்து ஜீவ சேவையின் தொடக்கம் ஆரம்பமானது.

பிற்பாடு தனது கடும் தேடுதலால் 15-1-1966 ல் காரைக்குடியில் ஸ்ரீ மஹ்தூம் பாவா பகுரூதீன் அவர்களுடைய மெய்பொருள் தீட்சையும் குருநாதரின் அறிவுறுத்தல் படி துறவற நிலை நீக்கி திருமணத்திற்கு சம்மதமும் கொள்கிறார்.

25-8-1967ல் சந்திரா அம்மையாருடன் திருமணம் ஆகி மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்து தனது குருநாதருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின்படி தனக்கு பின்னும் தனது ஞான நெறி தழைக்க செய்தார்.

மகிழஞ்சேரி, திருமருகல்,வைப்பூர்,காசாங்காடு,மதுக்கூர்,களத்தூர்,அகரமாங்குடி ஆகிய ஊர்களில் தனது கால்நடை மருத்துவப்பணியும் இடையில் ஸ்ரீ.சுந்தரமூர்த்தி சுவாமிகள் மூலம் பெற்ற நாட்டு வைத்தியமும் கொண்டு கிட்டத்தட்ட 45 வருடங்கள் மேன்மையான மருத்துவ சேவையாலும் பொது சேவையாலும் எண்ணற்ற மனிதர்களின் அன்பை உரிமையாக்கி கொண்டிருந்தார்.

தனது குருநாதரின் ஆதிவிளக்க நிலையம் ( காரைக்குடி) மற்றும் தவநெறிக்கோட்டம் என்கிற தனது குருநாதரின் சமாதி நிலையத்தையும் (ராஜகம்பீரம்-மானாமதுரை) கட்டி
அதன் நிர்வாகத்திலும் அதன் அடுத்த குருநிலையிலும் இருந்து கிட்டத்தட்ட 30 வருட காலம் ஆழ்ந்த ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார்கள், மத வேறுபாடுகள் இல்லாத அன்பும் ஆன்மீகமும் கொண்ட மனிதராக ஒரு இஸ்லாமிய ஞானியின் வழியில் ஒரு இஸ்லாமிய ஊரே இவர்களின் வழிகாட்டுதலை ஏற்று மிகுந்த அன்புடன் ஈடுபட்டிருந்த ஆச்சர்யம் வேறு எங்கும் நிகழாத அற்புதம்

இவர்களது வாழ்வில் கண்ட எளிமையும் அன்பும் ஆதரவான வார்த்தைகளும்,பிரார்த்தனைகளும்,ஆசிர்வாதங்களும் எத்தனையோ ஜீவன்களின் துயர் துடைத்திருக்கின்றன.

பல்வேறு சம்பவங்களில் பல அரிய ஞானிகளால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள்.ஸ்ரீ.சிவராமகிருஷ்ண சுவாமிகள் மாதிரிமங்கலம், ஸ்ரீ மொட்டையன் சுவாமிகள் திருவண்ணாமலை,ஸ்ரீ.சுருளிசுவாமிகள் மாரியம்மன்கோவில்,ஸ்ரீ.காத்தையா சுவாமிகள் வாழமரக்கோட்டை போன்றோர்களுடனான சந்திப்புகளில் பல அரிய நிகழ்வுகள் ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளன.

தன் வாழ்நாளில் மகான்களின் குருபூஜைகளை மிகவும் ஈடுபாட்டோடு செய்து வந்தார்கள், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், நன்னிலம் ஸ்ரீ தாண்டேஸ்வர சுவாமிகள்,மாதிரிமங்கலம் ஸ்ரீ ரோட்டு சுவாமிகள்,ராஜகம்பீரம் ஸ்ரீ மஹ்தூம் பாவா ஆகியோரது குருபூஜைகள் ஆன்மீக தொண்டர்களின் உதவியோடு செய்து வந்தார்கள்










தவநெறி பூங்கா




திருவாரூர் மாவட்டம் நடுவச்சேரி கிராமத்தில் ஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் சமாதி நிலையம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது, சுவாமிகளது முதலாமாண்டு குருபூஜை விழா வரும் நவம்பர் மாதம் முதல் தேதி நடைபெறுகிறது அதற்குமுன் அதன் கட்டட பணிகள் நிறைவுறும்,
மெய்யண்பர்கள் அறிய வேண்டி அறிவிக்கிறோம்.

முகவரி: ஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் மடாலயம்

நடுவச்சேரி கிராமம்

விசலூர் அஞ்சல்,

திருவாரூர் மாவட்டம்.

பின்:610101